‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’ என்று யாரோ சத்தமிட்டதுதான் காதில் கேட்டது. அது யாரென்று உணர்வதற்குள் தன்மீது அப்படியொரு வெறித்தனமான தாக்குதல் நடக்குமென்று நிச்சயமாக அவர் நினைத்திருக்க மாட்டார்.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி, பொறியாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி, செல்போன் பயன்படுத்திய குற்றச்சாட்டால், வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். சுதந்திர நாட்டில் ஒரு பத்திரிகையாளருக்கு செல்போன் பயன்படுத்தக்கூட சுதந்திரம் இல்லையா என்று கொதித்துக் கொண்டிருந்தனர் சிலர். கைது செய்யப்பட்ட பின், காவல் கட்டுப்பாட்டில் செல்போன் பயன்படுத்த யாருக்கும் சுதந்திரம் இல்லை என்று பதிலளித்துக் கொண்டிருந்தனர் சிலர்.
ஊடகங்களின் மொத்தக் கண்களும் அர்னாப் மீதிருந்த அதே நாளில், தமிழ்நாட்டில், சட்டவிரோதச் செயல்களை அம்பலப்படுத்தியதற்காக, இஸ்ரவேல் மோசஸ் என்னும் இளம் பத்திரிகையாளர் தன் வீட்டு வாசலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அன்று மோசஸ் கடைசியாகக் கேட்ட வார்த்தைகள்தான், ‘இவன் தாண்டா அந்த ரிப்போர்ட்டர்’.
யார் இவர்? என்ன நடந்தது?
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். தமிழன் டிவி என்னும் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேரச் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். மோசஸின் தந்தையும் மாலைத் தமிழகம் என்ற இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த ஊரில் பத்திரிகையாளர்களாக வாழ்ந்து வந்த ஒரு தந்தை – மகன் கூட்டணி இது. இந்தக் கூட்டணியின் முதன்மையான பணியே தங்கள் ஊருக்குள் நடக்கும் அநியாயங்களை அம்பலப்படுத்துவதுதான். அதிலும் குறிப்பாக, தமிழன் டிவியில் வெளியாகி வந்த ‘சிறப்புப் பார்வை’ என்ற நிகழ்ச்சியில் இதுபோன்ற சட்டவிரோத, முறைகேடான நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களுடன் வெளியிடுவார் மோசஸ்.
இப்படித்தான் அப்பகுதியில் நடக்கும் போதைப்பொருள் (கஞ்சா) விற்பனை விவகாரம் மோசஸ் கவனத்துக்கு வந்தது. மோசஸ் தனது சிறப்புப் பார்வை என்ற நிகழ்ச்சி மூலம் அவற்றை வெளிக்கொண்டு வந்தார். மேலும் அப்பகுதியில் விற்பனை நடக்கும் இடங்களைக் குறித்தும் தெளிவாக அம்பலப்படுத்தினார். இதன்பிறகு அப்பகுதியில் வெளிப்படையான போதைப்பொருள் விற்பனை குறைந்தது.
அதுமட்டுமல்ல, அப்பகுதியில் இருந்த புறம்போக்கு நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் கும்பலைக் குறித்தும் மோசஸின் சிறப்புப் பார்வை நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்தது. இதன் விளைவாக ஊர்மக்கள் இணைந்து, அந்த வீட்டுமனைகளில் ஊன்றப்பட்டிருந்த கற்களைப் பிடுங்கி எறிந்தனர். அப்படி ஓர் எழுச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியது மோசஸின் இதழியல்தான்.
இதுபோன்ற செய்திகள் வெளியாகும்போதெல்லாம் கொலை மிரட்டல்கள் வருவதுண்டு என்றாலும் இந்த முறை வந்த மிரட்டல்கள் வழக்கத்துக்கு மாறாக இருந்தன.
அன்று, நவம்பர் 8 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை. இரவு 10:30 மணியளவில், தனது வீட்டிலிருந்த மோசஸுக்கு ஓர் அழைப்பு வந்தது. வெளியே வந்தவரை வீட்டு வாசல் அருகே இருவர் வழி மறித்தனர். அவ்வளவுதான். ‘இவன் தாண்டா அந்த ரிப்போர்ட்டர்’ என ஒருவர் சொல்லவும், இருவரும் மோசஸை சரமாரியாக வெட்டவும் நேரம் சரியாக இருந்தது. காற்றெங்கும் கலந்து பரவிய மோசஸின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவர் தந்தையும், தங்கையும் வெளியே வர, மர்ம நபர்கள் தப்பியோடினர்.
தலையில், முகத்தில், கையில் என வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த மோசஸை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மோசஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார் மருத்துவர்.
உண்மையின் பக்கம் நின்றதற்காகத் தன் மகன் கொல்லப்பட்டுள்ளான் என்ற வேதனையோடு அந்தச் சமயத்தில் மோசஸின் தந்தை அளித்த பேட்டிகள் நம்மைப் படிக்க படிக்க அழவைப்பவை.
செய்தியாளராக வேண்டும் என்பது என் மகனின் கனவு. மிகப்பெரிய கனவுகளோடு அவன் ஒரு தனியார் டி.வியில் வேலை செய்து வந்தான். எப்போதும் ஆர்வத்தில் அதிகப்படியான வேலை செய்வான். எதற்கும் பயப்படாமல் தவறுகளைச் சுட்டிக்காட்டி செய்தி சேகரிப்பான். இந்த நிலையில், கடந்த சில காலமாக எங்கள் பகுதியில் கஞ்சா போதைக்கு சிறுவர்கள் பலர் அடிமையாகி வந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு பல ரகசியத் தகவல்களையும் கொடுத்துள்ளார். இது, அந்த கஞ்சா கும்பலுக்கு சில போலீசார் மூலம் தெரியவர, சிலர் மோசஸுக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர். அப்படி ஒரு சூழலில்தான் அன்று இரவு, யாரோ அலைபேசியில் அழைத்ததும் அவரைச் சந்திக்க வெளியில் சென்றான். சரி, அவனது நண்பர்கள் என்று நினைத்தேன். ஆனால், அவன் வெளியில் சென்ற சிறிது நேரத்தில் பெரும் அலறல் சத்தம். வெளியே வந்து பார்த்தால், அவனை இருவர் வெட்டிக் கொண்டிருந்தனர். தலை, முகம் மற்றும் கைகளில் கொடூரமான வெட்டுக்காயங்கள் இருந்தன. நான் வெளியே சென்றதும் தப்பியோடிய அவர்கள், ‘நிருபராக இருந்தாலும் வெட்டுவேன்’ என்று கூறியபடிதான் சென்றனர்.
இந்த மிரட்டல், தன் மகனின் படுகொலைக்கு நீதிபெற்றே ஆக வேண்டும் என்ற அவரது எண்ணத்தை கடுகளவும் அசைக்கவில்லை.
நிலப்பிரச்னையை விட, கஞ்சா குறித்த செய்திகளுக்குப் பிறகே, மிரட்டல் அழைப்புகள் அதிகமாக வரத் தொடங்கின. இதுகுறித்து மோசஸ் சோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வாய்மொழியாக ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்தார். ஆனால் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை.
எனவே, தமிழன் டிவியின் அப்போதைய தலைமை நிருபர் சகாயராஜ் இந்த விவகாரத்தில் போலீஸை நேரடியாக குற்றம் சாட்டினார். ‘மிரட்டல் அழைப்புகள் குறித்து பெயர்களுடன் புகார் தெரிவித்திருந்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்பது அவரது வாதம். எனவே இந்தக் கொலையில் காவல்துறைக்கும் பங்கிருக்கிறது என்ற வாதத்தைக் கையிலெடுத்தன பத்திரிகையாளர் அமைப்புகள்.
ஆனால், ஆவணங்களின்படி எந்தப் புகாரும் இல்லை என்ற ‘அதிகார’ப்பூர்வ பதிலைத் தந்தது காவல்துறை. இருந்தும், கொலை வழக்கு தொடர்பான நடவடிக்கை உடனடியாக நடந்தது.
மோசஸின் தந்தை ஞானராஜ் அளித்த புகாரின்படி, உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூவர் இது தொடர்பாக சரணடைந்த நிலையில், நான்காவது நபரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் சட்டவிரோத நிலவிற்பனை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பலின் உறுப்பினர்கள் என்று காவல்துறை குறிப்பிட்டது.
தமிழ்நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தின் பரிதாப நிலை இது என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (IFJ – International Federation of Journalists ) கண்டித்தது. ‘தமிழ்நாடு அரசு நிருபர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும்’ என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு கூறியது. ‘இந்த வழக்கில் என்ன நடந்தாலும் குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீர வேண்டும்’ என்று யுனெஸ்கோ கூறியது.
மேலும், பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்புகள் பலவும் கண்டித்தன. இரங்கல் தெரிவித்தன. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சங்கங்கள், அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நிகழ்த்தின.
ஆனால், பத்திரிகையாளர் கொலை வழக்குகள் என்றால் எப்போதும் தாமதமான நீதிதானே? மிகப்பெரிய அளவில் சமூக மற்றும் ஊடக வெளிச்சம் பெற்ற வழக்குகளுக்கே அப்படித்தான் இருக்கிறது நிலைமை.
இதில், அர்னாபின் சிறைவாசத்தால் அப்படியே அமிழ்ந்துபோன மோசஸின் கொலை வழக்கை ஊடகங்கள் என்ன செய்யக் காத்திருக்கின்றன என்பது எல்லோரும் நன்கறிந்த ரகசியம்தான்.
மோசஸ் கொலை வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கும் அவரது குடும்பத்துக்கு, நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான், மிச்சமிருக்கும் ஒரே வழி.
(தொடரும்)

