1936ஆம் ஆண்டு வெடித்த பாலஸ்தீனப் புரட்சியை இருவர் தீர்மானித்தனர். நேரடியாகத் தீர்மானித்தவரின் பெயர் இஸ் அதின் அல் கஸாம் (Izz ad-Din al-Qassam). மறைமுகமாகத் தீர்மானித்தவரின் பெயர் ஹிட்லர்.
1929ஆம் ஆண்டு ஜெருசலேம் எழுச்சிக்குப் பிறகு பாலஸ்தீனம் எங்கும் ஒரு விதக் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. அமைதியான கிராமங்களில் இருந்து ஆரவாரம் மிக்க நகரங்கள் வரை பார்க்கும் இடமெல்லாம் மக்கள் ஒன்றுகூடி மேன்டேட் அரசுக்கு எதிராகவும், சியோனியக் குடியேற்றத்தை நிறுத்தக் கோரியும் குரல் கொடுத்து வந்தனர்.
எத்தனை முறை கோரிக்கை மனுக்களை அளிப்பது? எத்தனை முறை மன்றாடுவது? எங்கள் வேண்டுகோளைப் பரிசீலித்துப் பார்க்கும் எண்ணம் பிரிட்டனுக்கு இருக்கிறதா, இல்லையா? நாங்கள் கொடுக்கும் மனுக்களை அவர்கள் படித்தாவது பார்க்கிறார்களா? இதுதான் அவர்களைக் கோபம் கொள்ளவைத்தது.
நாங்கள் யூதர்களையும் அரேபியர்களையும் சமமாகத்தான் நடத்துகிறோம் என்று பிரிட்டன் சொல்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பாலஸ்தீனர்களின் சிறு போராட்டங்கள்கூடக் கொடூர ஒடுக்குமுறைக்கு உள்ளாகும்போது எங்கள் வாழ்வின்மீது உண்மையில் பிரிட்டனுக்கு அக்கறை இருக்கிறதா? இந்த அரபு பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? வெறும் கண்டனம் சொல்லிவிட்டு கலைந்துபோவதுதான் தலைவர்களுக்கு அழகா? போராட்டம் என்றால் களத்தில் முன்னின்று மக்களை வழிநடத்த வேண்டாமா? அப்படியொருவர் தலைவர் இங்கு இருக்கிறாரா? யாராவது தலைமை தாங்க வருவார்களா என்று பாலஸ்தீனர்கள் சிந்திக்கத் தொடங்கி இருந்த நேரத்தில்தான் ஒருவர் வந்தார்.
அவரது பெயர் இஸ் அதின் அல் கஸாம். அவர் ஒரு மத போதகர். எகிப்தில் படிப்பை முடித்த அவர், ஓட்டோமான்கள் ஆட்சியில் சிரியாவில் மக்களுக்கு இஸ்லாமியக் கல்வியைப் பயிற்றுவித்து வந்தார். 1921ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு சிரியாவை ஆக்கிரமித்தபோது, மக்களை ஒன்றுதிரட்டி அதன் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடினார். அவரது போராட்டத்தை ஒடுக்கிய பிரெஞ்சு அரசு, அல் கஸாமைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டது. இதையடுத்து சிரியாவில் இருந்து தப்பித்து பாலஸ்தீனத்துக்கு வந்தவர், இங்குள்ள பிரிட்டன் அரசுக்கு எதிராகச் சிறிய பட்டறைகளை அமைத்து இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயுதப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.
அல் கஸாம் தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாடி வந்தார். ‘நீங்கள் நிச்சயம் ஒருநாள் பிரிட்டனை எதிர்த்து நிற்கும் நாள் வரும். அன்றைக்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இல்லாமல் ஒழுங்மகைக்கப்பட்ட முறையில் மக்கள் போராட வேண்டும். அப்போதுதான் பாலஸ்தீனம் சுதந்திரம் அடையும்’ என்பதுதான் அவரது அறிவுரையாக இருந்தது. அல் கஸாமின் கொள்கையாலும் ஆளுமையாலும் உந்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவருடன் மலைகளுக்குச் சென்று பயிற்சி பெற்றனர்.
குறிப்பாகப் பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து வெளியேறிய ஏராளமான மாணவர்கள் வேலைவாய்ப்பில்லாததால் விவசாயிகளுடன் இணைந்து ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கினர்.
1933ஆம் ஆண்டு மேன்டேட் அரசுக்கு எதிராக ஒருநாள் வேலை நிறுத்தத்தைப் பாலஸ்தீனர்கள் அறிவித்தனர். யோப்பாவில் கூடியிருந்த போராட்டக்காரர்கள்மீது பிரிட்டன் வீரர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதில் பொதுமக்கள் 27 பேர் உயிரிழந்த நிலையில் பாலஸ்தீனம் முழுவதும் ஒருவிதக் கொந்தளிப்பு நிலையில் இருந்தது.
இதே சமயத்தில்தான் மற்றொரு நிகழ்வு ஐரோப்பாவில் ஏற்பட, அந்நிகழ்வு மறைமுகமாக பாலஸ்தீன மண்ணில் புரட்சியைக் கொண்டு வந்தது.
0
1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார். இதையடுத்து ஜெர்மனி முழுவதும் நாஜி அலை அடிக்கத் தொடங்கியது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்களுக்கு எதிரான பிரசாரங்கள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டன. ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கிருந்து தப்பித்துச் சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் பாலஸ்தீனத்துக்குள் நுழைந்தபடி இருந்தனர்.
இந்த அலையைக் கட்டுப்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதன்மூலம் குடிபெயர்வோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து கொண்டே வந்தது. 1932இல் 9000இல் இருந்த யூதர்களின் வருகை 1935இல் 65,000ஆக அதிகரித்து இருந்தது. இத்தகைய வேகத்தில் தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் தங்கள் நிலங்களிலேயே தாங்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவோம் என்று பாலஸ்தீனர்கள் அஞ்சினர்.
யூதர்கள் குடியேற்றம் அதிகரிக்கும் அதே நேரத்தில் சியோனியர்களின் நடவடிக்கைகளும் தீவிரமடைந்தன. 1935இல் ஐரோப்பாவில் இருந்து மட்டும் கப்பல்வழியாக 800 ரைபிள் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் டெல் அவிவிற்குக் கொண்டு வரப்பட்டன. பாலஸ்தீனர்கள் வெகுண்டு எழுந்து போராடத் தொடங்கினர்.
அப்போது உலக அளவில் பொருளாதார மந்தநிலை வேறு ஏற்பட்டு அதன் தாக்கம் பாலஸ்தீனத்தில் எதிரொலிக்க ஆரம்பித்திருந்தது. பொருளாதார வீழ்ச்சியால் பாலஸ்தீனத் தொழிலாளர்களும் விவசாயிகளும் பாதிப்படைய, சியோனியப் பொருளாதாரமோ பணக்கார ஜெர்மன் யூதர்கள் கொண்டு வந்த பெரிய அளவு மூலதனத்தால் பாதுகாக்கப்பட்டது. இத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து நிதியுதவி வேறு அவர்களுக்கு வந்துகொண்டிருந்தது. போதாக்குறைக்கு இங்கிலாந்து வேறு 25 லட்சம் டாலர்களை யூதர்களுக்குக் கடனாக வழங்கியது.
1935ஆம் ஆண்டு யூதர்களின் ஒருநாள் ஊதியம் 10 சதவிகிதம் வரை உயர்ந்தது. ஆனால் பாலஸ்தீனர்கள் நிலையோ இதற்கு நேர்மாறாகக் குறைந்தது. அப்போது ஜவுளி மற்றும் புகையிலைத் தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகளவு வேலை செய்து வந்தனர். பாலஸ்தீனப் பெண்கள் வாங்கும் சம்பத்தைவிட யூத பெண்களின் சம்பளம் 443 சதவிகிதம் அதிகமாக இருந்தது!
ஆயினும் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி யூதத் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரபுத் தொழிலாளர்களைப் பணியில் இருந்து நீக்கிவந்தனர். அரபுப் பணியாளர்கள் கட்டுமானம், சுரங்கம், தொழிற்சாலை என எல்லா இடங்களிலும் வேலையிழந்தனர். அரபு வியாபாரங்கள் இழுத்து மூடப்பட்டன. பாலஸ்தீன விவசாயமும் பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. 1936ஆம் ஆண்டில் 20,000 குடும்பங்கள் சியோனியர்களால் வாங்கப்பட்ட நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டன. கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய நிலத்தை இழந்திருந்தனர்.
இவ்வாறு தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கோபம் வளர்ந்துகொண்டே வந்தது. அவர்கள் பிரிட்டனுக்கு ஒரே எச்சரிக்கையை விடுத்தனர்: ஒன்று எங்களுக்கு அரசாங்கம் ரொட்டியை வழங்க வேண்டி வரும் அல்லது ஆயுதங்களை.
0
இந்தச் சமயத்தில்தான் அல் கஸாம் தன்னுடைய நெருங்கிய தோழர்கள் 25 பேருடன் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதப் புரட்சியைத் தொடங்கினார். பிரிட்டன் படைகள் முகாமிட்டிருந்த யூத விவசாயப் பண்ணைகளில் எல்லாம் அவர் தாக்குதலை நடத்தினார். சியோனிய அலுவலகங்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அடுத்ததாகப் பெரிய தாக்குதல் ஒன்றை அவர் திட்டமிட்டிருந்த நேரத்தில்தான் பிரிட்டன் அரசு அவர் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படியாக அல் கஸாமின் முயற்சி ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது.
ஆனால் இவரது மரணம்தான் பெரும் மக்கள் புரட்சியைப் பாலஸ்தீனத்தில் தொடங்கி வைத்தது. அவரது கருத்துகள் பொதுமக்களிடம் தீவிரமாகக் கொண்டு செல்லப்பட்டன.
‘உனது உரிமையைப் பற்றிக்கொள்
அல் கஸாம் உனக்கு முன் பாதையை உருவாக்குவார்
புரட்சியே உங்கள் கவலைகளைப் போக்கும்.’
இந்தப் பாடல் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒலித்து தேசம் முழுவதும் பாலஸ்தீன மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்தது. அவரது மரணம் குறித்த செய்தியும், மரணத்துக்கு முன் அவர் உதிர்த்த ‘தியாகிகளாக உயிர்விடுங்கள்’ என்கிற கடைசி வாக்கியமும் காற்றைவிட வேகமாகப் பரவின. எல்லா ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் நடந்தே வந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அல் கஸாமின் மரணம் பாலஸ்தீனப் போராட்டத்துக்கு புதிய வடிவம் கொடுத்தது.
ஏப்ரல் 19ஆம் தேதி யோப்பா நகர மக்கள் மேன்டேட் அரசுக்கு எதிராகப் பொது வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். இந்த வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள், பெண்கள் கூட்டமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் என எல்லோருமே பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மதப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் திரண்டு பிரிட்டன் ஆட்சிக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
ஏப்ரல் 22ஆம் தேதி அரேபியர்களின் கடைகள், வணிகத் தளங்கள், சந்தைகள் மூடப்பட்டன. போக்குவரத்து, தொலைத் தொடர்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் வேலை நிறுத்தம் துல்கரம், நேபுலஸ், ஜெருசுசலேம், ஹெனின், ஹைஃபா என ஒவ்வொரு நகரமாகப் பரவியது. அந்தந்த நகரங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வந்து வெவ்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் இவர்களது முதல் மற்றும் பொது கோரிக்கையாக பாலஸ்தீனத்துக்கு விடுதலை என்ற முழக்கமே இடம்பெற்றது.
தேசம் முழுவதும் போராட்டம் வலுவடைந்தது. பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு தெருவிலும் கஸாமின் வார்த்தைகள் எதிரொலித்தன. மக்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வரி செலுத்துவதை நிறுத்தினர். உள்ளூரில் இருந்த அரசு அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டன. சியோனியக் குடியேற்ற அலுவலகங்களின்மீது தாக்குதல்கள் நடைபெற்றன. போராட்டம் பெரிதாகிக்கொண்டே இருந்தது. நிச்சயம் இதன் வெற்றி சுதந்திர பாலஸ்தீனத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் வளர்ந்து இருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு இருந்த ஒரே சிக்கல் அவர்களுக்கு என்று ஒரு தலைமையில்லாதது. மக்கள் தாங்களாகவே திரண்டு வந்து போராட்டத்தை முன்னெடுத்தார்களே தவிர அதைத் தேசிய அளவில் எப்படி ஒருங்கிணைத்து பிரிட்டனுக்கு எதிராகத் திருப்புவது என்று தெரியவில்லை. வேறுவழியில்லாமல் அவர்கள் மீண்டும் அரபுப் பிரதிநிதிகளிடமே செல்ல வேண்டியிருந்தது.
அரபுப் பிரதிநிதிகள் குழு இந்தப் போராட்டங்களையொட்டி ‘அரேபிய உயர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கியது. இதன் தலைவராக ஹஜ் அமின் எல் ஹிசைனி என்பவர் இருந்தார். இந்த அமைப்பு சிறிது நாட்களில் போராட்டத்தின் நோக்கத்தை மாற்றத் தொடங்கியது. வேலைநிறுத்தத்தின் மையமாக பாலஸ்தீனத்தின் விடுதலை என்ற லட்சியமே எடுத்துரைக்கப்படும். ஒருவேளை பிரிட்டன் பேச்சுவார்த்தைக்கு வரும்பட்சத்தில் யூதக் குடியேற்றத்தை நிறுத்தினால்போதும் என்ற நிபந்தனையுடன் போராட்டத்தைக் கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருந்தது. அரேபியக் கூட்டமைப்பு தலைவர்களின் நோக்கமே இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி பிரிட்டனுடனான தங்களுடைய பேரம் பேசும் அதிகாரத்தையும், எதிர்கால பாலஸ்தீன அரசாங்கத்தில் தங்கள் பதவியையும் உறுதி செய்வதாகத்தான் இருந்தது.
ஆனால் பெரும்பான்மையான மக்கள் இந்த வேலைநிறுத்தம் சுதந்திரத்தைப் பெற்றுத்தரும் என்றே நம்பினர். சிரிய மக்கள் இதேபோல ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தி பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து சுய நிர்ணய அரசைப் பெறுவதற்கான வாக்குறுதியைப் பெற்றிருந்தனர். அதேபோன்ற ஒன்றைத்தான் பாலஸ்தீனர்களும் எதிர்பார்த்தனர்.
பாலஸ்தீன வேலைநிறுத்தம் தொடங்கியவுடனேயே அவர்களுக்கு டமாஸ்கஸ், பெய்ரூட், பாக்தாத், கெய்ரோவில் இருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. இந்தப் போராட்டத்துக்கு பிரிட்டன் எப்படியும் செவிசாய்க்கப்போகிறது என்பதுதான் அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் பிரிட்டனோ அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத பதிலடியைக் கொடுத்தது. இந்த வேலைநிறுத்தத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய பிரிட்டன் அரசு, பாலஸ்தீனத்தில் குடியேறும் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக அறிவித்தது. மேலும் பாலஸ்தீனத்துக்கு அருகாமையில் உள்ள அரபு தேசங்களுடனான உறவையும் துண்டிக்கும் நடவடிக்கையாக சிரியா, லெபனான் ஆகிய தேசங்களுக்குச் செல்லும் தொலைபேசி, தந்தி கம்பிகளை உடைத்து எறிந்தது. பாலஸ்தீனப் போராட்டம் பற்றிய செய்தி வேறு அரபு தேசங்களை எட்டாத அளவுக்குப் பார்த்துக்கொண்டது.
அதுமட்டுமின்றி போராட்டம் நடத்தும் பாலஸ்தீனர்களைக் கட்டுப்படுத்த இஷ்டம்போல துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்ற அனுமதியையும் கொடுத்தது. இதனால் ஈவு இரக்கமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் போராட்டக்காரர்கள் விடுவதாக இல்லை. ஹைஃபா மாலுமிகளும் நூற்றுக்கணக்கான பெண்களும் ஆயுதம் தாங்கிய பிரிட்டன் படையினருக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மே 1, சர்வதேசத் தொழிலாளர் தினத்தன்று 2000க்கும் மேற்பட்ட மக்கள் ஹைஃபாவில் ஊர்வலமாகத் திரண்டு வந்திருந்தனர். இதில் 61 முக்கியத் தலைவர்களை பிரிட்டிஷார் கைது செய்தனர். ஆனால் உடனே அடுத்தநிலையில் இருந்த மக்கள் தாங்களாகவே தலைமைப் பொறுப்பை எடுத்துகொண்டனர்.
இதையடுத்து பிரிட்டன் பாலஸ்தீனம் முழுவதுமே அவசர நிலையை அறிவித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையுமே ஒடுக்க உத்தரவிட்டது. போராட்டக்காரர்களைக் கைது செய்த பிரிட்டன் அரசு அவர்களை அருகே இருந்த முகாம்களில் அடைத்துவைத்துச் சித்ரவதை செய்தது. ஒரு வீட்டில் இருந்து யாராவது போராட வந்தாலும் ஒட்டுமொத்தக் கிராமங்களும் வருந்தும்படி தண்டனைகள் வழங்கப்பட்டன.
இந்தப் போராட்டம் தொடங்கப்பட்ட யோப்பா நகரத்தில் ராணுவம் குவிக்கப்பட்டது. நகரப் புதுப்பித்தல் பணி என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த சுவர்கள் எல்லாம் இடித்து நொறுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்க இடமில்லாமல் வீதிகளுக்கு வந்தனர். அருகே இருந்த கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை வாக்கில் சியோனியக் குடியேறிகளின் ஆதரவுடன் பாலஸ்தீனத்தில் படைத்துறைசட்டம் (Martial Law) அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து படைவீரர்கள் கப்பலில் அழைத்து வரப்பட்டு பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்டனர். 20,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பாலஸ்தீனம் முழுவதும் ரோந்து சென்றனர். ஆனாலும் மக்களைக் கட்டுப்படுத்துவது கடும் சவாலாக இருந்தது. பிரிட்டன் கப்பல்கள் பீரங்கிகளையும் நவீனத் துப்பாகிகளையும் சுமந்துகொண்டு வந்தன. கிராமங்களின் மேல் விமானங்கள் குண்டு வீசத் தொடங்கின.
பிரிட்டன் அதிகாரிகள் சியோனியக் குடியேறிகளுக்குப் பயிற்சி கொடுத்து இரவுப் படை ஒன்றை உருவாக்கி இரவுகளில் பாலஸ்தீனக் கிராமங்கள்மீது தாக்குதல் நடத்தினர். ஏற்கெனவே இருந்த சியோனிய ஆயுதப் படையான ஹகனாவின் (Haganah) உறுப்பினர்கள் பாலஸ்தீனப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முழு வேகத்தில் பிரிட்டன் அரசால் முடுக்கிவிடப்பட்டனர். சியோனியர்களின் வெறியாட்டமும் பிரிட்டனின் கோரத் தாண்டவமும் தடுக்க முடியாத அளவுக்குச் சென்றது. ஆனாலும் மக்கள் விடுவதாக இல்லை. கிள்ளக் கிள்ள முளைத்துக்கொண்டே இருந்தனர்.
மக்கள் இத்தகைய வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அரபுக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேலும் போராட்டத்தைத் தொடரவிடாமல் தடுப்பது பற்றி யோசிக்கத் தொடங்கினர்.
விவசாயிகள் மேலும் மேலும் போராளிகளாகி பிரிட்டனுக்கு எதிராகக் களம் இறங்கும் நிலையில் அரபுக் கூட்டமைப்பின் தலைவர் ஹஜ் அமீனும் மற்ற உறுப்பினர்களும் தங்களுடைய பதவிக்கும் அதிகாரத்திற்கும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சத் தொடங்கினர். நிலைமை தங்கள் கையைவிட்டுப் போவதாக அவர்கள் உணர்ந்தனர்.
ஏற்கெனவே பாலஸ்தீன மேல்தட்டு வர்க்கப் பொருளாதாரம் முழுவதும் சியோனியர்கள் கையில் சென்றிருந்தது. சியோனியர்கள் துறைமுகங்கள் மற்றும் ரயில்சேவையில் இருந்த அரசுப் பணிகளையும் அபகரிக்கத் தொடங்கி இருந்தனர். இதனால் அரபுக் கூட்டமைப்பில் இருந்த உறுப்பினர்களுக்கு மக்கள் போராட்டத்திற்காக தங்கள் சொந்த நலன்களை இழப்பது சரியா எனக் கேள்வி எழத் தொடங்கியிருந்தது. அவர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாகவே மறைமுகமாக வேலை செய்யத் தொடங்கினர்.
பிரிட்டன் அரசுக்கும் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது தெரிந்தது. இந்த வேகத்தில் புரட்சி நீடித்தால் மேன்டேட் அரசு, சியோனியம், பாலஸ்தீன மேல்தட்டு வர்க்க அதிகாரம் என அனைத்தும் துடைத்து எறியப்பட்டுவிடும் எனப் புரிந்தது. இதை உடனே நிறுத்தவில்லை என்றால் அனைவருக்கும் ஆபத்து என்று கருதிய பிரிட்டன் இறுதி ஆயுதமாக மக்களுக்கு எதிராகத் தாங்கள் பதவி கொடுத்து அழகு பார்த்து வைத்திருக்கும் டிரான்ஸ்ஜோர்டனின் மன்னர் அப்துல்லாவையும், ஈராக்கின் மன்னர் பைசலையும் களமிறக்கியது. அவர்களும் தலையை ஆட்டிக்கொண்டு மக்களை அழைத்துப் போராட்டத்தை நிறுத்துவது குறித்துப் பேசத் தொடங்கினர்.
இவர்களுடன் அரபுக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டபோதுதான் மக்கள் தடுமாறத் தொடங்கினர். அரபு மன்னர்களும் அரபுக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் பாலஸ்தீன இனக்குழுக்களின் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், நிலக்கிழார்கள், அரசு ஊழியர்கள் எல்லோரையும் அழைத்துப் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர். போராட்டம் தொடருமானால் இருக்கும் கொஞ்ச நஞ்ச அரேபிய நலன்களும் பாதிக்கப்படும் எனப் பயமுறுத்தினர். இவர்களின் பேச்சுக்களை நம்பிய மக்கள் செய்வதறியாது குழம்பிப்போய் நின்றனர்.
இந்தச் சமயத்தில் அரபு கூட்டமைப்பின் உறுப்பினர்களை அழைத்துப் பேசிய ஃபைசலும் அப்துல்லாவும் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்க வற்புறுத்தினர். அவர்களும் இத்துடன் போராட்டம் முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். மக்களிடம் ஒருவார்த்தை கேட்கவில்லை. ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. நாளை முதல் போராட்டம் இனி நடக்காது என்ற அறிவிப்பு மட்டும் வெளியானது. அடுத்தது என்ன என்று தெரியாத குழப்பத்தில் போராட்ட அலை அடங்கத் தொடங்கியது. ஆறு மாத காலம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தபோது 5000 பாலஸ்தீனர்கள் உயிர் நீத்திருந்தனர். 15,000 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற நீண்ட வேலை நிறுத்தமாக இது கருதப்படுகிறது.
இந்தப் போராட்டத்தின் முடிவின் அரபு மன்னர்கள் நிகழ்த்தி இருந்த துரோகம் மக்கள் மனதில் பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்தத் துரோகத்தை அபு சல்மா எனும் கவிஞர் இவ்வாறு விமர்சித்தார்.
‘மன்னர்களுக்குத்தான் கேவலம்
கடவுளே! இவர்கள் இத்தனைத் தாழ்ந்தவர்களாக இருந்தால்
அவர்களின் கிரீடங்கள் ஒரு செருப்பின் மதிப்பைக்கூடப் பெறாது
நாங்கள் தாயகத்தைக் காப்போம் அதன் காயங்களை ஆற்றுவோம்.’
துரோகத்தில் முடிந்தாலும் இந்தப் போராட்டம் பாலஸ்தீன மக்கள் வரலாற்றில் உணர்வு, தியாகம் மற்றும் ஒற்றுமையின் ஒருங்கிணைந்த புள்ளியாக இருந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவாக பிரிட்டன் புதிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்காக பீல் ஆணையத்தை 1937ஆம் ஆண்டு அமைத்தது.
இந்த ஆணையம் அரேபியர்கள்-சியோனியர்களுக்கு இடையேயான பிரச்னையை நன்கு ஆராய்ந்து பாலஸ்தீனத்தைப் பிரிக்கவேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. இதன்படி பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஒரு பகுதி சியோனியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இன்னொரு பகுதி அரேபியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மூன்றாவது பகுதி புனித தளங்கள் அடங்கியதாக இருப்பதால் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கூறியது. மேலும் பிரிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் பிரிட்டன் ஆட்சியே தொடர வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்தப் பரிந்துரைக்கு சியோனியர்கள் தங்கள் முழு ஆதரவை வழங்கினர். சியோனியர்களிடம் அப்போது சிறுபகுதி நிலங்களே இருந்தன. ஆனால் அவர்களுக்கு வளமான பெரும்பான்மை நிலம் கிடைக்க அந்த ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனாலேயே டேவிட் பென்குரியன் இந்தத் திட்டத்தை ஏற்பதே யூத தேசத்தை அமைப்பதற்கு முதல் படியாக அமையும் என்று அறிவித்தார்.
ஆனால் பாலஸ்தீனர்களோ இந்த பரிந்துரையை முழுவதுமாக நிராகரித்தனர். இது அப்பட்டமான சியோனிய சூழ்ச்சி என அவர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து மீண்டும் போராட்டங்கள் பாலஸ்தீனத்தில் வலுவடையத் தொடங்கின.
இந்தக் காலகட்டத்தில்தான் கொரில்லா போர் முறை பாலஸ்தீன மலைப் பிரதேசங்களில் பரவிக்கொண்டிருந்தது. அந்த இயக்கங்களில் பெரும்பாலும் விவசாயிகளே உறுப்பினர்களாக இருந்தனர். இந்தப் போராளிகள் keffiyahs எனப்படும் பாரம்பரிய கழுத்து உறை ஒன்றை அணிந்து தங்களை அடையாளப்படுத்தினர். இதனால் யாரெல்லாம் அந்த ஆடையை அணிந்திருக்கிறார்களோ அவர்களை எல்லாம் பிரிட்டன் அரசு கைது செய்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனர்கள் அனைவரும் கழுத்து உறையை அணிந்து வலம் வரத் தொடங்கினர்.
இவ்வாறு பாலஸ்தீன மக்களுக்கும் பிரிட்டனுக்கும் இடையே சிறிய அளவிலான போர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. நீண்டகால பாலஸ்தீன எதிர்ப்பை எதிர்கொண்ட பிரிட்டன் அரசாங்கம் மத்தியக் கிழக்கில் தங்கள் நிலையைப் பரிசீலிக்கத் தொடங்கியது.
அப்போது ஹிட்லரின் ஜெர்மனி வேறு அசுர வேகத்தில் வளர்ந்திருந்தது. மீண்டும் ஓர் உலகப்போர் தொடங்கும் சூழல் ஏற்பட்டது. அப்படியொரு நிலைமை வந்தால் இந்தமுறையும் அரேபியர்களின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும் என பிரிட்டன் கருதியது. அத்துடன் அரேபியர்களின் எண்ணெய் வளமும் பாதுகாப்பான வணிகப் பாதையும் பிரிட்டனுக்கு முக்கியமாக இருந்தது. அதனால் இனியும் அரேபியர்களுடன் சண்டையிடுவது சரியல்ல என பிரிட்டன் முடிவு செய்தது. தங்கள் பேரரசுக்கு மேலும் சேதம் ஏற்படுவதை விரும்பாத பிரிட்டன், மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனர்களுக்குக் காகித வாக்குறுதிகளைக் கொடுக்க முடிவு செய்தது.
1939ஆம் ஆண்டு வெள்ளை இதழ் ஒன்றை வெளியிட்ட பிரிட்டன், பாலஸ்தீன் மீதான தனது 20 ஆண்டு நிலைபாட்டை மாற்றுவதாக அறிவித்தது. அந்த அறிக்கையில் யூதக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதே தனது பிரதான குறிகோள் என்று குறிப்பிட்டிருந்த பிரிட்டன், அடுத்த பத்து ஆண்டுகளில் வெறும் 75000 யூதர்களை மட்டுமே பாலஸ்தீனத்துக்குள் அனுமதிப்போம் என்று கூறியது. அத்துடன் யூதர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரப்போவதாகவும் உறுதியளித்தது. இதைவிட மக்களை ஊக்குவிக்கும் செய்தியாக 10 ஆண்டுகளில் பாலஸ்தீனத்துக்கு விடுதலை அளிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கியது.
பாலஸ்தீனர்கள் பிரிட்டனின் வாக்குறுதிகளை நம்புவதாக இல்லை. திடீரென்று துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் தூக்கி எரிந்துவிட்டு வாக்குறுதிகளை வீசும் பிரிட்டனை அவர்கள் சந்தேகத்துடனே அணுகினர். இதனால் பிரிட்டனின் வெள்ளை அறிக்கையையும் அவர்கள் நிராகரித்தனர்.
ஆனால் யூதர்களுக்கு பிரிட்டனின் அறிவிப்பு இடிவிழுந்ததுபோல இருந்தது. அப்போதுதான் சியோனியர்கள் பாலஸ்தீன சமுதாயங்களுக்கு எதிராகப் பரப்புரையைத் தொடங்கி இருந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, பாலஸ்தீன சந்தைகளில் வெடிகுண்டுகள் வைப்பது, ரகசிய ராணுவப் பயிற்சி அளிப்பது போன்ற வேலைகளில் சியோனியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
பாலஸ்தீனப் புரட்சியை நேரில் கண்ட அவர்கள் அரபு மக்கள் அமைதி முறையில் ஆக்கிரமிப்பை ஏற்கமாட்டார்கள் என்று முடிவுக்கு வந்திருந்தனர். அதனால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் தாங்களும் தயாராகத் தொடங்கிருந்தனர். அதுவரை மறைமுகமாகச் பேசப்பட்டு வந்த சியோனிய திட்டங்கள் இப்போது வெளிப்படையாகப் பேசப்பட்டன.
‘இந்த நாட்டில் இரு மக்களும் ஒன்றாக இருப்பதற்கு இடமில்லை. இந்தச் சிறிய தேசத்தில் அரேபிய மக்கள் இருக்கும் வரை நமது இலக்கான சுதந்திரத்தை அடைய முடியாது. இதற்கு ஒரே ஒரு தீர்வுத்தான் இருக்கிறது. பாலஸ்தீனம், குறைந்தது மேற்கு பாலஸ்தீனம் அரேபியர்கள் இல்லாத நிலமாக இருக்க வேண்டும். இதற்கு நாம் அரேபியர்களை இங்கிருந்து அருகாமை நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். ஒருவர் விடாமல் எல்லோரையும் நாடு கடத்த வேண்டும். ஒரு கிராமம், ஒரு பழங்குடிகூட இருக்கக்கூடாது’ என்று அதன் தலைவர்கள் பேசத் தொடங்கி இருந்தனர். இந்தச் சமயத்தில் பிரிட்டன் அரசு திடீரென பாலஸ்தீனர்கள் ஆதரவை எடுத்தது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவர்கள் பிரிட்டன் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். வருங்காலத்தில் நிச்சயம் பிரிட்டனுக்கு மாற்றாக வேறு ஒரு தேசத்தின் ஆதரவைத் தேட வேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர். இந்தச் சமயத்தில்தான் அடுத்தகட்ட நிகழ்வுகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேறி வந்தன. அடுத்த சில ஆண்டுகளில் தொடங்க இருந்த இரண்டாம் உலகப்போர் பாலஸ்தீனம் உட்பட மத்தியக் கிழக்கின் தலையெழுத்தையே மாற்ற இருந்தது.
(தொடரும்)