இந்தியாவில் கம்யூனிசக் கொள்கையை இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள் கூட, சமதர்மச் சிந்தனையில் நாட்டம் கொண்டிருப்பதை முன்னரே பேசிவிட்டோம். நேருவின் சமதர்மக் கொள்கை பிற நாடுகளிலிருந்து கவரப்பட்ட சித்தாந்தம் ஆதலால், முன்பு குறிப்பிட்டவர்களோடு அவர் ஓரளவு ஒத்துப்போனார். ஆனால் அனைத்துமட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் அடிப்படைப் போக்குகளில் இருந்து நேரு வேறுபட்ட இடமுண்டு. இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளும் இந்தியர்களின் பொதுப் பிரச்சனை போல பாவித்தார். அவர் மனத்தில் முஸ்லிம், இந்து, பார்சி என்ற பிரிவினை கிடையாது. இந்தியத் தாயின் புதல்வர்கள் அனைவரும் இந்தியர்தாம் என்று ஒருமனதாகக் கருதினார்.
இந்தியாவில் இந்து மதத்தை ஒருங்கிணைத்து வகுப்புவாதத்தைத் தூண்டும் மத அடிப்படைவாதிகளிடம் நேரு அடிக்கடி முரண்கொள்ள நேர்ந்தது. முன்பு சொன்னதுபோல், இம்மக்களை ‘இந்து மகாசபை’எனும் அமைப்பு தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சமதர்மக் கொள்கைக் குறித்து நேரடிப் புத்தக அறிவு இல்லாமல், மேலை நாடுகளின் தாக்கத்தால் உந்தப்பட்டவர்கள் ‘இந்து மகாசபை’ குறுகிய சாராரின் நன்மைக்காக உழைக்கின்ற இயக்கம் என்று எடைபோடுகின்றனர். அதாவது மக்கள் நலத் தேவைகளையோ, வாழ்வை மேம்படுத்தும் பிரயத்தனங்களையோ சிந்திக்காமல் வேலை தேடும் அங்கத்தினர்கள் நிறைந்த குழு என்று குற்றம் சாட்டுகின்றனர்; அந்நிய ஆட்சிக்கு இந்து மகாசபை ஆதரவளிப்பதையும் சமதர்வாதிகள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர்கள் சொல்வது ஓரளவு உண்மைதான். ஆனால் இது மட்டும்தான் குற்றம் என்றால், இந்து மதம் மீது குறைந்த அழுத்தமே சுமத்தப்படுகிறது என்பேன். அடுக்கி வைத்த சீட்டுக்கட்டைப் போல் இவை சரிந்து வீழும். உண்மையில் இவற்றை ஆழ உணர்ந்து பார்த்தால், இச்சிக்கல் மண்ணில் வேரூன்றியுள்ளது. வகுப்புவாதக் கொள்கை, மேலாதிக்கம் செய்கின்ற இந்து மனநிலையைத்தான் காட்டுகின்றது. இந்து மகாசபையை வேலை தேடும் அங்கம் என்று முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாது. தங்கள் சமயத்திற்காக கணிசமான தொழிற் நிறுவனங்களையும், கல்விக் கூடங்களையும் நிறுவுயுள்ளதன் பேரபாயத்தை யோசிக்க வேண்டும். மேற்கொண்டு, அதில் சிலர் சமதர்மக் கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளனர். வகுப்புவாதத்தையும் சமதர்மத்தையும் சங்கிலி கொண்டு இணைக்கப் பார்க்கின்றனர். பண்டைய கால இந்து மதத்திலிருந்து இதற்கான உரம் வருவித்து கொள்ளப்பட்டிருக்கிறது. வகுப்புவாதத்தை வேட்டையாடும் சமதர்மம் எனும் வெளிநாட்டுக் கிருமியை, இந்துமதக் கிருமிநாசி தூவி வலுவாகப் போரிடுகின்றனர்.
அரசியல் சூழலில் அவர்கள் எல்லோரும் அந்நியர் ஆட்சி விரும்பிகள் எனச் சுலபத்தில் சொல்லிவிட முடியாது. ஆனால் இஸ்லாமியப் பெரும்பாண்மைச் சூழும்போது, அந்நியர் ஆட்சி நீடிக்க வெளிப்படையாகக் குரல் கொடுக்கின்றனர். இந்துப் பெரும்பான்மையில் அங்கம் கொள்ளும்போது, தேசியவாதி போல் அரிதாரம் பூசிக் கொள்கின்றனர். இந்தியா ஓர் இந்துதேசம் என்பதே அவர்கள் மனத்தில் கொண்ட கொள்கை. அதில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை. ‘கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இங்கு வாழும் வரை, அமைதி நிலவ வாய்ப்பில்லை’ என்று வெளிப்படையாக அறிவிக்கின்றனர். மத-இன அடிப்படையிலான ஃபாசிச அமைப்பைத் தன் தேசியவாதக் கொள்கையாகப் பின்பற்றுகின்றனர். வகுப்புவாதம் பேசும் மத அடிப்படைவாத இந்துக்களின் ஆட்சியில், எதிர்கால சுதந்திர இந்தியா எப்படி இருக்குமென்று பேசுகையில், ‘வருங்காலத்தில் நாங்கள்தான் தீண்டத்தகாதவர்களாக இருப்போம்’ என்று இங்குள்ள இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இதுமட்டுமே நிகழும் என்று சொல்ல முடியாது. எண்ணிக்கையிலும் பலத்திலும் இஸ்லாமியர்கள் அடங்கி ஒடுங்கும் நிலையில் இல்லை. முரண்பாடாகத் தோன்றினாலும், இஸ்லாமிய மற்றும் இந்துமத வகுப்புவாதிகள் தங்கள் சமூகக் கட்டுமானங்களைக் காப்பாற்றுவதற்காக, தம்மை அச்சுறுத்தும் அந்நிய அரசியலுக்கு எதிராக ஒருங்கிணைய வாய்ப்பு உண்டு.
பண்டித ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்த அரசியல் தீர்மானங்கள் முந்தைய தீர்மானங்களைத் தூக்கிச் சாப்பிடுவதாய் இருந்தன. இந்து மதத்தைச் சார்ந்த பிற தலைவர்களிடமிருந்து நேரு வேறுபட்டார். அச்சமயத்தின் பழம் மரபுகளை முழுமையாகச் சீர்த்திருத்த விரும்பியதில் அம்மாற்றங்கள் தலைதூக்கின. ஜவாஹர்லால் நேரு காஷ்மிரைப் பூர்வீகமாகக் கொண்ட பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர். அக்குடும்பம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, வளமை மிக்க சமவெளிப் பிரதேசம் நோக்கி குடிபெயர்ந்தது. இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியில் உயர் பதவி வகித்ததால், முகமதிய கலாசாரத்தோடு அவர்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது. அதே சமயம் அக்குடும்பத்தினர்களுக்கு மேற்கத்திய தாக்கம் வெகு விரைவிலேயே ஆட்பட்டுவிட்டது. எப்போதாவது பொருளாதாரத் தேவைகள் மிகுந்தாலும், ஆஸ்திக்குக் குறைவில்லை. நன்கு பக்குவப்பட்ட, சாதி – சமய மரபுகளுக்குத் தலைப்படாத குடும்பம்.
நேருவின் தந்தை, மோதிலால் நேரு ஓர் அற்புதமான மனிதர். புகழ்பெற்ற வழக்கறிஞர். வாழ்வின் இறுதி அத்தியாயங்கள் வரை, அவரின் அரசியல் பயணங்கள் சூடுபிடிக்கவில்லை. ஆனால் அரசியல் களத்தில் குதிக்கும்போதெல்லாம் சட்டத்துறையில் முதுகெலும்போடும் தைரியத்தோடும் நடைபயின்ற கால்கள் விஸ்தாரம் குறைவின்றி ஓட்டமெடுத்தன. வலிமையும் சுறுசுறுப்பும் பொருந்திய முகவெட்டு. ரோம சேனாதிபதிபோல் ஆதிக்கப் பொலிவுபெற்ற உருவம். நேருவின் எழுத்துகளை வாசித்தால், மோதிலால் சராசரி இந்து அறிவுஜீவியைப்போல் மனோதத்துவ இறையியல் தாக்கங்களுக்கு ஆட்படாத மனிதர் என்பது தெரியவருகிறது.
ஜவாஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு பிறந்தார். மோதிலாலுக்குப் பிறந்த ஒரே ஆண் வாரிசு. பன்னிரண்டாம் வயதுவரை தனியனாக வளர்ந்தார். யாருமில்லா இந்நெடிய குழந்தைப் பிராயத்தில், பள்ளிக்குச் செல்லாமல் தனியார் ஆசிரியர்களை வீட்டிற்கே வரவழைத்துத் தொடக்கக் கல்வி பயிற்றுவித்தார் மோதிலால். ஒரு மட்டம்வரை நேரு உணர்ச்சிக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தார். வீட்டிலேயே அடைக்காத்து, யோசித்துக் கொண்டிருப்பது பிடித்துப்போனது. உடற்பயிற்சிகளையும் விளையாட்டுகளையும் வெறுத்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றதால், மேற்கத்தியக் கலாசார நுகர்ச்சி நேருவிற்கு எளிதில் கிட்டியது. சராசரி இந்து குழந்தையைப் போலல்லாமல் அவர் வளர்ந்த சூழல் இதற்குப் பெரிதும் ஊக்கம்கொடுத்தது. இந்தவொரு காரணமே, நேருவின் அரசியல் தீர்மானங்கள் மேற்கு நோக்கி நகர்ந்து, இந்து தலைவர்களின் சீர்த்திருத்தங்களுக்குள் சிக்காமல் போனதற்கு வழிவகைச் செய்தது எனலாம். இதனால் நேருவின் அரசியல் விவாதங்கள் இந்து சமயப் புத்தக மேற்கோள்களின்றி தனித்து அமைந்தன. அவர் கருத்தில் படைப்பூக்க வெளிப்பாடும், தனித்துவச் சிந்தனைகளும் மலிந்தன.
அதே நேரம், மத அடிப்படையிலான இந்தியக் கலாச்சாரத்தில், அவர் குரல் ஒற்றைப் பிம்பமாய் தனித்து நிற்பதும் கவனிக்கத்தக்கது. நேருவிற்கு இது தெரியாமல் இல்லை. வெறுப்பு ஏற்பட்டதும் உண்டு. சிலநேரங்களில் மதத்தை விரோதிக்கவும் செய்திருக்கிறார். சுதந்திரமான, ஒருங்கிணைந்த இந்தியாவிற்கு எதிராக அணிதிரளும் அனைத்துக் குரல்களும் மதத்தின் பெயரால் எழும்புகின்றன என்றார். இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்று உயரிய இலட்சியம் கொண்டிருந்தார். ஆனால் சுதந்திரம் கோருவதற்குத் தடைக்கலனாக மதம் எனும் வஸ்து நிற்பதாகத் தோன்றியது. இதையெல்லாம் வைத்துக்கொண்டு நேரு ஒரு முழுமுதல் பகுத்தறிவுவாதி என்றோ, துறவற வாடையற்றவர் என்றோ கருதிவிடக்கூடாது. பொதுமக்களை வென்றெடுப்பதற்கு, அவர்கள் நாடும் புலங்களையும் உணர்ச்சிகளையும் கையாளத் தெரியவேண்டும் என்பதை அவர் அறியாமல் இல்லை.
இங்கிலாந்திலிருந்து படிப்பு முடித்து வந்த கையோடு இந்தியா திரும்பிய நேரு, தன்னைப் பரபரப்பான அரசியல் சுழலில் இணைத்துக்கொண்டார். ரெளலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டம் மேற்கொண்ட காந்தி அலகாபாத் வந்தபோது, நேருவிற்கு மகாத்மா காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போராட்டத்தில் ஏற்பட்ட சில துன்பியல் நிகழ்ச்சிகளைத் தாமே கண்கூடாகப் பார்த்திருக்கிறார். 1920க்கும் 1934க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 7 முறை சிறை சென்றார், நேரு. வெளியே வரும் சொச்ச காலத்தில் இயக்கத்தில் ஊக்கமுடன் பங்கேற்றதாலும், இந்தியர்களோடு கொண்ட பழக்கத்தினாலும், இந்தியப் பிரச்சனை மூலங்களைக் கண்டறிய வாய்ப்பு ஏற்பட்டது.
இளமைக் காலத்தில் அனுபவித்த தொடர்ச்சியான சிறை வாழ்க்கை, நேருவின் மனநிலையையும் நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் காரண கர்த்தாவாக அமைந்தன. சிந்தனைத் தூண்டும் மனவெழுச்சிகளைப் பக்குவத்தோடு உள்வாங்கினார். இந்தியர்களின் சூழலைப் புரிந்துகொள்ளவும், அந்நியர்களின் மதிப்பீட்டை அறிந்துகொள்ளவும் நுணுக்கமான கண்காணிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். ‘உலக வரலாறு’ எனும் இரண்டு பென்னம் பெரிய தொகுதிகளைச் சிறைச்சாலையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதச் சமூக வரலாற்றின் துன்பம் நிறைந்த போராட்டங்களை அந்நூலில் பதிவு செய்வதோடு, இந்திய விடுதலைக்கான வழியையும் காட்டி அமைகிறார். நேருவின் தன்வரலாற்று நூலும் சிறையில் எழுதி முடிக்கப்பட்டது என்று அறிக. தன்னைக் குறித்தும் தன்னைச் சுற்றி நடப்பவை குறித்தும் அதில் தத்துவ விசாரணை நிகழ்த்தியிருக்கிறார். ஏற்கெனவே தனிமை ஏறிய அவர் வாழ்வில் மேலும் வலிந்து திணிக்கப்பட்ட இத்தனிமை, தம் சிந்தனைகளையும் கற்பனைகளையும் அரசியல் தீர்மானங்களாக உருமாற்றும் வலிமையை அவருக்குத் தந்திருக்கிறது. இதனால் புறவய அழுத்தங்களால் மாறுபாடில்லாத சுத்தத் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார்.
‘இந்திய நிர்வாகம் அடி ஆழம் முதல், வேர்வரை கிளை பரப்பிச் செயலாற்ற வேண்டும்’ என்பதே நேருவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் தீர்மானமாக அமைந்தது. இத்தீர்மானத்திற்கு சமதர்மம் என்று பெயர். ரஷ்யாவில் தற்போதுள்ள அரசாங்கத்தைவிடக் குறைந்தபட்ச தீரமுடையது. ஆனால் மார்க்சியத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை.
நேருவின் தேசியவாதம், சமதர்மத்தோடு பிண்ணிப் பிணைந்தது. இந்தியாவில் அந்நியர் ஆட்சியை விரட்டியடிக்கும் வெற்று உபாயமாக அதைப் பார்த்தார். ஆசியா முழுவதும் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட எல்லாத் தேசங்களும் இதன்வழிப்பட்டது என்று தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால் இவ்வகை அரசியல் தேசியவாதத்தால் ஜப்பானில் ஏற்பட்டதுபோல், முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சி அமையலாம். ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இத்தகு தேசியவாதத்தை தாம் அறவே விட்டுவிடுவதாய் தன் எழுத்துகளில் தெளிவுறப் பதிவு செய்கிறார். ‘சர்வதேசப் புரிந்துணர்வு கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விடுதலையே’ நேருவின் உட்சபட்ச இலட்சியம். எனவே இந்தியா உள்ளார்ந்த சீர்த்திருத்தத்தில் இருந்து தன் மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று விரும்பினார். அதன் படிநிலைகள் பின்வருமாறு:
1) வகுப்புவாதம் ஒழிய வேண்டும். 2) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ சக்திகள் முற்றிலும் ஒழிந்துபோக வேண்டும். 3) அனைத்துச் சொத்துக்களும் தேசியமயமாக்கப்பட வேண்டும். இந்தியாவின் வளங்களை அரசே பராமரித்துக் கொள்ளும். 4) தொழிற்சாலைகளின் கணிசமாக வளர்ச்சி, கைவினைத் தொழில்களுக்கு மாற்று ஆகும். 5) ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிக்கும் சமயப் பார்வைகளை, பொருளாதாரப் பார்வை கொண்டு பெயர்க்க வேண்டும். 6) அத்தகுச் சூழலில்தான் பொருளாதார மற்றும் சமூகச் சமநிலை வாய்க்கும்; ஒற்றுமையும் தேசியத்துவமும் வலுப்பெறும் என்பது நேருவின் புரிதல். ‘இதைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் ஒற்றுமை வாய்க்குமா எனச் சொல்லத் தெரியவில்லை . . . . அது அடித்தட்டு நிலையிலிருந்து பீறிட்டு எழும். சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் தவிர்க்கமுடியாத சில தொல்லைகளைக் கண்முன் கொண்டுவரும். இதனால் மக்களிடையே வேறு சில பிரிவினைகள் தோன்றினாலும், வகுப்புவாத பேதங்கள் ஓய்ந்துவிடும்.’
தற்காலத்தில் இந்து சமயத்திற்காகப் பணியாற்றும் வெவ்வேறு ஆளுமைகளைக் குறைத்து மதிப்பிடாமல் சொன்னாலுங்கூட, மகாத்மா காந்தியும் ஜவஹர்லால் நேருவும் இந்து மதத்தின் வளர்ச்சிக்குத் தனிப்பட்ட மனிதர்களாகவும், கட்டமைப்புச் சக்தியாகவும் பெரும் பலமாக விளங்குகின்றனர். 19ஆம் நூற்றாண்டு இந்து சமய சீர்திருத்த இயக்கத்தின் நீட்சியாக, காந்தியை நாம் பார்க்க முடிகிறது. மனிதம் நிறைந்த பழங்கால இந்து சமயத்தின் ஆன்மீகக் கொள்கைகளை உயிர்த்தெழச் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவருகிறார். ஜவாஹர்லால் நேரு கொள்கை அளவில், இந்து சமயத்தின் கடந்த காலத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர். இவ்விரு அசாத்திய மனிதர்களும் கொள்கை அளவில் வேறுபட்டாலும் மிக இணக்கமாகச் செயல்படுகின்றனர். இருவரின் இலட்சியமும் ஒன்றுதான். அஹிம்சை வழியில் சுதந்திரம் பெறுதல்; சுதந்திரம் பெற்ற பிறகு மூன்றாம் நாடுகளுடன் சுமூகமான உறவு பேணுதல்; இந்தியப் பெருந்திரள் மக்களுக்கான நன்மைப் பாராட்டும் அரசாக விளங்குதல். வித்தியாசங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:
மகாத்மா காந்தியின் வாழ்க்கை மதம், ஆன்மா தொடர்புடையனவாக இருக்கிறது; நேரு பொருளாதாரத்தை மையமிடுகிறார். இந்து மதத்தின் மையச் சரடில் இருந்து பிசகாமல், சிறிய மாற்றங்களுக்கு மட்டும் இடங்கொடுத்து, எல்லோரும் சரிசமமாக வாழும் புதிய வாழ்க்கை முறையை காந்தி அறிமுகப்படுத்த விரும்புகிறார்; வகுப்புப் பேதத்தை செய்தொழில் அடிப்படையில் காண்கிறார். ஆனால் குறிப்பிட்ட வகுப்பில் பிறந்த ஒருவர், தன்னால் அவ்வகுப்பிற்குரிய தொழிலை மேற்கொள்ள இயலாத போது பிற தொழில் செய்வதற்கான சுதந்திரம் அதில் இருக்க வேண்டும். நேரு இப்பழையமுறை ஒட்டுமொத்தமாக நீங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தொழிலாளர் பிரச்சனையில் காந்தி எந்தப் பக்கம் என்று தெளிவில்லை. ஆனால் கிராமப்புறம் குறித்து அவர் யோசனைகள் வெளிப்படையாக உள்ளன.
ஒவ்வொரு கிராமமும் இந்திய தேசத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட வேண்டும்; தன்னளவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்; பிறரை அண்டாமல் தற்சார்புடன் தனித்து இயங்க வேண்டும். ‘குறைந்த அளவிலான இயந்திரங்கள், நிறைந்த அளவிலான கைவினைத் தொழில்கள்’ என்பதே காந்தியின் தாரக மந்திரம். போதிய ஓய்வு நேரமும் கட்டுப்பாடான சுதந்திரமும் கிடைக்க இதுவொன்றே தீர்வென்று நம்பினார். மகாத்மா காந்தி அதிகாரத்தைப் பரவலாக்க விரும்பிய ஜனநாயகவாதி. ஆனால் ‘நிலாக்கிழார் முறை ஒழிப்பைத்’ தாண்டி கிராமங்கள் குறித்து நேரு என்ன சிந்தித்தார் என்று தெளிவில்லை. நகர்புறத் தொழிலாளர்கள் குறித்து சிந்திக்கையில், சமதர்மவியல் கொள்கைக்கு உட்பட்டு திட்டமிட்டார். நேரு ஒரு தீவிர மையவாதி. தன்னாட்சிக் குழுக்களின் சுதந்திரத்தை ஒருபோதும் விரும்பமாட்டார். ஆனாலும் அவர் ஒரு ஜனநாயகவாதி.
மகாத்மா காந்தியின் வாழ்நாளில் இவ்விருவரும் பிரிவதற்கான முகாந்திரம் இல்லை. ஒருவேளை காந்தியே இருவருக்கும் இடையில் பிளவு ஏற்படுத்தினால், நேரு அதை ஒப்புக்கொள்ள மாட்டார். காந்திமீது தீவிரப் பற்றுடன் கைகோர்த்துள்ளவர், நேரு. அவரைப் பொறுத்தவரை காந்தி ஒரு தன்னேர் இல்லாத தனித்துவ மனிதர். இத்தனையும் மீறி காந்தியைப் பிரிந்து செல்ல முயல்வாரெனில், இந்து மதத்தின் பெருந்திரள் மக்கட்கூட்டத்தையும் இந்திய சமூகத்தின் பெருவாரியான குழுக்களையும் தம் பிடியில் இருந்து இழக்க நேரிடும்.
‘வேரோடு பிடிங்கியெறியும் மாபெரும் மாற்றத்தை இந்திய மக்கள் விரும்புகின்றனரா?’
ஜவாஹர்லால் நேரு குறித்துப் பேசுகையில் இந்தியர்கள் முன்னெழுப்பும் கேள்வி இது. இதற்கு ‘மக்களை ஆலோசித்து பொறுமையாக முடிவெடுப்போம்’ என்று நேரு பதட்டமின்றி பதில் கூறுகிறார். ஆனால் அவர் சொல்வதுபோல் அரசியலமைப்புச் சபை உண்டாக்கி கருத்துக் கேட்பதெல்லாம், இந்திய விடுதலைக்குப் பிறகே சாத்தியப்படும்.
இவ்விரு சக்திவாய்ந்த ஆளுமைகளுக்குப் பின்னால், காங்கிரஸ் வற்றாத வலிமையோடும் தேசிய அரசியலின் முக்கிய அங்கமாகவும் தன்னை நிரூபிக்கிறது. இந்திய மக்களின் நம்பத்தகுந்த பிரதிநிதித்துவ அமைப்பு என்ற பெயரை காப்பாற்றி வருகிறது. இஸ்லாமியர்களைவிட இந்துக்களே காங்கிரஸை அதிகம் பின்பற்றுகின்றனர் எனத் தனியே சொல்லத் தேவையில்லை. இருப்பினும் முக்கியத்துவம் பெற்ற சில முஸல்மான்களும் இளைஞர்களும் காங்கிரஸில் நம்பிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் சட்டப் பூர்வமான வழியில் தீவிரத்துடன் செயல்படுகின்றனர் என்பதைத் தாண்டி வேறொன்றையும் குறிப்பிட்ட சொல்ல இயலாது. வகுப்புவாதத்திற்குத் துணை போவார்களா? ஒன்றிணைந்த தேசத்திற்குக் குரல் கொடுப்பார்களா? பொருளாதாரப் பிரச்சனைகளுக்குக் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? இவையெதற்கும் இப்போது பதில் இல்லை. சூல் கொண்ட இக்குழந்தை வளர்ந்த பிறகுதான் இதற்கு விடை தெரியும்.
இந்தியாவெனும் உருக்குப் பானையில் நான் பார்த்த சில விசேஷமான இந்து ஆளுமைகள், அவர்களின் எண்ணச் சிதறல்கள், அதனால் மக்கள் மனத்தில் ஏற்பட்டுவரும் மாறுபாடுகள் குறித்த பதிவு இத்தோடு முடிகிறது.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.