Skip to content
Home » நான் கண்ட இந்தியா #50 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 2

நான் கண்ட இந்தியா #50 – உருக்குப் பானையில் இஸ்லாம் – 2

இரண்டு விஷயங்களில் நாம் இங்கு கவனம் குவிப்பது அவசியம். ஏனெனில் இன்றைய நடப்பியலையும் எதிர்கால வழித்தடங்களையும் தீர்மானிப்பதில் அவற்றுக்குப் பெரும் பங்கு உண்டு.

(i) எல்லைப்புற மாகாணங்கள் இஸ்லாமியர்களின் தாயகமாக இருந்துள்ளது, இருக்கிறது. இந்தியா முழுவதும் முகலாயர்களின் அரசாட்சி நிழல் பரவிக்கிடந்தாலும், அவர்கள் வெறும் சிறுபான்மை அரசாகவே இருந்துள்ளனர். காலனித்துவ அரசு போல் செயல்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் எழுச்சி பெறக் காத்திருந்த இந்துப் பெரும்பான்மை அச்சுறுத்தியது. இதனால் எல்லைப்புற மாகாணவாழ் முஸ்லிம்களிடையே பிரிவினைவாத இயக்கமொன்று முளைவிட்டது. இதுகுறித்து பின்னர் பேசுவோம்.

(ii) இஸ்லாமியர்களின் மனம் முதலாளித்துவ நீரோட்டத்துடன் கலந்துபோக முடியாமல் திணறியது. முதலாளித்துவ ஆதிக்கம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்தபோது, இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதார நிலை உருக்குலைந்து போனதைத் தற்செயல் நிகழ்வு என்று மூடி மறைக்கலாமா?

முஸ்லிம்கள் ஆட்சியதிகாரத்தை இழந்த பிறகு, வேலை வாய்ப்புகளும் வரி வருவாய்களும் அவர்களை விட்டு விலகின. ஆகவே அம்மக்களின் பொருளாதாரச் சமநிலைத் தவறியது எனக் கொள்வதில் இயற்கையாகவே எவ்விதச் சிக்கலும் எழவில்லை. ஒருவேளை மதம் சார்ந்த அமைப்பு ஏதும் முயன்றிருந்தால், அவர்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அப்பேற்பட்ட அமைப்பு எதுவும் இஸ்லாமியர்கள் வசம் இல்லை. சர் சையது அகமது கானின் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் கூட, மத்திய மேல்தட்டு ரக இஸ்லாமியர்களின் நன்மைக்கே முக்கியத்துவம் அளித்தது. பொதுமக்கள் அதனால் அடைந்த பலன் சுழியம். இருப்பினும் சையது அகமது கானின் இவ்வெழுச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. இஸ்லாமியச் சிந்தனைகள் இதன் வாயிலாக நவீன உருவம் பெற்றன.

பெரும் (உலகப்) போர் நிகழ்ந்த காலத்தில்தான் நவீன இந்தியா என்ற கருத்தாக்கம் உருவானது. அதன் வடிவம் இன்றுவரை புரியாத புதிர் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அக்காலத்தில் இஸ்லாமியர்களின் வளர்ச்சிப் படிநிலை என்னவாக இருந்தது?

பெரும் போர்க் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் பேரரசுக்கு ஆதரவான நிலையில் இருந்தது. இஸ்லாமியப் படைவீரர்கள் தங்கள் கலீபகத்தைச் சார்ந்த வீரர்களை எதிர்த்தும், சீக்கியர்கள் – கூர்க்காக்கள் மற்றும் யோர்க்ஸையர் படைகளை எதிர்த்தும் சண்டையிட்டனர். போரில் வெற்றிப் பெற பாடுபட்டதற்காக, இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்ற எண்ணம் படித்த இந்தியர்கள் மத்தியிலும், பாமர மக்களிடையிலும் வலுவாக உதித்தது. நவீனக் காலத்தில் முதல் முறையாக இந்து முஸ்லிம் ஒற்றுமை உருவானது அப்போதுதான். அரசியல் நோக்கத்திற்காக, ஒரு பொது வேண்டுகோளை முன்னிறுத்தி ஓரணியில் திரண்டனர்.

போர்க் காலத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவான இந்து – முஸ்லிம் கூட்டணி, பெரும் வரலாற்றுக் கதையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஒட்டுமொத்த இந்திய ஆட்சிக்கும் இஸ்லாமியர்கள் ஆசைப்படுகிறார்கள் என்பது பொய்யுரைதான் என அம்பலமானது. இந்தியவாழ் இஸ்லாமியர்கள் இந்தியா மீது கொண்ட அன்பு, இந்நாட்டிற்கு வெளியே வசிக்கும் இஸ்லாமியர்களோடு கொண்ட அன்பையும் அரவணைப்பையும் மிஞ்சியது. மத நம்பிக்கையா, இந்தியாவா எனக் கேள்வி வந்தால் இஸ்லாமியர்கள் துளியும் தாமதிக்காமல் இந்தியா என்றே முடிவெடுத்தார்கள். ஒருவேளை இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப் பெற்றிருந்தால், கிலாபத் எழுச்சி இயக்கம் அந்நாட்டு நிலவெல்லைத் தாண்டி இந்தியாவில் சூடுபிடித்திருக்காது என்பது என் நம்பிக்கை.

மேற்கத்திய அதிகார அமைப்புகள், இஸ்லாமியக் காலனித்துவ நாடுகளுக்கு பின்வரும் செய்திக்கூற்றை விளக்குவது எளிமையென உத்தேசித்திருக்கலாம்; இஸ்லாமியர்களிடையே வாழ்க்கைப் பற்றிய சில அபிப்பிராயங்கள் இன்றும் பொதுப்படையாக இருக்கிறது. ஆனால் வித்தியாசத்திற்குட்பட்ட தேசியவாத உணர்வு அவர்களின் மதப் பற்றுக்களை விஞ்சுவது ஆச்சரியம். ஆஃப்கன் – முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினால், இந்திய முஸ்லிம்கள் நிச்சயம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடுவார்கள்; அரேபிய இஸ்லாமியர்கள் இஸ்லாமியர் அல்லாத பிற ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் அதே தீரத்துடன் துருக்கிய இஸ்லாமியர்களின் கால்கோள்களையும் எதிர்ப்பார்கள். கடந்த காலத்தில் ஜெர்மன் அரசர், மிகச் சமீபத்தில் சிக்னோர் முசோலினி முதலானவர்கள் கூட இஸ்லாத்தின் பாதுகாவலர்களாகப் படம் காட்டிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத காரியங்களைத்தான் செய்தார்கள். முஸ்லிம் பெருந்திரளின் முக்கியக் கோரிக்கை முழுமுதல் சுதந்திர நாடு. அதற்குப்பின் அவர்களுக்கு ஆட்சியாளர்களோ, பாதுகாப்பாளர்களோ தேவையில்லை, பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளைப் புரிந்து உடன் வாழும் கூட்டாளிகளே போதும்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் இயக்கம் ஒன்றுகலந்தது எப்படி? அது உணர்த்தும் செய்தி யாது?

நாம் முன்புசொன்னது போல், இஸ்லாமியர்களுக்கு கலீப்தான் சமயத் தலைவர். ஆனால் கத்தோலிக்கச் சமயத்தில் பாப்பரசருக்கு உரித்தான பதவியிலிருந்து இது வேறுபட்டது. கிறிஸ்தவத்தில் பாப்பரசருக்கு உலகியல் அதிகாரங்கள் கிடையாது. ஆனால் கலீப் சமயத் தலைவர் ஆகவேண்டும் என்றால், உலகியல் அதிகாரங்கள் அவசியம். துருக்கிச் சுல்தான் கலீப்பாவாக நீடிக்க வேண்டுமென்றால், அவர் அரசாட்சி அதிகாரங்களைத் தக்க வைக்க வேண்டும். பெரும் போரில் துருக்கிக்கு ஏற்படும் கொடுந் தோல்வி, துருக்கி விடுதலைக்கும் – கலீப்பா பதவிக்கும் உண்டாகும் அச்சுறுத்தல் என இந்திய முஸ்லிம்கள் கருதுவர். இந்த உண்மையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நன்கு அறிந்தனர். ஆகவே போர் முடிவு என்னவாக இருந்தாலும் கலீப்பாவின் ஆட்சி அதிகாரம் அவரிடமே ஒப்படைக்கப்படும்; மக்கள் எப்போதும்போல சுதந்திரமாக இருப்பார்கள் என்று பிரிட்டிஷார் தொடர்ச்சியாக அறிவித்தார்கள். கிலாபத் கிளர்ச்சி, துருக்கியர் மீதுகொண்ட பரிவின் காரணமாக கொழுந்துவிட்ட நெருப்பு அல்ல, சமய நிறுவனத்தின் ஒழுகலாறுகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற அறைகூவலின் கங்கு என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

இந்தியர்களின் உளவியல், குறிப்பாக மெத்தப் படித்த இந்தியர்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுச் சுதந்திரத்தையும் பணயமாய் வைத்து பிரிட்டிஷ் சக்திகளோடு போராடிய கடைசி இஸ்லாமியர் துருக்கியர்கள்தான். அவர்கள் கீழைத்தேய மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒன்றுதிரண்டு கலீபாவின் உலகியல் அதிகாரங்களைப் பாதுகாக்க நினைப்பது, கீழைத்தேய நாடுகளின் சுயமரியாதைப் போராட்டமாகவும், இஸ்லாமியர்களின் சமய மாண்பு மீட்சியாகவும் இருக்கலாம். எனவே 1920-24 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவின் டொமினிய அந்துஸ்துப் போராட்டத்தில், கிலாபத் இயக்கம் தேசிய மற்றும் சமய முக்கியத்துவம் பெற்றது. இந்து – முஸ்லிம்களின் ஒற்றுமையை வலுப்படுத்தியது. கிலாபத் இயக்கம் குறித்து ஏதும் அறியாத இந்து ஒருவர், தன் ஒருவேளை உணவைத் தியாகம் செய்து கிலாபத் திரள்நிதிக்காக 1 அணா பங்களித்தார். இந்தியாவுக்கு வெளியிலுள்ள முகமதியர்களைக் காட்டிலும் சக இந்தியர்களின் சகோதரப் பாசம் அவர்களைக் கட்டிப்போட்டது. படித்த முஸல்மான் ஒருவர் தான் எதிர்கொண்ட அந்நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பின்வருமாறு என்னிடம் பகிர்ந்துகொண்டார்:

‘இந்தியச் சுதந்திரத்திற்காக நாங்கள் ஒன்றுகூடிய அச்சமயந்தான், தேசிய ஒற்றுமையின் முழுப் பரவசத்தையும் கண்டடைந்தோம். அதற்குப்பின் வாய்ப்பு அமையவில்லை. பண்டைய காலம்போல் கிலாபத்தின் சமய முக்கியத்துவமோ, மக்களின் எழுச்சியோ எங்களுக்குப் பொருட்டு அல்ல. ஒருகட்டத்தில் ஒத்துழையாமை பற்றிக் கூராய்வு செய்யவும் நிறுத்திக் கொண்டோம். ஒரு தேசத்தின் ஒன்றிணைந்த குடிகளாய் தோளோடு தோள் கொடுத்து சாகும் வரை போராட வேண்டுமென்ற எண்ணமே மேலெழும்பி நின்றது. இந்து முஸ்லிம் ஒற்றுமையால் இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து வலிமைக் கூட்டிய அவ்விசேஷ உணர்வை, அந்நியர்களால் புரிந்துகொள்ள முடியாது. 360 மில்லியன் மக்களும் ஒரே நாளில் நோன்பிருந்து, ஒரே நேரத்தில் வழிபாடு செய்து, தாய்நாட்டின் விடுதலைக்காக ஒரே சத்தியத்தை மேற்கொள்ளத் தூண்டியது அந்நாள்.’

இந்த உளவியலை மனத்திலிறுத்திதான், கிலாபத் புரட்சியை இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் ஓர் அங்கமாக வடிவமைத்தனர் என்றெண்ணத் தோன்றுதிறது. அக்காலத்தில் இஸ்லாமியத் தலைவர்கள் வலிமையான, ஊர் மெச்சும் தலைமைப் பண்புடையவராய் இருந்தனர். மெளலானா முகமது அலி, டாக்டர் அன்சாரி, ஹக்கீம் அஜ்மல் முதலானோர் தம்மைச் சுற்றியுள்ள மக்களிடத்துப் பேசிப் பேசி கொள்கைகளை வரையறுத்தனர். சுதந்திர இந்தியாவின் மாதிரியாகத் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதற்கேற்றார்போல் இஸ்லாமியர்களையும் தயார்படுத்தினர். இந்துக்கள் அளவு, மகாத்மா காந்தியின் தலைமைத்துவம் இஸ்லாமியர்களாலும் வரவேற்கப்பட்டது. கிலாபத் புகாரை காந்தி ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது இஸ்லாமியர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். இந்துக்களோ இஸ்லாமியர்களோ தாய்நாட்டு விடுதலையே தலையாய தேவை என விடாப்பிடியாகப் போராடும் இருவரும் அடிப்படையில் இந்தியர்கள் என்ற அடையாளம் போதாதா, அவ்வளவுதான்.

ஒரு நாட்டில் இத்தகைய சகோதர உறவுகள் நெடுங்காலம் நீடிக்காது என்றாலும், நீடிக்கும் சிறு வேளையில் எதிர்காலத்திற்கு இவ்வுணர்வைக் கடத்துவதற்கான வேலைகள் செவ்வனே நிகழும். சில சமயம் சுய நலத்தாலும் வகுப்புப் பேதங்களாலும் நேர் எதிர் மனமாற்றம் ஏற்படுவதும் உண்டு. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இவை வெகு அதிகம். முரண்பாடுகளும் வேற்றுமைகளும் தோன்றுவதற்கு இங்கு நிறைய காரணிகள் உள்ளன என்பது முதல் காரணம்; இந்தியா நெடுங்காலமாக அந்நியர் ஆட்சிக்கு ஆட்பட்டிருப்பதால், சுதந்திர நாடுகளைப் போல் ஒன்றிணைந்த, நீடித்த முழுமையான சுதந்திரப் போராட்டத்திற்கு இன்னும் இவர்கள் தயாராகவில்லை என்பது இரண்டாவது காரணம். ஒத்துழையாமைப் போராட்டத்தை துண்டித்தபோது இதன் விளைவுகள் வெளித் தெரிய ஆரம்பித்தன. துருக்கியர்கள் கிலாபத்தைத் தடை செய்தபோது இஸ்லாமியர்களின் சமய நம்பிக்கை மீது பெரும் அடி விழுந்தது. இம்முடிவிற்கு காரணம் என்னவாக இருக்குமென்று பதில் தெரியாமல் தள்ளாடினர். மேலும் கிலாபத்தை உயிரூட்டும் அளவிற்கு வேறெந்த இஸ்லாமிய தேசமும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை.

கிலாபத் எனும் வெள்ளை யானையைச் சிறிய நாட்டினர் கையிலேந்த முயன்றால் அச்சு முறிந்து ஒடிந்துபோவார்கள். கிலாபத் அமைப்பிற்கு எந்தவொரு தேசம் ஆதரவளித்தாலும், இஸ்லாமியக் காலனிய நாடுகளைக் கொண்ட மேற்கத்திய அதிகார சக்திகள் குறிப்பிட்ட அத்தேசங்களைக் குறிவைத்து இரையாக்கின. சரியோ தவறோ, வெளிநாட்டுச் சமய நிறுவனங்களின் மேல் இஸ்லாமியர்களுக்கு இப்பற்று நீடிக்கும் வரை, ஒட்டுமொத்தமாக அவர்களை அடிமைப்படுத்த முடியாது என்ற எண்ணம் மேற்குலகில் நன்கு பதிந்துவிட்டது. இந்திய முஸ்லிம்களின் இஸ்லாமிய உணர்வெழுச்சியை டாக்டர் அன்சாரி ‘தி கான்ஃப்ளிக்ட் ஆஃப் ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்’ (ஆசிரியர் – ஹாலித் எடிப், ஜாமியா மில்லியா இஸ்லாமியா அச்சுக்கூடம், தில்லி) என்ற நூலின் முகவுரையில் கருத்தாழத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்:

முஸ்லிம் அல்லாத இந்தியர்கள், இஸ்லாமிய ஒன்றியம் (Pan-Islamism) மீது இந்திய முஸ்லிம்களின் அபிப்பிராயம் என்னவென்று புரிந்துகொள்வது கடினம் . . . விருப்பங்களாலோ, கொள்கைகளாலோ, உலகியல் ஞானத்தினாலோ உந்தப்பட்ட உணர்வல்ல இது; செயல்பாட்டுக்கு உகந்த நடைமுறைப் பார்வைக்கூட இதற்குக் கிடையாது. சற்று அந்நியமாகத் தோன்றினாலும், மேற்சொன்ன காரணங்களால்தான் இஸ்லாமிய ஒன்றிய எண்ணம் இந்திய முஸ்லிம்களின் புனிதமான, உயரிய கொள்கையாக இருக்கிறது. . . .

மேலும்:

இந்தியாவில் இஸ்லாமிய – ஒன்றியம் குறித்து முழுவீச்சிலான அரசியல் செயல்பாடுகள் கிடையாது. இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை பலம், மதவியல் சார்ந்து மட்டுமே இருந்தது. எனவே இஸ்லாமிய – ஒன்றியம் குறித்த விவாதம், மதம் சார்ந்த உரையாடலுக்கே இட்டுச்செல்லும்…

இந்திய முஸ்லிம்கள் தம் புரிதலில் சிக்கல் இருப்பதை உணர வேண்டும் என நினைக்கிறேன். தனித்துவிடப்பட எல்லோரும் இயல்பாக உணர்வதுபோல், தங்கள் சமய நம்பிக்கையின் மூலாதாரத்தைக் கண்டடையவும், பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் சமயப் பின்னணியோடு தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர். சமய வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் வெவ்வேறானதல்ல. சமயத்தை மட்டும் உயர்த்திப் பார்ப்பது ஆரோக்கியமாக இருக்காது. அதே சமயம் பழமைவாதத்தைப் போற்றுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் வித்தியாசம் புரிந்துகொள்ளாத சமூகம் பெரும் அபாயத்தில் இருக்கிறது.

இந்தியர்களுக்கு இஸ்லாமிய – ஒன்றியம் மீதுள்ள உணர்வு, இழப்பின் மீதான ஒருவகைப் பச்சாதாபம்; சுயமரியாதையைத் தட்டிப் பறிக்கும் தார்மீகக் கோபம் என்பது என் அனுமானம். டாக்டர் அன்சாரியின் முடிபு என் நம்பிக்கை சரியென்று உணர்த்துகிறது. தனக்கான அரசியல் அதிகாரத்தை இழந்தால் கூட, கிலாபத் போன்ற கவர்ச்சிகரமான சலுகை கொண்ட சுதந்திர இஸ்லாமிய தேசம் ஒன்று இருந்ததே என்று நிம்மதி அடைந்தனர். அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாமிய உலகின் சுய மரியாதையைத் தக்க வைக்கும் கருவி இது.

1920களின் தலைச்சிறந்த இஸ்லாமியத் தலைவர்களுள் டாக்டர் அன்சாரியும் ஒருவர். அவரோடு நெருங்கிய தொடர்பு எனக்கிருந்தது. அன்சாரியின் நண்பர் குலாத்துடன் அவர் வீட்டில் நிகழ்த்திய உரையாடல்கள், இந்திய முஸ்லிம்களின் அரசியல் கண்ணோட்டத்தில் இவர்கள் உட்புகுத்திய நவீன மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. மதம்தான் தனி மனிதனின் பழக்கவழக்கங்களையும் எண்ணவோட்டங்களையும் தீர்மானிக்கிறது என்று அவர்கள் நம்பினர். மேலும் இஸ்லாமியர்களின் அரசியல் கொள்கைகள் சமய விதிகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக அல்லாமல் அதன் சாரத்தைப் பற்றுவதே போதுமானது என்றனர். ஜாமியா குறித்த அத்தியாயங்களில் இவை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். ஜாமியா நிறுவனம் அளவில் சிறியதாக இருந்தாலும், இஸ்லாமியத்தின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. தொடக்கக் கால இஸ்லாமியச் சமூகத்தில் இருந்த இயற்கையான ஜனநாயகப் பண்பை மீட்டுருவாக்கம் செய்வதுபோல இருந்தது.

டாக்டர் அன்சாரி தன்னைப் பற்றிய குறிப்புகள் எதுவும் விட்டுச்செல்லவில்லை. ஆகவே இந்தியர்கள் அவர் குறித்து தெரிந்துகொள்ள இன்னும் காலம் பிடிக்கும். வெறுமனே இந்து – இஸ்லாமியர்கள் இடையிலான பாலமாகச் செயல்பட்டார் எனச் சுருக்கிவிட முடியாது. புதிய அரசியல் கருத்துருவாக்கங்களின் குறியீடாக விளங்கினார். தன் சீரான செயல்பாடுகளால் அடிக்கடி விமர்சிக்கப்பட்டார். நிலையாகச் செயல்படுவதென்பது வெற்றிகரமான அரசியல்வாதிகளின் வழக்கமான பண்பு இல்லையே. ஆனால் அன்சாரியின் திட்டம் வெற்றிகரமான அரசியல்வாதி ஆவது அல்ல, முன்னோடியாக விளங்குவது. அவர் கனவு கண்ட ஜனநாயகப் பூர்வமான இந்தியாவை அடைவதற்கு, இங்குள்ள அரைகுறையான தேசியவாத உணர்வும் குறுகலான சமயப் பார்வையும் போதிய வெளிச்சம் கொண்டிருக்கவில்லை. அன்சாரி இறப்பதற்கு முன்பு, 1936ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில், ‘மனிதர்களுக்கு இடையிலான பிணைவு சகோதர உணர்வால் மட்டுமே சாத்தியப்படும் எனக் கருதுகிறேன். இனம், மதம் தொடர்பான பிரிவினைகள் செயற்கையானவை, நியாயமற்றவை எனத் தோன்றுகிறது. இவற்றால் பிரிவினையும் பொய்ச் சண்டையுமே வலுக்கும். ஓரளவு சுதந்திரமான தேசியவாதத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஜெர்மனி அல்லது இத்தாலி போன்ற நாடுகளில் உள்ளதுபோல் தீவிர தேசியவாதத்தில் எனக்கு உவப்பில்லை. சர்வேதச ஒற்றுமைக்கு ஒருதுணையாக நிற்கும்வரை ஓரளவு இத்தேசியவாதத்தை ‘சகித்துக் கொள்கிறேன்.’ ‘சகித்துக் கொள்ளுதல்’ எனும் வார்த்தை என் அறிவுக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் தேசியவாதம் என்ற கொள்கையைப் புரிந்துகொண்ட விதம் மிகவும் அயற்சியூட்டுகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டமைப்பால் உருவான தேசியவாத எழுச்சி பஞ்சத்தை ஒட்டி, அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அவமானங்களைத் தற்காக்கும் வேலி. இத்தகு தீரமான உணர்வுகளும் கட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லாவிடில் முதலுக்கே மோசம் வந்தார்போல் நம்மேல் தொல்லைத் தொற்றிக்கொள்ளும்.‘

மேற்கண்ட இந்தச் சிறிய பகுதி, டாக்டர் அன்சாரியின் அரசியல் வாழ்க்கையில் சளைப்பற்ற ஜனநாயகப் பண்பின் பற்றுக்கோடைப் புரிந்துகொள்ளும் சான்று. சமயங்களே மனிதனின் சமூக வாழ்வையும் அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கிறது என்று அவர் நம்பிக்கைக் கொண்டாலும், தனி அரசாட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியச் சமூகம் அமைவது அவர் விருப்பம் அல்ல. எதிர்கால இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்றால், பல்வேறு நம்பிக்கைத் தளங்களில் உள்ள இந்தியர்களின் கூட்டுப் புரிதலால் மட்டுமே அது சாத்தியப்படும். அவரவர் சமய நம்பிக்கையின் தார்மீக வழியில் வாழ்ந்தாலும், நுணுக்கமான இறையியல் சமாச்சாரங்களை நவீன அரசியல் வடிவங்களோடு ஒன்றுகலக்கக் கூடாது.

நான் தில்லிக்குச் சென்றபோது ‘வகுப்புவாரி இட ஒதுக்கீடு’குறித்த பேச்சுக்கள் அதிகம் விவாதிக்கப்பட்டன. வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்பது எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவருக்கும் பிரதிநிதித்துவ அதிகாரம் வழங்கும் நடைமுறை. இந்து அடிப்படைவாதிகள் சிறுபான்மையாக இருந்த இடத்தில் இத்திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்தது; பெரும்பான்மையோர் வசிக்கும் இடத்தில் ஒத்துழைப்பு இல்லை. டாக்டர் அன்சாரி மற்றும் அவர் நண்பர்களைத் தவிர்த்து மற்றுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தார்கள். வகுப்புவாரி இட ஒதுக்கீடு குறித்து டாக்டர் அன்சாரியும் எதிர்த் தரப்பினரும் கலந்துரையாடியதன் சுருக்கத்தை இங்கு பதிவிடுகிறேன்:

‘இஸ்லாமியப் பெரும்பான்மை மற்றும் சிறுபாண்மை மாகாணங்களில், வகுப்புவாரி இட ஒதுக்கீடு திட்டம் ஒன்றுபோலவே வரவேற்கப்படுவது இஸ்லாமியர்களின் பெருந்தன்மை குணத்தையும் சீர்மையையும் வெளிப்படுத்துகிறது. வகுப்புவாத உரசல்களைத் தீர்ப்பதற்கு இதுவொன்றே வழி. சிறுபான்மைப் பகுதியில் வாழும் ஓர் இந்து, பிரதிநிதிகளைக் கொண்டு தனக்கேற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.’

டாக்டர் அன்சாரி பதிலளிக்கிறார்: ‘ஆனால் இது, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் நம்ப மாட்டார்கள்; மூன்றாம் சக்தியின் தலையீடு இல்லையென்றால் ஒத்துழைப்பு ஏற்பட வழியில்லை எனும் கருத்தை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறதே.’

‘ஒருவேளை அவர்களுக்குள் உடன்பாடு எட்டிவிட்டால் என்ன செய்யலாம்?’

‘அப்போதும் நான் இதை எதிர்ப்பேன். நவீனப் பாதையில் இந்தியா நடைப் பயில்வதை இத்திட்டம் இரண்டு வகையில் தொடர்ந்து அச்சுறுத்தும்: பணிகளுக்கான போட்டியில் எந்த மதக்காரர் வெற்றிப் பெறுவார்; இந்நாட்டிற்குள் மற்றொரு நாடு எப்போது உருவாகும் போன்ற கேள்விகள் நம்மைப் பின்தொடரும்.’

‘அப்படியானால், இஸ்லாமியச் சிறுபாண்மையினரின் நிலைமைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?’ சரியான பிரதிநிதித்துவம் இல்லாததால் இஸ்லாமியர்கள் வாய்ப்பு இழக்கப்படுவது குறித்து இங்கு அவர்கள் அடுக்கடுக்கான குறைகளைப் பட்டியலிட்டனர்.

‘இஸ்லாமியர்கள் சிறந்த இந்து ஒருவர்க்கு வாக்களிக்கட்டும், சிறுபான்மை இந்துக்கள் சிறந்த இஸ்லாமியர் ஒருவர்க்கு வாக்களிட்டும். அவ்வொருவர் பாரபட்சமின்றி அனைவர்க்கும் நன்றிகடன் புரிவார்.’

ஒருமுறை டாக்டர் அன்சாரியிடம் கேட்டேன்: ‘வகுப்புவாரி இட ஒதுக்கீடு இந்து – முஸ்லிம் உரசலைத் தவிர்க்க, ஒருவாரியான தற்காலிக நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாதா? மக்களின் தார்மீக அறிவு பரவலாக்கம் பெற்ற பிறகு, அவர்தம் மனநிலையில் மாற்றம் வந்தால் இந்நிலை எளிதில் மாறிவிடுமே?’

அதற்கு அவர் நெடிய பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டார். நான் அதைச் சுருக்கமாக எழுத முயல்கிறேன்: ‘கூடாது . . . தார்மீக அறிவு என்பது அனுபவத்தால் வர வேண்டும். உரசலோ, மோதலோ எது வந்தாலும் எதிர்கொள்வோம். இதனால் மக்களின் பொதுபுத்தி மழுங்கலாக வேண்டாம். இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களோடு உடன் நின்று ‘வகுப்புவாரி இட ஒதுக்கீடு’ திட்டத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோமானால், இந்த அபாயகரமான பிளவுச் சூழ்ச்சியில் இருந்து விடுபடலாம். நாம் இப்போது இரண்டுவிதமாக யோசித்து மானமிழந்து தனித்து நிற்கிறோமே, இதுதான் அந்நியர்கள் இந்நாட்டில் நீடித்து ஆட்சி புரிய அடிகோலுகிறது.’

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *