அம்மாவுக்கு அடுத்து நிகோலாவைத் தூக்கி வளர்த்த அண்ணன் டேன் டெஸ்லா அவரது 12ஆம் வயதில், குதிரையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து மரணடைந்தார். இது நடந்தது 1861ஆம் ஆண்டில். அப்போது நிகோலாவுக்கு ஐந்து வயது. தன் வாழ்வில் அவர் சந்தித்த முதல் பெரும் அதிர்ச்சி அது.
குடும்பம் நிலைகுலைந்து போனது. பெற்றோரும் சகோதரிகளும் அழுத அழுகையைக் கண்டு ஐந்து வயது நிகோலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. டேனின் உடலைச் சவப்பெட்டிக்குள் வைத்து, இறுதிப் பிரார்த்தனைக்கும் அடக்கத்துக்கும் எடுத்துச் செல்லும்போது, தேவாலயத்தில் நிகோலா அழுது அடம்பிடித்திருக்கிறார்.
டேன் அடக்கம் செய்யப்பட்ட பின், நிகோலா, ‘அண்ணன் தூங்கச் சென்று விட்டான். இறைவனிடம் சென்றுவிட்டான் என்று கூறினீர்களே. எப்போது வருவான்?’ என்று கேட்டுக் கேட்டு மாய்ந்து போனாராம்.
டேன் எப்படிப்பட்டவர், அவர் எப்படி மற்றவர்களைக் கவனித்துக்கொண்டார், ஒவ்வொருவர்மீதும் எப்படியெல்லாம் பாசத்தைப் பொழிந்தார் என்று வீட்டிலிருப்போர் பேசிக்கொண்டபோது நிகோலா கலங்கிப் போனார். நீரையும் நெருப்பையும் அறிவியல்பூர்வமான முறையில் தனக்கு அறிமுகப்படுத்திய அண்ணனின் இழப்பு நிகோலோவைப் பாதித்தது.
தனது பதின்ம வயதில் ஒரு நாள் குடும்பத்தாருடன் பேசும்போது, டெஸ்லா டேனை இவ்வாறு நினைவுகூர்ந்திருக்கிறார். ‘அவருக்கு அடிபட்டு, நீங்கள் சிகிச்சை கொடுக்க முயற்சி செய்தபோது எனக்கு நினைவிலிருந்தது ஒன்றுதான். அந்த அறையில் வெளிச்சம் இல்லை.’
அண்ணனின் அறையில் இல்லாத வெளிச்சத்தை பின்னாள்களில் உலகுக்கே வழங்கினார் டெஸ்லா. அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்குத் தேவைப்பட்ட கண்களை உறுத்தாத விளக்கு தொடங்கி அதிகபட்ச பிரகாசத்துடன் ஒளி வீசும் ஆற்றல்மிக்க விளக்குகள்வரை பலவற்றை அவர் அறிமுகப்படுத்தினார்.
டேன் தன்னைச் சுமந்துசென்று காட்டிய இடங்களும் அழகாக இட்டுக்கட்டிச் சொன்ன கதைகளும் நிகோலாவின் பிஞ்சு மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டன.
பிறகொருநாள் ஒரு பேட்டியில் பின்வருமாறு சொல்கிறார் நிகோலா. ‘சிறு வயதில் டேன் நிகழ்த்திக் காட்டிய விளையாட்டுகள் மறக்கமுடியாதவை. ஒரு நீண்ட குச்சியிலும், சற்றே நனைந்த துணியிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அவர் நெருப்பை இடம் மாற்றிக் காட்டுவார். டேன் விவரித்த கதைகளை நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அவற்றில் சில பகுதிகள் என்னுடைய நினைவாற்றல் காரணமாக பதிந்துபோய்விட்டன. என் கற்பனைத் திறனுக்கு முதன் முதலில் தீனி போட்டவர் அண்ணன் டேன்தான். நீரிலிருந்தும் தீ வரும் என்கிற ஹைட்ரோ எலக்ட்ரிஸிட்டியின் அடிப்படையை, அது அறிவியலாகக் கருதப்படுவதற்கு முன்பே என் பிஞ்சு மனதில் ஆழமாகப் பதித்துவிட்டவர் அவர். டேன் உயிருடன் இருந்திருந்தால் இவ்வுலகில் நான் முன்னெடுக்கும் அறிவியல் போரில் எனக்கு உறுதுணையாக இருந்திருப்பார். என்னைவிட அதிகக் கற்பனையும் அதனை சாத்தியமாக்கும் செயல்திறனும் கொண்டவர் அண்ணன். வெறும் கற்பனை மட்டும் போதாது, அதனை செயலாகவும் மாற்ற வேண்டும் என்ற பாலபாடத்தை எனக்குள் விதைத்தவரும் அவர்தான்.’
அண்ணனை இழந்து வாடும் நிகோலோவுக்கு ஒரு மாற்றம் தேவை என்பதாலேயே அவரை காஸ்பிக் பகுதியிலுள்ள நடுநிலைப் பள்ளிக்கு அவரது பெற்றோர் மாற்றினர். அடிப்படையில் அது அம்மா ஜீகாவின் யோசனை.
அதன் பிறகு 1865ஆம் ஆண்டு நிகோலா ஸ்மில்யானுக்குத் திரும்பி வந்தபோது எவ்வாறு காலராவால் பீடிக்கப்பட்டார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆக, 9 வயதுக்குள் இரு பெரும் துயரங்களை, இரு பெரும் பாதிப்புகளை உடலளவிலும் மனத்தளவிலும் சந்தித்துவிட்டார் நிகோலா டெஸ்லா. பலமுறை அவருக்குக் கைகொடுத்த அபாரமான நினைவாற்றல் இந்த இடத்தில் மட்டும் அவரைப் பரிதாபமான முறையில் கைவிட்டுவிட்டது. மீண்டும் மீண்டும் நினைவுகளில் வந்து மோதும் சோகத்தை எப்படி மறப்பதென்று அவருக்குத் தெரியவில்லை.
0
17 வயதில் இரண்டாவது முறையாக அவர் காலராவை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஒன்பது மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். முதல் முறை இரண்டு வாரங்களில் குணமடைந்துவிட்டார் என்றும் இரண்டாம் முறை கிட்டத்தட்ட சாவின் விளிம்புக்குச் சென்ற பிறகே திரும்பினார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இருமுறையும், அவரது சொந்த ஊரான ஸ்மில்யானில்தான் அவர் இருந்தார்.
வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இது பற்றிய ஒரு சிறிய குழப்பம் உள்ளது. டெஸ்லாவுக்கு 9 வயதில் வந்தது சிறிய காய்ச்சல்தான், காலரா அல்ல என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இல்லை, அது வீரியம் குறைவான காலரா என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.
இதைப்பற்றி டெஸ்லாவிடமே ஒரு பேட்டியில் கேட்டபோது, ‘எனக்கு சிறுவயதில் இரண்டு முறை நோய்த்தொற்று ஏற்பட்டது உண்மை. ஒன்பது வயதில் எனக்கு வந்தது சற்றே பலம் குன்றிய காய்ச்சலாக இருந்தது. ஆயினும், நான் மிகவும் சோர்ந்து போனேன். இரு வாரங்களில், நான் இறைவன் ஆசியாலும் என் குடும்பத்தினரின் அன்பான கவனிப்பாலும் முற்றிலும் குணமடைந்துவிட்டேன். அப்போது அது காலரா தானா என்று சரியாகப் பரிசோதனைகூடச் செய்ய முடியாமல் இருந்தது.
‘இரண்டாம் முறை என் பதினேழாம் வயதில் (1873 ஆம் ஆண்டு) வந்தது அதிகப்படியான வீரியம் நிறைந்த காலரா. சோதனை செய்யும் முறைகள் அப்போது ஆஸ்திரியப் பேரரசில் முன்னேறி இருந்தமையால் அதனை எங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இரு முறையும் நான் என் அண்ணனைப் போலவே இறந்துவிடுவேன் என்றுதான் அனைவரும் கருதினர். ஆனால் இருமுறையும் அதிசயம் போல் மீண்டெழுந்துவிட்டேன். அதிலிருந்து, என் உடல்நலத்தைப் பேணுவதில், மிகவும் கவனம் கொள்ளத் துவங்கினேன்.’
சொன்னபடியே அவர் 86 வயது வரை நலமாக வாழ்ந்து காட்டினார். ஆனால் அவரைக் கொல்வதற்கு எதிரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றைப் பின்னர் விரிவாகக் காணலாம்.
0
அறிவியலின் வரலாற்றில், நிகோலா டெஸ்லாவைவிட சிலருக்கு மேலான இடங்கள் கிடைத்தன. எடிசன் மற்றும் மார்கோனி (டெஸ்லா கண்டுபிடித்த ரேடியோ தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றவர்) ஆகியோரால் அவர் ஏமாற்றப்பட்டார். டெஸ்லாவின் எண்ணற்ற சாதனைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டன. சாதனைகளை மறைப்பதன்மூலம்தானே அவற்றை நிகழ்த்தியவரையும் மறைக்கமுடியும்?
குள்ளநரித்தனமான சிந்தனைகொண்ட தனது போட்டியாளர்கள் தன்னை ஏமாற்றியதை டெஸ்லா ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. வணிக உலகில் கழுத்தறுக்கும் தன்மை இயல்பானதொன்று என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.
ஒவ்வொரு வாழ்க்கை வரலாற்றாசிரியரும் டெஸ்லாவை எடிசனின் போட்டியாளராகவே சித்தரிக்கின்றனர். எடிசன் ஒரு முழுமையான ஷோமேன். காப்புரிமையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிய சந்தர்ப்பவாதி. டெஸ்லா தனக்குள் அடங்கியவராக, தனித்திருப்பவராக இருந்தார். ஒரு மேற்கத்திய கட்டுரையாளர் கூறியது போல், அவர் ‘உலகின் மந்திரவாதியாக’ இருந்தார்.
‘என்னைப் போலல்லாமல், எடிசன் முறையாகப் பள்ளிக்குச் சென்றிருக்கவில்லை. கிட்டத்தட்ட முறையான கல்வி இல்லாத ஒரு மனிதனால் இவ்வளவு அற்புதமான விஷயங்களை எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?’ என்று டெஸ்லா ஒருமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றிய தன் கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. அவருக்கும் எடிசனுக்குமான அறிவியல் போர் தொடங்குமுன் டெஸ்லா சிலகாலம் எடிசனுடன் பணியாற்றினார் என்பது சுவாரசியமானது.
0
டெஸ்லா தனது பள்ளிப் படிப்பைக் கடந்து சுயமாகவும் கல்வி கற்கத் தொடங்கினார். அவரது உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழகத் தர நிலைகள் மற்றும் மதிப்பெண்கள் இன்று நம் பார்வைக்கு உள்ளன. (பார்க்க : காணொளி).
கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் கொண்டிருந்த டெஸ்லா ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருந்தார். ஆனால் அவர் கிறிஸ்தவ குருத்துவத்தில் சேர வேண்டும் என்பது தந்தையின் விருப்பம். அந்த விருப்பத்தை அவர் தன் மகன்மீது தொடர்ந்து வற்புறுத்தியும் வந்தார்.
காலரா நோயால் படுத்த படுக்கையாகி பாதிக்கப்பட்ட பிறகு டெஸ்லா தனது தந்தையிடமிருந்து ஒரு முக்கியமான சலுகையைத் தந்திரமாகப் பெற்றார். உயிர் பிழைத்தால் கிராட்ஸில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்திரிய பாலிடெக்னிக் பள்ளியில் சேர அனுமதிக்கவேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். ‘நீ இந்நோயின் பிடியிலிருந்து உன் உறுதியின் வலிமையால் வெளியே வந்தால், நான் என் ராணுவத் தொடர்புகளைப் பயன்படுத்தி நீ விரும்பியது போல் பாலிடெக்னிக்கில் ஸ்காலர்ஷிப்பில் படிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன்’ என்று உறுதியளித்தார் அப்பா. சொன்னது போல் நிகோலா மீண்டெழுந்ததும், அப்பாவும் தன் வாக்கை நிறைவேற்றினார். அப்பாவுக்கும் மகனுக்குமான ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. தனது 19ஆம் வயதில் பாலிடெக்னிக் பள்ளியில் ராணுவ ஸ்காலர்ஷிப்பில் டெஸ்லா சேர்ந்தார்.
டெஸ்லாவின் பள்ளிக் கல்வியிலும் சரி, பாலிடெக்னிக் கல்வியிலும் சரி, அவர் ஆசிரியர்களைக் கேள்வி கேட்கும் விதமே தனி. புத்தகத்திலுள்ள அறிவியல் கூற்றுகளைப் படித்துவிட்டு, அவற்றை முடிந்த அளவு நிஜத்தில் செய்தும் பார்த்துவிட்டு, முடிவுகளைக் குறித்துக் கொண்டுதான், வகுப்புக்குள் நுழைவார். பாடப்புத்தகம் என்பது அவருக்கு மனப்பாடம் செய்வதற்கும் மதிப்பெண் பெறுவதற்குமான ஒரு கருவியல்ல. அறிவியல் என்பது வெறுமனே ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாகப் படிக்கும் துறையல்ல, நிகழ்த்திப் பார்க்கவேண்டிய ஓர் அதிசயம் என்பதை அவர் அறிந்திருந்தார். கோட்பாடு, கோட்பாடாக படித்து முடிப்பதைவிடச் செயல்முறையில்தான் அவருக்கு தீரா ஆர்வம் இருந்தது. எனவே விளக்கமுறை அறிவியலை விடுத்துவிட்டு தான் வந்தடைந்த முடிவுகளை எடுத்து வைத்துக்கொண்டு ஆசிரியர்களிடம் வாதிடும் வழக்கம் அவருக்கு இருந்தது.
சில ஆசிரியர்கள் டெஸ்லாவின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு அவரை ஆதரித்து நின்றாலும் பெரும்பாலானோர் அவரை ஒரு தொந்தராவாகவேப் பார்த்தனர். பெற்றோரிடம் புகாரும் தெரிவித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் வீண் வாதம் புரிபவன், கோபக்காரன், நிதானமற்றவன் என்று தன் மகனை அப்பா மிலுட்டின் புரிந்து வைத்திருந்தார். அமைதியான ஒரு பாதிரியாராகத் தன் மகன் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கனவும் கண்டுகொண்டிருந்தார்.
இதற்கிடையில் ஓர் ஆசிரியர் டெஸ்லாவுக்கு மேன்மையான ஆலோசனையொன்றை வழங்கினார். ‘நிகோலா, ஆஸ்திரியப் பேரரசின் கல்வி முறைகளும் கட்டுப்பாடுகளும் உனக்குச் சரிப்பட்டு வராது. அமெரிக்கா அல்லது இங்கிலாந்துதான் உனக்கான இடம். அங்கேதான் அறிவியில் கூடங்களும் பல்கலைக்கழகங்களும் நிறைந்துள்ளன. அங்குள்ள ஜனநாயகம் உன்னை உச்சத்துக்குக் கொண்டு செல்லும். நீ அங்கே சென்றுவிடு.’ அந்த ஆசிரியர் கூறியது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே பிற்காலத்தில் நடந்தது.
0
டெஸ்லா ஆஸ்திரியப் பேரரசில் உள்ள கிராட்ஸில் இருந்த பாலிடெக்னிக் பள்ளியில், கணிதம், இயற்பியல், இயக்கவியல் ஆகியவற்றை நான்கு ஆண்டுகள் கற்றுக்கொண்டார். நேரடிப் பொறியியல் கல்வியில் சேராமல், பாலிடெக்னிக்கில் அவர் சேர்ந்ததற்கு காரணம் ஒன்றுதான். தொழில்நுட்பத்தின் ஆழத்திற்குச் சென்று கனவுகளை நிஜமாக்கும் எந்திரங்களை அவர் உருவாக்க விரும்பினார். தனது தயாரிப்புகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லவேண்டும் எனும் உந்துதலும் அவருக்கு இருந்தது. எனவே அடிப்படைகளைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள விரும்பினார் அவர்.
பாலிடெக்னிக்கில் படித்த காலத்தில்தான், டெஸ்லா முதன்முதலில் ஆல்டர்நேட் கரண்ட் (AC) எனப்படும் மாற்று மின்னோட்டத்துக்கான யோசனைகளை வளர்த்துக்கொண்டார். இருப்பினும் அவரால் அதை செயல்வடிவத்துக்குக் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இந்தச் சாதனை ஒரு நிரந்தர இயக்க இயந்திரத்தை உருவாக்குவதற்கு ஒத்தது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒருமுறை நண்பருடன் நகரப் பூங்காவில் நடந்து செல்லும்போது, நினைவிலிருந்து கதேவின் ஃபாஸ்டை அவர் முணுமுணுத்துக்கொண்டிருந்தார். டெஸ்லா தனது சுயசரிதையில் விவரிக்கும் சம்பவம் இது. அப்போது அக்கவிதையின் ஒரு பகுதி மின்னல் போல் அவரை வெட்டியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகப்போகும் ஓர் அறிவியல் வரைபடம் அவருக்குள் உருபெற்றது. சட்டென்று மணலில் ஒரு குச்சியால் அதை அவர் வரைந்து பார்த்த அதிசயம் நிகழ்ந்தது.
அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்ஸ் என்ற அமைப்பில் டெஸ்லா சேர்ந்த பிறகுதான் அவரது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அமெரிக்கா அவர் வாழ்வில் வகித்த பாத்திரம் என்ன என்பதையும் அங்கு நிலவிய ஜனநாயகச் சூழல் அவர்மீது செலுத்திய தாக்கம் என்னவென்பதையும் பின்னர் பார்க்கப்போகிறோம்.
டெஸ்லா தனது சுய கல்வி குறித்து எழுதிய தொடர் கட்டுரைகளின் அறிமுகப் பகுதியில் குரோஷிய அறிஞரான டான்கோ ப்ளெவ்னிக் இவ்வாறு எழுதுகிறார். ‘ஒரு கற்றறிந்த மனிதன் பெற்றிருக்கும் புலமையும் பரந்த அறிவும் முறையான கல்வியின்மூலம் மட்டுமே ஒருவர் பெறக்கூடிய அறிவை மிஞ்சியது.’ டெஸ்லாவின் காப்புரிமை விண்ணப்பங்கள் பற்றி எழுதும்போது இந்தக் குறிப்பு இடம்பெறுகிறது.
டெஸ்லாவின் விரிவுரைகளையும் கட்டுரைகளையும் உரைகளையும் வாசிக்கும்போது அவர் அறிவின் வீச்சு நன்கு புலப்படுகிறது. தத்துவம், அறிவியல், வரலாறு, கண்டுபிடிப்புகள் தொடர்பான சிந்தனைகள், அறிவியல் வழிமுறைகள், பள்ளியிலிருந்து பெற்றுக்கொண்ட பாடங்கள் என்று அவருடைய தேடல் விரிந்துகொண்டே செல்கிறது.
ஒரு பக்கம் கவிதைப் புத்தகங்களை முழுக்கப் படித்து மனப்பாடம் செய்கிறார். மற்றொரு பக்கம் கனவுலகிலிருந்து வெளிவந்து எதிர்காலத் தொழில்நுட்பம் குறித்த துல்லியமான கணிப்புகளை வெளிப்படுத்துகிறார். ‘பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்கள் கடந்து, ஒரு மேதையின் அறிவை அவர் கொண்டிருந்தார்’ என்கிறார் ப்ளெவ்னிக். டெஸ்லாவின் கூர்மையான நுண்ணறிவு மெருகூட்டப்பட்ட நிலையில் வெளிப்பட்டது என்றும் அதிசயிக்கிறார். டெஸ்லாவின் கல்வி சுய கல்வி என்று அழைக்கப்படுவது இதனால்தான்.
பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு பொஹிமியாவில் உள்ள ப்ராக் பல்கலைக்கழகத்தில் (இப்போது செக் குடியரசின் தலைநகரம்) இரண்டு ஆண்டுகள் தத்துவப் படிப்பு பயின்றார். அறிவியல் தாகம் கொண்ட நிகோலா டெஸ்லா ஏன் தத்துவப் படிப்பில் சேர வேண்டும்?
(தொடரும்)
குறிப்புகள்
1. நிகோலா டெஸ்லாவின் மதிப்பெண் சான்றிதழ்கள் பற்றிய யூடியூப் காணொளி.
2. பாஸ்போரசன்ட் ஒளியால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம். அந்த ஒளி, டெஸ்லாவே தயாரித்த பல்பிலிருந்து வருவதை நீங்கள் காணலாம். அதனைக் கவனிக்கும் முகம் அவருடையது. இந்தப் புகைப்படம் ஜனவரி, 1894 இல் எடுக்கப்பட்டது.
டெஸ்லா வின் கண்டுபிடிப்புகளை நினைத்து ஆச்சரியம் கொள்ள வைக்கிறது… அவரது அபார கற்பனை திறன்…. காலரா வில் பாதித்து … திரும்பவும் மீண்டு வந்தார் என்பது வியப்பாக இருக்கிறது… தனது அண்ணன் அறையில் இல்லாத வெளிச்சத்தை இந்த உலகுக்கு தந்த வள்ளல்…
ஆம், டெஸ்லா இந்த உலகுக்குக் கிடைத்த ஒரு அறிவியல் வள்ளல் என்பது, மிகவும் சரியான கூற்று. தங்களின் தொடர் ஆதரவிற்கு, என்னுடைய பணிவான நன்றிகள் ஹேமா மேடம்! 🙏🏼🙏🏼
அவருடைய சிறுவயது வாழ்வியல் நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாகவும்; அவரின் அறிவியல் தேடல்கள், கனவுகள், அவற்றை தாண்டிய நிஜங்கள் என்று டெஸ்லா எடுத்த முயற்சிகளையும், அழகாக கூறியிருக்கின்றீர்கள்.
கவிதை புத்தகங்களை அவர்தன் நினைவுகளில் ஏற்றிக் கொண்டு, அவற்றை அவ்வப்போது நினைவு கூர்ந்தது ஆச்சரியமாக உள்ளது.
Thank you very much for your excellent review Suba Madam. I really appreciate your continuous support. என்னுடைய பணிவான நன்றிகளை உரித்தாகுகிறேன். 🙏🏼
டெஸ்லா வின் சிறு வயது நினைவுகள், கற்பனைகள், அவ௫டைய அறிவியல் தேடல்கள் ஆகியவை அ௫மையாகவும் உணர்வு பூர்வமாகவும் கூறியி௫க்கிறீகள்.அ௫மை
Thank you very much for your kind and positive comment Rathna Madam. தங்களின் தொடர் ஆதரவிற்கு, என்னுடைய பணிவான நன்றிகள். 🙏🏼
என்ன ஒரு அருமையான மனிதர்.. கவிதைகளும் படிக்கிறார். அறிவியலையும் ஆராய்ச்சி செய்கிறார். அவரது பால்ய கால நிகழ்வுகள் சுவாரசியமாக இருக்கிறது. உங்கள் எழுத்தின் மூலம் பிரம்மாண்டமான அறிவியல் அறிஞரின் வாழ்க்கையை கண் முன்னே காண்கிறேன். மிக்க நன்றி ராம்குமார்ஜி.
Thank you very much Charu Ji, for your kind and positive review of this chapter. தங்களின் தொடர் ஆதரவிற்கு, என்னுடைய மனமார்ந்த நன்றிகள். 🙏🏼