Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

அசோகர் என்றதுமே அவர் சாலைகளை அமைத்தார், சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததுதான் நினைவுக்கு வரும். அவரது கலிங்கப்போரைப் பற்றியும் அதன் பின் அவர் மனம் மாறி புத்தமதத்தில் சேர்ந்தது பற்றியும் சிறுகுறிப்பு எழுதச்சொல்லி வரலாற்று ஆசிரியர்கள் தேர்வுகளில் கேள்விகள் கேட்டுக் குடைந்ததும் ஞாபகம் வரலாம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ‘சாம்ராட்’ என்று புகழ்பெற்ற அசோகரின் வாழ்க்கைச் சரித்திரம் சிக்கல்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

இளமைக்காலம்

இத்தனைக்கும் பேரரசரான சந்திரகுப்த மௌரியரின் பேரன், ஒரு பெரும் அரசை சந்திரகுப்தரிடமிருந்து பெற்று அதைக் கட்டிக்காத்த பிந்துசாரரின் மகன் என்று ‘தோன்றிற் புகழொடு தோன்றியவர்’ அசோகர். ஆனால் அவரது இளமைக்காலம் அவ்வளவு சுமுகமாக இல்லை. பிந்துசாரருக்கு ஏகப்பட்ட மனைவிகள். பாடலிபுத்திரத்தின் அருகில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவரும் பிராமண குலத்தைச் சேர்ந்தவருமான சுபத்ராங்கி அந்த மனைவிகளில் ஒருவர். அந்தப்புரத்தில் இப்படி பல ராணிகளுடன் சேர்ந்து வாழ நேர்ந்ததாலோ என்னவோ சுபத்ராங்கி வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்கள். அந்த சோகங்களைத் தீர்க்கவந்த பிள்ளை என்பதாலேயே அ-சோகர் (சோகங்களை நீக்குபவர்) என்று தனது மகனுக்குப் பெயர் வைத்தார் அந்த அம்மையார். ஆனாலும் அசோகர், அவ்வளவு அழகாக இல்லை என்பதாலும் அவலட்சணமான உருவம் கொண்டவர் என்பதாலும் பிந்துசாரர் உட்பட அரண்மனையில் பலர் அவரை வெறுத்தனர் என்று புத்தமத நூல்கள் பல கூறுகின்றன. ஒரு குறையைக் கொடுத்தாலும் அதைச் சரி செய்ய இன்னொரு நிறையை இறைவன் கொடுப்பான் அல்லவா. அதுபோல அசோகர் பெரு வீரராக இருந்தார். எனவே அவரை வெறுத்த போதிலும் தக்ஷசீலம், உஜ்ஜயினி போன்ற இடங்களில் கிளம்பிய கலகங்களை அடக்க அவரை அனுப்பினார் பிந்துசாரர். அவற்றை எல்லாம் திறமையுடன் அடக்கி ஆட்சியை நிலைநாட்டினார் இளவரசரான அசோகர்.

ஆனாலும் மௌரியப் பேரரசின் அடுத்த வாரிசாக, பிந்துசாரரின் தலைமகனான சுஷிமா என்பவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அசோகர் ரசிக்கவில்லை. பிந்துசாரர் மறைந்ததும் அரசைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஒரு கதையில் கதாநாயகனை உயர்த்திப் பிடிக்க வில்லனைப் படுமோசமாகக் கதாசிரியர்கள் சித்தரிப்பதுபோல, புத்தமதத்தைத் தழுவிய பிறகு அசோகர் எவ்வளவு நல்லவராக இருந்தார் என்று காட்ட, அதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர் மிகவும் கொடூரமானவராக இருந்தார் என்று அசோகரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அசோகாவதானம், மகாவம்சம், தீபவம்சம் போன்ற புத்தமத நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆட்சியைப் பிடிப்பதற்காக தனது நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்களை அசோகர் கொன்று குவித்தார் என்று அந்த நூல்கள் தெரிவிக்கின்றன. சில நூல்கள், அசோகர் தன் தந்தை பிந்துசாரரைக் கொன்றதாகக் கூட கூறுகின்றன.

இவை எல்லாம் கொஞ்சம் அதீதமானவை என்பதை மறுப்பதற்கில்லை. அசோகரின் இளமைக்காலம் சரியாக இல்லாததால் அவரது மனநிலை மோசமானதாக இருந்திருக்கலாம். அதற்காக இவ்வளவு பேரை அவர் கொன்று குவித்தார் என்பதும் நாட்டின் மற்ற அதிகாரிகள் அவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லை. இருப்பினும் வாரிசுரிமையில் தனக்குப் போட்டியாக இருந்தவர்களை வீழ்த்திவிட்டு அசோகர் அரியணையில் அமர்ந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது சுமார் பொயுமு 265 வாக்கில் இருக்கலாம். அசோகரது பெயர்களில் ஒன்றாக ‘ப்ரியதர்சி’ அல்லது ‘பியதசி’ என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. இது அவரது அபிஷேகப் பெயராக இருக்கலாம்.

ஆட்சிக்காலம்

அரியணை ஏறிய பின்னும் அவர் தனது கொடுங்கோல் ஆட்சியைத் தொடர்ந்ததாகவே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. ‘காமசோகராகவும்’ (காமத்தில் நாட்டமுடையவராக), ‘சந்தசோகராகவும்’ (கொடூரமானவராக) இருந்துவிட்டு பின்னால் புத்தமதத்தில் சேர்ந்தவுடன் அவர் ‘தம்மசோகராக’ (தர்மத்தின் காவலராக) மாறிவிட்டார் என்றும் மகாவம்சமும் அசோகாவதானாவும் கூறுகின்றன. ஒரு சமயம், தனது அமைச்சர்களின் விசுவாசத்தைச் சோதிக்க, பூவும் பழமும் தரும் எல்லா மரங்களையும் வெட்டிவிட வேண்டும் என்ற அபத்தமான உத்தரவை அசோகர் பிறப்பித்ததாகவும் அதை நிறைவேற்றத் தவறிய 500 அமைச்சர்களின் தலையை அவர் வெட்டிக் கொலை செய்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது. போலவே அவர் பெயரைத் தாங்கியிருந்த அசோக மரத்தின் கிளைகளை வெட்டிய 500 ஆசைநாயகிகளை அவர் உயிரோடு எரித்துக்கொன்றார் என்று வேறொரு குறிப்புக் கூறுகிறது. சீன யாத்திரிகரான பாஹியான், பல சித்திரவதை முறைகளைக் கற்றுக்கொண்டு தனது குடிகளை அந்த முறைகளின் மூலம் சித்திரவதை செய்து அசோகர் ஆனந்தப்பட்டதாகக் கூறுகிறார். புண்ட்ரவர்த்தனத்தில் புத்தரைத் தவறாகச் சித்தரித்த ஆசீவகர்கள் மீது ஆத்திரம் கொண்ட அசோகர், அவர்களில் பதினெட்டாயிரம் பேரைக் கழுவில் ஏற்றிக் கொன்றதாக அசோகாவதானம் குறிப்பிடுகிறது. இந்தச் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி மாறுபட்ட கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

அரியணையில் அமர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு, அசோகர் ஒரு விசாலமான பேரரசை நல்ல முறையில் நிர்வகித்து ஆட்சி செய்து வந்ததாகவே தெரிகிறது. அவரது ஆட்சிப் பகுதி இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டிருந்தது. வடமேற்கில் இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து கங்கைச் சமவெளியின் பெரும்பகுதி, நடுப்பகுதி இந்தியா, மேலும் தென்னகத்தின் சில பகுதிகள்வரை அது பரவியிருந்தது. தொலைவிலிருந்த சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர் (அதியமான் அரசு), கேரளபுத்திரர் (சேரர்) ஆகியோர் ஆண்ட பகுதிகள் நேரடி மௌரிய ஆட்சிக்குள் வரவில்லை. ஆனால் அசோகர் அவ்வரசுகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்; தன்னுடைய கல்வெட்டுகளிலும் அவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அசோகரது தலைநகரம் பாடலிபுத்திரம், அது பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மகாநகரங்களில் ஒன்றாக விளங்கியது.

கலிங்கப் போர்

ஏற்கனவே பரந்து விரிந்த பேரரசின் ஆட்சியாளர் என்பதால் அசோகருக்குப் பெரும் பிரச்னை ஏதும் வரவில்லை. ஆனால் அவரது ஆட்சிக்கு உட்பட மறுத்த கலிங்கத்தின் (ஒடிசா) மீது அவர் படையெடுக்க நேர்ந்தது. அசோகரது எட்டாம் ஆட்சியாண்டில் நடைபெற்ற இந்தப் போர் அவரது வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மிகக் கடுமையாக நடந்த கலிங்கப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனால் அசோகர் பெரும் வேதனை அடைந்ததாக அவரது பதின்மூன்றாவது பெரிய பாறைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

அசோகரின் பதின்மூன்றாம் பாறைக்கல்வெட்டு – கிர்நார்

‘தேவர்களுக்கு அன்பானவன் ப்ரியதர்சி, அபிஷேகம் செய்யப்பட்டு எட்டாம் ஆண்டில் கலிங்க நாட்டினை வென்றான். அந்நாட்டிலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்; ஒரு இலட்சம் மக்கள் அங்கேயே கொல்லப்பட்டனர்; அதைவிடப் பல மடங்கு பேர் பின்னால் அழிந்தனர்.

அதன் பின், கலிங்கம் கைவரப்பெற்றதிலிருந்து, தேவர்களுக்கு அன்பானவன் தர்மத்தில் ஆழ்ந்த மனஒழுக்கத்துடன் ஈடுபட்டான்; தர்மத்தை நேசித்தான்; மக்களுக்குத் தர்மத்தை உணர்த்துவதிலும் உபதேசிப்பதிலும் மனமுவந்தான். கலிங்க வெற்றியை முன்னிட்டு அவனுக்குள் எழுந்த மனக்கசப்பு இவற்றைச் செய்யவைத்தது.

ஏனெனில், இதுவரை வெல்லப்படாத ஒரு நாட்டை வெல்லும் வேளையில் அங்கு நிகழும் மனிதர்களின் வதை, உயிரிழப்பு, நாடுகடத்தல் ஆகிய அனைத்தும் தேவர்களுக்கு அன்பானவனால் வேதனையுடனும் ஆழ்ந்த துயரத்துடனும் பார்க்கப்படுகின்றன.’

இந்த மனவருத்தத்தால் அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்பதே பொதுவாக உலவும் கருத்தாக இருந்துவருகிறது. ஆனால் பௌத்த நூல்களே இதை மறுக்கின்றன. மகாவம்சம் அவரது நான்காம் ஆட்சியாண்டிலிருந்தே அவர் பௌத்தமதத்தைத் தழுவிவிட்டார் என்று கூறுகிறது. அதன்பின் 84000 பௌத்த விஹாரங்களை அவர் கட்டியதாக அது குறிப்பிடுகிறது. அசோகருடைய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் அவர் நிக்ரோதா (நியாக்ரோதா) என்ற பௌத்தமதத் துறவியை (அவர் அசோகரின் தமையன் சுஷிமாவின் மகன் என்று கூறப்படுகிறது) அவர் சந்தித்ததாகவும் அவருடைய உபதேசத்தின் படி அசோகர் ‘பௌத்த உபாசகராக’ மாறிவிட்டார் என்று தீபவம்சம் குறிப்பிடுகிறது. இது போன்ற பல பௌத்த பிக்குக்களால் அசோகர் ஆரம்ப காலத்தில் மதம் மாறினார் என்ற பல குறிப்புகள் உள்ளன. எப்படியிருந்தாலும் கலிங்கப் போருக்கு முன்பே அசோகர் பௌத்த மதத்தைத் தழுவிவிட்டார் என்பதும் போரின் கொடுமைகளைக் கண்டு ‘திடுதிப்பென்று’ மதம் மாறாமல், பௌத்தத்தின் மீது அவரது ஈடுபாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வந்தது என்பதும் தெளிவு. கலிங்கப் போர் அவரை முற்றிலும் பௌத்தத்தின் மீது மனதைச் செலுத்தத் தூண்டியிருக்கலாம். அவர் பௌத்தமதத்தைத் தழுவிய பிறகு தேவனாம்பிரியர் (தேவர்களுக்குப் பிரியமானவர்) என்ற பெயரில் அவர் தம்மை அழைத்துக்கொண்டார்.

அதன்பின் முழுக்க முழுக்க பௌத்த மதத்தைப் பரப்புவதிலேயே அசோகர் ஈடுபட்டார். நாடு முழுவதும் பல பௌத்த விஹாரங்களையும் ஸ்தூபிகளையும் அவர் அமைத்தார். சாஞ்சி, சாரநாத் போன்ற பல இடங்களில் உள்ள பௌத்த மதச் சின்னங்கள் அவரால் அமைக்கப்பட்டவையே. கயாவில் உள்ள மஹாபோதி ஆலயத்தை செம்மையாகக் கட்டினார். பல பௌத்த குகைக் கோவில்களையும் அவர் அமைத்தார். அவர் அமைத்த தூண்களில் ஒன்றான, நான்கு சிங்கங்களைக் கொண்ட சாஞ்சியில் உள்ள தூண், இந்திய நாட்டின் தேசியச் சின்னமாக விளங்கிவருகிறது.

தர்மவிஜயம் (தம்மவிஜயா) என்ற பௌத்தத்தை பரப்பும் பணியை மேற்கொண்ட அவர், நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றார். கயாவில் உள்ள போதி மரத்திற்குச் சென்று வழிபட்டு பல நற்பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளில் சிலவற்றைத்தான் நம்முடைய வரலாற்றுப் பாடங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது சாலைகளின் ஓரங்களில் மரங்களை நடுதல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் அமைத்தல், கிணறுகளை வெட்டுதல் போன்றவை. அசோகர் தன்னுடைய மகனான மகிந்தனையும் மகளான சங்கமித்திரையையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. நண்பர்களும் அண்டை நாட்டினரும் என்று அசோகர் குறிப்பிடும் சோழர்கள், பாண்டியர்கள், தம்ரபாணி (இலங்கை), அந்த்யோக (கிரேக்க) ஆகியோரது நாடுகளிலும் அசோகர் இந்தப் பணிகளைச் செய்தார் என்று அவரது பாறைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அசோகரின் தர்மம் என்பது எல்லோரும் புத்த மதத்தவர்களாக மாற வேண்டும் என்ற கோட்பாடு அல்ல. அவர் பிராமணர்களையும் சமணர்களையும் சரிசமமாகக் கருதினார் என்பதை அவரது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆகவே அவரது தர்மம் என்பது, பொது வாழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட விரிவான ஒழுக்க நெறிக் கோட்பாடாகும். அதில் வலியுறுத்தப்பட்டவை:

• பெற்றோர் மூத்தோர் மீதான மரியாதை
• பணியாளர்கள் மற்றும் உடன்பணிபுரிபவர்கள் மீதான முறையான நடத்தை
• இரக்கம் மற்றும் ஈகைக்குணம்
• உண்மைத்தன்மை
• சுயக்கட்டுப்பாடு
• எல்லா உயிர்களின்மீதும் அக்கறை
• பல்வேறு சமயப் பிரிவுகளின் மீதான சகிப்புத்தன்மை

ஆகியவை ஆகும்.

அசோகரின் கல்வெட்டுகள்

அசோகரின் பாறைக் கல்வெட்டு – கல்சி

அசோகரின் ஆட்சியைப் பற்றிய முக்கியமான அம்சங்களில் ஒன்று அவரது சொந்தக் குரலை நாம் நேரடியாகக் கேட்கக் கூடிய தன்மை. பெரும்பாலும் இலக்கியம், புராணம் ஆகியவற்றின் குறிப்புகளாலேயே அறியப்பட்ட பண்டைய இந்திய வரலாற்றில் முதன்முதலில் கல்வெட்டுகளின் வழியாக நேரடியாகப் பேசியவர் அசோகரே ஆவார். ‘தேவனாம்பிரிய பியதசி பேசுகிறேன்’ என்று தொடங்கும் அவரது கல்வெட்டுகளே அவரது வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அவை இந்திய வரலாற்றில் மிகவும் தொன்மையான, நம்பகமான, கால நிர்ணயம் செய்யக்கூடிய ஆவணங்களில் சிலவாகும். அதுவே அவரை தனித்துவமானவராக ஆக்குகிறது.

அதைவிட இன்னும் வியப்பூட்டுவது, கல்வெட்டுகளில் அசோகர் பயன்படுத்திய மொழிநடையே ஆகும். தம்மைப் புகழ்ந்து, பெருமை பேசும் பாணியில் அசோகர் பேசவில்லை. அவரது கல்வெட்டுகள் வெற்றிகளைக் குறிப்பிடுவதோடு நிற்காமல் ஒழுக்க நெறிக்கான அழைப்புகளையும், நிர்வாக அறிவுறுத்தல்களையும், மனித நடத்தை பற்றிய சிந்தனைகளையும், சில சமயங்களில் மனவருத்தத்தின் ஒப்புதல்களையும் கொண்டுள்ளன. உதாரணமாக அவரது பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு அசோகருடைய பெருவெற்றியை மட்டும் அல்லாமல் அவரது மனவருத்தத்தையும் சேர்த்துப் பதிவு செய்கிறது. கலிங்கத்தை வென்ற பின்னர், அந்த நாட்டினர்மீது திணிக்கப்பட்ட துயரங்கள்—படுகொலைகள், நாடுகடத்தல்கள், போரின் பின் ஏற்பட்ட வேதனைகள்—இவை அனைத்தையும் நினைத்து ஆழ்ந்த துக்கம் தன்னை ஆட்கொண்டதாக அசோகர் கூறிக்கொள்கிறார். இப்படி, தனது மனச்சாட்சியின் குரலைக் கல்லில் பொறித்து நிலைநிறுத்தும் பேரரசரை காண்பது உலக வரலாற்றில் அரிதான ஒன்று.

அவரது கல்வெட்டுகளிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, அசோகர் நாட்டு மக்களோடு உரையாடுவதில் புகுத்திய புதுமை. அவர் தலைநகரத்தில் அமர்ந்து உத்தரவுகளை பிறப்பித்த அரசராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. அவரது கல்வெட்டுகள் மக்கள் கூடும் இடங்களிலேயே பொறிக்கப்பட்டன. மேலும் அவை ஒவ்வொரு பகுதியிலும் அங்கு நடைமுறையில் இருந்த மொழியிலேயே எழுதப்பட்டன. அவரது பேரரசின் பெரும்பகுதியில் அவை பிராகிருத மொழியிலும் சமஸ்கிருதத்திலும் பிராமி எழுத்துருவைப் பயன்படுத்திப் பொறிக்கப்பட்டன. வடமேற்கில் கரோஷ்டி எழுத்திலும் அவை உள்ளன. ஆப்கானிஸ்தானில் அவரது கிரேக்க–அராமைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தக்ஷசீலத்தில் உள்ள அசோகரின் அராமைக் கல்வெட்டு

இது நமக்கொரு ஆழ்ந்த உண்மையை உணர்த்துகிறது. பல்வேறு மொழிகளைக் கொண்ட பேரரசை ஆட்சி செய்யும்போது, உள்ளூர் சூழலுக்கேற்ப அவை வடிவமைக்கப்பட்டு, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார். இந்தப் பன்மொழிக் கொள்கை, பாரதத்தின் பன்முகத் தன்மையை நன்கு தெரிந்து வைத்திருந்த பேரரசராக அசோகரை முன்னிறுத்துகிறது.

ஆகவே அசோகரை மரம் நட்டவராக, கலிங்கப்போர் செய்து மனம் மாறியவராக மட்டும் சுருக்கிவிட முடியாது. நிர்வாகத்தில் மிகுந்த அக்கறை கொண்ட, மக்களின் நலன் கருதி அரசராகவே அவர் திகழ்கிறார். கைதிகள், சாலைகள், மூலிகைகள், மிருகங்கள், மக்கள் மனநிலை ஆகிய அனைத்தையும் பற்றியும் அக்கறை கொண்ட மன்னர் அவர் என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. இந்தக் காரணங்களாலேயே, பாரதத்தின வரலாற்றில் சிந்தனையளவில் மிகவும் சுவாரஸ்யமான ஆட்சியாளர்களில் ஒருவராகத் தோன்றுகிறார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *