Skip to content
Home » நாலந்தா #14 – நாலந்தாவில் பெளத்தம்

நாலந்தா #14 – நாலந்தாவில் பெளத்தம்

நாலந்தா

நாலந்தா மடாலயம் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அது பெளத்த மதத்தின் மகத்தான கல்வி மையம்; கீழை நாடுகளின் சிந்தனை மற்றும் மதங்களின் மீது பெளத்தம் செலுத்திய மிகப் பெரிய தாக்கத்துக்கு நாலந்தா மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. எனவே நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் உலகப் புகழ் பெற்ற பெளத்த கல்வி மையமாக இருந்த நாலந்தா, பெளத்த சிந்தனை மற்றும் செயல்பாடுகளின் வளர்ச்சிப் போக்கில் என்னவிதமான பங்கை ஆற்றியிருக்கிறது என்பதை நாம் கட்டாயம் பார்த்தாகவேண்டும்.

மத்திய காலகட்டங்களில் திபெத்தைப் பொறுத்தவரையில், நாலந்தா புனித ஒளி வீசியதோர் மையமாக இருந்திருக்கிறது. அதுவே அனைத்து அறிவுப் புலங்களின் ஆதார மையமாக இருந்திருக்கிறது. மஹாயானத்தின் நல்ல விஷயங்களாக தாராநாதர் கருதியவை அனைத்துக்கும் இந்தப் பல்கலையின் துறவிகள், ஆசிரியர்கள், புனித நூல்கள், தத்துவங்கள், புகழ் பெற்ற சீர்திருத்தவாதிகள் அனைத்துக்கும் நாலந்தாவே மூல காரணம் என்று எந்தவொரு தயக்கமும் இன்றி உதுதியாக முன்வைக்கிறார். யுவான் சுவாங் குறிப்பிட்டிருப்பவை இதை உறுதிப்படுத்தவும் செய்கின்றன: நாலந்தாவில் அனைத்து துறவிகளும் மஹாயாணம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; திக்நாகரின் சீடர் தர்மபாலர், அசங்க யோகாச்சார்ய பிரிவின் புகழ்பெற்ற குரு, தனக்கு யோகாசாரபூமிசாஸ்திரத்தைக் கற்றுக் கொடுத்த சீலபத்ரர் போன்றவர்கள் எல்லாம் நாலந்தாவில் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரித்ததாக யுவான் சுவாங் குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு அவர் சேகரித்த புனித நூல்கள், அவர் மேற்பார்வையில் மொழிபெயர்க்கப்பட்டவை இவற்றில் பெரும்பாலானவை சந்தேகத்துக்கு இடமின்றி நாலந்தாவில் இருந்து பெறப்பட்டவையே. அவற்றில் ஹீனயானம் தொடர்பானவை வெறும் 17 நூல்கள் மட்டுமே. 58 நூல்கள் மஹாயானம் தொடர்பானவை. வஜ்ரப்ராசேதிகா, ப்ரஞானபராமிதா முதலான தாந்ரிக நூல்கள், ஜப்பானைச் சேர்ந்த மந்திர பெளத்த ஷின் கான் ஷு புனித நூல், அமோகபாசஹ்ரதயா போன்ற சிலவும் இதில் அடங்கும்.

மஹாயானம், ஹீனயானம்

மூலசாரவாஸ்திவாதினின் ஹீனயான பிரிவைச் சேர்ந்த ஐ சிங் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்: வட இந்தியவிலும் தெற்கு கடல் தீவுகளிலும் இருப்பவர்கள் ஹீனயானப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்கிறார். ஐ சிங்கின் குறிப்புகளைத் தொகுத்த தகாகசு தனது சாராம்ச உரையில் ஆர்ய மூலாசாரவாஸ்திவாத நிகாயம் மகதத்தில் அதாவது நாலந்தாவில் செழித்து வளர்ந்துவருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நாலந்தாவில் பின்பற்றப்படும் விதிகள், சடங்குமுறைகள் குறித்து ஐ ஐங் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் நாலந்தாவில் இருந்த பத்து ஆண்டுகளில் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மத விஷயங்களில் அவருடைய பார்வையைப் பகிர்ந்துகொண்ட ஆன்மிகக் குழுவினருடனே அவர் வாழ்ந்திருக்கிறார் என்றே இதிலிருந்து தெரியவந்திருக்கிறது.

ஐ சிங்குக்கு தான் சொல்வது என்ன என்பது நன்கு புரிந்துதான் இருந்திருந்தது. அவர் எதையும் தவறாகச் சொல்லவில்லை. யுவான் சுவாங் வந்து சென்ற காலத்துக்கும் ஐ சிங் வந்து போன காலத்துக்கும் இடையில் நாலந்தாவில் மஹாயானத்திலிருந்து ஹீனயானத்துக்குத் தலை கீழ் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. உண்மையில் பெளத்தத்தின் சிந்தனை வரலாறு என்பது இதற்கு நேர்மாறானதுதான்.

விஷயம் என்னவென்றால் பெளத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே மிகப் பெரிய வேறுபாடு இருந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டு பிரிவுகளும் ஆரம்பத்திலிருந்தே மிக நெருக்கமான பந்தத்தைக் கொண்டதாகவும் இருந்திருக்கும். யுவான் சுவாங்கும் ஐ சிங்கும் வேவ்வேறு வார்த்தைகளில் விவரித்திருப்பவை எல்லாம் ஒரே விஷயங்களாகவே இருந்திருக்கும். இருவரும் தம்மை அதிகம் ஈர்த்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்து எழுதியிருக்ககூடும்.

அசங்காவின் தலைமையில் யோகாசார்ய லட்சியவாத தத்துவங்கள் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, மஹாயானம், ஹீனயானம் ஆகியவற்றுக்கிடையே இருந்த மெல்லிய இடைவெளியும் இல்லாமல் நாலந்தாவில் ஆனது என்று க்ரோம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.யோகாச்சார்ய ஆச்சார்யர்கள் ஒரே பிரிவில் இருந்து மட்டும் எதையும் எடுத்துக்கொள்ளாமல் அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்துப் பின்பற்றினர். இதுவே அசங்கா முன்வைத்த வழிமுறை. இதனால் சார்வாகர்கள் (ஹீனயான துறவிகள்) மத நம்பிக்கை கொண்டவர்களாகிவிட்டனர். வசுபந்துவின் விஷயத்தில் இது நன்கு தெரியவருகிறது. அவர் 18 பிரிவுகளின் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். சூத்ரங்கள், பல்வேறு தரிசனங்களின் வினயங்கள் வேறுபடும் இடங்கள் பற்றியும் படித்திருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட துறவிகள் பரம்பரை ஒரு இடத்தில் மஹாயான மார்க்கத்தைச் சேர்ந்ததாகவும் இன்னொரு இடத்தில் ஹீனயான மார்க்கத்தைச் சேர்ந்ததாகவும் ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். மாத்யாமிகம் மற்றும் யோசாசார்யம் இரண்டுமே மஹாயானத்தின் வழியிலானவை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியாக இரண்டு பிரிவுகளின் சடங்கு சார்ந்த வேறுபாடுகள் எல்லாம் மடாலயத்தில் இருந்த தத்துவ பள்ளிகளினால் ஓரங்கட்டப்பட்டுவிட்டிருந்தன. இரு பிரிவுகளின் விதிமுறைகள் எல்லாம் அர்த்தம் இழந்துவிட்டிருந்தன. இரண்டின் அடிப்படை தத்துவார்த்த அம்சங்கள் ஒன்றாகவே கருதப்பட்டன.

யுவான் சுவாங் யோகாசார்ய நூல்களை மட்டும் கற்கவில்லை; சில ஹீனயான நூல்கள் மட்டுமல்லாமல் பிராமண சாஸ்திரங்கள் கூட அவர் கற்றுக் கொண்டிருந்ததை முன்பு பார்த்தோம். போஸ்ச் குறிப்பிட்டிருப்பதுபோல், மஹாயான மார்க்கத்தைப் பின்பற்றியபோதிலும் ஹீனயான மார்க்க நூல்களை வெறுத்து ஒதுக்காத துறவியர்கள் மத்தியில் வாழ்ந்ததால் ஐ சிங்குக்கு எந்த அசெளரியமும் இருந்திருக்கவில்லை. மகதத்தில் சர்வாவாஸ்திவாதின்கள்தான் அதிகம் இருந்ததாக அவர் சொன்னபோது பெயரளவில் ஹீனயானப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் அசங்க யோக வழியை பின்பற்றியவர்கள் மற்றும் மஹாயானத்தைப் பின்பற்றியவர்களையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கவேண்டும்.

ஐ சிங்கும் கூட ஹீனயான மார்க்கத்தை இறுக்கமாகப் பின்பற்றியிருக்கவில்லை. இந்தியாவில் இருந்து சீனாவுக்குச் சென்றபோது அவர் கொண்டு சென்றவற்றில் பாதிக்கு மேல் மஹாயான நூல்களே இருந்தன. சில தாந்திரிக நூல்கள், சில தாரணி நூல்களும் இருந்தன.

தந்திராயனம்

யோகாசார்யத்திலிருந்து புதியதாக ஒரு கிளையாக தந்திராயனம் நாலந்தாவில் இந்தக் காலகட்டத்தில் உருவானது. இந்தப் புதிய கிளைக்கு எதிர்ப்புகளும் இருந்தன. யோகாசார்யத்துக்கும் தந்திராயனத்துக்கும் இடையிலான வேறுபாடு பற்றி க்ரோம் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

’பழைய சிந்தனைகள் கைவிடப்பட்டு புதிய சிந்தனை உருவாவதென்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டுக்காட்ட முடிந்த ஒரு காலகட்டத்தில் நடந்தேறுவதில்லை. ஒன்றுடன் ஒன்று பின்னிக் கலந்ததாகவேதான் பரிணாம வளர்ச்சி நடந்துவரும். ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை ஏற்றுப் பின்பற்றுபவர்கள் மனதில் படிப்படியாக, காலப்போக்கில் புதிய சிந்தனையை ஏற்கத் தொடங்குவார்கள். ஆரம்ப கட்டத்தில் புதிய சிந்தனைகளுக்கு குறைவான ஆதரவுதான் இருக்கும். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி பெரும்பான்மை சித்தாந்தமாக அது பரிணமிக்கும்’.

நாலந்தாவில் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் பெளத்தமும் இதுபோன்றதொரு பரிணாம வளர்ச்சியை அடைந்துவந்தது என்பதை முன்பே நாம் பார்த்திருக்கிறோம்.

போஸ்சும் ஸ்டெஹெய்மும் சொல்லும் அளவுக்கு பெளத்த சிந்தனை வளர்ச்சியில் நாலந்தாவுக்குப் பெரிய பங்கு ஒன்றும் இல்லை; காஷ்மீர பெளத்தத்தில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகளே தூர கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கின்றன என்று ஆனந்த குமாரசாமி கூறுகிறார். நாலந்தாவில் கிடைத்திருக்கும் மிகுதியான தரவுகளையும் காஷ்மீர பெளத்தம் தொடர்பாகக் கிடைத்திருக்கும் குறைவான தரவுகளையும் வைத்துப் பார்க்கும்போது இந்தக் கூற்று எனக்கு ஏற்புடையதாக இல்லை. பெஷாவரிலிருந்த வீரதேவர் கூட நாலந்தாவுக்குச் சென்ற பின்னரே உச்சத்தை எட்டினார்.

யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறை எழுதியவர் குறிப்பிட்டிருக்கும் இந்த விஷயம் மிகவும் முக்கியமானது: நாலந்தா மடாலயத்தின் அருகில் சிலாதித்ய ராஜா, 100 அடி உயரத்தில் பொன்னிற பித்தளைத் தகடுகளால் மூடப்பட்ட ஒரு விஹார் கட்டி எழுப்பியிருக்கிறார். உலகம் முழுவதும் உள்ளவர்களால் அது புகழ்ந்து போற்றப்படுகிறது.

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *