மொஸாட் என்றவுடன் பலருக்கும் உளவு செய்திகள் சேகரிக்கும் ஓர் அமைப்புதான் நினைவுக்கு வரும். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதுபோலச் சில உளவாளிகள் கிளம்பிச் சென்று பல்வேறு நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுகள் குறித்துச் செய்தி சேகரிப்பதுபோலவும், அதில் இஸ்ரேலுக்கு எதிராக இருக்கும் திட்டங்களை ஆராய்ந்து மொஸாட் அமைப்பினர் முறியடிப்பதுபோலவும் மனக் காட்சிகள் ஓடலாம். தவறில்லை.
ஆனால் மொஸாட் என்பது எந்த அளவுக்கு ஓர் உளவு சேகரிக்கும் அமைப்போ, அதே அளவுக்குப் படுகொலைகளை நிகழ்த்தும் அமைப்பும்தான். சொல்லப்போனால் திட்டமிட்டுக் கொலைகள் செய்யும் அமைப்பு.
யூதர்களின் புனித நூல் தால்மத். அதில் இப்படி ஒரு வாசகம் உண்டு.
‘உன்னை யாரும் கொல்ல வந்தால் வெகுண்டெழுந்து அவர்களை முதலில் கொல்’.
இந்த வாசகம் மொஸாடின் ஆன்மாவோடு கலந்தது. இஸ்ரேலுக்கு ஆபத்து என்றால் கொலை செய்வதற்கு மொஸாட் எந்த விளிம்பிற்கு வேண்டுமானாலும் செல்லும். இஸ்ரேல் எனும் தேசம் நிர்மாணிக்கப்பட்டதில் இருந்து இஸ்ரேலியர்கள் கொலைகள் நிகழ்த்தி வருவதைப் பார்த்தோம். தாக்க வரும் எதிரிகளைக் கொல்வது ஒருவகை. அது எல்லாத் தேசங்களும் செய்வது. ஆனால் எதிரி தன்னைத் தாக்க நினைத்தாலே கொல்வதுதான் மொஸாடின் கொள்கை.
‘சிறியவனோ பெரியவனோ, நீ இஸ்ரேலின் எதிரியாக இருந்தால் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்துக் கொல்வேன்.’ இதுதான் மொஸாடின் தாரக மந்திரம்.
அதனால் மொஸாடின் கொலைகார உத்திகள் குறித்து நாம் பார்ப்பதும் அவசியம்.
0
அல்-பஷ் காஸாவைச் சேர்ந்த மின் பொறியியல் மாணவர். காஸாவில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மலேசியாவிற்குச் சென்று முனைவர் பட்டப்படிப்பு பயின்று வந்தார்.
பஷ்ஷிற்கு மின்சாரத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம். ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அதுகுறித்து ஏராளமான அறிவியல் ஆய்விதழ்களையும் பதிப்பித்தார்.
படிப்பைத் தவிர பஷ்ஷிற்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. ஹமாஸ். பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி வரும் ஹமாஸிற்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ஹமாஸ் உறுப்பினர்களும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அவரை வைத்து பல எதிர்காலத் திட்டங்களைத் தீட்டியிருந்தனர். ஹமாஸுக்கு பஷ் முக்கியமானவர் என்று தெரிந்தவுடனேயே மொஸாட் உள்ளே நுழைந்து அவரை மலேசியாவில் வைத்துத் தீர்த்துக்கட்டியது.
பஷ் பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் அவரைக் கொன்றுவிட்டு தப்பினர். விசாரணையில் கொன்றது மொஸாட் என்று விளங்கியது.
இத்தனைக்கும் பஷ் இஸ்ரேலுக்கு எதிராக எந்தச் சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை. அவர் ஹமாஸ் ஆதரவாளர் அவ்வளவுதான். ஆனால் அவரால் எதிர்காலத்தில் ஆபத்து வரலாம் என்கிற ஒரு காரணத்திற்காகவே இந்தக் கொலையைச் செய்தது மொஸாட். வருமுன் காப்போம் திட்டம்.
0
கொலை செய்வதற்கு என்றே மொஸாடில் சில வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு படிவத்தை நிரப்பி, இவரைக் கொல்ல வேண்டும் என்று இஸ்ரேலியக் காவல்துறையோ, ராணுவமோ ஒரு விண்ணப்பம் கொடுத்தால்போதும். மொஸாட் அந்த வேலையைக் கையில் எடுத்துவிடும்.
நாம் மேலே பார்த்த பஷ்ஷும் அப்படித்தான் மொஸாடின் இலக்கில் வந்து சேர்ந்தார். ஹமாஸைக் கண்காணித்து வந்த இஸ்ரேலிய ராணுவம் பஷ் குறித்த எச்சரிக்கையைக் கொடுத்தது. இஸ்ரேலிய உள்ளூர் உளவு அமைப்பும் அதேபோன்று எச்சரிக்க பஷ்ஷை இலக்காகத் தீர்மானித்தது மொஸாட்.
முதலில் ஹமாஸின் தொலைத் தொடர்பு சாதனங்கள் கண்காணிக்கப்பட்டன. காஸா, துருக்கி, லெபனானுக்கு இடையிலான ஹமாஸ் தலைவர்களின் உரையாடலை மொஸாட் ஒட்டுக்கேட்டது. இதில் எத்தனை முறை பஷ்ஷின் பெயர் அடிப்படுகிறது எனக் கணக்கிட்டது.
போதுமான அளவு பஷ்ஷின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறார்களா? இதுபோதும் கொன்றுவிடலாம்.
0
அடுத்தது அவரைக் கொல்வதால் என்ன பலன், கொலை செய்வதற்கு எது சிறந்த வழி என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டு ஆவணமாகச் சமர்ப்பித்தது மொஸாட். இந்த ஆவணத்தை மொஸாடின் தலைவர்கள் அடங்கிய VARASH எனும் குழு ஆராயும்.
VARASH, கொலைத் திட்டங்களை நன்கு பரிசீலித்துச் சில பரிந்துரைகளை வழங்கும். இதன்பின் அந்த ஆவணம் அடுத்தகட்ட அனுமதிக்காக இஸ்ரேல் பிரதமரிடம் செல்லும்.
மொஸாடின் திட்டமிட்ட படுகொலைகளுக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு. ஆனால் இஸ்ரேலியப் பிரதமர்கள் அந்த முடிவை தாங்கள் எடுப்பதுபோல காட்டிக்கொள்ள மாட்டார்கள். இரண்டு அமைச்சர்களைப் பிடித்து அமர வைத்துப் படுகொலைக்கு அனுமதிக்கலாமா வேண்டாமா என ஆராய உத்தரவிடுவார் பிரதமர். இதுவெறும் கண்துடைப்பு நாடகம்தான். நாளைக்கு அரசியல் ரீதியாக ஏதாவது கேள்வி எழுந்தால் சமாளிப்பதற்கு.
இவ்வாறு பிரதமர் அனுமதி கொடுத்தவுடன் மொஸாட் களத்தில் இறங்கும். கொலை செய்வதைத் திட்டமிடுவதற்கும் அதனைச் செயல்படுத்துவதற்கும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஆகலாம். சிலருக்கு ஒரு வாரத்தில் முடிந்துவிடும். சிலருக்கு மாதங்கள் ஆகலாம். முக்கியமான இலக்கு என்றால் வருடங்கள்கூட ஆகலாம். எல்லாம் முக்கியத்துவம் பொறுத்தது.
இதன்பின் மொஸாடின் கொலைகார அணியான சிசேரியா (Caesarea) ஆட்டத்திற்கு வரும். சிசேரியா மொஸாடிற்குள்ளேயே இயங்கும் மறைமுகமான அமைப்பு. 1970களில் மைக் ஹராரி எனும் மொஸாட் தலைவர் இதனை உருவாக்கினார். இந்த அமைப்பு கொலை செய்யப்படவுள்ள நபர் தங்கியிருக்கும் நாட்டில் உள்ள உளவாளிகளை எல்லாம் அழைத்து தகவல் சேகரிக்கச் சொல்லும். இலக்கை நன்கு கண்காணித்துத் திட்டத்தைக் கூர்தீட்டும்.
இதன்பின் சிசேரியாவுக்குக் கீழ் இயங்கும் கிடோன் (Kidon) எனும் அமைப்புதான் கொலைகளைச் செய்யும். இந்த கிடோனில் இருப்பவர்கள், தேர்ந்த கொலைகாரர்கள். இஸ்ரேலிய ராணுவத்தில், சிறப்புப் படைகளிலிருந்து கிடோனுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இவர்கள்தான் பஷ்ஷைக் கொலை செய்தார்கள். இன்றுவரை ஏராளமானவர்களைக் கொன்று வருகிறார்கள்.
2000ஆம் ஆண்டு மட்டும் இஸ்ரேல் சுமார் 500 படுகொலைத் திட்டங்களை அரங்கேற்றியுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன. இதில் சுமார் 1000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதன்பிறகு 2008, 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஹமாஸுக்கு எதிரான போர் என்ற பெயரில் 800 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அதிகப் படுகொலைகளைச் செய்த ஒரே நாடு இஸ்ரேல் என்கின்றனர் ஆய்வாளர்கள். இஸ்ரேலுக்கு அடுத்தபடியாகத்தான் அமெரிக்கா. ஒபாமா ஆட்சிக் காலத்தில் அதிகப்பட்சமாக 353 திட்டமிட்ட படுகொலைகளை சி.ஐ.ஏ செய்தது.
மொஸாடைப்போல சி.ஐ.ஏவும் கொலைகாரப் படையை வைத்திருக்கிறது. ஆனால் சி.ஐ.ஏ ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்றால் பல அடுக்குச் சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெற வேண்டும். வெள்ளை மாளிகையிலிருந்து நீதிமன்றம் வரை ஏறி இறங்க வேண்டும். பலருடைய அனுமதி கையெழுத்து கிடைத்தால்தான் கொலை செய்ய முடியும்.
ஆனால் மொஸாடுக்கு அந்தச் சட்டச் சிக்கல்கள் எதுவும் கிடையாது. திட்டமிட்ட படுகொலை என்பது அவர்களுடைய தேசியக் கொள்கைகளில் ஒன்று.
ஐரோப்பாவில் கொலைகள் நிகழ்த்த வேண்டுமென்றால் கொஞ்சம் யோசிப்பார்கள். அரபு நாடுகளில் கொலைகள் என்றால் கேள்வியே வேண்டாம்.
0
இங்கே ஒரு கேள்வி வரலாம். மொஸாடால் எப்படி அரபு நாடுகளில் சுதந்திரமாக இயங்க முடிகிறது? எப்படி எளிதாக எதிரிகளைக் கொல்ல முடிகிறது?
அரபு நாடுகள் எதிரிகள் இல்லையா? மொஸாட் உளவாளிகள் அங்கு இயங்குவது ஆபத்து இல்லையா? இது பாதி உண்மைதான். பாலஸ்தீன விவகாரத்தில் பல அரபு நாடுகள் மொஸாடுக்கு மறைமுகமாக உதவி வருகின்றன என்கிறார் இஸ்ரேலைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் ரோனென் பெர்க்மென்.
குறிப்பாக ஜோர்டன், மொராக்கோ நாட்டு உளவு அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மொஸாடுடன் நட்புறவில் இருப்பவை. 70களுக்குப் பிறகு குவைத், ஓமான், சவுதி, அமீரகம் போன்ற நாடுகளும், தொடக்கத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்த எகிப்துமே மொஸாடுடன் கைகோர்த்துக்கொண்டது என்கிறார் அவர்.
மத்தியக் கிழக்கு விவகாரங்களுக்கு ஜோர்டன் தலைநகரான அமானில் ஒரு கிளையே மொஸாட் வைத்திருக்கிறது.
1997ஆம் ஆண்டு ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான காலித் மெஷால் என்பவரை ஜோர்டன் தலைநகர் அமானில் வைத்துக் கொல்ல மொஸாட் திட்டம் தீட்டியது. காலித் இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். பலமுறை அவரைக் கொலை செய்ய முயற்சித்து சொதப்பி இருந்தது மொஸாட். இந்தமுறை கச்சிதமாகத் திட்டமிட்டு அவர் அலுவலகம் செல்லும்போது அவரது காதில் விஷ மருந்தை ஊற்றிவிட்டுச் சென்றது. காலித் மயக்கமுற்றார். அவர் இறந்துவிடுவார் என்பது உறுதியானது. இந்த நிலையில் ஜோர்டன் நாட்டின் அரசர் ஹுசைன் விஷயம் அறிந்து அதிர்ந்துவிட்டார்.
உண்மையில் ஹுசைனுக்கு காலிதைக் கொல்வதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எங்களிடம் சொல்லாமல் ஏன் செய்தீர்கள் என்று கோபித்துக்கொண்டார். காலித் போன்ற முக்கியத் தலைவர் இறந்தால் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஜோர்டன் போன்ற அரபு நாடுகளுக்கு உண்டு. அதற்காக மொஸாடிடம் பேசி படுகொலை முடிவைத் திரும்பப் பெற்றார் ஹுசைன்.
மொஸாடும் ஹுசைனுடன் நட்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விஷமுறிவு மருந்தைக் கொடுத்தது. அத்துடன் ஹமாஸைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஷேக் அகமது யாசினையும் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் இது தற்காலிக பின்னடைவுதான். ஏழு ஆண்டுகள் கழித்து யாசினை காஸாவில் வைத்துத் தீர்த்துக்கட்டியது மொஸாட். காலித் மட்டும் இன்னமும் மொஸாடின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஹமாஸின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியவர், தற்போது சின்வாரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் தலைவராகி இருக்கிறார்.
ஜோர்டனைப்போல ஆரம்பத்தில் இருந்தே மொஸாடுடன் நல்லுறவு வைத்திருக்கும் மற்றொரு அரபு நாடு மொராக்கோ. 60களில் இருந்து மொராக்கோவிற்கு வேண்டிய அனைத்து உளவு, தொழில்நுட்ப உதவிகளை இஸ்ரேல் செய்து வருகிறது. இதற்குப் பதிலாக மொஸாடின் இயங்கு நிலையம் ஒன்று நிரந்தரமாகவே அந்நாட்டின் தலைநகர் ரபாத்தில் இருக்கிறது. அங்கிருந்து எளிதாக அரபு நாடுகளை மொஸாடால் கண்காணிக்க முடியும்.
1965இல் அரபு லீக் மாநாடு ரபாத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு அரபு நாடுகளின் தலைவர்கள், ராணுவத் தளபதிகள் கலந்துகொண்டனர். அவர்கள் சந்தித்துப் பேசிய அறையில் ஒட்டுக்கேட்புக் கருவிகளை வைக்க உதவியது மொராக்கோ அரசு. அந்த அளவிற்கு இருவருக்கும் நட்பு.
இப்படியாக அரபு நாடுகளிலும் உலக அளவிலும் கொலைத் தாண்டவங்களை நிகழ்த்தி வந்த மொஸாடுக்கு அந்நாட்டுப் பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேதன்யாகுவால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.
(தொடரும்)