டெஸ்லாவின் தத்துவ வேட்கைக்கான காரணம் என்ன? அவரே ஒரு கட்டுரையில் விரிவாகக் கூறுகிறார். ‘நான் தத்துவம் படித்ததற்கான காரணம் ஒன்றுதான். என் வாழ்வின் அனுபவங்களைக் கோர்வையாகக் கூற விழைகிறேன். இதற்கு முன்பு மேன்மக்கள் கூறிய கருத்துகளை ஆராய்ந்து பார்ப்பதற்காகத்தான் பட்டம் பெறாமலே தத்துவம் படித்தேன். நம் ஒவ்வொருவரின் வாழ்வும் அழியாத மிகப்பெரிய தத்துவக் குவியலுக்கு நிகரானது.’
டெஸ்லாவின் அறிவுத் தேடலுக்கும் வாழ்வியல் புரிதலுக்கும் ஒரு நற்சான்றாக வரலாற்று ஆய்வாளர்கள் அவரது இக்கருத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் விவேகானந்தருடனான நிகோலா டெஸ்லாவின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது டெஸ்லாவுக்கு வயது 39. விவேகானந்தரின் வயது 36. இருவரும் சந்தித்தபோது, பல்வேறு தலைப்புகளில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். வேத அண்டவியல் மீதும் தொடர்புடைய தத்துவங்கள் மீதும் டெஸ்லாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வேதங்களிலுள்ள அறிவியல் கூற்றுகளைத் தனது சில கண்டுபிடிப்புகளோடு அவர் தொடர்புபடுத்திப் பார்த்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தவிரவும், மின்சாரம் பற்றிய தனது ஆய்வுக் குறிப்புகளில் விவேகானந்தரை அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
1896 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சாரா பெர்ன்ஹார்ட் நடித்த Iziel என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தில் விவேகானந்தரும் டெஸ்லாவும் கலந்துகொண்டனர். ‘புத்தரின் வாழ்க்கையைப் பற்றிய பிரெஞ்சுப் பார்வை’ என்பது நாடகத்தின் மையம். சாரா பெர்ன்ஹார்ட் சுவாமி விவேகானந்தரை ஒரு யோகியாக அறிந்திருந்தார். அவரைப் பார்வையாளர்களில் ஒருவராகப் பார்த்தபிறகு, நிகழ்ச்சியின் முடிவில் ஒரு சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்தார். அந்தத் தற்செயல் நிகழ்வில் நிகோலா டெஸ்லாவும் இடம்பெற்றுவிட்டார்.
அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே ஏசி மோட்டாரைக் கண்டுபிடித்து, காப்புரிமையும் பெற்று வைத்திருந்தார். அந்த மாலை சந்திப்பு இருவருக்கும் ஒரு சுவையான உரையாடலாக மாறியது. அவர்கள் பிராணா (உயிர் அலைகளின் முக்கிய ஆற்றல்), ஆகாஷா (ஈதர்) மற்றும் கல்பம் (ஆயுட்காலம்) ஆகிய மூன்று அடிப்படைக் கருத்துகள் பற்றி விவாதித்தனர்.
விவேகானந்தர் இச்சந்திப்பைத் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
‘அந்தச் சந்திப்பில் மின்சார விஞ்ஞானி நிகோலா டெஸ்லாவும் இருந்தார். அவருடன் சாதாரணமாகத் துவங்கிய உரையாடல், நான் எதிர்பாராத வகையில் நீண்டு கொண்டே சென்றது. எங்களோடு பிரபலப் பாடகி மேடம் மொரேல் அவர்களும், நாடகத்தை நடத்திய சாரா பெர்ன்ஹார்ட்டும் இருந்தனர். அங்கே இருந்த எனது இன்னொரு நண்பரின் குடும்பமும், மேடம் சாராவும்தான் இந்தச் சந்திப்பிற்குப் பின்புலமாக இருந்தனர். வேதகால அறிவியலின் மூன்று முக்கியத் தொகுப்புகள் பற்றி, நாங்கள் இருவரும் கணக்கின்றி உரையாடினோம். சுற்றியிருந்தவர்களும் அதனை ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.
‘டெஸ்லா பேடன்ட் உரிமம் வாங்கி வைத்திருந்த ஏசி கரண்ட்டின் அடிப்படையில் இருப்பவை பாரதத்தின் பண்டைய கால அறிவியல் முறைகள்தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். பிராணா என்று கூறப்படும் உயிர் அலைகள் பற்றியும், ஆகாஷம் எனப்படும் வானவியல் கூற்றுகள் பற்றியும் கல்பங்கள் எனப்படும் நேரம் பற்றியும் கேள்விப்பட்டு டெஸ்லா வியப்படைந்தார். மேலும், அவரது தத்துவத் தேடல், ஞானப் புரிதல் ஆகியவற்றை என்னோடும் அவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.’
விவேகானந்தர் இளவயதிலேயே இறந்ததைப் பற்றி ஒரு கருத்தரங்கில் டெஸ்லா இவ்வாறு கூறுகிறார். ‘அவரைச் சந்தித்தது எனக்கு எப்போதும் பசுமையாக நினைவில் நிற்கக்கூடிய ஒரு நிகழ்வு. நாங்கள் நிறைய விவாதித்தோம். அவர் விரைவாக இவ்வுலகை விட்டுச்சென்றது வருத்தம்தான் என்றாலும் அவரது எண்ணங்களுக்கு என்றும் அழிவில்லை என்பதே என் கருத்து’.
0
உலகில் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்த ஆட்சியாளர்களைச் சட்டம் எதுவும் செய்வதில்லை. எனில் அவர்களை எப்படித் தண்டிப்பது? அரசியலிடம் எந்தத் தீர்வும் இல்லை என்பதை உணர்ந்த டெஸ்லா அறிவியலைக் கொண்டு அவர்களை அகற்ற விரும்பினார். மரணக்கதிர்களை உருவாக்கவேண்டும் என்னும் அவர் கனவின் பின்னாலுள்ள காரணம் இதுதான்.
மரணக்கதிர் எப்படி வேலை செய்யும்? சர்வ வல்லமை வாய்ந்த ஒளியை பீரங்கி வடிவம் கொண்ட ஒரு இயந்திரத்தின் மூலம், வான் நோக்கிப் பாய்ச்சவேண்டும். எதிரி எங்கு இருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அந்த ஒளி அவனைக் கண்டறிந்து அழித்துவிடும். இதுதான் அடிப்படை.
ஆனால் உலக நாடுகள் டெஸ்லாவின் அடிப்படை நோக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு அவருடைய அறிவியலை மட்டும் எடுத்துக்கொண்டன. அதுவும் அழிவுப் பணிக்காக மட்டும். இதை உணர்ந்தோ என்னவோ டெஸ்லா தனது மரணக்கதிர் ஆய்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இக்கதிர்கள் பற்றிய மேலதிக விவரங்கள் எங்கு கிடைக்குமென்று தேடி வருகின்றனர்.
முதலாம் உலகப் போர் மனித குலத்திற்கு ஏற்படுத்திய அழிவைக் கண்டபிறகே டெஸ்லா மரணக்கதிர்கள் பற்றிய தனது ஆய்வுகளையும் பரிசோதனைகளையும் துரிதப்படுத்தினார். எதிரி 250 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், இக்கதிர்கள் அவர்களைத் தாக்கி அழிக்க வேண்டும். உயிர்ச்சேதம் ஏற்படுத்துவதைவிட, எதிரிகளின் ஆயுதங்களையும் தளவாடங்களையும் அழிப்பதுதான் டெஸ்லாவின் நோக்கம். ஆனால் அரசாங்கங்களின் கனவோ வேறு மாதிரியாக இருந்தது.
இன்று ஒளியைவிட அதிக வேகத்தில் செல்லும் ‘சூப்பர்சானிக்’ ஏவுகணைகள் பற்றிய ஆய்வுகளை உலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. உருவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. கண்டம் விட்டுக் கண்டம் தாக்கும் ஏவுகணைகள் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டன. இந்தியா உள்பட பல உலக நாடுகளிடம் இந்த ஏவுகணைகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை டெஸ்லாவின் மரணக்கதிர்கள் என்று பல அறிவியல் ஆராச்சியாளர்கள் நம்புகின்றனர். ஹார்வர்ட், கால்டெக் பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன.
ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை எதிர்த்தவர் டெஸ்லா. தனது எதிர்ப்புணர்வை அவர் எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதைப் போகப் போக விரிவாகப் பார்க்கலாம்.
0
ஜனவரி 1881இல் ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டுக்குச் சென்றார் நிகோலா டெஸ்லா. தனது மாமன்களின் ஒருவரான பாவ்லே என்பவரின் உதவி பெற்று புதிய வேலையைத் தொடங்கினார். தந்தைக்குப் பிறகு, குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தான் ஏற்கவேண்டியிருந்த அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார்.
‘உனக்கு யாரிடமும் அடிமை போல் வேலை செய்யப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். நீ குடும்பத்திற்குப் பணம் அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை. உன் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கேனும், நீ உன் ஊதியத்தைப் பயன்படுத்திக்கொள் நிகோலா!’ என்ற பாவ்லே மாமாவின் கூற்றை அவர் ஏற்றுக்கொண்டார். டெஸ்லாவுக்கு மொத்தம் மூன்று, நான்கு மாமன்கள் இருந்தனர். டெஸ்லாவின் வாழ்வில் அவர்கள் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
புடாபெஸ்ட் டெலிபோன் எக்ஸ்சேஞ் நிறுவனத்தில் டிவாடர் புஸ்காஸ் என்ற புகழ்பெற்ற என்ஜினியரின் மேற்பார்வையில் வேலையில் சேர்ந்தார் டெஸ்லா. அவர் அங்கு சென்றபோது, புஸ்காஸ் அணியினர், தொலைத்தொடர்புத் துறையைச் செயல்படும் நிலைக்குக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அங்குள்ள ‘சென்ட்ரல் டெலிக்ராஃப் ஆபிஸ்’ நிறுவனத்தில் தாற்காலிகப் பணி செய்த டெஸ்லா, டெலிபோன் நிறுவனம் முழுமையாகச் செயல்படத் தொடங்கிய பிறகு, புஸ்காஸின் அறிவுறுத்தலின்படி, தலைமை எலக்ட்ரீஷியனாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரது வாழ்வில் மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணியை அவர் நன்றாகச் செய்தார். ஒரு வருடத்தில் அங்கு பல்வேறு முன்னேற்றங்களைச் செய்த டெஸ்லா, தந்தி இயந்திரத்தின் அடுத்த முன்னேறிய வடிவத்தை உருவாக்கி, சாதனை படைத்தார்.
பிப்ரவரி 1882இல் நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் கதேவின் ஃபாஸ்ட்டை விவரித்துக்கொண்டே ஏசி மோட்டார் பற்றிய ஒரு படத்தை மணலில் வரைந்து காட்டினார். அப்போது அவருடன் நடந்து வந்த நண்பரின் பெயர் அந்தோணி ஜிகெட்டி. அவர் இந்நிகழ்வை உணர்ச்சி பொங்கப் படம் பிடித்துக்காட்டுகிறார்.
‘ஏசி மோட்டாரின் ஆய்வில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்ததால், உணவுகூடச் சரியாக உண்ணாமல், வேலையையும் சரியாகச் செய்யமுடியாமல், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இறக்கப்போகும் ஒரு நபரைப் போலவே என் நண்பர் டெஸ்லா நடமாடி வந்தார். அவரின் நிலை கண்டு, நான் மிகவும் வருத்தமும் பயமும் கொண்டேன். பிறகொரு நாள், நாங்கள் ஓய்வாக நடந்து செல்லும்போது, அவர் கதேவின் ஃபாஸ்ட்டை நினைவுகூர்ந்ததன்மூலம், ஒரே நிமிடத்தில் அதிசயம் போல் எழுச்சி பெற்று மோட்டார் வடிவத்தை மண்ணிலேயே ஒரு குச்சியால் வரைந்து காட்டினார். அதன் பிறகு, அந்த ஆய்வும் நல்லபடியாக முடிந்து, அவரது உடல்நிலையும் தேறி, அதற்கான பேடன்ட் உரிமையையும் அவர் பெற்றார்.’
அதே 1882ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கியுசெப்பி கொலம்போ என்ற இத்தாலிய விஞ்ஞானி, இன்று ‘எடிசன் எஸ்.பி.ஏ’ என்று அழைக்கப்படும், அன்றைய ‘கான்டினென்டல் எடிசன் கம்பெனி’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். எலான் மஸ்க் இன்று டெஸ்லாவின் மீது எவ்வளவு பற்று கொண்டிருக்கிறாரோ அவ்வளவு பற்றை அன்று கொலம்போ எடிசன்மீது கொண்டிருந்தார். எடிசனை சந்தித்த பிறகு, அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரில் தனது அறிவியல் நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.
பழமைவாய்ந்த இந்நிறுவனம், இன்றும் செயல்பட்டு வருகிறது. பிரெஞ்ச் எலக்ட்ரிக் நிறுவனம் 1980களில், இந்நிறுவனத்தைக் கையகப்படுத்திக்கொண்டது. தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளை ஐரோப்பிய மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் அந்நிறுவனத்தின் அப்போதைய நோக்கம். அங்கு தனது நண்பர் அந்தோணியுடன் சென்று வேலைக்குச் சேர்ந்தார் டெஸ்லா. எடிசனுடன் அப்போது டெஸ்லா நேரடித் தொடர்பில் இல்லையென்றாலும், அவரது பெயர் கொண்ட அந்த நிறுவனத்திலும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார்.
ஜெர்மானிய ரயில் கம்பெனி ஒன்று, பிரான்சின் ஸ்ட்ராஸ்பெர்க் நகரத்தில், டி.சி ஒளி அமைப்பு முறையில், ரயில் பாதையின் சோதனை ஓட்ட முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அங்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை டெஸ்லாதான் எடிசன் கம்பெனியின் சார்பாகச் சென்று, சரிசெய்து கொடுத்தார். ஆனால் அதற்கான ஈட்டுத்தொகையை, அந்நிறுவனம் அவருக்கு வழங்காமல் ஏமாற்றிவிட்டது.
‘எனக்கும் எடிசனுக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்தே வந்தது. அவரது பெயர் கொண்ட நிறுவனத்தில்தான் நான் வேலை செய்தேன். அதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு, அவருடன் நேரடியாகவே வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது ஒரு பெரிய கதை’ என்று குறிப்பிடுகிறார் டெஸ்லா.
6 ஜூன் 1884 அன்று ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் நீராவிக் கப்பலுக்கான பயணச்சீட்டைக் கஷ்டப்பட்டு வாங்கினார் டெஸ்லா. மாமாக்கள் பீட்டர், பாஜோ இருவரும் உதவி செய்தனர்.
அமெரிக்கா சென்று சேரும் வரை மூன்று, நான்கு வாரங்கள் கப்பலில் டெஸ்லா எதிர்கொண்ட துயரங்களைத் துன்பியல் நகைச்சுவை எனும் பிரிவில்தான் சேர்க்கவேண்டியிருக்கும்.
(தொடரும்)
டெஸ்லா வழங்கிய பத்திரிகை பேட்டிகளின், வீடியோ தொகுப்பு:
படம்: உயர் மின்னழுத்தம் மற்றும் உயர் அதிர்வெண் மின்னோட்டங்களை டெஸ்லா சோதனை செய்கிறார், 1899ஆம் ஆண்டு.
டெஸ்லாவை பற்றிய நிறைய தகவல்கள் அடங்கிய ஒரு அருமையான பதிவு.
ஒவ்வொரு நிகழ்வுகளையும் படிக்கும் போது அதனுடன் ஒன்றிப் போகிற மாதிரி தங்களின் எழுத்து நடை உள்ளது. அருமை.✍🏻💐 அதுமட்டுமில்லாமல் டெஸ்லாவைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அழியாத தத்துவ குவியலுக்கு நிகரானது என்று டெஸ்லா கூறுவது எவ்வளவு உண்மை…. விவேகானந்தரின் சந்திப்பை பசுமையான நினைவுகள் என்று டெஸ்லா கூறுகிறார்…. விவேகானந்தர் டெஸ்லாவை குறிப்பிடும்போது மின்சார விஞ்ஞானி
என் குறிப்பிடுகிறார்… விவேகானந்தரின் கொள்கைகளுக்கு அழிவில்லை எனும் டெஸ்லா… ஹிட்லரின் சர்வாதிக்க தனத்தை எதிர்த்திருக்கிறார்…. எடிசனின் நட்பையும் பெற்றிருக்கிறார்…. டெஸ்லாவை பற்றி மேலும் அறியவும் அவா ஏற்படுகிறது தங்களின் எழுத்து நடையில்… மேலும் அறியவும் அவா…
ஆம், நீங்கள் கூறியது முற்றிலும் சரி ஹேமா அவர்களே! விவேகானந்தர் மற்றும் டெஸ்லா, இருவருமே தங்கள் துறைகளில் மிகப்பெரிய மகான்கள். அவர்களின் வாழ்வில் இருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் எண்ணிலடங்காதவை. தங்களின் ஆதரவுக்கும், கருத்துகளுக்கும், என்னுடைய பணிவான நன்றிகள் பல! 😊🙏🏼
விவேகானந்தர், டெஸ்லா இவர்களின் சந்திப்பு பற்றி அறிந்து வியந்தேன்.
டெஸ்லா பற்றி அறிய ஆவலை தூண்டும் விதமாக உள்ளது தங்களின் எழுத்து நடை.
வாழ்த்துகள் 💐💐💐
தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி நந்தினி மேடம்! ஆம், ஆச்சரியங்கள் நிறைந்த டெஸ்லாவின் வாழ்வு, இன்னும் போகப்போக மிகவும் ஆழமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 😊🙏🏼
டெஸ்லா விவேகானந்தர் சந்திப்பை படித்து வியந்து போனேன்.விவகானந்தர் டெஸ்லா பற்றி குறிப்பிடும் போது மின்சார விஞ்ஞானி ௭ன்றார் அ௫மை.டெஸ்லா பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகிறது.
மிக்க நன்றி திருமதி ரத்னா செல்வகுமார் அவர்களே! ஆம், விவேகானந்தர் உடனான டெஸ்லாவின் சந்திப்பைப் பற்றி அறிந்த போது, நீங்கள் கொண்ட அதே ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் நானும் உணர்ந்தேன். எனவே தான், இந்தத் தொடரில் 1896ஆம் ஆண்டின் நிகழ்வுகள், வரிசைக்கிரமமாக வருமுன்பே, அதனைப் பற்றிப் பதிவு செய்தும் விட்டேன். 😊🙏🏼
தங்களின் விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி சுபா மேடம். இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் தங்கள் ஆர்வத்திற்கு மேலும் தீனி போடும் விதமாக, வருகின்ற அத்தியாயங்களும் அமையும் என்று நம்புகின்றேன். 😊🙏🏼