Skip to content
Home » முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

‘என்னைக் கைது செய்ய நினைத்தால் செய்திருக்கலாம்! ஏன் எரித்தீர்கள்…?’

60 சதவீத தீக்காயங்களுடன், மருத்துவமனையில் படுத்தபடி வேதனை ஓலம் இழையோட பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் கேட்ட கேள்வி இது. உண்மை சுடும் என்பார்கள், இங்கே ஒருபடி மேலே போய் கொளுத்தியே விட்டது.

இந்திய இதழியல் பரப்பில், கேட்டாலே பதைக்கவைக்கும் கொடூரமான கொலைகளுள் ஒன்று இது. ஐ.நா. மன்றமே கண்டித்தாலும், இங்கு அதிகாரம் எப்போதும் அதன் போக்கில்தான் இயங்கும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்த சம்பவம்.

2015 மே 22ஆம் தேதி, இப்படி ஒரு ஃபேஸ்புக் பதிவு. ‘அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவின் ஆட்களால் நான் கொல்லப்படலாம். இப்போதெல்லாம் அரசியல் பிரமுகர்கள், குண்டர்கள், காவலர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர். உண்மையைச் சுமப்பது எனக்கு பெரும்பாரமாக இருக்கிறது’ என்று அச்சத்துடன் தனது ஷாஜகான்பூர் சமாச்சார் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் ஜகேந்திரா.

ஜகேந்திர சிங் என்ற பெயரை இந்தியாவின் பெருநகரச் செய்தி நிறுவனங்கள் அறிந்திருக்கவில்லை. அவர் எந்த தொலைக்காட்சியிலும் தோன்றியதில்லை. எந்தப் பத்திரிகை நிறுவனத்திலும் அந்தச் சமயத்தில் பணியாற்றவில்லை. பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர் அட்டை இருந்தது. சில செய்தித்தாள்களில் பங்களிப்பு இருந்தது. அவ்வளவுதான்.

யார் இவர்?

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியில் உள்ள குட்டார் கிராமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜகேந்திர சிங். ஸ்வதந்திரா பாரத் (Swatantra Bharath), ஜன்சந்தேஷ் டைம்ஸ் (Jansandesh Times), இ டிவி (ETV) ஆகிய ஊடகங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர். பின்னர், தன் ஷாஜஹான்பூர் பகுதிக்குள்ளேயே பேஸ்புக் பக்கம் தொடக்கி நடத்தி வந்தார். ஃபேஸ்புக் பிரபலமாகத் தொடங்கிய காலத்திலேயே ‘சமூக ஊடக இதழியல்’ என்கிற பாணியைக் கடைபிடித்தவர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான் இவரது பேராயுதம். ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோதச் செயல்பாடுகள், உரிமமற்ற சுரங்கங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஊழல்கள் என பலவற்றையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுவந்தார்.

ஆம். அப்போது அவர் நடத்தி வந்தது நாளிதழோ, வலைதளமோ அல்ல. Shahjahanpur Samachar என்ற ஒரு ஃபேஸ்புக் பக்கம் தான். வாசகர்கள் கூட வெறும் நான்காயிரம் பேர்தான். அதனாலென்ன? உண்மை தன் வீரியத்தை ஒருபோதும் இழப்பதில்லையே. ஆதரவும் அங்கீகாரமும் மெல்ல மெல்ல உயர, ஷாஜஹான்பூர் மணல் மாஃபியா, கர்ரா நதியில் கனிம வளக்கொள்ளை என தொடர்ந்து செய்திகளை வெளியிட்டார். இதில் அப்போதைய ஆளுங்கட்சி அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவின் தொடர்பும் வெளியிடப்பட்டது. இங்கிருந்துதான் பிரச்னை தொடங்கியது.

சின்னஞ்சிறு ஃபேஸ்புக் பக்கத்தின் செய்திகளும் கூட அவர்களுக்குச் சிக்கலாகத்தான் இருந்தது. கொலை மிரட்டல், தாக்குதல் என இடையூறுகள் தொடர, இதழியலும் தொடர்ந்தது. தாக்குதல் குறித்து, அமைச்சரின் ஆட்கள்தான் காரணம் என்று காவல்துறையிலும் புகார் கொடுத்திருந்தார் ஜகேந்திரா. புகார் பெறப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதழியல் வட்டத்தில் ஜகேந்திராவின் செல்லப்பெயர் ‘நிடர்’. தமிழில் இதற்கு அச்சமில்லாதவன் என்று பொருள்.

அன்று ஜூன் 1ஆம் தேதி. ஜகேந்திர சிங்குக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தது. பெருமுயற்சி எடுத்து அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அனுமதி பெற்றிருந்தார். அப்போதைய உத்தரப்பிரதேச அமைச்சர் ராம்மூர்த்தி வர்மா மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்த ஷாலினிதான் அப்பெண்.

திட்டமிட்டபடி வாக்குமூலப் பதிவு தொடங்கியது. ஆனால், தொடர முடியவில்லை. யாரோ பலங்கொண்டு கதவைத் தட்டும் சத்தம். யாரென்று பார்ப்பதற்குள் தடதடவென உள்ளே நுழைந்தது காவல்துறை.

நுழைந்ததுதான் மிச்சம். பேச்சுவார்த்தைக்கு இடமின்றி தாக்குகின்றனர். வெறி கொண்ட தாக்குதல் அது. தாக்குதலுக்கிடையில், ‘இந்தக் கைதானே அமைச்சரைப் பற்றி எழுதியது. இனி எழுதவதற்கு கைகளே இருக்காது பார்’ என்றபடி, பெட்ரோலோ மண்ணெண்ணையோ, ஏதோ ஒரு எரிதிரவத்தை ஜகேந்திரா மீது ஊற்றிப் பற்ற வைத்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து சிலர் ஓடிவர, வேறு வழியின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஜகேந்திரா.

மருத்துவமனையில் சேர்த்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் மரண வாக்குமூலம் உள்ளிட்ட நடைமுறைகளைச் செய்யத் தொடங்கியது காவல்துறை. ஆம் ஜூன் 1ஆம் தேதியே ‘மரணவாக்குமூலம்’ பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், அவர் இறந்தது ஜூன் 8 ஆம் தேதிதான். அப்படியானால் ஏன் அதை மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டனர்? அவர் பிழைக்க மாட்டார் என்று முன்பே முடிவு செய்து விட்டதா காவல்துறை என்ற கேள்விக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.

‘அதன்பின்னர் ஒரு வாரம் சிகிச்சை நடந்து, உடல்நிலை தேறி தானாகவே கழிவறைக்குச் செல்லும் அளவுக்கு தயாராகியிருந்தார். திடீரென ஜூன் 8ஆம் தேதி உடல்நிலை மீண்டும் மோசமாகிவிட்டது’ என்கிறார் ஜகேந்திராவின் மனைவி.

‘தொடக்கம் முதலே அமைச்சர் ராம்மூர்த்தி வர்மாதான் இதன் பின்னணியில் உள்ளார் என்று நான் அழுத்தமாகச் சொல்லிவருகிறேன். இதுகுறித்து ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை’ என்கிறார் ஜகேந்திராவின் அப்பா.

தந்தையின் இறப்புக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும். இதற்கு காரணமான அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் காவல்துறையின் அலட்சியம் மீது ஆதங்கத்தோடும் இருந்தார் ஜகேந்திராவின் மூத்த மகன் ராகவேந்திரா.

‘நாங்கள் கொடுத்த புகாரின் மீது வழக்குக் கூட பதிவு செய்யவில்லை. தந்தை இறப்புக்குப்பின் உடலை வாங்கமாட்டோம் என்று போராட்டம் செய்ததால்தான், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.’ மொத்தத்தில் காவல்துறை பாதுகாப்பும் அளிக்கவில்லை. விசாரணையில் அக்கறையும் காட்டவில்லை என்பது குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எண்ணமாக இருந்தது.

ஆனால், காவல்துறைக்கு அக்கறை இல்லாமல் இல்லை. மிகுந்த அக்கறையுடன் ஜகேந்திரா மீது தற்கொலை வழக்குப் பதிவு செய்தது!

காவல்துறை அறிக்கையின்படி இதுதான் நடந்தது.

மே 12ஆம் தேதி அவர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குக்காக, ஜகேந்திர சிங்கைக் கைது செய்ய அவர் வீட்டுக்கு சென்றோம். கதவு தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைக்க முயற்சித்தோம். அதேசமயம், காவலர் ஒருவரை சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று பார்க்கவும் அனுப்பினோம். உள்ளிருந்து புகை வந்தது. அங்கே ஜகேந்திரா மட்டும் இல்லை. உடன் ஒரு பெண்ணும் இருந்தார். எங்களைப் பார்த்ததும் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, தன் மீது தானே கொளுத்திக் கொண்டார். பின்னர் காவல்துறை அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் என்று தெரிவிக்கப்பட்டது.

என்ன இது? இப்படியொரு அறிக்கையா? குடும்பம், ஷாஜஹான்பூர் மக்கள், இதர ஊடகவியலாளர்கள், சர்வதேச இதழியல் சமூகம் என அனைவருக்கும் அதிர்ச்சி.

அத்தனைக்கும் மேலாக ‘தற்கொலை முயற்சி செய்ததற்காக ஜகேந்திராவையும் உடனிருந்த பெண் ஷாலினியையும் சேர்த்து கைது செய்தோம்’ என்று.

அந்த ஷாலினிதான் அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா மீது பாலியல் வன்கொடுமைக் குற்றம் சுமத்தியவர். அவரை நேர்காணல் செய்யும்போதுதான் இந்த கொளுந்துவிட்டெரிந்த கைது நடவடிக்கை நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தில் நேரில் பார்த்த சாட்சி ஷாலினி ஒருவர்தான். ‘ஜகேந்திரா கொளுத்திக்கொள்ளவில்லை. கொளுத்தப்பட்டார்’ என்று அவர் சொன்னது இந்த வழக்கில் உறுதிவாய்ந்த ஒரு சாட்சியம். ஆனால்… இந்த உறுதி நீண்டகாலம் நிலைக்கவில்லை.

ஒன்பது மாதங்களுக்கு பிறகு (ஏப்ரல், 2016), ‘அவர் தன்னைத்தானே கொளுத்திக்கொண்டார்’ என்று வாக்குமூலத்தை மாற்றினார்.

சாட்சி, பிறழ்சாட்சியாவதெல்லாம் இந்திய நீதித்துறையில் அரிய சம்பவமில்லை. ஆனால் இந்த வழக்கில் கேள்வியே வேறு.

எந்த அச்சம் அவரை பிறழ்சாட்சியாக்கியது? எந்த அழுத்தம், தன் கண் முன்னே நடந்ததை மாற்றிச் சொல்ல வைத்தது? அந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. இந்தப் புள்ளியிலிருந்து கொலை விசாரணை, தற்கொலையாக கோணம் மாறிக் கோணலானது.

அதெல்லாம் இருக்கட்டும். அமைச்சரின் தரப்பு மிரட்டியது குறித்தும் தாக்குதல் நடத்தியது குறித்தும் ஜகேந்திரா கொடுத்த புகார் மீது, நடவடிக்கை என்னவானது? அப்படியேதும் நடந்ததா என்றால், ஒன்றுமில்லை என்பதுதான் நேர்மையான பதில்.

இந்த நிலையில், ஜகேந்திரா இறந்த நான்கு நாட்களில் (ஜூன் 12ஆம் தேதி) யுனெஸ்கோவின் இயக்குநர் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொது அறிக்கை வெளியிட்டார். ‘நான் ஜகேந்திர சிங்கின் கொலையை கண்டிக்கிறேன். இந்த குற்றத்தின் மீது விரைவான, முழுமையான விசாரணை நடத்துமாறு இந்திய அதிகாரிகளை வலியுறுத்துகிறேன். பத்திரிகையாளர்கள் பயமின்றி, தடையின்றி பணியாற்றுவதற்கு இது மிக அவசியம்’ என்று சொன்னார்.

ஒரு சிறுநகர பத்திரிகையாளரின் கொலையை கண்டித்து சர்வதேச அமைப்புகள் கண்டித்தன. அதற்கென்ன? கண்டித்துவிட்டுப் போகட்டுமே. அதிகாரம் தன் தொனியில் தான் பதில் சொல்லும். எப்படி?

குடும்பத்தினருக்கு 30 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை என்று அறிவித்தது. அவரது மகன்கள் இருவருக்கும் அரசு வேலை வழங்குவதாய் அறிவித்தது.

சமூகம் எதிர்நோக்கிய பதிலை ஜகேந்திராவின் மகள் கொடுத்தார். ‘காவல்துறையின் அறிக்கையை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணம். ஆனால், எங்களுக்கு வேண்டியது இந்தப் பணம் அல்ல நீதி. உண்மைக்காக மட்டுமே போராடி உயிர்நீத்த ஓர் அரிய மனிதன் என் தந்தை. அவரது வாழ்க்கையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது’ என்று உறுதியாக நின்றார்.

ஆனால், இந்தக் கதையின் முடிவு மெல்ல மெல்ல வேறு திசைநோக்கி நகர்ந்தது.

‘அவர் ஒரு பத்திரிகையாளரே அல்ல. பெரியமனிதர்களை மிரட்டிப் பணம் பறிக்க, ஒரு சமூக வலைதள கணக்கு நடத்துபவர். உண்மை அம்பலப்பட்டுப் போனதும் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டார். அவ்வளவுதான்’ என்றது காவல்துறை.

ஆனால், வழக்கு விசாரணையில் தான் வைத்த எந்தக் குற்றச்சாட்டையும் ஆதாரங்களுடன் வாதாடி நிரூபிக்க முடியவில்லை.

இதற்கிடையில், மகன்கள் இழப்பீடு பெற்றுக்கொண்டு வாக்குமூலத்தை மாற்றினர். அறிவிக்கப்பட்ட வேலையும் பணமும் வந்து சேர காவல் அறிக்கையை ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டனர்.

மகள் ‘பணம் வேண்டாம், நீதி வேண்டும்’ என்று நின்றார். மகன்கள் வாக்குமூலத்தை மாற்றினர். ஒரே குடும்பத்தில் உண்மை இரண்டு திசைகளில் பிளந்தது. இதுவும் அதிகார வர்க்கத்தின் பரிசுதான்.

மே 22ஆம் தேதி அச்சுறுத்தல் குறித்து பொதுவில் அறிவித்தும் காவல்துறையில் புகாரளித்தும் கூட, சம்பவம் குறித்து நேர்காணல் எடுத்த பத்திரிகையாளர் கொல்லப்படுவார் என்றால், என்ன கற்பிக்கப்படுகிறது இந்தச் சமூகத்தில்?

இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு மட்டும் ஒரு தகவல் சொல்கிறேன். மே 22 ஆம் தேதி தனக்கு இருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக ஜகேந்திரா பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இறப்பு குறித்து வெளியான செய்திகளிலும் CPJ, RSF போன்ற இதழியல் சுதந்திரம் தொடர்பான அமைப்புகளின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அச்செய்தி, இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் அமைத்த உண்மையறியும் குழுவின் அறிக்கையில் இருக்காது.

அப்படியானால், அந்தப் பதிவு நீக்கப்பட்டது ஏன்? பின்னணி என்ன? ஜகேந்திரா இறந்தபின்பு அவரது கணக்கிலிருந்து எப்படி நீக்கப்பட்டது? யார் நீக்கியது? தோண்டத் தோண்டத் துயர்மிகுந்த கேள்விகள். எதற்கும் பதிலில்லை.குற்றம் சாட்டப்பட்ட 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். ராம் மூர்த்தி வர்மாவின் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. UNESCO கண்டித்தது. உலகம் கவலைப்பட்டது. ஆனால், அதிகாரமும் அரசியல் வலிமையும் உருவாக்கிய அச்சம் அப்படியே இருக்கிறது.

கடைசியில், ஜகேந்திரா ஒரு பத்திரிகையாளர்தான் என்றும் அவர் யாரையும் மிரட்டி பணம் பறித்தவர் அல்ல என்றும் நிரூபிக்கவே போராட வேண்டிய சூழல். இதற்கிடையில் நீதி வாதப் பிரதிவாதங்களுக்கிடையில் வசதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.

கோடிகளைக் கொட்டி நடத்தப்படும் பெருநிறுவனத்தில் பணியாற்றுபவர் என்றாலும் சரி, சுயாதீனமாக செயல்பட்டுவரும் பத்திரிகையாளரானாலும் சரி. அறத்துடன் பிறருக்கு செய்தி சொல்ல நினைக்கும் எண்ணம்தான் இதழியலின் அடிப்படை அளவீடு. மற்றவை இரண்டாம்பட்சம்தான்.

0

குறிப்பு: 2015இல் ஜகேந்திராவின் இறப்புக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் கருண் (2016), சந்தீப் (2018) என இரு பத்திரிகையாளர்கள் மணல் கொள்ளை தொடர்பான இதழியலுக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *