இந்து, முஸ்ஸிம் என எவ்வகைப் பின்னணி கொண்ட இந்தியராக இருந்தாலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உச்சபட்ச இலட்சியம் என வருகையில், இரண்டில் ஒரு முடிவைத் துணிந்து ஏற்க வேண்டும்: ஒற்றைத் தேசமா அல்லது இரட்டை (அல்லது அதற்கும் மேற்பட்ட) தேசங்களா? இவ்விரண்டில் எந்தவொரு முடிவை ஏற்றாலும் அதன் சாதக பாதகங்களைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
டாக்டர் அன்சாரி, ஒற்றைத் தேசிய இலட்சியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இஸ்லாமியர்களிடையே அவர் ஒருவருக்குதான், ஒற்றைத் தேசிய இலட்சியம் இருந்தது எனச் சொல்ல முடியாது. இந்தியாவின் ஒற்றைத் தேசியக் கனவு தற்போது எல்லைப்புற மாகாணங்களைச் சென்றடைந்திருக்கிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் இதுகுறித்து அறிந்துள்ளனர். இந்தக் கருத்துருவாக்கத்தை அவர்களிடையே கொண்டுசேர்த்த நபர், அப்துல் கஃபார் கான். இந்தியர்கள் தம்மிடம் உள்ள பலநூறு வேற்றுமைகளைத் தாண்டி, அரசியல் ரீதியான ஒற்றைக்குடைப் பார்வையின்கீழ் வருவது மிக அரிது என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில், அப்துல் கஃபார் கான் செய்த இவ்வேலை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அவர்மீது குறுக்குவெட்டு ஆய்வு செய்துபார்க்க நம்மை வற்புறுத்துகிறது.
பிரபல முகங்களைக் கொண்டு பிரசாரத் தன்மையான அரசியல் – சமய எழுச்சிக் கூட்டங்களை எல்லையில் நிகழ்த்துவது வழமையான பழக்கம். கஃபார் கானின் இயக்கம் ‘செஞ்சட்டை’ என அரசியல் – சமயப் பின்புலத்தில் தவறுதலாக அழைக்கப்பட்டாலும், சற்றே தனித்துவமானது.
அதன் வேறுபாடுகளைப் பின்வருமாறு பார்க்கலாம்:
1) இதற்கென்று எளிய, அதே சமயம் தெளிவான அரசியல் கொள்கை இருந்தது. முன்னர் உருவான எழுச்சிகள் அனைத்தும் அல்லாவின் பெயரால் உந்துதல் பெற்று, அவர் வேண்டுவதே எதுவெனத் தெரியாமல் குழப்ப மனோநிலையில் இருந்தன.
2) இவ்வியக்கம் பயிற்சி பெற்ற சிறுபான்மையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. ஏனையவை, நன்கறிந்த மனித முகங்களால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.
3) இந்தியச் சுதந்திரத்திற்கும் ஒற்றுமைக்கும் வலுசேர்க்கக்கூடிய காங்கிரஸ் அமைப்பின் பெயரால் இவ்வியக்கம் செயல்பட்டது. முன்னர் செயல்பட்ட இயக்கங்கள் இஸ்லாமியர்களின் நலனையும், எல்லைப்புற மாகாணங்களின் நலனையும் மட்டுமே முன்னிறுத்திய பிராந்திய அமைப்புகளாக இருந்தன.
அறவழிப் போராட்ட முறைமைதான் இரண்டிற்கும் உள்ள ஒரே ஒற்றுமை. வரலாற்று அறிஞர்களும் உளவியல் நிபுணர்களும் எல்லைப்புற மாகாணத்து மக்கள் குறித்து ஆச்சரியம் கொள்ளும் இடம் இது. எல்லைக்கு அப்பால் உள்ள இந்துக்களும் இஸ்லாமியர்களும் அகிம்சைவழிப் போராட்ட முறையில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் ஆயுதமில்லா தேசமொன்று கனரக துப்பாக்கி ரவைகளைக் கொண்ட காலனியாதிக்க நாட்டினை எதிர்க்கும்போது, அகிம்சை ஒன்றுதான் வழி என நிர்பந்திக்கப்படுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. எல்லை மாகாணத்து இஸ்லாமியர்கள், குறிப்பாகப் பழங்குடி மக்கள் ஆயுதங்கள் வைத்திருக்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. தன் இலட்சியப் பாதையின் இறுதிக்கட்ட வெற்றியை அடையமுடியாது போனாலும், எதிரிகள் ஓரளவேனும் கதிகலங்கும்படி தாக்குதல் நடத்த இவர்கள் முயல்வர். மேற்கொண்டு ஆங்கிலேயர்கள் பதில் தாக்குதல் நடத்தினால், இவர்கள் வாழும் காடுகள் நிறைந்த பகுதி தப்பிப்பிழைக்க வசதியாக இருக்கிறது. எல்லையில் வாழ்பவர்களுக்குக் கல்வியறிவு கிடையாது. மிகச் சாதாரணப் பின்னணி கொண்டவர்கள். ஆகவே எதிர்வரும் விளைவு குறித்து அதிகம் யோசிப்பதில்லை. இத்தகு முஸ்லிம்கள் தன் சமயத்தைச் சண்டைக்குத் தயார் செய்து, அதன் மூலம் முடிவு காண விரும்புகின்றனர்.
அப்துல் கஃபார் கான் குறித்து ஜவாஹர்லால் நேரு பேசுகையில்: ‘இந்தப் பதானி, அகிம்சைக் கொள்கையில் எங்களைக் காட்டிலும் பலமடங்கு பிடிப்புடன் இருப்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவரின் சாமர்த்தியகுணம். வெறுப்பூட்டுவதைவிட அமைதியான முறையில் போராடுவதன் அவசியத்தை தன் மக்களிடம் அவர் எடுத்துக் கூறியுள்ளார். தன் பொறையுடைமைக்கும், நிலையான உழைப்புக்கும், துன்பம் கண்டு கலங்காத தன்மைக்கும் எல்லைப்புற மக்கள் மத்தியில் இவருக்கு அசாத்திய பெயரும் புகழும் இருக்கின்றது. இத்தனைக்கும் இவர் அரசியல்வாதியைப் போல் வேலை செய்பவர் அல்ல. அரசியல்வாதிகளின் தந்திரக்கார சூழ்ச்சி முறைகள் இவருக்குத் துளியும் கைவராது. நீண்டு உயர்ந்த மனிதர், நேர்மைப் பண்புடையவர், வம்பு வழக்குகளை வெறுப்பவர், வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பவர், இந்தியச் சுதந்திரப் போராட்டச் சட்டகத்துள் தன் எல்லை மாகாண மக்களுக்கான விடுதலையும் பெற்றுவிட வேண்டும் எனத் துடிப்பவர்.’
அப்துல் கஃபார் கானின் புகைப்படத்தைப் பார்க்கும் போது ஆறடிக்கு மேல் உயர்ந்த மனிதர் எனத் தெரிகிறது. ஒடுங்கிய முகம், குழிவிழுந்த கன்னம், பரபரப்பான கண்கள். தைரியமற்ற சிறுவனைப் போல் தன் நீளமான கரங்களை உடலின் இருமருங்கும் விநோதமாக வைத்திருக்கிறார். ஒருபுறம் பயமறியாத சிறுவனின் குணாதிசயங்கள் தென்பட்டாலும், மறுபுறம் விளையாட்டு மனோபாவம் துளியும் அற்று அதற்கு நேர்மாறாக இருக்கிறார். ‘வாழ்க்கை வாழ்வதற்கானது. விளையாட்டிற்கு இடமில்லை. எந்நேரமும் தீவிரமாக இருக்க வேண்டும்’ என்பது போல் அவர் முகம் இறுக்கமாக உள்ளது.
அப்துல் கஃபார் கானுக்கு 47 வயதாகிறது. அவர் குடும்பம் முகமதுசாயி மரபில் வந்தவர்கள். அவரின் தந்தையார் கான்சாகிப் பஹ்ராம் கான், பெஷாவார் மாவட்டத்தின் உத்மான்ஜெய் கிராமத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் 20 மைல் தூரம் மேற்கில் சென்றால்தான் அக்கிராமத்தை அடைய முடியும். ஆஃப்கானிஸ்தான் செல்வதற்கு உத்மான்ஜெய் கிராமமே வாசற்படி. பெஷாவார் பற்றி எழுதிய போது அம்மக்களின் தீர்க்க மனநிலை பற்றியும் முரட்டுத்தனமான பழக்க வழக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டேன். அவை அத்தனையும் கஃபார் கானுக்குப் பொருந்தும்.
மூன்று சமயங்களைச் சார்ந்த மூன்று மனிதர்களின் வாழ்க்கை பற்றிய அவதானிப்பு, கஃபார் கானின் ஆளுமையை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியது. அதில் முதலாமவர் அவரின் தந்தையார்.
பஹ்ராம் கான் ஒரு தகைசால் எல்லைக் கிராமத்தின் தலைவர். வார்த்தைகளுக்கு கட்டுப்படும் நபர். அவ்வூர் மக்கள் தங்கள் சேமிப்பைப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைக்க பஹ்ராம் கானை முழுவதும் நம்பினர். பத்தொன்பதாம் நூற்றாண்டு கீழைத்தேய முஸ்லிம்களிடையே இவ்வழக்கம் அதிகமிருந்தது. தம் வாழ்நாள் சேமிப்பை வங்கியில் சேமிப்பதற்குப் பதில், நம்பகமான மனிதர்களிடையே கொடுத்து வைத்தனர்.
‘அவருக்குப் பழிவாங்கும் விரோத மனம் துளியும் கிடையாது. ஏமாற்றப்படுவதைக் காட்டிலும்[1], ஏமாற்றுவதே வெட்கக் கேடான விஷயம் என்று நம்பினார்.’ இது தன் தந்தையார் பற்றி அப்துல் கஃபார் கான் உதிர்த்த குறிப்பு. (மகாதேவ் தேசாய் எழுதிய டூ சர்வெண்ட்ஸ் ஆஃப் காட் புத்தகம், இந்துஸ்தானி டைல்ஸ் ப்ரெஸ், தில்லி)
பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு, உத்மான்ஜெய் கிராமம் பெஷாவர் வழக்கங்களுக்கு உட்பட்ட ஊராக இருந்தது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு இடையிலும் நில மறுசீரமைப்பு நடைமுறைகள் அங்குள்ள மூத்தோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்மூலம் எல்லோர்க்கும் சீரான நிலம் கிடைக்க ஏற்பாடு செய்தனர். கிராமத் தலைவரும் ஊர்மக்களும் ஒரே அளவு நிலம் வைத்திருந்தனர். அவரின் அதிகாரத்திற்கு எவ்விதப் பொருள் ஆதிக்கமும் இல்லை. ஆனால் பஹ்ராம் கானின் தந்தைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் வழங்கினர். அதனால் அப்போது பெருஞ்செல்வர் போல, பஹ்ராம் கானுக்குச் சொந்தமாக ஒரு மாகாணம் இருந்தது.
ஆங்கிலேயர்களுடன் அற்புதமான நட்புணர்வில் இருந்தார். கிளர்ச்சி காலத்தில் தம் மக்கள் அனைவரையும் ஆங்கிலேயர் பக்கம் நிறுத்தினார். அவரின் உறுதியான மனநிலைக்கும், கெளரவத்திற்கும் மரியாதை கிடைத்ததுபோல் இதற்கும் ஆங்கிலேயர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கு பணி செய்த உயர் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், அவரை ‘மாமா’ என்று விளிப்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.
அவருக்குக் கல்வியறிவு கிடையாது, ஆனால் இஸ்லாத்தின் அடிப்படைகள் அத்துப்படி. அனைத்தும் அறிந்த பிறகு, இஸ்லாத்தின் சாரம் ‘இறைவனின் போக்குக்கு அடிபணிவது’ என்று தன் மகனுக்குப் போதித்தார். முறையான நடத்தை, நம்பிக்கை மற்றும் அன்பின் (அமல், யக்கீன், முகாபெத்) மூலம் இறைவனை அடையலாம். ஒற்றை இறைவன்மீது நம்பிக்கை வைத்து, சரியான வழியில் செல்பவனுக்கு வாழ்வில் இரட்சிப்பு கிடைக்கும் என்றார். அப்படியொரு மனிதன் இஸ்லாமியனோ வேற்றுச் சமயத்தைச் சார்ந்தவனோ, அவரைப் பொறுத்தவரை அவன்தான் இஸ்லாமியன்.
அப்துல் கஃபார் கானுக்கு டாக்டர் கான்சாகிப் என்றொரு மூத்த சகோதரர் உண்டு. சலாம் இல்லத்தில் அவர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கஃபார் கானைவிடப் பலமடங்கு வேறுபட்டவர். எளிய, நேர்மை பண்புள்ள ஆரோக்கியமான நபர் போன்றவர் என்றாலும், இவரிடம் விளையாட்டுத்தனம் அதிகம் நிறைந்திருக்கிறது. மேற்கொண்டு கான்சாகிப்பின் அரசியல் பாதை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. தன் தம்பியின் கால்சுவடுகளை அப்படியே பின்பற்றினார். இருவரும் இளம் வயதில் ஒன்றுபோல வளர்க்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம்; இல்லையெனில் தம் தம்பியிடம் வெளிப்பட்ட தலைமைப் பண்பும் காரணமாக இருக்கலாம்.
அவர்கள் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் கிடையாது. மசூதிகளில் குர்ஆன் ஓதுவிப்பதும், அடிப்படை கல்வி பயிற்றுவிப்பதும் பிரிட்டிஷ் அரசாங்கம் தலைதூக்கிய பிறகு சீராக குறைந்தது. ஆனால் சில கிறித்துவ மிஷனரி பள்ளிக்கூடங்கள் அங்கு செயல்பட்டுவந்தன. மக்களுக்கு அவற்றின்மேல் உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது. இருப்பினும் பஹ்ராம் கான், அதைப் பொருட்படுத்தாது தன் மகன்களில் ஒருவரை பெஷாவார் அனுப்பிப் படிக்க வைத்தார். தன் 95ஆவது வயதிலும் மனக் கருத்தோட்டத்திற்கு உகந்ததைச் செய்து சிறை சென்ற பஹ்ராம் கான், மாற்றத்தில் நம்பிக்கை கொண்ட மனிதராகவே தெரிந்தார்.
சகோதரர்கள் இருவரும் தொடர்ந்து மிஷன் பள்ளியிலேயே இரண்டு வருடம் இருந்து வரலானார்கள். அப்பள்ளியின் முதல்வர் மதிப்பிற்குரிய விஹ்ரம் அவர்கள், கிறித்துவப் பண்பாட்டிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர். இவர்தான் அப்துல் கஃபார் கானை வளர்த்தெடுத்த இரண்டாவது ஆளுமை. இப்பள்ளியில் படித்த கொஞ்ச நாட்களிலும், தன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை, கிறித்துவ மிஷனரிக்கு உட்பட்ட அதே உற்சாகத்துடன் மதிப்பிற்குரிய விஹ்ரம் அவர்களிடமிருந்து பற்றிக் கொண்டார் கஃபார் கான்.
இவ்வேளையில் கான்சாகிப் தன் மெட்ரிக்குலேஷன் படிப்பில் தேர்ச்சிப் பெற்றதால், மருத்துவம் படிக்க இலண்டன் அனுப்பி வைக்கப்பட்டார். கான்சாகிப் கிறித்துவத்தைத் தழுவிவிடுவார், இங்கிலாந்திலேயே குடியமர்ந்து விடுவார் போன்ற பதட்டங்கள் தொடக்கத்தில் இருந்தன. இரண்டுமே நடக்கவில்லை. மாறாக ஓர் அழகிய ஆங்கிலேயப் பெண்ணை அவர் மணம் புரிந்து கொண்டார். ஒன்றிரண்டு பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், இரண்டாம் சகோதரர் இலண்டன் செல்லவில்லை. இவருக்கு இராணுவத்தில் சேர விருப்பம் இருந்தது. பிரபுத்துவக் குடும்பப் பின்னணி கொண்டவர் என்பதால், வேலை கிடைப்பது மேலும் சுலபம். ஆனால் ஒருமுறை இராணுவத்தில் பணியாற்றும் தன் நண்பரைப் பார்க்கச் சென்றபோது, அவரைவிட சிறிய பதவியில் பணியாற்றிய ஆங்கிலேயரால் அவர் அவமானப்பட்டதைக் கண்டதும் கஃபார் கானுக்கு மனமாற்றம் உண்டானது. அலிகரில் ஒருவருடப் படிப்பும் மிச்சத்தைத் தன் சொந்த வாசிப்பிலும் கற்றுக்கொண்டார். படிப்பு விஷயத்தில் எவரொருவரின் பற்றுதலும் இன்றி சுயம்பாக உருவெடுத்த சித்திரம் அவர்.
தம் மக்களுக்குக் கல்வி பயிற்றுவிப்பதே அவரின் முதல் குறிக்கோளாக இருந்தது. அதற்காக 1911ஆம் ஆண்டு வாக்கில், பள்ளிக்கூடங்கள் நிறுவினார். (உலக மகா) யுத்தம் முடியும்வரை புரட்சிகர நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை.
மகாத்மா காந்தியைத் தீவிர அரசியலுக்கு அழைத்துவந்த ரெளலட் சட்டம், இந்திய விடுதலை அரசியல் இயக்க வரலாற்றில் முக்கிய இடம்பெற்றது. அப்துல் கஃபார் கானை அரசியல் கிளர்ச்சியில் தள்ளிவிட்டதும் அதே ரெளலட் சட்டம்தான். பெரும் யுத்தத்தில் பிரட்டனுக்கு உதவி செய்ததன் வெகுமதியாக, இந்தியாவிற்குத் தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என நம்பியவர்களுள் கஃபார் கானும் ஒருவர். எல்லை மாகாணங்கள் ரெளலட் சட்டத்தால் கொழுந்துவிட்டு எரிந்தன. வீதியெங்கும் நிகழ்ந்த கண்டனக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பதான் மக்களை அரசியல் புரட்சிக்குத் தூண்டிவிட்டதில் முக்கியப் பங்கிருப்பதாக அப்துல் கஃபார் கானை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழ்வன குறித்து பதான்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? உண்மையில் ரெளலட் சட்டத்தால் எல்லையில் வாழ்பவர்களுக்கு எவ்விதத் தொல்லையும் இல்லை. எனினும் ஒன்றிணைந்த சுதந்திர இந்தியா எனும் கனவை உள்வாங்கிக்கொண்டு, இப்போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
கஃபார் கானை வளர்த்தெடுத்த மூன்றாம் ஆளுமையின் பங்கு இங்கிருந்து தொடங்கியது. அம்மனிதரின் பெயர் மகாத்மா காந்தி. கைது செய்யப்பட்ட கஃபார் கான், பிற சிறைவாசிகளைவிட விநோத முறையில் நடத்தப்பட்டார். அது 1919ஆம் ஆண்டு. சிறைவாச காலம் முழுவதும் அவர் கால்கள் கால்விலங்கு கொண்டு பிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் கால்களில் நுழைக்க ஏதுவான விலங்கு கிடைக்கவில்லை. ‘எனக்காகச் சிறப்பு சங்கிலி ஜோடிகள் உருவாக்கினார்களா என்று ஆச்சரியப்பட்டேன்’என்கிறார். ‘சரியான ஜோடியை காலில் மாட்டிப்பார்க்க பலவந்தமாக முயன்றார்கள். அதிலொரு கால்விலங்கு என் கணுக்கால் பகுதியில் பலமாக மோதியதில் ரத்தம் வழிந்தது. ஆனால் அதைப் பற்றி அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை, ஒன்றிரண்டு நாளில் பழகிவிடும் என்றார்கள்.’
அவரும் அதற்குப் பழகிப்போனார். மேற்கொண்டு மனத்தளவிலான அகிம்சை முறைகளும் இவ்வேதனை தாங்கும் வலியோடு அவருக்கு இப்பயிற்சியில் கிடைத்தன. இவ்வகை உள்ளார்ந்த பயிற்சிகள் இன்றி அகிம்சை முறை சாத்தியப்படாது. காந்தி, வன்முறைப் பயிற்சியாளர்களைக் கண்டு, ‘முதலில் நீங்கள் பலகையை நோக்கிச் சுட்டுத் தள்ளுவீர்கள், பின் குறி நோக்கி சுடுவீர்கள், இறுதியாக விலங்குகளை. இப்படித்தான் அழிவுக்கலையில் கைத்தேர்ந்தவராக மாறுகிறீர்கள்’ எனக் கூறுகிறார்.
ஆனால் அகிம்சைக்கு இதுபோன்ற புறப்பயிற்சிகள் எதுவும் தேவையில்லை. வன்முறைக்கு ஆளாகும்போது, எவ்விதப் பதில் தாக்குதலும் இன்றி முழுவதுமாக உம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு, கொண்ட கொள்கைக்கும் பிடிப்புக்கும் உறுதியாக இருந்து பேச்சு, செயல் உட்பட அனைத்து வழிகளிலும் வன்முறையைப் பிரயோகிக்காமல் இருப்பதே அகிம்சைக்கு வழி வகுக்கும் பயிற்சி. கஃபார் கான் முதலிரண்டு சிறை அனுபவங்களில், அகிம்சைப் பயிற்சிக்கு தம்மை வழிநடத்திக்கொண்டார். உடலை வறுத்தும் பயிற்சிகளின் மூலம் அகிம்சைக்குப் பழகிப்போனதில் அவருக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி. அகிம்சைதான் மனிதகுலத்தை இரட்சிக்கும் ஒரே கொள்கை என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தே இல்லை[2].
1920ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, தன்னை கிலாபத் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு தன் சொந்த ஊரான உத்மான்ஜெய்யில் தேசியப் பள்ளிக்கூடம் நிறுவுவதற்கான அடித்தளப் பணிகளை மேற்கொண்டார். அப்பள்ளியின் கிளைகள் மாகாணம் முழுவதும் பரவுவதற்கான முயற்சிகள் முன்னெடுத்தார்கள். அப்போதைக்கு அவர் ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்பு போராட்டங்களில் பங்குபெறவில்லை. கஃபார் கான் பயிற்றுவிக்கும் வழிமுறைகளும், பதான்களிடையே அவர் மீது வளர்ந்துவரும் செல்வாக்கும் அதிகார வட்டத்திற்கு உவப்பளிக்கவில்லை. ‘ஊரில் யாருக்கும் வராத ஆசையாக, உங்கள் மகன் மட்டும் ஏன் தாமே பள்ளிக்கூடம் நிறுவ வேண்டும் என விடாப்பிடியாக உறுதிகொண்டிருக்கிறான்?’ என்று பஹ்ராம் கானிடம் மூத்த ஆணையர் ஒருவர் கேள்வியெழுப்பினார். உடனடியாக பள்ளிக்கூடம் தொடங்கும் எண்ணத்தை விட்டொழிக்கும்படி வற்புறுத்திச் சொன்னார். பஹ்ராம் கானும் ஆணையர் கேட்டுக் கொண்டதன்படி, தன் மகனைத் தனியே அழைத்து இதுவிஷயமாகப் பேசினார்.
‘அப்பா, ஒருவேளை நம் மக்கள் எல்லோரும் நமாஸ் (இஸ்லாமியத் தொழுகை) செய்வதில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றால், நானும் நமாஸ் செய்யக்கூடாது எனச் சொல்லி வற்புறுத்துவீர்களா?’ என்று கஃபார் கான் கேட்டார். ‘உறுதியாக மாட்டேன். யார் என்ன செய்தாலும் உன் சமயக் கடமைகளைச் செய்வதற்கு, ஒருபோதும் தொல்லை தரமாட்டேன்’ என்று அவர் தந்தை பதில்சொன்னார். ‘அப்படியானால், நாட்டின் கல்வி தொடர்புள்ள இவ்விஷயத்தையும் அதேபோல் விட்டுவிடுங்கள்.’ அதன்பின் தந்தையின் ஆசிபெற்று தன் கல்விப்பணிகளைத் தொடர்ந்தார், அதனால் மூன்றாண்டுகாலம் சிறை தண்டனைக் கிடைத்தது.
________
[1] இது எனக்கு ஹேம்ப்ஸ்டியாட்டில் செய்தித்தாள் விற்பனைச் செய்யும் திரு. ஆப்பில்பை எனும் மனிதரை நினைவூட்டுகிறது. ‘நீங்கள் கணக்கு வழக்கு வைத்துக் கொள்வதில்லையே, ஏமாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் உங்களுக்கு இல்லையா?’ என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பஹ்ராம் கான் சொன்ன அதே பதிலைத் தாமும் சொன்னார்: ‘ஏமாற்றப்படுவதைக் காட்டிலும் ஏமாற்றாமல் இருப்பதையே விரும்புகிறேன்.’
[2] பின்வரும் துருக்கியக் கவிஞரின் பாடல் அகிம்சைக் கொள்கையின் உளவியலை மிக நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர் ஓர் அமைதிவாதி. அகிம்சையை அவர் வாழ்வின் சாரம்சமாகக் கொண்டிருந்தார். ‘நான் நம்புகிறேன்’ எனும் பெயரில் அவர் இயற்றிய பாடல் பின்வருமாறு:
‘இரத்தவெள்ளம் வன்முறையை வளர்க்கின்றது, வன்முறையால் இரத்தவெள்ளம் ஊற்றெடுக்கின்றது; வெறுப்புணர்வு எனும் தீயை இரத்தம் சிந்தி வளர்க்கின்றனர். ஆனால் எப்பேர்பட்ட வன்முறையாலும் அத்தீயை அணைக்க முடியாது.’
‘மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று பேச்சுக்காகச் சொல்கிறீர்கள்! அப்படியே இருக்கட்டும், அவர்களுக்கு ஆயிரம் இருதயங்கள் இருப்பதாய் நான் நம்புகிறேன்.’
‘கழுத்துப்பட்டைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்; கைவிலங்குகளில் இருந்து மணிக்கட்டு அழுத்தங்கள் விலகிப்போகட்டும்; கை முஷ்டிகள் நம்பிக்கை எனும் சங்கிலியால் இனி பிணைக்கப்படட்டும்.’ (டூபிஃக் பிக்ரெட்)
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.