பொயு ஏழாம் நூற்றாண்டில் பாரதத்தை ஆட்சி செய்த பெருவீரர்களில் இரண்டாவதாக நாம் பார்க்கப்போவது சாளுக்கியப் பேரரசரான இரண்டாம் புலகேசியைப் பற்றி. குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியபோது எப்படி வட இந்தியாவில் பல சிறிய அரசுகள் தோன்றினவோ அதைப்போலவே தக்காணத்தில் தோன்றிய அரச வம்சம்தான் சாளுக்கியர்கள். இவர்கள் பாதாமி (வாதாபி) என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததால் பாதாமி சாளுக்கியர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஜயசிம்மன் என்ற அரசனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த வம்சம் அவருடைய பேரனான முதலாம் புலகேசியின் ஆட்சிக்காலத்தில் விரிவடையத் தொடங்கியது. அவருடைய மகனான கீர்த்திவர்மன் காலத்தில் சாளுக்கியர்களின் வலிமை அதிகரித்தது. கீர்த்திவர்மனின் மகன்தான் இரண்டாம் புலகேசி. இவருடைய இயற்பெயர் எரெயா என்று பல சாளுக்கிய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பீஜப்பூர் கல்வெட்டு இவரை எரஜா என்று அழைக்கிறது. .
கீர்த்திவர்மன் இறந்துபடும்போது, புலகேசி சிறிய வயதுடையவராக இருந்ததால் கீர்த்திவர்மனுடைய தம்பியான மங்களேசன் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் மங்களேசன் பதவி ஆசை கொண்டு தன்னுடைய மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். இதை ஆட்சேபித்த புலகேசியை நாட்டை விட்டே துரத்திவிட்டார். பல வருடம் காடுகளில் அலைந்து, தனக்கென ஒரு படையைத் திரட்டிக்கொண்ட புலகேசி, ஒரு கட்டத்தில் மங்களேசனைத் தாக்கி அழித்துவிட்டார். அவருடைய இந்த வெற்றியைப் பற்றிக் கூறும் ஐஹொளே கல்வெட்டு “புலகேசி லக்ஷ்மிதேவியின் அனுக்ரஹம் பெற்றவராக இருந்ததைக் கண்டு பொறாமைகொண்ட மங்களேசன், அவரை நாட்டை விட்டு விரட்டினார். அதன்பின் மங்களேசனுடைய வலிமை புலகேசி பெற்ற நல்ல ஆலோசனைகளாலும் அவருடைய ஆற்றலாலும் குறைக்கப்பட்டது. தன்னுடைய மகனுக்கு ஆட்சியைத் தரவேண்டும் என்ற ஆசையையும் தன் அரசையும் உயிரையும் (மங்களேசன்) இழந்தான்” என்று புலகேசியின் வெற்றியை வர்ணிக்கிறது. இதிலிருந்து, கீர்த்திவர்மன் மேல் அன்பு கொண்ட சில அரசவை அலுவலர்கள் புலகேசிக்கு உதவி செய்து அவருக்கு ஆலோசனைகள் கூறியிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பெத்தவடுகுரு என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு ரணவிக்ரமன் என்ற அரசனை வீழ்த்தியபிறகு புலகேசி ஒரு கிராமத்தில் நிலக்கொடை வழங்கியதாகத் தெரிவிக்கிறது. மங்களேசனுக்கு ரணவிக்ரமன் என்ற பெயர் இருந்ததால், இது மங்களேசனை வெற்றிகொண்ட பிறகு புலகேசி செய்த தானம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். மங்களேசன் செய்த துரோகத்தின் காரணமாக புலகேசிக்கு அடுத்து வந்த அவருடைய அரச வம்சத்தின் ஆவணங்கள் மங்களேசனுடைய சாதனைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.
ஆட்சிப்பொறுப்பு
இந்த வெற்றியை அடுத்து பொயு 610ம் ஆண்டு புலகேசி சாளுக்கிய அரசராகப் பொறுப்பேற்றார். அவருடைய அபிஷேகப் பெயர் சத்யாச்ரயன் என்பதாக இருந்தது. அவருடைய பெரும்பாலான கல்வெட்டுகள் சத்யாச்ரய புலகேசி என்றே அவரைப் புகழ்கின்றன. பாட்டனாரின் புலகேசி என்ற பெயரையும் இவர் வைத்துக்கொண்டார். கன்னட அரசர்கள் இந்தப் பெயர்களுக்கான வேறுபாட்டைக் குறிக்க இருமடங்கு, மும்மடங்கு என்ற பொருளில் இம்மடி, மும்மிடி என்று முன்னெட்டை வைத்துக்கொள்வது வழக்கம். அதன்படி இரண்டாம் புலகேசி இம்மடி புலகேசி என்று அழைக்கப்படுகிறார்.
புலகேசியின் வெற்றிகளைப் பட்டியலிடும் ஐஹொளே கல்வெட்டு, அவர் முதலில் அப்பயிகா, கோவிந்தன் ஆகிய இரு அரசர்களை வென்றதாகக் கூறுகிறது. இவர்கள் இருவரும் புலகேசியின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர் என்ற காரணத்தால் இவர்கள் பீமா நதிக்கரைப் பகுதியில் ஆட்சி செய்த சாளுக்கியர்களின் சிற்றரசர்களாக இருக்கலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து. இந்த அரசர்களுக்கு இடையே மித்திர பேதம் செய்து, அதாவது கோவிந்தனுக்குப் பரிசுகள் கொடுத்து நண்பனாக்கி அப்பயிகாவை அவனிடமிருந்து பிரித்து புலகேசி வென்றதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. கோவிந்தன் பின்னாளில் புலகேசியின் சிற்றரசனாகவே தொடர்ந்தான்.
சாளுக்கியப் பேரரசு
அடுத்ததாக, புலகேசி கர்நாடகாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். குப்தர்கள் காலத்திலிருந்து கர்நாடகாவின் தென்பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த கதம்பர்களை அவர் தோற்கடித்து அவர்களின் தலைநகரான வனவாசியைக் கைப்பற்றிக்கொண்டார். அதன்பின் கடலோரப் பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த அலூபர்களையும் தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்ட கங்கர்களையும் தோற்கடித்தார். அலூபர்களுக்கும் சேந்திரகர்கள் என்ற அரசவம்சத்தினருக்கும் கதம்பர்கள் ஆட்சி செய்த பகுதிகளைப் பிரித்துக் கொடுத்தார். இந்த வெற்றிகளின் மூலமாக கொங்கணப் பகுதி முழுவதும் புலகேசியின் ஆட்சியின் கீழ் வந்தது. இது சாளுக்கியர்கள் மேற்கு நாடுகளுடன் செய்த வணிகத்திற்குப் பேருதவி செய்தது.
ஐஹொளே கல்வெட்டு, லாட, மாளவ, கூர்ஜரப் பகுதிகளை புலகேசி வெற்றிகொண்டதாகக் கூறுகிறது. இவை வட மகாராஷ்டிர, வட மத்தியப் பிரதேச, குஜராத் பகுதிகளாகும். இந்த வெற்றிகளின் மூலம் வடக்கில் வெகுதூரத்திற்கு அவர் சாளுக்கியர்களின் ஆட்சியை விரிவுபடுத்தினார். வெறும் தக்காணத்தின் அரசராக மட்டுமல்லாமல், வட இந்தியாவின் பல பகுதிகளை தன் ஆட்சியதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த பேரரசராக அவர் உயர்ந்தார்.
ஹர்ஷருடன் போர்
இப்படி வடக்கில் தன்னுடைய அரசை புலகேசி விரிவாக்கிக் கொண்டே சென்றது, வட இந்தியாவின் பேரரசராக இருந்த ஹர்ஷவர்த்தனரின் கண்களை உறுத்தியது. தன்னுடைய அரசின் எல்லையில் இருந்த மாளவத்தை புலகேசி வென்றதை தனக்கு விடப்பட்ட சவாலாகவே ஹர்ஷர் உணர்ந்தார். ஆகவே புலகேசியோடு மோதுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. நர்மதை ஆற்றங்கரைப் போர் என்று வர்ணிக்கப்படும் இந்தப் போர் இரு அரசர்களுக்கும் மிக முக்கியமான போராக அமைந்தது.
இந்தப் போரில் ஹர்ஷருடைய ஹர்ஷம், அதாவது பெருமிதம் கரைந்தே போயிற்று என்று சமஸ்கிருதத்தில் சிலேடையாக வர்ணிக்கிறது ஐஹொளே கல்வெட்டு. ஹர்ஷருடைய யானைப்படைகள் இந்தப் போரில் வீழ்ந்தன. ஆனால் புலகேசியுடைய யானைப்படைகள் விந்திய மலைகளைத் தவிர்த்தன என்கிறது ஐஹொளே கல்வெட்டு. கரடுமுரடான விந்திய மலைப்பகுதியில் யானைப்படைகளைச் செலுத்துவது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே புலகேசி யானைப்படையை இந்தப் போரில் பயன்படுத்தவில்லை என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் கல்வெட்டு சமத்காரமாக ‘விந்திய மலை யானைகளால் கீழே தள்ளப்பட்டுவிடும் என்ற காரணத்தால் புலகேசி யானைகளை இந்தப் போரில் பயன்படுத்தவில்லை’ என்று கூறுகிறது. இந்தப் போரைப் பற்றி புலகேசியின் பீஜப்பூர் கல்வெட்டும் குறிப்பிடுகிறது. இதில் அடைந்த படுதோல்வியின் காரணமாக, ஹர்ஷர் புலகேசியுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. நர்மதை ஆறு இரு அரசுகளுக்கும் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஹர்ஷரின் மீது பெற்ற இந்த வெற்றிக்குப் பிறகு ‘பரமேஸ்வரன்’ என்ற பட்டப்பெயரை புலகேசி சூட்டிக்கொண்டார்.
தனது வடக்கு எல்லையை நிலைநிறுத்திய பிறகு, புலகேசி கிழக்குப் பகுதிகளின் மீது கவனம் செலுத்தினார். இன்றைய சத்தீஸ்கர், ஒடிசாவின் சில பகுதிகளுக்குள் அடங்கிய தட்சிண கோசலத்தின் மீதும் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து அந்த இரு அரசுகளையும் வெற்றி கொண்டார். அக்காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த விஷ்ணுகுண்டின அரசர்களைத் தோற்கடித்து, ஆந்திரத்தின் வடபகுதியை சாளுக்கிய அரசோடு அவர் இணைத்தார். தனது சகோதரரான விஷ்ணுவர்த்தனரை அந்தப் பகுதிகளின் ஆளுநராக புலகேசி நியமித்தார். பின்னாளில் வேங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த விஷ்ணுவர்த்தனரின் வம்சம், கீழைச்சாளுக்கிய வம்சம் என்று அழைக்கப்பட்டது. அந்த வம்சத்தில் பிறந்த இளவரசன், குலோத்துங்கன் என்ற பெயரில் சோழ அரசனாக ஆனது வரலாறு.
சாளுக்கிய அரசை இப்படி ஒரு பரந்து விரிந்த பேரரசாக உருவாக்கிய புகழ் புலகேசியையே சேரும். கர்நாடகத்தின் மையப்பகுதிகளை உள்ளடக்கிய அவரது பேரரசு, மேற்கில் கொங்கணக் கடற்கரைவரை விரிந்து, வடக்கில் நர்மதை எல்லையை எட்டியது. குஜராத், மாளவப் பகுதிகளிலும் செல்வாக்குச் செலுத்தியதுடன், கிழக்கில் ஆந்திரம் வரையிலும் பரவியிருந்தது.
இருப்பினும், அவரது ஆட்சிக்கு உட்பட்ட எல்லாப் பகுதிகளிலும் அவரது கட்டுப்பாடு ஒரே மாதிரியாக இல்லை. புலகேசியின் பேரரசில் மன்னரால் நேரடியாக நிர்வகிக்கப்பட்ட பகுதிகள், அரசப் பிரதிநிதிகள் ஆட்சி செய்த பகுதிகள், சிற்றரசர்களின் வசம் இருந்த பகுதிகள் என்று பல்வேறு ஆட்சிமுறைகளைக் காண முடிகிறது. ஒரு வலிமையான பேரரசர் ஒவ்வொரு பகுதியையும் நேரடியான நிர்வாக இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவரது மேலாதிக்கத்தை மற்ற அரசர்கள் ஏற்றுக்கொள்வதும், திறை செலுத்துவதும், தேவைப்படும் நேரங்களில் படை உதவி அளிப்பதும், அவரது இறையாண்மையை அடையாளபூர்வமாக அங்கீகரிப்பதுமே முக்கியமானதாக இருந்தது. இவை அனைத்தையும் புலகேசி குறிப்பிடத்தக்க வகையில் சாதித்தார்.
அவர் ஏற்றுக்கொண்ட பட்டங்கள் அவரது பேரரசத் தகுதியை வெளிப்படுத்துகின்றன. சத்யாச்ரயன், ஸ்ரீ பிருத்வீ வல்லபன், மகாராஜாதிராஜன், பரமேசுவரன் போன்ற பட்டங்கள் புலகேசியுடன் தொடர்புடையவை. இவை வெறும் அலங்காரச் சொற்களாக இருக்கவில்லை; அவற்றின் பின்னால் ஒரு தெளிவான அரசியல் நோக்கு இருந்தது. தக்காணத்தின் உயரிய ஆட்சியாளராகவும், திருமகளின் அருளைப் பெற்ற அரசராகவும், பூமியின் தலைவனாகவும், தனது காலத்தின் மிகப்பெரிய பேரரசர்களுக்குச் சமமாக நிற்கக்கூடிய மன்னராகவும் புலகேசி தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
ஐஹொளே கல்வெட்டு
ஐஹொளே கல்வெட்டின் இலக்கியச் சிறப்பையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். சாளுக்கியர்களின் பண்பாட்டு மரபிற்கு ஐஹொளே கல்வெட்டு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அது சமணப் புலவரான ரவிகீர்த்தியால் இயற்றப்பட்டது. அந்தக் கல்வெட்டு ஜினரை வணங்கும் மங்கலச் செய்யுளுடன் தொடங்குகிறது. ஒரு சாசனமாக இருந்தாலும் அதில் உள்ள சமஸ்கிருத இலக்கிய நயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அது ஒரு மன்னனைப் புகழும் மெய்க்கீர்த்தியாக மட்டும் அமையவில்லை; சாளுக்கியர்கள் ஒரு பேரரச வம்சமாக எழுச்சி பெற்றதை உலகிற்கு அறிவிக்கும் பிரகடனமாகவும் அமைந்தது. அந்தக் கல்வெட்டு தரும் இன்னொரு முக்கியமான செய்தி மகாபாரதப் போர் நடைபெற்ற காலகட்டத்தை அது குறிப்பிடுவதாகும். கல்வெட்டு வடிக்கப்பட்ட ஆண்டைப் பற்றிக் கூறுகையில் மகாபாரதப் போர் முடிந்து மூவாயிரத்து எழுநூற்று முப்பத்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர் அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகச் சொல்கிறது. இதை வைத்து மகாபாரதப் போர் நடந்த ஆண்டைக் கணிப்பவர்கள் உண்டு.
த்ரிம்ʼஶத்ஸு த்ரிஸஹஸ்ரேஷு பா⁴ரதாதா³ஹவாதி³த:
ஸப்தாப்³த³ஶதயுக்தேஷு க³தேஷ்வப்³தே³ஷு பஞ்சஸு
கலையும் சமயமும்
வெறும் போர் வெற்றிகளால் மட்டுமே புலகேசியின் அரசு முக்கியத்துவம் பெற்றுவிடவில்லை. கலையும் பண்பாடும் இலக்கியமும் சாளுக்கியர் ஆட்சியில் பெரும் பாய்ச்சலைக் கண்டன. பாதாமியில் உள்ள குடைவரைக் கோவில்கள், பட்டடக்கல், ஐஹொளே போன்ற பல இடங்களில் அவர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் என்று சாளுக்கியப் பாணி கோவில் கட்டடக் கலை புலகேசியின் ஆட்சியில் தனித்துவம் பெற்று மிளிர்ந்தது.
புலகேசியின் ஆட்சிக்காலத்தின்போது அவருடைய அரசில் பயணம் செய்த சீன யாத்திரிகரான சுவான்சாங் “மோ ஹோ லா சா” (மகாராஷ்டிரா) வின் அரசர் என்று புலகேசியை அழைக்கிறார். ஹர்ஷரால் இந்த அரசரை வெற்றிகொள்ள முடியவில்லை என்றும் அவர் பதிவுசெய்திருக்கிறார். மிகவும் செழிப்பு மிக்கதாக சாளுக்கிய அரசு இருந்தது என்று குறிப்பிடும் சுவான்சாங், அந்நாட்டின் மக்கள் உயரமாகவும் பெருமிதம் கொண்டவர்களாகவும் அதே சமயம் அன்பானவர்களாகவும் இருந்தனர் என்று குறிப்பிடுகிறார். புலகேசியிடம் இருந்த யானைப்படைகளைப் பற்றி அவர் புகழ்கிறார். போர்களுக்கு முன்னால் யானைகளை மது அருந்தச் செய்வது வழக்கம் என்கிறார் சுவான்சாங்.
மேற்கு நாடுகளுடன் வணிகத் தொடர்பை உறுதிப்படுத்த வேண்டிய காரணத்தால், பாரசீகத்தை அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த சாசானிய அரசுக்கு புலகேசி ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாக, பாரசீக வரலாற்றாசிரியர் அல்-தபரி குறிப்பிடுகிறார். பார்மிஸ் என்று புலகேசியை அழைக்கும் அவர், சாசானியப் பேரரசரின் 26-ஆம் ஆட்சியாண்டில், புலகேசி இரண்டாம் குஸ்ரோவிற்கும் அவரது மகன்களுக்கும் விலைமதிப்புமிக்க பரிசுகளையும் கடிதங்களையும் அனுப்பினார் என்கிறார். இந்தத் தூதுக்குழுவின் பயணம் பொயு 625-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையே நிலவிய நல்லுறவு, பாரசீகத்தில் ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட ஜரதுஷ்டிர சமயத்தைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவுக்கு இடம்பெயர்வதற்கும் ஊக்கமளித்தது. அவர்கள் தக்காணத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் குடியேறி, பார்சி சமூகத்தை நிறுவினர்.
சமயத்தைப் பொருத்தவரை, புலகேசி வைணவத்தையே பின்பற்றினார். லோனெர் சாசனங்களில் அவர் தம்மை பரம பாகவதராக அடையாளப்படுத்திக்கொள்கிறார். பிம்பல்னேர் செப்பேடுகளில் அவர் விஷ்ணுவின் வழிவந்தவராகப் புகழப்படுகிறார். இருப்பினும் ஹிந்து சமயத்தின் மற்றப் பிரிவுகளையும் இந்திய சமயங்களான சமணத்தையும் பௌத்தத்தையும் அவர் ஆதரித்தார். வாதாபியில் உள்ள சிவன் கோவில்கள் அவரது ஆட்சிக்காலத்திலேதான் கட்டப்பட்டன.
பல்லவர்களுடன் போர்
இப்படிப் பல துறைகளிலும் கால்பதித்து பெருவீரராக விளங்கிய புலகேசி, திசை நான்கிலும் சென்று வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையினால் தென் திசை நோக்கி தனது படையைச் செலுத்த விரும்பினார். அப்போது தமிழகத்தின் வட பகுதியை பல்லவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். மகேந்திரபல்லவர் அரசராக இருந்தார். மகாவீரராக இருந்தாலும் மகேந்திரவர்மர் போர்களில் விருப்பமில்லாதவராக இருந்தார். ஆதலால், பெரும் படையுடன் சாளுக்கியர்கள் வந்ததைக் கண்ட மகேந்திரர், காஞ்சி நகரின் கோட்டைக் கதவுகளை அடைத்து புலகேசியின் படைகள் உள்ளே வரமுடியாமல் தடுத்துவிட்டார். ஐஹொளே கல்வெட்டு இதை “நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் சாமரங்களையும் பிடித்துக்கொண்டு புலகேசியின் படைகள் சென்றன. அப்போது கிளம்பிய தூசி எதிர்க்க வந்த பல்லவ அரசனின் ஒளியை மயங்கச் செய்தது. புலகேசியின் பெரும் படைக்கடலைக் கண்ட பல்லவன் காஞ்சிக்கோட்டையில் ஒளிந்து கொண்டான்” என்று கூறுகிறது. காஞ்சி முற்றுகையில் கிடைத்த வெற்றியை அடுத்து புலகேசியின் படைகள் தெற்கு நோக்கிச் சென்றன. திருச்சிக்கு அருகில் காவிரியாற்றின் குறுக்கே யானைகளால் பாலம் அமைத்தார் புலகேசி என்றும் அதனால் காவிரியின் நீரோட்டம் தடைபட்டது என்றும் ஐஹொளே கல்வெட்டு புகழ்கிறது. தவிர, தமிழ் மன்னர்களான சோழர்களையும் கேரளர்களையும் பாண்டியர்களையும் புலகேசி கௌரவம் அடையச் செய்தார் என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. பல்லவர்களுக்கு எதிரியாக இருந்த இந்த மூன்று மன்னர்களையும் கௌரவித்ததன் மூலம் எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற கொள்கையைப் புலகேசி கடைப்பிடித்ததாகத் தெரிகிறது.
அதன்பின் தன்னுடைய தலைநகரம் நோக்கித் திரும்பிய புலகேசிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. புள்ளலூர் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக பல்லவர்களின் படை அவர்களைத் தாக்கியது. காசக்குடிச் செப்பேடுகள் மகேந்திரபல்லவர் தன்னுடைய எதிரியை புள்ளலூரில் அழித்தார் என்று புகழ்கிறது. திரும்பும் வழியில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத தோல்வியால் மனந்தளர்ந்த புலகேசி வாதாபிக்குச் திரும்பிச் சென்றார். ஆனால், தனது தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டி சில ஆண்டுகளிலேயே மீண்டும் காஞ்சி நோக்கிப் படையெடுத்தார். அப்போது மகேந்திரரின் புதல்வரான நரசிம்ம பல்லவர் காஞ்சியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இம்முறை புலகேசியை எதிர்க்க பல்லவர்களின் படைகள் தயாராக இருந்தன. மணிமங்கலம் என்ற இடத்தில் சேனாதிபதி பரஞ்சோதியின் தலைமையிலான பல்லவப் படைகளுக்கும் சாளுக்கியப் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. இதில் பல்லவர்கள் வெற்றி பெற்றனர். தோற்று ஓடிய சாளுக்கியர்களை பரியலம், சூரமாரம் ஆகிய இடங்களிலும் சண்டையிட்டு ஜெயித்த பல்லவர்கள், தோற்றுத் திரும்பிய சாளுக்கியர்களைத் துரத்திச் சென்றனர்.
சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி வரை சென்று அங்கே நடந்த போரில் சாளுக்கியப் படையை முற்றிலுமாக அழித்து புலகேசியையும் போரில் வீழ்த்தின பல்லவப் படைகள். போரில் புலகேசி வீரமரணம் அடைந்ததை அடுத்து, மக்கள் அவருக்கு அங்கே கோவில் ஒன்றை எடுப்பித்ததாகத் தெரிகிறது. பாதாமியில் உள்ள ஸாபராபடி என்ற குகையில் உள்ள கன்னடக் கல்வெட்டு,
ஸ்வஸ்தி| ஸத்யாஶ்ரயமஹாராஜரா ப்ராஸாதம்| கெய்தோர்
மஹாஜனமும்மீ பிலமான் ரணகேஸறெயர்கெ
என்று அந்தக் குகையை சத்ராச்ரய மகாராஜாவின் பெயரில் ஊர்மக்கள் எடுப்பித்தனர் என்று கூறுகிறது.
தன்னுடைய கடைசிப் போரில் தோல்வியடைந்தாலும் புலகேசி ஒரு மிகச்சிறந்த அரசர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. கல்கி போன்ற நாவலாசிரியர்கள் வரலாற்றுப் புதினத்திற்காக அவரைக் கொடூரமான வில்லன் போலச் சித்தரித்தாலும், இந்திய வரலாற்றின் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய நாயகராகவே புலகேசி திகழ்கிறார். அவரால் உச்சத்திற்குச் சென்ற சாளுக்கிய வம்சம் மேலும் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்து, இந்தியாவில் நீண்டகாலம் அதிகாரம் செலுத்திய மிக முக்கிய வம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.
(தொடரும்)

