Skip to content
Home » பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

Palestine

பாலஸ்தீன மக்களின் வரலாறு முகமதின் எழுச்சிக்குப் பின்னால் தொடங்கியது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் அதுவரை நாகரிகமடையாத பழங்குடிகளைப்போல வாழ்ந்ததாகவும், முகமது இஸ்லாம் மதத்தை நிறுவிய பின்னர்தான் அங்கிருந்த மக்கள் வளர்ச்சியடைந்து அரசை நிறுவினார்கள் என்றும் பலர் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறு.

பாலஸ்தீனத்தின் உண்மையான மக்கள் யார் என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. இன்று பாலஸ்தீன மக்களை குறிப்பதற்கு பாலஸ்தீன அரபியேர்கள் என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முகமதுவின் ஆட்சிக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அரேபியர்கள் பாலஸ்தீனத்துக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் உண்மையான பாலஸ்தீன மக்கள் யார்? இப்படிப் பல குழப்பங்கள் நிலவுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

0

பாலஸ்தீன வரலாற்றை அறிய முற்படும்போது அது யூதர்களின் வரலாற்றில் இருந்து தொடங்குவதாகவே அமைகிறது. காரணம், பெரும்பாலும் பைபிளில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளின் அடிப்படையிலேயே பாலஸ்தீன வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை அதற்கும் அப்பாற்பட்டது. பைபிள் என்பது ஒரு மத நூல். குறிப்பிட்ட மதக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட கருத்தியலைக் கொண்டு செல்வதற்காகத் தொகுக்கப்பட்ட ஒரு நூல். அது வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் அதிலுள்ள அனைத்தையும் வரலாறு என்று ஏற்றுக்கொள்ள இயலாது.

இன்றைய பாலஸ்தீனப் பிரச்னையில் யூதர்கள் அந்நிலத்தை உரிமை கொண்டாடுவதற்கு முன்வைக்கும் ஆதாரமே பைபிள்தான் (பழைய எற்பாடு). அதில் யூதர்கள்தான் கதாநாயகர்கள். யூதர்களுக்கும் அங்கே வாழ்ந்து வந்த பல்வேறு இன மக்களுக்கும் அரசுகளுக்கும் ஏற்பட்ட மோதல்களே பைபிளில் கதைகளாக வர்ணிக்கப்பட்டுள்ளன. யூத மக்கள் தங்கள் நிலத்தில் இருந்து துரத்தப்பட்டு மீண்டும் தாய்நிலம் திரும்புவதே பைபிளில் இடம்பெறும் கதையாடல்களின் சுருக்கம். இதுவே இன்றைய பாலஸ்தீனப் பிரச்னையில் யூதர்களின் கதையாடலாகவும் இருக்கிறது. பாலஸ்தீனத்தின் வரலாற்றை ஆராயும்போது பைபிளைத் தாண்டி அந்தக் காலகட்டத்தில் நிறுவப்பட்ட கல்வெட்டுகள், கல்லறைகள், பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் மற்றும் ஏனைய அகழ்வாய்வுகளை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

யூதேயா என்கிற தேசம், அதாவது யூதர்களுக்கு என்கிற ஒரு தேசம் உருவாவதற்கு முன்பே பாலஸ்தீனம் என்கிற பரந்துபட்ட ஒரு தேசம் இருந்ததற்கும், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கும் தரவுகள் இருக்கின்றன. உண்மையில் கானானியம் என்ற பெயரில் அந்த நிலம் அறியப்படுவதற்கு முன்பே பாலஸ்தீனம் என்கிற பெயர் வரலாற்றில் பரிச்சயமாக இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் பண்டைய கல்வெட்டுகளில் நமக்குக் கிடைக்கின்றன.

