Skip to content
Home » நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3

நான் கண்ட இந்தியா #33 – கல்கத்தா – 3

காளி கோயில்

நூர் ஜஹானைச் சுற்றி இரண்டு இசைக்கலைஞர்கள் இருந்தனர். அதில் ஒருவர் இரண்டு மெலிதான கோல்களைக் கொண்டு சிறிய டிரம் கருவியை வாசித்தார். மற்றொரு நபர் நரம்பு வாத்தியத்தால் இசை மீட்டுக்கொண்டிருந்தார். இருவருமே வயது முதிர்ந்தவர்கள். தாடி வைத்து, தலைப்பாகை அணிந்து, ஆளுயர சட்டைகளின் பொத்தான்களை இறுக்கமாகப் பூட்டியிருந்தனர். தங்கள் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, கலை ரசனையில் ஊறிப் போய் மும்மரமாக வேலை செய்தனர். தங்கள் முன்னிருந்த பார்வையாளர்களை இருவருமே பொருட்படுத்தவில்லை.

‘உலகின் ஒளி’ பாடும்போதெல்லாம் இரு நபர் வாத்தியங்கள் வைத்துக் கொள்வதே வழக்கமாம். தன் கைகளை நீட்டிப் பரப்பி விசித்திரமான முறையில் சமிக்ஞை காட்டுகிறார். அதைப் புரிந்துகொண்டவர்களாய் சமிக்ஞைக்கு ஏற்ப முக பாவனைகளையும் இசை நுணுக்கங்களையும் மாற்றி அமைத்து ஒலியில் ஏற்ற இறக்கங்கள் அமைக்கின்றனர். நூர் ஜஹானின் மெல்லிய விரல்கள் மூடித் திறக்கும்போதெல்லாம், வெப்பமண்டல மலரொன்று சூழலுக்குத் தகுந்தாற்போல் இதழ் விரித்து மூடுவதுபோல் இருந்தது.

தாடி வைத்த தலைப்பாகை மனிதர்களும், நூர் ஜஹானின் இசைக்குறிப்புகளுக்கு ஏற்ப இடது வலது என‌ மாறி மாறித் தலையசைத்தனர். வணங்கத்தங்க வயதுடைய முதுபெரும் கலைஞர்களின் தலையசைவு நேர்த்தியைப் பார்த்தால், இயந்திரப் பொம்மைகளின் உதவியால் பின்னிருந்து கயிறு கட்டி இழுக்கின்றனரோ என எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். நூர் ஜஹானின் பாடல் ஒருமணி நேரத்திற்கு காற்றில் மிதந்தாலும், இவர்கள் சோர்வின்றி தலையசைத்து கொண்டாடுவதைப் பார்க்க முடியும்.

அவர் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும் அத்தனை உணர்ச்சி வெள்ளத்தோடு அவர் பாடியதைப் பார்க்க அலாதியாக இருந்தது. நேயர்களுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போனார். ரசிகர்களைக் கட்டிப்போடும் கலை அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தது. இந்திய இசைபற்றி துலக்கம் இல்லாதவர்களைக்கூட நூர் ஜஹானால் மெய்மறக்கச் செய்யமுடியும்.

மூன்று வகைப்பட்ட இந்திய இசைகளை அவர் பாடினார்.

(1) இந்தியப் பாரம்பரிய இசை

பெரும்பாலும் இவை இந்துமதம் சார்ந்த பாடல்களாக இருந்தன. அதிகம் வார்த்தைகள் கிடையாது. சங்கேத ஒலிகளால் கொண்டுகூட்டப்பட்டவை. நான் அவற்றை ‘பிளேபிளேபிளேபிளே . . . சினேசினேசினேசினே . . .’ என்பது போல் புரிந்துகொண்டேன். அரை மற்றும் கால் அளவு சந்தத்தை வெவ்வேறு குழப்பகரமான வடிவங்களில் மாற்றியமைத்து புதுப்புது மாதிரியில் நூதனமாகப் பாடினார். சில இசைக்குறிப்புகள் சிக்கலாகத் தெரிந்தன. அவற்றைப் பாடுகையில் நூர் ஜஹானின் தொண்டை சதைகள் லேயாகோன் (Laocoon) சிலைகளைப் போல் புடைத்துக்கொண்டிருந்தன. தன் முகத்தைச் சுருக்கி, வாயைச் சுழற்றி காகோய்ல் (Gargoyle) சிற்பத்தைப்போல் தெரிந்தார். அந்தக் குறிப்பிட்ட இசைத் துண்டைப் பாடி முடிப்பதற்குள் அவர் உடல் மாளாதத் துன்பங்களை அனுபவித்து, மிகச் சிரமத்தில் அந்தப் பாடலை பிரசவித்தது.

பழங்கால இத்தாலியப் பாடகர் ரோசீனி அவர்கள் வியன்னாவில் நடத்திய முதல் இசைக் கச்சேரியின் நினைவுகளை, சில பகுதிகள் ஞாபகமூட்டின. வேறு சில பகுதிகள் துளியும் விளங்கவில்லை. இறுதிப் பகுதியைக் கேட்கும்போது, ‘முக்கியத்துவமில்லாத, இரைச்சல் நிறைந்த கதைகளை முட்டாள் ஒருவன் சொன்னதுபோல்’ இருந்தது. ஆதி காலத்தில் இசையின் கடவுள் இனிய மெல்லிசைகளால் தனக்கான உருவம் தேட முயன்றாரா என இவை கற்பனையூட்டுகின்றன. விதவிதமான ஒலிக்கலவைகளால் குழப்பமடைந்து, ஊழிக்காலத்து இசையுடனோ இறுதிக்காலத்து இசையுடனோ பொருந்தும் ஒன்றை அவர் உருவாக்கியிருக்கலாம் எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்தியர்களால் இந்த இசையில் மணிக்கணக்காகத் தோய்ந்து, தன்னை மறந்து ரசிக்க முடியும். பாடகரின் குரல்வளம் இரண்டாம் பட்சந்தான்.‌ நடுக்கமான குரல்வளம் கொண்ட முதிய பாடகர்களை நான் பார்த்திருக்கிறேன். எவ்வித ஆட்சேபனையும் இன்றி இவர்களை ரசிக்கும் கண்மணிகள் உண்டு. பாடகர் கையாளும் நுட்பங்களும் விவரிக்கமுடியாத தனித்துவச் சிறப்பம்சங்களுமே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருமணி நேரத்திற்குமேல் என்னால் தாக்குப்பிடிக்க இயலாமல் திணறிப் போகிறேன். என்னளவில் இது ஒரு குழப்பகரமான வார்த்தை விளையாட்டு.

(2) இந்திய நாட்டார் பாடல்கள்

இவ்வகைப் பாடல்களுக்கு இந்தியாவெங்கும் மவுசு உண்டு. குறிப்பாக வங்களாத்தில், தாகூரின் பாடலொன்றைக் கேட்டபிறகு மெய்மறந்துபோனேன். எனக்கு இந்த வார்த்தைகளின் பொருள் விளங்காததால், ஆரம்பத்தில் பெரிதாய் கவனம் செல்லவில்லை. ஒருகணம் அப்துர் ரகுமான் அதன் பொருளைக் காதில் கிசுகிசுத்த பின்னர், காற்றில் என் காதைப் பறிகொடுத்தவளாய் நூர் ஜஹானின் வார்த்தைகளில் அப்படியே ஒட்டிக் கொண்டேன். இந்தப் பாடல்களின்‌ வசீகரத்திற்கும் நூர் ஜஹானின் வளையல்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அவரின் கண்ணாடி போன்ற கைகள் காற்றில் அசைந்து, வளையல்கள் குலுங்குவதை நான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நூர் ஜஹான் பாடியவை எல்லாம் காதல் பாடல்கள் என்று நான் துணிந்து சொல்வேன். இருந்தாலும் பர்தாவிற்குள் வாழும் பெண்ணாய், அதில் சோகக் கீதத்தை ஊமை அழுகையையும் சேர்த்துக் கொண்டார். இத்தாலிய இசையின் அம்சம் கொண்ட ஒலியினாலும், வார்த்தைகளாலும் உணர்ச்சிப் போக்கை பெரிதாய் வெளிக்காட்டிக்கொள்ள இடமில்லை. ஆனால் வழக்கம்போல் தன் நுண்குறிப்புகளில் கவனமெடுத்து பாடி, விசித்திரமான சோகக் குரலில் பார்வையாளர்களை ஈர்த்துவிட்டார். அவரின் பரந்த கண்களும், துடிக்கும் இதழ்களும் எனக்கு நினைவிருக்கிறது. தன் பாடலின் மயக்கத்தில் அவரும் திளைத்திருந்தார். தன் இசை வரம்புக்குள் அவர் அறியாத பொருள் இல்லை.

இந்த நாட்டார் பாடல்களில் இந்துமத பாணி பெரும்பான்மையாக இருந்தாலும், மத்திய ஆசியாவின் இஸ்லாமிய இசைத் துணுக்குகளும் இதில் உண்டு என்பதை மறுக்க முடியாது. சிலருக்கு இது மேற்கத்திய அனடோலியா மற்றும் காக்கேசிய மெல்லிசைப் பாடல்களை நினைவூட்டலாம்.

(3) இஸ்லாமியப் பாரம்பரிய இசை

இவற்றை கவ்வாலி என்று அழைப்பர். மஸ்னவியிலிருந்து தொகுத்த பாடல்கள் இதில் அதிகம் உண்டு. (மன்ஸவி என்பது மௌலானா ஜலாலுதீன் ரூமியின் புனிதத்தன்மை வாய்ந்த கவிதைகளின் தொகுப்பு) பாரசீக மொழியில் அமைந்தவை.

ஜலாலுதீன் ரூமிக்கு இங்கு சிறப்பு அந்தஸ்து உண்டு. தன் நாட்டின் தலைமகனாகக் கருதப்படுகிறார். உலகந்தழுவிய புகழையும் பெருமையையும் தாண்டி, துருக்கிய இசையின்பால் கவனம் கொண்டால் அவரின் மதிப்பை உணரலாம். அவரின் கலையியல் படைப்புகளும் இலக்கியங்களும் புனிதத்தன்மை பெற்றவை. சிந்தனையோட்டமிக்க இந்தக் கலைஞனின் படைப்புகளை ஆழ உள்வாங்கினால், ஒவ்வொரு கட்டத்திலும் விஷேச புரிதல் தோன்றும். ரூமியின் ஆன்மிகப் பாடலுக்கும், இசைக்கும், நாட்டியத்திற்கும் துருக்கியில் ஒரு செவ்வியல் மதிப்பு உண்டு; அறிவுக் கலாசாரத்தின் பிரதியாகக் கருதுகின்றனர். இந்தியாவில் அவர் பாடல்களை ஆழமான உணர்வுகளோடு கொண்டாடுகின்றனர்.

‘ஷம்ஸி-டப்ரிஸ் . . .’ என்று நூர் ஜஹான் பாடத் தொடங்கினார். இந்தியப்‌ பாடகர்கள் எப்போதும் உயர்ந்த ஸ்தாயியில் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொடக்கத்திலும் இறுதியிலும் ஒரேவிதமான குறிப்புகள் கையாளப்படும். இது ஒரு திடீர் படபடப்பை உண்டாக்கிறது.

உடலுமல்ல உயிருமல்ல, பேரன்புக்குரிய இறைவனின் சாரம் நான்.

டப்ரிஸின் ஒளிக்கதிரே, ஆட்கொள்ளப்பட்ட இவ்வுலகில் நான் அறிவதெல்லாம் ஒன்றுதான். எங்குநோக்கினும் இன்பமே நிலையானது .‌ . .

நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு ரேடியோ, இசை வாத்தியங்கள் மற்றும் மனிதக் குரல்களுக்கு இடையே நூர் ஜஹானின் இல்லத்தில் பெரும்போட்டி தொடங்கியது.

0

வங்காளத்தின் கரும்புலிகளா அல்லது காளி கோயிலா எனும் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தவித்தேன். எனது பயணத் திட்டப்படி, இன்னும் இரண்டு மணிநேரமே கல்கத்தாவில் செலவு செய்ய முடியும். அதை நான் விருப்பப்படி தேர்வு செய்யலாம். ஆனால் எங்கு செல்வது என முடிவெடுக்கத் தெரியாமல் முழித்தேன். கரும்புலிகளை வேறு ஏதாவதொரு மிருகக்காட்சி சாலையில் பார்த்துக்கொள்ளலாம், ஆனால் காளி கோயிலை இங்கு விட்டால் வேறெங்கும் பார்க்க முடியாது என்பதால் அங்குச் செல்வதே சரியெனத் துணிந்தேன். அத்தோடு காளி கோயிலுக்குப் போகாமல் தவிர்த்தால், இந்திய உளவியல் புரிதலில் ஏதோ ஒரு அம்சத்தை தவறவிடுவதாய் தோன்றும்.

காளிக்கு மூன்று தலைகள் உள்ளன. மனித மனங்களின் சுபாவங்களைக் கட்டுப்படுத்துவதோடு, அவர்களின் உள்ளுணர்வுக்கும் காரணமாக இருக்கிறாள். அழிவின் சக்தியாக விளங்குகிறாள். அதே சமயம் அழிந்துபட்ட பழம் பொருட்களை ஒழித்துவிட்டு அதன்மேல் புதிய விஷயங்களை வியாபிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறாள். ஒரு தாய்த் தெய்வத்தின் மடியில் சாய்ந்து பிரபஞ்சத்தைக் காணும் மனித மனங்களின் ஏக்கத்தையும் பூர்த்தி செய்கிறாள். மனித இனங்களில் பெண்களே கொடியவராக இருப்பதைப் போன்று, தெய்வப் பிறவிகளில் காளியே கொடியவளெனச் சொல்லப்படுகிறாள்.

தாய்‌த் தெய்வமாக இருந்தாலும், கருணைக்கும் அவளுக்கும் நெடுந்தூரம் உண்டு. ரத்தப் படையல் வேண்டுவாள், மனித உயிர்களைப் பலியாகக் கேட்பாள். கொலை பாதகம் செய்யும் ரவுடிகளும், வன்முறையால் அரசியல் ஆதாயம் பெறும் தீவிரவாதிகளும் காளியிடம் சரண் புகுந்து வேண்டியதைக் கேட்கின்றனர். தொழில்முறைக் கொலைகாரர்களும் திருடர்களும் குண்டர்களும் அரசியல்-சமய கொள்ளைக்காரர்களும் காளியை தன் இஷ்ட தெய்வமாகக் கருதுகின்றனர். இவர்களின் மூலம் காளிக்கு மனித உயிர்கள் பலியிடப்படுகின்றன. சாதாரண பக்தர்கள் சிறிய ஆட்டுக்குட்டி ஒன்றை ரத்த பலி கொடுக்கின்றனர்.

இந்துக்களுக்கு அன்பும் அமைதியுமே தெரியும். உயிர் பலியிடவும், உயிர் பலியாகவும் அவர்களுக்குத் தகுதி இல்லை என்று சொல்வது முழுப் பொய். அநியாயத்தைக் கையிலெடுத்து சட்டத்தை மீறுவதற்கு, அவர்களுக்கு ஒரு சமயம் சார்ந்த அனுமதி வேண்டும். அதனை காளி வழங்குகிறாள். மாட்டுக்கறி உண்பவர்களைப் பலியிடும் இந்துக்கள், விலங்கு வதைக்கு எதிரான கருத்து கொண்ட‌ இறைவன்களை எதிர்க்கின்றனர். ஆனால் அதே சமயம், மனித உயிரைக் காவு கேட்கும் காளியின் ஆசைகளைத் திருப்தி செய்கின்றனர். காளியை வழிபடும் இந்து சமூகத்தினரை வேற்று மதத்தினர் விமர்சிக்கவும் கூடாதாம்.

உண்மை என்னவென்றால், ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் இதயத்திலும் பெயரிடப்படாத ஒரு காளி வீற்றிருக்கிறாள். மனித மனங்களில் அன்பு வியாபித்து இருப்பதுபோல், அழிவும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆகவே இங்கு எழுப்பப்படும் கேள்வி சுலபமானது. மதங்கள் அறிவுறுத்தும் தேவ சம்பாஷணைகள், ‘நீ உயிர்களைக் கொல்லாதே . .‌ .’ என்று தடுக்கப்போகிறதா, இல்லை ‘நீ உயிர் கொலை செய் . . .’ என்று தூண்டுப்போகிறதா என்பதில்தான் உய்வுண்டு.

கோயிலின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை. மற்றெந்த கீழைநாட்டுக் கோயிலையும் போலவே இருந்தது. அதன் அருகில் பிச்சைத் தொழில் புரிபவர்கள் மிகுந்த கலைநேர்த்தியோடு பணி பூரணத்துவங்கள் நிறைந்து இருந்தனர். பார்வைச் சவால் உள்ளவர்கள், கை கால் முடங்கியவர்கள், அரை நிர்வாண ஆசாமிகள், தொழுநோய் உடையவர்கள் என்று எல்லோரும் உங்கள் ஆடையைக் கழுகு போல் பிடித்திழுத்து வழிமறிப்பார்கள்.

இந்தக் குறைபாடுகள் எல்லாம் பெரிதும் போலியானவை. இத்தனை நடிப்பாற்றல் கொண்டவர்கள், கொஞ்சமேனும் ஒப்பனைக் கலை படித்திருக்கலாம். காளிதேவியின் கருணைக் கண்ணில் இடம்பிடிக்க விரும்பும் அப்பாவி பக்தர்களை ஏய்க்கும் இந்தப் பிச்சைக்காரர் படையைத் தாண்டி வருகையில், இரைச்சலிடும் சூதாட்டக்காரர்களையும், பங்குச்சந்தை கூச்சலையும் நினைவுகூர்கிறேன். இரண்டும் ஒன்றுபோலவே எனக்குத் தோன்றுகிறது. இரண்டிலுமே மக்களின் நம்பகத்தன்மையை ஏய்த்து, அதன்மூலம் உழைப்பில்லாமல், தார்மிக அறமின்றி செல்வந்தர் ஆகும் முயற்சியே வெளிப்படுகிறது.

கோயிலின் உட்புறத்தில் நெடிய கல் தரை இருந்தது. கோயில் மண்டபங்களும் அது சார்ந்த மற்ற கட்டடங்களும் அதன்மேல் அமைந்திருந்தன. அங்குப் பூக்கடைகளும் பழக்கடைகளும் ஏராளம். ரத்தத்தில் குளிக்கும் காளி தேவிகள்கூட பூச்சூட வேண்டும் என்பது இந்நாட்டின் இன்றியமையாத அம்சம்.

கட்தரையின் மத்தியல் செவ்வக மேடையொன்று இருந்தது. பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அதன் தரையில் மெத்தப் படித்த அறிஞர்களும் இந்துமத துறவிகளும் படித்துக்கொண்டும் தியானித்துக்கொண்டும் இருந்தனர். மேடைக்கு எதிர்ப்புறம், குறுகலான நடைபாதைக்கு அப்பால் காளி தேவியின் சன்னதி அமைந்திருந்தது. அவளது மூன்று தலைகளையும் பூக்கள் மறைத்திருந்தன. இரும்புக் கம்பிகளோடு பக்தர்கள் ஒட்டிக் கொண்டு காளியைத் தரிசனம் செய்தனர். ஒரு பெண்மணி முணுமுணுத்துக் கொண்டே வயிற்று வழியாக தவிழ்ந்துவந்து காளியிடம் வேண்டுதல் வைத்தாள்.

மேடைக்குப் பின்புறம் பலிகூடம் இருந்தது. கல் தரை முழுதும் ரத்தக்கறை. ஆட்டுக்குட்டியை கைகளில் ஏந்திக்கொண்டு அங்குமிங்கும் சென்றார்கள். நான் அந்தப் பலிகளைப் பார்க்க வேண்டுமா? நிச்சயமாக மாட்டேன். எங்களது வருடாந்திர விருந்துக் கூட்டத்தில் கெடா பலியிடும் சடங்கில் நான் ஒருபோதும் கலந்துகொண்டது இல்லை. இளங்குட்டிகள் ஒன்றை ஒன்றைப் பார்த்துக்கொண்டு, இதயம் நொறுங்கும்படி கத்துகின்றன.

நான் இந்த வழிமுறைப் பற்றி மகாத்மா காந்தியிடம் சொன்னபோது, கோபம் கொப்பளிக்கும் குரலில் அவர் சொன்னார், ‘இறைச்சிக்காக உயிர் பலியிடுவதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் கடவுளைத் திருப்திப்படுத்த கொலை செய்வதெல்லாம் . . .’ என்று சொன்னதோடு, ‘இது நமக்கு ஏற்பட்ட ஒருவகை அவப்பெயர் ’ என்றார். இல்லை மகாத்மா, இது இந்துக்களுக்கு மட்டுமே ஏற்பட்ட அவப்பெயர் அல்ல. இது நாம் எல்லோருக்கும் உண்டான அவப்பெயர். கொலை மறுத்தலுக்கு எதிரான உங்கள் போராட்டத்திற்கு நாங்களும் துணை நிற்கிறோம். உலகெங்கிலும் காளி வழிபாடு நிகழாமல், காளி கோயில்களை முற்றிலுமாய் அழிக்க துணை நிற்போம்.

கோயிலைவிட்டு வந்த பிறகும் காளி பற்றியே சிந்தித்துக் கொண்டிருத்தேன். அப்துர் ரஹ்மானின் செயலாளர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவர் என்னிடம் காளி கோயிலின் குறியீட்டுத் தன்மையான முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் விளக்கிச் சொல்ல முயன்றார். அவருக்குச் சாந்தமான முகம், மென்மையான கண்கள். வீட்டில் அவர் கோழிகளைக்கூட பலியிடமாட்டார் என்று நம்பத் தோன்றியது. ஆனால் தன் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு காளி தேவியைத் திருப்திபடுத்துவதற்காக ரத்தம் ஒழுகும் ஆட்டுக்கிடாயுடன் அவர் சன்னதியில் நிற்பதை என்னால் கற்பனைச் செய்து பார்க்க முடிகிறது.

எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் : காளி என்பவள்‌ இதயத்தை அடக்கி மூளையில் ஆட்சிச் செய்கிறாள். இதயத்திலிருந்து மூளை துண்டிக்கப்பட்ட மனிதனைக் காட்டிலும் கொடூரமானவனை நீங்கள் எங்கும் பார்க்கமுடியாது . . . எனவே நாமெல்லோருக்கும் இதயத்திலிருந்து பிரிந்து சென்ற மூளையின் தாக்குதலுக்கு ஆட்படாத வாழ்க்கை வாய்க்கவேண்டுமென்று நான் இறைவனை வேண்டிக்கொண்டேன்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *