தனது இளஞ்சிவப்பு நிற ஆடையை மாற்றிக்கொண்டு, வியர்வை வழியும் முகத்தைத் துணியால் துடைத்தபடியே என்னருகில் வந்து அமர்ந்தார். மேலாளர்கள் ஆசைபொங்க அந்நடிகையைப் பார்த்தனர். அவர் அயர்ச்சி அடையக்கூடாது என்ற ஏக்கம் அதில் தெரிந்தது.
‘நீங்கள் தென்னாட்டிற்கு வந்திருக்கிறீர்களா?’ என்று என்னிடம் கேட்டார்.
‘ஐயோ, இல்லையே’ என்றேன்.
‘குறைந்தபட்சம் அஜந்தா, எல்லோரா குகைகளையாவது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்’ எனச் சொன்னார். நான் அச்சமயம் திட்டமிட்ட அட்டவணைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். அதற்கான காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாது. நான் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற கலை நேர்த்தி இல்லாதவள் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். குகைகளுக்குச் செல்வதைக் காட்டிலும், கருத்தரங்கம் சொற்பொழிவு எனச் சுற்றுவதில் என்ன விஷேசம் இருக்கிறது என்று அவர் யோசித்திருக்கலாம்.
‘இவர் தென்னாட்டைச் சார்ந்தவர்’ எனப் பின்னிருந்து சொன்னார்கள்.
‘ஆமாம். நான் தெற்கிலிருந்து வருகிறேன்’ என்று அந்நடிகை மீளவொருமுறை சொன்னார். அதன்பிறகு எங்களில் ஒருவராய் எளிமையாக ஒன்றிப்போனார். அவரின் பகட்டு நடையும், விஷேச சுபாவங்களும், நட்சத்திர பாவனையும் உடனடியாக மறைந்தன. ‘நடனமும் நளினமும் தென்னாட்டிற்கே உரியவை போல!’
‘வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் இடையே நடனக்கலையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?’ எனக் கேட்டேன்.
‘நான் அந்த கிருஷ்ணர் காட்சியில் எப்படி ஆடினேன் என்று பார்த்தீர்களா?’
‘ஆம். நெளிவு சுளிவுகளோடு வளைந்து கொடுத்து ஆடினீர்கள் . . . ’
தன் நற்காலியை என்னருகில் இழுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார். இம்முறை அவருக்கு என்மேல் நல்ல அபிப்பிராயம் தோன்றியிருக்க வேண்டும். ‘பரவாயில்லை, இந்தப் பழம் ஜந்து கவனம் செலுத்திப் பார்த்திருக்கிறது’ என்று கூட நினைத்திருக்கலாம்.
‘அதேதான். தென்னாட்டு நடனங்களில் கோணம், கோடு, பெரியது, சிறியது என்று எல்லாம் உண்டு . . . அவற்றின் பிரத்தியேக தனித்துவமும் அழகும் அதில்தான் உள்ளது. வடக்கத்திய பாணியில் நெளிவு சுளிவு மட்டுமே உண்டு . . .’ அவ்வகை நடனங்களில் பற்று இல்லாதவர் போல் அவர் பேசினார். தன் வாழ்க்கை முழுக்க ஓவியங்களிலும், கோயில்களிலும், அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளிலும் பார்த்து ரசித்த தெற்கத்திய பாணி உருவங்களைப் பற்றி பேசினார். மணிக்கணக்கான தன் ஆராயச்சியைப் பற்றி விவரித்தார்.
இளஞ்சிவப்பு ஆடைக்குப் பின்னால், ஒரு தீவிர கலைஞர் உள்ளிருப்பதை உணர்ந்தேன். வெறும் பணம், புகழ்ச்சிக்காக அவர் உழைத்துக் கொட்டவில்லை. உண்மைக் கலைஞனுக்கே உண்டான தெய்வீக அலை அவரிடம் தென்பட்டது. அவர்தன் நறுக்கிய புருவங்களும் நவீன அசைவுகளும் இப்போது என் பார்வையில் இருந்து வெகுதூரம் போய்விட்டன. நாம் எல்லோரும் ஒப்பேற்றிக் கொண்டு தடுமாற்றம் அடையும் வேலையை, தன் அசைவுகளின் மூலம் சாமர்த்தியமாகச் செய்துகாட்ட முயல்கிறார்.
‘நான் என்ன சொன்னேன் என்று, நாட்டியப்பூர்வமாக உங்களுக்கு ஆடி காண்பிக்கப்படுகிறேன் . . .’ என்று சொல்லியவாறே திரைக்குப் பின் மறைந்தார்.
இம்முறை தளர்வான எளிய ஆடை உடுத்திக்கொண்டு வந்தார். கால்களில் சலங்கை இருந்தது. ஒருசில கணத்தில் கோணங்கள் மாறி காட்சிக் கொடுத்தார். முக்கோணம், செங்கோணம் என்று யூக்ளிடு உருவாக்கிய ஒரு கோணத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை . . . ஒவ்வொரு தோரணையும் வடிவவியல் வரைபடம் போன்று இருந்தது.
அந்நடிகையின் நீள்வட்ட முகம் கூர்மை வாய்ந்த கோண வடிவிலும், தாடைகள் கீழிறங்கி, முகம் அகலமாக, கழுத்துப் பட்டை நேராகவோ சாய்வாகவோ அமைந்து, கை – கால் முட்டுப் பகுதி முன்னே சென்று, கால்கள் வெளியே பார்த்தபடி இருந்தன . . . தலையிலிருந்து கால்வரை ஒவ்வோர் அங்குலமாகப் பார்த்தால், வெவ்வேறு கோணங்களை அடையாளம் காணமுடியும். ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டாலும், எல்லாம் வடிவவியல் வரைபடம்தான். அவர் கண்கள் குறுகி, கண் மையினால் இமைப் பீலிகள் பிரகாசிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. தாடைகளை கெட்டியாக வைத்துக்கொண்டு இறுக்கமாய் ஒரு முறுவல் பூத்தார்.
0
பிரசெல்ஸில் அமைந்துள்ள சமூகச் சேவை பள்ளி ஒன்றில் இயக்குநராகப் பணியாற்றும் என் தோழி மே முல்லேவிற்கு நானொரு சத்தியம் செய்து கொடுத்திருந்தேன். இந்தியாவில் உள்ள சமூகச் சேவை மையம் ஒன்றுக்குச் சென்று அதன் இயங்குதல் பற்றி சில புத்தகக் குறிப்புகள் அனுப்புவேன் என்பதே அவ்வாக்கு. எனவே பம்பாயில் உள்ள இந்து சமூகச் சேவை மையத்திற்கு சென்றேன். இந்தியாவின் புகழ்பெற்ற, மிக முக்கிய நிறுவனம் அது.
சேரிவாசிகள் மற்றும் தொழிலாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவைத்த மே முல்லேவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றாலும் சில முக்கிய அம்சங்களைத் தெரிந்துகொண்டேன். அத்தொழிலாளர்கள் பற்றி என்னால் சிறு குறிப்பு மட்டுமே கொடுக்க முடிந்தாலும், இந்தியா பற்றிய உண்மைச் சித்திரத்தை உணரும்படி நிறைய சொன்னார்கள்.
நகரின் மையத்தில் இந்நிறுவனம் அமைந்திருந்தது. முதியவர் ஒருவர் கனிவுடன் வரவேற்று, நிறுவனம் முழுக்கச் சுற்றிக் காண்பித்தார். திறமை வாய்ந்த இந்து சமய பெண் மருத்துவர், மருத்துவச் சேவைப் பிரிவில் ஏழைப் பெண்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். பரம ஏழை போன்று குழப்பத்தோடு பலர் நின்றுகொண்டிருந்தனர்.
அங்கிருந்த கருத்தரங்க அறை, வாசிப்பு அறை, பயிலரங்கங்கள், இன்னும் அதுபோன்ற பல அறைகள் டாய்ன்பி அரங்கை நினைவூட்டுகிறது. தம் இஷ்டம்போலான வகுப்புகளைக் கவனித்து, அதன் செயல்முறை விளக்கங்களைப் பார்த்து அறிந்து தங்கள் மாலை நேரத்தை மதிப்புமிக்கதாய் செலவு செய்ய தொழிலாளர்களுக்கு வாய்ப்பு இருந்தது.
ஒட்டுமொத்த ஏற்பாடும் டாய்ன்பி அரங்கம் போன்றதென்றாலும், அந்நிறுவனம் வெளிநாட்டுச் சரக்கு அல்ல. தொழிலாள வகுப்பினரின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து, அதற்கேற்ப உடனடியாய் உருவாக்கப் பட்ட மையம். இதன் வரலாற்று அடிநாதத்தைத் தோண்டிப் பார்த்தால், இதற்கொரு கடந்தகாலம் இருந்தது தெரியவருகிறது. இதன் பகுத்தறிவு வாய்ந்த, சமூகச் சீர்த்திருத்த முயற்சிகளுக்கு கல்கத்தா பிரம்ம சமாஜத்தின் பெரும் பங்கு முன்னோடியாக இருந்திருக்கிறது.
சராசரி பார்வையாளருக்கு இவையாவும் தொழில்மயமாக்கத்தின் விளைவால் உருவான சிக்கல் எனத் தோன்றும். இன்னும் சிலர் முதலாளித்துவ சுரண்டல் என்றும், உள்ளூர் அல்லது வெளிநாட்டு நிறுவனத் தலையீட்டால் உருவெடுத்த தொல்லை என்றும் சொல்வர். இதற்குமுன் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் இருந்திருக்கின்றன. குறைந்த ஊதியமும் மணிக்கணக்கான வேலையுமே பெரும் பூதமாகத் தெரிகின்றன. அதன் விளைவாகவே மோசமான குடியிருப்பும், நெரிசல் மிகுந்த ஊர்களும், சுகாதார வசதியற்ற வசிப்பிடங்களும், பாதுகாப்பற்ற வேலைகளும் இவர்கள் தலையில் விடிகின்றன.
எங்கள் எல்லோருக்கும் நிறுவனத்தைச் சுற்றிக் காண்பித்த முதியவர், மிகவும் கண்ணியமான மனிதர். தொழிலாள வர்க்கம் மீது உண்மையாகவே துயரம் கலந்த அனுதாபம் கொண்டவர். வழக்கம்போல் விவசாயிகளோடு ஒப்பிட்டு அவர்களின் நிலையை எடுத்துக் கூறினார். அவரைப் பொறுத்தவரை விவசாயிகள் பலமடங்கு உயர்வாக உள்ளனர். தொழிலாளர்களுக்கு மத்தியில், அவர்தம் துன்பியல் வாழ்வுக்கு இடையில் வாழ்ந்தவர் வேறென்ன சொல்வார் என்று எதிர்பார்க்க முடியும். நான் தலையசைத்து ஆமோதிப்பது போல் பேசாமல் நின்றேன்.
விவசாயக் கூலிகள் குறைந்தபட்சம் வெட்டவெளியில் நின்று இயற்கைக் காற்றையாவது சுவாசிக்கின்றனர் என்ற வாதம் படு அபத்தமாய் தோன்றியது. இயந்திரமயமாக்கப்பட்ட நகரின் மருட்சியிலிருந்து விவசாயிகள் நல்லவேளையாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்ற வாதமும் என்னைப் பெரிதாய் ஈர்க்கவில்லை. இந்திய விவசாயிகள் சிறந்த நிலையில் இருப்பதாய் சொல்வது மிகவும் தவறு.
ஏனென்றால், விவசாயி பசித்தவனாய் இருக்கிறான். நகர வேலை எத்தனைக் கொடியதாய், குறைந்த ஊதியத்துக்கு உட்பட்டதாய் இருப்பினும் இங்கு ரொட்டித் துண்டு கிடைக்கிறது. மழை மேகங்களின் கருணை, தண்டல்காரரின் இரக்கம், வரி வசூல் செய்பவரின் கடைக்கண் பார்வையால் மட்டுமே ஒரு விவசாயி வாழ்கிறான்.
நகரத் தொழிலாளிக்கு ஆண்டு முழுவதும் வேலை உண்டு. ஆனால் வருடத்தின் மூன்றிலொரு பங்கு மட்டுமே விவசாய வேலை நடைபெறும். மீத நாட்களில் அவன் ஏதுமின்றி தடுமாறுகிறான். ஓய்வு நாட்கள் மிகுதியானால், பணம் படைத்த செல்வந்தரையே அது ஆட்டிப் படைக்கும். விவசாயிகள் எம்மாத்திரம்! பசி, பட்டினி, நோய்.
நன்கு உணவருந்தும் விவசாயிகூட எட்டு மாத காலம் வேலையில்லாமல் போனால் மிருகமாகிவிடுவான். அரைகுறை உணவால் உடல் வலுவிழந்துவிடும். மனநலன் மோசமாகிவிடும். கிராமப்புற மக்களிடையே அதிகளவில் அறியாமை நிலவுவதற்கான காரணத்தை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நகரவாழ் தொழிலாளி பல நேரங்களில் கோபமடைந்தாலும், அறிவீனமாக அவர் திகழ்வதில்லை. நகரிடத்தில் மனத்தை சாந்தப்படுத்தும் பலவிடங்களுக்குச் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்.
கிராமப்புறத்தில், அவர்களோடு நெருக்கமாக வாழ்ந்தவள் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்: விவசாயிகளின் துன்பம் நிறைந்த வாழ்க்கைக்கு வெட்டவெளி வானமும், இயற்கைக் காற்றும் என்றைக்குமே பிரதிபலனாய் இருக்க முடியாது. நோய்வாய்ப்படும் தருவாயிலும் குழந்தைப் பிறப்புச் சமயத்திலும் மலேரியா போன்ற பெருந்தொற்றுக் காலத்திலும் நகரவாசிகளுக்கு சுகாதார உதவி கிடைக்கிறது. கிராமத்து வாசிகளுக்கு ஆதரவாய் ஒற்றைக்கரம் கூட கிடையாது.
‘இந்திய விவசாயிகளின் நிலை, லண்டன் சேரிகளைக் காட்டிலும் மேலான நிலையில் உள்ளது’ என்று ஒரு பெண்மணி சொன்னார். இல்லை மேடம். அது அப்படியல்ல. லக்னோ கிராமங்களுக்குச் சென்று வாருங்கள். இரண்டும் ஒன்றுதான் என உங்களுக்குத் தோன்றும். மேலும், லண்டன் போன்ற நகரங்களில் வெறும் 10% மட்டுமே சேரிவாழ் மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவில் 90% மக்கள் சேரிகளிலும் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர். இது ஓரளவிற்கு கீழைத்தேயம் முழுவதுமான சிக்கல் என்று சொல்லலாம்.
நகரங்கள் இயந்திரமயமாக்கிக் கொண்டே இருக்க, பெரும்பாலான மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களின் நிலையைக் கடுகளவும் உயர்த்தாமலிருக்கும் கீழைத்தேய நாடுகளின் செயல்திட்டத்தில் இனி மாற்றம் உண்டாகவில்லை என்றால், கீழை நாடுகளின் எதிர்காலம் என்னவாய் இருக்கும் என்று கணக்கிட முடியாது. தங்களுக்குள் ஒரு தரம் தாழ்ந்த காலனித்துவப் பகுதியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த கலாசாரத்தையும் வேரோடு பிடுங்கி தகர்க்கும்படியான ஒரு புரட்சி ஏற்படும். காரசார விவாதங்கள் பேசி புரட்சி உண்டாக்க எண்ணும் சங்கங்களும், புரட்சிகர துண்டுப்பிரசுரம் விநியோகித்து திட்டமிடும் தீவிரவாதிகளும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு இதன் வீரியம் பன்மடங்கு பெரிதாய் வெடிக்கும்.
0
என் பம்பாய் பழக்கவழக்கம் பற்றி, மூன்று தெள்ளத்தெளிவான நினைவுகள் தோன்றுகின்றன. எங்கெல்லாம் ஆண்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பெண்களும் இருக்கிறார்கள். அதைக் காட்டிலும் சுவாரசியமான செய்தி என்னவென்றால், எல்லாச் சமூகத்தினரும் அதில் அங்கம் வகிக்கின்றனர். சாதி, மத வேற்றுமைகள் அச்சமயத்தில் வேண்டாதவை ஆகிவிடுகின்றன. இந்நிலை எப்போதும் நீடிக்காது என்றாலும், எனக்கு இதில் மனநிறைவு ஏற்படுவது உண்டு. துன்ப நினைவுகள் நெடுநாளைக்கு நிலைக்காது அல்லவா?
இந்த அடிப்படையில் நான் பார்த்த முதல் கூட்டம் பெருமளவிலான பூந்தோட்ட விருந்து. என் மேசையில் அரிஜன மருத்துவர் ஒருவர் தேநீர் அருந்திக் கொண்டே, மற்றவர்களிடையே சகஜமாகப் பேசி உணவருந்தினார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அரிஜன மக்களே எதிர்பார்க்காத மாற்றம் இது.
அதற்கடுத்து ஒரு பொது அரங்கில், மேயர் தலைமையிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கடல் போன்ற கூட்டம். பல்வேறு இன, வகுப்பு, சாதிப் பிரிவுகளைச் சார்ந்த சகலரும் அவர்ணத்தாரும் அக்கூட்டத்தில் இருந்தனர். உரையாடல் முக்கியமல்ல. ஆனால் தனித்துவப் புகழ் கொண்ட பார்ஸி திரு. நரிமன் சொன்னதுபோல், அனைத்து வகுப்பினரும் ஒரு பொது அரங்கில் அமர்த்திருப்பதைக் கண்டு உள்ளார்ந்த புளகாங்கிதம் அடைந்தேன். என்னைப் பொறுத்தவரை, சகோதரப் பிணைப்பில் இவர்கள் சிநேகம் பகிர்ந்துகொண்டு, தன் ஒவ்வொரு சுமையும் பரிமாறிக் கொள்வதென்பது நிகழவே வாய்ப்பில்லாத மாற்றம் என்று நினைத்தேன்.
கடைசி நினைவு, அதே பொது அரங்கில் நிகழ்ந்த சமபந்தி போஜனம். பல்வேறு நிற, இன, வகுப்பு, மதம் சார்ந்த ஆண்களும் பெண்களுமாய் 400 பேர் கூடி உணவருந்தினோம். இலையில் பரிமாறப்பட்ட இந்து உணவை அனைவரும் உண்டோம். எங்களுக்கு மேலாக பால்வெள்ளை நிறத்தில் இந்திய வானம், நட்சத்திர ஒளியில் மிக ரம்மியமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தாவிப்பிடித்தால் கைக்குள் வசப்படும் அளவு நட்சத்திரங்கள் தாழ்வாகத் தெரிந்தன . . . இதுவெறும் புறவய உணர்ச்சி அல்ல . . . சகோதரத்துவ அமைதி நிலவிய இந்த அறையின் விளிம்பிலிருந்து நட்சத்திரங்களைப் பறிப்பதொன்றும் அத்தனைச் சிரமமாய் இராது. மாடித் தோட்டத்திலிருந்து பூப்பறிப்பது போல் லேசுபட்ட காரியம் எனத் தோன்றியது.
இப்படித்தான் என் இந்திய வருகை நிறைவுப் பெற்றது. இவ்வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த டாக்டர் அன்சாரிக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடக்கக் கல்வி மாணவர் ஒருவர் முதுநிலைப் பட்ட பாடங்களைப் புரட்டியதுபோல் நான் என் நாட்களை செலவு செய்திருக்கிறேன். ‘தொடக்கக் காலத்திலிருந்து’, ‘இறுதி காலம் வரை’ கண்டு, கேட்டு, சுவைத்து இதனோடு வாழ்ந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்த்த பிறகு, 1935ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலையை உடன் அமர் சாட்சியாக இருந்து ஆவணப்படுத்த வேண்டுமென்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.