Skip to content
Home » நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3

நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3

நான் கண்ட இந்தியா

திரும்பிச் செல்லும் வழியில் சில கிராமங்களைக் கடந்து செல்ல நேர்ந்தது. அவையெல்லாம் முஸ்லிம் கிராமங்கள். அங்கிருந்த பிரம்மாண்ட வீடுகளும் தூய்மையான தெருக்களும் என்னைப் பெரிதும் வசீகரித்தன. அதில் ஏதாவதொரு வீட்டையாவது உள்ளே சென்று பார்த்துவிட வேண்டும் என்று விரும்பினேன். அங்கிருந்ததிலேயே பெரிய வீட்டைப் பார்த்து உள்ளே நுழைந்தோம்.

நல்ல விசாலமான முற்றம். அதன் உரிமையாளர் எங்களைக் கனிவோடு வரவேற்றார். அவர் அந்தக் கிராமத்துக் குடியானவர்களுள் வயது முதிர்ந்தவர். தன் வீட்டிற்கு வெளியில் நாற்காலியிட்டு எங்களை அமர வைத்தார். பெண்களின் வசிப்பிடத்திற்கு மத்தியில் உயரமான சுவரொன்று எழுப்பப்பட்டிருந்தது. என்னுடன் வந்தவர்கள், பெண்கள் வசிப்பிடத்தை நான் பார்க்க விரும்புவதாக அந்த முதியவரிடம் சொன்னார்கள்.

உயர்ந்த சுவரின் கதவுகளை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். அது பாதி திறந்த நிலையில் இருந்தது. அதன் வழியாக முக்காடு அணிந்த முகமொன்று எங்களை எட்டிப் பார்த்தது. பஷ்தூ மொழியில் அவள் ஏதோ பேசினாள். ‘தொலைதூரத்தில் இருந்து வந்த இஸ்லாமிய பெண் ஒருத்தி, நம் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறாள்’ என்று அவள் சொல்லியிருக்க வேண்டும் என நான் ஊகிக்கிறேன். இப்போது நன்றாகக் கதவைத் திறந்து, உள்ளே வாருங்கள் என்று சமிக்ஞை காட்டினாள்.

உள்ளிருந்த முற்றம் முன்பு பார்த்ததைவிடப் பெரியது. அதன் ஒருபக்கம் ஒற்றை மாடிக் கட்டடம். அறைக் கதவுகள் எல்லாம் முற்றத்தை நோக்கி இருந்தன. அங்கு இரண்டு சிறுமிகளும் ஒரு பெண்மணியும் இருந்தார்கள். அது நிச்சயம் அவர்கள் அம்மாவாக இருக்கவேண்டும். சைகை மூலமும் ஒலிக்குறிப்பு மூலமும் மாறி மாறிப் பேசிக்கொண்டது ஓர் இனிமையான சந்தடியாக இருந்தது.

வார்த்தைகளின்றி ஒருவரால் எவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்த முடிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். நான் அவர்கள் அறையைக் காண விருப்பம் கொண்டிருப்பதையும், அதன் உள்ளடக்கங்களைப் பார்க்க ஆவலோடு இருப்பதையும் தெரியப்படுத்தினேன். அவர்கள் வாஞ்சையோடு அழைத்துச் சென்று அறையைச் சுற்றிக் காட்டினார்கள். அலமாரியில் இருந்தவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தார்கள்.

அவர்கள் ஏன் என்றும் கேட்காமல், வெறுப்பு கொள்ளாமல் நிதானமாக நடந்து கொண்டார்கள். நீங்கள் இஸ்லாமியராக இருந்து ஒரே கடவுளை அனுஷ்டிப்பவராக இருந்தால்போதும். அவர்களில் ஒருவராக மாறிவிடலாம். இதுவரை என் வாழ்க்கையில் இஸ்லாம் சார்ந்து இத்தனை திறந்த மனமுள்ளவர்களை நான் பார்த்தது கிடையாது.

இறுதியாக சமையலறைக்குள் நுழைந்தேன். பொக்கைவாய் கிழவி ஒருவர் குத்தவைத்து உட்கார்ந்து காய்கறிகள் அரிந்துகொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் ஏதோ சாதித்ததுபோலச் சிரித்தார். மற்றெல்லோரும் சுற்றி வந்து என்னிடம் பேசி தோளில் தட்டிக் கொடுத்தனர். விசித்திரமாக இருந்தாலும் ஆபத்தில்லாத இந்தத் திடீர் விருந்தினரை அவர்கள் எல்லோரும் முகமலர உபசரித்தார்கள்.

வீட்டின் உட்புறம் பிரமாதமாக இருந்தது. சௌகரியமான, வளமையான கிராம வாழ்க்கைக்கு அந்த வீடுதான் அடையாளம். சிங்கர் தையல் இயந்திரம்கூட ஒன்று இருந்தது.

வீட்டை அங்குலம் அங்குலமாகச் சுற்றிக் காண்பித்தவர், தன் கையை விரித்து ‘இனி அவ்வளவுதான். பார்ப்பதற்கு ஒன்றுமில்லை’ என்றார். பின் ஒருவர் நாற்காலி எடுத்துவந்து அதில் உட்கார்ந்து கொண்டார். மற்றொருவர் தட்டம் ஒன்றில் ஏதோ கொண்டுவருவதுபோல பாவனை செய்தார். மற்ற மூவரும் தட்டத்திலிருந்நு கோப்பையை அள்ளி உறிஞ்சி குடிப்பது போலச் செய்தனர். நாவால் உதட்டைச் சுவைத்து, எல்லோரும் ஒன்றுபோல, ‘சாய்’ என்றார்கள்.

நான் அவர்களோடு அங்கு உட்கார்ந்து தேநீரோ, வேறு ஏதும் பலகாரமோ உண்ண வேண்டும் என்று அதற்கு அர்த்தம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பருகவும் உண்ணவும் ஏதாவது கொடுத்திட வேண்டுமென்று கிராமத்தார்கள் எவ்வாறு துடிப்பார்கள் என்று நான் அறிவேன். ஆனால் எனக்கு நேரமில்லை. விரைந்து செல்ல வேண்டும்.

கல்லூரியில் மதிய உணவு எடுத்துக்கொண்டு, அதன்பிறகு இரண்டு அமர்வுகள் தலைமைத் தாங்கி உரையாற்றிய கையோடு, பர்தா அணிந்த பெண்களோடு ஒன்றிரண்டு கலந்துரையாடல்களும் இன்றைய விழா நிரல் பட்டியலில் உள்ளது. பள்ளிக்கூடம், பெண்கள் என்று இரண்டு வார்த்தையில் அவர்களுக்கு விளக்க முயன்று விடைபெற்றேன். ஆண்கள் வசிக்கும் முற்றத்தின் உயர்ந்த சுவரின் கதவருகில் நின்று ‘குட்-பை’ சொல்லி என்னை வழியனுப்பினார்கள்.

0

அங்கிருந்தவர்களிடம் டாக்டர் ஹோல்ட்ஸ்வொர்த் என்னை அறிமுகப்படுத்திய கையோடு, இப்போது ‘குர்ஆன்-இ-ஷெரிஃப்’ ஓதப்படும் என்றார். நாங்கள் எல்லோரும் எழுந்துகொண்டோம். உரையாளர் பேச்சைத் தொடங்கும் முன் குர்ஆன் வசனங்களைச் சொல்லித் தொடங்குவது இஸ்லாமியக் கல்லூரிகளின் வழக்கமாக உள்ளது. நான் பார்த்தவரையில் வசனங்களைத் தேர்வு செய்வது இங்கு ஒரு தனித்துவமான செயல். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் கொள்கைகளுக்கும் லட்சியங்களுக்கும் ஏற்ப வசனங்களைத் தெரிவு செய்கிறார்கள்.

அந்த எல்லைப்புற மாகாணக் கல்லூரியில் சொல்லப்பட்ட வசனங்கள் இரண்டொன்றை நான் ஞாபகத்தில் இறுத்தியுள்ளேன். அவர்களின் சுபாவமும் நடத்தையும் புரிந்துகொள்வதற்கு, இது ஓரளவேனும் பயன்படும். அவை ‘ரெசெல்ஹிக்மேதெ மெஹஃபத்துல்லாஹ்’ மற்றும் ‘லா யுகெல்லிஃபுல்லாஹே நெஃப்சென் வூசாஹா.’ இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றும் மனித ஆற்றலுக்கு மீறிய ஒன்றை அல்லாஹ் ஒருபோதும் விதிக்கமாட்டார் என்றும் அவை பொருள்படுகின்றன.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் இறுக்கமான கறுப்பு அங்கியும் நீல நிறம் சுற்றிய டர்பனும் அணிந்திருப்பதை என்னால் மேடையில் இருந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவர்கள் எல்லோரும் வாட்ட சாட்டமாக, ஒடுக்கமான முகத்தோடு குறிப்பிடும்படியான அம்சத்தில் இருந்தனர்.

நீல டர்பன் எடுப்பாகவும், அவர்கள் உறுதிக்கு சமர் ஊட்டுவதாகவும் இருந்தது. அவர்கள் உட்கார்ந்து – எழும் நயத்தைக் கண்டு, சொல் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாறா பண்புடையவர்கள் என்று ஒருவரால் எளிதில் சொல்லமுடியும். எவ்வகையான எதிர்மறை எண்ணவோட்டமும் மிகைப்படுத்தப்பட்ட சந்நியாச வாழ்வும் இல்லாததால், இவர்கள் எல்லோரும் தங்களுங்குரிய இடத்தை வாழ்வில் தக்க வைத்துக் கொள்வார்கள் என்று கருதலாம். தங்கள் அன்றாட வேலைகள் வாட்டி வதைத்தாலும் தங்கள் சக உயிரினங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

இவையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இவர்கள் இயற்கை விதிக்கு முரண்படாமல், காரண காரியத்தோடு வாழ்ந்து, ஆரோக்கிய விதிகளைப் பின்பற்றி, அதீதிங்களில் இருந்து தம்மை விடுவித்து வாழ்வதை நம்மால் அறிய முடிகிறது. ‘மனித ஆற்றலுக்கு மீறிய ஒன்றை அல்லாஹ் ஒருபோதும் விதிக்கமாட்டார்’ என்ற வசனத்திற்கு உயிர் ஊட்டுவதுபோல இவர்கள் வாழ்ந்து வருவதாக எனக்குத் தோன்றியது.

தீவிரத் தூய்மைவாதத்தாலும் சந்நியாசத்தாலும் புரிந்துகொள்ள முடியாத பலவீனத்தை நான் வேறுபடுத்திக் காட்ட விரும்புகிறேன். ஆரம்பத்தில் அவை கபட நாடகமாடி சகிப்பின்மைக்கு வழிவகுத்து சுய நெறியையும், மனித ஒன்றிணைவிலிருத்து ஒழுக்கக் கூறுகளையும் விலக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் சில சமயங்களில் இன்ப நுகர்ச்சியைக் கண்மூடித்தனமாகத் தேடி அலையும் போக்கு மனிதர்களை உணர்ச்சிகளின் கட்டுப்பாடற்ற நிலைக்கு கொண்டு செல்லும். தீவிர துறவறத்தை மேற்கொள்ளும் குகைவாசிக்கும், முன்சொன்ன மனிதனுக்கும் இடையில் சரியான வாழ்வை தேர்வு செய்வதில் சிறிதளவே குழப்பம் தோன்றும். இன்ப நுகர்ச்சிகள் மீது துவேஷம் தோன்றி அதன்மீது அருவருப்பு உண்டாகும். இதற்குப் பதிலாக துறவறம் செல்வதே சரியெனத் தோன்றலாம். ஆனால் இவ்விரண்டைக் காட்டிலும் இதற்கு மத்தியிலுள்ள மற்றொரு நிலை முக்கியமானது. அதுதான் ‘மனித ஆற்றலுக்கு மீறிய ஒன்றை அல்லாஹ் ஒருபோதும் விதிக்கமாட்டார்’ என்ற வசனத்தின் உயிர்.

மேடையில் நின்று நான் இதை யோசித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாத்தில் இருமைவாதம் கிடையாது என்ற எண்ணம் முதல்முறையாக என் மனத்தில் உதித்தது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதன் தன் உடலையும் ஆன்மாவையும் ஒத்திசைத்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய வழிபடு முறையின் சிறப்பம்சம் குறித்தும், வழிபடு நெறியில் மனத்தையும் உடலையும் ஒத்திசைக்கும் முறை குறித்தும் நான் கவனம் குவித்து சிந்தித்தேன்.

ஆகையால் அதிகப்படியாக வெறிப்பிடித்தவர்களும், தீவிரவாத எண்ணம் கொண்டவர்களும், சதைப்பற்று உள்ளவர்களும் எல்லைப்புற மாகாணத்தில் இல்லையென்று புரிந்து கொள்ள வேண்டாம். இரண்டாவது வகை மாதிரியான மனிதர்களை நான் அங்குச் சந்திக்காவிட்டாலும், முதல் வகைப்பட்ட மனிதர்கள் என் பார்வையாளர் கூட்டத்தில்கூட இருந்தார்கள். ஐரோப்பிய ஆடைகள் அணிந்த குள்ளமான நபர் ஒருவர் அமர்வு முடிந்த பிறகு, துருக்கியப் பெண்களுக்கு எதிராக பலமாகக் குரல் எழுப்பினார். செய்தித்தாளில் அவர் பார்த்த சில பெண்களின் படத்தை வைத்து அவரின் உரையாடல் அமைந்தது.

அவர்கள் குட்டைப் பாவாடை அணிவதாகவும், முகத்தை புர்காவால் மறைப்பதில்லை என்றும் அவர் அலுத்துக்கொண்டார். ‘எந்தவொரு முஸ்லிம் சமூகத்திலும் இம்மாதிரியான ஆடைகளுக்கு ஆதரவாக பதான்களாகிய நாங்கள் துணைநிற்க மாட்டோம்’ என்று அவர் அழுத்திச் சொன்னார். அதுகுறித்து அவருக்கு எவ்விதமான சிந்தனை இருந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால் உரையை ஒட்டி எழுப்பப்பட்ட கேள்வி என்பதால், நாங்கள் ஏன் புர்காவை ஒதுக்கினோம், எப்படி தவிர்த்தோம் என்று விளக்கினேன்.

எனக்குப் பின் பேசிய பேராசிரியர் ஒருவர், புர்கா பற்றி அரிதாகத் தெரிந்துகொண்டு அதன் தோற்றக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆடையென்ற ரீதியில் பார்க்காமல், புர்கா அணிவது தார்மீகக் கடமையென்று அவர் வலியுறுத்தினார். பார்வையாளர்கள் பலரும் இதே கருத்தில் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெண்களின் கற்பாக விளங்கும் புர்காதான் அவர்களைப் புனிதத்துவப்படுத்துகிறது; ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உடைக்கு மீண்டும் மாறவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் பாலியல் சீண்டல் நடைபெறாதவரை பெண்கள் அணியும் உடை எவ்விதமாக இருந்தாலும் இவர்களுக்குக் கவலை இல்லை.

மாணவர்கள் படை புர்கா முறைக்கு எதிராகத்தான் இருந்தது என்பதில் குழப்பம் வேண்டாம். புர்கா அணியாத நவீன பெண்மணி ஒருத்தியை பேச அழைத்ததில் இருந்து இதை உறுதியாகச் சொல்லலாம். இரண்டாவது அமர்வுக்கு முந்தி சிறிது நேரம் ஓய்வெடுக்க டாக்டர் ஹோல்ட்ஸ்வொர்த் இல்லம் நோக்கி நடந்துகொண்டிருந்த என்னிடம் மாணவர் ஒருவர்:

‘அந்த நபர் நிச்சயம் பதானாக இருக்க முடியாது. இத்தனை நோஞ்சானாக இருக்கும் பதானை யாராவது பார்த்திருக்க முடியுமா?’ என்று கேட்டார்.

இரண்டாவது அமர்வுக்குப் பின், இரவு விருந்தில் சுந்தரமான ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்:

‘அந்தச் சிறிய நபரை மேடையிலிருந்து நீங்கள் அடித்து நொறுக்குவதைப் பார்க்க, இங்கிலாத்தில் இருந்து வருகை தருவது எல்லா வகையிலும் மதிப்புடையது என்று தோன்றுகிறது.’ பெண்ணுரிமைக்கு எந்த வகையிலும் இவர் இடையூறானவர் அல்ல என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எல்லைப்புற மக்கள் தங்கள் சுற்றத்தாருக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் வழங்குகிறார்கள்.

புர்கா அணிந்த பெண்களோடு பல கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவத்தில் சொல்கிறேன், லாகூர் பெண்களும் இவர்களும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றனர். காலங்காலமாக பெண்கள் பற்றிய சித்திரிப்பு இவர்கள் எண்ணவோட்டத்தில் மாற்றமடைந்து வருகிறது. சிலர் விடுதலைப் பெறத் துடிக்கின்றனர்; முதியவர்கள் சிலர் பழமையைப் பிடித்துக் கொண்டு நவீனத்தை ஏற்க முடியாமல் அல்லல் படுகின்றனர்.

நான் பெஷாவரைவிட்டு நீங்கி இரண்டு நாட்கள் கழிந்த பிறகு, ‘புர்கா ஒழிப்பு லீக்’ ஒன்று பெஷாவரில் ஏற்பட்டிருப்பதாகச் செய்தித்தாளில் படித்தேன். அப்துர் ரஹ்மான் இல்லத்தில் என் உடன்அமர்ந்து உணவு உண்ணும் செய்தி ஆசிரியருக்கு இதில் நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *