Skip to content
Home » நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

நான் கண்ட இந்தியா #9 – மீராபென் : இந்துக்களின் இந்து

மீராபென்

காந்தியின் மனைவி சகோதரி கஸ்தூரிபாயை முதன் முதலாகச் சந்தித்தேன். வீட்டின் தாழ்வாரப் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தார். அவரின் தோற்றம் நம்மை மதிமயங்க வைக்கும். அவரிடம் நம்பிக்கையைப் பெற அதிகம் மெனக்கெட வேண்டுவது போலத் தோன்றும். ஏன் இங்கிருந்து விலகிச் செல்வதற்கு கஸ்தூரிபாய் எந்நேரமும் தயாராய் இருக்கிறார் என்ற கேள்வியெழும்.

ஆனால் இதை விதந்து பார்க்கக்கூடாது. மான்குட்டி போல் நழுவி ஓடுகிற இந்தப் பார்வை எல்லா இந்துப் பெண்களுக்கும் இயல்பிலேயே உள்ளது. முதுமையின் வரிகள் கஸ்தூரிபாய் கன்னங்களில் இழையோடினாலும் இளமை மாறாத தோற்றப் பொலிவினால் அவர் மென்மேலும் ஜொலித்தார். நுணுக்கமான சில விஷேச குணங்கள், கஸ்தூரிபாயை இன்னும் இளமையாக்கியது.

ஒருவேளை இளமையில் இருந்ததை விட, இப்போதுதான் பலமடங்கு அழகு பொருந்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இதழ் குவித்திருக்கும் அந்தச் சிறிய வாயில், பொக்கை வாய்க்குப் பதில் அறிவு ஞானத்திற்கான அடையாளங்கள் தென்படுகின்றன.

மகாத்மா காந்தியின் கண்கள் மங்கோலியர்களை நினைக்கத் தூண்டினால், கஸ்தூரிபாயின் கண்கள் ஜப்பானியர்களை ஒத்திருக்கிறது. இவரின் லாவண்யம் பொருந்திய நேர்த்தியான உடல் ஜப்பானியர்கள் செய்யும் டெரக்கோட்டோ பொம்மையாக அச்சுபிசகாமல் அப்படியே இருக்கிறது. ஓர் ஏழைப் பெண்மணி போல் கைகளால் நெசவு செய்த சேலையை உடுத்தி, அதன் மடிப்புகளில் அத்தனை நேர்த்தியை வெளிப்படுத்துகிறார்.

கண்களுக்குப் பிரியமானவற்றைப் பார்ப்பதையும் புலனின்பம் நுகர்வதையும் அழிக்கும் நோக்கம் கொண்ட இவர்களை கஸ்தூரிபாய் என்ற சிறிய பெண்மணியின் ஆளுமை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. முதன்முதலாக அவரைச் சந்திக்கும் எவரொருவரும் நிகழ்காலத்தோடு முரண்பட்டு கஸ்தூரிபாயை வெகுநேரம் கவனிப்பார்கள். அவரின் மெலிந்த தோள்பட்டைகள் உடையக்கூடிய நிலையில் இருப்பதுபோல் தெரிகின்றன.

இருந்தும் கடினமான துயரங்களை அவர் கடந்திருக்கிறார். கருணையும் மெலிவும் வெளிப்புறத்தில் மட்டும்தான். விசுவாசமான தோழர்களாலும்; பாதிக்கப்பட்ட சக மனிதர்களாலும் கஸ்தூரிபாய் தன் வாழ்வை அங்குலம் அங்குலமாக வடிவமைத்தார். கஸ்தூரிபாய் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டவர்களுக்கு ‘உடன்கட்டை ஏறுதல்’ வழக்கம் அந்தக் காலத்தில் தன்முனைப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது. மகாத்மா காந்தி இல்லாத கஸ்தூரியின் வாழ்க்கையைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.

இந்தப் பெண்மணி ஒரு குழந்தையாகவும் மனைவியாகவும் அம்மாவாகவும் இருக்கிறார். மகாத்மா காந்தி உடலளவில் நேசித்த ஒரே பெண் இவர்தான். தன் சுயசரிதையில் கஸ்தூரிபாயின் மனித முக்கியத்துவத்தை காந்தி மிக ஆழமாகப் பதிவுசெய்கிறார். துறவியின் ஆசையைத் தூண்டுகிற, சபலமூட்டும் இந்தச் சிறிய பெண்ணின் அருகில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எது எப்படியோ, அவையெல்லாம் முடிந்து போன காரியம்.

உடல் ரீதியான ஆசைகளை காந்தி மறுத்துவிட்ட போதிலும், கஸ்தூரிமீது மாறாத பற்றுக்கொண்டிருந்தார்‌. அவரும் அதேபோல் வாழ்க்கைத் துணைவியாக, காந்தியின் உதவியாளராய் சேர்ந்து பயணித்தார். தென்னாப்பிரிக்க முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் ஆசிரமப் பணிகளிலும் எல்லாவித துயரக்காலங்களிலும் காந்தியோடு இருந்திருக்கிறார்.

பயபக்தி உள்ள சீடரைப்போல் எல்லா வேலைகளையும் முனமுவந்து செய்வார். எவருடைய விருப்பத்திற்கும் அடிபணிய மாட்டார், அது ஒரு துறவியாய் இருந்தாலும் சரி! மற்ற சீடர்களைப் போல் காந்திய இயக்கத்தில் சேவை செய்வதில், கஸ்தூரிக்கு எந்தவொரு லட்சியவாதக் கொள்கையும் கிடையாது. சேவை என்பதை அறிந்து செய்கிறார், அவ்வளவுதான்.

இந்தியா முழுக்க அவர்மீது ஒருமனதான அன்பும் மரியாதையும் இருக்கிறது. ‘எனக்குத் தெரிந்த மிகத் தைரியமான பெண்’ என்று கஸ்தூரிபாய் குறித்து இஸ்லாமிய காந்தியவாதி ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். மேலும் ‘யாரும் உதவ முடியாத தருணங்களில் காந்திக்கு ஒத்துழைப்பு நல்கி, எல்லாவித சூழலிலும் அனுசரணையாய் இருந்திருக்கிறார்’ என்று அவர் சொன்னார்.

‘இது உங்களாலும் முடியும் அல்லவா?’ என்று நான் திரும்பக் கேட்டேன். காந்தி அனைவரின் பேச்சையும் நன்றாகக் கவனிக்கிறார். ஆனால் நம் உள்ளக் கருத்தை அவரிடம் எப்போதும் பயமின்றி சொல்லமுடிகிறதா?

‘உண்மைதான். ஆனால் அவர் எப்போதும் தன் காரியத்தில் திருத்தமாய் இருக்கிறார். சில சமயங்களில் அவர் செய்வது சம்பந்தம் இல்லாததாய் தோன்றினாலும் காலம் அவர் கணிப்பை சரியென நிலைநாட்டுகிறது. மனித மனத்தின் விசித்திரமான நுண்ணறிவை அவர் நன்றாகப் புரிந்திருக்கிறார்.’

காந்தியின் மூவர் வட்டத்தில் அவரின் உதவியாளரும், மனைவியும், தத்துக் குழந்தையும் குடிகொண்டிருக்கிறார்கள். தத்துக் குழந்தை மீராபென்னை அங்கு சந்தித்தேன். ‘அவள் யாராய் இருக்கும்?’ என்று எனக்குள் கேட்டுக்கொண்டு, ‘அவளொரு இந்துமத சீடராய் இருப்பாள்’ என்று சொல்லிக் கொண்டேன். வழக்கமாகக் காலில் செருப்பு இல்லாமல், காலிக்கோ ஸ்கர்ட்டும் சட்டையும் உடுத்தி, அதன்மேல் கையில்லாத ஸ்வெட்டர் அணிந்து மாலை நேரங்களில் வலம் வருவார்.

அவரின் எடுப்பான தேகம் கண்களைக் கொள்ளையடிக்கும். உடலமைப்பிலும் உடையிலும் கௌபாயின் தோற்றம் பிரதிபலிக்கும். நம் நாட்டு விவசாயப் பெண்களை நினைவூட்டுகிறாள். அவள் அடியெடுத்து நடக்கும்போது இந்துப் பெண்களின் சாயல் துளியும் இல்லை. கால்கள் நிலத்தைத் தொடுவது இயற்கையாக இருக்கின்றது. வெளியுலகிற்குப் பழக்கப்பட்டவள் போல் பயமின்றி நடக்கிறாள்.

என் பொதுப்புத்தியில் உள்ள அபிப்பிராயத்தை ஒன்றுதிரட்டி சொல்வதென்றால், ‘பெண்ணால் ஆகாத காரியம் எதுவுமில்லை.’ அவள் என்ன செய்தாலும் மேன்மையாக, முழு மூச்சுடன் செயல்படுவாள். சமூகம், கல்வி மற்றும் மதம் சார்ந்த வேலைகளில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வாள்.

மகாதேவ் தேசாய் என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். எல்லோரும் சொல்வதுபோல் அவளொரு ஆங்கிலேயப் பெண்மணிதான். மொழிப் பிரயோகமும் அவள் நடந்துகொள்ளும் விதமும் இந்து தேசத்திலிருந்து வெகு தூரம் என்னை அழைத்துச் சென்றது. தன்மையான மெல்லிய குரல்வளம்.

முகம் கறுத்திருந்தது. வேறொருன்றும் இல்லை, இந்திய வானிலையில் சூரியன் செய்த வேலை. ஒருகாலத்தில் பொலிவொடு இருந்திருப்பாள். நன்கு வடிவமைக்கப்பட்ட அழகான முகம் அவள் உடலைப் போல வலிமையாய் இருந்தது. சதுர வடிவக் கன்னங்களும்; நேரான மூக்கும் ஒளிபொருந்தி இருந்தன.

அதிகமாகப் பேசவில்லை. அவ்வப்போது பூத்த புன்னகைகளால் சிலை போன்ற அவள் உருவம் மேலும் மின்னியது. பழுப்பு நிறக் கண்கள்வரை நீண்டு அழகுபட ஜொலித்தது. கறுநிற புருவங்களால், கண்கள் மேலும் பிரகாசிக்கின்றன. வழித்து மழித்த தலையில், அவளொரு காலிகோ முக்காடு அணிந்து அனட்டோலியன் விவசாயிகளைப் போல் இருந்தார்.

மாடியில் நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வோம். ஒவ்வொரு சந்திப்பிலும் பழங்கள் தருவார். அதனால் இனி ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும் மீராபென்னோடு இணைத்தே பேசுவேன். மெத்தையின் ஓரத்தில் மீரா உட்கார்ந்திருந்தாள். அசௌகரியப்படுகிறாளோ என்று நானாக எண்ணிக் கொண்டேன்.

நன்றாக உட்காருவதோ, அவளைப்பற்றி பேசுவதோ மீராவிற்கு உவப்பளிப்பதாய் இல்லை. அவளைப் பற்றி என்ன சொல்வது? அடிப்படையில் ஆங்கிலேய அட்மைரலின் மகள். மிகவும் மேல்மட்டான சமூகத்தில் பிறந்து, பணத்தில் புரண்ட பெண்மணி.

‘வீடு என்ற உணர்வை அது தோற்றுவிக்காததால் எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை’ என்று மீராபென் சொல்லத் தொடங்கினாள்.

எப்படி இருக்க முடியும்? ஓய்வு வேண்டி, இன்பத்திற்கு ஏங்கும் ஜீவன்களைப் போல் மிகக் கீழான மனிதர்களை மனித மனம் விரும்புமா? நானும் விரும்புவதில்லை. இன்பத்தை மட்டுந்தான் விரும்புவேன் என்பது, துன்பத்தை மட்டுமே விரும்புவது போல ஆபத்தானது. கவலைகள் நம் இயல்பைச் சீர்குலைத்துப் போட்டாலும், உயிர்ப்பிக்கவும் மேன்மையடையவும் பல வழிகள் உண்டு. ஆனால் இன்பத்தை நோக்கிய நெடும் பயணம், அயர்ச்சியூட்டுவதோடு சமயத்தில் கீழே தள்ளிவிடும். இன்பத்தைத் தேடி அலைந்த ரோமானியர்கள், அசீரியர்கள் என யாராய் இருந்தாலும் அவர்களின் இன்றைய கதி என்ன? விதிவயப்பட்டு சலிப்புக்கு ஆளாவார்கள். அம்மாதிரியான வாழ்க்கையில் மூழ்க மீராபென்னிற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன.

‘நான் சமூகத்தை வெறுத்தேன். விருந்துகளுக்கான அழைப்பை ஒருபோதும் ஏற்றதில்லை. மாறாய் குதிரைகளையும் நாயையும் விரும்பினேன். எனக்கு இசையில் லயித்தல் பிடித்துப்போனது. ஆன்ம உரையாடல் அங்கிருந்து தொடங்கியதாய் உணர்ந்தேன். இருத்தல் என்பது நரகமானது. அமைதியற்றுக் கிடந்தேன். எங்கள் வம்சத்தில் ஓர் ஊர் சுற்றிப் பெண் இருந்திருக்கிறார். ஹங்கேரியாவைச் சார்ந்த அப்பெண்ணை என் கொள்ளுத்தாத்தாவின் தாத்தா திருமணம் செய்திருந்தார்.. அதுகூட ஒரு காரணமாய் இருக்கலாம்..’ என்று மீராபென் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

நோய்க்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால், அது நம்மை விலகாது. அதை நீக்கும் வழிதேட வேண்டும். ஆனால் மீராவிற்கு எதுவும் தோன்றவில்லை. பாரிஸில் வசிக்கும்போது ‘மகாத்மா காந்தி’ குறித்து ரோமன் ரோலண்ட் எழுதிய புத்தகம் ஒன்றை வாசித்தார். பின் அவரோடு சேர விரும்புவதாய் காந்திக்கு கடிதம் அனுப்பினார். பரிசோதனை முயற்சியில் இறங்கும்படி காந்தியிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.

அவள் வாழவிரும்பும் கடினமான வாழ்க்கைக்கு முன் அனுபவம் வேண்டும். ஆன்மாவையும் உடலையும் ஆயத்தப்படுத்த வேண்டும். இரண்டையும் செய்தார். புகைப் பிடிப்பது, மாமிசம் உண்பது, மது அருந்துவது போன்ற கடினமான பழக்கங்களை விட்டொழித்தார். ஓராண்டு கழித்து மகாத்மாவோடு பயணிக்கத் தயாராகிவிட்டார். இப்போது இந்தியா வந்து சேர்ந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. கடுமையான துறவு வாழ்க்கையில் நீடிக்கிறார். கண்கள் அகண்ட பொருளை தரசிக்கின்றன.

‘இறுதியாக நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்’ என்று சொல்கிறார்.

அவள் கிறிஸ்தவளா, இந்துவா? மதச்சார்போடு இருந்திருக்கிறாளா? கண்டிப்பாக இருந்திருக்கலாம். ஆனால் பிரிவினை உண்டாக்கும் வகையில் இல்லை. செயற்கையாய் சூடேற்றப்பட்ட தன் வீட்டு வரவேற்பரையில் இருந்து இந்தியாவின் திறந்த வெளிக்கு அழைத்துச் சென்றதில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியமானது.

மகாத்மா காந்தியிடமிருந்து மதத்தின் அடிநாதச் சாற்றை உறிந்து கொள்கிறார். ‘உலகில் மதங்கள் கிடையாது. மதம் இருக்கிறது. உங்களுக்கு இணக்கமான ஒரு பாதையிலோ, வழிகாட்டப்பட்ட பாதையிலோ நீங்கள் பயணிக்கலாம். இந்துமதம் செயல்களை வரையறுத்து, சிந்தையை தெளிவுபடுத்துகிறது.’ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அல்பெரூனி எழுதும்போது இதே நிலையைத்தான் குறிப்பிடுகிறார். இப்போதும் அதே நிலைதான் இருந்துவருகிறது.

மீராபென் தன்னை ஒரு கிறிஸ்தவளாகவோ இந்துவாகவோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவளை அறியாமலேயே புது சட்டத்துக்குள் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். ஷூவை கழட்டி எறிவதைப் போல, தன் பழைய பழக்க வழக்கங்களைத் தூக்கி எறிகிறாள். செயற்கையான, சிக்கலுக்குட்பட்ட நாகரிகத்தை கடைசி ஆளாய் தூக்கிப் பிடிக்கிறாள்.

அவளைப் பற்றி நன்கு அறிந்த நபர்கள், இந்துக்களின் இந்து என்று மீராவைப் புகழ்ப் பட விளிப்பார்கள். அதில் நானும் ஒருத்தி. ஆனால் இந்துமதம் என்பது சாதிகளின் அடுக்கு முறை, பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவன் இந்து ஆகிறான் என்று நம்புபவர்களுக்கு மீராபென் ஓர் அந்நியப் பெண்.

மகாத்மா காந்தியின் முகாமில் அவர் செய்துவரும் தொண்டுகள் பலதரப்பட்டவை. இந்து மதத்தின் மிகநெடுந்தலைவரான காந்தியின் வளர்ப்புப் பிள்ளையாய் சொல்லப்படும் இந்த ஞானக் குழந்தை, ஆடுகளுக்கு பாலூட்டி; பண்டபாத்திரங்கள் விலக்கி; இங்கிருப்பவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து; எழுத்துப் பணியும் மேற்கொண்டு வருவது ஆச்சரியம் இல்லையா!

அந்தக் காலத்தின் மிகச் சிறந்த பெண்மணி என்று நான் அப்போது அவரை அழைத்தேன். அணுக்கமான தொடர்புகளில் இருந்து வரும் செய்திகள், இந்தப் பேருண்மையை இன்றும் உண்மையென மெய்ப்பிக்கின்றன.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *