Skip to content
Home » நான் கண்ட இந்தியா #26 – லக்னோ 2

நான் கண்ட இந்தியா #26 – லக்னோ 2

லக்னோ

முதலில் பேகம் வாசிம் பற்றிப் பார்ப்போம். அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் பேகம் வாசிம் மற்றும் அவரது மாமனார் மட்டுமே வளர்ச்சி அடைந்தவர்களாக எனக்குத் தோன்றினார்கள். குடும்ப விஷயங்களைப் பொறுப்பாகக் கையாண்டு, அதனை வழிநடத்துவதற்கு ஏற்ற உந்துசக்தியை பேகம் வாசிம் வழங்கினார். உடல் நலத்தில் நலிந்து போயிருந்தாலும் குடும்ப பொறுப்புகளையும் சமூகப் பணிகளையும் தவறாமல் செய்து வந்தார்.

குடும்ப உறுப்பினர்கள்மீது இவருக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. யாரும் பார்க்காத சமயத்தில் ரகசியமாக அவர்களை நோக்கி மெலிதாகச் சிரிப்பார். வேலையாட்கள் அதிகமாக இருந்தால், அவர்களைக் கட்டிக்காத்து வேலைவாங்குவது லேசுபட்ட காரியம் அல்ல. ஆனால் பேகம் வாசிம் போற்றத்தக்க வழியில் நிர்வாகம் செய்தார். நேரத்திற்கு உணவு பரிமாறினார். சிறந்த முறையில் எல்லோரையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார். பேகம் வாசிமின் வீட்டுப் பராமரிப்பு நேர்த்தியில் ஒரு கலை நயம் குடியிருந்தது. இத்தனை தன்முனைப்பான ஒரு பெண்ணை யாராலும் பார்க்க முடியாது.

பேகம் வாசிம் அபாரமான அழகு. உயரமான, பருமன் இல்லாத உடல். சிரித்த முகம். எப்போதும் பிரமாதமான ஆடைகள் உடுத்துவார். இவருக்கு ஆறு குழந்தைகள். பெரும்பாலும் ஆண்கள். எல்லோர் மீதும் ஆத்மார்த்தமாக அன்புச் செலுத்தி, போற்றத்தக்க வழியில் வாழ்ந்து, மெச்சுவதைத் தாண்டி இவர் தனியாகச் சொல்லித்தர வேண்டி எதுவும் பாக்கி இல்லை.

தன் சொந்தக் குழந்தைகளைத் தாண்டி அண்ணன் மகன், தங்கை மகள், நண்பர்கள் என்று அவருடைய பராமரிப்பின்கீழ் பல குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை இவ்வீட்டில் செலவு செய்தனர். இதுபோன்ற நட்புணர்வு கூடிய மரியாதை கலந்த தாய் – சேய் பாசத்தை கிழக்கில் மிகக் குறைவாகவே நான் பார்த்திருக்கிறேன்.

விருந்து உபசரிப்பில் இவர் துளியும் தவறவில்லை. மதிய நேரத்தில் பெரும்பாலும் இவர் வரவேற்பறையில் கூட்டம் நிறைந்திருக்கும். மாலை நேரங்களில் சமூகத்தின் உயர் மட்ட விருந்தினர்கள் அந்த அறையில் குழுமியிருப்பார்கள். பேகம் வாசிம் மிகச் சரளமாக ஆங்கிலம் பேசுவார். பர்தா அணிந்த ஒரு பெண்மணியால் விருந்தினர்களோடு இத்தனை நயமாக உரையாடலை எவ்வாறு உருவாக்க முடிகிறது என்றும், அவர்களை இத்தனை இலகுவாக எங்ஙனம் கையாள முடிகிறது என்றும் ஆச்சரியம் தொற்றிக் கொள்ளும்.

இவர் சகோதரர்களுள் ஒருவர் முகலாய பாணி வரைகலையில் தரமான ஓவியராக உள்ளார். புறநகர் பகுதியில் வசீகரமான பழங்கால வீட்டில் அவர் வாழ்ந்து வருகிறார். ஆனால் பேகம் வாசிமின் விருந்தினராக அடிக்கடி இங்கு வருவதுண்டு. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் வரைந்த ஓவியங்களைப் பார்த்தாலே, அவர் திறமை மீது சந்தேகம் வராது. ‘கவ்வாலி’ இசைக் கூட்ட ஓவியம் அவர் தலைச்சிறந்த படைப்பு என்றாலும் இன்னும் அது முற்றுப்பெறவில்லை. இசைக்கலைஞர் மற்றும் பாடகர்களின் கூட்டம் அதில் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கும். தன் அம்மா விரும்பும் அதே இசைப் படைப்பை இவரும் கற்பனைத் தீட்டி வரைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.

பேகமின் மற்றொரு சகோதரர் ஹாலிக் ஜமான். இந்திய செம்பிறைச் சங்கத்தின் இளம் உறுப்பினராக துருக்கி வந்தபோதே, அவரை எனக்கு நன்றாகத் தெரியும். கிலாபத் மற்றும் தேசிய இயக்கங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இன்னும் அரசியல் எதிர்காலம் உள்ள ஒரு மனிதராய் நான் அவரைப் பார்க்கிறேன். அதற்கேற்ற மனமும் குணமும் உள்ள நபர்.

அடுத்ததாக இளம் சகோதரர் டாக்டர் சலீம் ‌ஜமான். இவர் ஷக்கீராவின் கணவர்.‌ தில்லியில் வசித்து வரும் இவர், தலைசிறந்த மருத்துவ நிபுணர் என்று எனக்குச் சொன்னார்கள். ஆனால் அதைத்தாண்டி இவரிடம் இயற்கையாக அமைந்துள்ள நவீன ஓவியத்திறன் என்னைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தியது.

ஒவ்வொரு முறையும் தில்லியில் உள்ள இவர் வீட்டுக்கு நான் செல்லும்போது, பங்களா சுவற்றில் அழகு சேர்க்கும் இவர் ஓவியங்களைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன். ஒவ்வொன்றும் தன் அண்ணனின் ஓவியங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது. தன் சமகாலத்தவர்களைப் போல், எப்போதும் அமைதியின்றி அதிருப்தியோடு இருந்தார்.

உலகத்தையே சூழ்ந்திருக்கும் குழப்பமூட்டும் முரண்பாடான பிரச்சனைகளின் வலிமிகுந்த காரணிகளை இவரின் படைப்புகள் ஒருவருக்கு உணர்த்துகின்றன. இவர் வரையும் ஓவியங்களில் பெண்களின் வாய்கள் துன்பத்தாலும் அவநம்பிக்கையாலும் சிதைந்துபோய் கோணலாக உள்ளன. பார்வை தெரியாத பிச்சைக்காரனின் ஓவியம் ஒன்று இருந்தது.

அதில் பார்வை தெரியாத வேதனையும், தடியால் பாதை தேடும் அவஸ்தையும் இக்கால இளைஞர் சமுதாயத்தின் அசலான பிரதிபலிப்பாய் தெரிந்தது. ஆனால் இவர் வரைந்த தன் அம்மாவின் ஓவியம்தான் இவரின் தலைசிறந்த படைப்பு. குழப்பமானக் காலக்கட்டத்தில் இளைஞனின் தொல்லை தரும் உபாயங்களைத் தாண்டி, பரவசமான ஒளியூட்டும் கலைப்படைப்பாக மின்னுகிறது.

மூன்றாம் தலைமுறையில் பேகம் வாசிமின் மகள்களும், சகோதரர் குழந்தைகளும், இளம் சிறுவர்களும் இருந்தார்கள். அடிக்கடி என் அறைக்கு வந்து உதவி வேண்டுமா என்று கேட்பார்கள். சில நேரங்களில் வெறுமனே வந்து எதாவது பேசிப் போவார்கள். அவர்கள் எப்போதும் பளிச்சிடும் நிறத்திலான கால்சட்டைகளும் மேல் அங்கிகளும் அணிவது வழக்கள். பூ வேலைப்பாடுகள் நிறைந்த, மெலிதான முக்காடுகளை தலையில் அணிந்திருந்தனர். அவர்கள் முக்காட்டின் நுனியும், ஜடையின் நுனியும் ஒன்றுபோல திரண்டு காற்றில் அங்குமிங்கும் பறப்பது இளமையின் அழகைச் சிறப்பாகப் பிரதிபலித்தது.

நான் தங்கியிருக்கும் குடும்பத்தின் இயல்பு இதுதான். இல்லத்தை அலங்கரிக்கும் லக்னோவின் பேகம்களைத் தாண்டி, விருந்தினராக கலந்து கொண்ட மேலும் சிலரைக் கூட்டங்களில் சந்தித்தேன்.

பெருந்திரள் கூட்டத்தில் ஒவ்வொருவரின் தனித்தியங்கும் நயத்தையும் நன்றாகக் கவனிக்க முடிந்தது. பேகம் வாசிமின் புல்வெளி பூங்காவில் பெரிய அளவிலான தேநீர் விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். சில நூறுபேர் தேநீர் சுவைத்துக் கொண்டே அங்குமிங்கும் நடந்தார்கள். பிறிதொரு சங்கம் நடத்திய மற்றொரு தேநீர் விருந்தில் இளம் பெண்கள் மேடையில் ஆடுவதை ரசித்துக் கொண்டே தேநீர் குடித்தனர்.

இன்னொரு கூட்டத்தில் பெண்கள் முன்னதாக நான் பேசவேண்டி இருந்தது. அது ஒரு பழைய அரண்மனை. அந்த விசாலமான அறை முழுக்க வெளிச்சம் பரவியிருந்தது. ஒருவர் பின் ஒருவராகப் பலநூறு நிறத்திலான ஆடைகளில் அணிவகுத்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு ஆடையிலும் தங்கம் மற்றும் வெள்ளி நிறத்திலான பூ வேலைப்பாடுகள் நிரம்பியிருந்தன.

கறுப்பு வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்த பெண்ணொருத்தி, தரையில் மெத்தையிட்டு அமர்ந்து சித்தார் வாசித்தாள். மஹ்மூதாபாத் ராஜாவின் அம்மாவைக் காண்பதற்காக பின்னர் நான் அழைத்துச் செல்லப்பட்டேன். திருவாளர் வாசிமின் நெருங்கிய நண்பர்களுள் மஹ்மூதாபாத் ராஜாவும் ஒருவர். வீட்டைவிட்டு வெளியேறாத தன் அம்மாவை என்னால் நேரில் சென்று பார்க்க முடியுமா என்று, உணவு உண்ணும்போதே அவர் என்னிடம் கேட்டிருந்தார்.

பேகம் வாசிமும் நானும் அங்கிருந்து அவரைக் காணச் சென்றோம். மற்றொரு அழகான பெரும் அரண்மனையில் அந்த வயது முதிர்ந்த பெண்மணி வாழ்ந்து வந்தார். அவரின் மருமகள்களும் பணிப்பெண்களும் அற்புதமான அலங்கார விளக்கொளியின் வெளிச்சத்தில் எங்களுக்கு தேநீர் கொண்டுவர முன்னும் பின்னும் பாய்ந்தார்கள்.

தங்கள் கணவன்மார்களைக் கண்டதும் விரைந்து வெளியேறினார்கள். இல்லையென்றால் இவர்கள் வெளியேறியதும் அவர்கள் வந்தார்கள் என்று சொல்லலாம். அம்மாவின் முன்னிலையில் மனைவியைப் பார்க்கக்கூடாது என்பது இவர்களின் பழங்கால வழக்கம். பேகம் வாசிமின் வீட்டிலிருந்து அந்நியமான இந்த அரண்மனைக்குச் சென்றது கிழக்கு மேற்கு பற்றிய கிளர்ச்சியூட்டும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கல்வியறிவு நிறைந்த பேகம்களாலும் கிழக்கின் விசித்திரக் கதைகளாலும் லக்னோ வித்தியாசமாக இருந்தது. ஆனால் அதுமட்டுமே லக்னோ அல்ல.

மகளிர் கல்லூரியும் பெண்கள் பள்ளிக்கூடமும் இருந்தன. நான் பேசுவதற்காக அழைக்கப்பட்ட இடமும் தொழில்முறைப் பெண்கள் நிறைந்த ஒரு சபை. அவர்கள் அமர்ந்த விதமும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஒரு பேகம், ஒரு ஸ்ரீமதி. (இஸ்லாத்தில் பேகம் என்பதுபோல் இந்து மதத்தில் ஸ்ரீமதி) எளிமையாக வேலைக்குச் செல்லும் விதத்தில் ஆடையுடுத்தி, சிந்தனையால் புருவங்களை சுருக்கி, கூட்டம் முடிந்ததும் அலுவலகம் செல்லத் தயாராக இருந்தனர்.

அவ்வகைப்பட்ட பெண்களோடு ஸ்ரீமதி லக்ஷ்மி மேனனின் சிநேகத்தால் தொடர்பு உண்டானது‌. நெற்றியில் சிகப்பு நிற குறிகொண்ட சாதாரண இளம் இந்து பெண்மணி அவர். நவீன வாழ்க்கையைப் பின்பற்றுவது குறித்த கொந்தளிப்பில் இருந்தாலும், சமூகச் சேவை, தொழில்முறை செயல்பாடுகளைத் தாண்டி கவர்ச்சியான பெண்பால் தன்மையைக் கொண்டிருந்தார். அழகான பேகம்களுக்கு எந்த வகையிலும் குறைபட்டவர் அல்ல.

பெண்கள் கூட்டத்தின் முகப்பிற்கு பின்னால், நகராட்சி அரங்கத்தில் ஆண்களும் குழுமியிருந்தனர். லக்னோ களையிழந்த பழைய நகரம் என்று முஜீப் சொன்னதைத் தவறென்று உறுதிப்படுத்திக் கொண்டேன். புதிய வாழ்வியலுக்குப் பாயும் துடிப்பு மிகுந்த சிக்கல், இந்தியாவின் மற்ற நகரங்களில் உள்ளதுபோல் இங்கும் சாதாரணமாக உள்ளது.

0

கடியாவைச் சேர்ந்த மரியாதைக்குரிய ஷேக் முஷீர் ஹுசைன் கிட்வாய், லக்னோவில் புகழ்பெற்ற மனிதர். அவரைப் பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். அவரைப் போலவே லக்னோவில் இருந்து இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பல நபர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் நேற்று, இன்று, நாளை என பல வழியிலும் இஸ்லாமியர்களின் மேம்பட்ட வடிவமாக அவர் திகழ்கிறார்.

இந்திய வாழ்க்கையின் பல வகைப்பட்ட கோணங்களுக்கும் அம்சங்களுக்கும் பிரதிநிதியாக அவரைப் பார்க்கலாம். இந்தியாவின் பலதரப்பட்ட பார்வைகளை அவர்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஷேக்கிற்கு அறுபது வயது. நல்ல உயரம், வலுவான தோற்றம். அவரின் பிரகாசமான பார்வையைப் பறிக்கும் கண்கள், நரைப் பிடித்த தாடிக்குக் கொஞ்சமும் ஒத்துவராததுபோல் தோன்றும். என்‌ நண்பர், ‘பெரிய அண்ணன்’ மவுலானா ஷௌகத் அலிபோலத்தான் ஆடை உடுத்துவார். ஆகவே வெளியிருந்து பார்த்தால் அவரை ஓர் அனைத்துமட்ட இஸ்லாமியர் என்று சொல்லிவிடலாம்.

துருக்கியர், அராபியர், பெர்சியர், ஆப்கானியர் உட்பட இஸ்லாமியர்கள் அனைவரும் தன் சொந்த நாட்டுக்காரனைப் போல் இவரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இவரும் அவர்களுக்குச் சரிசமமாக வேலைசெய்து உதவியிருக்கிறார். துருக்கி ஆபத்தில் இருந்தபோது அதன் நலத்திற்காக அவர் என்ன செய்தார் என்பதை நாம் இங்கே விட்டுவிடுவோம். தன் நாட்டில் கிலாபத் இயக்கத்திற்கு தடை விதித்தபோதும், அதில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் என்று சொல்வதே இங்கு போதுமானது என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் ஷேக் என்ற பெயர் அனைத்துமட்ட அரசியல் அமைப்புக்களிலும் தட்டுப்படும் அளவுக்கு அவர் புகழ் ஓங்கியிருந்தது. அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் எல்லா கட்சியின் கொள்கையிலும் ஈடுபாடு உள்ளவர். அவரை ஒரு தேசியவாதி என்றும் சொல்லலாம். ஆனால் ஏற்கனவே கூறியது போல், தேசியவாதத்திற்காக ஒருபோதும் வகுப்புவாத தேவைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்.

இந்திய விடுதலைக்காக இந்துக்களோடு ஒன்றுசேர்ந்து ஒத்துழைப்பு நல்கியுள்ளார். ஒத்துழையாமை இயக்கம் சூடுபிடித்த காலக்கட்டத்தில் இந்துக்களுக்கு உறுதுணையாக இருந்தார். வக்கீல் உத்தியோகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க நீதித் துறையை வேலையைத் தூக்கி எறிந்தார். இதை வைத்துப் பார்த்தால் ஒத்துழையாமை இயக்கம் நீடித்தவரை மகாத்மா காந்தியின் அணுக்கமான தொண்டராக இருந்தார் என்று உறுதி செய்யலாம்.

ஆனால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கலைத்துவிட்டு, அரசியல் இயக்கம் நடத்தும் அளவுக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்ற மகாத்மாவின் பேச்சைக் கேட்ட ஷேக் அவர்கள், காந்தியின் பாதை அகிம்சை என்றறிந்து அதனைப் பலமாக விமர்சித்தார். ஆனால் மகாத்மா காந்தியை பற்றியொழுகாமல் எதிர்த்த காலத்திலும் அவரைப் பற்றி பின்வருமாறு பாராட்டி உள்ளார்.

‘ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன்புவரை பெருந்திரளான மக்கள் போராட்டம் ஏற்பட்டதில்லை…’ என்று சொன்னதோடு, முதல்முறையாக பாட்டாளிகளின் குடிசைவரை தேசியவாத உணர்ச்சி சென்றடைந்ததற்கு மகாத்மாவிற்கு நன்றி நவின்றார்.

ஆனால் சமூக, பொருளாதார, கல்விப் பிரச்சினைகள் ஓயும்வரை இந்தியர்கள் தங்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தாமதிக்கக் கூடாது என்பதுதான் ஷேக்கின் கருத்தாக இருந்தது. சுயராஜ்யமே திரையாக இருக்கும். அதுவொன்று கிடைத்துவிட்டால் மற்றெல்லாம் தானாகப் பின்வரும் என்று அவர் நம்பினார்.

இந்தப் புள்ளி கவனத்திற்குரியது. மக்களை ஓர் அரசியல் வெகுஜன இயக்கத்திற்குள் தள்ளுவதற்கு முன் தார்மிக, சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் மக்களுக்கு அறிவு புகட்டுவதன் மூலம் ‘மனதை மாற்றும்’ மகாத்மா காந்தியின் தற்போதைய நிலைக்கு முற்றிலும் எதிரானது.

ஹஸ்ரத் மொகானியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அனைத்திந்திய வகுப்புவாதமற்ற சுதேசிய கட்சியை ஷேக் தொடங்கினார். இந்தியாவில் சமூகம் மற்றும் மதம் சார்ந்த பார்வையிலிருந்து வேறுபட்ட அரசியல் உணர்வை உருவாக்குவதே இதன் நோக்கம். பொருளாதாரத்தின் வழியாக சுதந்திரம் அடையலாம் என்று அவர் முன்மொழிந்தார். உழைப்பால் மட்டுமே இந்தியாவைச் சுதந்திர பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று நம்பினார்.

‘இந்தியாவின் அறிவார்ந்த மக்கள் எல்லோரும் மில்டன், ஷேக்ஸ்பியர் என்று கவிஞர்களைக் கொண்டாடி தலையில் ஏற்றியதற்குப் பதில் செயல்முறை அறிவியலைக் கற்றுக் கொண்டிருந்தால், கடந்த முப்பது – நாற்பது வருடங்களில் இந்தியாவின் தொழிற்சாலைகளை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கலாம். அந்தக் காலக்கட்டத்திற்குள் சுய பிரக்ஞை தோன்றி, மக்கள் சுய ராஜ்யத்திற்காகப் போராடத் தொடங்கியிருப்பார்கள்…’

ஷேக்கின் இந்தப் பார்வைதான் அவரை வலிமையான சுதேசியாக அடையாளப்படுத்தியது. தேசிய தொழிற்சாலைகளிலும், குடிசைத் தொழில்களிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே அந்நியப் பொருட்களை எதிர்ப்பவர்களுள் ஷேக்கின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். கூடவே தொழிற்சாலைகளைத் தேசியமாக்கும் மகாத்மா காந்தியின் திட்டத்தை நிலைநிறுத்தபவராக விளங்கினார்.

மகாத்மா காந்தியோடு கொள்கை அளவில் ஒத்துப்போனாலும், அதை நடைமுறைப்படுத்தும் விதத்தில் பெருமளவு வேறுபட்டார். காந்தி இயந்திரங்களுக்கு எதிரானவர். கைவினைப் பொருட்களுக்கே முக்கியத்துவம் அளித்தார். ஆனால் ஷேக் இயந்திரங்களிலும் தொழிற்சாலைகளிலும் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கையில் நாம் கவனம் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய புள்ளி இது.

எந்தவொரு தொழிலும் வீட்டிலிருந்து மேற்கொள்வதாக இருக்கவேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அது கைவினைத் தொழிலாக கிராமத்திலேயே முடங்கிவிட வேண்டுமா, அல்லது ஜப்பானைப் போல் இயந்திரங்களால் உருவெடுத்து தொழிற்சாலை வரை சென்றடைய வேண்டுமா என்பதில்தான் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

ஷேக்கைப் பொறுத்தவரை மற்றொரு முரண்பாடான வியூகம் என்னவென்றால், அவர் ஒரு தீவிரமான சோசலிஸ்ட். ஆனால் அவர் விரும்பும் சோஷலிசம் இஸ்லாம் சார்ந்தது. ‘இஸ்லாமும் சோஷலிசமும்’ என்ற தன் புத்தகத்தில் அவர் குறிப்பிடும் மையமான கருத்து பின்வருமாறு.

‘முஸ்லிம்களாகிய எங்களுக்கு சோஷலிசம் என்பது உலகளாவிய நல்வாழ்வுக்கும் செழிப்பைப் பாதுகாப்பதற்கும் பரந்த நோக்கத்துடன் கட்டியெழுப்பப்பட்ட ஒழுங்கமைவு கொண்ட, தொடர்ச்சியான ஒத்துழைப்பைக் குறிக்கும் இணக்கமான கொள்கை.’

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *