இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியை அளித்த தந்தை – மகன்களில் சமுத்திரகுப்தர் – இரண்டாம் சந்திரகுப்தருக்கு அடுத்தபடியாக காலவரிசைப்படி வருவது மகேந்திரபல்லவரும் அவரது மைந்தரான நரசிம்ம பல்லவரும் என்று உறுதியாகச் சொல்லலாம். நரசிம்மவர்மருடைய பிறப்பைக் குறித்து, கூரம் செப்பேடுகள் “உதயகிரியிலிருந்து தோன்றும் சூரிய சந்திரர்களைப் போன்றவர் (ஸோமாதித்யர்) அவர்” என்று குறிப்பிடுகிறது. இதை வைத்து அவருக்கு ஸோமாதித்யர் அல்லது சந்திராதித்யர் என்ற பெயர் இருந்திருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செஞ்சிக்கு அருகில் மேலைச்சேரி என்ற குடைவரைக் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று “சிம்மபுரத்தில் ஶ்ரீகரி பல்லவேஸ்வரம் என்ற இந்தச் சிவனின் இருப்பிடத்தை எல்லாருக்கும் தலைவனான சந்திராதித்யன் என்பவன் செய்வித்தான்” என்று கூறுகிறது. இதை வைத்து அந்தக் கோவில் நரசிம்மவர்மனான் ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவர்.
மகேந்திரபல்லவரின் ஆட்சி சிறந்ததாக இருந்தாலும் போர்களில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதைப் பார்த்தோம். ஆனால் நரசிம்மவர்மர், இளவயதிலிருந்தே வீரவிளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக இருந்தார். குறிப்பாக மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதால் மாமல்லர் என்ற பெயரையும் பெற்றார். கூரத்தில் உள்ள ஒரு கல்வெட்டு “ஶ்ரீ பல்லவ மாராசன் மாமல்லன்” என்று அவரைப் புகழ்கிறது.
பொயு 630ம் ஆண்டு அவர் பல்லவ அரசராகப் பொறுப்பேற்றார். வீரத்தில் நரசிம்மர் சிறந்து விளங்கியதால், மகேந்திரபல்லவருக்கு அடுத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் வடக்கிலிருந்து வந்த படையெடுப்பைச் சமாளிப்பது அவருக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை.
வாதாபி வெற்றி
முதலில் வெற்றியடைந்தாலும் நாடு திரும்பும்போது பல்லவப் படையால் தாக்கப்பட்டுத் திக்குமுக்காடி நாடு திரும்பிய இரண்டாம் புலகேசி, அந்த அவமானத்திற்குப் பழி வாங்கும் வகையில் மீண்டும் ஒரு படையெடுப்பிற்காக ஆயத்தம் செய்தார். நரசிம்ம பல்லவரின் படைத்தலைவராக அப்போது இருந்தவர் பின்னாளில் சிறுத்தொண்டர் என்று புகழ்பெற்று விளங்கிய சிவனடியாரான பரஞ்சோதி என்பவர். வருகின்ற பகைவர் படையெடுப்பைச் சமாளிக்க இந்த முறை பல்லவப் படைகள் ஆயத்தமாக இருந்தன. ஆனால் பல்லவர்களின் வழக்கமான போர்தந்திரத்தை, அதாவது பகைவர் படையை நன்றாக உட்புகவிட்டு எதிர்பாராத இடத்தில் அவர்களைத் தாக்குவது என்ற வியூகத்தை நரசிம்மவர்மரின் படைகளும் கையாண்டன. பல்லவ சாளுக்கியப் படைகளுக்கு எதிரான முதற்போர் மணிமங்கலம் என்ற இடத்தில் நடந்ததாக கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. இந்த மணிமங்கலம் தற்போது ஶ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள இடமாகும். அங்கே நடந்த போரில் படுதோல்வியடைந்த சாளுக்கியப் படைகள், மீண்டும் தங்களது தலைநகரான வாதாபி நோக்கித் திரும்பச் சென்றன.
இந்த முறை விடாமல் பல்லவப் படைகளும் அவர்களைத் துரத்தின. இரு படைகளுக்கும் இடையே மீண்டும் சூரமாரம் என்ற இடத்தில் போர் நடந்தது. இந்த சூரமாரம் என்ற இடம், அனந்தபூருக்கு அருகில் இருந்திருக்கவேண்டும். இந்த இடத்திலும் பல்லவப் படைகளே வெற்றியடைந்தன. மீண்டும் புறமுதுகிட்டோடிய சாளுக்கியப் படைகளை விரட்டிச் சென்ற பல்லவப் படை, பரியளம் என்ற இடத்தில் சந்தித்து மீண்டும் ஒருமுறை சாளுக்கியர்களைத் தோற்கடித்தது. இந்தப் பரியளம் கர்நூலுக்கு அருகே உள்ள பரியளு என்ற இடமாக இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் செய்தியைச் சொல்லும் கூரம் செப்பேடுகள் “நரசிம்மவர்மன் பரியளம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் புலகேசியை தோற்கடித்து ஓடச்செய்து ஒவ்வொரு தடவையும் அவன் முதுகான பட்டயத்தில் வெற்றியைக் குறிக்கும் எழுத்துகளை எழுதினான்” என்று வர்ணிக்கிறது. அதற்குப் பிறகு வாதாபியை அடைந்த புலகேசியின் படைகளை தலைநகருக்கு அருகிலேயே போரிட்டுத் தோற்கடித்து வாதாபியை அழித்தான் நரசிம்மவர்மன் என்றும் அந்தச் செப்பேடுகள் புகழ்கின்றன. இந்தப் போர் பொயு 642ம் ஆண்டு நடைபெற்றது.
ஒரு நாட்டின் மீது படையெடுத்து அதை வெற்றிகொள்வதும் பகைவர் தன்னுடைய நாட்டின் மீது படையெடுத்து வந்தால் அவரைத் தோற்கடித்துத் துரத்துவதும் வரலாற்றில் சாதாரணமான நிகழ்வுகள். ஆனால் படையெடுத்து வந்த எதிரி நாட்டு அரசனை, துரத்திச் சென்று அவனது நாட்டிலேயே அழித்து வெற்றிவாகை சூடுவது என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஒரு சாதனையைச் செய்தவர் நரசிம்மவர்மர். அதற்குப் பெரும் துணை செய்தவர் பல்லவ சேனாதிபதியான பரஞ்சோதி. சேக்கிழார் தமது பெரிய புராணத்தில்,
மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாத் துளை நெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்
என்று பரஞ்சோதி எண்ணிலாச் செல்வங்களை வாதாபியிலிருந்து எடுத்து வந்து நரசிம்மவர்மரிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிடுகிறார். பல்லவர்களுடைய உதயேந்திரம் செப்பேடுகள் “(வாதாபி என்னும் அசுரனை அழித்த) அகத்தியரைப் போல வாதாபியை அழித்தவனும் பரியளம், சூரமாரம், மணிமங்கலம் போன்ற போர்க்களங்களில் வல்லப அரசனை பல தடவைகள் வெற்றி கொண்ட நரசிம்மவர்மன்” என்று நரசிம்மவர்மரின் வெற்றியைப் புகழ்கிறது.

இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் வாதாபியில் ஒரு ஜெயஸ்தம்பம் ஒன்றை நாட்டி அதில் கல்வெட்டு ஒன்றையும் பொறித்துவைத்தார் நரசிம்மவர்மர். கொஞ்சம் சிதைந்துபோன அந்தக் கல்வெட்டில் “பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவரும் சிம்மத்தைப் போன்றவருமான மாமல்லர், வாதாபியை வெற்றிகொண்டு இந்த ஜெயஸ்தம்பத்தை நட்டுவித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வாதாபி வெற்றியின் காரணமாக “வாதாபி கொண்டான்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் நரசிம்மவர்மர்.
கங்கர்களுடன் போர்
வாதாபி வெற்றிக்குப் பிறகு, நரசிம்மவர்மன் கங்கர்களோடு போர் செய்து அவர்களையும் வெற்றி கொண்டான் என்று தெரிகிறது. கூரம் செப்பேடுகள் “அவிநதன் போன்ற அரசர்களின் கூட்டத்திற்கு வஜ்ஜிராயுதம் போன்றவன்” என்று நரசிம்மவர்மரைப் பற்றிப் புகழ்கிறது. இந்த அவிநதன் கங்க வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும். கங்கர்களுக்கும் பல்லவர்களுக்கும் மகேந்திரவர்மன் காலத்திலிருந்தே இருந்து வரும் பகைமையின் தொடர்பாகவே இந்தப் போரும் நிகழ்ந்திருக்கலாம்.
அடுத்ததாக நரசிம்மவர்மர் சேர, சோழ, பாண்டியர்களை வெற்றி கொண்டதாக சாசனங்கள் கூறுகின்றன. இது வெறும் புகழ்ச்சியாகவே இருக்கக்கூடும். ஏனெனில், அக்காலத்தில் பாண்டிய மன்னர்களோடு பல்லவர்கள் மண உறவு கொண்டது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் போர்களிலும் உதவி புரிந்ததாகவே தெரிகிறது. ஆயினும் பின்னால் வந்த இரு அரச வம்சத்தினருடைய சாசனங்கள் அவர்கள் ஒருவரையொருவர் போரில் வெற்றி கொண்டதாகத் தெரிவிக்கின்றன. இது பிற்காலத்தில் ஏற்பட்ட பல்லவ பாண்டிய பகையை நியாயப்படுத்துவதாக இருக்கக்கூடுமே அன்றி சம காலத்தில் ஏற்பட்டதல்ல.
இலங்கைப் போர்
நரசிம்மவர்மருடைய வாதாபி வெற்றியைப் பற்றிக் கூறும் சாளுக்கியர்களுடைய கர்நூல் சாசனம் “இரண்டாம் புலகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்ற”தாகக் கூறுகிறது. இதில் ஒருவர் நரசிம்மவர்மர், மற்றவர் பல்லவர்களின் கிளை வந்த அரச மரபினர் ஒருவராக இருக்கக்கூடும். இதில் கூறப்படும் மூன்றாவது அரசர் இலங்கை அரசர் மானவர்மர் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. இதைப் பற்றி இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்த மகாவம்சம் “மானவன்மன் என்ற இலங்கை அரசன் பகைவனால் பட்டம் இழந்து நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்தான். இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அதனால், புலகேசி பல்லவ நாட்டின் மீது படையெடுத்தபோது, மானவன்மனிடம் காஞ்சியைக் காக்கும் பொறுப்பை விட்டுவிட்டு நரசிம்மன் போர்க்களம் சென்றான். ஆனால் தன் நண்பன் தனியே போர்க்களம் சென்று பலமான எதிரி ஒருவனோடு போர் புரிவதைக் காணச் சகிக்காத மானவன்மன் பெரும் படையோடு சென்று புலகேசியைத் தாக்கினான். அவனைத் தோற்கடிப்பதில் நரசிம்மனுக்குப் பேருதவி புரிந்தான்” என்று கூறுகிறது. இந்த மானவன்மன் தமிழகம் வந்த வரலாறு என்ன ?
இலங்கை அரசுக்கு உரியவனான மானவன்மன் பட்டத்திற்கு வந்தபோது, அட்டதத்தன் என்பவனால் அவன் தோற்கடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டான். அதன்பின்தான் வாதாபிப் போர் நடந்தது. இந்தப் போர் வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மர் மானவன்மனுக்கு உதவ வேண்டி, ஒரு பெரும்படையை கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இந்தப் படை முதலில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து நடந்த போர்களில் தோல்வியடைந்தது. எனவே மானவன்மன் மீண்டும் காஞ்சிபுரத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.
ஆனால், சற்றும் மனம் தளராத நரசிம்மவர்மர், மீண்டும் ஒரு பெரும் படையைத் திரட்டி தானே நேராக மாமல்லபுரம் துறைமுகத்திற்குச் சென்றார். கப்பலிலும் ஏறி, தானே போர்முகம் செல்வதாக படை வீரர்களை நம்பும்படி செய்தார். ஆனால், அவர் இலங்கை செல்லவில்லை. இருப்பினும் தன் அரசரே தம்மோடு வருவதாக நம்பிய பல்லவ வீரர்கள் போர்க்களத்தில் பெரும் வீரத்தைக் காட்டி இலங்கைப் படைகளைத் தோற்கடித்தனர். மானவன்மன் மீண்டும் இலங்கை அரியணையில் ஏறினான். தமிழக அரசர் ஒருவர் இலங்கையில் அடைந்த முதல் பெரும் வெற்றி இதுவாகும்.
சுவான்சங்கின் குறிப்புகள்
நரசிம்மவர்மரின் காலத்தில் பல்லவ நாடு வந்த சீன யாத்திரிகரான சுவான்சங் நாட்டின் நல்ல நிலையைப் பற்றி சிலாகித்து குறிப்பு எழுதியிருக்கிறார். பல்லவ நாட்டின் நிலம் செழிப்பாக இருப்பதாகவும் நாடு வெப்பமாக உள்ளதாகவும் அங்கே வசித்த மக்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் இருந்தனர் என்று சுவான்சங்கின் குறிப்புக் கூறுகிறது. “இந்த நாட்டில் 100 சங்கிராமங்கள் இருக்கின்றன. பதினாயிரம் பௌத்தத் துறவிகள் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணக் கோவில்கள் 80க்கும் மேற்பட்டவை உள்ளன. புத்தர் காஞ்சிக்கு வந்து பலரை புத்தமதத்திற்கு மாற்றியதாக இங்கே கூறப்படுகிறது…” என்ற குறிப்புகளையும் அவர் எழுதியிருக்கிறார். காஞ்சி நகரின் கல்விச்சிறப்பையும் கடல் வணிகச் சிறப்பையும் சுவான்சங் எழுதியிருக்கிறார்.
நரசிம்மவரின் கோவில்கள்
ஆட்சியில் பெரும்பகுதியை போர்களில் கழித்தாலும் நரசிம்மவர்மரும் தன் தந்தையைப் போலவே கலைகளில் விருப்பமுள்ளவராக இருந்தார். தன் தந்தையைத் தொடர்ந்து அவரும் பல கோவில்களைக் கட்டினார். அவர் பெயரால் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்தில் உள்ள பல கோவில்கள் அவரால் கட்டப்பட்டதாகும். குறிப்பாக ஒற்றைக் கல்லில் குடையைப்பட்ட ரதக்கோவில்களை நரசிம்மவர்மர் அமைத்தார். இவருடைய குகைக்கோவில்களில் மாமல்லருடைய விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். “மகாமல்லன், ஶ்ரீபரன், ஶ்ரீநிதி, நய நாங்குரன்” ஆகிய சிறப்புப் பெயர்கள் இவருடையதாகும். நரசிம்மவர்மரின் கோவில்களின் முன்மண்டபச் சுவர்களில் பல வேலைப்படுகள் காணப்படும். மகேந்திர வர்மரின் கோவில்களில் பெரிய சதுரவடிவத் தூண்கள் இருக்கும். ஆனால் நரசிம்மவர்மரின் கோவில்கள் உள்ள தூண்கள் உருண்டையாக இருக்கும். பல இடங்களில் சிங்கங்கள் தூண்களைத் தாங்கி நிற்பது போன்று செதுக்கப்பட்டு இருக்கும்.
கோவில்களைக் கட்டியது மட்டுமல்லாமல் பல கோவில்களுக்கும் நிவந்தங்கள் அளித்தவர் நரசிம்மவர்மர். திருக்கழுகுக்குன்றத்தில் உள்ள குகைக்கோவிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு,
“ஸ்ரீதிருக்கழுக்குன்ற நாட்டு பெருமான
டிகளுக்கு களத்தூர் கோட்டத்
து தன் கூற்று திருக்கழுக்குன்ற
த்து ஸ்ரீமலை மேல்
மூல தானத்துப் பெருமானடிகளுக்கு
வழிப்பாட்டுப் புற
மாக வாதாபி கொண்ட நரசிங்கப்
போத்தரசர் வய்த்தது.”
என்று அவர் அளித்த நிவந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இவற்றைத் தவிர நாடு முழுவதிலும் பல கோட்டைகளையும் நரசிம்மவர்மர் கட்டினார். காஞ்சிபுரம், மாமல்லபுரம், பெருவளநல்லூர் ஆகிய இடங்களில் இவர் கோட்டைகளைக் கட்டியதாகக் கூறுவது உண்டு.
தந்தைக்கு ஏற்ற மகனாக, தந்தையை விட பல அருஞ்செயல்கள் செய்த நரசிம்மவர்மரின் புகழ் மாமல்லபுரம் இருக்கும் வரை இங்கே நிலைத்து இருக்கும்.
(தொடரும்)

