Skip to content
Home » நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

நான் கண்ட இந்தியா #49 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 1

அல்பெருனி

இஸ்லாமியச் சமயத்தில் மும்மடிக் கொள்கைப் பின்பற்றப்படுகிறது: தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை. இந்தியாவிலும் இந்தியாவிற்குப் புறம்பாகவும் வசிக்கின்ற பெரும்பாலான இஸ்லாமியர்கள், இந்த மும்மடிக் கொள்கையைச் செளகரியமான ஆடைப் போல் உடுத்திக்கொள்கின்றனர்.

(1) தனிப்பட்ட வாழ்க்கை

இறைவன் ஒருவரே. இறைத்தூதர்களையும் (நபிகள்) அவர்களால் வசனிக்கப்பட்ட புத்தகங்களையுமே நம்ப வேண்டும். முகமது அவர்கள்தான், இறுதியாக அவதரித்த இறைத்தூதர். ஒற்றைத்தெய்வ நம்பிக்கை, இஸ்லாமியத்தின் ஆதியும் அந்தமுமாகப் பார்க்கப்படுகிறது. குர்ஆன், ‘அனைத்துப் புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்’ எனத் தொடங்குகிறது. ஒவ்வோர் இஸ்லாமியனும் இந்த வரியைச் சொல்லித்தான் தொழுகையைத் தொடங்குகிறான். இறைவன் ஒன்றும் குறிப்பிட்ட மக்களுக்கு சிறப்பு விருப்பம் காட்டி, புறத்தாரை ஒதுக்கும் வேலை செய்யவில்லை. ஒட்டுமொத்த உலகினருக்கும் தாம் பொதுப்படையானவன் என்பதையே இவ்வசனத்தால் உணர்த்துகிறார்.

வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு வேற்றுமை கருதியதற்கு மத நம்பிக்கை மட்டுமே காரணமென்று சொல்லிவிட முடியாது. இஸ்லாமியன் எனும் பதத்திற்கு விளக்கம் கூறுமிடத்தில், ‘இறைவனிடம் முழுமையாகச் சரணடைபவன்’ என்றும் ‘நன்மை பாராட்டி, தீமையை விரோதிப்பவன்…’ என்றும் குர்ஆன் விளக்கமளிக்கிறது. அடிப்படையாகப் பார்த்தால், பிற மதத்தைவிடவும் இஸ்லாம் வேறானதல்ல. இறைவனுக்கும் தொண்டனுக்கும் இடையே வேறெவரும் இதில் நுழைய முடியாது. இரண்டாவது, இச்சமயத்தில் ஓரிறை நம்பிக்கையே பிரதானம். இவையே இஸ்லாமியத்தைத் தனித்துவப்படுத்துகின்றன. உள்ளத்தோடு உடலையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க இஸ்லாம் வற்புறுத்துகிறது. சுத்தம், கட்டுப்பாடு, ஆரோக்கியம் – இவை மூன்றும் இங்கு வெளிப்படை. இஸ்லாமிய வழிபாட்டில், உடலோடு ஆன்மா இரண்டறக் கலக்கிறது.

(2) சமூக வாழ்க்கை

சமூக வாழ்கையில் இரண்டு அங்கங்கள் உண்டு: மனிதனோடு பிற மனிதன் வைத்துக்கொள்ளும் தொடர்பு, சமூக நீதியோடு உறவாடும் தொடர்பு. இரண்டும் பிண்ணிப் பிணைந்தவை. நாம் இங்கு நுட்பமான இரண்டு விஷயங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். மக்கள் பலதரப்பட்ட மொழிப் பின்புலங்களையும் கலாசாரப் பின்னணிகளையும் கடந்து வந்துள்ளனர். எவ்விதச் சங்கடமும் இன்றி முறையே மதிப்பளிக்க வேண்டும்; இரண்டாவதாக, இன உயர்ச்சிக் கதையாடல்கள் இங்கு கிடையாது. இஸ்லாமியச் சமூகத்தில் வகுப்புவாதம் இல்லை. நிறம், தோற்றம், பூர்வீகம், இனம் முதலிய காரணிகளை ஊனமாகவோ, சலுகையாகவோ கடைப்பிடிப்பார் இல்லை. தனிப்பட்டோரின் அறிவு, ஞானம், தார்மீக நடத்தைகளாலே உயர்வு உண்டாகிறது. தேசத்தின் சிறப்பு அந்நாட்டின் சமூக நீதியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

இஸ்லாமியர்கள் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு, தம் பொருளாதார நம்பிக்கையை வலுப்படுத்தினர். ‘மனிதன் மனிதனாக நீடிப்பதற்கு உழைப்புதான் காரணம்.’ ‘தம் உழைப்பின் கனியை, ஆண் – பெண் இருபாலர்களும் ருசிக்க வேண்டும்…’ என்றெல்லாம் குர்ஆன் சொல்கிறது. ஆக, உழைப்புதான் பிரதானம் எனும் கொள்கை இங்கு உண்டு. முதலீடு உற்பத்தியோடு தொடர்பில்லாதது என்பதால், அதற்கு இரண்டாம் பட்சக் கவனமே கொடுக்கப்பட்டது. உழைப்பைச் சீர் செய்வதும், பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதுமே அதன் வேலை. எனவே, மூதலீட்டில் கவனம் கொள்வது இஸ்லாமியச் சமயத்தில் பெரும் பாவமாகப் பார்க்கப்பட்டது. சொத்துரிமைக்கு புனிதப் பிம்பம் கொடுக்கப்பட்டது. இத்திட்டங்கள் எப்போதும் உயிர்ப்போடு இருக்குமா எனக் கேட்டால், இல்லை என்பதே பதில். ஆனால் தன்னை ஓர் இஸ்லாமியன் எனச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் பாரபட்சமின்றி ஒருமனதாக, இப்பொருளாதாரத் திட்டங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

(3) அரசியல் வாழ்க்கை

(அ) இஸ்லாத்தின் தொடக்கம், நான்கு கலீப்களின் ஆட்சியாண்டுக் காலத்தை உள்ளடக்கியது. நபிகள் காலத்தில் இருந்து தொடங்கப்பெறும் இக்காலவெளியை அபூ-பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி முதலானவர்கள் சுமார் 30 ஆண்டு காலம் ஆண்டனர். இவ்வாண்டுகளில் பூர்வ ஜனநாயகம் நீடித்தது. மாகாணத்தின் முழு அதிகார மையமாக விளங்கும் கலீபா பதவிக்கான தேர்தல், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் போல் பொது வாக்களிப்பு மூலம் நிகழ்த்தப்பட்டது. மாகாணத்தின் தலைமைச் செயல் அதிகாரத்தையும் இறை நம்பிக்கையின் உயர்மட்டப் பதவியையும் கலீபாக்கள் அணிசெய்தனர். இராணுவமும் நாட்டு நிர்வாகமும் அவர் வசம். மறுபுறம் சட்டத்துறையும் நீதித்துறையும் வழக்குரைஞர் மற்றும் நீதிபதி வசம் ஒப்படைக்கப்பட்டன. கலீப்பாக்கள் எதேச்சதிகாரத்தால் நீதி தவறும்போது அவர்களைத் தூக்கியெறிந்து அப்பதவிக்கு வேறொருவரை நியமிக்க இது வழிவகுக்கின்றது. ஆனால் கலீப்பா தன் சட்ட எல்லைக்கு உட்பட்டு நீதி தவறாதவராக இருப்பார் எனில் இப்பரிந்துகளை நீக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. சட்டங்கள் இறைவனால் இயற்றப்பெற்றவை. அதாவது குர்ஆன் மற்றும் ஹதீஸ் (முகமது நபியின் வசனங்கள்) நூல்களில் இடம்பெற்ற வசனங்களே சட்ட அந்தஸ்து பெறும். நீதிபதிகள் சட்ட விவாதங்களில் கலந்து கொள்ளலாம். சுதந்திரமாகச் சட்ட ஆலோசனைகளை (இஜ்திகாது) விவாதித்து; குற்ற விசாரணைக்கு எவையெவைச் சரிபட்டு வரும், எவையெவைச் சரிப்பட்டுவராது என்று முடிவெடுக்கலாம்.

மேற்கத்திய அறிஞர்கள் வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரித்து முடிப்பதற்குள் இஸ்லாம் பல பரிமாணங்களை எடுத்து நகர்ந்துகொண்டிருந்தது. என்னைக் கேட்டால், இஸ்லாமியச் சமூகம் வேகமாகப் பரவியதற்கு அதன் சமய நோக்கங்கள் மட்டுமே காரணம் அல்ல. அது தன்னளவில் ஒரு ஜனநாயக அமைப்பைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் அதை அள்ளி ஆர்ப்பரித்தனர். மாபெரும் மனிதப் புரட்சிபோல அதன் தொடக்கக் காலம் அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சியில் ‘உரிமைப் பிரகடனம்’ என்ன செய்ததோ அதைத்தான் இஸ்லாமியச் சமயம் அன்றைக்குச் செய்தது. சமய மேடையில் இஸ்லாம் ஆற்றிய பணியும், அரசியல் மேடையில் பிரெஞ்சுப் புரட்சி ஆற்றிய பணியும், பொருளாதார மேடையில் ரஷ்யப் புரட்சி ஆற்றிய பணியும் ஒன்றுதான். மனித வரலாற்றில் ஏற்பட்ட இம்மூன்று மாபெரும் புரட்சிகளை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இவை உணர்த்திய உண்மைகளைத் தவிர்க்க முடியாது.

(ஆ) இஸ்லாமியச் சமூகத்தின் இரண்டாம் அத்தியாயம், உமய்யா கலீபகத்தின் நிறுவனர் முஆவியா அவர்களிடமிருந்து தொடங்குகிறது. கலீபகம் என்ற பெயரமைப்பிலிருந்தே, ஜனநாயகக் காலகட்டத்தின் அதீவிர வீழ்ச்சியைப் புரிந்துகொள்ளலாம். முதன்மைச் செயல் அதிகாரிக்கான தேர்தல் முறை தூக்கியெறியப்பட்டது. வம்சாவளி முறையில் ஆட்சிப் பீடித்தைத் தக்கவைத்தனர். இவ்வடிப்படை மாற்றத்திற்குப் பிறகும், ஆட்சியாளர்கள் தம்மை கலீப் என்றே அழைத்துக்கொண்டனர். ஆனால் உண்மையான கிலாபத் முதல் 30 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது என்பதைச் சிலர் நம்பினர்; நம்புகின்றனர். அதே சமயம் அரேபியகத்தின் கலீப்தான் இஸ்லாத்தின் சமயத் தலைவர் என்ற பாவனையும் நீடித்தது.

15ஆம் நூற்றாண்டில் உதுமானியப் பேரரசு, கிலாபத்தைக் கிழித்தெறிந்து ஆட்சியைப் பிடித்தது. துருக்கிய கலீப்பின் கருத்தியல் மற்றும் இறையியல் அதிகாரங்கள், இந்திய முஸ்லிம்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள பெருவாரியான முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இஸ்லாம் மார்க்கத்தின் புரட்சிகரமான அல்லது எழுச்சிகரமான தாக்கம், ஒன்பதாம் நூற்றாண்டில் அச்சமய விதிகளைத் தொகுத்துச் சட்டமாக்கும்போது முற்றுப் பெறத் தொடங்கியது எனலாம். இஜ்திகாது (சுதந்திரச் சட்டம்) மற்றும் ஆலோசிக்கும் முறை ஒழிந்தது. இதனால் ஆட்சிமுறையில் ஸ்திரத் தன்மை அதிகரித்தது என்றாலும் தேக்கநிலை உருவெடுத்தது.

பொது வாக்கெடுப்பு முறை ஓய்ந்தபோதே, அரசியல் அதிகாரத்தில் இஸ்லாமிய முகாந்திரங்கள் மட்டுப்பட்டன. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் இடையே, சாமானியர்களின் வாழ்க்கை பிளவுப்பட்டது. இஸ்லாமிய மும்மடிக் கொள்கையின் அடிச்செங்கலாய் விளங்கிய ஜனநாயகப் பண்பு பெயர்க்கப்பட்டது. சாமானியர்கள் அரசியல் வாழ்வில் தலையெடுப்பதை அதிகாரிகள் விரும்பவில்லை. தாங்களொரு எதேச்சதிகார அரசைக் கட்டமைக்க விரும்பினர். இஸ்லாமியப் பொதுத் திரள், தங்களைப் பிரதிநிதுத்துவப்படுத்தும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும், இஸ்லாமிய அரசும் வேண்டுமென்று கோரிக்கை மணி அடித்தார்கள். ஆனால் அந்த இஸ்லாமிய ஆட்சியில் ஜனநாயகப் பண்பு நீடிக்குமா என்று கேள்வியெழுப்பத் தவறினார்கள். இதுபோன்ற தன்னிச்சை அரசாங்கங்களின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு எவ்வித எதிர்ப்புமின்றி செவிசாய்ப்பதால்தான், இஸ்லாமியர்கள் இன்று அடிபணியும் நிலைக்குத் தள்ளிப்பட்டிருப்பதாய் உணர்கிறேன். பிரஜைகளின் அனுமதியின்றி ஆளப்படும் அரசாங்கத்திற்குக் கொடுங்கோன்மை என்று பெயர். எப்பேற்பட்ட ஆட்சியிலும் வாழ முடியும் என்று எத்தனிக்கும் மக்கள், விரைவில் சுய மரியாதையை இழந்துவிடுவார்கள்.

இஜ்திகாதை இழந்தபிறகு, இஸ்லாமியத்தின் சமூகவியல் அங்கம் பொழிவிழந்தது. மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பொறுத்து அவ்வப்போது சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இறைவன் இயற்றிய சட்டங்களாகவே இருப்பினும், தாக்குப்பிடிப்பதற்கு இதுவொன்றே வழி. மோசேயின் விதிகளிலிருந்து இஸ்லாம் வேறுபடும் இடம் இது. ‘காலங்களுக்கு ஏற்ப மாறுபடும் சட்டங்கள்தான்’ இஸ்லாமிய நீதித்துறையின் அடிநாதம். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய தத்துவியல் அறிஞர்களும் இச்செய்தியை வலியுறுத்தியுள்ளனர்: ‘ஒவ்வொரு கணமும் கடவுள் புதுப்புது சிருஷ்டிகளைச் செய்துகொண்டிருக்கிறார். காலம், பகுத்துப்பார்க்க முடியாத பலகோடி கணங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது. எனவே சிருஷ்டிகளை நிறுத்திக்கொண்டு கடவுள் தேக்கம் கொள்வார் என்றால், ஒட்டுமொத்த அண்டமும் ஒரு கனவுபோல மறைந்துவிடும்.’

இஸ்லாமியச் சமயம் 643ஆம் ஆண்டுவாக்கில் இந்திய எல்லையை முதன்முதலாகக் கடந்தது. எட்டாம் நூற்றாண்டிலேயே அரேபியர்கள் சிந்து பகுதியைப் படையெடுத்து வந்தபோதும், இந்தியப் பிராந்தியத்திற்குள் பெரிதாகக் குடியேறவில்லை. ஆனால் எட்டாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆப்கானியர்கள், பாரசீக முகலாயர்கள், துருக்கியர்கள் முதலான வேறு சில ஆசிய நாடுபிடி வீரர்கள் வட மேற்கு இந்தியப் பிராந்தியத்திற்குள் தொடர்ச்சியாக ஊடுருவிக்கொண்டிருந்தனர். 12ஆம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்லாமியர்கள் தங்கள் ஆட்சியை இம்மண்ணில் ஆணித்தரமாக பரப்பினார்கள். அதற்குப்பின் இருவேறு நாகரிகங்களுக்கு இடையிலான மோதல் தொடங்கப்பெற்றது. இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த முஸ்லிம் வரலாற்றறிஞர்கள், ஒவ்வொரு நிகழ்விற்கும் தெளிவான காலக் குறிப்புகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய அரசு இயந்திரம் சமூக எழுச்சிக்கு இடந்தர விரும்பியது. ஆனால் இந்து சமயத்தில் மனத்தளவில் மட்டுமே இவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. சமூகக் கட்டமைப்பிற்கு மாற்றம் தர விரும்பவில்லை. இத்தகு முரண்கொண்ட இரு சமூகங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும்போது, மோதல் தொடங்குவது இயல்புதான்.

இஸ்லாமியர்களின் கச்சிதமான வரலாற்றுக் குறிப்புகளையும், இந்துக்களின் முற்றுப்பெறாத, தெளிவற்ற குறிப்புகளையும் பார்க்கும்போது முரண்பாட்டிற்கான காரணம் எளிதில் விளங்குகிறது. பெளதீக அதீதவியல் குறித்து அதிகம் சிந்திந்த இந்து மனம், சமூகத்திற்கு என்று ஒரு வடிவத்தைக் கட்டமைத்துக்கொண்டு, அதன்மேல் தத்துவம், சமயம் போன்ற அருவமான உரையாடல்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தியது. குறிக்கோள் மனப்பாண்மை கொண்ட இஸ்லாமியர்கள், வரலாற்றின் மீதும் மாறிவரும் மனிதச் சமூகப் புரிதலின் மீதும் கவினம் குவித்தனர்.

அல்பெருனி எழுதிய ‘தாரிக்-அல்-ஹிந்த்,’ (இந்தியா பற்றிய விசாரணை) தொடக்கக்கால ஆவணங்களுள் முதன்மையானது. சுல்தான் கஜினி முகமதின் ஆலோசகர்களுள் ஒருவரான, அல்பெருனி மத்திய ஆசியாவைச் சார்ந்தவர். பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். கணிதத்துறையிலும் விஞ்ஞானத்திலும் பெயர்பெற்று விளங்கிய இவ்வறிஞர், அறிவியல் ஆர்வலராக இந்துக்கள் மத்தியில் அறியப்படுகிறார். இந்தியா வந்த பிற்பாடு சம்ஸ்கிருதம் கற்றுக்கொண்டார்; இந்துமதப் புனித நூல்களை படித்தறிந்தார். இஸ்லாமியர்களின் அறிவியல் மொழி என மெச்சப்பட்ட அரபியில் தம் படைப்புக்களை எழுதினார். அதில் வெறும் அறிவியல் செய்திகள் மட்டுமல்ல, இந்துக்களின் விசேஷப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அதிகத் தரவுகள் காணக்கிடைக்கின்றன. அல்பெருனி மறைந்து ஐந்து நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் அவர் படைப்புகள், ‘நன்கு அலசி ஆராயப்பட்ட அற்புதக் கோவை’ என்று நவீன ஆராய்ச்சி அறிஞர்களால் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் வாழ்க்கைச் சித்திரத்தை, ஓர் இந்து அல்லாதவர் இத்தனைத் தனிச் சிறப்போடு பதிவு செய்தமையை ஒருமனதாக ஆச்சரியத்தோடு மதிப்பிடுகின்றனர்.

உலகளவில் இஸ்லாமியம் குறித்தப் பேச்சு மேலும் விசாலமானது. இதன் காரணமாக இச்சமயத்தின் குறிக்கோள் கொண்ட பகுத்தறிவுவாதத்தை மெய்யியல் மற்றும் பெளதீக அதீதவியல் கலந்த பார்வை சுவீகரித்தது. இம்மண்ணில் புதிதாக வந்த முஸ்லிம்கள், இந்துக்களின் பல கடவுள் வழிபாட்டு முறையைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த உருவங்களுக்குப் பின்னால் உலகைப் படைத்த தனி ஒருவரின் மகோன்னத ஆற்றல் இருப்பதாக உணர்ந்தனர். இந்து முஸ்லிம் அறிவுஜீவிகளிடையிலான பாலத்தை முதன்முதலில் கட்டியெழுப்பியவர் அல்பெருனி என்று நம்மால் துணிந்து சொல்ல முடியும். அவர் தன் காலத்தில் வாழ்ந்த இந்துக்களை மட்டுமின்றி, இஸ்லாமியர்களையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்துள்ளார்.

எல்லாப் படையெடுப்பாளர்களும் விதிவயத்தால் படையெடுக்கப்படுவார்கள் என்பது அசைக்கமுடியாத உண்மை. ஆனால் வேற்றுநிலத்தில் பிடிமானம் கொண்டு மீண்டும் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்லும் படையெடுப்புச் சக்திகளுக்கும், வேறெங்கும் அதிகாரமின்றி படையெடுத்த நாட்டிலேயே தன் குடியை நிறுவும் சக்திகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இந்தியா மீது படையெடுத்த இஸ்லாமிய அரசர்கள், அதில் இரண்டாவது ரகம். ஆகவே இந்திய நாட்டை உட்கிரகித்துத் தன்வயமாக்க பெரிதும் முயற்சித்தார்கள். இந்நடவடிக்கை மேலிருந்து கீழாகத் தொடங்கியிருக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமியச் செல்வந்தர்கள் இந்துச் சமயப் புயலில் கரையொதுங்கியதற்கான சான்றுகள் அதிகம் தென்படுகின்றன. விரைவில் இந்து முஸ்லிம் கலாச்சாரப் பிணைவில் ஒரு கலை வடிவம் உருவானது. இந்திய மண்ணுக்கு அந்நியமாகத் தனித்துத் தெரிந்தது. அந்நியர்கள் பேசிய அரபி, பாரசீகம், துருக்கி முதலான பல மொழிகள் சம்ஸ்கிருத மொழியோடு கலந்து, அதன் இலக்கண விதிகளைத் தன் வயமாக்கி, உருது என்றொரு புதுமொழி உருவானது. இருப்பினும் அதிகார வரம்பில் இந்துசமயமே நீடித்தது.

இஸ்லாமியத்திற்கு மதம் மாறியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. நிச்சயமாக இதன் பின்னணியில் அதிகார வற்புறுத்தல் இருந்திருக்கக்கூடும். ஆனால் பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. இந்துக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே, இஸ்லாமியர்கள் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கடைப்பிடித்ததால் அவர்கள் எளிதில் அச்சமயம் நோக்கி நகர்ந்தார்கள். இந்திய முஸ்லிம்களில் எல்லைப்புற மாகாணங்களில் வசிப்பவர்களைத் தாண்டி, பெரும்பாலானவர்கள் இந்து ‘இனத்தைச்’ சார்ந்தவர்கள்தான்.

மக்கட் பெருந்திரளைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுசரித்து அரவணைத்துப் போக, இஸ்லாமியர்கள் அடிப்படையிலிருந்தே வேலை செய்திருந்தனர். அவர்களுக்குள் பொது நாடு, பொது விருப்பு வெறுப்பு, தொடர்ச்சியான பழக்க வழக்கம் என்று எல்லாம் ஒன்றுகூடி நினைத்தும் பார்த்திராத அளவு பிரம்மாண்ட ஒற்றுமை கைக்கூடியிருந்தது. கலவரங்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் அவை நிரந்தரமாக நீடிப்பது அல்ல. இதை ஒழித்துப் பார்த்தால், நகர்ப்புறத்திலும் கிராமத்திலும் வாழும் இஸ்லாமியர்களின் வீடு, இந்துக்களின் வீட்டிருகில்தான் அமைந்திருந்தது. பிரிவினை எண்ணத்தில் தீவிர மனப்பாண்மை கொண்ட இஸ்லாமியர்கள் கூட, பிரிவினை எண்ணம் கொண்ட இந்துக்களின் வீட்டிருகில்தான் வாழ்கின்றனர். பாரசீகத்தைத் தவிர்த்து (எனக்கு அதிகம் தெரியாத காரணத்தால்) வேறெந்த உலக நாடுகளிலும், இந்திய முஸ்லிம்களைப் போல் ஸ்திரத்தன்மை கொண்ட முஸ்லிம்களை நான் பார்த்தது இல்லை.

இஸ்லாமியர்களின் அரசாட்சி மங்கத் தொடங்கியதும், அங்கங்கு உயிர்ப்போடிருந்த இந்து அரசர்கள் மீண்டும் கொடிகட்டி தங்கள் அதிகாரத்தைத் தொடங்க ஆரம்பித்தனர். ஆனால் அவை நிலைத்த நோக்கமின்றி, இஸ்லாமியர்களைப் பழிவாங்கும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தன. சிவாஜிக்கும் ஒளரங்கசீப்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே குறுகிய நோக்கம் கொண்ட, கொடுங்கோன்மை மிக்க இந்து மற்றும் இஸ்லாமிய அரசர்கள். நாம் நினைப்பதைவிட, இந்தியப் பரப்பை ஆக்கிரமிப்பது மிகச் சுலபமாக இருந்தது. பிரிட்டிஷார் வருகைக்கு முந்தி, குறிப்பிட்ட பகுதியின் அரசியல் சூழலை ஓரளவு புரிந்துகொண்டால் இந்தியாவைக் கைப்பற்றிவிடலாம். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் மற்றொரு புதிய பரிமாணத்தை நோக்கி இந்தியா வளர்ச்சி நடைபோட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில், இஸ்லாமியர்களே இந்துக்களைவிட அதிகம் துன்பப்பட்டனர். இந்துக்கள் நூற்றாண்டுக் கணக்காக வகுப்புவாதப் பிரிவினைக்குப் பழகிப் போனவர்கள்; ஆட்சி நிர்வாகத்தில் பழக்கம் உடையவர்கள். ஆகவே அந்நியர் ஆட்சியை இஸ்லாமியர்களைவிட இந்துக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் கல்வி முதலான பிற துறைகளில் மேற்கத்திய தாக்கம் அதிகம் இருந்ததால், தங்கள் சமூக அமைப்பின் நலிந்த புள்ளியை அடையாளம் கண்டனர். மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் மாசு மருக்கள் நீங்காவிட்டால், அந்நியர் ஆட்சி நீடிக்கப்போவதில் ஆச்சரியமில்லை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், இந்து மதச் சீர்திருத்த இயக்கங்கள் சாதி வேற்றுமையை ஒழிக்கப் பெரும்பாடுபட்டு உழைப்பதை நாம் பார்க்கிறோம்.

இஸ்லாமியர்கள் ஜனநாயகப் போக்கு மிகுந்த சமூகத்திலிருந்து வந்ததால், அவர்களிடையே வகுப்புவாதக் குழுக்கள் முளைவிடவில்லை. ஆக்கிரமிப்பதாலும், ஆட்சிச் செய்வதாலும் அதுபோன்ற குழுக்கள் உருவாக மெல்லிய வாய்ப்பு உண்டு. பிற ஆக்கிரமிப்புச் சமூகங்களைப் போல, அவர்களின் பொருளாதாரத் தேவைக்கு ஆளப்படும் மக்களை நம்பியே இஸ்லாமியர்கள் ஆட்சிச் செலுத்தினர். குறைந்தது அவர்களின் தொடக்க கால ஆட்சியேனும் இங்ஙனம் இருந்தது என அறுதியிட்டுச் சொல்லலாம். எல்லைப்புற மாகாணங்களில் இஸ்லாமியர்களின் வரத்து, பன்னெடுங்காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது என்பதால், கிராமப்புற வர்க்கத்தை எளிதில் கட்டமைத்துவிட்டார்கள். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் நகரங்களில் கூட, உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பாண்மை இவர்கள் வசம் இருந்தது. ஆனால் சொத்து, நிதி போன்றவற்றை நிர்வகிப்பதில் பின்தங்கியிருந்தனர். விவசாயம் செய்வது, வணிகத்தைப் பராமரிப்பது போன்ற நடுத்தரத் தொழில்களை, இந்தியா முழுமையுள்ள நடுத்தர இந்து வர்க்கத்தினர் மேற்கொண்டு வந்தார்கள். ஆகவே நிதிக் கட்டுப்பாடு அவர்கள் வசம் இருந்தது.

(தொடரும்)

படம்: அல்பெருனி சிலை, டெஹரான்

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *