இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை நோக்கி நகரச் செவ்வனே பக்குவப்படுத்தி, இந்தியப் பிரஜையாக வளர்த்தெடுக்க அயராது பாடுபடுகிறது. இரண்டாவதாக இஸ்லாமியப் பண்பாடுகளை இந்து கலாசாரத்தோடு ஒருங்கிணைத்து இணையாகக் கொண்டு செல்ல உதவுகிறது.
மொத்தத்தில், இஸ்லாமிய அடையாளங்களைத் துறக்காமல் இந்தியனாய் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுத் தருவதே ஜாமியாவின் தலையாய நோக்கம். நான் பார்த்தவரை, காந்திய வழியில் மிக அணுகிச் செயல்படும் இஸ்லாமிய நிறுவனம் ஜாமியாதான்.
அதே சமயம் அலிகர் கல்லூரி பற்றிப் பேசாமல் ஜாமியாவின் புகழை ஒலிபரப்ப முடியாது. புரட்சிகரமாய் தோன்றினாலும் ஜாமியா ஒரு குழந்தை மாதிரி. இஸ்லாத்தில் அலிகர் கல்லூரிதான் முதல் திருப்புமுனை. அதற்குப்பிறகுதான் ஜாமியா வந்தது.
டாக்டர் ஜாகிர் உசேன் என்பவர் ஜாமியா நிறுவனத்தின் முதல்வராக இருந்தார். ‘ஜாகிர் உசேன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்காத இந்திய அறிவுஜீவி ஒருவரைக் கூட நான் கண்டதில்லை. அந்த அளவுக்கு மர்மங்கள் நிறைந்த மனிதராக அவர் இருந்தார்.
இருந்தாலும் அவரைப் போல் ஒரு நேர்மையான மனிதரை உங்களால் எளிதில் காண முடியாது. அவர் மீது தோன்றும் குழப்பங்களுக்கு எல்லாம் அடிப்படை காரணம் என்னவென்றால், அவர் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவர். அதனால் அவர் செயல்களுக்கு அரசியல் சாயம் பூச முடியாது. தன் நேரத்தையும் உழைப்பையும் ஆக்கப்பூர்வமான கல்விசார் சிந்தனைகளில் செலவுசெய்பவர்.
ஜாகிர் ஒரு எல்லைப்புற மாகாணத்தைச் சார்ந்த பதான் இனத்தவர். உயரமான திடகாத்திர உடற்கட்டு உடைய, நல்ல தைரியசாலி. ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்த அவரின் தந்தை அங்கு ஒரு வெற்றிகரமான நிறுவனத்தைத் தொடங்கி புகழ்பெற்ற வக்கீலாகத் தொழில் நடத்தி வந்தார்.
இவர்கள் எல்லோரும் சிறுவர்களாக இருக்கும்போதே, தன் ஏழு குழந்தைகளுக்கும் போதுமான அளவில் சொத்து சேர்த்துவிட்டு இறந்துபோனார். டாக்டர் ஜாகிர் குடும்பத்தின் மூத்த பிள்ளை. 30 ஆண்டுகளுக்கு முந்தைய கீழைத் தேச நாடுகளில் இதுவொரு பொறுப்புமிக்க பதவி. தந்தையை இழந்த குடும்பத்திற்கு, அந்தச் சிறு வயதிலேயே தந்தையாக இருந்து வெளியுலக அனுபவம் பெற்று குடும்பம் நடத்த வேண்டிய கடமை ஜாகிருக்கு இருந்தது.
டாக்டர் ஜாகிர் உசேனின் பால்யக் கல்வி மிகவும் ஆசாரமான கண்டிப்பு நிறைந்தது. அவர் படித்த பள்ளியும் பழமையில் ஊறிய நிறுவனம். ஒரு சிறுவனாக எல்லாவித விசித்திரங்களையும் அவர் கண்டார். பிறருக்காக வீட்டுப்பாடம் எழுதுவார். இறையியல் பாடங்களைப் பிரதியெடுப்பார். அப்படி எழுதி எழுதியே அவரின் கையெழுத்து மிக நன்றாக உருமாறியது. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டார்.
அலிகர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு பொருளாதாரத் துறை விரிவுரையாளராக அங்கு பணியில் சேர்ந்தார். தன்னுடைய சாதனைகளிலும் சமூக, (பழமை ஆதிக்கம் செய்கிற) கல்வியியல் பணிகளிலும் அலிகர் ஓர் ஆங்கிலேயப் பல்கலைக்கழகத்தை ஒத்திருக்கிறது.
வசீகரத் தோற்றமும் உரையாடும் திறனும் தலைமை தாங்கும் பண்பும் பொது மேடைகளை ஈர்க்கும் தனித்த நிபுணத்துவமும் அவரை ஒரு சாதனையாளராக மாற்றியிருக்கிறது. பல்துறை நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். அத்தோடு இன்றைய மேல்தட்டு அலிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கே உரித்தானதாய் இந்திய மக்கள் நினைத்துவரும் பொறுப்பின்மையும் இவரிடம் இருக்கிறது.
அலிகர் கலாசாரத்தை சிதைக்கும்படி 1919இல் ஓர் இயக்கம் தோன்றியபோது, ஜாகிர் உசேன் அவர்கள் பக்கம் நின்றார். அந்த இயக்கத்தை டாக்டர் அன்சாரியும் மறைந்த மௌலானா முகமது அலியும் முன்னின்று நடத்தினர். இஸ்லாமியர்களின் விருப்பக் கனவுகளை அலிகர் பல்கலைக்கழகம் ஒருபோதும் ஈடேற்றவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.
இதை அழிக்கவோ மாற்றவோ முடியாது என்பதை உணர்ந்து கொண்டதும் தாங்களே ஒரு புது நிறுவனத்தைத் தொடங்கி, ‘ஜாமியா – மிலியா இஸ்லாமியா’ என்று பெயர் சூட்டினார்கள். அப்படியென்றால் இஸ்லாமியத் தேசியப் பல்கலைக்கழகம் என்று அர்த்தம். ஆனால் அங்கு ஃப்ரோபெல் மற்றும் மான்ட்டஸரி முறைகளை ஒன்றிணைத்து குழந்தைகளுக்கான பாடங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
ஜாகிர் உசேன் 1922இல் படிப்பு விஷயமாக விடுப்பு எடுத்துக்கொண்டு ஜெர்மனி சென்றார். அங்கு தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, டாக்டர் பட்டம் பெற்றார். 1923இல் முனிச் மாநகரில் இந்திய மாணவர் ஒருவரோடு விடுமுறைக் காலத்தை கழித்துக் கொண்டிருந்தபோது, ஜாகிர் உசேனை நான் சந்தித்தேன்.
இருபதுகளிலேயே அவருக்குத் தாடி இருந்தது. மேற்கொண்டு அந்தக் காலத்தில் அவரோடு வேறு எவரும் நெருங்கிய தொடர்பில் இல்லை. இந்தக் கடுமையான இளைஞரோடு, நன்கு பக்குவப்பட்ட மற்றொரு இளம் மாணவரை நான் கண்டேன். அவர் பெயர் முஜீப். ஜாகிர் உசேனைப் போல் இல்லாமல் மென்மையான உடல்வாகும், சிந்தனை வளம் பொருந்திய தேடலும் அந்தக் கண்ணில் தெரிந்தன. அவரிடம் கலை நேர்த்தி இருந்தது.
ஆனால் வெளியில் இருந்து பார்த்தால், ஜாகிரைப் போலவே அமைதியாகவும் உறுதியாகவும் தோன்றினார். நான் இதற்குமுன் சந்தித்த இந்தியர்கள் எல்லோரும் அழுத்தமான உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகள் ஆற்றக்கூடியவர்கள். ஆனால் இவர்கள் மிகவும் முரண்பட்ட பேச்சுத்திறனும், பன்முகத் திறனும் கொண்டு விளங்கினார்கள்.
பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்று 1926இல் ஜாகிர் உசேன் இந்தியா திரும்பினார். அத்தோடு ஜாமியா பல்கலைக்கழகத்தின் முதல்வர் பதவியும் அவருக்குக் காத்திருந்தது. எப்போதும் போல் தனக்கு விருப்பப்பட்ட ஒரு சிலரை ஒருங்கிணைத்து இந்தப் புதிய நிறுவனத்தை அவர் உருவாக்கியிருந்தார். அதில் முஜீபும் ஒருவர். நான் தில்லி சென்றபோதே, ஒன்பது ஆண்டுகளை அவர் ஜாமியாவில் நிறைவு செய்திருந்தார்.
இப்போதும் அவர் தாடி வைத்திருக்கிறார். அதே வட்ட வடிவ முகம். கால ஓட்டத்தில் அவர்மேல் எந்தக் கறையும் ஏற்படவில்லை. ஆனால் உடலில் நிரந்தரச் சோர்வு தங்கிவிட்டதுபோல் ஒரு நிழலாடியது. ஒருவேளை பலமடங்கு வேலைகளுக்கு மத்தியில், எந்தவொரு கிளர்ச்சிக்கும் இடந்தராமல் நீடித்து உழைப்பதால் இப்படித் தோன்றலாம் என ஊகித்துக் கொண்டேன்.
கிட்டத்தட்ட சுய வசியம் செய்துகொண்டார் போல் பிரமைப் பிடித்து தோன்றினார். ஒற்றை லட்சியத்தைப் பின்பற்றுபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இருந்தாலும் உணர்ச்சியற்ற முகத்திரைக்குப் பின்னால் மாறுபடும் அவர் முகத்தை நான் பார்த்திருக்கிறேன்: அவர் கோபப்பட்ட தருணங்களும் கண்ணீர் சிந்திய தருணங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். என்ன இருந்தாலும் தன்னை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மேற்கத்திய உலகை நன்கு அறிந்தபோதும் தாழ்வு மனப்பான்மையால் அவர் மனம் குறுகவில்லை. அதே சமயம் இங்குள்ள பிற்போக்குத் தனங்களை முதுகில் தட்டி வாழ்த்துச் சொல்லவில்லை. அப்படி செய்வோரை ஆல்டஸ் ஹக்ஸ்லி தன் இந்தியப் பயணத்தின்போது வெறுத்து எழுதியிருக்கிறார். இவை எல்லாம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தன.
அமைதியான ஹக்ஸ்லியை உலுக்கிப் போட்ட விஷயங்கள் மூன்று. அற்பத்தனம், போலித்தனம், சுய விருப்பம். ‘இங்குள்ள சில மனிதர்கள் பொய்ப் பிரசாரங்களைப் பரப்புவதோடு, அவற்றை உண்மையென்றும் நம்பி வாழ்கிறார்கள்’ என்று ஹக்ஸ்லி பலமுறை பல்லைக் கடித்தபடி சொல்லியிருக்கிறார். ஆனால் இது இந்தியாவின் சிறப்பம்சம் அல்ல. பொய்யுரை உண்மையாக வேண்டும் என்றால் அதில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
எந்தவொரு தருணத்திலும் ஈடு இணையில்லாமல் சத்தியப்படி வாழும் டாக்டர் ஜாகிர் உசேன்மீது எனக்கு அன்சாரியின் பிம்பம் வந்து போகிறது. டாக்டர் அன்சாரியோடு இரண்டு மாதகாலம் தங்கியிருக்கிறேன். அப்போது இந்தியாவில் இருக்கும் அரசியல் நிலைப் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் ஆர அமர விவாதித்தோம்.
சத்தியத்திலிருந்து விலகிச் சென்ற எவர் ஒருவரையும் அவர் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார். கொள்கையை இழந்துதான் வெற்றி அடைய வேண்டும் என்றால், அப்பேர்ப்பட்ட வெற்றியே தேவையில்லை என்று சொல்பவர்களை அன்சாரி தன் நண்பராய் ஏற்றுக்கொள்வார். ஆனால் நேர்மையற்ற முறையில் சென்றால்தான் பகுமானமான வெற்றி கிடைக்கும் என்றால், அப்பேர்ப்பட்டவர்களோடு பழகுவதையே வெறுக்கும் குணம் கொண்டவர்.
இந்த விஷயத்தில் டாக்டர் ஜாகிர் உசேன் கொஞ்சம் வித்தியாசமானவர். குணாதிசயங்களைக் கொண்டும் திறனைக் கொண்டும் எவரொருவரும் தோற்றுப்போனவர் என்று சொல்லமாட்டார். இதுதான் அவரை வெற்றிகரமான கல்வியாளராகவும் உத்வேகமூட்டும் தலைவராகவும் மெருகேற்றியது. நியாயமான காரணத்திற்காக முறையாக நெறிப்படுத்தப்பட்ட எவர் ஒருவரும் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தை அவர் தூண்டினார். அவரால் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அரிதினும் அரிதாக துவண்டு போயினர்.
சமூகப் பொருளாதாரக் காரணிகளை சரிவர உள்வாங்கிக் கொள்ளாமல் இயங்குவதே மீண்டும், மீண்டும் அரசியல் தோல்விகளை ஏற்படுத்துகின்றன. ஒருவர் அரசியலில் நுழைவதற்கு முன்பே சமூகம் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணி உள்ளவராய் இருக்கவேண்டும். இது ஒரு கல்வியாளரின் சிறந்த அனுமானத்தில் உதித்த யோசனை.
பெண் விடுதலை பற்றி பேசும்போது, ‘கல்விக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். தங்கள் இஷ்டப்படி செயல்பட, பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். அதி நவீன வாழ்க்கை வாழ வற்புறுத்துவது பர்தாவுக்குப் பின்னால் இருக்கும்படி அவர்களை துன்புறுத்தும் செயல்’ என்று அடிக்கடிச் சொல்வார் ஜாகிர். செயலற்றுப் போன கிழக்கின் தவிர்க்க முடியாத சமுதாயமோ, ரோபோக்கள் நிறைந்த மேற்கின் முற்போக்குச் சமுதாயமோ எது எப்படியோ, அதன் நோக்கம் என்னவாக இருந்தாலும் கொடுங்கோன்மை என்பது கொடுங்கோன்மைதான்.
ஜாமியாவில் உள்ள எல்லாப் பேராசிரியர்களும் இதைக் கவனமாக உள்வாங்கிக் கொண்டனர். தங்கள் மனைவியிடம் பிரயோகித்தனர். சிலர் மாறுதலடையும் தருவாயில் தொக்கி நின்றனர். இன்னும் சிலர் பர்தா அணிந்தும் பாதி பர்தாவோடும் முழுமையான விடுதலையோடும் காட்சியளித்தனர். எல்லாப் பெண்களும் தைரியசாலிகளாகத் தோன்றினர். தங்கள் பெண் குழந்தைகளைத் தவறாமல் படிக்க வைத்தனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஜாமியாவில் ஏன் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று சொல்லும்போது, ‘அவர்களைத் தான் நாம் வெகுவாக இழந்துவிட்டோம்’ என்று ஜாகிர் உசேன் கூறுகிறார். தொடர்ந்து, ‘அரசுப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறும் ஒருவர், தொடக்கக் கல்வி ஆசிரியராவது தனக்கு இழுக்கான செயல் என்று எண்ணுகிறார். வேலை கிடைப்பதிலும் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. ஜாமியாவில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர் என்றால், நல்ல தேவை இருக்கிறது. அதனால் எளிதில் வேலை கிடைத்துவிடும்’ என்றார்.
இந்தியாவில் உயர்மட்ட படிப்பு தேவைக்கு அதிகமாய் இருப்பதை, ஜாகிர் உணர்ந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்போது தொடக்கக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
‘உங்கள் பட்டதாரிகளுக்கு ஏன் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது?’
