Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

இந்திய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரிய வீரர்களாகவும் பேரரசர்களாகவும் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்களாகவும் இருப்பது அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஆட்சி செய்த மிகச் சில அரசர்களில் சமுத்திரகுப்தரும் அவரது மகனான இரண்டாம் சந்திரகுப்தரும் காலவரிசைப் படி முதலிடம் பெறுகிறார்கள். ஒரு மாபெரும் அரசை உருவாக்கிய சமுத்திரகுப்தருக்குப் பிறகு அரியணை ஏறி, அந்தப் பேரரசைக் கட்டிக்காத்த பெருமை மட்டுமல்லாமல் அதை இன்னும் விரிவடையச் செய்த பெருமை இரண்டாம் சந்திரகுப்தருக்கு உண்டு.

ஆட்சியின் தொடக்கக்காலம்

சமுத்திரகுப்தருக்கும் அவரது மனைவியான தத்ததேவிக்கும் பிறந்தவர் சந்திரகுப்தர். எப்படி சமுத்திரகுப்தர் அவரது தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டு வாரிசாக அறிவிக்கப்பட்டாரோ அதேபோல சந்திரகுப்தரும் சமுத்திரகுப்தரால் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மதுராவில் உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. “தத் பரிக்ரிஹிதேன” என்று அந்தக் கல்வெட்டு தெரிவிக்கும் வாசகங்களால் சமுத்திரகுப்தருக்குப் பல மகன்கள் இருந்தபோதிலும் அவர்களில் சிறந்தவர் என்று கருதி சந்திரகுப்தரையே குப்தர்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தகுந்தவராக, தனது வாரிசாக அறிவித்தார் சமுத்திரகுப்தர் என்பது தெரிய வருகிறது. ஆனால் எப்படிச் சமுத்திரகுப்தருக்கு எதிர்ப்புகள் எழுந்ததோ அதேபோலச் சந்திரகுப்தர் ஆட்சிப் பொறுப்பில் ஏறவும் பல எதிர்ப்புகள் இருந்தன என்பதை சில இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மதுரா கல்வெட்டு
மதுரா கல்வெட்டு

ராமச்சந்திரா, குணசந்திரா என்ற சகோதரர்கள் எழுதிய ‘நாட்யதர்ப்பணம்’ என்ற நூலில் ‘தேவிசந்திரகுப்தம்’ என்ற நாடகத்தின் சில பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ராமகுப்தர் என்பவரைப் பற்றிய பல செய்திகள் உள்ளன. ராமகுப்தர் சமுத்திரகுப்தரின் மகன்களில் ஒருவர் என்றும் சந்திரகுப்தரின் அண்ணன் என்றும் குறிப்பிடப்படுகிறார். சமுத்திரகுப்தருக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ராமகுப்தருக்குத் தொல்லை சாகர்களிடம் இருந்து வந்தது (மேற்கு க்ஷத்திரபர்களான இந்த அரச வம்சத்தினரைப் பற்றி கௌதமிபுத்திர சதகர்ணியின் வரலாற்றில் பார்த்தோம்). சாகர்களின் அரசனான ருத்ரசேனன், ராமகுப்தரைத் தோற்கடித்து அவரது மனைவியான துருவதேவியைக் கவர்ந்து செல்கிறான். கோழையான ராமகுப்தர் செய்வது அறியாமல் தவிக்கவே, சந்திரகுப்தர் தனது வீரர்களுடன் சென்று ருத்ரசேனனைக் கொன்று துருவதேவியை மீட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் சந்திரகுப்தர் தனது அண்ணனைக் கொன்று துருவதேவியை மணந்து ஆட்சியைப் பிடித்தார் என்று அந்த நூல் கூறுகிறது. பாணபட்டர் எழுதிய ஹர்ஷசரிதம் என்ற நூலிலும் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொயு 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘முஜ்முலு-த்வாரிக்’ என்ற அரேபியக் கதையிலும் இதே போன்ற நிகழ்வு ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளைப் பற்றி ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது வெறும் கட்டுக்கதை என்றும் சரித்திர ஆதாரங்கள் இல்லாத நிகழ்வு என்றும் பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மதுராவில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து சமுத்திரகுப்தர் உயிருடன் இருக்கும்போதே சந்திரகுப்தர் வாரிசாக நியமிக்கப்பட்டார் என்று தெரிகின்றது. அப்படி இருக்கும்போது ராமகுப்தர் என்று ஒருவர் எப்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்க முடியும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆகவே ராமகுப்தரின் கதை சரித்திர ஆதாரங்கள் இல்லாத புனைவு என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

விக்ரமாதித்யர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் இருந்துதான், குப்தர்களின் காலக்கணக்கில் தெளிவான வரையறை காணப்படுகிறது. மதுரா கல்வெட்டு அவர் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டின் ஆண்டு பொயு 380 என்பதால் அவர் பொயு 375ல் அரியணை ஏறியிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

சந்திரகுப்தரின் வெற்றிகள்

சமுத்திரகுப்தரின் மறைவுக்குப் பிறகு தன்னாட்சி பெற விரும்பிக் கலகம் செய்த சில அரசுகளை அடக்கும் பொறுப்பு சந்திரகுப்தருக்கு இருந்தது. தந்தையைப் போலப் பெரிய திக்விஜயம் ஒன்றை அவர் செய்யவில்லை என்றாலும் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று அங்கெல்லாம் ஆட்சியை நிலைநிறுத்தினார் சந்திரகுப்தர். டெல்லியில் உள்ள மெஹ்ரோலி இரும்புத் தூண் சந்திரகுப்தர் பெற்ற வெற்றிகளைக் குறிப்பிடுகிறது. முதலில் வங்காளத்தின் மீது படையெடுத்துச் சென்று அங்கே கூட்டணியாக அவரை எதிர்த்தவர்களை சந்திரகுப்தர் தோற்கடித்ததாகவும் அதன்பின் வடமேற்குத் திசை நோக்கிச் சென்று சிந்து நதிக்கரையில் வாஹ்லிகர்களை அவர் வென்றதாகவும் பின்னர் தெற்குக் கடல் வரை தன்னுடைய ஆட்சியதிகாரத்தைச் செலுத்தியதாகவும் அந்தக் கல்வெட்டு சந்திரகுப்தரின் புகழைப் பாடுகிறது. இவர்களைத் தவிர ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை ஆட்சி செய்த தேவபுத்ர ஷாஹி, ஷாஹானுஷாஹி ஆகிய கிடார குஷாணர்களையும் சசானியர்களியும் தோற்கடித்து இந்தியாவின் வடமேற்கில் குப்தர்களின் அதிகாரத்தை சந்திரகுப்தர் நிலை நாட்டினார்.

அதை அடுத்து அவரின் பார்வை மேற்குப் பகுதியை நோக்கித் திரும்பியது. அந்தப் பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாகர்கள், சமுத்திரகுப்தரின் மறைவுக்குப் பிறகு தன்னாட்சியை அறிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல் மேற்கிலுள்ள துறைமுகங்கள் மூலம் நடைபெற்று வந்த வணிகத்தையும் தடை செய்தனர். இதனால் வெகுண்ட சந்திரகுப்தர் சாகர்களுடன் போர் செய்யத் தொடங்கினார். ஆனால் சாகர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. மூன்றாம் ருத்ரசேனன், சிம்மசேனன், நான்காம் ருத்ரசேனன் ஆகிய சாக மன்னர்கள் தொடர்ந்து குப்தர்களின் படையெழுச்சியைத் தடைசெய்தனர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேல் இந்தப் போர்கள் நடைபெற்றன. முடிவில் பொயு 409ம் ஆண்டு சாகர்களைத் தோற்கடித்துத் துரத்தி பெருவெற்றி பெற்றார் சந்திரகுப்தர். இந்த வெற்றியின் காரணமாக சாகாரி என்ற பட்டப்பெயரையும் பெற்றார்.

வாகாடக அரசுடன் மண உறவு

சந்திரகுப்தர் வெறும் போர்வீரர் மட்டுமல்ல; அவர் ஒரு திறமையான ராஜதந்திரியாகவும் இருந்தார். அவரது மிக முக்கியமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று தக்காணத்தின் வாகாடகர்களுடன் கொண்ட மண உறவு ஆகும். அவரது மகள் பிரபாவதி குப்தாவை வாகாடக மன்னர் இரண்டாம் ருத்ரசேனனுக்குத் திருமணம் செய்து செய்து வைத்தார் சந்திரகுப்தர்.

வாகாடகர்கள் மத்திய இந்தியாவையும் தக்காணத்தின் சில பகுதிகளையும் ஆட்சி செய்த ஒரு வலிமையான அரச வம்சமாகும். தனது மகளை இந்த வம்சத்தில் திருமணம் செய்து வைத்ததன் மூலம், சந்திரகுப்தர் தனது தெற்கு எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டார். பிரபாவதி குப்தாவின் சாசனங்கள் குப்த வம்சத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுகின்றன. இது தன் தாய்வீட்டின் மீது அவர் கொண்டிருந்த அபிமானத்தையும் குப்தர்களின் செல்வாக்கையும் காட்டுகிறது.

சந்திரகுப்தரின் கல்வெட்டுகளைத் தவிர, அவரது ஆட்சியைப் பற்றிய செய்திகளை சீன யாத்திரிகரான பாஹியானின் குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த பாஹியான் ‘மதுராவிற்குத் தெற்கே பிராமணர்களுடைய அரசு இருந்தது. அந்நாட்டின் குடிமக்கள் செல்வச்செழிப்போடு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அரசருடைய நிலத்தை உழுதவர்கள் தங்களுக்குக் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளித்தனர். குற்றம் புரிந்தவர்களுக்குப் பெரும் தண்டனைகள் ஏதும் அளிக்கப்படவில்லை. அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப அபராதங்கள் மட்டுமே விதிக்கப்பட்டன. அதிகபட்ச தண்டனையாக அரசருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்களுடைய வலது கரம் வெட்டப்பட்டது மட்டுமே இருந்தது. நாடு முழுவதும் யாரும் கொலை செய்யவில்லை, மது அருந்துவதில்லை, வெங்காயம், பூண்டு போன்றவற்றை உண்பதில்லை, கசாப்புக் கடைகளோ மதுபானத் தொழிற்சாலைகளோ நாட்டில் இல்லை’ என்றெல்லாம் எழுதிவைத்திருக்கிறார். சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் இருந்த கருத்துச் சுதந்தரம் சீனாவில் கூட இல்லை என்று பாஹியான் குறிப்பிடுகிறார். குப்தர்களின் ஆட்சி மிகச் சிறந்ததாக இருந்தது என்பதை இந்தக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

நிர்வாகம்

குறுகிய காலத்தில் பெரிய வெற்றிகளைப் பெற்று அரசை நிலைநிறுத்திய சந்திரகுப்தர் அதன்பின் நிர்வாகத்தைச் செம்மைப் படுத்துவதில் கவனம் செலுத்தினார். அவருக்குத் துணையாக சிறந்த அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று இருந்தது. அவருடைய அமைச்சர்கள் குழுவில் மகாதண்டநாயகர் (தலைமை நீதிபதி), மகாசேனாதிபதி, மகாசந்திவிக்ரஹிகா (போருக்கும் அமைதிக்குமான அமைச்சர்), ஆவணக் காப்பாளர் என்று பலர் இருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு சிறந்த கட்டமைப்புகொண்ட அதிகாரவர்க்கம் நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்ததன் காரணமாக சந்திரகுப்தரால் சிறப்பான ஆட்சியைத் தர முடிந்தது. கிழக்கில் குஜராத்தில் இருந்து மேற்கில் வங்காளம் வரை பரவியிருந்த குப்தர்களின் அரசியல் வணிகம் சிறப்பான முறையில் செயல்பட்டது. மேற்கு நாடுகளுடன் மேற்குப் பகுதியில் இருந்த துறைமுகங்களில் இருந்தும் தென்கிழக்கு ஆசியா, சீனா போன்ற இடங்களோடு தாம்ரலிப்தா போன்ற துறைமுகங்கள் மூலமாகவும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகமங்கள் என்ற பெயருடைய வர்த்தக சங்கங்கள் வணிகத்தில் சிறப்பான இடம் பெற்றன.

குடும்பம்

சந்திரகுப்தருக்கு துருவதேவி, குவேரநாகா (குபேரநாகா) என்று இரு மனைவிகள் இருந்தனர். துருவதேவியின் மூலம் அவருக்கு கோவிந்தகுப்தர் என்றும் குமாரகுப்தர் என்றும் மகன்களும் ப்ரபாவதி என்ற மகளும் பிறந்தனர். நாட்டின் மேற்குப்பகுதியின் ஆளுநராக கோவிந்தகுப்தர் நியமிக்கப்பட்டார். அங்கே கிடைக்கும் முத்திரைகளில் “மகாராஜாதிராஜர் சந்திரகுப்தரின் மனைவியும் மகாராஜா கோவிந்தகுப்தரின் தாயுமான மகாதேவி துருவஸ்வாமினி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து அரசு நடவடிக்கைகளில் துருவதேவியின் பங்கு முக்கியமானதாக இருந்தது என்று தெரிகிறது.

இலக்கியமும் கலையும்

இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம், பாரதப் பண்பாட்டின் உச்சகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரண்டாம் சந்திரகுப்தரின் அரசவையில் மாபெரும் கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் இருந்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்துடன் தொடர்புடைய மிகச் சிறந்த இலக்கிய ஆளுமை காளிதாசர் ஆவார். சமஸ்கிருத இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞர்களிலும் நாடகாசிரியர்களிலும் ஒருவராக அவர் போற்றப்படுகிறார். காளிதாசரின் சரியான காலம் குறித்து அறிஞர்களிடையே விவாதங்கள் இருந்தாலும், பலர் அவரை குப்தர் காலத்துடன் பொதுவாக இணைத்துப் பார்க்கின்றனர். அவர் இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவம், அபிஞானசாகுந்தலம், மேகதூதம், விக்ரம ஊர்வசியம் போன்ற படைப்புகள் செவ்வியல் இலக்கியத்தின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றன.

விக்ரமாதித்தரின் அரசவையில் ஒன்பது ரத்தினங்கள் என்ற புகழ் பெற்ற ஒன்பது அறிஞர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. காளிதாசர், அமரசிம்மர், தன்வந்தரி, க்ஷபணகர், வராஹமிகிரர், வரருசி, வேதாளபட்டர், சங்கு, ஹரிசேனர் ஆகியோரே அந்த அறிஞர்கள். ஆயினும் இவர்கள் அனைவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்தும் பரவலாக உலவுகிறது.

இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் குப்தர்களின் கலை மிக உயர்ந்த செம்மையை அடைந்தது. குப்தர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு, சிவன், தேவி, புத்தர் மற்றும் பிற தெய்வங்களின் உருவங்கள், அழகும் ஆன்மிகமும் எவ்வாறு அற்புதமாக ஒன்றிணைந்திருந்தன என்பதைக் காட்டுகின்றன.

விதிஷா அருகிலுள்ள உதயகிரி குகைகள், இரண்டாம் சந்திரகுப்தரின் சமயச் சார்பை அறிந்துகொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதயகிரியில் காணப்படும் ஒரு கல்வெட்டு, இரண்டாம் சந்திரகுப்தரின் அமைச்சரான வீரசேனரை குறிப்பிடுகிறது. இதன் மூலம் அந்தத் தலம் சந்திரகுப்தருடன் தொடர்புடையது தெளிவாகிறது.

உதயகிரியில் காணப்படும் புகழ்பெற்ற வராகச் சிற்பம், பூமாதேவியை மீட்கும் வராக அவதாரத்தைச் சித்தரிக்கிறது. இது குப்தர்களின் மிகச் சிறந்த கலை வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இது வெறும் கலை மட்டுமல்ல; பேரரசின் அதிகாரத்தை வெளிப்படுத்தும் அரசியல் குறியீடும் ஆகும். விஷ்ணு பூமியை மீட்பது, மன்னன் பூமியில் ஒழுங்கையும் தர்மத்தையும் மீட்டெடுப்பதற்கான உதாரணமாகவும் புரிந்துகொள்ளப்படலாம்.

நாணயங்கள்

இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்களும் சமுத்திரகுப்தரின் நாணயங்களைப் போலவே பெரும் புகழ் பெற்றன. தேவஶ்ரீ மகாராஜாதிராஜ ஶ்ரீசந்திரகுப்த என்று அவரது பெயர் பொறிக்கப்பட்ட வில் வீரர் வகை நாணயங்கள், “ஶ்ரீ விக்ரமாதித்யஸ்ய” என்று பொறிக்கப்பட்ட அரசர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைப் போன்ற சித்திரத்தைக் கொண்ட நாணயங்கள், குதிரையில் சந்திரகுப்தர் சவாரி செய்வது போன்ற உருவம் கொண்ட குதிரை வீரர் நாணயங்கள், சிங்கத்தோடு அரசர் சண்டையிடுவது போன்ற காட்சியைக் கொண்ட நாணயங்கள், குடையை ஒருவர் தாங்கியிருக்க அரசர் யாகம் செய்வது போன்ற தோற்றம் உள்ள நாணயங்கள் என்று பல வகைத் தங்க நாணயங்களை சந்திரகுப்தர் வெளியிட்டார். பரமபாகவதனாகவும் பரமவைஷ்ணவனாகவும் தன்னை அறிவித்துக்கொண்ட சந்திரகுப்தரின் விஷ்ணுபக்தியை வெளிப்படுத்தும் விதமாக சக்ர விக்ரம என்ற வகை நாணயங்களையும் சந்திரகுப்தர் அச்சடித்திருக்கிறார். இதில் விஷ்ணுவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அவருடைய நாணயங்கள் பெரும்பாலும் வைஷ்ணவ சமயச் சின்னங்களான விஷ்ணு சக்கரம், லக்ஷ்மிதேவி, கருடன் ஆகியவற்றைக் கொண்டிருந்தன.

இவற்றைத் தவிர குப்தர்களின் வம்சத்தில் வெள்ளி நாணயங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தி இந்தியாவின் மேற்குப் பகுதியில் புழக்கத்தில் விட்ட அரசரும் சந்திரகுப்தர் ஆவார். இந்த வகை நாணயங்களில் சாகர்களின் நாணயங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. தாமிர நாணயங்களையும் சந்திரகுப்தர் வெளியிட்டார்.

சந்திரகுப்த விக்ரமாதித்யரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று அழைக்கப்பட்ட குப்தர்களின் காலத்தின் மிகச்சிறந்த காலகட்டமாகும். சமுத்திரகுப்தரிடமிருந்து ஒரு பேரரசைப் பெற்ற அவர், அதை வெறுமனே பாதுகாத்ததுடன் நின்றுவிடவில்லை. அவர் அதை விரிவுபடுத்தினார், செழிக்கச் செய்தார், பெருமையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றார். சாகர்கள் மீது பெற்ற இராணுவ வெற்றி, வாகாடகர்களுடன் அமைத்த அரசியல் கூட்டணி, பண்பாட்டுக்குத் தந்த ஆதரவு, பொருளாதார ஒருங்கிணைப்பு, பல்வேறு சமயங்களுக்குத் தந்த ஆதரவு ஆகியவற்றின் மூலம், பிற்கால தலைமுறைகள் “பொற்காலம்” என்று நினைவுகூர்ந்த ஒரு காலத்தை அவர் உருவாக்கினார்.

வரலாற்றின் அடிப்படையில், கல்வெட்டுகள் நாணயங்கள் மூலமாக அவரை நாம் ஒரு வெற்றியாளராகவும் சிறந்த நிர்வாகியாகவும் கலைகளுக்கும் இலக்கியத்திற்கும் ஆதரவு அளித்தவராகவும் காண்கிறோம். இலக்கியக் குறிப்புகளின் வாயிலாக அவரை விக்ரமாதித்யராக, துணிச்சல் மிக்கவராகவும் அறத்தின் பாதுகாவலராகவும் பார்க்கிறோம். அவரது மகத்துவம் இப்படிப்பட்ட அபூர்வமான இணைப்பில்தான் உள்ளது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *