Skip to content
Home » நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

நாலந்தா

கன்யோதா (கஞ்சம்) பகுதியை வென்ற பின்னர் மன்னர் ஒரிஸ்ஸாவுக்கு வந்தார். இந்த தேசத்து புரோகிதர்கள் ஹீனயானத்தை ஆர்வமுடன் படிக்கின்றனர். மஹாயானத்தை அதிகம் படிப்பதில்லை. அது புத்தரால் அருளப்பட்டது அல்ல; திரிபுக் கொள்கைக்காரர்களால் முன்வைக்கப்பட்ட விண் மலர் கோட்பாட்டைச் சேர்ந்தது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

விண் மலர் கோட்பாடு சுராங்கம சூத்ரத்தில் விளக்கப்பட்டுள்ளது. நாலந்தாவில்தான் இது உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து புறவயக் கோட்பாடுகளும் விண் மலரைப் போன்றவையே. அதாவது நிஜமல்ல; மறைந்துவிடக்கூடியவையே என்று அது சொல்கிறது.

மன்னர் வந்ததைப் பார்த்ததும் அவர்கள் உரையாடலை ஆரம்பித்தனர்: நாலந்தா விஹாருக்கு ஒரு பொன்னிறக் கூரை வேய்ந்ததாகக் கேள்விப்பட்டோம். அது மிகவும் பாராட்டப்படவேண்டிய சாதனை. ஆனால், நீங்கள் ஏன் ஒரு காபாலிக கோவில் அல்லது அது போல் ஏதேனும் ஒன்றைக் கட்டக்கூடாது?’ என்று கேட்டனர்.

மன்னர் கேட்டார்: இப்படி இடித்துரைப்பதன் மூலம் எதைச் சொல்லவருகிறீர்கள்?

அவர்கள் சொன்னார்கள்: நாலந்தா மடாலயமும் அதன் விண் மலர் கோட்பாடும் காபாலிக தத்துவத்திடமிருந்து வேறுபட்டதல்ல. இதுதான் எங்கள் இடித்துரைப்பின் அர்த்தம்.

இங்கு ஹீனயானமும் மஹாயானமும் தந்த்ராயனம் நோக்கித்தான் செல்லத் தொடங்கியிருக்கிறது. சைவ தத்துவத்துடன் இணையவில்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

திபெத்: லாமோயிஸம்

பல நாடுகளில் பெளத்தம் பரவியதற்கும் வளர்ச்சி அடைந்ததற்கும் நாலந்தாவின் பங்கு மிகவும் அளப்பரியது என்று தாரநாதர் குறிப்பிட்டிருக்கிறார். எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் நாலந்தாவைச் சேர்ந்த சாந்த ரக்ஷிதா, பத்மசம்பவா, கமல சீலர் போன்ற புகழ் பெற்ற ஆசிரியர்களை திபெத் மன்னர் கிரி ஸ்ரிங் தியேசன் தமது நாட்டுக்கு வரும்படி அழைத்தார் (கி.பி. 728-786). அங்கு அவர்கள் லாமா மடாலயம் ஒன்றை நிறுவினர். அப்படியாக முந்தைய அரச மதமாக இருந்ததை இடம்பெயர்த்தனர். ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாலந்தாவில் தந்த்ராயன பெளத்தம் செல்வாக்குபெறத்தொடங்கியது என்பதற்கு இந்த திபெத் பாரம்பரியம் மிக வலுவான ஆதாரமாகத் திகழ்கிறது.

தேவபால தேவருடைய காலகட்டத்து நாலந்தா செப்புத் தகடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றைப் பார்த்தால், ஆர்ய பிக்ஷுகள் எல்லாரும் தந்த்ரிக போதிசத்வர்களே: ’தந்த்ரிகபோதிசத்வாகனாஸ்ய… சதுர்திசார்யபிக்ஷுசங்கஸ்ய’.

’இவற்றிலிருந்து இந்த பிக்ஷுகள் தாந்திரிக பெளத்தர்களாகிவிட்டனர். ஆனால் ஒரு காலத்தில் பெரு மதிப்புடன் போற்றப்பட்டிருந்த மஹாயான போதிசத்வர்கள் அவர்களுடைய பணியைச் செய்துமுடித்துவிட்ட நிலையில் புதிய தந்த்ரிக போதி சத்வ திருமேனிகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன’ என்று போஸ்ச் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பெளத்த நுல்களின் சீன மொழிபெயர்ப்புகளும் இதையே சொல்வதைச் சுட்டிக்காட்டித் தனது கூற்றுகளை உறுதிப்படுத்தவும் செய்திருக்கிறார்.

ஏழாம் நூற்றாண்டில் சீனாவுக்கு நாலந்தாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட படைப்புகளில் கணிசமானவை ஹீனயான பெளத்த பிரிவைச் சேர்ந்தவையே. ஆனால், எட்டாம் நூற்றாண்டில் சுபாகரசிம்ஹரால் (கி.பி.716-35) மொழிபெயர்க்கப்பட்டவை எல்லாமே மஹாயான நூல்களே. அவர் நாலந்தா மடாலயத்தில் இருந்து சீனாவுக்குச் சென்ற ஸ்ரமணர். 10-ம் நூற்றாண்டில் தர்மதேவர் அல்லது ஃபாஹியானால் (கி.பி.973-1001) மொழிபெயர்க்கப்பட்ட 118 நூல்களில் சுமார் நூறு தந்த்ராயண பெளத்த பிரிவைச் சேர்ந்தவையே.

கால சக்ராயனா

நாலந்தா பெளத்தம் மறைவதற்கு முன்பாக இன்னொரு முக்கிய விஷயமும் நடந்தேறியது. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் இது நடைபெற்றிருக்கவேண்டும். நாலந்தாவில் கால சக்ர பெளத்தம் வரவேற்பு பெற்றது. இந்தப் புதியவகையின் புதிரான மூலம் வைஷ்ணவமாக இருக்கலாம். 16-ம் நூற்றாண்டு திபெத்திய படைப்பு ஒன்றில் இது நாலந்தாவுக்குள் அறிமுகப்படுத்தது பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. அந்தக் கதை: அவர் (திஸ்லு அல்லது சிலு என்ற பண்டிதர்) மத்திய இந்தியாவில் இருந்த நாலந்தாவுக்கு வந்தார். உலகைக் காப்பாற்றிய பத்து அவதாரங்களைக் குறிப்பிட்டுவிட்டு அதன் கீழே அவர் எழுதியவை:

ஆதி புத்தரை அறியாதவர் கால சக்கரத்தையும் அறியமாட்டார்.

கால சக்கரத்தை அறியாதவர் இறை அம்சங்கள் எத்தனை என்பதையும் அறியவும் மாட்டார்.

இறை அம்சங்கள் எத்தனை என்பது தெரியாதவர் அதி உயர்ந்த ஞானத்தை அறியவும் மாட்டார் (வஜ்ர தார ஞானம்)

உயர் ஞானத்தை அறியாதவர் தந்த்ரிக தத்துவத்தை அறியமாட்டார்.

தந்த்ரிக தத்துவத்தை அறியாதவர் பிறவிச் சுழல்களில் உழண்டு வருவார்கள். அதி உயர் வெற்றியாளரின் பாதையில் இருந்து விலகிச் செல்வார்கள் (பகவான் வஜ்ர தாரா)

எனவே ஒவ்வொரு லாமாவும் (குருவும் மதத் தலைவரும்) ஆதி புத்தர் பற்றிக் கற்றுத்தரவேண்டும். மோக்ஷத்தை விரும்பும் ஒவ்வொரு சீடரும் அதைக் கேட்க வேண்டும்.

மதிப்புக்குரிய நரோதபா (நரோத்தமர்?) அப்போது பிஹார் மடாலயத்தின் தலைமைப் பதவியில் இருந்தார். 500 பண்டிதர்களுடன் அவர் இந்தக் கூற்றுகளை மறுத்து வாதிட்டார். ஆனால் வந்தவரை வெல்ல முடியமல் போனதும் அவர் காலில் விழுந்து தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவரிடமிருந்து ஆதி புத்தர் பற்றிக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் புதியவருடைய தத்துவத்தை ஏற்றுக்கொண்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

அப்படியாக பெயரில் மட்டும் பெளத்தம் என்பதைக் கொண்டிருப்பதுதவிர வேறு எந்தத் தொடர்பையும் கொண்டிராத இந்தக் கால சக்ர பெளத்த தத்துவம் நாலந்தாவில் வரவேற்பு பெற்றது. சைவம், வைணவம் ஆகிய இந்த தேசத்தின் மத பாரம்பரியங்களிடமிருந்து சற்றே மாறுபட்ட நம்பிக்கைகள், வழிமுறைகள் ஆகியவற்றுடனான நெருக்கம் பெளத்தத்துக்கு என்று இருந்த தனித்தன்மை வாய்ந்த நிலையை வலுவிழக்கவைத்துவிட்டது. அப்படியாக பெளத்தம் ஹிந்துமதத்தின் செல்வாக்கு மிகுந்த நம்பிக்கைகளுடன் இணைந்து அதன் அடையாளத்தை இழக்கத் தொடங்கியது.

தீவுகளில் செல்வாக்கு

நாலந்தாவில் பெளத்தம் அடைந்த மாற்றத்தின் முக்கியமான காலகட்டங்கள் சீனர்கள் ’தென் கடல் ராஜ்ஜியங்கள்’ என்று அழைத்தவற்றில் வெளிப்படுகின்றன. அந்தப் பகுதிகள் நாலந்தாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்திருக்கின்றன. முன்பே பலமுறை நாம் குறிப்பிட்ட நாலந்தா தேவ பாலர் செப்புத் தகடு பற்றிய அற்புதமான கட்டுரையில் போஸ்ச் இந்த விஷயம் தொடர்பாக மிக ஆழமாக அலசியிருக்கிறார். அவர் சொன்ன தீர்மானத்தைத்தாண்டி நாம் வேறுஎதையும் சொல்லமுடியும் என்று தோன்றவில்லை:

‘நாலந்தா மடாலயத்தின் முக்கிய தருணங்களையும் தீவுப்பகுதிகளில் புத்த மதத்தின் வரலாறையும் அருகருகே ஒப்பிட்டுப் பட்டியலிட்டுப் பார்த்தால், நாலந்தாவில் பெளத்தம் என்ன மாற்றங்களை அடைந்ததோ அதே வரிசையிலேயே ஸ்ரீ விஜயம், பின்னர், ஜாவா பகுதிகளிலும் இணையாக அதே மாற்றங்கள் நடந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். நாலந்தா மடாலயம் வளரத்தொடங்கிய பின்னரே ஸ்ரீ விஜயத்தினுள் பெளத்தம் பரவ ஆரம்பித்திருக்கிறது.

நாலந்தா உச்சம் (ஏழாம் நூற்றாண்டு) தொட்ட காலத்தில்தான் பலேம்பாங் பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகமும் உயரத்தைத் தொட்டிருக்கிறது. மூல பெளத்த கோட்பாடு ஹீனயானத்தில் ஆரம்பித்து மஹாயான யோகாச்சார்யத்தினூடாக தந்த்ரிக பெளத்தம் நோக்கி நகர்ந்ததிருக்கிறது. அது பெருமளவுக்கு சைவ தாக்கம் கொண்டது. இறுதியில் அது பைரவ வழிபாடு தத்துவமாக ஆனது. இப்படியான மாறுபாடுகளை அப்படியே ஸ்ரீ விஜயத்திலும் பின்னர் ஜாவாவிலும் இதே வரிசையில் இதே பரிணாமத்தில் நடந்தேறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரே ஒரு வேறுபாடை மட்டும் குறிப்பிடவேண்டும். 12-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் நாலந்தா முற்று முழுதாக அழிக்கப்பட்ட பின்னரும் ஜாவாவில் பெளத்தம் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றதாகத் திகழ்ந்திருக்கிறது’.

ஒருவகையில் போஸ்சின் இந்தப் பார்வைகள் 1925-ல் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பிந்தைய ஆய்வுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகளில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும். பலேம்பாங் பகுதியில் இருக்கும் பகித் செகுந்தக் பகுதிகளின் புத்தர் கற்ச்சிலையைப் பார்க்கும்போது போஸ்ச் குறிப்பிட்டிருக்கும் காலத்துக்கு முன்னதாகவே பெளத்தம் அங்கு பரவியிருக்கும் என்ற முடிவுக்கு நம்மை வலுவாக இட்டுச் செல்கின்றன. பெரிதும் கிருஸ்ன டெல்டாவிலிருந்து சென்றிருக்கலாம். ஆனால் இந்தத் தீவுக் கூட்டத்தில் பின்னாளில் நாலந்தாவின் செல்வாக்கு யாராலும் மறுக்கவே முடியாத அளவுக்கு ஆழமாக இருக்கிறது. போஸ்ச் அது பற்றிக் குறிப்பிட்டிருப்பதையெல்லாம் உண்மை என்று நிச்சயம் ஏற்றுக் கொள்ளலாம்.

(முற்றும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *