Skip to content
Home » மொஸாட் #22 – இரண்டு மாங்காய்

மொஸாட் #22 – இரண்டு மாங்காய்

இலங்கை அரசு அப்போது தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் தனி ஈழம் அமைக்கத் தமிழ் மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம். மறுபக்கம் வாழ்வாதாரம் வேண்டி விவசாயிகள் போராட்டம். இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும்.

ஈழ விடுதலைப் போராட்டம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிலோனில் இருந்து பிரிட்டன் வெளியேறியபோது இலங்கை மக்கள் தொகையில் 74 சதவிகிதம் சிங்களவர்கள், 20 சதவிகிதம் தமிழர்கள். பிரிட்டன் கிளம்பியவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சிங்கள அரசு, தமிழர்களுக்கு உரிமைகளை மறுத்தது. விளைவு, தமிழர்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.

முதலில் அமைதி வழியில் தொடங்கிய போராட்டம் ஒருகட்டத்தில் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. தனி ஈழம் அமைக்கக் கோரி பலதரப்பட்ட போராளி இயக்கங்கள் உருவாகின. இலங்கை ராணுவம் செய்வதறியாமல் திணறியது.

மற்றொருபுறம் இலங்கையில் விவசாயிகள் போராட்டமும் உருவெடுத்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஒன்று திரண்ட விவசாயிகளை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து பிரித்து வேறு பகுதிகளுக்கு விரட்ட இலங்கை அரசு முயன்று வந்தது. ஆனால் அதிலும் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.

இரு பக்கங்களிலிருந்தும் தலைவலி அதிகமாகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் மொஸாட் இலங்கைக்கு உதவ முன்வந்தது.

இஸ்ரேல் 1948ஆம் ஆண்டிலேயே உருவாகிவிட்டாலும் அந்நாட்டுடன் பெரும்பான்மையான நாடுகள் ராஜதந்திர உறவு வைத்துக்கொள்ளவில்லை. இதனால் குறுக்குவழியில் அண்டை நாடுகளின் ஆதாயத்தைப் பெற இஸ்ரேல் போராடிக் கொண்டிருந்தது.

இதற்காக அவர்கள் செய்த ஓர் உத்தி எங்கெல்லாம் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறுகிறதோ அங்கே சென்று அரசுக்கு உதவுவதுதான். குறிப்பாக ஆப்ரிக்க நாடுகள் எப்போதும் கலவர பூமியாகவே இருந்தன. அந்த நாடுகளுக்கு முதலில் மொஸாடை அனுப்பி வைத்தது இஸ்ரேல்.

மொஸாட், ஒவ்வொரு நாடாகச் சென்று அந்நாட்டு அரசுக்கு என்ன தேவை என்பதை ஆராயும். அரசின் எதிரிகள் யார் என்பதைக் கண்டறியும். பிறகு அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கும். இதன் மூலமாகவே லட்சக்கணக்கான டாலர்கள் ஆயுத விற்பனை செய்தது இஸ்ரேல். இதன்பின் அந்நாட்டுத் தலைவர்களிடம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறி விவசாயத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை விற்பதற்கு ஒப்பந்தம் போடும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வணிக உறவைப் பலப்படுத்தி ராஜதந்திர உறவாக வளர்த்தெடுக்கும்.

இதைத்தான் இலங்கை விஷயத்திலும் இஸ்ரேல் செய்ய நினைத்தது.

இலங்கைக்கும் இஸ்ரேலுடன் தொடக்கத்தில் இருந்தே நல்லுறவு இல்லை. அந்நாட்டின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலின் தூதரகங்களை இலங்கையில் மூடினார். இஸ்ரேலின் பரம எதிரியான பி.எல்.ஓவின் ஆதரவாளராகவும் இருந்தார். ஆனால் இலங்கையில் தமிழீழ போராட்டம் வலுவடைந்தவுடன் அப்போதைய ஜெயவர்த்தனே அரசு இஸ்ரேல் ஆதரவு கட்சிக்குத் தாவியது.

முதலில் தமிழ் போராளிகளை முடக்க ரோந்து படகுகளை வழங்க மொஸாட் முன்வந்தது. ஆனால் இலங்கைக்கு வேறு ஒரு பிரச்னை இருந்தது. இஸ்ரேல் வழங்கும் ஆயுதங்களை வாங்குவதற்கு ஆசைதான். ஆனால் பணம் வேண்டுமே? ஜெயவர்த்னே தயங்கினார்.

அதையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம் என்றது இஸ்ரேல். அது எப்படி முடியும்? இஸ்ரேலே அமெரிக்காவின் தயவை அண்டி வாழ்ந்துகொண்டிருக்கும் நாடு. இலங்கைக்கு வேண்டிய பணத்தை எங்கிருந்து தரும்?

அதற்காக ஒரு பிரமாண்ட திட்டத்தை உருவாக்கித் தருவதாகச் சொன்னது இஸ்ரேல். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டம். அந்தத் திட்டத்தை வைத்து போராளிகளையும் முறியடிக்கலாம். விவசாயிகள் பிரச்னையையும் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்றது இஸ்ரேல். அது என்ன திட்டம்?

இலங்கையின் பிரமாண்ட வளர்ச்சித் திட்டங்களில் ஒன்று மகாவலி திட்டம். 60களில் பண்டாரநாயக்காவால் முன்மொழியப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட திட்டம். அதைத் தூசு தட்டி கையில் எடுத்தது மொஸாட்.

இலங்கையில் ஓடும் மிகப்பெரிய ஆறு மகாவலி. இந்த ஆற்றில் அணை கட்டி நீரை தேசத்தின் மற்ற பகுதிகளுக்குத் திசை திருப்புவதுதான் இதன் முக்கிய நோக்கம். இதன்மூலம் நாட்டின் வறண்ட பகுதிகளைச் செழிப்பாக ஆக்க முடியும், புதிதாக 7.50 லட்சம் ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களை உருவாக்க முடியும் என்று சொன்னது இலங்கை அரசு. அத்துடன் புதிதாக நீர்மின் நிலையங்களை அமைத்து அதன் மூலம் அப்போது கிடைத்து வந்த மின்சாரத்தைவிட இரட்டிப்பு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று சொன்னது.

இந்தத் திட்டம் குறித்து ஏற்கெனவே பண்டாரநாயக்கா அரசு ஐநாவிடம் கடன் கேட்டிருந்தது. ஐநாவும் திட்டம் குறித்து ஆய்வு செய்து, கடன் கொடுக்க சம்மதித்த நிலையில் கடைசி நேரத்தில் திட்டம் நிறுத்தப்பட்டது. இலங்கைக்கு இப்போது நிதியைப் பெற்றுத் தர இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்தது மொஸாட்.

உலக வங்கி வளரும் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் கொடுப்பது எல்லோரும் அறிந்ததே. அந்தக் கடனைப் பெறுவதற்கு ஒரு நாடு செய்ய வேண்டியது எல்லாம் உள்கட்டமைப்பை விரிவு செய்வதற்கு ஒரு பிரமாண்டத் திட்ட வரைவைத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அது திருப்திகரமாக இருந்தால் உலக வங்கி தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி அந்நாட்டின் நிலையை ஆய்வு செய்யும். அதுவும் சரியாக இருந்தால் கடன் வழங்க முன் வரும். இதைத்தான் மொஸாட் திட்டமிட்டது.

முதலில் இஸ்ரேலிலிருந்து இரண்டு ஆய்வாளர்களை மொஸாட் அனுப்பி வைத்தது. ஒருவர் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். மற்றொருவர் விவசாயத் துறையைச் சேர்ந்தவர். இருவரும் சேர்ந்து ஆய்வு செய்து அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதன் செலவீனம் குறித்தும் அறிக்கை தயார் செய்தனர். உலக வங்கியைச் சம்மதிக்க வைக்கும் வண்ணம் வரைவு தயார் செய்யப்பட்டது.

வரைவைப் படித்துப் பார்த்த உலக வங்கிக்கு சம்மதம். ஆனால் எடுத்தவுடன் பணம் கொடுத்துவிட முடியுமா? முதலில் ஆட்களை அனுப்பி களத்தை ஆராய வேண்டும். திட்டம் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன, அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுமா இப்படிப் பல விஷயங்களை ஆராய வேண்டும். இதற்காக ஒரு குழுவை உலக வங்கி அனுப்பி வைத்தது.

இவர்களை ஏமாற்றுவதற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தது மொஸாட். உலக வங்கி பிரதிநிதிகள் என்னவெல்லாம் ஆராய்வார்கள் என அறிந்து அதற்கேற்ற தயாரிப்புகளை எல்லாம் கச்சிதமாக முடித்து வைத்திருந்தது.

இலங்கைக்கு வந்து பார்த்த உலக வங்கி ஆட்களுக்கு முழு சம்மதம். சுமார் 250 மில்லியன் டாலர்களை ஒதுக்க ஒப்புக்கொண்டனர். இத்துடன் ஸ்வீடன், கனடா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் கடன் வாங்கி மொத்தம் 2.5 பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற்றுத் தந்தது மொஸாட்.

ஆனால் இந்த நிதியை வைத்து இலங்கையின் பிரச்னைகளை எப்படிச் சரி செய்ய முடியும்? உண்மையில் இந்த நிதி வளர்ச்சித் திட்டங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் போராளிகளை ஒழிப்பதற்கு ஆயுதங்களை வாங்குவதற்கு என்றே பெறப்பட்டது. இதற்காகவே மகாவலி திட்டத்தை வடிவமைத்தது இலங்கை. அதேபோல இந்தத் திட்டத்தைக் காரணம் காட்டி புதிய விவசாய நிலங்களை வழங்குகிறோம் என்று கூறி விவசாயிகளையும் அவர்கள் நிலங்களிலிருந்து விரட்டி வேறு பகுதிகளுக்கு அனுப்பியது இலங்கை அரசு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ஆனால் இந்த மகாவலி திட்டத்தால் மொஸாடுக்கு என்ன பலன்? எதற்காக இலங்கைக்காக இத்தனை பெரிய திட்டத்தை மொஸாட் உருவாக்க வேண்டும்? போராளிகளை ஒழிக்க இலங்கை ஆயுதங்களை வாங்கும் அல்லவா? அந்த ஆயுதங்களை எங்களிடம்தான் வாங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டது இஸ்ரேல். அதுமட்டுமில்லாமல் மகாவலி திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டுமானங்களை நிறுவ வேண்டும் இல்லையா? இதற்கான ஒப்பந்தத்தையும் இஸ்ரேலின் கட்டுமான நிறுவனமான சோலெல் போனா எனும் நிறுவனம் பெற்றது. இஸ்ரேலுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

இப்படியாக ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு என்றே ஒரு பிரமாண்டத் திட்டத்தை மொஸாட் உருவாக்கியது என்கிறார் விக்டர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி.

இதுமட்டுமல்ல, இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கும் வேலையையும் இஸ்ரேல் செய்தது. இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 60 அதிகாரிகளை இஸ்ரேலுக்கு அழைத்து வந்தது மொஸாட். அவர்களுக்குப் போராளிகளால் கடத்தப்பட்ட பேருந்துகளை, விமானங்களை எப்படி மீட்பது, போராளிகள் கட்டடங்களைக் கைப்பற்றினால் அவர்களை எப்படிச் சுற்றி வளைத்துத் தாக்குவது, ஹெலிகாப்டர்களில் இருந்து கட்டத்திற்குள் எப்படி நுழைவது உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதற்காக ஒவ்வொரு அதிகாரிக்கும் பயிற்சித் தொகையாக தினம் 300 டாலர்கள் விகிதம் 18000 டாலர்கள் வசூலிக்கப்பட்டன. இதனால் மட்டும் இஸ்ரேலுக்கு 3 மாதத்திற்கு மொத்தம் 1.6 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது.

அதேபோல பயிற்சிக்குப் பயன்படுத்திய 15 ஹெலிகாப்டர்களுக்குத் தலா 6000 டாலர்கள் வாடகை, துப்பாக்கிகளுக்கு அவற்றின் வகைகளைப் பொறுத்து 220 டாலரில் இருந்து 1000 டாலர்கள் வரை என எல்லாவற்றுக்கும் காசு பார்த்தது இஸ்ரேல்.

இதுமட்டும் போதுமா? பயிற்சிகள் முடிந்தவுடன் அவர்கள் இஸ்ரேலிடம் இருந்துதான் துப்பாக்கிகள், கவச உடைகள், கையெறி குண்டுகள், ரோந்து படகுகள், ரேடார்கள் என எல்லாவற்றையும் வாங்க வேண்டும்.

ஆனால் இஸ்ரேல் இத்துடன் நிறுத்தவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்த அதே நாட்களில் மற்றொருபுறம் தமிழ் போராளிகளையும் அழைத்து வந்து பயிற்சி அளித்தது மொஸாட். முதலில் போராளிகள் பி.எல்.ஓ அமைப்புடன் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களைப் பிடித்து மூளை சலவை செய்து பயிற்சி பெற சம்மதிக்க வைத்தது.

நிலங்களில் கண்ணி வெடிகள் வைப்பது எப்படி, ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது எப்படி, ரோந்து படகுகளைத் தகர்ப்பது எப்படி, போன்றவை போராளிகளுக்குச் சொல்லித் தரப்பட்டன.

அதாவது, ஒருபக்கம் போராளிகளுக்குச் சிங்கள ராணுவத்தை எப்படித் திணறடிப்பது என்று செய்துகாட்டிவிட்டு, மறுபக்கம் சிங்கள ராணுவத்திற்குத் தமிழர்களின் உத்தியை எப்படி முறியடிப்பது என்பதையும் சொல்லிக் கொடுத்தது மொஸாட்.

இதைத்தவிர இந்தியாவிலிருந்து வந்த 27 ஸ்வாட் படையினருக்கும் பயிற்சி அளித்ததாக விக்டர் பதிவு செய்கிறார். சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், இந்தியர்கள் என்று ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மூன்று எதிரிகளுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே பயிற்சி வழங்கியிருக்கிறது மொஸாட்.

இப்படியாகப் பல உள்நாட்டுப் போர்களில் மக்கள் கொல்லப்படுவதற்கு மொஸாடுக்கு நிறைய பங்கிருக்கிறது என்கிறார் விக்டர்.

0

ஆமாம், முதலில் யார் இந்த விக்டர்? எதற்காக நாம் அவரைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?

முதன் முதலில் மொஸாடின் சூழ்ச்சி நடவடிக்கைகள் குறித்து உலகறிய செய்தவர்தான் நாம் பார்த்து வரும் விக்டர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி.

விக்டர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி, மொஸாட் உளவாளியாக இருந்து பின் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வெளியேறியவர். பின் தன் பணி அனுபவத்தை, அவ்வமைப்பு இயங்கும் விதத்தை By Way of Deception எனும் நூலில் பதிவு செய்து உலகெங்கும் சலசலப்பை ஏற்படுத்தியவர். அதுவரை மொஸாட் குறித்த தகவல்கள் அனைத்தும் இஸ்ரேலிய அரசாலும், பத்திரிகையாளர்களாலும் எழுதப்பட்டவை. முதன்முதலில் அவ்வமைப்பில் இருந்த ஒருவரே நேரடி வாக்குமூலமாக மொஸாட் பற்றிய தகவல்களைக் கொடுத்தது விக்டர்தான். இஸ்ரேல் அந்தப் புத்தகம் வெளிவராமல் தடுக்கப் பல வேலைகள் செய்தது. மேலும் விக்டரை கைது செய்ய 1984 முதல் 1986 வரை ஏராளமான வழக்குகளைத் தொடர்ந்தது. ஆனால் விக்டருக்கு கனடா தேசத்தின் குடியுரிமையும் இருந்ததால் வழக்குகளிலிருந்து தப்பினார்.

தமிழீழப் பிரச்னையில் மொஸாட் செயல்பட்ட விதம் குறித்து விக்டர் வெளியிட்ட ஆதாரங்கள் அந்நிய தேசங்களின் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் மொஸாடின் பங்கு எத்தகையது என்பது குறித்து நாம் அறிந்துகொள்ளக் கிடைக்கும் ஒரு சோறு பதம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *