இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை.
நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும் அம்மாவும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விரைவில் வேறு ஓர் ஊருக்கு மாறிவிடலாம் என்று திட்டமிட்டு எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. தன் புலனாய்வு இதழியலால் பத்திரிகையாளர் சந்தீப் ஷர்மாவுக்கு ஏற்பட்டிருந்த நிலைமை இது.
அன்று காபியும் கொஞ்சம் கார நொறுவைகளும் சாப்பிட்டுவிட்டு இதோ வந்துவிடுகிறேன் என்று போனவர் வரவேயில்லை.
அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்துக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. தனது மோட்டார் சைக்கிளில் தானும் தன் நண்பனுமாகச் சென்றுகொண்டிருந்தார். கோட்வாலி காவல் நிலையத்துக்கு அருகில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு ராட்சத டிம்பர் டிரக், நிதானமாக இடதுபுறமாகத் திரும்பி அவர் மீது ஏறியது. ஏற்றப்பட்டது.
ஏற்றப்பட்டது என்று உறுதியாகச் சொல்வதற்குக் காரணம் உண்டு. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் மிக உறுதியாக இதை நிரூபிக்கின்றன. சம்பவத்தில் சந்தீப் ஷர்மா சம்பவ இடத்திலேயே பலியானார்.
முன்னதாக இவருக்கு மிரட்டல்கள் இருந்து வந்த நிலையில்தான் இந்த ஊரையே காலி செய்துவிடலாம் என்று குடும்பம் முடிவு செய்திருந்தது. அதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது.
அம்மா, இணையர், வளரிளம் பருவத்தில் இரண்டு குழந்தைகள் எனக் காத்திருந்த குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது விபத்துச் செய்திதான். என்னதான் நடந்தது? யார் இந்த சந்தீப் சர்மா?
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பிண்ட் மாவட்டத்தில் News World என்ற ஒரு தனியார் சேனலில் நிருபராக இருந்தார் சந்தீப் சர்மா. அப்பகுதியில் நடக்கும் மணல் மாஃபியா குறித்துத் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தார். காவல்துறை உதவியுடன் இந்த மணல் கொள்ளை நடப்பதாக சந்தேகம் இருந்தது. ஆனால், ஆதாரம் இல்லை.
அதற்காகத்தான், 2017 ஜூலையில் சந்தீப் சர்மாவும் அவரது நண்பரும் சக நிருபருமான விகாஸ் புரோஹித்தும் இணைந்து ஒரு திட்டம் போட்டனர். பிண்ட் மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்டிபிஓ) இந்திரா வீர்சிங் பதோரியாவின் வீட்டுக்கே சென்று, மணல் மாஃபியா கும்பலுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை ரகசிய கேமராமூலம் வெளிக்கொண்டு வரும் திட்டம் அது.
திட்டமிட்டபடியே சென்று, ரகசிய கேமராவுடன் போய், ஒரு புதிய டீல் பேசுவது போல் பேசி, அவற்றைப் பதிவும் செய்தனர். மத்தியப் பிரதேசத்தின் எஸ்டிபிஓ என்பது தமிழ்நாட்டில் ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு இணையான பொறுப்பு.
அந்த வீடியோவில் என்ன இருந்தது தெரியுமா? ஒரு லாரிக்கு 12,500 லஞ்சமாக வாங்கிக் கொண்டு, சட்டவிரோதமாக மணல் கடத்தும் லாரிகளுக்கு வழிவிடுவதாக ஒப்புக்கொண்டார் மாவட்ட எஸ்டிபிஓ. அவ்வளவுதான், அந்த வீடியோவைப் பல்வேறு ஆதாரங்களுடன் இணைத்து முழுநீளச் செய்திக்கோப்பாக, அக்டோபர் 25, 2017 அன்று நியூஸ் வர்ல்ட் ஒளிபரப்பியது. அடுத்த சில நாட்களில் பதோரியா மாற்றம் செய்யப்பட்டார். நல்லது நடந்தது என்று நினைத்தனர்.
ஆனால் நல்லது நடக்கவில்லை. வன்மம் வளரத் தொடங்கியது. வீடியோ ஒளிபரப்பாகி 10 நாட்கள்கூட இருக்காது. திடீரென யாரென்றே தெரியாத ஒரு கும்பலால் சந்தீப் சர்மா தாக்கப்பட்டார். அன்று அதிர்ஷ்டவசமாக அருகில் காவல்துறையினர் இருந்ததால் உயிர் தப்பினார். உடனே காவல் நிலையம் சென்று புகாரும் கொடுத்தார். ஆனால், காவல் துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. புகாரைப் பதிவுகூடச் செய்து தரவில்லை என்று அவரது நண்பர் விகாஸ் புரோஹித் தெரிவித்தார்.
நவம்பர் 3, 2017 அன்று இருவரும் சேர்ந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தனர். அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதினார்கள் ‘பதோரியா மணல் மாஃபியா கும்பலுடன் தொடர்பில் உள்ளார். எங்களைப் போலி வழக்கில் சிக்க வைக்கலாம், அல்லது கொலை செய்துவிட்டு விபத்தாகக் காட்டலாம்’.
அந்தக் கடிதத்தின் நகல்கள் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று பிண்ட் மாவட்டப் பத்திரிகையாளர் சங்கமும் ‘இவருக்கு பாதுகாப்பு கொடுங்கள்’ என்று எஸ்பிக்குக் கடிதம் அனுப்பியது. எதற்கும் பதிலில்லை.
மூன்று கடிதங்கள். மூன்று பெருந்தலைகளுக்கு எழுதி மூன்று முறையும் ஆபத்து என்று வலியுறுத்தி பாதுகாப்புக் கேட்டார்கள். ஆனால், யாருக்கும் அது கேட்கவில்லை. ஒரு வார்த்தையில் சொல்வதானால் ‘புறக்கணிக்கப்பட்டது’ என்பதே பொருந்தும். அந்தப் புறக்கணிப்பு சரியாக 4 மாதங்கள் கழித்து 2018 மார்ச் மாதம் ஓர் உயிரை மாய்த்தது.
லாரி ஓட்டுநர் ரன்வீர் அன்றே கைது செய்யப்பட்டார். ‘தன் முன்னால் ஒரு பெண் வந்தார், அதனால்தான் திரும்பினேன், வேறேதும் எனக்குத் தெரியவில்லை’ என்று வாக்குமூலம் கொடுத்தார் ஓட்டுநர். ஆனால், சிசிடிவி காட்சிகளை உலகமே பார்த்தது. அப்படி ஏதும் இல்லை.
மொத்த விசாரணையிலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வரவே, மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிபிஐ விசாரணை உத்தரவிட்டார். ‘குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை’ என்று அறிக்கையும் வெளியிட்டார். 2018 நவம்பரில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் வரவிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. சரி இருக்கட்டும். நடவடிக்கை நடக்கும்தானே!
லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்தில் பலியானார் சந்தீப். ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியுமா? அமைதி. இது கொலைவழக்கே அல்ல என்ற அளவுக்கு ஓர் அமைதி.
பத்திரிகையாளர் பாதுகாப்பு குழுமத்தின் மார்ச் 2025 தேதியிட்ட கடைசி பதிவின்படி இந்த வழக்கு உறுதி செய்யப்படாதது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது. அதாவது கொலை என்று இன்னும் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கொலைக்கான விசாரணை முகாந்திரம் கூட இல்லை என்று பொருள்.
2018இல் நடந்த கொலை. 2026இல் கூட இன்னும் முழுமையான விவரங்கள் இல்லை. காத்திருக்கும் பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு நீதிமன்றம் ஒன்றே மிகச்சரியான தேர்வு. ஆனால், இந்தியாவில் மிக எளிதாக தப்பிக்கவல்ல குற்றம் என்றால் அது பத்திரிகையாளர் கொலைதான் என்று துணிந்து சொல்லலாம் போலும். அத்தனை கொலைகள்.
சந்தீப் சர்மா கொல்லப்பட்ட நாளில் அவர் மட்டுமல்ல, பீகாரில் போஜ்பூர் மாவட்டத்திலும் நவின் நிசால், விஜய் சிங் என இரண்டு நிருபர்கள், கார் மோதி கொல்லப்பட்டனர்.
வழக்கம் போல சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த முறை மிகக் கடுமையாக இந்தியாவையே கண்டித்தன. குறிப்பாக, சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆண்டனி பெளாங்கர், ‘ஒரே நாளில் மூன்று கொலைகள் என்பது பொறுக்க முடியாதது. இந்தியா பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே மறுக்கிறது’ என்று குற்றம் சாட்டியது.
எதற்கும் எந்த அசைவும் இல்லை. வந்த கண்டனங்களை வாசித்து முடித்துவிட்டு வழக்கம்போலவே கையாண்டது இந்தியா. நீதிமன்றத்தில் வழக்கும் வாய்தாக்களுமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது விசாரணை.
இவ்வளவு வெளிப்படையாக ஆதாரங்கள் இருந்தும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் போகக்கூடாது என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு கூறியது. ஆனால், காவல்துறை அது ஒரு விபத்துதான், கொலை என்று நிரூபணம் ஆகவில்லை என்றே மீண்டும் மீண்டும் கூறியது.
நான் கொல்லப்படுவேன். அது விபத்தாக காட்டப்படும் என்று சந்தீப் எழுதிய கடிதத்தின் வரிகள், ஒரு தீர்க்கதரிசனம் என்பதைத் தவிர நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை அவரது குடும்பம் போலவே, நாமும் நல்ல தீர்வுக்காகக் காத்திருப்போம்.
(தொடரும்)

