இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங்.
புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர், ஒரு மடாலயம் எழுப்பினார். இந்த மன்னரின் மகனும் அடுத்ததாக ஆட்சிக் கட்டிலேறியவருமான புத்த குப்தர், தந்தை கட்டிய மடாலயத்துக்குத் தெற்கே இன்னொரு மடாலயத்தை எழுப்பினார். இதற்குக் கிழக்கே மூன்றாவது மடாலயத்தை மன்னர் ததாகதா எழுப்பினார். வட கிழக்கில் நான்காவது மடாலயத்தை மன்னர் பாலாதித்யா எழுப்பினார்.
இந்த நான்காவது மடாலயத்தின் திறப்பு விழாவுக்கு மன்னரின் அழைப்பின் பேரில் உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் துறவிகள் வந்திருந்தனர். அவர்களில் இருவர் தங்களை சீனர்களாகச் சொல்லிக்கொண்டனர். மன்னர் இவர்களைப் பின்னர் சந்திக்கச் சென்றபோது அவர்கள் மாயமாக மறைந்துவிட்டனர். இதைப் பார்த்ததும் மிகுந்த மன வருத்தம் அடைந்த மன்னர் தனது அரசாட்சியைத் துறந்துவிட்டு தான் கட்டிய மடாலயத்திலேயே பிக்குவாகிச் சேர்ந்துவிட்டார்.
அவர் புதிதாகத் துறவியானவர் என்பதால் மடாயல விதிகளின்படி அனுபவ முதிர்ச்சி பெற்ற பிற துறவிகளுக்குக் கீழ் நிலையில் நியமிக்கப்பட்டார். இதை அவர் விரும்பவில்லை. தனது அதிருப்தியை துறவியர் குழுவின் முன் வைத்தார். மடாயலத் துறவுப் படிநிலையில் உயர் நிலையை எட்டாதவர்கள் தமது வயதுக்கு ஏற்ற அதிகாரப் படிநிலையில் வைக்கப்படுவார்கள் என்று புதியதொரு விதி உருவாக்கப்பட்டது. இந்த விதி இந்த நான்காவது மடாலய நிர்வாகத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.
மடாலயத்தின் மேற்குப் பகுதியில் பாலாதித்யனின் மகனும் அடுத்த அரசனாகப் பதவியேற்றவருமான வஜ்ர இன்னொரு மடாலயம் கட்டினார். இதன் வடக்கில் மத்திய ராஜ்ஜியத்தின் அரசர் மிகப் பெரியதொரு மடாலயத்தை எழுப்பினார். இவை அனைத்தையும் சுற்றி மிகப் பெரிய மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதற்கு ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருந்தது’.
லைஃப் ஆஃப் யுவான் சுவாங் என்ற நூலிலும் கிட்டத்தட்ட இதே தகவல்களே இடம்பெற்றுள்ளன. ஆனால், பாலாதித்யர் மற்றும் மாயமாக மறைந்த சீன துறவிகள் பற்றியெல்லாம் இந்த நூலில் கொஞ்சம் அறிவார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது யுவான் சுவாங் எழுதியதில் இருந்த புதிரான விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாகவும் இருக்கின்றன.
லைஃப் ஆஃப் யுவான் சுவாங்கில் சொல்லப்பட்டிருப்பவை:
வட கிழக்கில் பாலாதித்யர் ஒரு சங்காராமா (மடாலயம்) எழுப்பினார். வெகு தொலைவில் சீனாவில் இருந்து இரண்டு துறவிகள், மன்னரின் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளவும் ஆசி வழங்கவும் வந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்த மன்னர், தனது அரச பதவியைத் துறந்து தானும் ஒரு துறவியானார்.
ஐ சிங் இந்த மடாலயங்கள் பற்றி மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இந்த மடாலயங்களின் தொடக்க காலம் பற்றி புதிய சுவாரசியமான தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
மஹா ஞான ஆலயத்தின் (மஹாபோதியின்) வட கிழக்கில் ஏழு யோஜனை தொலைவில் நாலன்தோலோ (நாலந்தா) என்ற ஆலயத்துக்கு வந்து சேர்ந்தோம். சே லி சே கி லோ தி தி (ஸ்ரீ சக்ராதித்யா) வட இந்தியாவின் ஹோலௌசேபான் சே (ராஜவம்ச) பிச்சுகளுக்கு (பிக்ஷுகளுக்கு) கட்டிய மடாலயம் இது. மூல மடாலயம் ஐம்பது அடி சதுர அளவு கொண்டது. பின்னர் தொடர்ந்து வந்த அரசர்கள் ஒவ்வொருவராகப் பல மடாலயங்கள் எழுப்பியிருக்கிறார்கள். ஜம்பு தீவில் இப்படியான அழகான மடாலயம் வேறு எங்குமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவை இருக்கின்றன.
சக்ராதித்யர் மூல மடாலயத்தை எழுப்பியது பற்றி யுவான் சுவாங்கும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பிக்ஷு ராஜவம்சம் பற்றியோ மூல மடாலயத்தின் அளவு பற்றியோ எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
நம் பார்வை
சக்ராதித்யா, அவருடைய மகன் புத்த குப்தர், ததாகத குப்தர், பாலாதித்யர், வஜ்ரா, கடைசியாக மத்திய ராஜ்ஜியத்து மன்னர் என்றெல்லாம் யுவான் சுவாங் குறிப்பிட்டிருக்கும் மன்னர்கள் யார் யாராக இருக்கும் என்று பார்ப்போமா?
பாலாதித்யர் பற்றி நம்மால் சரியாகக் கணிக்க முடியும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அவர் குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தராகத்தான் இருக்கவேண்டும். வசுபந்துவின் மாணவர். மிகிராகுலனின் எதிரி. சதீஷ்சந்திரா வித்யாபூஷன் தான் பாலாதித்யருக்கு முந்தைய மூன்று தலைமுறைகள் மற்றும் அவருக்குப் பிந்தைய அரச தலைமுறைகள் பற்றி முதலில் குறிப்பிட்டவர். கிபி.450- தான் சக்ராதித்யரின் ஆட்சி காலம் என்று அவர் உறுதியாகச் சொல்கிறார்.
1928 ல் ’ராயல் பேட்ரன்ஸ் ஆஃப் தி யுனிவர்சிட்டி ஆஃப் நாலந்தா (நாலந்தா பல்கலைக்கழகத்தின் ராஜவம்சப் புரவலர்கள்) என்ற நூலை எழுதிய ஃபாதர் ஹெராஸ் இதைக் குறிப்பிட்டதோடு மேலும் சில தகவல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். கி.பி.427ல் அதாவது ஃபாஹியான் இந்தியாவுக்கு வந்து சென்ற சில வருடங்கள் கழித்துதான் நாலந்தா மடாலயங்கள் முதலில் நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தையே பலரும் சிற் சில வேறுபாடுகளுடன் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவர்கள் சொன்னவற்றுக்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். வித்யாபூஷனும் ஹீராஸும் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர, இருவரும் யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறை எழுதிய ஆசிரியரின் பார்வையையே நாலந்தா மடாலயங்களின் ஆரம்ப கால வரலாறாக ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கிறார்கள். யுவான் சுவாங் கூட இந்த மன்னர்களின் வருட இடைவெளிகள் பற்றியோ புத்த குப்தர், ததாகதபுத்தர் ஆகியோருக்கு இடையில் என்ன சம்பந்தம் என்றோ ததாகத புத்தருக்கும் பாலாதித்தர்களுக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்றோ எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.
யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறை எழுதிய ஹுய் லி, இந்த சிந்து அரசர்கள், (சக்ராதித்யர் தொடங்கி வஜ்ராவரை) வரிசையாக தந்தை, தந்தைக்கு அடுத்தது மகன் என்று அடுத்தடுத்த தலைமுறை அரசர்களாக இருந்தனர் என்று அனைவரையும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால், மத்திய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஆறாவது மன்னரைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இந்தத் தொடர்ச்சியான ஆறு அரசர்களும் நாலந்தா மடாலயங்களை எழுப்பியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும் இந்த ஆறு மன்னர்கள் தொடர்ச்சியான தலைமுறையினர் என்று ஹுய் லி குறிப்பிட்டிருக்கும் நிலையிலும் இவர்களுக்கிடையிலான இந்த வம்சாவழித் தொடர்பை ஹெராஸ் பாதிரியார் குறிப்பிட்டிருக்கவில்லை. யுவான் சுவாங் சொல்லியிருப்பதை ஏற்றுக்கொள்கிறார். அதோடு குப்த மன்னர்கள் வரிசையுடன் இது பொருந்துகிறது என்று சொல்லியிருக்கிறார். அப்படியாக இந்த ஆறுமன்னர்கள் பற்றி அறிய வந்திருப்பது என்னவென்றால்,
யுவான் சுவாங் | குப்தர் வரலாறு |
---|---|
சக்ராதித்யர் | முதலாம் குமார குப்தர் |
புத்த குப்தர் (சக்ராதித்யரின் மகன், அடுத்த ஆட்சியாளர்) | ஸ்கந்த குப்தர் (குமார குப்தரின் மகன், அடுத்த ஆட்சியாளர்) |
ததாகத குப்தர் (அடுத்த ஆட்சியாளர்) | புருகுப்தர் (மகன் அல்ல; சகோதரர். ஸ்கந்த குப்தருக்கு அடுத்ததாக ஆட்சிக் கட்டில் ஏறியவர்) |
பாலாதித்யர் (அடுத்து அரியணை ஏறியவர்) | பாலாதித்யர் (மகன், அடுத்த ஆட்சியாளர்) |
இந்தக் கணிப்புக்கு ஆதரவான பிற விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்கிறேன்: சக்ரா என்பது மகேந்திரன் என்பதுபோன்ற பெயர். ஆதித்யா என்பது முதலாம் குமார குப்தரின் பட்டப் பெயர். அதுபோல் பாலாதித்யாவின் தந்தை புருகுப்தர் (விக்ரமாதித்யர்) தன் மகனை வசுபந்துவிடம் கல்வி கற்கவும் அனுப்பினார். எனவே பௌத்த ஆதரவு கொண்ட மன்னர்தான் அவர். விக்ரமாதித்தர் கால நவ ரத்தினங்களின் ஞான பாரம்பரியத்தின் வாரிசாக வந்த குமாரகுப்தரின் காலம் இந்த நாலந்தா பல்கலைக்கழகத்தின் தொடக்க காலத்துடன் துல்லியமாக ஒத்துப் போகிறது.
குப்தப் பேரசின் உச்ச காலகட்டம் அது. குமார குப்தரும் கல்வி, இலக்கியம் ஆகியவற்றுக்கு மிகப் பெரிய புரவலராக இருந்திருக்கிறார். வாமனாவில் இவர் காவ்யலங்காரர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். நாலந்தா மடாலயத்தை நிறுவியதன் மூலம் அவருக்கு இந்த புகழ் பெற்ற பட்டம் கிடைத்திருக்கும். அவர் பௌத்தராக இருந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், பௌத்தத்தின் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்திருக்கிறார். இதுபோன்ற மடாலயங்களை ஆதரிப்பவராகவும் இருந்திருக்கிறார்.
இந்தத் தகவல்கள், அனுமானங்கள் எல்லாம் நாலந்தாவின் ஆரம்ப காலம் தொடர்பான அறிவார்ந்த, தெளிவான வரலாற்றுத் தரவுகளைத் தருவதுபோலவே இருக்கின்றன. ஆனால், இந்தக் கணிப்புகள் அனைத்தையுமே கேள்விக்குள்ளாக்கி நாலந்தாவின் தொடக்க காலத்தை நிச்சயமின்மை மற்றும் சந்தேகத்தின் வெளிகளுக்குள் தள்ளிவிடும் வேறு பல விஷயங்களும் கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.