வார்தாவிலிருந்து பம்பாய் செல்லும் தொலைதூர ரயில் பயணத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் உன்னிப்பாகக் கவனித்தேன். நான் முதல்முறையாக பம்பாயிலிருந்து தில்லி சென்றபோதும் இப்படித்தான் கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுவந்தேன். இம்முறை ஆங்கிலேயர், இந்து, முஸ்லிம் எனும் இந்திய முக்கோணவியல் பற்றி மீளவொருமுறை தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் என் பார்வை சென்றது.
ரயில் நிலையம் ஆங்கிலேயப் பாணியில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், எண்ணிக்கையில் அவர்கள் மிகவும் குறைவு. எப்போதாவது ஓர் ஆங்கிலேய அதிகாரி அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடுவார். இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் சேர்ந்து நடைமேடையை அடைத்து நிற்பார்கள். ஆட்சியாளருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையிலான தடுப்பணை உடைந்துபோயிருந்தது. ஆங்கிலேயர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சில ரயில்வே அதிகாரிகள் பணியில் இருந்தனர். இது ஆங்கிலேயர்களை நினைவூட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட பெயரளவிலான வெற்று மரபு. நடைமேடையில் உங்கள் காதில் கேட்கும் ‘இந்து சாய் (Chai), முஸல்மான் சாய்’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், விதவிதமான ஆடை, நிறமிகள் கொண்ட முழுமுதல் இந்தியச் சித்திரமாகத் தெரியும்.
வசதி படைத்தோர், ஏழை எளியோர் முதல் பிச்சையெடுப்பவர் வரை சகலரும் இருந்தனர். வசதியானவர்கள் மிக அரிது. உதவியாளர்களின் புடைசூழ நடந்துவருவார்கள். அவர்தம் மனைவிகள், கூட்டத்தை தீண்டாதபடி சேலைகளை கையில் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். மீதமுள்ள 99% மக்கள் நீங்கள் அன்றாடம் காணும் ஏழை ஜீவராசிகள். அனைத்து நிறந்திலுமான டர்பன்களும், தொப்பிகளும் அணிந்திருப்பார்கள். இன்னும் சிலர் காதுவரை குல்லாய் மாட்டியிருந்தனர்.
ரயில் நிலையத்திற்கு வரும் சராசரி மக்களைப் போல் குடும்பத்தோடு மூட்டை முடிச்சுகளுடன் நீங்கள் அவர்களைப் பார்க்கலாம். பயணத்திற்கு பல மணிநேரங்களுக்கு முன்பே ஸ்டேஷனுக்கு வந்து, உண்டு, உறங்கி அங்கேயே தங்குகின்றனர். பாரம்பரியம் மற்றும் நவீனத்திற்கு இடையிலான சுவற்றை ஏழை மக்களும் தகர்த்தெறிந்துவிட்டனர் என்பதை அவர்கள் அணிந்த ஆடையின் மூலம் தெரிந்துகொண்டேன். சேலைகளில் மட்டுந்தான் புதுமை. கால் சுண்டுவிரலில் இருந்து தலைமுடிவரை வெள்ளைநிற கவசத்துணியில் பார்வைக்கு மட்டும் துவாரங்கள்விட்டு முழு உடலையும் போர்த்தியிருந்தனர். இது முழுக்கவும் பழமைத்தனம் ஊறிப்போன ஆடை. இந்த உடையில் பார்க்க நடந்துவரும் கல்லறைக் கல் போல் இருந்தார்கள். மறைந்துவரும் பண்டையத் தன்மையை இவை நினைவூட்டுகின்றன.
நாங்கள் மார்ச் மாத மத்தியில் பயணம் செய்தோம். இந்தியாவில் எங்கு நோக்கினும் வெப்ப அலை. தூசி, தூசி, தூசி . . . . நாசித்துவாரம், தொண்டை, நுரையீரல் என எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் சேதாரப்படுத்தின. மின்விசிறிகள் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. விநோத பட்டாம்பூச்சிபோல் மெல்லமாக சுழன்றுக் கொண்டிருந்தன. இவை எனக்கு வேறொரு விஷயத்தை நினைவூட்டின . . . என்ன விஷயம் அது? பண்டைய இந்தியாவில் விசிறி இழுப்பவர்! ஆம் அவருக்கு என்ன ஆனது? மின்விசிறி போன்ற மேற்கத்திய கண்டுபிடிப்புகளால், வசதிபடைத்தோர்க்குத் தொண்டு செய்யும் ஊழியத்திலிருந்து இந்த அப்பாவி வர்க்கத்தினருக்கு விடுதலை கிடைத்துவிட்டதா? அல்ல, தொழில்நுட்ப வளர்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இன்னும் கீழான வேலைகளைச் செய்து வருகிறார்களா?
பம்பாயில் தலைமை நீதிபதி ஃபைஸ் தியாப்ஜி வீட்டில் விருந்தினராகத் தங்கினேன். கணவன் மனைவி இருவரும் குறிப்பிடத்தகுந்த நபர்கள். சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டதால், பாராம்பரிய வாய்ந்த நெடிய குடும்பமாக இருந்தது. லேடி அமீனாவின் இல்லத்தைப் போன்று விஸ்தாரமாக, அழகியல் தன்மையோடு சற்றே சிறியதாக இருந்தது. எந்நேரமும் வீட்டை விருந்தினர் சூழ்ந்திருப்பார்கள்.
திருமதி தயாப்ஜி வாட்டசாட்டமான அழகிய பெண்மணி. சிநேகத்துடன் பழகக்கூடியவர். மேற்கத்திய தாக்கங்களும், தாராளவாத விதைகளும் இந்திய மண்ணில் தூவப்படும் முன்பே, இந்நாட்டுப் பெண்கள் நவீனத்தை நோக்கி முன்னகரத் தொடங்கிவிட்டனர் என அவர் ஒப்புக்கொண்டார். இவர்கள் மெல்லமாக நவீனத்திற்கு மாறுவதால், எதற்கும் ஆட்படாமல் தேக்கத்திலிருந்து தப்பித்து, தங்கள் தனித்துவ அடையாளத்தை பாதுகாக்கின்றனர்.
பெண்களிடம் பேசியதில் இருந்து:
இளவரசி விக்டோரியா மேரி ஜிம்கானா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எனது சொற்பொழிவுக்காக, பம்பாயின் உயர்மட்ட பெண்கள் பலர் அங்குக் கூடியிருந்தனர். ஆளுநரின் மனைவி உட்பட, உயர்மட்ட ஆங்கிலேயப் பெண்கள் பலரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்… ஆளுநரின் மனைவி நல்ல உயரமும், அழகான உருவமைவும் கொண்டவர். அவரின் உதவியாளராக ஓர் ஆடவர் இருந்தார். வளத்தியான, வாட்டசாட்டமான மனிதர். அழகிய முகம். அத்தனைப் பெண்களுக்கு மத்தியில் தனி ஆணாக நிற்பதால், நிச்சயம் அவர் சங்கோஜப்பட்டிருக்க வேண்டும். பின்னர் திறந்தவெளி பூங்காவில் இரவு விருந்து. எல்லாம் ரம்மியமாக, அழகுணர்ச்சியுடன் நடைப்பெற்றன.
யூனிடி கிளப் ஹாலில், அனைத்துச் சங்கக் கூட்டம் நடைபெற்றது. பொருளாதரம், அந்தஸ்து என அனைத்துமட்டத்திலும் பல்வகைப்பட்ட பெண்கள், குறிப்பாக தொழில்முறை பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டனர். வழக்கம் போலான பேச்சுக்கள் தொடர்ந்தன…
கருப்பு வெள்ளை ஆடையில், சதைப்பிடிப்பு இல்லாத, சற்றே வளத்தியான, நோஞ்சான் போன்றொரு பெண்மணி என்னருகில் வந்து அமர்ந்தார். அவர் கையில் சித்தார் கருவி இருந்தது. அதை மீட்டிக் கொண்டே, தலையை ஒருபக்கமாகச் சாய்த்தார். அவர் காதுகள் ஓசையைப் பின்தொடரும் ஆவலில் வளைந்து நெளிந்து சென்றன. நீண்ட விரல்கள் சித்தாரின் நரம்புகளுக்கு இடையே சிலந்தி வலைப் பின்னுவது போல் வேகமாக இயங்கின. கருப்பு வெள்ளை ஆடையும், அதன் மேல் சாம்பல் நிற பூவேலைப்பாடுகளும் அவரை ரசிக்க வைத்தன. கன்னங்கள் ஒடுங்கிப்போய், அதில் ரோமங்கள் முளைத்திருந்தன. தாடைகள் கூர்மையாக நீண்டிருந்தன. கன்னங்களுக்கும் தாடைக்கும் இடையிலான வரிகளைப் பார்த்தால், எரிமலைப் பிழம்புகள் பாறைப் பிளவுகளுக்குக்கிடையே எட்டிப் பார்ப்பது நினைவிற்கு வரும். இந்த முகமூடி அவரின் உள்ளார்ந்த குணத்திற்கு மிகவும் பொருந்துவதாய் உணர்ந்தேன். அவரின் ஆழ்மன உணர்ச்சிகளைப் பெரிதும் இவை பிரதிபலிக்கின்றன.
வந்தே மாதரம் எனத் தொடங்கும் இந்தியக் கீதத்தை அவர் பாடத் தொடங்கினார்.
ஒரு மெல்லிசைக் குறிப்பு கேட்டது. சித்தாரின் நரம்பு அதிர்வது போல் ‘ங்ங்ங்ங்க்க், ங்ங்ங்ங்க்க் . . .’ என்ற சத்தம் அவரின் நீண்ட தொண்டையில் இருந்து ஒலித்தது. அதைத் தொடர்ந்து பலத்த மௌனம். ஒவ்வொரு சிறு குறிப்பும் கேட்பவர்களின் இதயத்தில் நுழைந்து, இம்சித்தது . . .
‘வந்தே மாதரம் . . . வந்தே மாதரம் . . .’
தலை கால் புரியாமல், உங்களை ஒரு பாடல் பாடாய்ப்படுத்துகிறது என்றால் அதன் பொருள் தெரிந்துகொள்ள வேண்டி என்ன அவசியம் இருக்கிறது? பிரெஞ்சு நாட்டின் ‘மெர்செய்லிஸ்’ கீதத்தில் இத்தனைப் பிரமாதமான வார்த்தைகள் உண்டா? இல்லை வார்த்தைகளில்தான் பெரிய விந்தை இருக்கிறதா?
வந்தே மாதரம் பாடலை இந்தியர்கள் எத்தனை உயர்வாக மதிக்கின்றனர் என அவரின் குரலில் உணர்ந்துகொண்டேன். பெண்டி என்ற சொல்லை உச்சரிக்கும்போது, ‘டி’ என்ற விகுதியை பல்லைக் கடித்துக் கொண்டு அவர் இழுத்துப் பாடுவதைப் பார்த்தால், மார்பகத்தில் இருந்து இதயத்தைக் கிழித்து எடுத்து உச்சபட்ச கோபத்தில் கடித்துக் கிழிப்பது போல் இருக்கும். அபத்தமாக இருந்தாலும் ‘அனக்கட்டோமேனா’ என்ற கிரேக்கச் சொல்லை இது கேட்பவர்களுக்கு நினைவூட்டுகிறது. அப்படியென்றால் ‘தலைக்கீழ்த்தனம்’ என்று பொருள். கிரேக்கப் பெருவழக்கில், அந்நியமான ஓர் உணர்வில் தன்னை இழந்துபோதலை இது குறிக்கும். கடல் பிராயணம் ஏற்படும் பயணப்பிணிக்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
அந்தக் குரல், கேட்பவர்களின் உள்ளத்தில் தலைகீழ் மாற்றத்தை உண்டாக்கியது. பயணப்பிணி போல் அடக்க முடியாத உணர்ச்சிப் பிரளயங்களை உருவெடுக்க வைத்தது. இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று யோசித்து முடிப்பதற்குள், என் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டு வந்தன. பொதுவெளியில் அழுவது எனக்கு ஒன்றும் சங்கடமாக இல்லை என்றாலும், என்னால் கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் போனது.
இதுவரை எதுவும் வழங்காத இந்தியா என்ற உணர்வை அவர் குரலில் மட்டுமே கண்டுகொண்டேன். ஒட்டுமொத்த நாடும் அமைதியான புரட்சியை விரும்புவது போல், மகிழ்ச்சிகரமாய் ஒரு பயணத்திற்குச் சென்று, பெரியவர்களும் சிறியவர்களும் காரணமின்றி அழுது, கைகளைக் கோர்த்து, ‘தாய்நாடு . . . ’ என்று ஆனந்தமாகத் தெருக்களில் பாடித் திரிவதை உணர்த்தியது.
‘சில பெண்கள் உங்களை மற்றொரு அறையில் சந்திப்பதற்காகக் காத்திருக்கின்றனர்’ என்று சங்கத் தலைவர் என்னிடம் வந்து சொன்னார். நடைபாதை வழியாக, விசாலமான பின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
கைத்தறி நெசவில் நெய்யப்பட்ட ஆரஞ்சு நிற பருத்தி ஆடைகளை உடுத்திக் கொண்டு 35 பெண்கள் என் வரவுக்காக அங்கு காத்திருந்தனர். அதுவொரு புரட்சிகர நிறம் என்று நான் நினைத்தேன். இஸ்லாமியப் படையெடுப்புக்கு எதிராக, ராஜபுத்திரர்கள் போராடுகையில் இந்த நிறத்தைத்தான் பயன்படுத்தினார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக அதனைப் பயன்படுத்துவது நிச்சயம் அருகிவிட்டது. ஏனென்றால் அந்தக் கூட்டத்திலேயே இரண்டு இஸ்லாமியப் பெண்கள் இருந்தனர்.
இந்தியச் சுதந்திரத்திற்காக போராடி, தியாகம் செய்ய யத்தனிப்பவர்களின் குறியீடாக ஆரஞ்சு நிறம் உருவெடுத்திருந்தது. பிரம்மச்சரியம், ஏழைமை, சேவை என்ற உறுதிப்பாடுகளை கைக்கொண்டு, இந்திய விடுதலைப் பணிக்காக ஒருவித சமூக சேவையில் ஈடுபட்டிருந்தனர். எல்லோருமே ‘நான்’, ‘நீ’ என்ற எல்லையைக் கடந்தவர்கள்.
அவர்கள் தரையில் உட்கார்ந்து, உரையாளருக்கென மெத்தை விரித்திருந்தனர். ஆனால் உரையாளரும் தரையில் அமர்ந்து, அவர்களோடு அமைதியாக இருந்தார். அந்த முகங்களைப் பார்க்கையில் பழைய ஞாபகங்கள் ஊடுருவின. தேசம்மீது கொண்ட அன்புக்காக தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணிந்தவர்கள்; அதற்காக மலைமீது விரட்டியடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டவர்கள் . . . என்று என் நினைவிற்கு வந்தனர். சிலர் என் கைகளைக் குலுக்கி விடைபெற்றனர், இன்னும் சிலர் ஆரத்தழுவி ஒன்றும் பேசாமல் மௌனமாக விடைபெற்றனர்.
0
பம்பாயின் புகழ்பெற்ற பாடகி மூனி பேகம், தியாப்ஜி பேகம் வீட்டில் பாடினர். அவர் நூர்ஜஹானோடு ஒப்புநோக்கத்தக்க கலைஞர். அவர் பாடலைக் கேட்பது மிக அரிது. வெகு சிலருக்காக மட்டுமே பாட ஒப்புக்கொள்வார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
அவர் மெத்தையில் அமர்ந்துகொள்ள, நாங்கள் எல்லோரும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டோம். அவருக்கு அருகிலும் தாடி வைத்து டர்பன் அணிந்த இரண்டு இசைக்கலைஞர்கள் இருந்தனர். நூர்ஜஹான் போல் இவரும் அவர்களை கையசைவில் கட்டுக்குள் வைத்தார்.
ஆனால் நூர்ஜஹானைவிட எல்லாவிதத்திலும் வேறுமாதிரி இருந்தார். கண்டிப்பான வெளிர் நிற உருவம், அப்பாவித்தனமான முகம், குர்ஆன் வசனங்களைச் சத்தமாக வாசிப்பவர் போல் கடுமையான தோற்றம். நன்கு கலாச்சாரமடைந்த, தீவிரமான, சிந்தனைவளம் மிக்க பெண். இஸ்லாமியப் பழம்பாட்டுக்களை அவர் பாடத் தொடங்கியதும், அவரின் கலைப்புலமை உச்சபட்ச அடையாளத்தை எட்டியது. அதில் துளியும் உலகியல் வேட்கை இல்லை. ஆத்ம பலத்துடன் உள்ளார்ந்த அமைதியை அடைந்தவர் போல் காட்சியளித்தார். அவரின் வெளிப்பாடுகள் சாந்தமாகவும் அறிவுஜீவித்தனமாகவும் இருந்தன. மகாத்மா காந்தியின் வழிபாடுகளில் துளசிதாசரின் பாடல்களைப் பாடும் பண்டிதருக்குச் சமீபத்தில் அவரை மனத்திலிறுத்திப் பார்த்தேன். இசைக் கச்சேரிக்குப் பிறகு எங்களுடன் ஒரு குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
0
இதற்குமுன் என்னை உபசரித்த டாக்டர் அமீத் மற்றும் அவர் மனைவி, அன்று மாலை மற்றொரு கலை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்தி சினிமா உலகின் புகழ்பெற்ற நடிகை ஒருவரை நடனமாட அழைத்து வந்திருந்தனர்.
அந்தப் பெண்மணியைச் சுற்றி சமூகத்தின் உயர் அடுக்கு நபர்களும், அறிவுசார் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் சூழ்ந்திருந்தார்கள். அந்நடிகையின் அமெரிக்க மேனஜர்களும் அதில் அடக்கம். கடந்த சில மாதங்களாக நான் இந்தியாவில் பார்த்தவை அனைத்தும் ஏதோ ஒரு திரைப்படத்தின் மாயாஜால உருவாக்கமா என்று எண்ணும் அளவுக்கு, அவ்விந்தியக் கூட்டத்தை ஹாலிவுட் போல் அவர்கள் உணரவைத்தனர்.
ஆனால் அந்த இளம் நடிகை நிச்சயமாக கனவாக இருக்கமுடியாது. மேற்கத்திய நடிகர்களைப் போல் இவரை அணுகுவது மிகவும் சிரமம். திரைப்பட நிறுவனங்கள் விரும்புவதுபோல் இவர் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்கு, மேனேஜர்கள் பெரும்பாடுபடுகிறார்கள். அவர் சற்றே கொழுத்த உருவம் என்றாலும் நன்கு உயரமானவர். எனவே பருமன் ஒரு பொருட்டல்ல.
தன் பாதாம் கொட்டை வடிவக் கண்ணால் என்னைக் கவனமாக உற்றுப்பார்த்துக் கொண்டே, அருகில் அமர்ந்தார். உடனே தன் கண்களை இரண்டு மெலிதானக் கோடுகள் போல் சுருக்கினார். அந்தக் கீற்றில் அவரின் கண்கள் ஒளிர்ந்தன. ஜோன் கிராஃபோர்ட் போல் நளினமாக, புருவங்கனை நன்கு நறுக்கியிருந்தார். அவர் முகம் பார்ப்பதற்கு களையாக, நீள் வட்ட வடிவில் அழகுத் ததும்பி மிளிர்ந்தது. சற்று மென்மையாக, கவர்ச்சியூட்டும் விதத்தில் நடித்தார். அவரின் பொல்லாத குணத்தை நீங்கள் கணிக்கவே முடியாது என்பது போல் தோன்றும்.
இளஞ்சிவப்பு நிறத் துணியில் தங்கநிற பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையை அவர் உடுத்தியிருந்தார். அதனொரு பகுதி, நேர்த்தியான அவர் அடர்ந்த தலையை மறைத்து இருந்தது. அங்குமிங்கும் அவர் நகர்ந்ததால், சென்ற இடமெல்லாம் பளபளத்தது.
அவர் அமைதியின்றித் திரிவது போல் தெரியும். ஆனால் அதுவொரு திட்டமிட்ட படபடப்பு. அவர் நடை, இடுப்பசைவு, தோள்களை உயர்த்துதல், கால்களைத் தளர்த்தி ஓய்வின்றி நகர்த்தல் என்று எல்லாமே திட்டமிட்டபடி நடந்தன.
அறையின் மற்றொரு மூலையில் இசைக்கலைஞர்கள் இருந்தனர். அந்நடிகை எழுந்து, அவர்களுக்குப் பின்னால் இருக்கும் திரையை நோக்கிச் சென்றார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, ஓர் இந்து நாட்டிய மங்கை போல் உடை தரித்து, கணுக்காலில் சலங்கை அணிந்து வந்தார்.
அறை விரிப்புகள் அப்புறப்படுத்திய பிறகு, நடனமாடத் தொடங்கினார். அவர் தன் காலில் அணிந்திருந்த சலங்கை ஒலியின் இனிமையான நாதத்திற்கு ஏற்ப நடனமாடினார். இந்த நடனத்திற்கு சமய முக்கியத்துவம் இருப்பதைச் சுற்றியிருந்தவர்கள் சொன்னார்கள். கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் சமயம் சார்ந்த முக்கியத்துவங்கள் உண்டு. அவை கவரச்சியை வெளிப்படுத்தினாலும் சரி. அவரின் நடனம், ஒரு குறிப்பிட்ட உயரம் வரை அதைக் கடத்திச் சென்றது.
இந்து புராணத்தில் இருந்து ஒரு காட்சியை அவர் அரங்கேற்றிக் கொண்டிருந்தார். பிரதானக் கடவுள் கிருஷ்ணன், ஒரு பால்காரியைப் பின்தொடரும் காட்சி அது. சலங்கையில் இருந்து எழும்பும் ஓசை மேலும் மேலும் கீதமாக ஒலித்தது. என்னைப் பொறுத்தவரை, பகவான் கிருஷ்ணர் தன் மனைவிக்கு துரோகம் செய்வதாகவும், சியுசுவைப் போல் விடாப்பிடியான காதல் முயற்சிகளில் இறங்கியவர் போன்றும் தோன்றினார்.
தனது கிரேக்க நண்பர் சியுசுபோல் உலகியல் இன்பங்களுக்குப் பெரிதும் அவர் ஆட்பட்டிருந்தார். காதல் விஷயத்தில், தேவலோக இறைவிகளைக் காட்டிலும் சராசரி உலகத்துப் பெண்களையே மனமுவந்து விரும்பினார். நடனம் தொடர்ந்தது. பிரதான கடவுள் தனது பின்தொடரும் வேட்கையை மும்முரமாகச் செய்கிறார். முன்செல்லும் இளம் பெண் எளிதில் வயப்படாமல், தனது அருமையை காட்டுகிறாள். ஆனால் அதே சமயம் கிருஷ்ணரிடம் மயக்குற்ற அவள், அவரின் ஸ்பரிச தீண்டலுக்கும், முத்தத்திற்கும் ஏங்குவது போல் காத்திருக்கிறாள்.
இவை அனைத்தும் பழங்கால கிரேக்க புராணத்தில் வரும் சியுசுவின் காதல் படலங்களைப் போன்று இருந்தன. நான் இதை எந்தவொரு இந்து நண்பரிடம் சொன்னாலும், ‘உனக்கு ஒன்றும் விளங்காது. இது எல்லாம் ஒரு குறியீடு…’ என்றுதான் சொல்வார்கள்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.