Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல் பலவீனமாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் காரணமாகவே அந்நியர்களின் படையெடுப்பும் அந்தப் பகுதியின் மூலமாகவே அடிக்கடி நடந்தது. அதே சமயம் இந்தியாவின் அரசர்கள் பலர் அந்தப் படையெடுப்புகளைத் திறமையாகச் சமாளித்து எதிரிகளை விரட்டி அடித்த நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. கிரேக்கத்திலிருந்து வந்த அலெக்சாண்டர், நந்தர்களின் படை வலிமையைக் கண்டு திரும்பிச் சென்றார். அதன்பின்னர் கிரேக்கப்படைகள் மீண்டும் படையெடுத்து வந்தபோது அவர்களை சந்திரகுப்த மௌரியர் வென்றார். பின்னாளில் இந்தோ-சித்தியர்களான சாகர்கள், வடமேற்கிலிருந்து வந்து இந்தியாவின் மேற்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டபோது முதலில் கௌதமிபுத்திர சதகர்ணியாலும் பின்னால் இரண்டாம் சந்திரகுப்தராலும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனாலும் வடமேற்கிலிருந்து வந்துகொண்டிருந்த அந்நியப் படையெடுப்புகள் நின்றபாடில்லை. மேற்கண்ட வம்சத்தவரைக் காட்டிலும் கொடூரமான அதே சமயம் கடுமையாகப் போர் செய்யக்கூடிய ஹூணர்கள் என்ற வம்சத்தவர் வடமேற்குப் பகுதியிலிருந்து சாரிசாரியாக இந்திய நாட்டின் உள்ளே புகுந்தபோது, அவர்களைச் சமாளிக்கப் பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டு பெருவெற்றி கண்ட மன்னர் ஸ்கந்தகுப்தர்.

இரண்டாம் சந்திரகுப்தரின் பேரரும் குமாரகுப்தரின் மகனும் ஆன ஸ்கந்தகுப்தருக்கு ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் பலம் இந்தச் செயல்களைச் செய்யத் துணை செய்தது என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாட்டின் உள்ளிருந்தே தொடர்ந்து அவர் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. தொடக்கத்தில் அவர் அரியணை ஏறுவதே குதிரைக் கொம்பாக இருந்தது. குமாரகுப்தரின் மூன்று மகன்களான கடோத்கஜ குப்தர், பூரகுப்தர், ஸ்கந்தகுப்தர் ஆகியோரில் அவர் யாரைத் தனது அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. குமாரகுப்தரின் ஆட்சியின் இறுதிக்காலத்தில் அவர் துறவறம் பூண்டார் என்பது அவரது நாணயங்களால் தெரியவருகிறது. அந்தக் காலகட்டத்தில் குப்தர்களின் அரசு பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தது என்பது, பிடாரி என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டால் தெரியவருகிறது. குப்தர்களின் ‘குல லக்ஷ்மி’ ஆட்டம் காணத் தொடங்கியதாகக் கூறும் அந்தக் கல்வெட்டு அதை ஸ்கந்தகுப்தர் நிலைநிறுத்தினார் என்றும் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்சனைகள் வாரிசுரிமைச் சண்டைகளால் வந்ததா அல்லது எதிரிகளின் படையெடுப்பால் வந்ததா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

பிடாரி தூண் கல்வெட்டு
பிடாரி தூண் கல்வெட்டு

பிடாரி கல்வெட்டு ஸ்கந்தகுப்தர் ‘புஷ்யமித்திரர்களை’ வென்றதாகக் குறிப்பிடுகிறது. இந்தப் புஷ்யமித்திரர்கள் யார் என்பதைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. மேகலா என்ற பிரதேசத்தை ஆட்சி செய்தவர்கள் புஷ்யமித்திரர்கள் என்பது பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்து. குப்தர்களின் சிற்றரசர்களாக இருந்த புஷ்யமித்திரர்கள் வாகாடக அரசரான நரேந்திரசேனருடன் (இரண்டாம் ப்ரவரசேனருடைய மகன்) சேர்ந்து குப்தர்களின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர். அவர்களை ஸ்கந்தகுப்தர் தோற்கடித்து ஆட்டம் கண்ட குப்தர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார் என்பதே பிடாரி கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.

இப்படி ஆரம்பகாலத்தில் அரசுக்கு எதிராகக் கிளம்பியவர்களைத் தோற்கடித்து தனது வாளின் வலிமையைக் காட்டிய காரணத்தால் ஸ்கந்தகுப்தரையே அடுத்த அரசராக குப்தர்களின் அவை தேர்ந்தெடுத்தது. அவர் போர்க்களத்திலிருந்து வெற்றியோடு திரும்பியபோது அவரது தந்தையான குமாரகுப்தர் உயிரோடு இல்லை. இந்தச் செய்தியையும் கல்வெட்டின் வரிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

“தன்னுடைய குலத்திற்கு நேர்ந்த அபகீர்த்திகளை அழித்து அதன் மேன்மையை நிலைநிறுத்தி, மிகுந்த வலிமையும் செல்வத்தையும் (சமுத்திதபலகோஷான்) கொண்ட புஷ்யமித்திரர்களை வென்று திரும்பிய ஸ்கந்தகுப்தரின் புகழ் குழந்தைகள் உட்பட அனைவராலும் பாடப்பட்டது. வெற்றியோடு (அவன்) நாடு திரும்பியபோது அவன் தந்தை விண்ணுலகை அடைந்துவிட்டார் (பிதரி திவம் உபேதே). ‘வெற்றி அடைந்துவிட்டோம்’ என்ற மகிழ்வோடு அவன் தன் தாயைத் தழுவிகொண்டபோது அவன் அன்னையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அது தன்னுடைய எதிரிகளை வென்ற பிறகு தன் தாயை நமஸ்கரித்த கிருஷ்ணனைக் கண்டதுபோல இருந்தது”

மேற்கண்ட வரிகளின் மூலம் ஸ்கந்தகுப்தரின் புகழ் நாட்டில் ஓங்கியிருந்தது என்பதையும் அதன்காரணமாகவே அரசு அவரைத் தேடிவந்தது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சிக்கல் குமாரகுப்தரின் மற்ற மகன்களிடமிருந்து, குறிப்பாக பட்டமகிஷியான ஆனந்ததேவியின் மகனான பூரகுப்தரிடமிருந்து வந்தது. ஆனால், அதையும் வெற்றிகரமாகச் சமாளித்து ஸ்கந்தகுப்தர் பொயு 455ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஸ்கந்தகுப்தரின் தாயார் குமாரகுப்தரின் ஆசைநாயகி என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அதில் உண்மை இல்லை. குமாரகுப்தரின் மற்ற ராணிகளில் ஒருவராகத்தான் அவர் இருந்திருக்கக்கூடும்.

இருப்பினும் பூரகுப்தரிடமிருந்து வந்த தொல்லைகளைத் தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து ஸ்கந்தகுப்தர் சமாளிக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் வடமேற்கில் மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பிய ஹூணர்கள் என்ற நாடோடிக் கூட்டத்தினர் உட்புகுந்துவிட்டனர். முதலில் கபீசபுரம் என்று அழைக்கப்பட்ட காபூலைத் தாக்கி தங்கள் வசமாக ஆக்கிக்கொண்ட ஹூணர்களின் ஒரு பிரிவினரான கிடாரர்கள் அங்கிருந்து போலன் கணவாய் வழியாக இந்தியாவின் வடமேற்கில் நுழைந்தனர். இதைக் கண்ட ஸ்கந்தகுப்தர் ஒரு பெரும் படையுடன் அவர்களை நோக்கிச் சென்றார். புருஷபுரம் (பெஷாவர்) என்ற இடத்தில் ஹூணர்களுக்கும் குப்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் குப்தர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஐரோப்பாவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்த ஹூணர்களின் ஒரு பகுதியை ஸ்கந்தகுப்தர் தோற்கடித்துத் துரத்தியது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டுகள் ‘மிலேச்சர்களை’ அவர் தோற்கடித்ததாகக் குறிப்பிடுகின்றன.

பின்வாங்கிச் சென்ற கிடார ஹூணர்களை அவர்களின் இன்னொரு வம்சமான அல்கானிய ஹூணர்கள் சந்தித்து போரிட்டனர். இதில் வெற்றியடைந்த அல்கானிய ஹூணர்களும் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆகவே அவர்களோடும் ஸ்கந்தகுப்தர் எதிர்த்துப் போரிட்டார். பிடாரி தூண் கல்வெட்டு, ஸ்கந்தகுப்தருக்கும் ஹூணர்களுக்கும் இடையிலான மோதலை கவித்துவமான சொற்களைக் கொண்டு பதிவுசெய்துள்ளது. அவர் ஹூணர்களுடன் போரில் இறங்கியபோது, அவரது கரங்களின் வலிமையால் பூமியே அதிர்ந்தது என்று அது வர்ணிக்கிறது. அந்தக் கல்வெட்டில் ஹூணர்கள் குறிப்பாகப் பெயரிட்டு சொல்லப்பட்டிருப்பதே, குப்தர்களுடைய வரலாற்றில் அவர்கள் இந்தப் போருக்கு அளித்த முக்கியத்துவத்தை காட்டுகிறது. தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற இந்தப் போர்களில் குப்தர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஹூணர்களின் முன்னேற்றத்தை ஓரளவுதான் அவர்களால் தடுத்து நிறுத்த முடிந்தது.

இதற்கிடையில் பூரகுப்தரால் தூண்டப்பட்ட பல சிற்றரசர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களை எல்லாம் அடக்கவேண்டிய கட்டாயமும் ஸ்கந்தகுப்தருக்கு இருந்தது. அவருடைய ஜூனாகத் கல்வெட்டு “பாம்புகள் பல தலை தூக்கி ஆடுவது போல பல அரசர்கள் தங்களது ஆணவத்தினால் குப்தர்களை எதிர்த்தனர். தனது ஆத்ம சக்தியினால் எதிரிகளை ஸ்கந்தகுப்தர் வென்றார்” என்று குறிப்பிடுகிறது. போலவே அரசவையில் தனக்கு எதிராகச் சதிவேலைகள் செய்த அதிகாரிகளையும் கண்டுபிடித்து பணி நீக்கம் செய்தார் ஸ்கந்தகுப்தர். அவர்களுக்குப் பதிலாக தனக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகளையும் ஆளுநர்களையும் நாடு முழுவதும் அவர் நியமித்தார்.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளித்துக்கொண்டே நாட்டில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களையும் அவர் செய்தார். மாகாணங்களுக்குத் தலைவராக ஆளுநர்களையும் மாவட்டங்களுக்குத் தலைவராக விஷயபதி என்ற அலுவலர்களையும் நியமித்தார். ஸௌல்கிகர் (சுங்கம் வசூலிப்பவர்), கௌல்மிகர் (வனத்துறை அதிகாரி) போன்ற பதவிகளையும் அவர் ஏற்படுத்தினார்.

ஜூனாகத் கல்வெட்டு

அவரது சிறந்த நிர்வாகத்திற்கு மிக முக்கியமான உதாரணமாக இருப்பது, கிர்னார் அருகிலுள்ள புகழ்பெற்ற சுதர்ஷன ஏரியுடன் தொடர்புடைய குஜராத்தின் ஜூனாகத் கல்வெட்டாகும். இந்த ஏரிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. இது முதலில் மௌரியர் காலத்தில், சந்திரகுப்த மௌரியரின் ஆளுநரான புஷ்யகுப்தருடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது. பின்னர் அசோகர் காலத்திலும், ருத்ரதாமன் காலத்திலும் இது பழுதுபார்க்கப்பட்டது. இந்த ஏரியின் கரை உடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பெரிய பராமரிப்புப் பணியை ஸ்கந்தகுப்தரின் கல்வெட்டு பதிவு செய்கிறது.

ஸ்கந்தகுப்தரின் ஆட்சிக்காலத்தில், சௌராஷ்டிரம் பர்ணதத்தர் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட பழுதுபார்ப்புப் பணியை அவரது மகனான சக்ரபாலிதன் மேற்கொண்டான். இந்த ஏரியின் சீரமைப்பு வெறும் உள்ளூர்ப் பணி மட்டுமே என்று கருதமுடியாத ஒன்று. சௌராஷ்டிரம் போன்ற வறண்ட பிரதேசத்தில், நீர் மேலாண்மை என்பது விவசாயத்திற்கும் குடியிருப்பு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானதாக இருந்தது. சுதர்ஷன ஏரியை மீண்டும் சீரமைத்ததன் மூலம், ஸ்கந்தகுப்தரின் நிர்வாகம் அவருக்கு முன்பிருந்த மௌரியர், சகர், குப்தர் போன்ற முந்தைய பேரரசு மரபுகளின் தொடர்ச்சியை வெளிக்காட்டுவதாகவே கொள்ளவேண்டும்.

இது ஸ்கந்தகுப்தரின் ஆட்சியில் அதிகம் கவனிக்கப்படாத முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். அவர் பெரும்பாலும் ஹூணர்களுக்கு எதிராக நாட்டைக் காத்த அரசராகவே நினைவுகூரப்படுகிறார். ஆனால் அவரது ஆட்சி, அரசால் ஆதரிக்கப்பட்ட நீரியல் பொறியியல் பணிகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடுமையான போர்கள் நடந்த காலத்திலும்கூட, பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளுக்கான தேவைகளை குப்தர்களின் நிர்வாகத்தால் நிறைவேற்ற முடிந்தது என்பதை ஜூனாகத் கல்வெட்டு காட்டுகிறது

பொருளாதாரம் அவர் ஆட்சியின் முற்பகுதியில் சிறந்து விளங்கியது. ஸ்ரேணி என்ற வணிகக் குழுக்கள் தங்களது வணிகத் திறமையினால் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தன. ஆனால் தொடர்ந்த போர்களாலும் உள்நாட்டுச் சிக்கல்களாலும் நாளடைவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதனால் அவருடைய நாணயங்களின் மதிப்பைக் குறைத்து வெளியிட்டார் ஸ்கந்தகுப்தர்.

வேதமதமான சனாதனத்தை ஸ்கந்தகுப்தர் பின்பற்றினாலும், எல்லாச் சமயங்களையும் ஸ்கந்தகுப்தர் ஆதரித்தார். சிவன், விஷ்ணு கோவில்களைத் தவிர சூரியனுக்கும், தேவிக்கும், ஸ்கந்தருக்கும் அவர் கோவில்களைக் கட்டினார். அவரது ஆட்சிக்காலத்தில் சமண சமயத்தைச் சேர்ந்த மாத்ரர், கஹாமில் ஐந்து தீர்த்தங்கரர்களின் திருமேனிகளை பிரதிஷ்டை செய்தார் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. போலவே புத்தருக்கான பல சைத்யங்கள் அவரது காலத்தில் கட்டப்பட்டு அவற்றிற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன.

மற்ற குப்த பேரரசர்களைப் போலவே, ஸ்கந்தகுப்தரும் பெருமைமிக்க பேரரசுப் பட்டங்களைப் பயன்படுத்தினார். அவர் மஹாராஜாதிராஜா “மாபெரும் அரசர்களுக்கெல்லாம் அரசன்” என்றும், பரமபாகவதர் “பகவான் விஷ்ணுவின் பரம பக்தர்” என்றும் வர்ணிக்கப்படுகிறார். பின்னாளில் எழுதப்பட்ட சில குறிப்புகள் அவரை விக்ரமாதித்யன், தேவராஜன், க்ரமாதித்யன் போன்ற பட்டங்களுடனும் இணைக்கின்றன. ஆயினும், நாணயவியல் ஆதாரங்கள் க்ரமாதித்யன் என்ற பட்டத்தை அவர் பயன்படுத்தியதை உறுதிசெய்கின்றன.

சமுத்திரகுப்தரைப் போல தன்னம்பிக்கையின் உச்சத்தில் விரிவடைந்து கொண்டிருந்த ஒரு பேரரசை ஸ்கந்தகுப்தர் வாரிசாகப் பெறவில்லை. போலவே, இரண்டாம் சந்திரகுப்த விக்ரமாதித்யனைப் போல நிலையான வளமும் அமைதியும் நிறைந்த காலத்திலும் அவர் ஆட்சி செய்யவில்லை. வலிமைமிக்க குப்தப் பேரரசு உள்நாட்டுச் சிக்கல்களையும் வெளிநாட்டு ஆபத்துகளையும் எதிர்கொள்ளத் தொடங்கிய ஒரு நெருக்கடியான தருணத்தில்தான் அவர் ஆட்சிக்கு வந்தார்.

இருப்பினும், தனது அபாரமான படைகளை நடத்தும் திறமை, அரசியல் மனவலிமை, நிர்வாக ஆற்றல் ஆகியவற்றால் அவர் அந்தப் பேரரசை ஒன்றாகத் தக்கவைத்தார். குப்த வம்சத்தின் உண்மையிலேயே வலிமைமிக்க கடைசி மன்னர்களில் ஒருவராக உயர்ந்தார். பொதுவாக கி.பி. 455 முதல் 467 வரை அமைந்ததாகக் கருதப்படும் ஸ்கந்தகுப்தரின் ஆட்சி, ஹூணர்களுக்கு எதிரான வெற்றிகரமான எதிர்ப்பிற்காகவும், குப்த அதிகாரத்தின் அடித்தளங்கள் குலையத் தொடங்கிய காலத்தில் பேரரசின் அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியதற்காகவும் சிறப்பாக நினைவுகூரப்படுகிறது.

சமுத்திரகுப்தரை வெற்றிகளைப் பெற்ற மகா வீரராகவும், இரண்டாம் சந்திரகுப்தரை திறமை மிக்க பேரரசராகவும் விளங்கிய குப்தர்களின் வரலாற்றில் ஸ்கந்தகுப்தர் அந்தப் பேரரசின் காவலனாகத் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. வரலாறு என்பது பேரரசுகளை விரிவுபடுத்தியவர்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை; அந்தப் பேரரசுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது அசையாமல் நின்று அவற்றைக் காத்தவர்களாலும் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில், ஸ்கந்தகுப்தர் குப்தப் பேரரசின் மகத்தான கேடயமாக நினைவுகூரப்பட வேண்டியவர்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *