Skip to content
Home » நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச் சில இயந்திரங்கள் வைத்திருந்தார்கள். இயந்திரமயப்பட்ட வாழ்வியல் காந்திக்கு உவப்பளிக்கக் கூடியது அல்ல என்றாலும், தொழிலாளர்களின் படைப்பாக்க உள்ளுணர்வைக் காயப்படுத்தாமல் அவர்களின் உடல் உழைப்பை இலகுவாக்கும் சின்னச் சின்ன இயந்திரங்களை அவர் வரவேற்றார்.

அதற்கு அடுத்ததாக சகோதரி கஸ்தூரிபாயின் அறை. அவர் அங்குதான் இருப்பார் எனச் சொல்லமுடியாது. வராண்டாவில் கூட இருக்கலாம். மாலை வேளை உணவுக்கு அரிசி அல்லது கோதுமையைச் சுத்தம் செய்யும் பொருட்டு மும்முரமாக இருக்கக்கூடும். எதிர்புறம் இரண்டு அறைகள் இருந்தன. சிறிய அறையிலிருந்து தொடர்ச்சியாகத் தட்டச்சுப்பொறியின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் சகோதரர் மகாதேவ். பெரிய அறையில் பழமை வாய்ந்த கிராமப்புறக் கைவினைப்பொருட்கள் அலங்காரம் செய்து வைத்திருந்தனர். சில சந்தர்ப்பங்களில் இங்கு வரும் விருந்தினர்கள், நாகரிக மாற்றத்தால் வெட்ட வெளியிலும் கூட்டத்திற்கு நடுவிலும் உறங்குவதற்குச் சிரமப்படுவார்கள். அவர்கள் தங்குவதற்கு இந்த அறை ஒதுக்கப்பட்டது. மற்றபடி இங்குள்ள ஆண்களும் பெண்களும் ஆளுக்கொரு மூலையில் மாடியில் படுத்து உறங்குவதே வழக்கம்.

பெண்கள் சுத்தப்படுத்துவதற்கும் துணி துவைப்பதற்கும் வீடு முழுக்க தண்ணீர் வசதி இருந்தது. கழிப்பறை முதலான வேறு சில செளகரியங்களும் உண்டு. காய்கறித் தோட்டமும் பூந்தோட்டமும் எழில் சேர்ப்பதாக இருந்தன. வார்தாவின் விசேஷ தட்பவெப்பத்தில் மென் மலர்களிலிருந்து வீசும் ரம்மியமான வாசனைக்கு முடிவே கிடையாது. இவ்விடம் முன்பு ஒரு கோடீஸ்வரர் வசம் இருந்தது. போகம் பொங்க திளைக்கும் இடமாக அவர் இதைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். பளிங்குக் கற்களால் ஆன பொல்லாத தேவதைச் சிலைகள், சேட்டைப்பிடித்த ஆட்டுக்குட்டிக்கு சகோதரி மீராபென் போராடிப் பாலூட்டும் சாமர்த்தியத்தை முறுவல் பூத்துப் பார்க்கின்றன.

காந்தியோடு தொடர்புடைய மற்றும் சில நிறுவனங்கள் இங்கிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளன. முதலில் இருப்பது மகளிர் ஆசிரமம். அங்குள்ள மாணவிகளும் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் தேச சேவையில் தம்மைப் ஈடுபடுத்திக்கொண்ட கைம்பெண்களாகவும் செல்வந்த, வறிய குடும்பங்களின் வாரிசுகளாகவும் இருந்தனர். கிராம மக்களுக்குப் பயன்பெறாத விஷயம் ஒன்றும் அங்குச் சொல்லித்தருவதில்லை. அங்குள்ள அனைவரும் காந்தியின் சூழுரைக்குக் கட்டுப்பட்டவர்கள்.

அப்பழுக்கற்ற சுத்தமான அறையில் இருவர் – மூவராகச் சேர்ந்து தங்கியிருந்தனர். உட்காருவதற்கு விரிப்புகளும் உறங்குவதற்கு மெத்தைகளும் வழங்கியிருந்தார்கள். குழந்தைகள் உடுத்திக்கொள்ள போதுமான ஆடைகள் இருந்தன. அங்குள்ள எல்லாப் பொருட்களும் அவர்கள் கைவண்ணத்தில் உருவானவை. செயற்கைப் பொருட்களைக் காண்பதே அரிது. அவர்களின் கல்விமுறையும் பயிற்சிமுறையும் பயன்பாட்டு ரீதியிலான நோக்கம் கொண்டவை. இருள் கவிழ்ந்த அறையிலும் இசைப் பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். பாட்டுச் சத்தமும் இசைக்கருவிகள் சத்தமும் இடையறாது ஒலிக்கும். ஆங்கிலப் பேச்சுத்திறனுடைய கணவான்கள் காந்தியைக் காண வரும்போது இவர்களிடையே உரையாற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நேரம் வாய்க்கும்போது காந்தியும் பயன்பெறத்தக்க உரைகளை வழங்குகிறார்.

இதற்கு அடுத்தப்படியாக ஆடவர் ஆசிரமம். இங்குள்ள மாணவர்களைப் பார்க்க விரும்பினால் வகுப்பறை அல்லது தொழிற்கூடத்திற்குச் செல்லவேண்டும். இவை தவிர்த்து வேறெங்கும் அவர்களைப் பார்க்க முடியாது. பருத்தியினால் ஆகக்கூடிய சகல பொருட்களும் இவர்களுக்கு அத்துப்படி. இம்மி அளவிலான பஞ்சுத் துணுக்குக்கும் சேதாரமின்றி வேலை செய்கிறார்கள். தோல் பதனிடுதல், பாதணி செய்தல், தச்சு வேலை மேற்கொள்ளுதல் முதலான தொழில்கள் இங்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. உற்பத்திச் செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்பதோடு வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விவசாயக் குடியின் வாழ்வாதாரத்தைத் தங்களால் இயன்ற அளவு ஏற்றம் கொள்ளச் செய்ய எல்லாவிதப் பிரயத்தனங்களும் செய்கிறார்கள். இந்நிறுவனங்கள் பெரும்பாலும் அரிஜன கிராமங்களை ஒட்டி இருந்தன. சுத்தமான சிறிய குடிசைகள்; அதன் பாதுகாப்பு வளையம்போல் எளிய மரச்சட்டங்கள். ஆண்கள் மரம் அறுப்பதும், பெண்கள் குடிசைக்குள்ளிருந்து பானை புனைவதுமே வாழ்வாதாரம். வெளியாட்கள் பார்வையிட வரும்போது இக்கல்விக்கூடத்தின் சிறப்பும், தொழிற்முறைப் பயிற்சியின் மேன்மையும் குறித்து சகோதரர் மகாதேவ் எடுத்துரைப்பார். கிராமத்திலேயே வாழ்ந்து, உடல் நலிவுற்றோர்களுக்கு உதவி செய்து, சுகாதரச் சேவைகள் செய்து, சீரான உணவுகளை உட்கொண்டு, அசல் கிராம வாழ்க்கையை அம்மக்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டமின்றி களிக்கின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் நிதிமூலம் எங்கிருந்து வருகிறது? யார் செலவு? ஜம்னாலால் பஜாஜ் எனும் ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான மனிதர்தான் இதற்குப் பின்னாலிருக்கும் மாயவிசை. வசீகரமுடைய, அடர் நிற முகம். பழகுவதற்கு எளிமையான மனிதர், கலகலக்கும் கண்கள், பளீர் வெண்ணிறப் பற்கள், குதூகலுமூட்டும் வேடிக்கையான பேச்சு.

இந்தச் சொத்துகளுக்கெல்லாம் உரிமையாளரான மூப்படைந்த ஓர் இந்து லட்சாதிபதியின் சுவீகாரப் புதல்வதன்தான் ஜம்னாலால். அந்த முதியவருக்குக் குழந்தைகள் கிடையாது. எனவே ஏழை சிறுவனைத் தத்தெடுத்துக் கொண்டார். பழங்கால இந்துசமயச் சட்டப்படி பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. அதனால் வயது முதிர்ந்த பெற்றோருக்குப் பெண்கள் வீண் சுமையாகத் தெரிந்தனர். அப்படித்தான் ஜம்னாலால் பஜாஜ் எனும் ஏழைச் சிறுவனுக்கு மாட மாளிகையில் வாழும் வாய்ப்பு உருவாகியது. எனினும் இச்சொத்துகளுக்கு உரிமையாளர்போல் அன்றி, அறங்காவலர் என்ற நிலையில் அவர் செயல்பட்டார். தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக அவற்றைச் செலவுசெய்தார். பள்ளிக்கூடங்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் தொழிற்கூடங்களை நிறுவினார். இந்து முஸ்லிம்களிடையே அவருக்கு யாதொரு வேற்றுமையும் கிடையாது. ஜாமியா நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவின்போது, அதன் கொடையாளர் பட்டியலை நான் காண நேர்ந்தது. அதில் இவரின் பெயரும் முதன்மையாக இருந்தது. மதம், இனம் பாராமல், இந்தியாவின் நன்மைக்காக பாடுபடும் அனைவருக்கும் நண்பராக விளங்குகிறார்.

ஜம்னாலால் பஜாஜ்
ஜம்னாலால் பஜாஜ்

ஆசிரமங்களுக்குப் போகும் வழியில் இவர் இல்லம் அமைந்துள்ளது. எவர் ஒருவரும் முன் அனுமதியின்றி இவர் வீட்டுக்குச் சென்று மதிய உணவு சாப்பிடலாம். மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் நிகழ்வது போல, இந்தியாவின் மதிப்புமிக்க மனிதர்களுள் ஒருவருடன் எளிமையாக மதிய உணவு சாப்பிடும் மகிமையை அங்குப் பார்க்கலாம். ஒரு சராசரி கிராமத்துவாசியின் வாழ்க்கையைக் காட்டிலும், ஜம்னாலால் பஜாஜ்ஜின் வாழ்க்கை ஒன்றும் அத்தனை உயர்ந்ததன்று. பஜாஜின் மகள்களுள் ஒருவர் காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ளார். சிறிய கால்சராயும், மொரமொரப்பான பருத்திச் சட்டையும் அணிந்த மெலிதான உருவம். கால்களில் செருப்புக் கிடையாது, ஒட்ட நறுக்கப்பட்ட தலைமுடி. பார்ப்பவர்கள் ‘பையன்’ எனச் சொன்னாலும் நம்பிவிடக் கூடிய உருவமைப்பு. இருபது வயது பூர்த்தியடையாத போதும் இப்பெண்மணி காந்தியின் பதினொரு சூளுரைகளை ஏற்றுக்கொண்டார். கவரக்கூடிய கண்களும் கட்டுக்கோப்பான பண்புகளும் அவரை முதிர்ச்சியடைந்த பெண்மணி என ஒப்புக்கொள்ளத் தூண்டும்.

பிரதான சாலையின் இறக்கத்தில் அரிஜன மக்கள் நுழைவதற்கு உரிமையுடைய கோவில் ஒன்று உள்ளது. சாதியத் தடைகள் முற்றிலும் நொறுக்கப்பட்டதன் எடுத்துக்காட்டாக இதைப் பார்க்கலாம். கைவினைப் பொருட்களுக்கான டிப்போக்கள், விருந்தினர் மாளிகைகள் முதலிய பல ஏற்பாடுகள் அங்கு இருந்தன. விவசாயிகள், கவர்ச்சியான சுவரொட்டிகளைக் கையில் ஏந்திய நாடோடிக் கூத்துக் கலைஞர்கள், இழுவை வண்டிகள், ஊதா நிறப் பாவாடை அணிந்த பெண்கள், சிகப்பு அல்லது மஞ்சள் நிற ரவிக்கைகள், பலவண்ண முகத்திரைகள், செப்புக் காப்புகள், தலையில் குஜா அல்லது கூடைகளைச் சுமந்து செல்லும் பெண்களின் கொலுசொலிகள் – இவையெல்லாம் ஒரே சாலையில் பயணம் செய்தன. இப்பெண்களில் சிலர் சாலை மருங்கேயுள்ள தோட்டங்களில் வேலை செய்ய, வேறு சிலர் திரிகை வைத்து மாவு அரைத்துக் கொண்டே பாட்டுப் பாட, சக்கரம் சுழலுவும் – வண்ணமயமான ஆடைகள் அக்காட்சிக்கு அழகு சேர்க்கவும் – பின்னணியில் பாட்டொலி கேட்கவும்… இதை மட்டும் மகாத்மா காந்தி பார்த்திருந்தால் ஒருகணம் பெருமிதத்தோடு பார்த்து, ‘ஆஹா, நான் உங்களை இப்படித்தானே பார்க்க ஆசைப்பட்டேன்’ என்று அன்பொழுகச் சொல்லியிருப்பார். புதுவித – இந்துமதத்தின் வழிகாட்டல் வெளிச்சத்தைத் தனக்கொப்ப நெறிப்படுத்தியவர் என்றாலும் தன் சாதனை குறித்து காந்தி பெருமை கொள்ளலாம். கிராமப்புற அடுக்களைக்கு இவ்வெளிச்சத்தைக் கொண்டுசேர்த்ததன் முன்னோடி அவர்தான்.

மீண்டும் காந்தி ஆசிரமத்துக்குச் செல்வோம். ஒவ்வொருவரும் தனக்கான வேலைகளைக் கவனித்து வருகின்றனர். காந்தியும் நூற்பு செய்தல், விருந்தினர்களை உபசரித்து உரையாடுதல் என்று தன் அன்றாட வேலைகளில் மூழ்கத் தொடங்குகிறார். ரோல்ஸ் – ராய்ஸில் சிலர், கட்டை வண்டியில் சிலர், கால்நடையாக சிலர் என்று பலதரப்பினரும் காந்தியைப் பார்க்க வருகின்றனர். அவரைச் சந்திக்க வரும் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. தத்தம் அளவில் சுமைகளையும் துன்பங்களையும் சுமக்கின்றனர். காந்தி எல்லோரையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார். அவரின் வகுப்புவாதப் பார்வை, ஆரம்பக்கால கிறிஸ்தவர்களோடு பொருந்திப் போகிறது – பரிசேயர்களுக்கு எதிரானவரோ, மேட்டிமை எண்ணம் உடையவரோ, தாழ்வுணர்ச்சிக்கு ஆட்பட்டவரோ கிடையாது. இதனால் இந்தியா மற்றும் உலக நாடுகள் குறித்த பரந்துபட்ட அறிவு அவருக்கு வாய்த்தது. செல்வந்தர்கள் வறியவர்களுக்கு வாய்ப்பு, வசதி வழங்க வேண்டுமென்று தொடர்ச்சியாக வழியுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவை தர்மம் என்ற பெயரில் இயங்கக்கூடாது. செல்வந்தர்களை அறங்காவலர்களாக நிர்மாணிக்கும் உத்திதான் காந்தியக் கல்வியின் மிக முக்கியமான இழை. ‘படித்தவர்களும் செல்வந்தர்களும் ஏழை மக்களின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளாதவரை, சமூகத்தில் சீர்த்திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.’

காந்தியைப் போல் ஏட்டுக் கல்வியின் வரம்பையும் செல்வத்தின் தேவையின்மையையும் அறிந்த ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனினும் அவர் அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவசியமுள்ள இடங்களில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறா

மாலை ஐந்து மணிக்கு இரண்டாம் கால உணவு பரிமாறப்படுகிறது. அதுவே அந்நாளின் இறுதி போஜனம். முன்பு குறிப்பிட்ட அதே காட்சி மீண்டும். விளக்கொளி மட்டும் சற்று அதிகம். ‘சாந்தி, சாந்தி, சாந்தி’ என்று அவர்கள் அமைதி வேண்டி எழுப்பும் குரல் நான்கு சுவர்களில் பட்டு எதிரொலிக்கின்றது.

நேரம் ஏழு மணியை நெருங்கும்போது அருகிலுள்ள ஆசிரமம் வரை காந்தி நடந்து செல்வார். அங்கு நிகழும் மாலைநேரப் பிரார்த்தனைகளில் கலந்து கொள்வது வழக்கம். பாதி தூரம் கடந்த பிறகு, அவரை வாழ்த்தி வரவேற்க இளைஞர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அங்குள்ள மலைமீது ஏற அவருக்கு உதவி செய்கின்றனர். சிலபோது அவர் வசிக்கும் மாடியிலேயே பிரார்த்தனை நடைபெறும். அது ஒரு செவ்வக வடிவ – செங்கல் நிறத் தரை. சூரிய வெப்பம் பட்டு வெளுத்துப்போய் இருந்தது. வார்தாவில் இருந்த இலை கொடிகளின் ஊதா, சிகப்பு மற்றும் கருஞ்சிகப்பு நிறங்கள் தரை முழுதும் நிழலாக அப்பிக்கிடந்தன. மிகவும் ஆச்சரியமூட்டும்படி மூன்று நட்சத்திரங்கள் முக்கோண வடிவில் தற்செயலாக அன்று அணிவகுத்திருந்தன. பிறநாட்டு விருந்தினர்கள் கலந்துகொண்டாலும்கூட, இக்காட்சி முழுக்க முழுக்க இந்து மதம் சார்ந்து இருந்தது. மற்றபடி தில்லியில் கண்ட அதே சடங்கு முறைமைகள் இங்கு பின்பற்றப்பட்டன.

மாடியில் இருந்து கீழிறங்கும்போது ஒருவர் சொன்னார்: ‘எல்லோரும் ஒன்றுகூடி களிக்கின்றனர்; வலிமை சேர்க்கின்றனர். ஆனால் இவர்கள் வேண்டுவதுபோன்ற அமைதியான உலகம் சாத்தியப்பட, இப்பிரார்த்தனைகள் உதவுமா?’

அந்தியில் கிராமத்திலிருந்து சுற்றுப்பயணம் முடித்து ஆசிரமம் திரும்பும் ஒருவர், மாடியில் இருந்து புல்லாங்குழல் சங்கீத ஒலியைக் கேட்கலாம். அப்போது வானம் இருள் கவிழத் தொடங்கி, பொட்டு வெளிச்சங்களை விரட்டிக் கொண்டிருக்க வேளாண் மக்களின் வாழ்க்கையும் மென்சோகமும் அந்த இசையில் தோய்ந்து கேட்பவர்களை லயத்தில் ஆழ்த்தும். அதனை இசைத்துக்கொண்டிருப்பவர் சகோதரி மீராபென்.

சுமார் பத்து முப்பது மணிக்கு, உள்ளூர் கிராம மக்கள் மேளம் கொட்டி, பாட்டுப் பாடி, நடனம் ஆடும் சத்தம் கேட்டு அருங்காட்சியக அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் விருந்தினர்கள் உறக்கத்தை இழக்கலாம். கிராம மக்கள் டார்ச் ஏந்தி செல்லும் வெளிச்சம் அவர் அறைக்குள் ஊடுருவும்.

மறு நாள் விடிந்தது. மக்கள் உழைப்பதும், களிப்பதும், ஒன்றுகூடி வலிமை சேர்ப்பதுமான காட்சிகள் மீண்டும் தொடர்ந்தன…

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *