மனித வாழ்வில் காணப்படும் எண்ணற்ற ஏற்ற இறக்கங்களைப் பற்றி, நிகோலா டெஸ்லா பின்வருமாறு கூறுகிறார்.
‘வெற்றியும், தோல்வியும் சமம்; எல்லோரும் முழு முயற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் பல அறிஞர்கள் கூறுவர். ஆனால் என்னைப் பொறுத்தவரை, திட்டமிட்டு முழு உழைப்பைச் செலுத்தும் எந்த ஒரு செயலும், வெற்றி பெறாமல் போனதாக, சரித்திரமும் இல்லை, அறிவியலும் இல்லை.
‘இறைவனை வேண்டி நாம் செய்யும் எந்தக் காரியமும், நமது பங்களிப்பில்தான் புகழ் பெற வேண்டும். அப்போதுதான், ‘அடடா, இப்படி ஒரு சிறப்பான நல்ல முயற்சியில், எனது பங்களிப்பும் இருக்க வேண்டுமே!’ என்று இயற்கையும் நினைக்கும். இதனை அறிவியல் பூர்வமான முறையில் சொல்லவேண்டும் என்று நினைத்தால், ‘ஸ்பேஸ் டைம் கன்டினியூயம் (Space-Time Continuum) என்ற ‘விண்வெளி-நேரம் தொடர்நிலை’ கோட்பாட்டோடு ஒப்பிடலாம்.
‘சில நேரங்களில், நல்ல செயல்களுக்கான பதில் செய்கை, அந்தத் தொடர்நிலையில் வந்து இணைவதற்குத் தாமதமாகும். ஆயினும், அது நூறு வருடங்கள் தாமதமாக வந்து இணைந்தால்கூட, முன்பு நடந்திருக்கும் நல்ல முயற்சியின் விளைவை, பெருவெற்றி பெற வைக்காமல் விடவே விடாது. இதைத்தான் மனிதர்கள் ‘கோயின்சிடென்ஸ்’ என்றும், அதிர்ஷ்டம் என்றும் கூறுகின்றனர்’.
நிகோலா டெஸ்லா கொடுத்தது போன்ற இந்த விளக்கத்தை எங்கு தேடினாலும், வேறு எந்த விஞ்ஞானியிடமிருந்தும் பெறமுடியாது.
0
வானொலியும் தொலைபேசியும் டெஸ்லாவால்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன என்று வாதிடும் ஆய்வாளர்கள் பலர் உள்ளனர். இதில் ரேடியோ அலைகள் பற்றியும் டெஸ்லாவின் லேப் எரிந்ததைப் பற்றியெல்லாம் நாம் முன்பே பார்த்தோம். அதே போல், தொலைபேசியில் அவரது பங்களிப்பு என்ன என்பதையும், அவரது வாழ்வியல் நகர்வில், அந்தக் காலகட்டம் வரும்போது, விரிவாகப் பார்ப்போம்.
டெஸ்லா அதிகாரப்பூர்வமாக காப்புரிமம் பெற்ற பொருள்களும் அவற்றின் எண்ணிக்கையும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. அவருடைய பட்டியலில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பொருள்கள், ஆராய்ச்சிகள், விஞ்ஞானக் கோட்பாடுகள் அடங்கியுள்ளன. இவையனைத்தும் ஆய்வுக்கூடங்களில் நிரூபிக்கப்பட்டவை. டெஸ்லாவின் அறிவியல் பங்களிப்புகளை ஆய்வு செய்வதற்கென்றே எண்ணற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய வாழ்வே டெஸ்லாவை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது.
இதற்கு சரியான உதாரணம் எலான் மஸ்க். நிகோலா டெஸ்லா நினைத்திருந்தால், அவர் காலத்தின் உலகின் பெரும் பணக்காரராக மாறியிருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கம் அதுவாக ஒருபோதும் இருந்ததில்லை. இறக்கும்வரை அவர் தன்னலமற்றவராக இருந்தார். அறிவியலை மட்டுமே அவர் நம்பினார். ஒரு பெரும் போரைத் தன்னந்தனியாக அவர் நடத்திக் காட்டினார். எதிர்காலம் தவிர வேறு எதுவும் அவர் இலக்கல்ல.
டெஸ்லா காப்புரிமம் பெற்ற ஒரு சில பொருட்களைக் கீழே பார்ப்போம். டெஸ்லாவின் தாக்கம் எந்த அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது என்பதை இது ஓரளவு உணர்த்தும்.
1. எலெக்ட்ரிக் மோட்டார் – பல வடிவங்கள்
2. ஸ்டீம் என்ஜின்
3. ரயில்வே சிஸ்டம்
4. எலெக்ட்ரிக் கண்டென்சர்
5. ஆல்டர்னேட் கரண்ட் எனப்படும் ஏசி கரண்ட் மற்றும் அதன் மோட்டார்
6. எலக்ட்ரிகல் இண்டக்ஷன் ட்ரான்ஸ்ஃபார்மர்
7. எலெட்ரிக் டவர் வடிவமைப்பு (அவரது பிரத்தியேக வடிவமைப்பு). இதுதான் வார்டன்கிலிஃப் டவர் என்று அழைக்கப்படும் டெஸ்லா டவர்.
8. மின் காந்த அலைகள் மற்றும் அவற்றை உருவாக்கும் மோட்டார் மற்றும் சாதனங்கள்
9. ஓசோன் உருவாக்கும் இயந்திரம்
10. சர்க்கியூட் கண்ட்ரோலர்
11. இன்சுலேஷன் இயந்திரம்
12. தொலைத் தொடர்பு ரேடியோ அலைகள் மற்றும் தகவல் பரிமாற்ற முறைகள்
13. அதிக அதிர்வெண்கள் கொண்ட மின்சாரம் மற்றும் ரேடியோ கதிர்கள்
14. ராடார் இயந்திரத்தின் முதல் வடிவம்
15. ஒலிக்கற்றை அலைகளை மின்சார ஒளியாக மாற்றித் தொகுக்கும் இயந்திரம்
16. வானியல் போக்குவரத்துக்கான ஆராய்ச்சி, மற்றும் அவை சார்ந்த கட்டமைப்பு-வாகன வடிவங்கள்.
17. டெஸ்லா காயில்
18. சோனார் தொழில்நுட்பத்தின் அடிப்படை ஆராய்ச்சி
இப்படி நீண்டுகொண்டே செல்கிறது அவர் பட்டியல். டெஸ்லாவின் வாழ்க்கை என்பது அவருடைய அறிவியல் வேட்கையின் வாழ்க்கை. அந்த வகையில் அவர் கண்டுபிடிப்புகளை விவரிப்பதன்மூலமும் அவர் வாழ்வை விவரித்துவிடமுடியும். இந்தப் பின்னணியோடு டெஸ்லாவின் வாழ்வை நேர்க்கோட்டாக இனி தொடர்ந்து செல்வோம்.
0
1878 ஆம் ஆண்டு 22 வயது டெஸ்லா பாலிடெக்னிக் பட்டப்படிப்பை முடித்தார். அதற்கு அடுத்த ஆண்டு அவர் ஸ்லோவேனிய எல்லையில் பதுங்கியிருந்தது, நண்பரால் கண்டுபிடிக்கப்பட்டு ஊர் திரும்பியது, தன் தந்தையின் மறைவைத் தொடர்ந்து, மாமன்களின் உதவியுடன் 1880 ஆம் ஆண்டு பல்கலைப்படிப்பில் சேர்ந்தது ஆகியவற்றை ஏற்கெனவே பார்த்தோம். இடைப்பட்ட இரண்டு, மூன்று வருடங்கள் அவர் என்ன செய்தார்?
இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய கட்டாய ராணுவச் சேவையில் இருந்து, உடல்நிலையைக் காரணம் காட்டி, பல்வேறு வழிகளில் தப்பித்து வந்தார் டெஸ்லா. பாலிடெக்னிக்கில் மூன்று வருடங்கள் அவர் ராணுவ உதவித் தொகையைப் பெற்றார் என்றும் பார்த்தோம். எனவே, அதற்கு இணையாக, மூன்று வருடங்கள் கட்டாய ராணுவச் சேவை செய்ய வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
17ஆம் வயதில், இரண்டாம் முறை காலரா தொற்றின்போது ஏற்பட்ட பாதிப்பை தன் ராணுவச் சேவை நேரத்தைக் குறைக்க, ஒரு சாக்காக அவர் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் உண்மையிலேயே, அவர் குணமான பிறகும் கிட்டத்தட்ட அடுத்த 7-8 வருடங்களுக்கு, அந்த நோயின் பின்விளைவுகளால் அவதிப்பட்டிருக்கிறார்.
எனவே உடல்நிலையைத் தேற்றும் பொருட்டு தனக்கு மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்கள் மீண்டும் வந்துவிட்டதாதவும், நதியில் விழுந்து மாண்டுவிட்டதாகவும் தன்னைப் பற்றி பல வதந்திகளை அவர் வளரச் செய்திருக்கிறார். பிறகு, ஆள் அடையாளம் மாறிப்போய், ஸ்லோவேனியா எல்லையில் பதுங்கியிருந்தவர், நண்பரால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு மறுபடியும் வந்தார்.
ராணுவச் சேவையிலிருந்து தப்பியதால் அப்போது அவரை ‘தேடப்படும் குற்றவாளி’ என்று ஆஸ்திரியப் பேரரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் தந்தையின் ஆலோசனைக்கிணங்க ராணுவத்தின் முன்பு ஆஜராகி, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார். தன் உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தார். பிறகுதான் ராணுவத்தாரால் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தைப் பற்றி அவர் கூறுகையில், ‘கட்டாய ராணுவச் சேவையாற்ற வேண்டிய அந்த மூன்று வருடங்களில், நான் காடு, மலைகள் என சுற்றித்திரிந்து, ராணுவத்திடமிருந்து தப்பி வந்தேன். ஒரு வேட்டைக்காரன் போல் உடை அணிந்துகொண்டு, கை நிறைய புத்தகங்களோடு, இயற்கை அன்னையுடன் பயணித்து, காடு, மலை பாராமல் ஏறி இறங்கினேன். கைக்குக் கிடைத்த வேலைகள் செய்து, பசியைத் தீர்த்துக் கொண்டேன். இயற்கையுடனான இந்தத் தொடர்புதான் என் உடலையும் மனதையும் வலிமைப்படுத்திக்கொள்ள உதவியது.’
28 வயது டெஸ்லா அமெரிக்காவுக்குப் பயணித்த 1884ஆம் ஆண்டுக்கு வருவோம். அவர் அமெரிக்கா சென்றதற்குக் காரணம் அவர் பணியாற்றிய எடிசனின் பெயர் கொண்ட கான்டினென்டல் எடிசன் கம்பெனியின் நிர்வாகிகள். பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய ரயில்வே புராஜெக்ட்களில் ஒரு பொறியியலாளராக டெஸ்லா பங்காற்றினார். புடாப்ஸ்ட் டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜில் தலைமை எலக்ட்ரீஷியனாகவும் இருந்தார். அப்போதே அவரது பெயரும் புகழும் அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி அமெரிக்காவைச் சென்றடைந்துவிட்டது.
பிரெஞ்ச் ரயில்வே பிராஜக்ட்டில் டெஸ்லாவுக்கு மேலதிகாரியாக இருந்தவர் சார்லஸ் பாச்சலர் எனும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர். அவர் பாரிசிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் மாற்றப்பட்டபோது டெஸ்லாவும் தன் அணியில் சேரவேண்டும் என்று நிறுவனத்துக்குத் தெரிவித்தார். இதன் அடிப்படையில்தான், மாமாக்கள் பீட்டர், பாஜோ இருவரும் கப்பலில் செல்வதற்கான டிக்கெட் வாங்க உதவி செய்தனர். அதற்கு அவர்கள் செலவு செய்த தொகையை, டெஸ்லா அமெரிக்கா சென்ற சில மாதங்களில், திருப்பியளித்தார்.
கப்பலில் அவர் பயணம் செய்தபோது, அவரது டிக்கெட், பணம் மற்றும் உடைமைகளில் சிலவற்றை, அவர் தொலைத்து விட்டார். இது போதாதென்று, அந்தக் கப்பல் நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத கலவரம் ஒன்று மூண்டுவிட்டது. அப்போது இருதரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் அதற்கு சற்றும் சம்மந்தமே இல்லாத நிகோலா டெஸ்லாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கி, கப்பலில் இருந்து கடலில் தூக்கி வீசும் அளவுக்குச் சென்றுவிட்டனர்.
எதற்கும் அஞ்சாமல், தீரத்துடன் தன் கப்பல் பயணத்தைத் தொடர்ந்தார் டெஸ்லா. சில வாரங்கள் கழித்து, வெறும் நான்கு சென்ட் பணத்துடனும் சில புத்தகங்களுடனும் கைப்பட எழுதிய சில கவிதைத் தாள்களோடும் மேலும் சில எளிய பொருட்களையும் தூக்கிக்கொண்டு ஒரு நாடோடி போல் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தார் டெஸ்லா.
அவர் வந்து சேர்ந்த கப்பலில் ஊதப்பட்ட சங்கு, ஒரு போரின் சங்கை அறிவிப்பதைப் போலிருந்தது என்று ஓர் ஆய்வாளர் பதிவு செய்கிறார்.
(தொடரும்)
படம் : மின்தேக்கி இல்லாத சுருளுக்கு விண்வெளிமூலம் கடத்தப்படும் அலைகளால் ஒளிரும் விளக்கு. அதற்குக் கீழே நிகோலா டெஸ்லா அமர்ந்து வாசிக்கிறார். 1890களில் எடுத்த புகைப்படம்.
Nice 👍..,
Thank you very much for your kind support Hema Ji! 😊🙏🏼
மனித வாழ்வில் உள்ள ஏற்ற, இறக்கங்கள் பற்றிய டெஸ்லாவின் கருத்து ஆகட்டும், முழு பங்களிப்போடு ஒரு காரியத்தை செய்யும் போது கட்டாயம் புகழ் உன்னைவந்து சேரும் என்பதை அவருடைய அனுபவத்தின் வாயிலாக ரொம்ப அழகாக சொல்லிருக்கிறார். அதை தாங்கள் எடுத்து கூறி இருக்கிற விதமும் அருமை.
பல கஷ்டங்களுக்கு பின் டெஸ்லா அமெரிக்காவில் கால் எடுத்து வைத்துவிட்டார். இங்கு அவரின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது.
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சுபா மேடம்! அமெரிக்காவில் டெஸ்லாவின் வாழ்வு, பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும், மர்மங்களையும், திருப்புமுனைகளையும் கொண்டது. அவற்றைப் போகப்போக நீங்கள் விரிவாகக் காண்பீர்கள். 😊🙏🏼
பட்டை தீட்டப்படும் வைரம் போல பல இன்னல்களை கடந்து சாதனை படைத்த மனிதன்… அவருடைய வாழ்க்கை வரலாற்றை உங்கள் எழுத்தில் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி….
ஆம் விஜயலட்சுமி அவர்களே! தாங்கள் கூறியது முற்றிலும் சரி. டெஸ்லா என்னும் வைரம், எப்படி வாழ்வியலால் பட்டை தீட்டப்பட்டு, தன்னிகரின்றி ஒளி வீசியது என்பதை, வரும் அத்தியாயங்களில் நீங்கள் காணலாம். தங்கள் கருத்துக்கும், விமர்சனத்திற்கும், என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! 😊🙏🏼