ஏப்ரல் 12, 1945 அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் காலமானார். ஹாரி ட்ரூமன் வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக அமர்ந்தார். ட்ரூமன் அதிபராகப் பொறுப்பேற்றதையடுத்து அவருக்கு நேரில் வாழ்த்துச் சொல்ல ஏராளமான தலைவர்கள் வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தனர். அவர்களில் ஒருவர் அமெரிக்க சியோனியத் தலைவர் ஸ்டீபன் வைஸ்.
சியோனியத் தலைவர் வருகிறார் என்று தெரிந்தவுடன் அதிபரின் ஆலோசகர்கள் வேகவேகமாக ட்ரூமனுக்கு மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் நிலைபாடு என்ன என்பதைச் சுருக்கமாக விவரித்தனர். ட்ரூமனுக்கும் மத்தியக் கிழக்கின் விவகாரங்கள் தெரியும்தான் என்றாலும் எதுவும் உளறிவிடக்கூடாது அல்லவா?
ட்ரூமனுக்கு முன் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் அரேபியர்களுக்கும் சியோனியர்களுக்கும் ஏராளமான வாக்குறுதியை அள்ளி வீசியிருந்தார். இந்த வாக்குறுதிகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. ஆனால் அவற்றின் அடிநாதமாக ஒன்று மட்டுமே இருந்தது. அது, மத்தியக் கிழக்கில் அமெரிக்கா தனது வலது காலை எடுத்து வைப்பதற்கு ஒரு நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது.
ட்ரூமனும் பல ஆண்டுகளாக அமெரிக்க அரசியலில் இருந்த பழுத்த அரசியல்வாதிதான். அவருக்கும் மத்தியக் கிழக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்று தெரியும். ட்ரூமன் அமெரிக்க செனட்டராக இருந்தபோது அமெரிக்க காங்கிரஸில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களைப்போல முழுக்க முழுக்க சியோனிய ஆதரவாளராகவே இருந்தார்.
ஒரு கூர்நோக்கு சிந்தனையாளராக மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்றால் அவர்கள் ஆதரவு தந்த சியோனியக் கொள்கைக்குத் தானும் பரிபூரண ஆதரவு வழங்க வேண்டும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். அதனால் யூத தேசம் அமைய வேண்டும் என்பதைத்தான் தேர்தல் நாட்களில் வெளிப்படையாகப் பேசி வந்தார்.
ஆனால் இப்போது அவர் அமெரிக்காவின் அதிபர். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்துவிட முடியாது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் அமெரிக்க நலனுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளை மட்டுமே அவதானித்தாக வேண்டும். குறிப்பாக அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்தியக் கிழக்கில் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைக் கவனத்தில்கொண்டே திட்டங்களைத் தீட்ட வேண்டும்.
0
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகின் மிகச் சக்திவாய்ந்த தேசமாக அமெரிக்கா உருவெடுத்தது. பழைய தாதாக்களான பிரிட்டனும் பிரான்ஸும் போரில் சந்தித்த சேதங்களால் முடங்கிபோயிருந்தன. அமெரிக்காவின் ஏகாதிபத்திய மேலாதிக்க யுகம் தொடங்கியிருந்தது.
அமெரிக்க நிறுவனங்கள் போரினால் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டிருந்தன. போர் முடிந்த பிறகும் அந்த வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க சர்வதேச சந்தைகளின் தேவையும் பல்வேறு நாடுகளின் வளங்களும் அமெரிக்காவுக்கு அவசியமானதாக இருந்தன.
அமெரிக்காவில் இருந்த கார்ப்பரேட் ஜாம்பவான்களில் ஐந்தில் மூன்று நிறுவனங்கள் மத்தியக் கிழக்கில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்களாக இருந்தன. அந்த எண்ணெய் நிறுவனங்களின் ஆதரவாளர்களே ராணுவத்திலும் அரசு அமைப்புகளிலும் தலைமைப் பதவிகளில் இடம்பெற்றிருந்தனர். அவர்களுடைய ஒட்டுமொத்த விருப்பமும் ஒன்றாக இருந்தது. அது, அமெரிக்காவே மத்தியக் கிழக்கு முழுவதையும் அதன் எண்ணெய் கொழிக்கும் வளங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது.
1930களில் பிரிட்டனே மத்தியக் கிழக்கு எண்ணெய் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் தேசமாக இருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் அதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் ஊற்றுகளில் வெறும் 10 சதவிகிதத்தை மட்டுமே தமது கட்டுபாட்டில் வைத்திருந்தன. அதிலும் பெரும்பான்மையான எண்ணெய் கிணறுகள் சவுதி அரேபியா எனும் ஒற்றைத் தேசத்தில்தான் இருந்தது. ஆனால் போர் தொடங்கிய நாட்களில் நிலைமை தலைகீழாக மாறியது.
சவுதி அரேபியாவில் மழையில் முளைக்கும் காளான்கள்போல புதிது புதிதான எண்ணெய் ஊற்றுகள் கண்டறியப்பட்டன. இது அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் உயர்த்தத் தொடங்கியது.
தொடக்கத்தில் இருந்தே மத்தியக் கிழக்கை மையமிட்டு அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடைபெற்று வந்த போட்டி வெளிப்படையான சண்டையாக உருவெடுத்தது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் போக்கில் அனிச்சையாக அமெரிக்காவின் கை ஓங்கத் தொடங்கியது. போர் தீவிரமாக உருவெடுத்த சூழலில் வெற்றிபெறும் கட்டாயத்தில் இருந்த பிரிட்டன் அமெரிக்காவிற்குக் கடன்படும் நிலைக்குச் சென்றுவிட்டது.
இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காதான் நட்பு நாடுகளுக்கு வேண்டிய துப்பாக்கிக்கள், தோட்டாக்கள், விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களையும், போர் வீரர்களுக்கான உணவு, மூலப்பொருட்கள் போன்றவற்றையும் அளித்துவந்தது. ஆரம்பத்தில் ஹிட்லரே போரில் ஆதிக்கம் செலுத்தியதால் தோல்வி பயத்தில் இருந்த பிரிட்டனுக்கு அமெரிக்க உதவியை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்நாடு ஏராளமான பணத்தை அள்ளி இறைத்து ஏராளமான ஆயுதங்களை வாங்கியது. அதனால் கஜானா கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகி வந்தது. ஒரு கட்டத்தில் இதற்குமேல் தங்களிடம் கொடுப்பதற்குப் பணம் இல்லை என்று அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்
உடனே அமெரிக்கா வேறொரு ஏற்பாட்டைச் செய்தது. பணம் இல்லையென்றால் என்ன, உங்கள் நாட்டில் ஏரளாமான சொத்துக்கள் இருக்கின்றன அல்லவா? அதன் உரிமையை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள். நீங்கள் கேட்கும் அனைத்தையும் தாராளமாகத் தருகிறோம் என்று ஒரு ஒப்பந்தத்தைப் (Lend -Lease System) போட்டது. போர் உச்சத்தில் இருந்த சமயம். பிரிட்டனுக்கும் வேறு வழி தெரியவில்லை. சரி என்று ஒப்புக்கொண்டது. இதன் பலனாகத்தான் பிரிட்டன் அமெரிக்காவிடம் கடனாளியானது. போரில் வெல்வதற்காகத் தனது பேரரசு அந்தஸ்தையே அமெரிக்கா எனும் பிசாசிடம் அடமானம் வைத்தது பிரிட்டன்.
அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் முக்கியமானது. அந்நிய நாடுகளின் பொருளாதாரத்தில் அமெரிக்க ஊடுருவலைச் சாத்தியமாக்கும் கருவி. போருக்குப் பிறகு அமெரிக்க நிர்வாகிகள் ‘மார்ஷல் திட்டம்’ என்ற புதிய திட்டத்தையும் உருவாக்கினர். கடன்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் குடுமிகளை எல்லாம் தனது கைக்குள் கொண்டு வரும் திட்டம் அது. இதன்படி போரினால் நலிவடைந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைச் சீரமைப்புச் செய்யவதற்கு உதவி வழங்குகிறோம் என்ற பெயரில் ஏகப்பட்ட அமெரிக்க வணிகங்கள் அந்நாடுகளுக்குள் நுழைந்தன. அந்த நிறுவனங்களின் நோக்கம் உண்மையில் உதவி செய்வது இல்லை. பிரிட்டனும் பிரான்ஸும் படைவீரர்களை வைத்து என்ன செய்ததோ அதையேதான் இப்போது வணிகத்தின் மூலமாக அமெரிக்கா செய்யத் தொடங்கியது. புதிய காலனியம்.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்தியக் கிழக்கில் இருந்த 42 சதவிகித எண்ணெய்க் கிணறுகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. அங்கிருந்து கிடைக்கும் வற்றாத எண்ணெய் வளங்களை விற்பதற்கு அமெரிக்காவுக்குப் புதிய சந்தைகள் தேவைப்பட்டன. இதற்காகத்தான் மார்ஷெல் திட்டம் கொண்டுவரப்பட்டது.
மார்ஷெல் திட்டம் மூலம் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் உட்கட்டுமானத்தை உருவாக்கும் அத்தனை துறைகளிலும் தனது நிறுவனங்களை நுழைத்தது. இதில் முக்கியமானதாக போக்குவரத்துத்துறை இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் சரக்கு போக்குவரத்துக்காக நிலக்கரியில் இயங்கும் 47,000 ரயில் இயந்திரங்களை அமெரிக்காவிடம் கேட்டிருந்தன. இதற்கு அமெரிக்கா வெறும் 20,000 இயந்திரங்களை மட்டுமே நிலக்கரியில் இயக்கும் வகையில் கொடுத்துவிட்டு, 65,000 இயந்திரங்களை எண்ணெயில் இயங்கும் வகையில் கொடுத்திருந்தது. இப்படித்தான் சவுதி அரேபியாவில் எடுக்கும் எண்ணெயை விற்பனை செய்வதற்கான சந்தையையும் அமெரிக்காவே உருவாக்கி வந்தது.
உலகம் முழுவதும் வாகனங்கள் முதன்முதலில் எண்ணெய்யில் இயங்கும் தொழில்நுட்பத்துக்கு மாறிவந்தன. இதில் முதல் இரு இடங்களில் ஐரோப்பாவும் ஜப்பானும் இருந்தன. இதனால் இயல்பாகவே அவர்கள் அமெரிக்காவை நாடி நிற்க வேண்டியிருந்தது.
மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளங்களையும் அதை விற்பதற்கான மாபெரும் சந்தைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்க அரசுக்கு அதில் தடங்கல் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் எழுந்தது. இதனால் மத்தியக் கிழக்கில் ஒரு நிலைத்தன்மையை உருவாக்கும் அவசியமும் அதற்கு ஏற்பட்டது.
நிலைத்தன்மை என்பது வேறு எதுவும் அல்ல. தொடர்ந்து முதலீடு செய்வதற்கான நல்ல சூழலும், மத்தியக் கிழக்கு முழுவதுமான எண்ணெய் வளப்பகுதிகள், துறைமுகங்கள் மற்றும் நீர்பாதைகளில் பாதுகாப்பாக சென்றுவருவதற்கான ஆதரவும்தான். இந்த நிலைத்தன்மை அப்போது அரேபிய தேசியவாதிகளால் ஆட்டம் கண்டிருந்தது.
1946 ஜூலை மாதம் ஈரானிய எண்ணெய்த் தொழிலாளர்கள் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராகவும் மேற்கத்திய ஆதரவில் இயங்கி வந்த ஈரானிய அரசுக்கு எதிராகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மற்றொரு எண்ணெய் தேசமான ஈராக்குக்கும் பரவியது. பிரிட்டன் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து படைகளை வரவழைத்தது. இந்த நடவடிக்கை மீண்டும் அரேபிய தேசியவாதிகளை ஒன்றிணைத்தது. இந்தமுறை அவர்கள் ஆயுதம் தாங்கவும் தயங்காமல் இருந்தனர்.
அரபுத் தொழிலாளர்களின் கோரிக்கையாக ஒன்றுதான் இருந்தது. மேற்கத்திய ஆதிக்கமில்லாத சுதேசி அரசு. இதற்காகத்தான் அவர்கள் மீண்டும் போராட்டங்களைத் தொடங்கியிருந்தனர். இவர்களைத் தேசியவாதிகள் ஒருங்கிணைத்தனர்.
இந்தத் தேசியவாதம் வெற்றி பெற்றால் அது தங்கள் நலனில் பேரடியாக விழும் என்று அமெரிக்காவுக்குத் தெரிந்திருந்தது. இதனைத் தடுக்கும் ஒரு பகடைக்காயாகத்தான் பாலஸ்தீனத்தை அது பார்த்தது.
0
பாலஸ்தீனத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரூமனும் அவருடைய அரசு நிர்வாகிகளும் கவனமாக இருதரப்பிலும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத அணுகுமுறையையே கடைபிடித்து வந்தனர்.
அவர்களின் ஒரே லட்சியம் பிரிட்டனை அந்தப் பகுதியில் இருந்து துரத்திவிட வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கான முயற்சியில் அரபு தேசியவாதத்தை கிளறிவிட்டிடக்கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாக இருந்தனர். இதற்காக பின்னாளில் அவர்கள் பாலஸ்தீனத்தில் யூத தேசம் அமைவதற்கு இணக்கமாக நடந்துகொண்டனர்.
பாலஸ்தீனத்தில் அரேபியர்களுக்குப் பதிலாக சியோனியர்களின் ஆதரவைத் திரட்டுவது அமெரிக்க வல்லாதிக்கத்தின் தேவைகளுக்கு சேவையாற்றும் என அவர்கள் கருதினர். சியோனியர்களுக்கென்று ஒரு புதிய தேசத்தை உருவாக்கிவிட்டால், அரேபியர்களும் காலப்போக்கில் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றே அமெரிக்கத் தலைவர்கள் நினைத்தனர். அமெரிக்கர்களின் இந்த எண்ணப்போக்கை சியோனியர்களும் ஆதரித்தனர்.
போருக்குப் பிந்தைய நாட்களில் பாலஸ்தீன மக்களின் இருப்பையே இருட்டடிப்பு செய்யும் வகையில் சியோனியர்களின் பிரசாரங்கள் அமைந்தன. சியோனியர்கள் பாலஸ்தீனத்தில் மேலும் யூதக் குடியேற்றங்களை அதிகரிப்பதற்கு கோரிக்கை வைத்தனர். உலகின் அபிப்ராயத்தை யூத தேசத்துக்கு ஆதரவாகத் திரட்டுவதற்கு ஐரோப்பியப் பாசிசத்தால் பாதிக்கப்பட்ட யூதர்களையே அவர்கள் முன்னிறுத்தினர்.
போருக்குபின் ஊடகங்கள் முழுவதிலும் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களே இடம்பிடித்திருந்தன. பாதிக்கப்பட்ட யூதர்களின் நேர்காணல்கள், மனதை உருக்கும் புகைப்படங்கள், வதை முகாம்களில் உயிர் தப்பிய யூதர்களின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் இவைதான் மேற்கத்திய ஊடகங்களில் தினசரி செய்திகளாக வந்துகொண்டிருந்தன. உலகம் முதல் முறையாக ஐரோப்பிய யூதர்களுக்கு பாசிசம் நிகழ்த்திய அநீதிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
பாசிசத்தால் லட்சக்கணக்கான யூதர்கள் உயிர் இழந்திருந்தனர். அந்தக் கொடுமையில் இருந்து தப்பித்த யூதர்கள் வாழ வழியில்லாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். யூதர்கள் சந்தித்த இந்தக் கொடூரங்கள் குற்றவுணர்வாக, கோபமாக மக்கள் மனதில் உருவாகி இருந்தது. அவர்கள் பாசிசத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற உறுதியோடு இருந்தனர். இதனைத்தான் சியோனியர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது யூத அகதிகளுக்கு உதவும் நிலையில் அமெரிக்காவே பொருளாதாரத்தில் சிறந்து இருந்தது. கிழக்கு ஐரோப்பாவும் சோவியத் ஒன்றியமும் பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் விழுந்திருந்தன. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரமோ நன்கு செழிப்பாக இருந்தது.
இதனால் அமெரிக்க தொழிலாளர்கள் நலத்துறை தங்கள் நாட்டுக்குள் 4 லட்சம் யூதர்களை அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைத்தது. ஆனால் அமெரிக்க அரசாங்கமோ யூதக் குடியேறிகள் தவறியும் உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்று கதவுகளை நன்றாக இழுத்து சாத்தியிருந்தது.
அமெரிக்கத் தலைவர்களும் கருத்துருவாக்கம் செய்யும் அமைப்புகளும் யூதக் குடியேற்றங்களுக்கு வாழ்விடமாக பாலஸ்தீனமே சரியாக இருக்கும் என்று குரல் கொடுத்து வந்தனர். அதனால் அவர்கள் பிரிட்டனின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கதவைத் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அமெரிக்கக் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் நடத்திய வாக்கெடுப்புகளில் 80 சதவிகித அமெரிக்க யூதர்களும் 75 சதவிகித யூதரல்லாத அமெரிக்கர்களும் அகதிகள் பிரச்சனைக்கு பாலஸ்தீனத்தில் யூத தேசம் அமைப்பதே ஒற்றைத் தீர்வு என கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இத்தகைய ஆதரவு நிலையில், பாலஸ்தீனத்தில் இருந்த பிரிட்டன் அரசுக்கு எதிராக சியோனியர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். முதல்கட்டமாக ஒரு லட்சம் யூதர்களுக்குக் குடியேற்றச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பாலஸ்தீனத்தில் சட்டவிரோதக் குடியேற்றங்களை நிறுவிய பிரிச்சா (Bricha) எனும் நிறுவனம் தனது ஊழியர்களை அகதி முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் வெற்றிகரமாக யூதர்களை மூளைச் சலவை செய்து ஆயிரக்கணக்கான மக்களை மத்தியத் தரைக்கடல் துறைமுகங்களுக்கு அழைத்து வந்தனர். அத்தனைத் துரிதமாகவும் ஆழமாகவும் இந்தப் பிரசாரத் தூதர்கள் செயல்பட்டனர்.
அப்போதும்கூடப் பெரும்பாலான யூதர்களுக்கு அமெரிக்காவுக்குச் செல்வதே விருப்பமாக இருந்தது. அமெரிக்கா மட்டுமே தாங்கள் வாழ்வதற்கு நல்ல வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று அவர்கள் நம்பினர். பாலஸ்தீனத்தின் பொருளாதாரச் சூழல் தங்களுக்கு வேண்டிய வசதிகளைக் கொண்டிருக்குமா என அவர்களிடம் கேள்வி இருந்தது. அதனால் அவர்கள் தயக்கம் காட்டினர். ஆனால் சியோனிய அமைப்புகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்லும் வேலையைத் தொடங்கின.
அமெரிக்கர்கள் சியோனியர்களின் நடவடிக்கைகளுக்குக் கேள்வியின்றி உதவி வந்தனர். அமெரிக்க சியோனியர்கள் நாஜிக்களின் இனப்படுகொலைக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்து அப்பாவி மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான டாலர்களைத் திரட்டியிருந்தனர். 1946-47 ஒரே ஆண்டில் மட்டும் அவர்கள் 130 மில்லியன் டாலர் திரட்டி பாலஸ்தீனத்தில் யூத தேசத்தை அமைப்பதற்காக அனுப்பினர்.
அமெரிக்கச் செய்தித்தாள்கள் தொடர்ந்து பிரிட்டனைத் தாக்கும் விதத்தில் செய்திகளை வெளியிட்டு வந்தன. பிரிட்டன் அதிகாரிகள் யூத அகதிகளுக்குக் குடியேற்றச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று அவை குரல் கொடுத்தன. இத்தகைய சூழலில் யாராவது சியோனிய பித்தலாட்டங்களுக்கு எதிராகப் பேசினால்கூட அது யூத இன வெறுப்புவாதம் என முத்திரை குத்தப்பட்டு அவர்களுடைய குரல் ஒடுக்கப்பட்டது.
1945ஆம் ஆண்டு ட்ரூமன் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லிக்கு யூதக் குடியேறிகளை அனுமதிக்கும்படி கடிதம் ஒன்றை எழுதினார். இதற்கு அட்லி அரேபியர்களிடம் சம்மதம் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மத்தியக் கிழக்கு முழுவதும் பற்றியெரியும் என்றும் குறிப்பிட்டார்.
உடனே அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து யூதக் குடியேற்றம் பற்றி பாலஸ்தீனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பு நடத்தியது. அப்போது ஜெருசலேமில் இருந்த அரபு அலுவலகம் ஒன்று தங்கள் மக்களின் நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவாகச் சொல்லியது.
‘அரபு மக்கள் அனைவரும் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லாமல் யூதக் குடியேற்றங்களையும் அதன் இறுதி இலக்கான யூத தேசம் அமையும் முயற்சியையும் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பு முழுக்க முழுக்க அரேபியர்களின் உரிமை சார்ந்தது. பாலஸ்தீன அரேபியர்கள்தான் இந்த மண்ணின் பூர்வகுடிகள். இந்தத் தேசிய பிரச்னைக்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை மக்களின் முடிவின் அடிப்படையில் தீர்வை அடையும் ஜனநாயக உரிமையையே அவர்கள் கோருகின்றனர்.’
ஆங்கிலோ – அமெரிக்க ஆணையம் மார்ச் 1946இல் அதன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் இந்த ஆணையம் ஒரு லட்சம் யூதர்களை வேண்டுமானால் பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்தது. ஆனால் சியோனியர்களின் யூத தேச லட்சியத்தையும், அனைத்து யூத அகதிகளும் பாலஸ்தீனத்திற்கு செல்லும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்ற சியோனியர்களின் கொள்கையையும் அது நிராகரித்தது.
இந்தப் பரிந்துரையைப் பரிசிலித்த பிரிட்டனும் சியோனியர்கள் ஆயுதப் போராட்டங்களைக் கைவிடும்பட்சத்தில் ஒரு லட்சம் யூதர்களை பாலஸ்தீனத்தில் அனுமதிப்பதாகச் சம்மதித்தது.
ஆனால் சியோனியர்கள் இந்த ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கவில்லை. அவர்கள் இதற்குப் பதிலடி தரும் வகையில் ஜூன் மாதத்தில் எட்டுச் சாலைகளையும் ரயில் பாலங்களையும் குண்டு வைத்துத் தகர்த்தனர். அதற்கடுத்த மாதத்தில் ஈர்கன் கமாண்டோக்கள் யூத அலுவலகத்தின் உத்தரவின்பேரில் பிரிட்டன் அரசின் விடுதி ஒன்றில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வைத்தனர். இதில் அரேபியர்கள், யூதர்கள், பிரிட்டன் அதிகாரிகள் என 80 பேர் உயிரிழந்தனர்.
இப்படியாக சியோனிய அராஜகம் பாலஸ்தீனத்தில் ஆங்காங்கே வெடித்தது. பிரிட்டன் படைகளுக்கும் சியோனியப் படைகளுக்கு எதிராக யுத்தங்களைத் தொடங்கி பாலஸ்தீனத்தைப் போர் நோக்கி இழுத்துச் சென்றன. புதிய புதிய ஒடுக்குமுறை சட்டங்கள் சியோனியர்களுக்கு எதிராக அமலுக்கு வந்தன.
ஒருபக்கத்தில் கட்டுக்கடங்காமல் விரிவடையும் வன்முறை, மறுபக்கம் அதிகரித்து வரும் அமெரிக்காவின் அழுத்தம். இரண்டையும் தாங்க முடியாமல் பிரிட்டன் தவித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தது. 1947ஆம் ஆண்டு பாலஸ்தீனப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபை கையாளட்டும் என்று அறிவித்துவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் அப்போது அமெரிக்க ஆதிக்கமே நிலவி வந்தது. இதனால் ஐநாவிடம் தீர்வு கேட்பதும் அமெரிக்காவிடம் தீர்வு கேட்பதும் ஒன்றுதான் என்று சியோனியர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால் அவர்கள் குதூகலம் அடைந்தனர். பிரிட்டனுக்கும் இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தாலும் பாலஸ்தீனத்தைப் பிரித்த பழி தம் மீது விழாது என்பதால் ஐநாவிடம் ஒப்படைத்துவிட்டு கழண்டுகொண்டது.
0
ஐரோப்பிய நாடுகள்போல ஐநா சபையில் உறுப்பினர்களாக இருந்த பெரும்பான்மையான நாடுகளும் போருக்குப் பிறகான பொருளாதாரத்தைக் கட்டமைக்க அமெரிக்க உதவியையே வலுவாக நம்பி இருந்தனர். அந்தச் சபையில் இருந்த 19 லத்திய அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் சொல்பேச்சைக் கேட்கும் செல்லப் பிள்ளைகளாக இருந்தன.
அமெரிக்க நிறுவனங்களே அந்த நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானித்து வந்தன. அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கங்கள் சிறிய சத்தம் போட்டாலும் அமெரிக்கா தனது வீரர்களையும் போர்க்கப்பல்களையும் அனுப்பி அவர்களை தட்டி வைத்தது. அதையும்மீறி குதித்தால் மொத்தமாகத் தூக்கி எறிந்துவிட்டு நம்பகமான அதிபர்களை நியமித்து அழகுபார்த்தது. இதனால் அவர்கள் அமெரிக்கா சொல்வதையே சொல்லும் கிளிப்பிள்ளைகளாக இருந்தனர்.
இன்னும் சொல்லப்போனால் அந்த லத்தின் அமெரிக்க நாடுகள் முதலில் ஐநா சபையில் இணைந்ததே அமெரிக்காவின் தயவால்தான். ஐநாவில் இணைய அனுமதி வேண்டுமானால் ஜெர்மனிக்கு எதிராகச் சண்டையிட வேண்டும் என்று அமெரிக்கா சொல்ல, அவர்களும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு போரின் கடைசி கட்டத்தில் ஜெர்மனியை எதிர்த்தனர்.
அப்போது 57 நாடுகள் உறுப்பினர்களாக இருந்த ஐநா சபையில் வெறும் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. மற்ற ஆப்பிரிக்க நாடுகள் காலனிகளாக இருந்ததால் இடம்பெறவில்லை. இதனால் எந்த வாக்கெப்பை நடத்தினாலும் அமெரிக்கா தீர்மானிப்பதே அங்கு தலைவிதியாக மாறும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. இத்தகைய சூழலில்தான் பாலஸ்தீனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் நாடகம் ஐநாவில் தொடங்கியது.
முதலில் பாலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு ஆணையம் (UNSCOP – United Nations Special Committee on Palestine) என்ற ஒன்றை ஐநா ஏற்படுத்தியது. இதில் மருந்துக்கும்கூட ஓர் ஆப்பிரிக்க உறுப்பினரோ அரேபிய உறுப்பினரோ இல்லை. இந்த ஆணையம் பாலஸ்தீனத்தின் பிரச்னைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வாக அந்நாட்டை இரு துண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதில் 55 சதவிகித துண்டை யூதர்களுக்கும் 45 சதவிகித துண்டை அரேபியர்களுக்கும் வழங்கிட முடிவு செய்தது.
இதில் கொடுமை என்னவென்றால் அரேபியர்களுக்கு வழங்கப்பட்ட 45 சதவிகித நிலத்தில் 7.25 லட்சம் அரேபியர்களும் 10,000 யூதர்களும் வாழ்ந்து வந்தனர். யூதர்களுக்கு வழங்கப்பட்ட 55 சதவிகித நிலத்தில் யூதர்கள், அரேபியர்கள் இருவருமே சரிசமமாக 4.07 லட்சம் பேர் வரை இருந்தனர். எப்படிப் பார்த்தாலும் அரேபியர்கள் எண்ணிக்கைத்தான் அதிகமாக இருந்தது.
இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டபோது பாலஸ்தீனத்தில் இருந்த மக்கள் தொகையில் 30 சதவிகிதம் மட்டுமே யூதர்கள். மேலும் அவர்களிடம் இருந்த நிலம் 6 சதவிகிதம் மட்டுமே. இந்த 6 சதவிகித மக்களுக்குத்தான் 55 சதவிகித நிலத்தைப் பிரித்துக் கொடுக்க ஐக்கிய நாடுகள் ஆணையம் முடிவு செய்திருந்தது.
இந்தப் பிரிவினைத் தீர்மானத்துக்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தங்கள் முழு ஆதரவை வழங்கின. அத்தனை நாட்கள் சியோனியர்களின் சதித்திட்டங்களுக்கு எதிராக இருந்துவந்த சோவியத் ஒன்றியம்கூட இந்த முறை தன் நிலையை மாற்றிக்கொண்டு சியோனியர்களுக்கே ஆதரவு கரம் நீட்டியது. சோவியத் ஒன்றியத்தின் ஒரே நோக்கமாக மத்தியக் கிழக்கில் பிரிட்டன் பேரரசை பலவீனமடைய வைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால் அது பிரிட்டனுக்கு எதிரான கொள்கையாக இந்தப் பிரிவினைத் தீர்மானத்தைப் பார்த்தது.
ஆனால் இந்தியா இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் நேரு அரேபியர்களுக்கே தம் ஆதரவை வழங்கியிருந்தார். இந்த தீர்மானம் வெற்றிபெறுவதற்கு நடுநிலை வகிப்பவர்களையும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதவர்களையும் சேர்க்காமல் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் சில நாடுகள் முடிவெடுக்க முடியாமல் தவித்தன. இதுகுறித்து வாக்கெடுப்பு நாட்களில் தினமும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதில் தீர்மானதுக்குப் பணியாத நாடுகளைச் சம்மதிக்க வைக்க சியோனியர்கள் வெவ்வேறு பாணிகளைக் கையாளத் தொடங்கினர்.
இந்தத் தீர்மானத்துக்காக சியோனியர்கள் எத்தகைய நாசவேலைகளில் ஈடுபட்டனர் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்தியப் பிரதமர் நேரு கூறியதே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. முதலில் இத்தகைய தீர்மானத்தை முன்மொழிந்த ஐநா சபையை நேரு சாடி இருந்தார். இதனால் இந்தியாவின் ஆதரவுக்கு தங்களுக்குக் கிடைக்காது என்று சியோனியர்கள் தெரிந்துகொண்டனர். இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் அரசியல்வாதிகளுக்குப் பல லட்சம் டாலர்கள் லஞ்சமாகக் கொடுக்க முன்வந்தனர். இதையும் நேரு நிராகரிக்கவே, அப்போதைய ஐநாவின் இந்தியப் பிரதிநிதியாக இருந்த விஜயலட்சுமி பண்டிட்டுக்கு தினசரி எச்சரிக்கையும் மிரட்டல்களையும் சியோனியர்கள் கொடுத்து வந்ததாக நேரு தெரிவித்தார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்தும் அவர் பாலஸ்தீன ஆதரவை எடுத்ததாக நேரு பாராட்டினார்.
இந்தச் சமயத்தில் விஜயலட்சுமி பண்டிட்டே யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தயங்கியதாகவும் மற்றொரு ஐநா பிரதிநிதியான கே.எம் பணிக்கர்தான் அரேபியர்கள் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என்று எடுத்துரைத்ததாகவும் 1948: A History of the first Arab – Israeli War நூலின் ஆசிரியர் பென்னி மோரிஸ் தெரிவிக்கிறார். பணிக்கர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்குக் காரணம் இந்திய அரசு இஸ்லாமியர்களின் பிரதிநிதியாகவும் தன்னை கருதியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
0
இந்தியாவின் நிலைதான் மற்ற ஐநா உறுப்பினர்களுக்கும் நேர்ந்தது. வாக்கெடுப்பு தொடங்கிய முதல் நாளில் பிலிப்பைன்ஸ் நாடு பாலஸ்தீனத்தின் மக்களுக்கு எதிராக இப்படியொரு தீர்மானத்தைத் திணிப்பது சரியா என்பதுபோல கேள்வி எழுப்பி இருந்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து பிலிப்பைன்ஸ் பிரதிநிதி மனிலாவுக்கு கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வாஷிங்டனில் இருந்து நேரடியாகவே பிலிப்பைன்ஸ் அதிபர் ரோக்ஸாஸுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தில் அந்நாடு தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டது.
அதிபர் ட்ரூமன் அரசுத் துறைகளை எல்லாம் இதுவரை இல்லாத வகையில் முடுக்கிவிட்டு பாலஸ்தீனப் பிரிவினைக்கு ஆதரவாக உலக நாடுகளைப் பணியவைத்துக் கொண்டிருந்தார். பிரிட்டனுக்கு எதிராக நாம் அமெரிக்காவின் உதவியை நாட வேண்டும் என்கிற பென் குரியனின் நிலைப்பாடு இப்போது அவர்களுக்கு பலனை விளைவித்துக் கொண்டிருந்தது.
26 அமெரிக்க செனட்டர்கள் கையெழுத்திட்ட கடிதங்கள் எல்லா நாடுகளுக்கும் பறந்துகொண்டிருந்தன. அரசு அதிகாரிகள் இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களும் அந்தந்த நாடுகளை மிரட்டிக்கொண்டிருந்தன.
பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து பிரிவினைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக கூறிய தாய்லாந்து உறுப்பினரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த நாடு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவே இல்லை.
லைபிரியாவில் ஃபயர்ஸ்டோர் ரப்பர் கம்பெனி எனும் அமெரிக்க நிறுவனம் பெரும்பான்மையான ரப்பர் மரத் தோட்டங்களைச் சொந்தமாக்கி இருந்தது. அந்த நிறுவனம்தான் அந்நாட்டின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. இதனால் அந்நிறுவனத்தின் தலைவர் லைபிரியாவைப் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வற்புறுத்தியபோது அவர்களுக்கு வேறு வழிதெரியவில்லை. இவ்வாறு மிரட்டல், லஞ்சம் போன்ற பல்வேறு பித்தலாட்டங்களின் மத்தியில் நவம்பர் 29ஆம் தேதி வாக்கெடுப்புகள் முடிவுற்றது.
திரைப்படங்களில் வருவதைவிடவும் நம்ப முடியாத தில்லாலங்கடி வேலைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினைத் தீர்மானம் வெற்றிபெறுவதற்கு வேண்டிய பெரும்பான்மை கிடைத்தது. ஐநா உறுப்பிர்களாக இருந்த 57 நாடுகளில் 33 நாடுகள் பிரிவினைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 13 நாடுகள் எதிராக வாக்களித்தன.10 நாடுகள் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தன. 1 நாடு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவேயில்லை.
வெறும் மூன்று அரேபிய நாடுகளும் ஆசிய நாடுகளும் மட்டுமே இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஐரோப்பியக் குடியேற்றவாதிகளால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததால் அவர்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கவில்லை. பிரிட்டன் யார் பக்கமும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.
இந்த வாக்கெடுப்பு மூன்று நாட்களாக நடைபெற்றது. ஒருவேளை இது ஒருநாளிலேயே முடித்திருந்தால் இந்தப் பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் கிடைத்திருக்காது என்பதே வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் கூடுதலான 48 மணி நேரங்களில்தான் நாம் பார்த்த மிரட்டல்களும் உருட்டல்களும் அரங்கேறி ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றி எழுதிவிட்டன. அரபியர்களின் மனதில் நீங்கா துயரத்தைக் குடியமர்த்திவிட்டன.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அரேபிய உறுப்பினர்கள் கோபமாக எழுந்து அவையை விட்டு வெளியேறினர். அதில் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபை இறந்துவிட்டது என்றார். சிரியாவின் உறுப்பினர், ஐநா கொல்லப்பட்டுவிட்டது என்றார். யார் என்ன சொன்னாலும் அதைக் காதில் வாங்கும் எண்ணத்தில் அமெரிக்கா இருக்கவில்லை. இறுதியில் அது விரும்பிய முடிவு எட்டப்பட்டு விட்டது.
அடுத்தடுத்த நாட்களில் மத்தியக் கிழக்கு முழுவதும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. சிரியாவில் போராட்டக்காரர்கள் பிரான்ஸ், அமெரிக்கத் தூதரங்களை அடித்து நொறுக்கத் தொடங்கினர். 15,000 எகிப்தியர்கள் கெய்ரோவின் வீதிகளில் திரண்டு பிரிட்டன் தூதரகத்தின்மீது கற்களை வீசினர். காவல்துறைக்கும் அவர்களுக்கு இடையே கலவரமே ஏற்பட்டது. லெபனான் மக்களும் ஈராக் மக்களும் அமெரிக்க அலுவலங்களில் நுழைந்து ஊழியர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். பல அரேபியர்களுக்கு இந்தப் பிரிவினைத் திட்டத்திற்குப் பின்னால் அமெரிக்கா இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.
பாலஸ்தீனர்கள் அடுத்து என்ன என்பது தெரியாமல் திகைத்து நின்றனர். வீதியில் திரண்ட பாலஸ்தீனர்கள் ஒற்றைக் குரலில், ‘யூத, அமெரிக்கக் கூட்டுச் சதியால் பாலஸ்தீனத்தைப் பிரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். சாகும் வரை சண்டையிடுவோம்’ என்றனர். உண்மையில் அதுதான் நடந்தது.
(தொடரும்)