Skip to content
Home » நான் கண்ட இந்தியா #2 – மதமே அரசியலைத் தீர்மானிக்கிறது!

நான் கண்ட இந்தியா #2 – மதமே அரசியலைத் தீர்மானிக்கிறது!

கமலாதேவி சட்டோபாத்யாய்

1912இல் இந்தியர்களை மிக நெருக்கமாகப் பார்த்தேன். அது பால்கன் போர்கள் நிகழ்ந்ததற்கு பிறகான காலகட்டம். இஸ்தான்புல் எல்லையை இந்தியச் செம்பிறைச் சங்கத்தினர் சூழ்ந்திருந்தார்கள்.

சங்கத்தின் பணிகள் டாக்டர் அன்சாரி தலைமையில் ஒருக்கிணைக்கப்பட்டிருந்தன. இந்திய முஸ்லிம்களின் நம்பகப்பூர்வமான பிரதிநிதியாய் அவரை அடையாளம் கண்டேன். தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை. அதே சிறிய மீசை. இந்துக்கள் போல் தயங்கியபடி பேசத் தயாராய் இருக்கும் இதழ்கள். ஆழமான கண்களுக்கு மேல் உத்வேகம் பொருந்திய அடர்த்தியான கறுத்த புருவங்கள் என அவர் பார்வை தெளிவாக இருந்தது. கண்களில் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டை அடையாளம் கண்டாலும், கனிவு பொருந்திய மென்மை அதில் எட்டிப்பார்த்தது.

லண்டன் மாநகரக் கனவான்களைப் போல் நளினம் பொருந்திய ஆடைகளை உடுத்தியிருந்தார். வேண்டியதை மட்டும் குறைவாகப் பேசி, இந்தியா பற்றிய உரையாடல்களைச் சாதுர்யமாகத் தவிர்த்தார். இந்தத் தனித்துவமான அடையாளங்களைத் தவிர, எங்கள் நாட்டின் எந்தவொரு புகழ்பெற்ற மருத்துவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்ல அன்சாரி. பணியில் ஈடுபட்ட இளைஞர்களும் பேரார்வம் கொண்டு உழைத்தார்கள். நம் நாட்டு இளைஞர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல.

1918ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புப் படைகளைச் சார்ந்த இந்திய ரெஜிமென்ட் வீரர்கள் இஸ்தான்புல் வீதிகளில் அணிவகுத்து நின்றார்கள். போரில் தோற்றுப்போய் சின்னாபின்னமான எங்கள் தலைநகரில், வெற்றிப்பெற்ற தேசத்தின் காலனியாட்சிப் பிரதிநிதியாக அவர்கள் குவிந்திருந்தனர். முன்னர் வந்த செம்பிறை சங்க நண்பர்களுடனோ புனைவிலக்கிய டவலகிரோவுடனோ நாம் இவர்களை ஒருக்காலும் ஒப்பிட முடியாது.

இந்தியாவும் இந்தியர்களும் 1919இல் இருந்து வேறொரு வகையில் பங்காற்றினார்கள். அதாவது கிலாபத் இயக்கம் தொடங்கி, துருக்கிக்கு உதவி செய்யத் துணிந்து முன்வந்தார்கள். இது துருக்கியர்களைப் பொறுத்தவரை ஓர் இறந்தகால நிகழ்வு. ஆனால் இந்தியாவில் கிலாபத்தின் முக்கியத்துவம் வேறொன்றாய் இருந்தது. அதை இந்தியா செல்லும்வரை நான்கூடப் புரிந்துகொள்ளவில்லை.

1925க்குப் பிறகு இந்தியாவின் பிம்பம் குழப்பம் தந்தது. ‘இந்தியா ஒரு சிறை. நாங்கள் இங்கு கைதியாகவும் அடிமையாகவும் அடைப்பட்டுக் கிடக்கிறோம்’ என ஒரு முஸ்லிம் சொன்னார். வெட்கங்கெட்ட ஆடம்பரத்தின் பின்னணியில், வறுமையின் மிகப் பயங்கரமான வரைபடத்தை ஓர் இந்து வரைந்தார். ‘சில நூறு மொழிகளும் சில ஆயிரம் சாதிகளும் முரண்படுகிற நிலையில், இந்தியா என்ற ஒற்றை தேசம் இருக்க முடியுமா?’ என்றொரு பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

இந்த இயலாமையின் சோகப் பின்னணியில்தான் மகாத்மா காந்தியின் உருவம் மெள்ள உருக்கொண்டது. மேற்கத்திய உலகம் இந்தியாவின் ஆன்மாவாக அவரைப் பார்த்தது. காந்தி ஒரு பழங்கால இறைத்தூதர் என்றும் அதி நவீன புரட்சியாளர் என்றும் மாறி, மாறி முன்னிறுத்தப்பட்டார். அவர் என்ன உடுத்தினார், என்ன சாப்பிட்டார் என தோண்டித் துளைத்து செய்தியாக்கி மகிழ்ந்தார்கள்.

இன்றைய பத்திரிகை உலகம் யாரைப் பிரபலமாக்க முயற்சி செய்கிறதோ அவர்களுக்கே எமனாகவும் ஆகிவிடுகிறது. தோன்றிய மறுகணமே பிரபலங்கள் காணாமல் போய்விடுகிறார்கள். சீர்த்திருத்தவாதி, சினிமா நடிகர், குத்துச்சண்டை வீரர், மோசடிப் பேர்வழி, ரவுடி என எல்லோரையும் ஒரே மாதிரிதான் தலைப்புச் செய்திகள் வர்ணிக்கின்றன. மதிப்பிடுவதோ பாகுபடுத்துவதோ கிடையாது. அவர்களுக்குச் செயல் அல்ல, அந்தச் செய்தியின் வீரியம்தான் முக்கியம்.

வானளாவிய மோசடி செய்த திருட்டுச் செய்தியும் துறவியாரின் செய்தியும் இவர்களுக்கு ஒன்றுதான். சர்வதேச பத்திரிகைச் செய்தியைப் படித்து, மகாத்மா காந்தி மீது கரிசனம் கொள்ளவோ தெளிவான புரிதல் அடையவோ முடியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட போராட்டங்களும், தொடர்புடைய வார்த்தைகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஒத்துழையாமை இயக்கமும் அகிம்சை கொள்கையும் மிக முக்கியமான வார்த்தைகள். முதலாவது ஒருவகையான போராட்ட உத்தியாக இருக்கலாம். அடுத்து இருப்பது ஒரு புதிய சொல்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் 1935ஆம் ஆண்டுக்கான விரிவுரை வாசிக்க டாக்டர் அன்சாரி என்னை அழைத்தபோது, இந்தியா பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் தவித்தேன். இந்தியர்கள் பேசிய பல சிறந்த உரைகளைக் கேட்டிருந்தபோதும், அவற்றுள் ஒத்திசைவு காண முடியாமல் குழம்பிக் கிடந்தேன். ஆயிரக்கணக்கான ஒலிகள் இருந்தும், அவற்றில் ஒத்திசைவு இல்லை. அது ஒரு தேசத்தின் சிறந்த இசைக்குழுவுக்கான சிம்ஃபொனி குறிப்புகள் திருத்தப்படும் காலம்போல் தெரிந்தது.

0

உண்மையில் இந்தியாவின் வாசல் இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. ஏடனிலிருந்து கப்பல் ஏறிய சில கணங்களில் அதனை அடைந்துவிடலாம். சஹாராவிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஒரேமாதிரியான சூழலை ஒருவரால் உணர முடிகிறது.

அப்போது இரவு நேரம் என்பதால் சினிமாப் படம் திரையிட்டனர். நான் அங்கிருந்து நகர்ந்து மேல்தளத்துக்குச் சென்றமர்ந்து, தலையைக் கைப்பிடிக்கு எதிராக வைத்து, வெறித்த இருளை வேடிக்கைப் பார்த்தேன். வானம் மந்தமாக இருந்தது. விவரிக்க முடியாத இதன் மங்கிய சாயல், மத்திய தரைக் கடலின் வண்ணமயமான வானத்தைப் பார்த்து பழகிய எனக்கு மிகவும் வித்தியாசமாகப்பட்டது. அதிலிருந்த ஈரம் தோய்ந்த கதகதப்பை உணர்ந்தேன். வானம் பேயடித்தாற் போல், சாம்பல் நிற மேகங்கள் அங்குமிங்கும் அலைந்தன. அதைப் பார்க்க தலைகீழாய் நடப்பட்ட மரம்போல இருந்தது. அதன் இழையோடும் வேர்கள் நீல நிற வானை குத்திக் கிழித்தும், அதன் கிளைகள் இருளில் தோய்ந்தும் இருந்தன.

நான் எப்பொழுதோ லண்டனில் பார்த்த ஓர் அறிவியல் திரைப்படத்தை இது எனக்கு நினைவூட்டியது.‌ அதில் அவர்கள் வரலாற்றுக்கு முந்தைய கால உலகத்தையும் அங்கு வாழும் வினோத வடிவம் கொண்ட ராட்சச விலங்குகளையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். மிக அருமையான மரம் ஒன்று வானில் வேரின்றிப் பறந்தது.

கடந்த காலம், நிகழ் காலம், இறந்த காலம் என பாகுபடுத்த முடியாத மனிதகுலம் உருவாகத் தேவைப்பட்ட மந்தமான காலவெளி குறித்த உணர்வைப் புரிந்துகொண்டேன். இதுவே இந்தியா மீது கொண்ட உண்மையான தொலைநோக்குப் பார்வை என நம்புகிறேன்.

ஜனவரி மாதம் 9ஆம் தேதி காலை 7 மணி வாக்கில் பம்பாய் கரையை அடைந்தோம். பழுப்பு நிற நெற்றியில் சிகப்பு நிற அடையாளம் பூண்ட இளம்பெண் ஒருவர், என்னை இன்முகத்தோடு வரவேற்றார். அது கமலாதேவி சட்டோபாத்யாய் என்றோ, இளம் இந்தியாவின் மிக உயர்ந்த பெண்மணி என்றோ அப்போது தெரியாது.‌

ஆனால் அது யாராக இருந்தாலும், என்னால் நினைவுகூரமுடியும். உணர்ச்சிமிக்க இதழ்களும், அதன் பக்கவாட்டில் படர்ந்து மறையும் செங்குத்தான வரிகளும் ஒன்றுசேர்ந்து வனப்பு மிக்க ஒரு புன்னகை பூத்ததை இன்றும் மறக்கவில்லை. பளபளப்பான காப்பி நிற கண்களுக்கு மேல், தடிமனாகவும் நேர்த்தியாகவும் புருவங்கள் இருந்தன. வளைந்த, புருவங்களே இல்லாத ஐரோப்பிய பெண்மணிகளை நாளும் கப்பலில் கண்டு அயர்ச்சியுற்ற எனக்கு, கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.

அன்றைய தினம் விருந்தோம்புனர், அவரது மனைவி இருவரும் என்னை நன்றாக உபசரித்தார்கள். அடிப்படையில் அவர் ஒரு முஸ்லிம்.‌ ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு சுயதொழில் செய்துவந்தார். வீடு முழுக்க ஆட்கள் இருந்தார்கள்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். சென்னையைச் சேர்ந்த இந்து நிருபர், களைத்துப்போன பயணியிடமிருந்து வார்த்தைகளைப் பிடுங்க முனைப்புடன் இருந்தார். இதில் அவர் நியூ யார்க் டைம்ஸ் நிருபரைவிடக் கைத்தேர்ந்தவர் போலும். முஸ்லிம் நிருபர்களின் நாக்குகள் பிணைக்கப்பட்டு, கூச்ச சுபாவம் மிகுந்திருந்தன. ஆங்கிலோ – இந்தியன் நிருபர்கள் மேட்டிமைக் குணத்துடன் இருந்தார்கள்.

‘கருத்தடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என ஒருவர் கேட்டதும், மாக்ரெட் சாங்கர் இந்தியாவில் இருந்தது நினைவுக்கு வந்தது.

‘இருபாலினர் கல்வி குறித்து உங்கள் கருத்து என்ன?’

நல்லவேளையாக கல்வியில் உள்ள அதிநவீன பாலியல் பிரச்னை பற்றி அடுத்த கேள்வி எழாமல் பேட்டி முடிந்துவிட்டது.‌ ஆங்கிலோ இந்தியன் நிருபர் எனக்கொரு கரும்புள்ளி வைத்திருப்பார் என நம்புகிறேன். என்னைப் பிற்போக்குத்தனமான பழமைவாதம் பேணும் பெண்ணாகச் சித்திரித்தார். மொத்தத்தில் பத்திரிகை உலகம் பற்றி எனக்கு நல்ல புரிதல் கிடைத்தது. காலமும் தொடர்பும் இதை மேலும் வலுப்படுத்தின. ஐரோப்பிய இதழ்களைவிட உள்ளூர் பத்திரிகைகள் அதிகப்படியான லட்சியவாதத்துடன் செயல்படுகின்றன.

இந்திய இதழ்களின் இளமைக் காலம் அது. ஐரோப்பாவைப் போல் அதிநவீன தொழில்நுட்பங்கள் இங்கு இல்லாவிட்டாலும், இதில் இந்தியத்தன்மை மிகத் தீவிரமாய் வெளிப்பட்டது.‌ பத்திரிகைகளுக்குப் பின்னாலிருக்கும் ஒருவர், அந்த நாட்டைப் பற்றி கவனமான ஒரு சித்திரம் வரைகிறார். பல சிந்தனைகளில் மூழ்கியெழுந்து, அந்தக் கருத்தோட்டத்தை வெளியில் காட்டப் போராடுகிறார். எந்த நாட்டையும் போல இங்கும் முன்னணியில் இருப்பது அரசியல் விளையாட்டுதான். ஆனால் இங்கு அரசியல் விளையாட்டின் நெம்புகோல் மத நம்பிக்கையில் மறைந்திருக்கிறது. கறாரான மதமாக இருந்தாலும் சரி, தாராளவாத மதமாக இருந்தாலும் சரி, அது மதம்தான்.

புரவலர் மதிய வேளையில் என்னை பம்பாய்க்கு அழைத்துச் சென்றார். அது ஈகைத் திருநாள் என்பதால், அரேபிய இரவுகள் கதையில் வருவதுபோல் காணும் திசையெல்லாம் வண்ணமயமான மக்கள் கூட்டம். நான் கேள்விபட்டபடி பெண்கள் தனித்திருக்கவில்லை. இளைஞர்களும் இளம் பெண்களும் கைக்கோர்த்தபடி சுதந்தரமாக நடக்கிறார்கள். ஆனால் பம்பாயின் மனிதர்களைப் பிடித்த எனக்கு, அதன் கட்டடக்கலையில் பெரிய நாட்டம் இல்லை.

அந்தி சாய்ந்து, மாலை மங்கியதும் நகரின் தோற்றம் மெள்ள மாறியது. மலபார் மலையில் ஏறி பம்பாயைக் காணும் போது, பெவர்லி மலையிலிருந்து லாஸ் ஏஞ்சலஸைக் காண்பது போல் நினைவு இழையோடும். சிறிது நேரத்தில், தலைகீழாய் கவிழ்த்த தேநீர் கோப்பை போல, மின்சார விளக்குகள் பொருந்தி பம்பாய் நகரம் மிளிர்ந்தது. நான் விரும்பாவிட்டாலும் இவை எனக்கு அமெரிக்காவை நினைவூட்டுகின்றன.

மாலை 9 மணிக்கு ரயில் ஏறினேன். நவீன பாணியில் கட்டப்பட்ட மிக அழகான ரயில் நிலையம் அது. பொதுப் பயன்பாட்டுக்குக் கட்டப்படும் அரங்குகள் கலை நேர்த்தி பொருந்த அமையப்பெறுவது எல்லாம் ஒரு தலைசிறந்த நாகரிகத்தின் குறியீடு.

வெள்ளை உடை அணிந்து பூங்கொத்துப் போல் கைக்கோத்து நடந்து வந்த பெண்களை கமலாதேவி அறிமுகம் செய்தார். அவர்கள் அனைவரும் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறைத் தண்டனை வகித்தவர்கள் எனச் சொன்னார். அதில் கமலா நீண்ட நாள் சிறையில் இருந்தவர். முக்காடு அணிந்த கிழக்கின் பெண்கள் சிறைக்குச் சென்றதும் கூட ஏதோ ஒன்றை உணர்த்துகிறது.

ரயில் நகர்ந்தது. ஒளிரும் ரயில் நிலையத்தை கடந்தபோது, கொண்டை அணிந்த சிகப்பு டர்பன்கள் தோன்றின. கூலியாட்கள் முன்பின் சென்றார்கள். வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து, ‘இந்து சாய், முஸல்மான் சாய், இந்து பானி, முஸல்மான் பானி!’ என்று கூவினார்கள். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நீர், தனித்தனி தேநீர் விற்பது விந்தையாக இருந்தது. ஏன் பார்ஸிகளுக்கும் இதர பிரிவினருக்கும் பிரத்தியேக தேநீர் இல்லை? இதிலிருந்து இந்து முஸ்லிம் பிளவே பெரும்பான்மை எனத் தெரிந்துகொண்டேன்.

ஜன்னலைத் தட்டும் சத்தம் கேட்டது. ரயில்வே துறையின் ஆங்கிலேய ஊழியர் ஒருவர், வசதி விசாரித்து தேவையைப் பூர்த்தி செய்ய வந்தார். நான் இந்தியாவில் உரையாடிய முதல் ஆங்கிலேய மனிதர் அவர்தான். ஆனால் பெர்சி வர்ணித்ததைவிட வித்தியாசமாய் இருந்தார். இந்தியாவில் செங்கிஸ்கானுக்கு உண்டான எந்த அடையாளமும் இல்லை. இந்தியா குறித்த புதிருக்கு தேநீர் விற்ற இந்துவும் முஸ்லிமும் ஆங்கிலேய அதிகாரியுமே மூன்று முக்கிய துருப்புகள். ஆனால் ஒன்றைத் தீர்ப்பதற்குள் மற்றொன்று முளைத்துவிடுகிறது.

இரவு 9 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தேன். குல்லா அணிந்து, ஜாமியா மில்லியா சார்பாக வந்த கூட்டம் என்னை மகிழ்ச்சியாக வரவேற்றது. சாம்பல் நிறத்தில் இறுக்கமாகக் கோட் அணிந்திருந்த பேராசிரியர்களை சுலபத்தில் அடையாளம் காண முடிந்தது. அதி நவீன அமெரிக்கப் பாணி ரயில்வே நிலையம் முழுக்க, ‘அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்’ என்ற குரல் எதிரொலித்தது. இந்த முழக்கத்துக்கு உற்சாகம் என்ற பொருளை இந்தியா வைத்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை வழிபாட்டுக்கான வசனம் இது. மோதலில் ஈடுபடும் மதப் போர் வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் மந்திரமாகவும் அது இருக்கிறது. இறப்பை எதிர்கொள்ளும் முன்னர் ‘கடவுள் மிகப் பெரியவர்’ என்று தெய்விகப் பாதுகாப்புக் கோரவும் அல்லது ஒருவேளை சக மனிதரைக் கொல்வதற்கு முன்பு மன்னிப்பு கோரவும் இந்த வசனம் பயன்படுகிறது.

கூட்டத்தின் தலைமை தாங்கி வந்த அன்சாரியுடன் கைக்குலுக்கினேன். அவரின் இந்திய ஆளுமை வலுவாகத் தாக்கியது. இந்தியாவுக்கான அவருடைய நீண்டகாலத் தியாகம், இங்குள்ள முக்கியக் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக் கொண்டது இவற்றையெல்லாம் தாண்டி மனிதநேயமிக்க மருத்துவர் என்றே மனதில் நிறைந்திருந்தார். வெளித்தோற்றத்தால் நான் ஒருவேளை ஏமாந்திருக்கலாம். இந்தமுறை தலையிலிருந்து உள்ளங்கால் வரை உள் நாட்டில் நெய்யப்பட்ட ஆடைகளைத்தான் உடுத்தியிருந்தார்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *