Skip to content
Home » நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

டாக்டர் ஜாகிர் உசேன்

ஜாமியா பெருமளவில் தொழில்முறைக் கல்வியை ஊக்குவிப்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இந்த லட்சியம் ஈடேற உதவினால் செல்வம் படைத்த முஸ்லிம்கள் நல்ல முறையில் பலன் அடைவார்கள். எல்லாவற்றையும்விட இந்தியாவில் கைத்தொழில் வினைஞர், பிளம்பர், மெக்கானிக் போன்ற திறன் சார்ந்த தொழிலாளர்களுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. கீழ்மட்ட நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் இந்தத் தொழில்களை நம்பித்தான் இருக்கிறது.

கணிசமான இந்து நிறுவனங்களும் அமைப்புகளும் சந்தைக்குத் தேவையான தொழிலாளர்களை உற்பத்தி செய்கின்றன. கிராமப்புறங்களில் மகாத்மா காந்தியின் அமைப்புகள் இந்தப் பணியைச் செம்மையாக மேற்கொள்வதைப் பார்க்கிறேன். இவர்களுக்கு நிகரான தொழிலாளர்களை நகர்புறங்களில் முஸ்லிம் இயக்கங்கள் வளர்த்துவிட வேண்டும்.

மிகச் சொற்பான அளவில் சில கீழ்மட்ட நடுத்தர முஸ்லிம் குடும்பங்கள் இருப்பதால்தான் சமூகத்தின் நடுநிலை இன்னும் நீடிக்கிறது. பல்கலைக்கழகம் பயிற்றுவிக்கும் முஸ்லிம்களுக்கு வேலை கிடைக்காமல் போவதால், அவர்கள் அதிருப்தியடைந்து சமூகத்திற்கு ஒருபயனும் தராத அரசியல்வாதிகளாக மாறுவதாய் சிலர் சொல்கிறார்கள். மறுபுறம் ஏழை எளியவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளை நம்பி நாட்களை நகர்த்துகிறார்கள்.

எனக்குத் தெரிந்த இந்து நண்பர் ஒருவர், இந்தியா மிக வேகமாகத் தொழில்மையமாவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று சொல்லி குறைபட்டுக் கொண்டார். ‘அந்நிய முதலாளிகளின் கைப்பாவை’ என்று சொல்லும் அளவுக்கு இன்னும் சிலர் துணிந்துவிட்டார்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் இந்து சமூக தொழிலாளர்களுக்கு நிகரான வளர்ச்சியை முஸ்லிம்கள் அடையாதவரை இந்தத் தொல்லை ஓயாது.

ஜாமியாவில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி பயிற்றுவிக்கிறார்கள். டாக்டர் ஜாகீர் உசேன் ஒரு மதவாதியாக இருந்தாலும் அவரே அதைப்பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. நபிகள் நாயகத்தின் மார்க்கத்தில் அவர் வாழ்ந்து வருகிறார்‌. இறைச்சி உண்பதில்லை; மது பழக்கம் கிடையாது. நாள் தவறாமல் முஸ்லிம் வழக்கப்படி தொழுகை நடத்துவார் என்று நம்புகிறேன்.

எல்லாச் செயல்களும் தெய்வ நம்பிக்கையில் இருந்து உருவெடுப்பதாக அவர் சொன்னார். அவரைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களும் அடையத்தக்க ‘அகவொழுக்கம்’ தெய்வ நம்பிக்கை இல்லாமல் சாத்தியப்படாது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகளைத் தவிர, இந்தியச் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் இதேபோலத்தான் சிந்திக்கிறார்கள்.

மதம் பற்றிய மாறுபடாத அபிப்பிராயத்திற்கு இந்து மற்றும் இஸ்லாத்தின் இயற்கையான அமைப்பு மட்டும் காரணமல்ல. இந்தியாவில் ஊறிக்கிடக்கும் மேற்கத்திய சித்தாந்தத்தில் பிரெஞ்சு கால்வாய் எண்ணவோட்டங்களை விட ஆங்கிலோ-சாக்சன் எண்ணவோட்டங்கள் அதிகம் விரவியிருப்பதாக நான் கருதுகிறேன். ஆங்கிலோ-சாக்சனியர்களில் ஒரே ஒரு புரட்சியாளர் கூட மதத்தைப் பிளந்தோ, சமூகக் கட்டுமானத்தை உடைத்தெறிந்தோ உருவானவர் இல்லை.

மத அபிப்பிராயங்களைத் தாண்டி, அறிவு ரீதியில் பார்த்தால் டாக்டர் ஜாகீர் உசேனும் டாக்டர் அன்சாரியைப் போல் பகுத்தறிவோடுதான் செயல்படுகிறார். கடந்த நூற்றாண்டு கண்டுபிடிப்புகளை உறுதிசெய்ய குரானின் பக்கங்களை அவர்கள் புரட்டுவதில்லை. ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கமும் இவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். தெய்வ நம்பிக்கையில் பற்றுதல் இழக்காமல் நவீனத்தை நோக்கி நகர இவர்களே முன்னுதாரணம். முஸ்லிம்கள் பற்றி ஆழமாக புரிந்துகொண்ட அனுபவங்களை உருதிரட்டி சில முடிவுகளை நான் முன்மொழிகிறேன்.

மறுமலர்ச்சி கால கிறிஸ்தவர்களுக்கும் தற்கால முஸ்லிம்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அவர்கள் சிந்தனையில் இரண்டு அம்சங்கள் உண்டு.

1.‌ உலகியல் சார்ந்த கேள்விகளுக்கு விவிலியத்தை முன்னிறுத்தி கிறிஸ்தவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் அந்தச் சிக்கலுக்குள் வரவில்லை. கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு குறிப்பிடுவது போல் உலகின் தோற்றம் குறித்தான கருத்துகளை குரான் பேசவில்லை. அதைத் தாண்டி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகர் செய்யும் சில வசனங்களும் குரானில் இடம்பெற்றுள்ளன. எனவே கிறிஸ்தவர்களைவிடத் தங்கள் மார்க்கத்தை மாறா பற்றுடன் பின்பற்றும் வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கு அதிகமாக வாய்த்திருக்கிறது.

2. ஆனால் அதில் அபாயங்களும் உண்டு. நீதி போதனைகள் சொல்லி, தார்மிக ஆதரவாகத் திகழும் நூலொன்றில் அறிவியல் செய்திகளை ஒப்பிட்டுப் பார்த்து, இடம்பெறவில்லை என்றால் விரக்தி அடையும் சூழல் இளைஞர்களிடையே நிலவி வருகிறது. இதனால் மத நம்பிக்கையை இழப்பதோடு தங்களுக்கு தார்மிக ஆதரவாய் விளங்கும் நூலொன்றின் வழிகாட்டுதலையும் அவர்கள் இழக்க நேரலாம்.

இரண்டாவது அம்சத்தை ஒட்டி, துருக்கிய மாணவன் ஒருவனோடு மேற்கொண்ட உரையாடலை எடுத்துக்காட்டாகச் சொல்கிறேன்.

‘நீலத் திமிங்கிலத்தின் வயிற்றில் ஜோனா உயிரோடு இருந்ததற்கான விளக்கம் என்னிடம் இல்லாதபோது, நானெப்படி இஸ்லாமியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ளமுடியும்?’

‘சரி, அப்போது உன்னை இஸ்லாமியன் என்று சொல்லாதே!’

‘ம்ஹூம். இஸ்லாமியன் இல்லையென்று மறுக்கவும் முடியாது. மனித உறவுகளோடு அது நிர்ப்பந்திக்கும் வழிமுறைகளும் தார்மிமக ஆதரவாக வழிகாட்டி நெறிப்படுத்தும் அறக் கருத்துகளும் வேறெந்த மத போதனைகளையும்விட ஏற்புடையதாக இருக்கிறது.’

‘அப்போது நீலத் திமிங்கிலத்தின் வயிற்றில் ஜோனா உயிர் வாழ்ந்தது பற்றி மறந்துவிட்டு, அறக் கருத்துகளையும் சமூகக் கற்பிதங்களையும் மட்டும் ஏற்றுக்கொள்.’

‘இல்லை. அதுவும் ஒத்துவராது. மதத்தைப் பொறுத்தவரை ஒன்று முழுதுமாக ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையெனில் மொத்தமாய் நிராகரிக்க வேண்டும். பகுதி பகுதியாகச் சித்திரித்து குழப்பம் உண்டாக்குபவர்கள் மேல் பொறுக்கமுடியாத கோபம் வருகிறது. அது ஒருவகையில் மூளையை மயக்குவதுபோல் இருக்கிறது.’

அறிவியல்பூர்வமான உண்மைகளில் இருந்து நீதிபோதிக்கும் அறநெறி உண்மைகளைப் பிரித்தெடுக்கும் வேலைகளில் தற்கால கிறிஸ்தவம் ஈடுபட்டு வருகிறது. ஜாமியாவும் அதே திசையில் மிகச் சரியாக முன்னோக்கிச் செல்வதாக உணர்கிறேன். சுதந்திரமும் ஒழுக்கமும் சரியான அளவில் இரண்டறக் கலந்திருப்பது ஜாமியா பற்றிய என் எண்ணத்தை மேலும் உயர்த்துகிறது.

சிறிய வகுப்புகளில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச் சொல்லி சுதந்திரம் வழங்குகிறார்கள். பட்டமேற்படிப்பு வகுப்புகளில் ஏகபோகச் சுதந்திரத்தை வாரி வழங்கி, மாணவர்கள் தாமாகச் சுய ஒழுக்கத்தோடு இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்‌. எடுத்துக்காட்டாக இரண்டு பட்டமேற்படிப்பு வகுப்புகளைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.

முதலில் பேராசிரியர் முஜீப் பற்றி பார்க்கலாம். டாக்டர் ஜாகீர் உசேனோடு இவர் இணைந்து பணியாற்றுவது பற்றி முன்பே சொன்னேன். லக்னோவில் செல்வச் செழிப்புமிக்க ஒரு குடும்பத்தில் அரசியல்வாதி, வக்கீல், தொழிலதிபர் போன்றோருள் ஒருவராகப் பிறந்தவர். பள்ளிப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு, பெர்லின் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். முஜீப் ஒரு நல்ல எழுத்தாளர். திறனாய்வு செய்வதிலும் வல்லவர்‌.

ஒரு பாடத்தைப் புரிந்து கொள்வதில் கிழக்கின் கல்விசார்ந்த தெளிவற்ற முறைகளைக் களைவதற்கு இவருடைய மேற்கத்திய கல்வி உறுதுணையாக இருந்தது. இவருடைய பாடம் சம்பந்தமான செய்திகள் இவர் சொந்த கலாசாரத்தை மையமிட்டதாக இருந்தாலும், அதனைச் சுலபமாக்கித் தெளிவடைந்தார். உருது மொழியில் இவர் எழுதுவதும் அசாதாரணமான கருப்பொருள் தேர்வும் மூஜீப்பின் பரந்துபட்ட இளமை வாழ்க்கையை வெளிக்கொணர்வதாய் சிலர் சொல்வார்கள். இவர் திறமைக்கும் குடும்பப் பின்னணிக்கும் லாபகரமான நல்ல பதவிகளுக்குச் சென்றிருக்கலாம்.

ஆனால் இவர் டாக்டர் ஜாகீரோடு இணைந்து பணியாற்ற விரும்பினார். ஜாகீரின் கொள்கையும் அதனை அடையும் வழிமுறையும் இவரை வெகுவாக ஈர்த்தது. அதனால்தான் அற்பமான பேராசிரியராக ஜாமியாவில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு பணிசெய்யும் பேராசிரியர்கள் எல்லோரும் தங்கள் சராசரி வாழ்க்கையை மறந்துவிட வேண்டும்.

அங்கு பணிசெய்யும் முதல்வர் உட்பட எல்லோருக்கும் 75 ரூபாய்தான் மாதச் சம்பளம். கூரை வேய்ந்த வீட்டில் பொருளாதாரத் தேவைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாலும் இந்தச் சம்பளம் போதுமானதாய் இருக்காது. இது ஜாமியாவில் காணப்படும் கொள்கை சார்ந்த விஷயம். பலர் தன்னார்வத்தோடு ஒன்றுகூடி தேவையை உணர்ந்து இந்து நிறுவனங்களை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் இந்தக் கொள்கை சார்ந்த செயல்பாடு தனித்துவமானது. முதலில் இது கொள்கை ஈடேறுவதன் பொருட்டு சுய ஒழுக்க ரீதியில் மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பு என்று அர்த்தப்படுத்தப்பட்டது. பிறகு, பெரும்பான்மையினரின் மோசமான தரத்தை உயர்த்த முடியாது என்பதால் அவர்களுக்குக் கற்பிப்பது போல் நடிப்பவர்கள் தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டு, வெளிப்புற வேறுபாட்டை குறைந்தபட்சமாகக் குறைக்க வேண்டும் என்று விளக்கினார்கள்.

இது ஒரு நல்ல உளவியல் பார்வை. அதனால்தான் ஏழைகள் மத்தியில் ஜாமியா புகழ்பெற்றிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தனிநபர் மற்றும் சமூக விடுதலைக்கான வழிமுறையாக அற கருத்தையும் சுய ஒழுக்கத்தையும் வலியுறுத்த விரும்புவோருக்கு இதுதான் சிறந்த கல்விக் கொள்கை.

ஆண்களுக்கான வரலாற்று வகுப்பை நான் பார்வையிட்டேன். அங்கிருந்த மாணவர்கள் பலர், ஆசிரியரைக் காட்டிலும் வயது முதிர்ந்தவர்கள். ஆனால் அந்தச் சிறிய மனிதரின் அதிகாரத்திற்கு அங்கு மறு பேச்சு இல்லை. ஆசிரியர் உட்பட அங்கிருந்த எல்லோரும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன் சிறிய மேஜை இருந்தது. உரையாடல் உருது மொழியில் அமைந்ததால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் இந்திய வரலாற்றின் குறிப்பிட்ட காலப் பகுதியைப் பற்றிய பாடமென்று கரும்பலகை வரைபடங்கள் தெரியப்படுத்தின.

ஆசிரியர் தனக்கான கருவை உருவாக்கிக் கொண்டு, கால ஓட்டத்தில் அதன் மாற்றத்தைப் படம்பிடித்துக் காட்டினார். மாணவர்கள் ஆசிரியரோடு ஒன்றுசேர்ந்து அறிவார்ந்த முறையில் ஆரோக்கியமான விவாதங்களை முழுச் சுதந்திரத்தோடு முன்னெடுத்துப் பேசினார்கள்.

அடுத்ததாக பட்டமேற்படிப்பு வகுப்பிற்கான பண்பாடு குறித்த பாடவேளைக்குச் சென்றேன். பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஓர் இந்திய கிறிஸ்தவர். நன்கு தயாரிக்கப்பட்ட பாட உரையில் இருந்து சமத்துவம், விடுதலை என்றெல்லாம் பேசுகையில் அளவுக்கு மீறி அவர் உணர்ச்சிவயப்படுவதைக் காண முடிந்தது. ஒருவேளை அவர் பட்டியல் இனத்தவராக இருக்கலாம் இல்லையென்றால் அவர்கள் பற்றி அதிகம் படித்திருக்கலாம் என்று பலரும் நினைத்தார்கள்.

அவர் ஆங்கிலத்தில் பேசினார்.‌ மனிதனின் தீர்மானம் மற்றும் மன உறுதியைத் தாண்டி ஒழுக்க நெறிகள் கிடையாது என்று அவர் உரக்கச் சொன்னார்‌‌. சாதி மனப்பான்மைக்கு எதிரான கலகக் குரலாக இது தெரிந்தது. மனிதர்களின் புற அடையாளங்கள்கூட இதில் ஆதிக்கம் செலுத்துவதாய் சொன்னார். காலப்போக்கில் அதே அடையாளம் உடையவர்களுக்குச் சாதகமான தீர்மானங்கள் மனிதன் முன்மொழியத் தொடங்கலாம். இறுதியில் இது மனித மனங்கள் விட்டொழிக்காத சாதி ரீதியான அடையாளங்களில் கொண்டுபோய் நிறுத்தும் என்றார்.

ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் படித்த இவரை மேலோட்டமாகப் பார்த்தாலே நன்கு படித்தவர் போல தெரிந்தது. சாதியின் செயலற்ற தன்மைக்கு எதிரான இவரின் புரட்சி, இவருக்குச் சாதிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனாலேயே மாணவர்கள் அணியும் காந்தி‌ குல்லாக்களில் குற்றம் கண்டுபிடித்தார். அவரைப் பொறுத்தவரை ‘காந்தி-சாதி’ என்றொரு புது சாதி உதயமாவதற்கான அடையாளமாக ‘காந்தி குல்லாக்கள்’ தெரிந்தன.

ஆனால் காந்தி குல்லா அணிந்திருந்த மாணவர்கள், மிகக் கண்ணியமாக உட்கார்ந்து கொண்டு அவர் சொல்வதைப் பொறுமையாகக் கவனித்தனர். அந்த வகுப்பில் முதிர்ச்சி, சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரமாகத் தீர்மானிக்கும் திறன் இருந்தது. இது போன்ற பயிற்சி மற்றும் கல்வி மட்டுமே இளைஞர்களுக்கு அங்கு வழங்கப்பட்டன.

ஜாமியாவின் தொடக்கக் கல்விப் பாடங்கள் குறித்து இதற்குமேல் சொல்வதற்கில்லை. மேற்கில் இருக்கும் தொடக்கப் பள்ளிக்கூடங்களுக்கு இணையான கற்பிக்கும் முறைகளை நீங்கள் இங்குப் பொருத்திப் பார்க்கலாம். அதே பாணியில், அங்குச் சொல்லிக் கொடுக்கப்படும் அதே பாடங்களை இஸ்லாமிய வரலாறு மற்றும் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கிறார்கள்.

மாணவர்கள் உருதுவழியில் பாடம் கேட்கிறார்கள். அரபி வார்த்தைகளை உச்சரிப்பதற்கு ஆசிரியர்கள் சிறப்பு முயற்சிகள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். அரபியிலிருந்து லத்தீன் மொழிக்கு எங்கள் எழுத்துருக்கள் மாறுவதற்கு முன்பு துருக்கியர்களாகிய நாங்களும் இதே முயற்சியை மேற்கொண்டோம். ஜாமியா முன்னெடுக்கும் இந்த முயற்சி, இந்தியா முழுவதும் உருது எழுத்துரு மாற்றத்துக்கான அறிகுறியாக இருக்குமா என்று பின்னர் பேசுவோம்.

குழந்தைகளுக்கான படைப்பாக்க கல்வித்திட்டம் என்னை வெகுவாக ஈர்த்தது. ஆகையால் வரைபட வகுப்பிலும் கைவினை வகுப்பிலும் குறிப்பிடத்தகுந்த நேரம் செலவிட்டேன். கிழக்கின் கல்விமுறையில் இந்தத் திட்டம் முக்கியமானது.

கீழைத் தேசங்களின் படைப்பாக்க உள்ளுணர்வு பழங்காலத்தில் இருந்தே துணி சுற்றிய குழந்தையைப் போல் பாதுகாப்பாக பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விதிகளுக்கு உட்பட்டு இறுக்கமான பிடிகளுக்குள் சிக்கியிருந்ததால், அவர்களின் கற்பனைச் சிறகுகளை விரிப்பதற்குப் போதுமான இடமில்லை. தங்கள் தனித்துவமான திறமைகளோடு திணறியடித்து இத்தனையாண்டு காலம் கழித்திருக்கிறார்கள்.

இப்போது அந்தத் திறமைகள் அழுத்தம் பெற்ற அதே வழியில் ஆசுவாசம் பெற வெளிப்படுகின்றன. அதனால்தான் கீழைத் தேசக் கலைஞர்களால் ஒற்றை அரசியல் கூட இன்றி குரானின் ஓர் அத்தியாயத்தை எழுத முடிகிறது.

இதற்கு மாறாய் மேற்கத்திய படைப்புலகம் சுதந்திரத்தில் புரள்கிறது. சில நேரங்களில் படைப்பைக் கண்டுணர்வதற்கான எல்லாவித வெளிப்புற வழிகாட்டுதல்களும் தடை செய்யப்படுகின்றன. இதன் விளைவாக அதி நவீன கலை படைப்புகளும், காட்டுத்தனமான கருத்துப் பதிவுகளும், மாறுபட்ட யதார்த்தவாதமும் மேற்கின் கலைப் படைப்பில் மலிந்து கிடக்கின்றன.

ஓர் ஓவியர் குறிப்பிடுவது குளியல் தொட்டியில் அமர்ந்திருக்கும் பெண்மணியா இல்லை நிலா வெளிச்சத்தில் மிளிரும் செடி அடர்ந்த சோலையா என்ற முடிவை உங்களால் எட்ட முடியாது. கீழை நாட்டில் குழந்தைகளின் படைப்பாக்க முன்முயற்சிகளை எப்படி துணி சுற்றி அடைத்து வைத்தார்களோ, அதே போன்றதொரு அபாயகரமான போக்கினை ஒழுக்கமற்ற மேற்கின் படைப்பாக்க மனப்பான்மையிலும் என்னால் காணமுடிகிறது.

அராஜகமான சுதந்திரப் போக்கா, செயலற்ற தன்மையா என்று கேட்டால், இரண்டிற்கும் மத்தியில் பெரிதாக எதுவுமில்லை. சுதந்திரத்தோடு வழிகாட்டுவது எப்படி என்பதுதான் கல்வியாளர்களுக்கு உள்ள மிகப் பெரிய சவால். ஆனால் அந்தச் சவாலை ஜாமியா மிகச் சாதுர்யமாகக் கையாள்கிறது.

ஒன்றுக்கும் ஆகாத பொருட்களில் இருந்து தனித்துவமான பொம்மைகளையும் பொருட்களையும் இந்தக் குழந்தைகள் செய்வதைப் பார்க்கையில் மகிழ்ச்சி அடைகிறேன். மறுபுறம் வரைபடங்களைப் பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. கீழைத் தேசம் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் இயற்கைக் காட்சிகளும் மனிதர்களும் பழங்கதைகளும் இன்னும் இருக்கின்றன, ஆனால் நாம் கேள்விப்படாத வேறொரு வடிவத்தில்.

* படம்: டாக்டர் ஜாகிர் உசேன்

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *