இந்தியாவின் பொற்கால ஆட்சியைத் தந்த குப்தர்களின் அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை சமுத்திரகுப்தருடையது. அவரது தந்தையான முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் கங்கைச் சமவெளியில் மட்டும் இருந்த குப்தர்களின் ஆதிக்கத்தை பாரதத்தின் பெரும்பகுதிக்கு விரிவடையச் செய்தவர் சமுத்திரகுப்தர். அவரது ஆட்சி குப்தர்களின் பெரும் விரிவாக்கத்தின் தொடக்கமாக அமைந்து பண்டைய இந்தியாவின் ‘பொற்காலத்திற்கு’ அடித்தளம் அமைத்தது. அவர் வெறும் போர்த்திறன் கொண்ட வெற்றியாளர் மட்டுமல்ல; வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, வெற்றிகளுக்குப் பிறகு ராஜதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது கலாச்சாரத்தின் மூலமும் பண்பாட்டின் மூலமும் அரசை எப்படிக் கட்டமைப்பது ஆகியவற்றைப் புரிந்துகொண்ட ஓர் அரசியல் மேதை ஆவார்.
அரியணைச் சிக்கல்கள்
அஜாதசத்ருவைப் பற்றிய அத்தியாயத்தில் லிச்சாவி அரசவம்சத்தைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா. லிச்சாவிகள் பொயு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துவிட்டனர். அப்படிப்பட்ட வலுவான அரசோடு மண உறவுகொள்ள விரும்பிய குப்தர்கள், முதலாம் சந்திரகுப்தருக்கு லிச்சாவி அரசகுமாரியான குமாரதேவியைத் திருமணம் செய்து வைத்தனர். பிரயாகைப் பகுதியை அதுவரை ஆண்டுகொண்டிருந்த குப்தர்களின் கீழ் மகத அரசு இணைந்த இந்த நிகழ்வு ஒரு பேரரசுக்கான அடித்தளமாக அமைந்தது. அந்த நிலை தொடரவேண்டும் என்று விரும்பிய முதலாம் சந்திரகுப்தர், தமக்கும் குமாரதேவிக்கும் பிறந்த சமுத்திரகுப்தரைத் தனது அடுத்த வாரிசு என்று அறிவித்தார்.
சமுத்திரகுப்தர் தகுந்த வயதை அடைந்ததும் ‘இந்த உலகைக் காக்க வா மகனே’ என்று சந்திரகுப்தர் அறிவித்ததாக குப்தர்களின் சாசனங்கள் பதிவு செய்திருக்கின்றன. அவரது அரசவைக் கவிஞர் ஹரிசேனரால் இயற்றப்பட்ட புகழ்பெற்ற அலகாபாத் தூண் கல்வெட்டு, சமுத்திரகுப்தரை அவரது தகுதிகளுக்காகவே முதலாம் சந்திரகுப்தர் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார் என்று கூறுகிறது. இது மற்ற வாரிசுகள் இருந்திருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே சமுத்திரகுப்தருக்குப் பிரச்சனைகள் அவரது சகோதரர்களிடமிருந்தே வந்தன. வாரிசுப் போட்டியில் ஈடுபட்ட சந்திரகுப்தரின் மற்ற மகன்கள் சமுத்திரகுப்தர் அரியணை ஏறுவதைத் தடுத்தனர்.
குப்தர்களின் அரசவையில் இருந்த மரபு வழியைப் பின்பற்றும் பிரமுகர்கள் அவர்களை ஆதரித்தனர். லிச்சாவிகள் பல்வேறு சமூகங்களின் கலவையாக, பல சமயங்களைப் பின்பற்றுவதாக இருந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, அந்த அரசைச் சேர்ந்த பெண்ணின் வாரிசு குப்தர்களின் அரசராக அமர்வதை அவர்கள் எதிர்த்தனர். காச குப்தன் என்ற சமுத்திரகுப்தரின் சகோதரரை அவர்கள் ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. சில பௌத்த மத நூல்கள், காச குப்தன் ஓரிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் கூறுகின்றன. ஆயினும், இந்த நிலை நீடிக்கவில்லை. தந்தை அளித்த அரசை தன்னுடைய வாளின் உதவியால் சமுத்திரகுப்தர் மீட்டுக்கொண்டார்.
திக்விஜயம்
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேதங்களில் சொல்லப்பட்ட க்ஷத்திரியர்களின் கடமையை நிறைவேற்றத் திட்டமிட்ட சமுத்திரகுப்தர், நாடெங்கும் திக்விஜயம் செய்யத் தீர்மானித்தார். அவரது வெற்றிகளைப் பற்றிய செய்திகளை பிரயாகையில் உள்ள தூண் கல்வெட்டு விரிவாகப் பதிவுசெய்திருக்கிறது.

கவிதை வடிவில் உள்ள இந்தக் கல்வெட்டுச் செய்திகளை இயற்றியவர் ஹரிசேனர் என்பவர் ஆவார். போருக்கும் அமைதிக்குமான அமைச்சராகவும், காத்யதபாகிகனாகவும் (அரசரின் சமையலறைக் கண்காணிப்பாளர்), குமாராமாத்யனாகவும் (இளவரசனின் அந்தரங்க அமைச்சர்), மகாதண்டநாயகனாகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஹரிசேனர். பண்டைய இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க அரசியல் ஆவணங்களில் ஒன்றான இந்தக் கல்வெட்டு, சமுத்திரகுப்தரின் போர்கள், அவர் தோற்கடித்த ஆட்சியாளர்கள், அவர் வெவ்வேறு பகுதிகளைக் கையாண்ட முறை குறித்த விவரங்களை நமக்கு வழங்குகிறது. அதே சமயம், அவரது வெற்றிகளை காலப் பிரமாணத்தோடு வரிசையாக அது தொகுக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
குப்தர்களின் அரசுக்கு மேற்கிலுள்ள நாடுகளை வென்று தனது திக்விஜயத்தை சமுத்திரகுப்தர் தொடங்கினார் என்று பிரயாகைத் தூண் கல்வெட்டு கூறுகிறது. தற்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள பத்மாவதி என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு நாகர்கள் அக்காலத்தில் ஆட்சி செய்துவந்தனர். அவர்கள் தக்காணத்தை ஆட்சி செய்துவந்த வாகாடக அரசர்களோடு மண உறவு கொண்டிருந்தனர். நாகர்களின் அரசில் வாரிசுரிமைப் போர் நிலவுவதைக் கண்ட சமுத்திரகுப்தர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பத்மாவதி மீது படையெடுத்து அதை வீழ்த்தினார். அதன்பின் வாகாடகர்கள் மீது போர் செய்து அதனை ஆண்ட ருத்ரசேனனைத் தோற்கடித்தார். அந்தப் பகுதியில் உள்ள ஏரனில் விஷ்ணுவுக்கான ஒரு கோவிலையும் கட்டினார் சமுத்திரகுப்தர்.
அதன்பின் அவரது திக்விஜயத்தில் இடம்பெறுவது வங்காளம் ஆகும். அதன் ஒரு பகுதியான புண்டரவர்த்தனத்தை ஆட்சி செய்த நாகதத்தன் என்ற அரசனை அவர் போரில் வீழ்த்தினார். அதன் பின் வங்காளத்தின் மேற்குப் பகுதி முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இப்படியாக ஆரியவர்த்தம் என்று அழைக்கப்பட்ட வட இந்தியப் பகுதி முழுவதும் குப்தர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதற்குப் பிறகு அதனைச் சுற்றியுள்ள எல்லைப்புற நாடுகள் மீது படையெடுத்த சமுத்திரகுப்தர், அவற்றை வென்று கப்பம் கட்டச்சொல்லியதோடு தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டார். அவற்றை குப்தர்கள் அரசோடு அவர் இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் தனக்கு விசுவாசமான அரசர்களை பதவியில் அமர்த்தினார் சமுத்திரகுப்தர்.
தென் திசைப் படையெழுச்சி
பிறகு தக்ஷிணபாதம் என்று அழைக்கப்பட்ட தென் திசை நோக்கிய அவரது போர்ப்பயணம் தொடங்கியது. முதலாவதாக அவர் வெற்றி கொண்டது கலிங்க நாட்டை. மகாவம்சம், கலிங்க இளவரசியான ஹேமமாலா அரசன் ஒருவனின் படையெடுப்பைச் சமாளிக்க முடியாமல் புத்தருடைய பல்லோடு அங்கிருந்து தப்பிச்சென்று இலங்கையை அடைந்ததாகக் குறிப்பிடுகிறது. அப்படிப் படையெடுப்பை நிகழ்த்திய அரசர் சமுத்திரகுப்தராகவே இருக்கக்கூடும். அதன் பின் மத்தியப் பிரதேசத்தின் கிழக்கில் உள்ள கோசல நாடு, ஒடிசாவில் இருந்த மகாகாந்தார நாடு, ஒடிசாவின் தென்பகுதியில் இருந்த கௌராலகம் என்ற அரசு, ஆந்திராவில் உள்ள பிஷ்தபுரம் (பித்தாபுரம்) ஆகிய அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக சமுத்திரகுப்தரின் படையெடுப்பால் வீழ்ந்தன.
ஆந்திராவை ஊடுருவிய சமுத்திரகுப்தர் வேங்கி அரசனான ஹஸ்திவர்மனை கடும் போருக்குப் பின் தோற்கடித்ததாக பிரயாகைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அடுத்து தமிழகத்தை நோக்கி வந்த சமுத்திரகுப்தர் காஞ்சியில் ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களோடு போர் செய்தார். பல்லவ அரசன் விஷ்ணுகோபன் சமுத்திரகுப்தரால் தோற்கடிக்கப்பட்டான். அத்தோடு தனது தெற்கு நோக்கிய போர்ப்பயணத்தை முடித்துக்கொண்ட சமுத்திரகுப்தர் தலைநகர் நோக்கித் திரும்பினார். வழியில் ஆந்திரத்தில் இருந்த அவமுக்தா, பாலக்கா போன்ற அரசுகளை வீழ்த்திவிட்டே அவருடைய படை பாடலிபுத்திரம் திரும்பியது.
இப்படி வெற்றி கொண்ட தென் திசை நாடுகளை இணைப்பதற்குப் பதிலாக, அவர்களைத் தோற்கடித்து, அவர்களின் அடிபணிதலை ஏற்றுக்கொண்டு, பின்னர் அவர்களையே மீண்டும் அமர்த்தினார் சமுத்திரகுப்தர். தொலைதூரத் தெற்குப் பகுதிகளை நேரடியாக நிர்வகிப்பது கடினம் என்பதைப் புரிந்துகொண்ட அவர் தனது பேரரசை அளவுக்கு அதிகமாக விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளர்களைத் தனது மேலாதிக்கத்தை அங்கீகரிக்கும் துணை நட்பு நாடுகளாக மாற்றினார்.
அலகாபாத் கல்வெட்டு சமுத்திரகுப்தர் தான் வென்ற பகுதிகளை எப்படிக் கையாண்டார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. சில அரசுகள் முழுமையாக வேரோடு பிடுங்கப்பட்டு இணைக்கப்பட்டன; சில அரசர்கள் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டனர்; வனப் பகுதியில் இருந்த தலைவர்கள் அடக்கப்பட்டனர்; எல்லைப்புற ஆட்சியாளர்கள் கப்பம் செலுத்தினர்; தொலைதூர மன்னர்கள் அவரது ஆட்சியை அங்கீகரித்தனர். இந்த அணுகுமுறை குப்தர்களின் ஏகாதிபத்தியக் கொள்கையின் நுட்பத்தை வெளிப்படுத்துகிறது. சமுத்திரகுப்தர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான சூத்திரத்தைப் பயன்படுத்தவில்லை. புவியியல், நிர்வாக நடைமுறை ஆகியவற்றைப் பொறுத்து அவர் தனது அணுகுமுறையை மாற்றியமைத்தார். கங்கைச் சமவெளியில் அவர் நிலப்பரப்புகளை குப்த அரசோடு இணைத்துக்கொண்டார். எல்லைப் பகுதிகளை கப்பம் கட்டச் செய்தார் . தெற்கில் அவர் அடிபணிதலை ஏற்றுக்கொண்டார்.
இப்படிப் பாரதமெங்கும் சென்று தனது வெற்றிகளைப் பதித்த சமுத்திரகுப்தர் இந்த வெற்றிகளைக் கொண்டாடும் விதத்தில் அஸ்வமேத யாகம் ஒன்றைச் செய்தார். பிரபாவதி குப்தாவின் பூனா சாசனம் அவரை பல அஸ்வமேத யாகங்கள் செய்தவராகக் கூறுகிறது (அனேகாஸ்வமேதாயாஜி). அதைக் குறிக்கும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட்டார் சமுத்திரகுப்தர். அதன்பின் அவரது ஆட்சியில் அமைதி நிலவியது.

பிரயாகைக் கல்வெட்டு சமுத்திரகுப்தரை ஒரு சிறந்த கல்வியாளராகவும் அறிவாளியாகவும் இசைவல்லுநராகவும் குறிப்பிடுகிறது. அவர் ஒரு சிறந்த கவிஞராகவும் விளங்கினார். பல்வேறு கல்வியாளர்களையும் அவர் ஆதரித்தார். தனது குடிமக்களை அன்புடன் நடத்தினார். மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் தீர்த்துவைத்தார். வெளிநாட்டு அரசர்களோடு ராஜரீக உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு வணிகத்தைப் பெருக்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் தாம்ரலிப்தி மிக முக்கியமான துறைமுக நகரமாக விளங்கியது.
நாணயங்கள்
சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றிப் பல தகவல்களை அவர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பாரதத்தில் அதிக அளவு நாணயங்களை அச்சடித்து வெளியிட்ட முதல் அரசர் அவரே. ஆட்சிக்காலத்தின் முற்பகுதியில் கிரேக்க நாணயங்களை மாதிரியாகக் கொண்ட நாணயங்களை அவர் வெளியிட்டார். போலவே குப்தர்களின் சின்னமான கருடக்கொடி அவரது ஆரம்பகால நாணயங்களில் காணப்படுகிறது.

லக்ஷ்மிதேவியின் உருவம் அவரது பெரும்பாலான நாணயங்களில் காணப்படுகிறது. தன்னுடைய உருவத்தை நாணயங்களில் பொறித்த சமுத்திரகுப்தர், ஒவ்வொரு வகை நாணயத்திலும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளிக்கிறார். கையில் ஈட்டியோடு காட்சிதரும் பொதுவகை நாணயங்கள், வில், அம்போடு உள்ள வில்வீரர் வகை நாணயங்கள், அவர் கோடரியைத் தாங்கியவண்ணம் காட்சியளிக்கும் நாணயங்கள், புலிவேட்டையில் ஈடுபடுவது போன்ற காட்சி உள்ள நாணயங்கள், அவர் வீணை இசைப்பதைப் போலக் காட்சியளிக்கும் நாணயங்கள் என்று பல்வேறு வகை நாணயங்களை சமுத்திரகுப்தர் வெளியிட்டார். அவரது ஆட்சிக்காலத்தின் பின்பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்கள், கிரேக்கர்கள் குஷாணர்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு முழுமையாக இந்தியப் பாணியில் அச்சடிக்கப்பட்டன.
சமுத்திரகுப்தரின் மதக் கொள்கையைப் பொருத்தவரை அவர் வேதமுறைகளைப் பின்பற்றிய சனாதனியாகவே விளங்கினார். ஆயினும் மற்ற மதங்களையும் அவர் சமமாகவே நடத்தினார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. இலங்கை மன்னர் மேகவர்ணர் துறவிகளுக்காக புத்தகயாவில் ஒரு மடாலயத்தைக் கட்டுவதற்கான அனுமதியை சமுத்திரகுப்தரிடம் கோரியபோது அந்த அனுமதியை அவர் வழங்கினார்.
மேலை நாட்டு வரலாற்றாசிரியர் வி. ஏ. ஸ்மித் சமுத்திரகுப்தரை நெப்போலியனுடன் ஒப்பிட்டு எழுதியது ‘இந்திய நெப்போலியன்’ என்று அழைத்தது அபத்தமான ஒன்றாகும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த நெப்போலியனை வேண்டுமானால் ஐரோப்பாவின் சமுத்திரகுப்தர் என்று அழைக்கலாம். ஆனால் அதுவும் சரியாக வராது. நெப்போலியனைப் போல, சமுத்திரகுப்தர் தனது வாழ்க்கையைத் தோல்வியுடன் முடிக்கவில்லை, அவரது பேரரசும் அவருக்குப் பிறகு உடனடியாக வீழ்ச்சியடையவில்லை. அவர் ஒரு பேரரசைக் கட்டமைத்தார். அதை அவரது வாரிசுகள் மேலும் கட்டியெழுப்பினர். ஆகவே சமுத்திரகுப்தர் தனித்துவம் வாய்ந்த ஓர் அரசராவார்.
குப்தர்களின் காலம் அதிகாரம், பண்பாடு மற்றும் அறிவுசார் வெளிப்பாட்டின் மொழியாக சமஸ்கிருதம் வளர்ந்ததைக் கண்டது. சமுத்திரகுப்தரின் அரசவை இந்தச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தது.
சமுத்திரகுப்தரின் சிறந்த சாதனைகளில் ஒன்று, மௌரியப் பேரரசுக்குப் பிறகு, துண்டு துண்டாகப் பிரிந்திருந்த வட இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்ததாகும். சுங்கர்கள், பல்வேறு குடியரசுகள், சாதவாகனர்கள், குஷாணர்கள், க்ஷத்ரபர்கள் என்று பல அரசுகளின் கலவையாக இருந்த இந்தியாவை சமுத்திரகுப்தர் ஒன்றிணைத்தார். அவரது ஆட்சி கங்கைச் சமவெளிப்பகுதிக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை அளித்தது. அதையும் தாண்டி குப்தர்களின் அரசு பொருளாதாரம், கலை, இலக்கியம் ஆகியவற்றில் பெரும் பாய்ச்சலைக் கண்டது. பெரு வெற்றிகளைத் தாண்டி, சமுத்திரகுப்தரின் ஆட்சி அறத்தின் அடிப்படையில் நடந்தது என்பதை அவரது சாசனங்கள் விளக்குகின்றன. பிரயாகைக் கல்வெட்டு அவரைப் பசுக்களையும் பொன்னையும் வழங்குபவராகவும், ஏழைகளின் பாதுகாவலராகவும், எதிரிகளைத் தோற்கடித்த பிறகும் கருணை காட்டும் மன்னராகவும் போற்றுகிறது.
சமுத்திரகுப்தர் பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராவார். அவரது மறைவுக்குப் பிறகு குப்தர்களின் அரசு பலவீனம் அடையாமல் மேலும் வளர்ச்சியே கண்டது. இதுவே அவரது சாதனைகளுக்கான சான்றாகும். வெறும் வெற்றிகளால் மட்டும் கட்டமைக்கப்படும் அரசு, விரைவிலேயே வீழ்ச்சியைச் சந்திக்கலாம். ஆனால் சமுத்திரகுப்தர், நூற்றாண்டுகள் நிலைத்திருக்கக்கூடிய அரசை உருவாக்கினார். சமுத்திரகுப்தரை ஒரு வெற்றியாளராக மட்டுமே நினைவில் கொள்வது அவரது பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அவரது வாள் அதிகாரத்தை உருவாக்கியது, அவரது கொள்கை ஸ்திரத்தன்மையை உருவாக்கியது அவரது பண்பாட்டுப் பார்வை இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த காலங்களில் ஒன்றான குப்தர் காலத்தை வடிவமைக்க உதவியது.
(தொடரும்)

