தீண்டாமை ஒழிப்புப் பிரசாரங்கள் ஏற்றத்தாழ்வற்ற சமூக வாழ்வை மக்கள் மனத்தில் புதிதாக உருவாக்கியதாக இந்துக்கள் கருதினர். காந்தியின் பதினொரு சூளுரைகளை ஆழமாகப் பின்பற்றிய சிறுபான்மை இந்து மக்களால், இந்துமதம் அடைந்த ஆதாயம் என்று இதைத்தான் சொல்ல முடிகிறது.
அதே சமயம் காந்தியின் சூளுரைகளுக்குப் புறவயமாக மற்றொரு சிறப்பம்சம் உண்டு. இந்திய நாட்டுச் சுதந்திரத்துக்கும், அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறுவதற்கும், உள்நாட்டுக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கும் இவை பெருவாரியாக உதவியிருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து எனும் புதைகுழிக்குள் விழக்கிடந்த இந்துக்களை, விழிப்படையச் செய்தவை இச்சூளுரைகள். மேலாட்சி அந்தஸ்து போதுமானது என்று இனி காந்தியே சொன்னாலும்கூட, அவர்கள் இனி அதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மேற்சொன்னபடி, இந்தியச் சுதந்திரம் குறித்து இந்துக்களின் இத்தகு வழிமுறைக்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன்மூலம் பண்டைய காலத்தில் இந்துக்கள் அடிமையாவதற்குத் துணைநின்ற அதே அகிம்சைக் கொள்கையைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், காந்தி.
‘கடவுள் என் வாழ்க்கைக்கான விருட்சத்தை தென்னாப்பிரிக்காவில் நடவு செய்தார். சுதேசிய சுவை கொண்ட அதன் ருசிகரப் பழங்கள் இந்தியாவில் பழுக்கத் தொடங்கின’ என்று காந்தி சொல்கிறார்.
இந்துக்கள் அஹிம்சை வழியில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவதன் பின்னணி குறித்தும் அதன் பயன்பாடு மற்றும் நோக்கம் குறித்தும் அதிகம் பேசிவிட்டோம். ஷெர்வானி சொன்னது போல், இனி அந்நியர் ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, எதிர்வரும் காலத்தில் ஆசியவியல் நிர்வாகத்தின் மோசமான முகத்தைக் காணத் தயாராக உள்ள இந்தியர்கள் உள்நாட்டுக் கொடுங்கோன்மைக்கு எதிராகவும் சத்தியாகிரகப் போராட்டத்தை காபந்து ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். அரசியல் தொடங்கி இதர துறைகள் வரை, ஆசியவியல் நிர்வாகத்தின் மிகச் சிறந்த அணுகுமுறைகளையும் மோசமான பக்கங்களையும் காந்தி மதிப்பிட்டு வைத்திருந்தார். அந்நியர் தளையிலிருந்து மட்டுமல்லாமல் உள்நாட்டுச் சர்வாதிகாரத்திலிருந்தும் இந்தியர்கள் விடுதலை அடைய வேண்டும்.
மாறாக இதன் கொடுமைகளை ஒப்புக்கொள்பவர், அந்நியர் ஆட்சியின் அச்சுறுத்தலிலிருந்து தப்பமுடியாது. மனித வலிமை சாரமிழக்கும். சுயமரியாதை எள்ளி நகையாடப்படும். ஒருவேளை, அவர்களுக்கு அந்நியர் ஆட்சியில் வாழ்வது லேசுப்பட்ட காரியமாகத் தோன்றலாம். ஆசியவியல் சர்வாதிகார அரசு வர்க்கத்திற்கு இந்தியர்கள் தலை குனிந்து மரியாதைச் செலுத்தும்வரை, அந்நியர் ஆதிக்கத்திலிருந்து இவர்கள் விடுபட வழியில்லை என்பதில் உண்மை இருக்கிறது. உள்நாட்டில் சுதந்திரம் இல்லாதபோது, எவ்வித விடுதலையும் இங்கு தாக்குப்பிடிக்காது.
காந்தியம் தொடர்பாகக் கூறப்படும் அனைத்துக் கொள்கை விளக்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இந்தியாவுக்கான அரசியல் வடிவம் குறித்து காந்தி முன்னகர்த்திப் போகும் பயணம் எந்தத் திசை நோக்கி நகர்கிறது?
மகாத்மா காந்தி இந்து சமூகத்தை அகவயமாக சீர்படுத்துவதில் அக்கறைகொண்டுள்ளார் என்பதை மறக்கக்கூடாது. தேச நல அபிப்பிராயங்கள் முதலாக ஒவ்வொரு பொது காரியங்களிலும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து உழைக்கும் கூட்டுச் சமுதாயம் அமைவதே அவர் இலட்சியமாக இருந்திருக்கிறது. சாதிப்படிநிலைகள் வர்க்கப் பேதம் என்ற நிலைக்கு இயல்பாக வளர்ச்சியடைய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இந்த வர்க்கப் பேதத்தை அவர் பொருளாதார ரீதியில் பார்த்தாரா, சமூக ரீதியில் கற்பனை செய்தாரா அல்லது சமய ரீதியில் உருவகித்தாரா என்றால், அக்கேள்விகளுக்குத் தெளிவான பதில் இல்லை. ஆனால் பொருளாதார வேற்றுமை கொண்ட சமுதாயமாகத்தான் அவர் உத்தேசித்திருப்பார் என ஊகிக்க இடமுண்டு. (நவீனச் சிந்தனைகளுக்குப் பழக்கப்படாத) இந்து அறிவுஜீவிகளிடம் அரசுக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ‘சங்க சோசலிஸ்ட்’ (Guild Socialist) அல்லது ‘கூட்டுறவு சோசலிஸ்ட்’ சித்திரங்களே மிகுந்திருந்தன. தங்கள் குழு சுதந்திரத்தைப் பாதுகாத்து, மேற்கொண்டு அடிமை முறை நிலவாதிருக்க இது ஒன்றுதான் வழியென நன்கு அறிந்திருந்தனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளால் இந்து சமூக மக்கள் சுரண்டப்படக்கூடாது என்பதற்காக இயந்திரவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக அவர் வேண்டுகோள் வைத்தார். மேலும் இந்தியா முழுமையாக இயந்திரமயமாக்கப்பட்டால், ஏகாதிபத்தியச் சந்தையில் இந்நாடு நிச்சயம் எதிர்காலத்தில் குறிவைக்கப்படும் என்று அவர் அறியாமல் இல்லை. இயந்திரப்பூர்வ வளர்ச்சியடைந்த எந்த நாடும், இந்தப் பிடியிலிருந்து தப்பியதாகச் செய்தியில்லை. எனவே ஏற்றுமதிச் சந்தையைப் பொருட்படுத்தாமல், தற்சார்பு தன்னிறைவை முன்னிலைப்படுத்தியதன் நோக்கம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காந்தியின் புறவயத் தோற்றங்களைக் கொண்டு நம்மால் இதை ஒப்புக்கொள்ள முடியாது. உற்பத்தியாளர்களிடமும் மில் முதலாளிகளிடமும் இதுவரை அவர் இறக்க மனப்பாண்மையோடு பழகியிருக்கிறார். ஆனாலும் அவர்களை பெருநகரங்களில் மட்டுமே செயல்படச்சொல்லி கட்டுப்படுத்தியிருக்கக்கூடும்.
உலகளாவிய அறிவுஜீவிகளின் மனப்பாண்மையோடும் எண்ணவோட்டங்களோடும் படைப்பாக்கங்களோடும் ஒத்துப்போகின்ற மகாத்மா காந்தியின் சூளுரைகளை பின்வருமாறு பார்க்கலாம்:
(1) அகிம்சை
19ஆம் நூற்றாண்டு நெடுக ‘வலுவுள்ளது வாழும்’ எனும் அறிவியல் பூர்வச் சொற்றொடருக்கு ஒற்றை விளக்கத்தைத்தான் மேற்குலகம் வழங்கியிருக்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடத் திறம் படைத்தவர்களே வலுவானவர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், பெரும் போருக்கு (முதல் உலகப் போர்) பிந்தி, தன் அண்டை அயலாரிடம் புரிந்துணர்வோடு உறவு பேணுபவரே ‘வலிமை’ படைத்தவர் எனப் பார்க்கத் தொடங்கினர். புரிந்துணர்வு என்ற வார்த்தையோடு ‘சார்ந்திருத்தல்’ எனும் பதத்தையும் சேர்த்து, அதன் பொருத்தப்பாட்டை விளங்கிக்கொள்ளலாம். அறிவியல் மற்றும் தத்துவப் பின்புலம் கொண்ட ஏராளமானவர்களும்; அரசியல் மற்றும் நிறுவனப் பின்புலம் கொண்ட உயர் அலுவலர்களும் இக்கருத்து வேரூன்றி வருவதற்கு ஆதரவளிப்பதை மேற்கோள் காட்டுவது சுலபம். ‘வலுவுள்ளது வாழும்’ எனும் சொற்றொடருக்கு அழுத்தம் சேர்க்கும் முகமாக புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரின் கருத்தை இங்கு பதிவுசெய்கிறேன்:
உலக வரலாற்றில், கோரமுகம் கொண்டு வன்முறையின் பல்வித வடிவங்களையும் கரைத்துக் குடித்த உயிரினங்களுக்கோ, பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய விலங்குகளுக்கோ வலிமைக்காக பரிசு அளிக்கப்பட்டதாய் சான்றேதும் இல்லை. உண்மையில், பிறக்கும் விலங்குகள் வெளியுலக அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிப் பிழைக்கவே, கெட்டி ஓடுகளுடன் இயற்கை அவற்றைப் படைத்தது. விலங்குகளிடையே பெரியவை, சிறியவை என்ற வேற்றுமை பாராமல் நாம் இந்த அம்சத்தைப் பார்க்கலாம். எதிரிகளைத் தாக்கும் உடலமைப்பு இல்லாத, சிறிய, மெல்லிய உணர்திறன் கொண்ட, சீர்வெப்ப ரத்த விலங்குகள் எவ்வித விசேஷ அமைப்புமின்றி பென்னம் பெரிய விலங்குகளை இப்பூமியில் இருந்து துடைத்தெறிந்துள்ளன. சிங்கங்களும் புலிகளும் வெற்றியடைந்த விலங்கு வகையைச் சார்ந்தவை அல்ல. சடாரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளைத் தாக்கும் வல்லமையால் எளிதில் வேட்டையாட முடிகிறதே ஒழிய, சிறப்பம்சம் எனச் சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இவ்வகை விலங்குகளின் பெரிய குறைபாடென்று நான் பார்ப்பது ஒரே விஷயம்தான் – சார்பின்மை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் பிரத்தியேக நண்பர் குழாம் வேண்டும். அது அவர்களை வாழ்வின் அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவுகிறது. அதிதீவிர தாக்குணர்வால் எதையும் சாதிக்க முடியும் என நம்புவது முட்டாள்தனம். சமூக வாழ்க்கையை நாம் ஒருபோதும் பலத்துடன் ஒப்பிடமுடியாது.(Science and the Modern World, by Whitehead, pp. 257-8)
வரலாற்றுக்கு முந்தைய கால விலங்குகளின் கடின ஓடுகளைப் போல், நாம் மூன்றாம் உலக தேசங்களின் ஆயுதக் கிடங்கிலிருந்து தற்காப்புக்காக வலிமைப் பொருந்திய ஆயுதங்களை முதுகில் சுமந்துகொள்ள நேர்கிறது. ஆனால் அப்பேர்பட்டவர்கள் எல்லாம் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள். அண்டை தேசங்களுடன் சமாதான உறவைப் பேணி, சார்ந்திருக்கும் தேசங்களே மண்ணில் நிலைக்கின்றன. என்னதான் அறிவியல்பூர்வமாக அசகாயச் சக்திகளைப் பெற்றிருந்தாலும், நாளை உலகம் அவர்களை நம்பியிராது என்பதே இன்றைக்குப் பெருவாரியாக நம்பப்படும் கொள்கை. கனரக ஆயுதங்கள் ஏந்திய தேசங்களுக்கு மத்தியில் சமாதான விரும்பிகள் மெல்ல முகிழ்க்கின்றனர். இத்தகையச் சூழலில் அண்டை அயலாரிடமிருந்து உரிமை மீட்கும் வழிமுறைகளைத் தேடிக் கண்டடைவதும், ஆயுதமேந்திய பேரரசுகளிடமிருந்து அமைதியான முறையில் நம்மைத் தற்காத்துக் கொள்வதும் எங்ஙனம் என்று ஆராய்வதே கேள்விக்குறியாக இருக்கின்றது.
இக்கருத்தைப் பரிசீலித்துப் பார்க்கையில், அகிம்சை வழியில் வன்முறையின்றிப் போராடுவதற்கான வழி உருக்கொள்கிறது என்றுதான் அர்த்தம் கொள்ள முடிகிறது. மேற்கில் சத்தியாகிரகம் தொடங்கியதற்கான அறிகுறிகளாக சர்வதேச சங்கம், வேலைநிறுத்தம், மறியல் மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களைக் குறிப்பிடலாம். 1926ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிகழ்ந்த பொது வேலைநிறுத்தப் போராட்டம், கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு நடத்தி முடிந்த மேற்கத்திய சத்தியாகிரகம் என்பேன். அதைவிடச் சற்றுப் பெரிய அளவிலான ஒத்துழையாமைப் போராட்டம் நிகழ்த்தியிருந்தால், எப்பேர்பட்ட அரசு இயந்திரமும் முடங்கிவிடும். இதனால் மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிசாய்த்துக் கேட்கும் நிலை உண்டாகலாம். அரசு நினைத்தால் ஒரு நூறு பேரைச் சுட்டு வீழ்த்தலாம். ஆனால் அதற்குமேல்? தன் சர்வ அதிகாரமும் வல்லமையும் குவிந்துகிடக்கின்ற மக்களை வேட்டையாடிய பிறகு, எதன்மேல் ஆட்சி நடத்துவது?
சர்வதேச சங்கம் ஒருபுறம் இருந்தாலும், நாடுகளுக்கிடையிலான சத்தியாகிரகப் போராட்டம் சீரிய முறையில் செயல்படுவதற்கு நேரமும் உழைப்பும் தேவை. போரினால் ஒன்றும் மாறப்போவதில்லை என்ற தெளிவும், இயந்திரமயமாக்கப்பட்ட தேசங்களை அசுர பலம் பொருந்திய பொருளாதார முதலைகள் கபளீகரம் செய்யும் என்ற புரிதலும் சத்தியாகிரகப் போராட்ட முறை நோக்கி மக்களை நகர்த்தும். இல்லாவிடில் உலக உருண்டையில் ஒவ்வொரு நாடாக அழிந்துபோகும்.
(2) தீண்டாமையிலிருந்து விடுதலை
எல்லா மனிதர்களையும் ஒன்றுபோலவே சரிசமமாக நடத்த வேண்டும் என்ற தார்மீகக் குரல் ஒவ்வொரு மூலையிலிருந்தும் எதிரொலிக்கின்ற அதே சமயம், குறிப்பிட்ட ஒரு சாராரைத் தனக்குக் கீழ் வைக்க வேண்டும் என்ற சிலரின் அபத்த வாதங்களும் கேட்கத்தான் செய்கின்றன. குற்றவாளிகளைக் கோல் கொண்டு அடிக்கும் அளவுக்கு நம்மில் யாரும் உத்தமர்கள் இல்லை. ஆகவே யார் இதைச் செய்கிறார்கள், எந்தத் தேசம் இதற்குத் துணைபோகிறது என்பதைச் சுட்டாமல் விடுவது நலம். தீண்டாமையின் தாயகமாக விளங்கும் இந்தியாவில், பழங்காலத்தில் இருந்தது போலவே நிறம் மற்றும் இன அடிப்படையில்தான் பாகுபாடு நிகழ்கிறது எனச் சொல்வதே போதுமானது என்று நினைக்கிறேன்.
எனவே இந்து மதத்தில் தீண்டாமை மனப்பாண்மை எப்படி உள்ளே நுழைந்தது, மக்களை அரித்துத் தின்ற வல்ல இப்புற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கு எப்படியெல்லாம் போராடுகின்றனர் என்று யோசிப்பது உசிதம். ஒடுக்கப்பட்டவர்களைக் காட்டிலும் ஒடுக்குமுறைக்குத் துணைபோனவர்கள் துக்கத்திற்கு ஆளாவது என்னை மேலும் ஆச்சரியமூட்டுகிறது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகி, மனிதநேயமற்றச் செயல்பாடுகளுக்குப் பழகிப்போன அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்கள், இந்து மதத்தின் எதிர்காலத்தை இரட்சிக்க இன்று பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால் ஒடுக்குமுறை செய்த பிராமணர்களின் எண்ணிக்கை மிகவும் சொச்சம். பண்டைய நாகரிகங்களில் அடிமை முறை இருந்ததுபோல, தீண்டாமை முறையும் தனக்கான குழியைத் தானே தோண்டி அதற்குள் அஸ்தமிக்க வேண்டும். வாழ்வதற்கும் வளர்வதற்கும் சுதந்திரம் வேண்டும், ஒழுக்கமும் கடமையும் பின்னிப் பிணைந்த சுதந்திரம்.
(3) உடல் உழைப்பு
இயந்திரங்களுக்கு எதிராக காந்தி வெளிப்படையாக அறிவித்த சூளுரை இது. ஆகவே முன்பைக்காட்டிலும் அதிக பிரபலங்கள் இக்கருத்துக்கு ஆதரவு அளித்தனர். மிகச் சமீபத்தில் கூட, சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரெல் என்பார் இதுகுறித்து எழுதியிருக்கிறார். தன்னுடைய ‘மேன் தி அன்னோன்’ எனும் புத்தகத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்க்கை, சராசரி மனிதனின் படைப்பூக்கத்தை முட்டுக்கட்டையிட்டுப் பாழாக்குகிறதென்றும், ஒட்டுமொத்த வளர்ச்சியில் அபாயகரமான அழிவுகளை உண்டாக்குகிறதென்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும்:
ஒரே செய்கையை ஆயிரக்கணக்கான முறை அன்றாடம் திரும்பத் திரும்பச் செய்யும்படி தொழிலாளி வற்புறுத்தப்படுகிறான். உற்பத்திப் பொருளின் ஒரேயொரு பகுதி மட்டும் அவனால் செய்யப்படுகிறது. ஒருபோதும் முழுமையான பண்டம் உருவாக்க அவனுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அறிவுத் திறன் பிரயோகம் மறுக்கப்படுகிறது. கடிவாளம் கட்டிய குதிரைபோல, கண்ணைக் கட்டிக் கொண்டு நாள் நெடுக கிணற்றிலிருந்து நீர் இறைக்கிறான். அன்றாடம் ஏதோவொரு புதுமையை எதிர்பார்த்து, செய்யும் தொழிலில் ஆரோக்கியமான படைப்பூக்க மனநிலை நீடிப்பதை, இயந்திரமயமாக்கப்பட்ட தொழில்முறை முடக்குகிறது. மனநலனைக் காட்டிலும் பணநலனில் அதிக சிரத்தைக் கொண்டு, இன்றைய நாகரிக உலகம் நினைத்தும் பார்க்கமுடியாத குற்றத்தைச் செய்துவிட்டது.
நான் மேற்கோளிட்டுக் காட்டிய டாக்டர் காரெலின் இச்சிறிய பத்தி, கைவினைத் தொழில்சார் உடல் உழைப்பையே பிரதானமாகப் பேசுகிறது. நிலம்சார் உடல் உழைப்பு குறித்தும், மண்ணோடு மனிதர் கொண்டுள்ள பூர்வாங்க உறவின் மகிமை குறித்தும், யூத அறிவுஜீவி ஒருவர் நியூ யார்க்கில் இருந்தபோது ஒருமுறை என்னிடம் சொன்னார்:
யூத எதிர்ப்புக் கொள்கையால் நான் பெரிதும் அவதிப்படுகிற போதும், என்னால் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. யூதர்கள் பிற மனிதர்களைப் போல் அல்ல. இயற்கையோடும் அதன் இயங்கியலோடும் பல ஆண்டுகளுக்கு முன்பே தம் உறவை முறித்துக்கொண்டார்கள். எனவே வாழ்க்கைக் குறித்து தட்டையான பகுதிசார் பார்வையே அவர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. எனவே இயல்புக்கு மாறாக செயற்கையான, உண்மையல்லாத கருத்தோட்டங்கள் மீது நம்பிக்கை வைத்தனர். உலக வாழ்விலிருந்து விலகிவந்தவர்கள், வாழ்வின் அடிப்படை குணாம்சங்கள் பற்றி ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாதவரை யூதர்கள் அந்நியமான, யூகநிலைக்கு ஆட்பட்ட, அபாயகரமான மனிதர்களாகவே நீடிப்பர்.
மகாத்மா காந்தியின் போதனைகள் குறித்து இறுதியாகச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். அவரின் சித்தாந்தம் பண்டையக் கால மரபிலிருந்து கடன் வாங்கியதாக இருந்தாலும், உலக அரங்கில் இன்றும் விவாதத்திற்குரிய கொள்கைகளையும் உண்மைகளையும் சுவீகரிக்கத் தவறவில்லை. மேற்கொண்டு அவை பரிட்சார்த்த முறையில் சீராகச் சோதிக்கப்படுகின்றன. தம் கொள்கையின் விடாப்பிடித் தன்மையிலிருக்கும் சில இறுக்கமான முடிச்சுகளை இலகுவாக்குவதன் மூலம், அடுத்து வருபவர்கள் மதவெறிப் பிடிக்குள் சிக்காமல் சுதந்திரமாக வேலைசெய்ய வழி உண்டாக்குகிறார். ‘முடிந்த முடிபாக’ இதுதான் என்று அவர் எதையும் அறுதியிடுவதில்லை. இவையெல்லாம் காந்தி ‘ஓர் நடைமுறைத் தலைவர்’ எனச் சொல்லத் தகுதிபடைத்த திறன்களாக அமைகின்றன. அவரின் எண்ணங்களும் கருத்தாழமிக்கச் சிந்தனைகளும் செயல்வடிவம் பெறுகின்றன. எனவே தொலைநோக்குப் பார்வை கொண்ட மகத்தான ஆளுமை என்று தன் விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறார். “உண்மைக்கு நெருக்கமாக வாழும்போது, சமாதானத்தின் அழகு என்னவென்று தெரியவரும். இது என் வாழ்க்கைக் கற்றுத் தந்த பாடம்” என காந்தி சொல்கிறார். என் அளவில் காந்தியை நான் லெனினோடு பொறுத்திப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். சமகாலத்தில் வேறெந்த ஆளுமையோடும் அவரை ஒப்பிடமுடியாது. இருவர்க்கும் போராட்ட முறைகளில்தான் பெரிய வேறுபாடு. லெனின் அகிம்சை வழியிலும் போராடினார், ஆயுதம் ஏந்தியும் போராடினார். அரசு இயந்திரத்தின் சகல உறுப்புகளையும் பயன்படுத்தி, நாட்டில் மாற்றம் உண்டாக்க உழைத்தார். ஆனால் காந்தி அகிம்சை வழியில் மட்டுமே போராடினார். அவர் போராட்டத்திற்கு அரசு இயந்திரத்தின் துரும்பு, தூசுகூட துணைநிற்கவில்லை. தண்டனைப் பெற்று சிறையில் அடைபட்டிருந்தாலும் களத்தில் நிற்கும் மக்களைக் காந்தி வழிநடத்த வேண்டியிருந்தது. இந்தப் பார்வையின் ஊடாகப் பார்த்தால், ரஷ்ய தலைவரைக் காட்டிலும் இந்துத் தலைவர் வரலாற்றுப் பரப்பில் மாபெரும் தனித்துவத்துடன் மிளிர்கிறார். ரஷ்யர்கள் அடிப்படையான மாற்றங்களை மேற்கொண்டுதான் இந்நிலையை எட்டியுள்ளனர். ஆனாலும் தராசு முள் இந்தியாவின் பக்கமே சாய்கிறது. ஏனென்றால் ரஷ்யர்களின் வளப்பமும் வசதியும் இந்தியர்களுக்கு எட்டாக் கனி.
இதன்மூலம் 1935ஆம் ஆண்டில் காந்தியம் பற்றி நான் தெரிந்துகொண்டதைச் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறேன்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.