‘நாங்கள் உருது மொழியில் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டுமே பயிற்றுவிக்கிறோம். இது ஒரு புது மாதிரியான திட்டம். உள்ளூர் மொழியைப் பயிற்றுமொழியாகப் பயன்படுத்துவது எங்களைப் போன்ற ஒரு சில நிறுவனங்களில்தான் சாத்தியம். நவீன காலத்தில் உருது மொழியால் உயிர்ப்பிக்க முடிகிறது என்றால், அறிவியல் செய்திகளை ஏன் உருது மொழியில் பயிற்றுவிக்கக் கூடாது?
‘செய்வோம் என்று நாங்கள் உறுதி கொண்டோம். ஆனால் உண்மை என்னவென்றால், உருது மொழியில் பாடம் சொல்லித் தரும்போது அரசிடமிருந்து எங்களுக்கு மானியம் வருவதில்லை. அரசு நல்கை பெறாத பாடங்களில் பட்டம் படித்தவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் வேலை கிடைப்பதில்லை. இருந்தாலும் நாங்கள் உதவிகளை எதிர்ப்பார்க்கிறோம். எங்கள் கல்வி முறையில் தலையிடாமல் உதவி செய்ய வரும் எவரையும் கைக்கூப்பி வரவேற்கிறோம்.’
ஆராய்ச்சிப் பாடங்களைக் கற்றுத் தருவதற்கு பட்டமேற்படிப்பு வகுப்புகள் உள்ளன. வரலாற்றுத் துறையில் இவர்கள் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளில் அரசியல் சாயம் பூசவில்லை என்பதை மனநிறைவோடு பார்க்கிறேன். மேலும் உலக விவகாரங்களைத் தெரிந்து கொள்வதில் ஜாமியா மாணவர்கள் ஈடுபாட்டோடு இருக்கின்றனர். வாய்ப்பு உள்ளவரை தேடிப் படிக்கின்றனர். கீழைத் தேசத்தில், குறிப்பாக இந்தியாவில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.
நன்கு இறுகக் கட்டிய இந்து மனப்பான்மையால், இந்தியாவிற்கு வெளியே இந்தியர்களை வித்தியாசப்படுத்தி அடையாளம் காண்பதில் குழப்பம் நீடிக்கிறது. தேசியவாதத்தால் பிறந்த உற்சாகத்தைக் கொண்டு ஓரளவே புறநிலை அடையாளங்கள் கண்டடைய முடியும். மற்றொருபுறம் சர்வதேச அளவில் தங்களை இஸ்லாமியர்கள் எடைபோடுகிறார்கள். புறம்பாய் உள்ள பிற தேசங்களில், அதுவும் இஸ்லாமிய தேசம் என்றால் அவர்கள் அக்கறைச் செலுத்தும் அழகிலிருந்து இந்துக்களே ‘அனைத்துமட்ட இஸ்லாமியர்கள்’ என்று சொல்லும்படி நடந்துகொள்கிறார்கள்.
மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்துவதாய் குற்றம் சாட்டப்படுவதற்கு இவர்கள் மேற்கில் கொண்டிருக்கும் ஆர்வமே வலுசேர்க்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த தனிப்பட்ட வழக்குகள் இருந்தாலும், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனமும் கட்டுப்படுத்தப்பட்ட புவியியல் எல்லைக்குள் அடங்கமறுக்கிறது. இந்தியாவுக்கு புறம்பாய் வெளிநாட்டு விஷயங்களில் ஜாமியா பல்கலைக்கழகம் ஆர்வம் செலுத்தி வந்தாலும், இது இந்தியாவிற்கு துரோகம் செய்வதாய் ஆகாது. ஆரோக்கியமான அடிப்படை விஷயம் இது. பேராசிரியர்களும் மாணவர்களும் பரந்த நோக்கத்தோடு ஆராய்ந்து, ஒப்பியல் நோக்கில் படிக்க இந்த அம்சம் உதவுகிறது.
* படம்: டாக்டர் ஜாகிர் உசேன்
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.