மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறார்கள். சாதவாகனர்களின் ஆட்சிப் பகுதி, மகாராஷ்டிரா தெலுங்கானா, ஆந்திரம் என்று பரந்து விரிந்திருந்தது. அவர்களின் தலைநகரைப் பற்றிச் சர்ச்சைகள் இருந்தாலும் பொதுவாக மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானபுரமே (இன்றைய பைதான்) சாதவாகனர்களுடைய தலைநகர் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
சாதவாகனர்களுடைய ஆட்சிக்காலம் பொயுமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பொயு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. நானேகாட் கல்வெட்டு சாதவாகனர்களை தக்ஷிணபாதபதி என்று பெருமையுடன் அழைப்பதால், தக்காணத்தின் பெரும்பகுதியை ஒரு காலகட்டத்தில் இவர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதை அறியலாம். சிமுகர் என்பவரால் இந்த அரச வம்சம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த வம்சத்தில் தோன்றியவரான முதலாம் சதகர்ணி பல்வேறு அஸ்வமேத யாகங்களையும் ராஜசூய யாகங்களையும் செய்தவர் என்று நானேகாட் கல்வெட்டு கூறுகிறது. சாதவாகனர்களின் தலைசிறந்த அரசராகக் கருதப்படுபவர் கௌதமிபுத்திர சதகர்ணி.
கௌதமிபுத்திரர் என்பதே ஓர் அரிய பெயராகும். அவருடைய தாயின் பெயர் கௌதமி பாலஶ்ரீ. ஆகவே தாயின் பெயரைக் கொண்டு அவர் அப்படி அழைக்கப்பட்டார் என்று தெரிகிறது. அவருடைய தந்தையின் பெயர் சிவஸ்வாதி என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அவரைப் பற்றிய எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்காததால் இளம் வயதிலேயே அவர் இறந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. கௌதமிபுத்திரர் பொயு 2ம் நூற்றாண்டு வாக்கில் அரியணை ஏறினார். சுமார் 24 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். சாதவாகனப் பேரரசை உச்சத்திற்குக் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் கௌதமிபுத்திரர்.
சாகர்களுடன் போர்
கௌதமிபுத்திரரின் வெற்றிகளில் முக்கியமான ஒன்று அவர் சாகர்களின் க்ஷகராடர பிரிவைச் சேர்ந்த நாகபாணனை வீழ்த்தியதாகும். இந்தச் சாகர்கள் என்பவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி, குஷாணர்களுக்கு முன்பே இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஊடுருவியிருந்த குடியினர். இந்தோ சித்தியர்களின் வம்சாவளியினர். இவர்களில் ஒரு பிரிவினர், வட இந்தியாவிற்குச் செல்ல, இன்னொரு பிரிவினர் பொயு முதல் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
அவர்களில், க்ஷத்ரப அரசனான நாகபாணன் பெருவீரன். கடல் பயண நூலான பெரிப்ளூஸ் நாகபாணனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேற்குக் கரைத் துறைமுகங்கள் பல அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று அது கூறுகிறது. மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதிகளான நாசிக், தானே ஆகிய பகுதிகளை சாதவாகனர்களிடமிருந்து கைப்பற்றி நாகபாணன் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய மருமகனான உஷவதத்தன் நாசிக் பகுதியில் மதப் பணிகளுக்காக தானங்கள் செய்திருந்தான் என்பதை அங்குள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. நாகபாணன் தன்னுடைய நாணயங்களை இந்தோ கிரேக்கப் பாணியில் பிராமி, கரோஷ்டி எழுத்துருக்களைக் கொண்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தான்.
அக்கம்பக்கத்துப் பகுதிகளை ஆட்சி செய்ததால் சாகர்களும் சாதவாகனர்களும் அடிக்கடிப் போரில் ஈடுபட்டனர். சாதவாகனர்களின் முதல் அரசனான சிமுக சாதவாகனனின் காலத்திலிருந்தே இரு அரசுகளுக்கும் இடையே இந்தப் பகை இருந்தது. இது கௌதமிபுத்திரரின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது. தன்னுடைய ஆட்சிப் பரப்பை மீட்டு, விரிவடையச் செய்ய முயன்ற கௌதமிபுத்திரருக்கும் நாகபாணனுக்கும் ஏற்பட்ட போரில் கௌதமிபுத்திரர் பெருவெற்றி அடைந்து மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார். ஒரு சமயத்தில் முற்றுகை இடப்பட்டிருந்த அவர், அதை உடைத்து எதிரியைத் தாக்கி வெற்றியடைந்தார் என்று அவரது சாசனம் தெரிவிக்கிறது. இந்தப் போரில் உஷவதத்தனும் பங்கேற்றதாகவும் அவனுக்கும் தோல்வி கிடைத்தது என்றும் நாசிக் கல்வெட்டு கூறுகிறது. அந்த கல்வெட்டு, அந்த நிலம் இதற்கு முன்பு உஷவதத்தனால் அனுபவிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. நாகபாணனின் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பகுதியை கௌதமிபுத்திரர் கைப்பற்றினார் என்றே அதற்குப் பொருள் கொள்ளவேண்டும்.
நாணயங்களில் வெற்றிக்கான ஆதாரம்
நாகபாணன் மீதான கௌதமிபுத்திரரின் வெற்றிக்கு வலுவான ஆதாரம் நாசிக் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஜோகல்தெம்பி நாணயப் புதையலிலிருந்து கிடைக்கிறது. இந்தப் புதையலில் நாகபாணனின் 13,000-க்கும் மேற்பட்ட நாணயங்கள் கிடைத்தன. அவற்றில் 9,000-க்கும் மேற்பட்ட நாணயங்களில் கௌதமிபுத்திர சதகர்ணியின் பெயர்களும் சின்னங்களும் பொறிக்கப்பட்டு மீண்டும் முத்திரையிடப்பட்டிருந்தன. ஆரம்பகால இந்திய வரலாற்றில் அரசியல் வெற்றியை நிரூபிக்கும் மிகத் தெளிவான நாணயவியல் ஆதாரங்களில் இதுவும் ஒன்று.
நாகபாணனின் நாணயங்களில் அவனுடைய உருவப்படமும், இடியும் அம்பும் போன்ற சின்னங்களும் இருந்தன. அவற்றில் பிராமி மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. கௌதமிபுத்திரர் மீண்டும் முத்திரையிட்ட அந்த நாணயங்களில், “ராணோ கோதமிபுதஸ ஸிரி சதகணிஸ” என்ற பிராகிருத வாசகம் காணப்படுகிறது. இதன் பொருள், “அரசன் கௌதமிபுத்ர ஸ்ரீ சதகர்ணியினுடையது” என்பதாகும். இதனுடன், வளைந்த மலைச் சின்னம் மற்றும் உஜ்ஜயினி சின்னம் போன்ற சாதவாகனச் சின்னங்களும் அந்த நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
நாசிக் கல்வெட்டு
சாகர்களுடனான வெற்றியை அடுத்து கௌதமிபுத்திரர் பாரதத்தின் மேற்கு வடமேற்குப் பகுதிகளில் ஆட்சிசெய்த பல அரசர்களோடு போர் செய்து வெற்றி கண்டார். பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளைக் கொண்டு பொறிக்கப்பட்ட கௌதமிபுத்திரரின் நாசிக் கல்வெட்டு, அவரை ஒரு மாபெரும் பேரரசனாகச் சித்தரிக்கிறது. “ஏக தனுர்தரர்” என்று அவரைப் பெரும் வில்வீரராக வர்ணிக்கிறது அது. சாகர்களையும் யவனர்களையும் (இந்தோ கிரேக்கர்கள்), பஹ்லவர்களையும் கௌதமிபுத்திரர் வென்றதாக அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

நாசிக் நகரத்திற்கு அருகில் பாண்டவ்லேனி என்ற இடத்தில் பௌத்தமத விஹாரங்களைக் கொண்ட குகைகள் உள்ளன. அதில் மூன்றாம் எண்ணுடைய குகையில் உள்ள இந்தக் கல்வெட்டு கௌதமிபுத்திரருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய தாயான கௌதமி பாலஶ்ரீயால் பொறிக்கப்பட்டதாகும். அசிக (கோதாவரிப் பள்ளத்தாக்கு), அஸ்மக, மூலக (மகாராஷ்டிரா), சுராஸ்ட்ர (சௌராஷ்டிர), குகுர, அபராந்த (கொங்கணம்), அனூப (நர்மதை நதிப் பள்ளத்தாக்கு), விதர்ப மற்றும் அகரவந்தி (மாளவம்) உள்ளிட்ட பல பிரதேசங்களின் அரசனாக அவரைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதேபோல், விந்திய மலைகள், சஹ்ய மலைகள் / மேற்கு தொடர்ச்சி மலைகள், மகேந்திர மலைகள் மற்றும் பிற மலைத்தொடர்களின் தலைவனாகவும் அவரை அது வர்ணிக்கிறது. சாதவாகன குலத்தின் புகழை மீட்டெடுத்தவன், சாகர்கள், யவனர்கள், பஹ்லவர்களை அழித்தவன், க்ஷகராட வம்சத்தை ஒழித்தவன், பிராமணர்களின் பாதுகாவலன், தனது குடிமக்களின் இன்ப துன்பங்களைத் தனதாக்கிக் கொண்ட அரசன் என்றெல்லாம் நாசிக் கல்வெட்டில் கௌதமிபுத்திரர் புகழப்படுகிறார். க்ஷத்திரியர்களின் பெருமையைக் குலைத்தவர் என்றும் அவரைப் பற்றிக் கல்வெட்டு கூறுகிறது. அவரது வீரத்தை, ராமன், கேசவன், அர்ஜுனன், பீமசேனன், சகரன், யயாதி, ஜனமேஜயன் மற்றும் அம்பரீஷன் போன்ற இதிகாச மற்றும் புராண நாயகர்களின் வீரத்துடன் அந்த கல்வெட்டு ஒப்பிடுகிறது
கார்லேயில் கிடைத்த கௌதமிபுத்திரரின் கல்வெட்டு அவர் அங்கு அளித்த நிலக்கொடை ஒன்றைக் குறிப்பிடுகிறது. அதிலிருந்து புனாவைச் சுற்றியிள்ள பகுதிகளில் அவருடைய ஆதிக்கம் இருந்தது என்பது தெளிவாகிறது.
கௌதமிபுத்திரரின் கல்வெட்டுகளிலிருந்து அவரது அரசு, வடக்கில் மாளவம், சௌராஷ்டிரத்திலிருந்து தெற்கில் கிருஷ்ணா நதிப் பகுதி வரையிலும், மேற்கில் கொங்கணத்திலிருந்து கிழக்கில் விதர்ப்பத்திற்கும் அப்பாலான பகுதிகள் வரையிலும் அவரது அதிகாரம் பரவியிருந்தது என்பது தெளிவாகிறது.
தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரமும் கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சேரன் செங்குட்டுவன் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்றபோது, அவனுக்குத் துணையாக இருந்தது கௌதமிபுத்திர சதகர்ணி என்பதை
“வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த
நூற்றுவர்- கன்னரும்” என்று கால்கோள் காதை கூறுகிறது.
செங்குட்டுவன் கங்கைக் கரையைக் கடப்பதற்கு ஓடங்களைத் தயார் செய்யுமாறு நூற்றுவர் கன்னர்க்குக் கூறுக என்று செங்குட்டுவன் சஞ்சயனிடம் சொன்னதாகவும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
“நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க”
இங்கே சதகர்ணி என்பதை நூற்றுவர் கன்னர் என்று தமிழில் இளங்கோவடிகள் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று கூறுவர்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கௌதமிபுத்திர சதகர்ணி நிறுவினார் என்பது அவரது சாசனங்களால் தெரிகிறது. அவரது பேரரசு “ஆஹாரங்கள்” எனப்பட்ட நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை “அமாத்யர்கள்” எனப்பட்ட அதிகாரிகள் நிர்வகித்தனர். கல்வெட்டுகளில் நகரம், நிகமம், காமம் போன்ற குடியிருப்பு வகைகளும் குறிப்பிடப்படுகின்றன. இவை பொதுவாக முறையே மாநகரம் / நகரம், சிறுநகரம், கிராமம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களாகும்.
கௌதமிபுத்திரர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்பது நாசிக் கல்வெட்டு அவரை “ஏகப்ராஹ்மணர்” என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது. இதற்கு ஒப்பற்ற பிராமணன் என்று பொருள். பிராமணர்களின் பாதுகாவலன் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் இதற்குப் பொருள் சொல்கின்றனர். கௌதமிபுத்தரர் தன்னைப் பிராமணராகக் குறிப்பிட்டுக்கொண்டார் என்றும் நான்கு வர்ண அமைப்பை அவர் மீட்டெடுத்தார் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும். கௌதமிபுத்திரரும் அவரது குடும்பத்தினரும் பௌத்த அமைப்புகளுக்கும் தானங்கள் செய்துள்ளனர். பதவனிய மடத்தைச் சேர்ந்த பௌத்த துறவிகளுக்கு ஒரு குகை தானமாக வழங்கப்பட்டதை ஒரு நாசிக் கல்வெட்டு பதிவு செய்கிறது. மேலும் மற்றொரு நாசிக் கல்வெட்டு, பௌத்த துறவிகளுக்கான நிலத் தானங்களையும் பதிவு செய்கிறது.இதிலிருந்து மத நல்லிணக்கத்தை கௌதமிபுத்திரர் பேணியது தெளிவாகிறது.
நாகபாணனின் நாணயங்களில் தன் முத்திரையைப் பதித்தது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் கௌதமிபுத்திரர் பல நாணயங்களை அச்சடித்து வெளியிட்டார். அவற்றில் ஒருபுறம் மலை முகடும் அதைச்சுற்றி “ராணோ கௌதமிபுதஸ சதகணிஸ”என்று பிராமியில் எழுதப்பட்டுள்ளது. மறுபுறம் உஜ்ஜயினி முத்திரை உள்ளது. நான்கு வட்டங்களை கோடுகள் மூலம் இணைக்கும் இம்மாதிரியான முத்திரைக்கு உஜ்ஜயினி முத்திரை என்று பெயர். சாதவாகனர்களின் நாணயங்களில் பொதுவாகக் காணப்படும் அமைப்பு இது.

இதைத் தவிர தன் தலைப் பொறிப்பு உள்ள நாணயங்களையும் கௌதமிபுத்திர சதகர்ணி வெளியிட்டார்.

இப்படியாக, பாரதத்தின் வரலாற்றில் கௌதமிபுத்ர சதகர்ணி தனித்துவமான இடத்தைப் பெறுகிறார். சாகர்களிடம் தனது பகுதிகளைப் பறிகொடுத்த பின், சுருங்கிப் போயிருந்த சாதவாகனர்களின் அரசுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் கௌதமிபுத்திரர். வலிமைமிக்க க்ஷத்ரப அரசனான நாகபாணனைத் தோற்கடித்து, மேற்கு இந்தியாவில் சாதவாகனர்களின் கௌரவத்தையும் செல்வாக்கையும் மீட்டெடுத்தவர். மேலும், தக்காணத்தில் பேரரசு அரசியல் உரிமையை மிகத் தெளிவாக உருவாக்கி, ஆரம்பகால முன்னுதாரணங்களில் ஒன்றாகத் திகழ்ந்த அரசர் அவர்.
அவரது வரலாறு மிகவும் முக்கியமானது. ஏனெனில், கதைகள் மற்றும் புராண மரபுகள் வழியாக மட்டுமே அறியப்படும் பல ஆரம்பகால இந்திய அரசர்களைப் போல அல்லாமல், கௌதமிபுத்திரரை நாம் கல்வெட்டுகள், நாணயங்கள், புராண வம்சாவளிக் குறிப்புகள், மேலும் புவியியல்-இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆதாரங்களின் மூலம் அறிய முடிகிறது.
கௌதமிபுத்திரருக்குப் பிறகு அவருடைய மகனான வாசிஷ்டிபுத்திர புலமாவி அரசுக்கட்டிலில் அமர்ந்து சாதவாகனர்களின் புகழை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றார்.
(தொடரும்)