சென்ற அத்தியாயங்களில் யூதர்களின் வரலாற்றையும் அவர்களுடன் வாழ்ந்து வந்த மற்ற இனங்களையும் பார்த்து வந்த நாம் குறிப்பிட்ட ஓர் இன மக்களின் வரலாற்றை மட்டும் விட்டுவிட்டோம். மீண்டும் பழைய காலத்துக்குச் சென்று அவர்களை மட்டும் பார்த்துவிட்டு முகமதுவின் காலத்துக்குத் திரும்புவது பாலஸ்தீன மக்களை அறிவதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.

0

பொயுமு 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் எகிப்தை இரண்டாம் ராமஸெஸ் எனும் மன்னர் ஆண்டு வந்தார். இவர்தான் பைபிளில் யூதர்களை அடிமையாக வைத்திருந்ததாகச் சொல்லப்படும் மன்னர். இவருக்கு அடுத்து வந்தவர் மூன்றாம் ராமஸெஸ். இவருடைய ஆட்சிக் காலத்தில் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் கடல் வாழ்க்கையை மேற்கொள்ளும் சிலரும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கும் ராமஸெஸின் படைகளுக்கும் பெல்செட் எனும் இடத்தில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது.

இந்தப் போரில் ராமஸெஸின் படை வெற்றிபெற்றது. அந்தக் கடலோடி மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஆனால் விஷயம் அதுவல்ல. பெல்செட் எனும் இடத்தில் போர் நடைபெற்று வந்தது அல்லவா? அதுதான் பாலஸ்தீனத்தின் பண்டைய பெயர். பாலஸ்தீனத்தைப் பற்றிய முதல் பதிவு இங்கிருந்தே தொடங்குகிறது. மேலும் ராமஸெஸுக்கு எதிராகக் கடலோடிகள் சண்டையிட்டார்கள் அல்லவா? அவர்கள் பெலஸ்தியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது இன்றைய பாலஸ்தீனர்களின் மூதாதையர்கள்.

பைபிளில் இஸ்ரேல் மக்களுக்கு எதிராக முன்நிறுத்தப்படுபவர்கள் இந்தப் பெலஸ்திய மக்கள்தான். சில வரலாற்றாய்வாளர்கள் பெலஸ்தியர்களை கானானியத்தைச் சேர்ந்தவர்களே அல்லர் என்று கூறுகின்றனர். ஏகன் கடல் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், கானானியப் பகுதிக்கு வந்து குடியேறியவர்கள் என்றும், அவர்களுடைய கலாசாரத்தை கானானானியத்தில் பரப்பினார்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களுடைய ராஜ்ஜியம் பண்டைய இஸ்ரேலிய மக்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் இருதரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது என்றும், இந்த மோதலே பைபிளில் வரும் தாவீதன்-கோலியாத் கதையாடலாக அமைந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

பன்னிரண்டு கோத்திரங்களைச் சேர்ந்த யூதர்கள் சவுல் எனும் அரசனின் தலைமையில் ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டமைத்தார்கள் என்று பார்த்தோம் இல்லையா? அது இந்த பெலஸ்தியர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகத்தான் என்கிறது பைபிள் தரவுகளின்படி கட்டமைக்கப்பட்ட வரலாறு.

இந்தப் பெலஸ்தியர்கள் வழிவந்த மக்களே இன்றைய பாலஸ்தீனியர்கள் என்பதுதான் அவர்களுடைய வாதம்.

இன்றைய பாலஸ்தீனியர்கள் பெலஸ்தியர்கள் வழிவந்தவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் ஏகன் கடல் பகுதியில் இருந்து பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறியவர்கள் என்று சொல்லப்படுவது தவறானது. இன்றைய இஸ்ரேலின் அஸ்கலோன் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்லறை ஒன்று இதை உறுதி செய்கிறது. இவர்கள் வாழ்ந்த இடமே பிலிஸ்து, பெலஸ்தியா, பாலஸ்து, பெல்செத்1 என அழைக்கப்பட்டு பாலஸ்தீனமாக மருவுகிறது.

இப்போது ஒரு சந்தேகம் எழலாம். ரோமானியர்களின் காலத்தில்தானே பாலஸ்தீனம் எனும் பெயர் அதிகாரப்பூர்வமாக இந்த நிலத்திற்கு வழங்கப்பட்டதாகப் பார்த்தோம். எனில், பண்டைய காலத்தில் இருந்தே பாலஸ்தீனம் என்கிற பெயர் இருப்பதாகச் சொல்லப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வது? அதற்கான விளக்கத்தை பின்னால் பார்க்கலாம். இப்போதைக்கு இந்தப் பாலஸ்தீன நிலம் எவ்வாறு இருந்தது, பெலஸ்தியர்கள் எந்த மாதிரியான வரலாற்றைக் கொண்டிருந்தார்கள் என்பதை மட்டும் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

பண்டைய எகிப்து காலத்தில் இருந்தே வெவ்வேறு பெயர்களில் பாலஸ்தீனம் பற்றிய அதிகப்படியான குறிப்புகள் கிடைக்கின்றன. அங்கிருந்தவர்கள் பல கடவுள்களை வழிபடும் மதத்தவர்களாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு என்று தனி கட்டடக் கலை, பொருளாதாரக் கொள்கைகள் இருந்துள்ளன என்றும் தெரிய வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தில் நாணய முறைகளும் வழக்கில் இருந்துள்ளன.

பாலஸ்தீனம்-எகிப்துக்கு இடையேயான வணிகம் பொயுமு 4000-3000 ஆண்டுகளிலேயே பதிவாகியுள்ளது. பாலஸ்தீனம் எகிப்துக்கு தாமிரம், பானை பண்டங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தப் பானைகள், நாணயங்கள் எகிப்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன.

3200 வருடப் பழைமையான எகிப்தியக் கல்வெட்டுகளில் பெல்செத் என்ற பெயரில் இடம்பெறும் பாலஸ்தீனம் தற்போதைய ஜோர்டன், இஸ்ரேல் ஆகிய பெரிய நிலபரப்பை உள்ளடக்கியுள்ளது. இவர்கள் லிபிய மக்களின் (இன்றைய ஆப்பிரிக்கா) நண்பர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் எனும் பெயர் முதன் முதலில் குறிப்பிடப்படும் மெனப்தா கல்வெட்டைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அதே கல்வெட்டில்தான் இந்த பெல்செத் மக்களின் பெயரும் இடம்பெறுகிறது.

மெனப்தா மன்னன் லிபியாவை வெற்றி கண்டவுடன் அப்பகுதி மக்களுடன் நட்பாக இருந்த ராஜ்ஜியங்கள் யார் யாரென்று அவர்களின் பெயர்களையும் கல்வெட்டில் குறிப்பிடுகிறார். அதில் சார்தினியர்கள், எமோரியர்கள் உள்ளிட்ட பெயருடன் பெல்செத் மக்களும் குறிப்பிடப்படுகின்றனர். இதில் ஒரு பெயராகத்தான் இஸ்ரேல் பெயரும் குறிப்பிடப்படுகிறது.

இங்கே முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். பைபிள் கதைகளின்படி பெலிஸ்தியர்களும் இஸ்ரேலியர்களும் எதிரிகள் அல்லவா? ஆனால் மெனப்தா கல்வெட்டில் இருவரும் ஒரே அணியில் நின்று எகிப்தை எதிர்த்துச் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறதே! எது உண்மை?

ஒரு மன்னன் குறிப்பிட்ட நிலத்தினருடன் பகைபாராட்டுகிறான் என்றால் அடுத்த தலைமுறை மன்னனும் அப்படியே இருந்திருப்பான் என்று சொல்ல முடியாது. ஏதோ ஒரு காலத்தில் இருவருக்குள்ளும் பகை இருந்திருக்கலாம். எகிப்துபோன்ற பேரரசை எதிர்க்கும்போது அவர்கள் ஒன்றிணைந்து நின்றிருக்கலாம். பெலஸ்தியர்கள்–இஸ்ரேல் மக்களுக்கு இடையே பழைய எற்பாட்டில் இருந்த பகைதான் இன்றைய பாலஸ்தீன பிரச்னைகளிலும் தொடர்கிறது என்று கருதுவதும் தவறு. ஆனால் அப்படியும் சிலர் இன்று சித்தரிக்கிறார்கள்.

நவீனக் காலத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஜியோனிய தலைவர்கள் பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் என்று ஒரு தேசத்தை உருவாக்க முனைந்தபோது அவர்களுக்கு ஒரு நியாயம் தேவைப்பட்டது. அதற்கு அவர்கள் பழைய எற்பாட்டில் உள்ள கதைகளை வரலாற்றுத் தரவுகளாக முன்னிறுத்தித் தங்கள் திட்டங்களை வகுத்தனர். பண்டைய காலச் சண்டை சச்சரவுகளைத் தற்காலப் பிரச்னைகளுடன் பொருத்தினர்.

1948ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு சாம்ஸனின் நரிகள் எனப் பெயரிடப்பட்டது. சாம்சன் என்பது பைபிளில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். அவர் தன் வெறும் கரங்களால் பெலஸ்தியப் படை முழுவதையும் துவம்சம் செய்ததாகக் கதையாடல் உண்டு. இந்தக் கதையாடலை இன்றைய சூழலில் பொருத்தி ஒரு புனைவான வரலாற்றைக் கட்டமைக்கும் வேலையைத்தான் இஸ்ரேல் செய்து வருகிறது. உண்மையில் இஸ்ரேலிய பாலஸ்தீனப் பிரச்னை என்பது நவீனக் காலத்துப் பிரச்னை. பைபிளில் இருக்கும் மத, கருத்தியல் ரீதியான பார்வையில் இன்றைய பிரச்னையை அணுகக்கூடாது. அதேபோல பைபிள் கதைகளை வரலாற்று ரீதியான பாலஸ்தீனத்துடனும் குழப்பிக்கொள்ளக்கூடாது. இதுகுறித்த விளக்கங்களை பின்னால் வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

வெண்கலக் காலத்தின் இறுதிப் பகுதியில் தெற்கு லெவெண்ட்2 பகுதியைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சில பெயர்கள் (Djahi, Retenu, கானானியம்) மறைந்து பாலஸ்தீனம் என்கிற பெயர் நிலைத்திருக்கிறது. பொயுமு 8 – 7ஆம் நூற்றாண்டுகளில் காணப்படும் அசிரிய கல்வெட்டுகளில் பாலஸ்தீனம் என்கிற பெயரே அதிகம் கிடைக்கிறது.

பொயுமு 1200 – 600களில் பெலஸ்தியா வலுவான சர்வதேச வணிகத்திற்கான தளமாக இருந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் மத்தியத் தரைக்கடல் பகுதியாக பெலஸ்தியாவில் வந்திறங்கி, வணிகம் மேற்கொண்டுள்ளனர். பாலஸ்தீனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கப்பல்களின் இடிபாடுகள் அம்மக்கள் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தின் நிபுணர்களாக இருந்ததைக் காட்டுகிறது. அவர்கள் கடலோடிகளாகவும் நகரங்களைத் திட்டமிடுபவர்களாகவும் யானை தந்தங்களையும் உலோகங்களையும் விற்பனை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.

பல தேசங்களுக்குப் பயணித்து வணிகத்தில் ஈடுபட்டதாலேயே அவர்கள் ஒற்றைக் கடவுள் என்கிற கருத்தியலைப் பின்பற்றாமல் பலகடவுள் வழிபாட்டாளர்களாக இருந்துள்ளனர். அதேபோல பெலஸ்தியர்களிடையே கலாசாரக் கலப்பும் நிகழ்ந்துள்ளது. பெலஸ்தியர்களின் நகரங்கள் சுயாட்சி பொருந்திய ஆட்சியாளர்களால் ஆளப்பட்டுள்ளது. அசிரியப் பேரரசு, அதன்பிறகு அலெக்ஸாண்டர் படையெடுப்பு ஆகிய காலகட்டத்தில்கூட பெலஸ்திய மக்கள் அவர்கள் வழிவந்த மன்னர்களாலேயே ஆளப்பட்டு வந்தனர். ஓவ்வொரு நகரத்துக்கும் சுயேச்சையான நாணயங்களும் இருந்துள்ளன. பெலஸ்திய நகரங்கள் வழி செல்லும் வணிக சாத்துகளிடம் வரி வசூலிக்கப்பட்ட ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

0

ஹெரோடோடஸ் பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர். வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவர் பாலஸ்தீன நாகரிகத்தைப் பற்றிய முக்கிய குறிப்பு ஒன்றைத் தருகிறார்.

அந்தக் காலத்து வரலாற்று அறிஞர்கள் உலக நாடுகள் அடங்கிய புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வந்தனர். இதன் மூலம் சர்வதேச வணிகப் பாதைகளை வரையறுக்கவும், செல்வ வளமிக்க ராஜ்ஜியங்களை அறியவும் அவர்களுக்கு வசதியாக இருந்தது. இதனால் பல நாடுகளுக்கு அவர்கள் பயணம் செய்தபடி இருந்தனர். இதன் காரணமாகவே ஹெரோடோடஸும் பாலஸ்தீனத்துக்குப் பயணம் செய்தார். அங்கிருந்த நாகரிக வளர்ச்சியைப் பார்த்த அவர், பாலஸ்தீனம் பல்வேறு வணிக பாதைகள் அமைந்த நாடாக இருப்பதாலேயே வளமிக்க நாகரிகத்தைக் கொண்டதாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் பாலஸ்தீனம், சிரியா முழுவதும் பயணித்த ஹெரோடாடஸ் யூதேயா எனும் ஒரு நகரம் இருப்பதையோ யூதர்கள் இருப்பதையோ குறிப்பிடவே இல்லை. அதேபோல அவர் கானானியர்கள் என்ற சொல்லையோ, இஸ்ரேல் எனும் சொல்லையோகூடப் பயன்படுத்தவில்லை. குறைந்தது ஒற்றைக் கடவுளை வழிபடும் மதத்தைச் சேர்ந்த ஒரு மக்கள் கூட்டம் அந்நிலத்தில் இருந்ததாகவும் கூட அவர் சொல்லவில்லை.

இதனால் யூதர்கள் என அழைக்கப்பட்ட மக்களும் ஒற்றை வழிபாட்டு முறையும் பாலஸ்தீன நிலத்திற்கு பின்னர் வந்ததாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை பண்டைய கால பிரச்னையின் நீட்சியல்ல என்றால் இப்போது ஏன் நாம் அந்த நிலத்தின் மூதாதையர் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறோம்? காரணம் இருக்கிறது. பாலஸ்தீன-இஸ்ரேல் போர் என்பது காசாவிலும் மேற்குக் கரையிலும் மட்டும் நடப்பது அல்ல. வரலாற்று முனையிலும் அறிஞர்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீன வரலாற்றை இஸ்ரேல் தன் பார்வையில் எழுதி வரும் நிலையில், அம்மக்களின் உண்மையான வரலாற்றை அறிவது நமக்கு முக்கியமாகிறது.

0

ஹெரோடோடஸுக்கு அடுத்து வந்த அரிஸ்டாடிலும் பாலஸ்தீனத்தைப் பற்றி பேசியிருக்கிறார். அவருடைய பிரபலமான படைப்பான ‘Meteorology’ எனும் புத்தகத்தில் பாலஸ்தீனத்தின் சாக்கடல் (Dead Sea) பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

‘இது கட்டுக்கதைபோல தோன்றலாம். பாலஸ்தீனத்தில் ஏரி ஒன்று இருக்கிறது. அதில் நீங்கள் ஒரு மனிதனையோ மிருக்கத்தையோ கயிற்றில் கட்டி தூக்கிப்போட்டால் மூழ்காது, மிதக்கும். அந்த ஏரி கசப்பானதாகவும் உப்பு அதிகரித்தும் இருக்குமாம். அங்கே மீன்கள் வாழ முடியாதாம். நீங்கள் உங்கள் துணியை நனைத்து உதறினால்போதும் அதில் இருக்கும் உப்பு அந்தத் துணியில் இருக்கும் கரையைச் சுத்தம் செய்துவிடும்.’

கிரேக்கத்தில் வாழ்ந்த முக்கிய ஆளுமைகளுள் ஒருவர் தாலமி. அவர் உருவாக்கிய உலக வரைபடம் மிகவும் பிரசித்திப்பெற்றது; முதன்முதலில் உருவாக்கப்பட்ட உலக வரைபடங்களில் ஒன்று என்றும் அறியப்படுகிறது. அந்த வரைபடம் முழுமையானது அல்ல. ஆனால் அக்காலத்து நாடுகள் குறித்த முக்கியத் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதில் மத்திய தரைக்கடல், ஆசியா ஆகிய பகுதிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஒரு பகுதியின் பெயர் பாலஸ்தீனம்.

தாலமியின் வரைபடம்தான் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. அதிலும் முக்கிய இடமாக பாலஸ்தீனம் இடம்பெற்றிருந்தது.

0

பொயு 135 -390 ஆண்டுகளில் பாலஸ்தீனம் ரோமானியர்களின் முக்கிய மாகாணங்களில் ஒன்றானது. இந்தக் கலாகட்டத்தில் பல்வேறு ரோமானிய ஆவணங்களில் லத்தீன், கிரேக்கம், அரமேயம், ஹீப்ரு எனப் பல்வேறு மொழிகளில் இந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டது.

லத்தீனும் கிரேக்கமும் ரோமானியர்களின் பொது மொழிகளாக இருந்தன. அவர்கள் மேற்கொள்ளும் வணிகம், நிர்வாகவியல், கல்வி, மதம், கட்டடக்கலை, பேச்சுவார்த்தைகள், நாணயங்கள், இடங்களின் பெயர்கள் என அனைத்தும் இந்த மொழிகளில்தான் இடம்பெற்றன. அந்த மொழியில் பாலஸ்தீனத்தின் பெயர் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டதால்தான் அந்நிலம் அங்கீகரிக்கப்பட்ட நிலமாக ரோமானியர்களால் கருதப்பட்டது. இதைத்தான் நாம் முன்னர் பார்த்தோம்.

நாம் ஏற்கெனவே பார்த்த ரோம பேரரசரான ஹாட்ரியன் அப்போது இருந்த யூதேயா, சமேரியா ஆகிய நிலங்களுடன் வடக்கில் இருந்த கலிலி, தெற்கில் இருந்த ஈதோம் ஆகிய இடங்களை இணைத்து பாலஸ்தீனத்தை விரிவுபடுத்தினார்.

இதன்பிறகு அண்மைக் கிழக்கில் ரோமானியப் படையில் பணியாற்றிய வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டதில் அவர்கள் சிரியா – பாலஸ்தீன மாகாணத்தில் பணியாற்றியவர்கள் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் ரோமானியப் படைகளில் சேவையாற்றி முடிந்தவுடன் ரோமானியக் குடிமக்களாக அங்கீகரிப்பட்டதற்குப் பட்டயங்களும் வழங்கப்பட்டன. அதிலும் பாலஸ்தீனா பெயர் இடம்பெறுகிறது.

ஹார்டியன் பாலஸ்தீனா எனும் பெயரைத் தேர்வு செய்ததற்கு அந்தப் பெயருக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறும், புவியியல், அரசியல் முக்கியத்துவமும் இருந்ததே காரணம் எனக் கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.

இன்னும் சொல்லப்போனால் இயேசு பிறந்த அதேகாலத்தில் வாழ்ந்த யூத ஆசிரியர் ஜோசபெஸ், பிலோ போன்றவர்கள்கூடத் தங்களுடைய நிலத்தைப் பாலஸ்தீனம் என்றே குறிப்பிடுகின்றனர். குறிப்பாக பிலோ எழுதிய Quod Omnis Probus எனும் நூலில், சாக்கடல் சுருள் ஏடுகளைக் கண்டெடுத்ததாக அறியப்படும் புகழ்பெற்ற யூதக்குழு ஒன்று பொயுமு இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்றாம் நூற்றாண்டு வரை பாலஸ்தீனத்திலும் சிரியாவிலும் வாழ்ந்ததாகவே குறிப்பிட்டுள்ளார். அவர் யூதர்களின் நிலம் என்றோ, இஸ்ரேல் என்றோ ஒரு பதத்தைப் பயன்படுத்தவே இல்லை.

பாலஸ்தீனம் பைசாந்தியர்களின் ஆளுமைக்கு உட்பட்டதைத் தொடர்ந்து அங்கு கிறிஸ்தவ மதம் தீவிரமாகப் பரவியது. இது அந்நிலத்தின் சமூகவியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல பாலஸ்தீனம் கிறிஸ்தவ மதத்தின் மையமானது. கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் பிறந்த மதம் என்பதால் அந்நகரம் ஆன்மிகத் தலைநகரைப்போல பார்க்கப்பட்டது.

பைசாந்தியர்கள் பாலஸ்தீனத்தை நிர்வாக ரீதியாக மூன்று மாகாணங்களாகப் பிரித்தனர். பாலஸ்தீன பிரைமா, பாலாஸ்தீன செகன்டா, பாலஸ்தீன சலுதாரிஸ் என இவை பிரிக்கப்பட்டு பொயு 4ஆம் நூற்றாண்டு முதல் 7ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. முக்கியமான அரசியல், ராணுவ, மத ரீதியான நடவடிக்கைகளின் நகரமாக பாலஸ்தீன பிரைமா இருந்தது. இதனால் அந்நகரம் பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் செழிவுற்றது. அதற்கு பிறகு வந்த இஸ்லாமிய ஆட்சியிலும் பாலஸ்தீனம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்ததாகவே தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பைசாந்திய காலத்தில்தான் ஜெருசுலேமும் ஏலியா கேபிட்டோலினா என்று மாற்றப்பட்டதை நாம் பார்த்தோம். அடுத்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு இந்தப் பெயரே நிலைத்தது. அரேபியர்கள் ஜெருசுலேத்தைக் கைப்பற்றியவுடன் இலியா என்றே அந்நகரத்தை அழைத்தனர். அவர்கள் காலத்திலும் பாலஸ்தீனம் தனித்த அடையாளத்துடன்தான் இயங்கியது. இது இஸ்லாம் எனும் மதம் தோன்றுவதற்கு முந்தைய காலம்!

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அப்போது அரேபியர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாதா? இஸ்லாம் மதத்துக்கு முன்பே அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றிவிட்டார்கள் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? அப்போது பாலஸ்தீனத்தின் பூர்வகுடிகளாக அறியப்பட்ட பெலஸ்தியர்கள் என்ன ஆனார்கள்? இப்படிப் பல கேள்விகள் வருகின்றன. இதனோடு சேர்த்துதான் நாம் முகமதுவின் வரலாற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

(தொடரும்)

 

1 பாலஸ்து, பெல்செத், பிலிஸ்து, பெலஸ்தியா எனும் வெவ்வேறு பெயர்களில் பாலஸ்தீனம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. பிலிஸ்து என்பது பெலஸ்தியர்களைக் குறிக்க அசிரியர்கள் பயன்படுத்திய பெயர். பெல்செத் என்பது எகிப்தியர்கள் பயன்படுத்திய பெயர். இப்படி ஒவ்வொருவரும் பல பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

2 லெவண்ட் என்பது கிழக்கு மத்தியத் தரைக் கடலில் அமைந்த சைப்ரஸ், மற்றும் நிலநடுக்கடலின் கிழக்கே அமைந்த வடக்கு அரேபிய தீபகற்பத்தின் பகுதிகளான இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், பாலஸ்தீனம், சிரியா, தெற்கு துருக்கி ஆகியவை அடங்கிய பகுதிகளைக் குறிக்கும்.

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *