இஸ்ரேல் எனும் தேசம் உருவாகி 76 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மொஸாட் உருவாகி 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இடைப்பட்ட ஆண்டுகளில் ஏகப்பட்ட உளவு வேலைகள், கடத்தல்கள், படுகொலைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள், மீட்புப் பணிகள் மொஸாடால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்கத்தில் இருக்கும் பாலஸ்தீனத்தில் தொடங்கி ஏதோ ஒரு மூளையில் இருக்கும் இலங்கை வரை மொஸாட் தன் கைங்கரியத்தைக் காட்டி இருக்கிறது.
மொஸாட் அதிகாரப்பூர்வமாக நிகழ்த்திய சம்பவங்களே பல நூறு இருந்தாலும், ஆதாரங்கள் இல்லாத சில சதிக் குற்றச்சாட்டுகளும் மொஸாடின் மீது உள்ளன. உதாரணமாக அமெரிக்க அதிபர் கென்னடியைக் கொன்றது மொஸாட்தான் என்கிற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னாலும் மொஸாடின் சதிவேலைகள் இருப்பதாக ஒரு பார்வை உண்டு. இவ்வளவு ஏன், 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குக்கூட மொஸாட்தான் காரணம் என இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. உண்மையில் மொஸாட் யார்? அவர்கள் யாராக இருந்திருக்கிறார்கள்? எதற்காக இயங்குகிறார்கள்?
தேசத்தின் பாதுகாப்பு. இந்த ஒற்றை வரிதான் மொஸாட் இயங்குவதற்கான அடிப்படை. அதற்காக அவர்கள் செய்வது பயங்கரவாத வேலைகள். இதை நான் சொல்லவில்லை. இஸ்ரேலிய அறிஞர்களே சொல்கிறார்கள். குறிப்பாக இஸ்ரேலிய ராணுவம், உளவு அமைப்புகள்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் ரோனென் பெர்க்மென் தன்னுடைய ‘Rise and Kill First’ நூலில் இந்த வாதத்தைத்தான் முன்வைக்கிறார்.
இது வேண்டுமென்றே மொஸாட் வலிந்து உருவாக்கிக்கொண்ட வேடம் அல்ல, வரலாற்றுச் சூழலே அதனைப் பயங்கரவாத உளவு அமைப்பாக உருமாற்றி இருக்கிறது என்றும் கூறுகிறார்.
மொஸாடின் உருவாக்கமும் இயக்கமும் நாம் முன்பே பார்த்ததுபோல இஸ்ரேலின் உருவாக்கத்துடன் தொடர்புடையது. மத்தியக் கிழக்கில் பாலஸ்தீனம் எனும் தேசத்தைத் துண்டுபோட்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு தேசம். அதைப் பாதுகாக்க ஆள் பலம் இல்லாதபட்சத்தில் வலுவான உளவு படையே இஸ்ரேலின் இருப்பைத் தக்க வைக்கும் அடித்தளமாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எதிரிகள் தாக்கலாம் என்று அச்சுறுத்தலான சூழலில் தற்காப்பாகத் தொடங்கி, இன்றைக்கு மத்தியக் கிழக்கின் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் இயங்கி வருவதும், அதனை மொஸாடின் மூலம் சாதிக்க முனைவதும்தான் அந்த அமைப்பின் கொள்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்கிறார் பெர்க்மேன்.
பாலஸ்தீனப் பிரச்னையையே எடுத்துக்கொள்வோம். அரேபியர்கள் வாழ்ந்த பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்கிவிட்டோம். அதை எதிர்க்கும் அரேபியர்களைத் தடுத்தாக வேண்டும். ஆனால் அத்துடன் கதை முடிந்ததா? ஒருகட்டத்தில் பாலஸ்தீனர்கள் தாங்கள் அமைதியாக வாழ்கிறோம். தனிநாடு தாருங்கள் என்று கேட்கத் தொடங்கியபோதிலும் பாலஸ்தீனத்தின் பகுதிகளை ஆக்கிரமித்து, யூதக் குடியேற்றங்களைத் தொடர்ந்து நிகழ்த்தி ஒட்டுமொத்த நிலத்தையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் இஸ்ரேலை எப்படி நியாயப்படுத்துவது?
இன்று இஸ்ரேல் தேச நலன் என வலியுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்காப்பு சார்ந்தது மட்டுமல்ல, ஆதிக்கமும் சார்ந்தது. ஒடுக்குமுறை சார்ந்தது. இதற்குத் தடையாக இருப்பவர்களை எல்லாம் போட்டுத்தள்ளுவதுதான் இன்று மொஸாட் செய்துவருவது.
சமீபத்தில் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அதற்கடுத்த சில மாதங்களில் யாஹ்யா சிவார் கொல்லப்பட்டார். இதைத்தவிர லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை பேஜர்கள் மூலமும் வாக்கி டாக்கிகள் மூலமும் வெடிவைத்துக் கொன்றது மொஸாட். மொஸாடுக்கும் லெபனானுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக வேறு ஒரு நாட்டில் நுழைந்து மூக்கை நுழைக்க வேண்டும்? ஹிஸ்புல்லா என்ன இஸ்ரேலின் பரம்பரை எதிரியா?
கிடையவே கிடையாது. உண்மையில் ஹிஸ்புல்லாவின் உருவாக்கத்திலேயே மொஸாடின் பங்கிருக்கிறது. 1975இல் தொடங்கி 1990 வரை லெபனானில் இடைவிடாத உள்நாட்டுப் போர் நடந்தது. இதன் சூத்திரதாரி யார் தெரியுமா? மொஸாட். லெபனானிய மக்களுக்கு இடையே இனவெறியைத் தூண்டி பெரும் போராக உருவெடுக்க வைத்து ஆயிரக்கணக்கில் பொதுமக்களின் உயிர்களைப் பலி கொடுத்தது மொஸாடின் தந்திரம். அதன் ஊடாக உருவான ஹிஸ்புல்லா அமைப்புதான் இன்று இஸ்ரேலை எதிர்த்துக்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இஸ்ரேலைச் சுற்றி இருக்கும் எகிப்து, சிரியா, ஈரான், ஈராக் ஜோர்டன் என ஒவ்வொரு நாட்டின் அரசியல் குழப்பங்களுக்குள்ளும் நுழைந்து இஸ்ரேல் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறது என்றால் அதற்கு மொஸாட் இருக்கும் தைரியமே காரணம்.
ஈராக் போர் விமானங்கள் வாங்கினால் இஸ்ரேலுக்கு என்ன பிரச்னை? சிரியா எண்ணெய் வளங்களைத் தேசிய உடைமை ஆக்கினால் இஸ்ரேலுக்கு எங்கே வலிக்கிறது?
ஈரான் தொடங்கிய அணு ஆயுதத் திட்டத்தை முறியடிக்க வேண்டி 2000களில் தொடங்கி 2020ஆம் ஆண்டு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளைக் கொன்றிருக்கிறது மொஸாட்.
இதேபோல எகிப்திற்கு மேற்கத்திய நாடுகளுடன் இருந்த உறவைக் குலைக்கும் வண்ணம் அந்நாட்டில் இருந்த அமெரிக்க, பிரிட்டன் நாட்டினர் மீது சினிமா தியேட்டர்கள், நூலகங்கள், கல்விநிலையங்களில் தாக்குதல் நடத்த மொஸாட் திட்டமிட்டது. இதற்காக வெடிகுண்டுகள், ஆசிட் நிரப்பிய குளிர்பானங்கள் என ஏதேதோ தில்லாலங்கடி வேலைகளைச் செய்து பழியை எகிப்து மீது போட்டுவிடலாம் எனத் திட்டம். ஆனால் எகிப்து உளவுத்துறை மொஸாடின் இந்தத் திட்டத்தைக் கண்டுபிடித்துத் தடுத்துவிட்டது.
இப்படி ஒவ்வொரு நாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் மொஸாடின் கைங்கரியம் ஏதாவது இருக்கும். இதனால்தான் மொஸாடை அரசு ஊக்குவிக்கும் பயங்கரவாத படை என்று சொல்கின்றனர் ஆய்வாளர்கள். கிட்டத்தட்ட சி.ஐ.ஏ, எம்.ஐ.6 என எந்த உளவு அமைப்பை எடுத்துக்கொண்டாலும் இதுதான் விஷயம் என்றாலும், மற்ற அமைப்புகளாவது சட்டத்திற்குப் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் மொஸாடுக்கு எந்தச் சட்டதிட்டங்களும் கிடையாது.
மொஸாடால் கொல்லப்பட்ட பட்டியலில் குழந்தைகள், சாதாரணப் பொதுமக்கள், மருத்துவர்கள் எனப் பலர் அடங்குவர். இன்டர்போல் அமைப்பு மொஸாட் உளவாளிகள் பலருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆனால் இது எதுவும் மொஸாடை எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
0
மெயிர் டாகன், மொஸாடின் தலைவராக இருந்தவர். இஸ்ரேல் மக்கள் கொண்டாடிய உளவாளி. தான் பதவி விலக இருந்த கடைசி நாள் அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை அவர் கூட்டினார்.
அதுதான் வரலாற்றிலேயே முதல்முறை மொஸாட் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர்களுடன் நிகழ்த்தும் சந்திப்பு. டாகனுக்கு அப்போதும் ஊடகங்களைப் பிடிக்காது. ஆனால் வேறு வழியில்லை. இதற்கு மேல் பேசாமல் இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது.
டாகனுடன் இஸ்ரேலியப் பிரதமர் நேதன்யாகுவின் உதவியாளர், தணிக்கைக் குழுவின் ராணுவத் தலைவர் இருவரும் இருந்தனர். மொஸாட், பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்நாட்டுச் சட்டத்தின்படி அனைத்துச் செய்திகளும் கண்காணிக்கப்பட்டுத் தணிக்கை செய்யப்பட்டுதான் மக்களுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் தணிக்கைக் குழுவுக்கு என்று தனித் தலைவர் இருக்கிறார்.
டாகனுடன் இருந்த இருவருக்குமே அவர் என்ன பேசப்போகிறார் என்று தெரியாது. இருவரும் அவர் விடைபெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் கூறிய முதல் வார்த்தையே அவர்கள் தலையில் இடிவிழுந்ததுபோல இருந்தது.
‘நமது பிரதமர் நேதன்யாகு இஸ்ரேலை அழிவுக்கு இட்டுச் செல்கிறார். ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதாலேயே புத்திசாலி என்று சொல்லிவிட முடியாது. இதைச் சொல்வதற்கு எனக்கு அச்சமில்லை. எனக்கு முதுகெலும்பு இருக்கிறது’ என்றார்.
வந்திருந்த பத்திரிகையாளர்களும் மிரண்டுவிட்டனர். என்ன இவர் இப்படிப் பேசுகிறார்? அதுவும் பேசுவது சாதாரண ஆள் கிடையாது. மொஸாடின் தலைவர். பிரதமருடன் நெருக்கமாக இருக்கக்கூடியவர். அவருடன் கலந்தாலோசித்து எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். பிரதமரால் மதிக்கப்படுபவர். இவருக்கு என்ன ஆயிற்று?
சில ஆண்டுகளாகவே டாகனுக்கும் நேதன்யாகுவுக்கும் முட்டல் மோதல் இருந்துவந்தது. ஒரே ஒரு விஷயம்தான் காரணம். எதிரிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? படுகொலை செய்வதா? போர் செய்வதா? இதுதான் இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாட்டுக்கு மூலம்.
ஏரியல் ஷரோன் பிரதமராக இருந்தபோது டாகன் மொஸாடின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை ஈரான் மேற்கொண்டு வந்த அணு ஆயுதத் திட்டத்தைக் குலைப்பது. ஈரான் அணு ஆயுதம் செய்துவிட்டால் இஸ்ரேலின் இருப்புக்கே அது அச்சுறுத்தலாகிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் ஷரோன்.
டாகன் இதற்காகப் பலவழிகளை முயற்சி செய்தார். இதில் ஒன்று ஈரானுக்குப் பணியாற்றி வரும் விஞ்ஞானிகளை அடையாளம் கண்டு போட்டுத்தள்ளுவது. மொஸாட் இதற்காக 15 விஞ்ஞானிகளை முதற்கட்டமாகத் தேர்வு செய்தது. 6 பேரை அதுவரை கொன்றிருந்தது. அவர்கள் காலையில் வேலைக்குச் செல்லும்போது, மனைவியுடன் சினிமா பார்க்கும்போது, குடும்பத்துடன் சாப்பிடும்போது இந்தப் படுகொலைகள் நடைபெற்றன. நினைக்கவே கொடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்வது? வேலை என்று வந்துவிட்டால் இதையெல்லாம் பார்க்க முடியுமா? சுட்டுக்கொல்வது, வெடிகுண்டுகள் வைப்பது. இரண்டும்தான் எளிமையான வழி.
மொஸாடை பொறுத்தவரை குறிவைத்த அனைத்தும் இரையாகிவிட்டன. வெற்றிதான். ஆனால் நேதன்யாகுவுக்கு அது போதவில்லை. ஷாரோனுக்குப் பிறகு நேதன்யாகு பிரதமராகப் பொறுப்பேற்றார். டாகனைப் பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்டார். இத்தனை நாட்கள் விஞ்ஞானிகளைக் கொன்றீர்கள். ஈரானின் திட்டம் நிறுத்தப்பட்டதா? இது சரிபட்டு வராது. இனி ரகசியமாகப் போட்டுத் தள்ளுவது எல்லாம் வேண்டாம். அணு ஆயுதம் தயாரிக்கும் இடத்திலேயே குண்டுகளை வீசுவோம். அனைத்தையும் வெடித்துச் சிதற விடுவோம். அதன்பின் மொத்தமாகத் திட்டம் படுத்துவிடும்.
டாகன் உறுதியாக மறுத்தார். ‘ஐயா உங்கள் அவசரம் புரிகிறது. ஆனால் குண்டுகள் வீசினால் நேரடிப் போராக உருவெடுத்து நமக்குதான் தலைவலியாகிவிடும். அதற்கு இப்போது அவசியமும் இல்லை. நமக்கு நேரம் இருக்கிறது. இப்போது நாம் செய்யும் முயற்சியே பலனளிக்கிறது. இது வேலைக்கு ஆகவில்லை என்றால் கடைசிக் கட்ட முயற்சியாக அதனைப் பரிசீலிப்போம்’ என்றார்.
டாகனைப் பொறுத்தவரை பெரிய அளவிலான போர் அநியாயம். படுகொலைகள் நியாயமானது. சில பெரிய ஆளுமைகளைக் கொலை செய்வது தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான வீரர்கள் இறப்பதைத் தடுக்கும் என்பது அவருடைய எண்ணம்.
டாகன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்ற ராணுவத் தளபதிகளுடன் இணைந்து அழுத்தம் கொடுக்க, நேதன்யாகுவுக்கு இது அவமானமாகிப்போனது. இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
2010இல் நிலைமை இன்னும் மோசமானது. நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த துபாய் படுகொலை நினைவு இருக்கிறதா? அந்தக் கொலையாளிகளை அனுப்பியது டாகன்தான். 27 மொஸாட் உளவாளிகள் துபாய் சென்று ஹமாஸ் தலைவர் மபூஹைக் கொன்றுவிட்டுத் தப்பினர். ஆனால் அவர்களுடைய உருவங்கள் சிசிடிவியில் பிடிபட்டுவிட்டன. துபாய் போலீஸ் அவர்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி இன்டர்போலிடம் முறையிட, அவர்களைப் பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மொஸாடுக்கோ அந்த உளவாளிகளுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இஸ்ரேலுக்குக் கொஞ்சம் அவமானம் ஆகிவிட்டது. குறிப்பாக உளவாளிகள் இஸ்ரேலின் நட்பு நாடுகளின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியதால் அவர்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நேதன்யாகு இதைக் காரணமாக வைத்து டாகனை வெளுத்து வாங்கத் தொடங்கினார். டாகன் அதுவரை திட்டமிட்டிருந்த அனைத்துப் படுகொலை முயற்சிகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டார். மேலும் டாகனின் மேற்பார்வையில் இருந்த மற்ற திட்டங்களையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தச் சொல்லிவிட்டார். ஒருகட்டத்தில் டாகனின் பதவிக் காலத்தை நேதன்யாகு நீட்டிக்க மறுக்க, டாகனும் அதற்கு மேல் பணியாற்ற விரும்பாமல் ஓய்வு அறிவித்துவிட்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் டாகன் சொன்னார், ஈரானின் அணு ஆயுத முயற்சியை நாம் நிறுத்தி இருக்கலாம். அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பாகங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்டுபிடித்து அவற்றைக் குண்டு வைத்துத் தகர்த்திருக்கலாம். அதைவிடச் சிக்கனம் அந்தப் பாகங்களை எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநரைச் சுட்டுத் தள்ளுவதே.
0
டாகன் விவகாரத்தை நாம் பார்த்ததற்குக் காரணம், அதுதான் மொஸாடின் பார்வையும். நம் சுயநலத்திற்காக யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். அது அப்பாவியாக இருந்தாலும் பிரச்னை இல்லை. கேட்டால், பெரிய அளவு போருக்குப் பதில் ஓரிரு உயிர்கள் பலியாவதில் என்ன தவறு என்கிற நியாயம்தான் கற்பிக்கப்படுகிறது.
இந்தத் திட்டமிட்ட படுகொலைகள்தான் மொஸாடின் அடையாளம். இஸ்ரேலின் அடையாளம்.
இது இரண்டு தார்மீகக் கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, ஓர் அப்பாவியைக் கொல்வது உண்மையிலேயே உலகைப் பாதுகாப்பான இடமாக்குமா? இரண்டாவது இந்த எண்ணம் நியாயமானதா? சட்டப்பூர்வமாக இதனை நியாயப்படுத்த முடியுமா?
இஸ்ரேலைப் பொறுத்தவரை படுகொலைகள் செய்வது நியாயம் என்பதுதான் உண்மை. அறத்தின் பார்வையிலும் சரி, சட்டத்தின் பார்வையிலும் சரி ஒரு தேசம் கொலை எனும் மோசமான குற்றத்தை, ஒரு மனித உயிரைப் பறிப்பதைத் தன் குடிமக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகிறது என்றால் அங்கேயே பிரச்னை தொடங்குகிறது என்றுதான் அர்த்தம். போர்க்காலத்தில் மட்டுமல்ல, அமைதிக் காலங்களிலும் இஸ்ரேலின் ஆயுதமாகக் கொலையே இருந்திருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதிக மக்களைப் படுகொலை செய்த தேசம் என்றால் அது இஸ்ரேல்தான் என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரேலியத் தலைவர்கள் பலரும் தேசப் பாதுகாப்புக்குப் படுகொலையையே தங்கள் தீர்வாக முன்வைக்கின்றனர். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு எல்லாம் படுகொலைகள் தீர்வாகும் என அவர்கள் நம்புகின்றனர். படுகொலையின் வழியில் நிற்கும் அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்படுவதை யாரும் கவலைப்படுவதில்லை.
இஸ்ரேலில் இரண்டு வகைச் சட்ட அமைப்புகள் உண்டு. ஒன்று சாதாரண குடிமக்களுக்கு. இன்னொன்று உளவு, பாதுகாப்பு அமைப்புகளுக்கு. இரண்டாவது சட்டத்தின்படி இந்தப் படுகொலைகள் நியாயமானது. நாடாளுமன்றமோ, மனித உரிமை அமைப்புகளோ அதில் தலையிட முடியாது. இதுவே மொஸாடின் பயங்கரவாதத்திற்குப் பாதுகாப்பு அரணாக அமைகிறது.
மொஸாடின் இந்த இரக்கமற்ற குரூர வழிமுறை பல இடங்களில் அவ்வமைப்புக்குக் கெட்ட பெயரைச் சம்பாதித்து இருக்கிறது. ஆனால் அது என்றைக்கும் மொஸாடைக் கட்டுப்படுத்தியதில்லை. மேலும் மேலும் மூர்க்கமாகித்தான் இருக்கிறது. சில சமயங்களில் அதன் அத்துமீறலை நியாயப்படுத்தச் சாகச கதையாடல்களும் உருவாக்கப்படுகின்றன.
இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் மொஸாடில் இருந்துகொண்டு படுகொலைகளை அரங்கேற்றுபவர்கள் பலர் 25 வயதுக்கும் குறைந்தவர்களே. இது எதிர்கால இஸ்ரேலியத் தலைமுறையையே கொலைகாரர்களாக மாற்றுகிறது என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.
மேலும் மொஸாடின் இந்தப் பயங்கரவாதப் பாதை வளர்ந்த நாடுகளுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது என்பதுதான் கொடூரம். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவும் இஸ்ரேலின் வழிமுறையையே வழக்கமாக்கிக் கொண்டது. இஸ்ரேல் உருவாக்கிய உளவு தொழில்நுட்பங்களும், கொலை ஆயுதங்களும்தான் இன்றைக்கு அமெரிக்காவில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உளவு பயங்கரவாதத்தின் இந்த வானளாவிய அதிகாரத்திற்கு அப்பாவிகளின் உயிர்கள் விலையாகக் கொடுக்கப்படுவதுதான் கொடூரம்.
பயங்கரவாதம்தான் தீர்வா?
அயதுல்லாவின் ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்கி ஈரானை மத்தியக் கிழக்கின் அசைக்க முடியாத சக்தியாக மாற்ற முயற்சித்து வந்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் மொஸாடின் துணையுடன் விஞ்ஞானிகளைக் கொல்வது, வைரஸ்களைப் பரப்பி அவர்களுடைய திட்டத்தைக் குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா மற்றொருபுறம் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விதித்து மிரட்டியது. ஆனால் ஈரான் பணியவில்லை.
நேதன்யாகு போர் வெறி கொண்டு திரிந்தார். ஒருபக்கத்தில் படைகளையும் நகர்த்தத் தொடங்கினார். அப்போது ஒபாமாவின் முதலாவது முறை ஆட்சி முடியும் தருவாயில் இருந்தது. ஒபாமாவுக்கோ பயம். எங்கே இஸ்ரேல் நேரடித் தாக்குதல் நடத்தி அதனால் மத்தியக் கிழக்கில் கொந்தளிப்பு ஏற்பட்டு, தனது எண்ணெய் வியாபாரத்தில் பெரும் அடி விழுந்துவிடுமோ என்று. அதையும்தாண்டி அந்த விவகாரம் 2012ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்தல் முடிவுகளையும் பாதிக்கும் என அஞ்சினார் ஒபாமா.
அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தது. ஈரானுடன் ரகசியப் பேச்சு வார்த்தை ஒன்றை ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் நடத்தியது. அங்கே என்ன பேசினார்கள், என்ன உடன்படிக்கை எட்டப்பட்டது என்றெல்லாம் அமெரிக்கா யாருக்கும் சொல்லவில்லை. இஸ்ரேலையும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. ஆனால் அப்போதைய மொஸாட் தலைவராக இருந்த தமிர் பார்டோவை அழைத்துப் படுகொலைகளை நிறுத்தச்சொன்னது. நேதன்யாகுவிடமும் வலியுறுத்தியது.
பேச்சு வார்த்தையின் பலனாக ஈரான் அடுத்த சில வாரங்களிலேயே அணு ஆயுதத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஒப்புக்கொண்டது. கொலை நடைபெறவில்லை. ரத்தம் சிந்தப்படவில்லை. எந்த உயிரும் பறிக்கப்படவில்லை. அமைதியான முறையில் வெற்றி.
இதுதான் நிரந்தரத் தீர்வுக்கான வழி என்று மொஸாடின் முன்னாள் தலைவர் டாகன் சொன்னார்.
0
படுகொலைகளே தீர்வு என்று முன்பு உறுதியாக நம்பி வந்த டாகன், தனது இறுதிக் காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையே நிரந்தரத் தீர்வுக்கான வழி என ஒப்புக்கொண்டார்.
தற்காப்புக்காகவே மொஸாட் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது என்று முன்பு தாம் முன்வைத்த வாதத்தையே அவர் மறுத்துப் பேசினார்.
’இஸ்ரேலின் இருப்பிற்கான அச்சுறுத்தல் பாலஸ்தீனத்தில் இருந்தே தொடங்குகிறது. பாலஸ்தீனக் கேள்விக்கு விடை தேடாமல், தனிப் பாலஸ்தீனத்தை அமைக்காமல், ஆதிக்க மனோநிலையை விட்டு விலகாமல் இஸ்ரேலின் பாதுகாப்பை மொஸாடால் உறுதி செய்ய முடியாது.
நானும் ஷாரோனும் பல ஆண்டுகளாகவே வன்முறை மட்டுமே பிரச்னைகளைத் தீர்க்கும் வழி எனக் கருதி வந்தோம். அரேபியர்களுடனான மோதலை அரபுத் தலைகளை துண்டித்தால் சரியாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால் அது ஒரு மாயை எனப் புரிந்துகொண்டேன்’ என்றார்.
இஸ்ரேல் புவியியல் ரீதியாக, இன ரீதியாக, மத ரீதியாக, தேச ரீதியாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அதற்கான தீர்வாக உளவு அமைப்புகள் முன்வைப்பது ரகசிய அழிவு வேலைகளை. அதைவிடுத்துப் பேச்சு வார்த்தைகளின் வழி உண்மையான தீர்வை அடைய இஸ்ரேல் முயற்சிக்க வேண்டும். மொஸாடின் குரூர நடவடிக்கைகள் தற்காலிகமாக மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது உண்மைதான். அதனாலேயே இஸ்ரேலிய தலைவர்களும் பயங்கரவாத வழிகளைக் கையில் எடுக்கின்றனர். ஆனால் அது என்றைக்கும் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்காது எனக் கூறினார்.
இன்று டாகனுக்குப் பிறகு எத்தனையோ மொஸாட் தலைவர்கள் மாறிவிட்டார்கள். டாகனுக்கு முன்பும் பலர் மொஸாடின் தலைவர்களாக இருந்தார்கள். ஆனால் உண்மையிலேயே மொஸாடின் கொள்கைகளை, அதன் தவறுகளை வெளிப்படையாகப் பேசியது டாகன் மட்டும்தான். அவர் எதிர்த்த நேதன்யாகுதான் இன்றைக்கும் இஸ்ரேலின் ஆட்சியாளராக இருக்கிறார். அவரது தலைமையில் போர் வெறி, படுகொலை இரண்டையும் ஆயுதங்களா ஏந்தி மத்தியக் கிழக்கை ஆட்டிப் படைத்து வருகிறது இஸ்ரேல்.
வருங்காலத்தில் இஸ்ரேல் எனும் தேசமும், அதற்குத் துணைபோகும் மொஸாடும் எத்தகைய அழிவுப் பாதைக்குத் தேசங்களை அழைத்துச் செல்ல இருக்கின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.
(முற்றும்)