மகாத்மா காந்திக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். தேசியச் சமூகங்களைப் பிரதிபலிக்கும் படியாக கிராமங்களை மீட்டுருவாக்கி, தீண்டாமையை ஒழித்து, வகுப்புவாத ஒற்றுமையை உறுதி செய்ய அயராது பாடுபட்டார்.
கிராம மறுமலர்ச்சி என்பது பெரிய அளவிலான பொருளாதாரத் திட்டம். துருக்கியில் ‘பசியெடுத்த கரடிக்கு ஆட்டம் தெரியாது’ என்று ஒரு சொலவடை உண்டு. இதன்மூலம் பசியெடுத்த கிராமவாசிகளுக்கு வளர்ச்சியில் அக்கறை இல்லை என்று நான் சொல்லவில்லை. கிராமப்புற தொழிற்சாலைகளை மீட்டெடுப்பது மிக முக்கியமான தேவை. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தையும் இயந்திரங்களால் உற்பத்தியான இறக்குமதி பொருட்கள்மீதும் காந்தியத்தின் எதிர்ப்பு வலுவாக இருந்தது.
இந்தியர்கள் பயன்படுத்தும் எல்லாவிதப் பொருள்களையும் இந்தியர்களே தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் முதிர்ச்சி அடையாத இந்திய தேசத்திற்கு அந்நியமாய் இருந்தது. இந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியோடு சில கிராமங்களுக்குச் சென்ற என் பயண அனுபவங்களை விரிவாய் சொல்ல விரும்புகிறேன். இது கிராமவாசிகள் பற்றிய என் முதல் உள்ளுணர்வாய் இருந்தது.
இன்னும் சில நாட்களில் மகாத்மா தில்லியிலிருந்து புறப்படத் தயாராய் இருந்தார். அதற்குமுன் நண்பர்களோடு சேர்ந்து சில கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார். நல்லவேளையாய் என்னையும் அதில் இணைத்திருந்தார். கிராமத்தை நெருங்கும்வரை காரில் பயணப்பட்டு, சில மைல்கள் முன்னதாக இறங்கி நடந்து செல்வதென முடிவெடுத்தோம். நான் காந்தியின் காரில் இருந்தேன்.
காந்தி உட்காருவதற்கு மகாதேவ் தேசாய் மெத்தையொன்று ஏற்பாடு செய்திருந்தார். தன் குறுகிய உடல் வாகினால் பலவீனமாகத் தோன்றும்படி காந்தி மூலையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார். காரில் பயணப்பட்ட போது பல விஷயங்களை உரையாடினோம். அதன் சாரம் பின்வருமாறு இருந்தது:
சாதியில் நம்பிக்கை உள்ள இந்துக்கள் (பெரும்பாலும்) இருக்கிறார்கள். தீண்டாமைதான் இந்துமதத்தின் அடிநாதம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்து மதத்தின் புனித புத்தகங்கள் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமை துவேஷங்களையும் அழிக்க அனுமதிக்கும் என்று காந்தி நம்புகிறாரா? இதை ஒழிக்கும் எல்லாவித முன்னெடுப்புகளும் இஸ்லாமிய கிறிஸ்தவ தூண்டுதலால் ஏற்பட்ட காரியமென்று வைதீக இந்துக்கள் கருதுகிறார்களே என்று சகலமும் பேசினோம்.
சாதிமுறை பற்றிய அவரது பேச்சில் தெளிவு இல்லை. ஆனால் தீண்டாமை மீதான கண்டனக் குரலில் தெளிவும் வீரியமும் இருந்தது. இந்துமதம் உயிர்ப்போடு இருக்க, தீண்டாமை பழக்கம் வேரோடு சாய வேண்டும். காந்தி குறிப்பாக கீதையில் தீண்டாமை ஒழிப்பிற்கான சரத்துகள் இருப்பதாய் நம்பினார். கீதை வேத பாடங்களின் வித்தாக இருக்கிறது எனச் சொல்கிறார். 700 பாடல்கள் உள்ள கீதையின் ஒளியில் தன் வாழ்விற்கான வழிகாட்டுதலை காந்தி அடையாளம் காண்கிறார்.
உலக மதங்களில் உள்ள எல்லா விஷய ஞானங்களும் கீதைக்குள் புதைந்து கிடப்பதாய் சொல்லும் அவர், மிகுந்த சிரத்தையோடு அதனைப் படித்திருக்கிறார். உண்மையில் இந்துமதம் தனி ஒருவரின் கருத்தால் எழுந்த இயக்கம் அல்ல. அதற்கென்று பிரித்தியேகமானதொரு புத்தகமும் கிடையாது.
எண்ணிலடங்காத புத்தகங்கள் இந்துமதத்தை விவரிக்கின்றன. கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் வாரிப்போட்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் இவை இயற்றப்பட்டிருக்கின்றன. எல்லாவித புறவியல் காரணங்களையும் உதறித் தள்ளி தன் ஒன்றிணையும் சக்தியால் இந்துமதம் இன்றும் உயிரோடு இருக்கிறது. அந்தவகையில் (மாற்றங்களை எதிர்கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும்) மகா மனிதராக காந்தி இருக்கிறார். இதனால் தன்னை விமர்சிக்கும் வைதீக இந்துக்களைவிட காந்தி பல மடங்கு அசலான இந்துவாகத் தெரிகிறார்.
உண்மையாகவே அவர் சொல்லும் தீண்டாமை ஒழிப்பு குறித்த கீதை சரத்துகளை என்னால் சந்தேகிக்க முடியவில்லை. ஆனால் இந்தச் சமாச்சாரம் கீதையில் இல்லாமல் போனாலும் கூட, சாபக்கேடான தீண்டாமைக்கு எதிராக காந்தி இருந்திருப்பாரா என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். இருந்திருப்பார் என்று தீர்மானமாக நம்புகிறேன். ‘எனது ஆன்ம வேதனை’ என்ற புத்தகத்தில் தீண்டாமை பற்றிய தன் பார்வையை காந்தி பின்வருமாறு எழுதுகிறார்:
‘சமூகத்தில் இவர்கள் தொழுநோயாளியாய் பார்க்கப்படுகிறார்கள். பொருளாதார ரீதியில் அடிமைகளாய் நடத்தப்படுகிறார்கள். மதரீதியான நம்பிக்கைகளால், நாமெல்லோரும் கோயில் என்றழைக்கும் கடவுளின் வீட்டுக்குள் செல்ல அனுமதி இன்றி வெளியே நிற்கிறார்கள். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் சாலைகளில் நடந்துபோகவும், மருந்துவமனையில் வைத்தியம் பார்க்கவும், பொதுக் கிணற்றில் நீர் இறைக்கவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது… சில நேரங்களில் சக மனிதர்களை நெருங்கும்போது, இவர்கள் அனுமதிக்கப்பட்ட தூரத்தைக் கடந்து அருகில் செல்வது சமூகக் குற்றமாகக் கருதப்படுகிறது… சாதி மருத்துவர்களும் சாதி வக்கீல்களும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத இவர்களுக்கு ஒரு சேவையும் செய்வதில்லை.’
இந்துக்களின் கொடும்பாவமாய் தீண்டாமை இருக்கும்போது, அதை அழித்தொழித்து பரிகாரம் தேட அவர்கள் முன்வரவேண்டும் என்று காந்தி விரும்பினார். தீண்டாமை நிலைக்க வேண்டும் என்றால், இந்துமதம் ஒழிய வேண்டும் என்று சாதி இந்துக்களின் மனதில் நன்றாகப் புரியம்படி பாடம் நடத்தினார். இந்த வலுவான வாதத்தால், மனம் மாறாத இந்துக்களும் மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பு பிரசாரத்தில் கலந்துகொண்டார்கள். அல்லது முடிந்த அளவு எதிர்ப்பின் அளவை குறைத்துக் கொண்டார்கள்.
சாதி இந்துக்களால் மட்டும் இந்த இயக்கத்திற்கு தடை ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களும் தடையாய் இருந்தார்கள். எப்படி என்று சொல்கிறேன். சமூகத்திற்கு வெளியில் எத்தனைக் குறைபாடுகளோடு வாழ்ந்தாலும், தாழ்த்தப்பட்ட ஒருவன் தன் சமூகத்திற்குள் வேரூன்ற விரும்புகிறான். அவனுக்கென்று தார்மீக எல்லைகளை வகுத்துக் கொள்கிறான். எப்படி விளிக்கப்பட்டு, எவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் தனக்கென்று ஒரு தனி குழாமில் வசிப்பது இவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கிறது. மாயை நிறைந்த உலகில் வாழ்வதைவிட இதையே விரும்புகிறார்கள்.
அயோக்கியர்களாய் முத்திரைக் குத்தப்பட்டாலும், தங்களுக்குள் ஒரு வர்க்க ஒற்றுமையை அடையாளம் கண்டு பெருமிதம் அடைந்தார்கள். தீண்டத்தகாதப் பிரிவிலிருந்து ஒருவன் விலகும்போது என்ன ஆகிறான் என்ற கேள்வி முக்கியமானது. அவன் அப்போதும் ஓர் இந்துவா? ஆனால் அவ்வளவு எளிதான இந்துவென்று யாரும் கிடையாது. நிச்சயம் எதாவது ஒரு சாதியில் தன்னை ஐக்கியப்படுத்தி இருக்க வேண்டும். எல்லோருக்கும் திட்டவட்டமான சாதிப் பெயரும் வரையறுக்கப்பட்ட எல்லைகளும் இருக்கின்றன. அப்பழுக்கற்ற தூய இந்துவென்று இந்தப் பெருக்கூட்டத்தால் யாரையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
ஆகவே தீண்டாமை ஒழிப்பால் எதுவும் மாறிவிடாது. சாதிமுறை சீர்கேட்டை அடியோடு பெயர்க்காமல் என்ன செய்தாலும் அதில் பயனில்லை என்று என்னைப்போன்ற வெளியாட்களும் நம்புகின்றனர். இருந்தாலும் சாதிமுறை சரிந்துவிழ தீண்டாமையில் இருந்துதான் தொடங்க வேண்டும் என காந்தி நம்புகிறார். ‘எனது ஆன்ம வேதனை’ என்ற புத்தகத்தில் காந்தியின் பார்வை தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது:
‘தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி தீண்டாமை வெகுதூரம் சென்றுவிட்டது. இப்போது அது தேசத்தின் அஸ்திவாரத்தை மெல்ல மெல்ல அரிக்கத் தொடங்கி, ‘என்னைத் தொடாதே’ என்ற மனநிலையாய் சமூகமெங்கும் பரவியிருக்கிறது. வெள்ளைக்கார எறும்பின் மூலதாரத்தை தொட்டுவிட்டால், நமக்குள் இருக்கும் சாதி வேற்றுமைகளை மறந்து, மதத் துவேஷங்களை துறந்து அனைவரும் ஒருவர் என ஒன்றுகூடி வாழலாம். முசல்மான்களும், சீக்கியர்களும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மரத்தில் தோன்றிய வெவ்வேறு கிளைகள் என புரிந்து கொள்ளலாம்…’
தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் பழமையானது என்றாலும், அனைத்து சீர்திருத்தக் கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தாலும் கூட, தீவிரமான தன்மையில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆரிய சமாஜம் இதை நன்றாக செய்திருந்தாலும், பிரிவினைவாத உந்துதல் சூசகமாய் மறைந்திருந்தது.
அந்த இயக்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்றொரு அடையாளம் தந்து மறைந்தது.
ஒரு குழாமிலிருந்து அதற்கு இணையான வரையறைகள் கொண்ட மற்றொரு குழாமிற்கு தாழ்த்தப்பட்டவர்கள் மடைமாற்றப்பட்டனர். சாதிகளை இரண்டொன்றாகக் குலைத்து, மீண்டுமொரு புதிய சேர்க்கையை உருவாக்குவதுதான் முற்போக்கான சீர்த்திருத்தம் என்று நம்பினர். அவ்வாறான ஒவ்வொரு சேர்க்கையும் பழைய சாதிகளை விட பல மடங்கு வீரியத்தோடு இருந்தன. தீண்டத்தகாதவர் அந்த நிலையிலிருந்து விலகும்போதும், அவர் ஓர் அப்பழுக்கற்ற எளிமையான இந்து என்று வலியுறுத்துவதன் மூலம் தீண்டாமைப் பிரச்னையில் மகாத்மா காந்தி உண்மைக்கு நெருக்கமாய் செயல்பட்டார்.
இன்னும் இந்த நாட்டில் 4 கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாய் இருப்பதற்கு மற்ற சில காரணங்களும் இருந்தன. இஸ்லாமியப் படையெடுப்பை பயன்படுத்தி அவர்கள் மதம் மாறியிருக்கலாம். அதன்மூலம் தங்கள் இயலாமைகளை துறந்துவிட்டு, தன்னை ஒடுக்கியவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம்.
ஆங்கிலேயர்களின் இந்திய வருகையையும் இதே கோணத்தில் சிந்திந்துப் பாருங்கள். கிறிஸ்தவ பாதிரியார்களின் மதமாற்ற வேலைகள் இன்றளவும் ஓயவில்லை. தன்னை ஆளும் வர்க்கத்தின் மதத்தை ஏற்றுக்கொண்டு தொன்றுதொட்டு வரும் அநியாயங்களுக்கு தீண்டத்தகாதவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் இஸ்லாத்துக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறிய இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்.
மனித வாழ்க்கையில் மதம் என்பதன் எதார்த்த அர்த்தம் என்னவென்று தெளிவுபட தோன்றவில்லை. ஆண்களில் பெரும்பான்மையோருக்கு அற்பச் சலுகைகளுக்காக மதம் மாறுவதில் விருப்பம் இல்லை.
தீண்டத்தகாதவர்கள் இன்னும் இந்துமதத்தில் நீடிப்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. அவர்களுக்குள்ளேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன. சமூகப் படிநிலையில் எத்தனைக் கீழாக இருந்தாலும், தீண்டத்தகாதவனை சாதி இந்துவோடு ஒப்பிட முடியும். அவர்களுக்குள்ளேயே கீழாவன் என்றும் மேலானவன் என்றும் வேறுபடுத்திப் பார்க்கும் படிநிலைகள் இருந்தன. அவர்கள் கிறிஸ்தவத்திற்கோ இஸ்லாமிற்கோ மதம் மாறிவிட்டால், தனக்குக் கீழானவன் என்று சுட்டிக்காட்ட ஒருத்தரும் மிஞ்ச மாட்டார்கள். தான் எத்தனைக் கீழானவனாய் இருந்தாலும், தனக்குக் கீழும் ஒருவன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் மனித மனத்தின் பலவீனம்தானே!
காரை விட்டு இறங்கியதும் வறண்ட நிலப்பகுதியைத் தாண்டி நடையைக் கட்டினோம். அதற்குள் கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வந்து, ‘காந்திஜி கி ஜே’ (காந்திஜி வாழ்க) என்று கோஷம் எழுப்பினர். மக்கள் கூட்டம் அடர்த்தியானது. கிராமப் பெரியவர்களும் வேலைக்குச் செல்லும் இளைஞர் இளைஞிகளும் ஒன்றாகக் கைக்கோர்த்து, மகாத்மாவை யாரும் அண்டிவிடாமல் பத்திரமாய் பாதுகாத்தனர்.
புழுதிக் கிளம்பிய அந்த நிலப்பகுதியை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. காந்தி சாய்ந்துகொள்ள கரம் நீட்டிய இளைஞர்களுக்குத் தோள்பட்டைகள் சிவந்துபோயின. திரண்டிருந்த மக்கள் முகத்திலிருந்து வியர்வை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நடு உச்சியில் இருந்த சூரியன், துளியும் இரக்கப்படாமல் வெப்பத்தைக் கடத்தியது.
சூரிய ஒளி தூசித் துகள்களை கடந்து வரும்போது அவை எண்ணிலடங்கா தங்க அணுக்களாய் மினுமினுத்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தத் தூசித் துகள்கள் வாயில் அப்பியபோது அத்தனை இனிமையாய் இல்லை. இந்த ஒட்டுமொத்த கூட்டத்திலும் வயது முதிர்ந்த, அந்த உடல் நலிந்த ஒற்றை மனிதர் மட்டும் புத்துணர்வோடு மிளிர்ந்து, விவாயிகளோடு பேசிச் சிரித்து ஒரே சீராக நடந்து சென்றார். அவரது நடை தனித்துவமானது. நாங்கள் முன்னேறிச் செல்லச் செல்ல, ‘காந்திஜி – கி ஜே’ என்ற கோஷம் அதிகரித்துக்கொண்டே போனது.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.