Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பாரதத்தின் வரலாற்றில் போஜன் என்ற பெயரை உடைய பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிறந்த ஆட்சியையும் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட போஜர்களில் ஒருவரான மிஹிர போஜர், கூர்ஜர பிரதிஹார வம்சத்தில் தோன்றிய அரசராவார். இந்தியாவின் இடைக்கால வரலாற்றை வடிவமைத்த பேரரசர்களில் மிஹிர போஜருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஆனால், அவர் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றை ஆட்சி செய்திருந்தாலும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு வெளியே அதிகம் அறியப்படாதவராகவே இருக்கிறார்.

அவரது ஆட்சி, கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நிலவிய குழப்பங்களுக்குப் பிறகு, வட இந்தியாவில் மீண்டும் அரசுகள் ஆட்சித்திறனை நிலைநிறுத்திய காலமாகும். தனது படைபலம், நிர்வாகத் திறன், அரசியல் நுண்ணறிவு ஆகியவற்றின் மூலம் மிஹிர போஜர் கூர்ஜர பிரதிஹார அரசை வட இந்தியாவின் முதன்மை அரசாக மாற்றினார்.

அவரது சிறப்பு வெறும் பேரரசு விரிவாக்கத்தில் மட்டும் இல்லை. பாலர்கள் கிழக்கிலும், ராஷ்டிரகூடர்கள் தெற்கிலும், அரேபிய ஆட்சியாளர்கள் சிந்தியிலும் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில், மிஹிர போஜர் வட இந்தியாவின் பெரும்பகுதியில் பிரதிஹாரர்களின் அரசை நிலைநிறுத்தியதோடு, சிறந்த நிர்வாகம், செழிப்பான பொருளாதாரம் ஆகியவற்றின் மூலம் மக்களுக்கு நல்லாட்சியையும் தந்தார். அதே நேரத்தில், அரேபியர்களின் படையெடுப்புகளைத் தடுத்து நிறுத்தி பாரதத்தை அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உட்படாமல் தடுத்தார். ஆகவே, அவரது ஆட்சி கூர்ஜர பிரதிஹாரப் பேரரசின் பொற்காலமாகவும், இடைக்கால இந்திய வரலாற்றின் முக்கிய அத்தியாயமாகவும் விளங்குகிறது. அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர், கூர்ஜர பிரதிஹாரர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

கூர்ஜர பிரதிஹாரர்கள்

ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனரின் மறைவிற்குப் பிறகு வட இந்தியாவில் வலிமையான ஆட்சி எதுவும் உருவாகவில்லை. பல சிறிய அரசுகள் ஆதிக்கத்திற்காகப் போட்டியிட்டன. இதனுடன், பொயு 712-இல் சிந்துப் பிராந்தியத்தை அரேபியர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, வடமேற்கிலிருந்து புதிய அச்சுறுத்தலும் உருவானது.

இந்தச் சூழலில் கூர்ஜர பிரதிஹாரர்கள் எட்டாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றனர். இவர்களின் தோற்றத்தைப் பற்றிப் பல விதமான சர்ச்சைகள் உண்டு. கூர்ஜரம் என்பது குஜராத்தைக் குறிக்கும் என்பதால், அங்கிருந்து வந்தவர்கள் இவர்கள் என்றும் பிரதிஹாரர் என்பது இவர்களுடைய குலப்பெயர் என்றும் கூறுவதுண்டு. ஆனால் கூர்ஜரர் என்பதே குலப்பெயர் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வம்சத்தினர் தங்களை ராமனின் சகோதரனான லட்சுமணனின் வம்சத்தில் வந்தவர்களாகச் சொல்லிக்கொள்கின்றனர். ராமனுடைய வனவாசத்தின்போது வாயில் காப்பாளனாக இருந்ததால், அந்தப் பெயரைக் கொண்டு ‘பிரதிஹாரன்’ என்ற பெயர் தங்களது வம்சத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் இவர்களை அந்நிய நாட்டிலிருந்து வந்ததாகவும் கூறுகின்றனர். ஹூணர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிகளைப் பிடித்துக்கொண்ட காலத்திற்குப் பிறகு, இவர்கள் எழுச்சி பெற்றதால் இவர்களும் ஹூணர்களுடைய கிளையில் வந்தவர்களே என்று சொல்வதுண்டு. இல்லை, இவர்கள் இந்தியர்கள்தான். பல அரசவம்சங்களின் தோற்றம்போல, அக்கினியிலிருந்து உருவானவர்கள்தான் பிரதிஹாரர்கள் என்றும் பல நூல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வம்சத்தின் முதல் அரசரான நாகபட்டர், மாளவத்தையும் குஜராத்தையும் வென்று தனது ஆட்சியை நிலைநிறுத்தினார். அதன்பின், சிந்துப் பகுதியைப் பிடித்துக்கொண்டிருந்த அரேபியர்களின் மீது தாக்குதல் நடத்தி அவர்களைத் தோற்கடித்தார். “மிலேச்சர்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளான மக்களைக் காப்பதற்காக விஷ்ணுவைப்போல அவதரித்தவர் நாகபட்டர்” என்று மிஹிர போஜரின் சாசனம் ஒன்று கூறுகிறது. அவரை அடுத்து வந்த அரசர்களில் வத்ஸராஜர் என்பவர் வங்காளத்தின்மீது படையெடுத்துச் சென்று பால அரசர்களைத் தோற்கடித்தார். லலிதாதித்ய முக்தாபிதருக்குப் பிறகு சரியான அரசர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த கன்னோஜையும் வென்று அதனைத் தங்கள் அரசுடன் இணைத்துக்கொண்டார் வத்ஸராஜர்.

மும்முனைப் போட்டி

அதன்பின் வட பாரதத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, பிரதிஹாரர்களும், பாலர்களும், ராஷ்டிரகூடர்களும் கடும் போட்டியில் ஈடுபட்டனர். இந்த மும்முனைப் போட்டியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி இந்த அரசர்களுக்குக் கிடைத்தது. ராஷ்டிரகூட அரசர் துருவன், வத்ஸராஜரைத் தோற்கடித்தார். வத்ஸராஜருக்குப் பிறகு அரசாண்ட இரண்டாம் நாகபட்டர், ராஷ்டிரகூட அரசரான மூன்றாம் கோவிந்தரால் முதலில் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் அடுத்து நடந்த போர்களில் அவருக்கே வெற்றி கிடைத்தது. மேற்கிலிருந்து வந்த அரேபியர்களையும் தோற்கடித்து, அவர்களால் இடிக்கப்பட்டிருந்த சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் எழுப்பினார் நாகபட்டர். ஆனாலும் பாலர்களுடனும் ராஷ்டிரகூடர்களுடனுமான அவரின் போராட்டம் தொடர்ந்தது. இத்தகைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில்தான் மிஹிர போஜர் அரியணை ஏறினார்.

மிஹிர போஜர்

முதலாம் போஜர் என்று அழைக்கப்படும் மிஹிர போஜர், இரண்டாம் நாகபட்டரின் பேரன். பொயு 836-ஆம் ஆண்டில் அவர் அரியணை ஏறியபோது, பேரரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. பொது எதிரிகளான ராஷ்டிரகூடர்களையும் பாலர்களையும் தவிர, உள்நாட்டுச் சிக்கல்களையும் அவர் சந்திக்க நேரிட்டது. அவரது சிற்றரசர்கள் பலர் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி, கலகம் செய்யத் தொடங்கினர். ஆகவே இந்த உள்நாட்டுச் சிக்கலைத் தீர்க்க முதலில் மிஹிர போஜர் முயன்றார். அதில் பெருமளவு வெற்றியும் கண்டார். அதன்பின், அவர் ராஷ்டிரகூடர்களையும் பாலர்களையும் எதிர்த்து வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தினார்.

போர் வெற்றிகள்

ராஷ்டிரகூடர்களின் குஜராத் கிளையில் அப்போது வாரிசுரிமைப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அரசுக்காக இரண்டாம் துருவனும் அவரது தம்பியும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சண்டையில் தலையிட்ட மிஹிர போஜர், துருவனுக்கு எதிராகவும் அவருடைய தம்பிக்கு ஆதரவாகவும் ஒரு படையை அனுப்பினார். அந்தப் படை குஜராத்தின் பல பகுதிகளை வென்றது. ஆனாலும் இரண்டாம் துருவனால் தோற்கடிக்கப்பட்டது.

இருப்பினும், தான் வென்ற பகுதிகளை ராஷ்டிரகூடர்களுக்குத் திரும்பத் தராமல், போஜர் தனது ஆட்சியை அங்கே நிலைநிறுத்தினார். அதன்பின், வட இந்தியாவை ஆட்சி செய்த பல சிற்றரசுகளைத் தோற்கடித்துத் தன் அரசை அவர் விரிவு படுத்தினார். ஆர்யதேசம், குஜராத்ரம், லாட தேசம், த்ராவணி, வல்லம் ஆகியவை அவரது ஆட்சியை ஏற்றுக்கொண்டன. அதன்பின் பஞ்சாப்மீது படையெடுத்துச் சென்று அங்கேயிருந்த ஆட்சியாளர்களையும் அவர் வீழ்த்தினார். போஜரின் அரசு கஷ்மீர் வரை பரவி இருந்ததாக ராஜதரங்கிணியில் கல்ஹணர் குறிப்பிடுகிறார்.

வடக்கில் தனக்குக் கிடைத்த வெற்றிகளால் மகிழ்ந்த மிஹிர போஜர், தனது கவனத்தைக் கிழக்குத் திசையில் திருப்பினார். அப்போது வங்களாத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த நாராயண பாலரைத் தோற்கடித்து, கிழக்கில் தனது அரசை கோரக்பூர் வரை விரிவுபடுத்தினார். ஆனால் அடுத்ததாக ராஷ்டிரகூட அரசர் இரண்டாம் கிருஷ்ணரை போர்க்களத்தில் அவர் சந்திக்க நேரிட்டது. அந்தப் போரில் போஜர் தோல்வியடைந்தார். இருந்தாலும் விரைவிலேயே குஜாரத்தின்மீது படையெடுத்துச் சென்று அங்குள்ள ராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்து குஜராத் ராஷ்டிரகூடர்களின் கிளையை நிர்மூலமாக்கினார்.

அரேபியர்களுடனான போர்

கூர்ஜர பிரதிஹாரர்களின் மிகப் பெரிய வரலாற்றுப் பங்களிப்புகளில் ஒன்று, அரேபியர்களின் விரிவாக்கத்தைத் தடுத்ததுதான். சிந்து மாகாணத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அரேபியர்களின் ஆளுநரான இம்ரான் மூசா, குஜராத் பிரதேசத்திற்குள் நுழைய பல முறை முயன்றார். ஆனால் மிஹிர போஜரால் அவர் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டார். இதனால் கட்ச் பகுதியை விட்டு அரேபியர்கள் வெளியேறவேண்டியதாயிற்று. பொயு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நூலான ஹுதூத் அல்-ஆலம் (Hudud-ul-Alam), இந்தியாவின் பெரும்பாலான அரசர்கள் கன்னோஜின் வலிமைமிக்க அரசரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறது. கன்னோஜ், கூர்ஜர பிரதிஹாரர்களின் தலைநகரமாக விளங்கியது. மேலும், அந்த மன்னரின் வல்லமைமிக்க இராணுவத்தில் 1,50,000 குதிரைப்படை வீரர்களும், 800 போர்யானைகளும் இருந்ததாக அந்நூல் பதிவு செய்கிறது. அதன்பின், அவரது ஆட்சிக்காலத்தில் பெரிய அளவிலான அரேபிய படையெடுப்பு எதுவும் நடைபெறவில்லை.

மேற்கு ஆசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் இஸ்லாமிய விரிவாக்கம் வேகமாக நடந்துகொண்டிருந்த காலத்தில், மிஹிர போஜரால் இந்தியாவின் வடமேற்கு எல்லை உறுதியாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் நீண்ட தனது ஆட்சியில், மிஹிர போஜர் கூர்ஜர பிரதிஹார அரசை வட இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாற்றினார்.

அவரது ஆட்சி இன்றைய ராஜஸ்தான், குஜராத், மால்வா, புந்தேல்கண்ட், கங்கை சமவெளியின் பெரும்பகுதி ஆகிய இடங்களுக்கு விரிந்திருந்தது. குவாலியர் கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுகள், மிஹிர போஜரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பல சிற்றரசர்களைப் பற்றியும், அவரின் வலிமையையும் பதிவு செய்கின்றன. அவை அளிக்கும் அரசியல் தகவல்கள் அரேபியப் பயணிகளின் குறிப்புகளாலும் பிற அரசுகளின் கல்வெட்டுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அரேபியப் பயணி சுலைமானின் குறிப்புகள்

மிஹிர போஜரின் ஆட்சியைப் பற்றிய முக்கியமான சமகாலச் சான்றுகளில் ஒன்று, ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியா வந்த அரேபிய வணிகரும் பயணியுமான சுலைமானின் குறிப்புகளாகும். அவர் பிரதிஹார மன்னரை இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராகப் புகழ்கிறார். இந்தியாவில் அவரைப்போல வலிமையான குதிரைப்படையை உடைய மன்னர் யாருமில்லை என்றும், அவரது நாட்டில் பாதுகாப்பும் செழிப்பும் சிறப்பாக இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். மேலும், அரேபியர்களுக்கு மிகவும் வலிமையான எதிரியாக அவர் இருந்ததாகவும் எழுதுகிறார்.

படைபலம்

மிஹிர போஜரின் வெற்றியின் அடித்தளம் அவரது வலிமையான படையாகும். ஆட்சியின் துவக்க காலத்திலிருந்தே அவர் தனது படையை மிகச்சிறந்த ஒன்றாக ஆக்குவதற்குப் பெரிதும் உழைத்தார். குறிப்பாக பிரதிஹாரர்களின் குதிரைப்படை இந்தியா முழுவதும் புகழ்பெற்றது. மேற்கு, வடக்கு ஆகிய பகுதிகளின் புவியியல் அமைப்பு வேகமான குதிரைப்படையை அவசியமாக்கியது. இதனால் விரிந்த எல்லைகளை விரைவாகப் பாதுகாக்கும் திறனை அவர்கள் பெற்றிருந்தனர். குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை இவற்றோடு சிற்றரசர்களின் படைகள் இணைந்து பேரரசின் படை வலிமையை உயர்த்தின.

நிர்வாகம்

மிஹிர போஜர் தனது பேரரசை மத்திய அரசும் உள்ளூர் தன்னாட்சியும் இணைந்த ஒரு நிர்வாக அமைப்பின்மூலம் ஆட்சி செய்தார். மாநிலங்கள் ஆளுநர்களாலும், நம்பகமான சிற்றரசர்களாலும் நிர்வகிக்கப்பட்டன. அவர்கள் பேரரசரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு திறை செலுத்தினர். தேவைப்படும்போது படைகளை அரசருக்கு உதவியாக வழங்கினர். கிராம சபைகள் உள்ளூர் நிர்வாகத்தை மேற்கொண்டன. நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. எல்லா அதிகாரமும் மையத்தில் குவிக்கப்படாத இந்த நிர்வாக முறை, மிகப் பெரிய பேரரசை நீண்டகாலம் நிலைநிறுத்த உதவியது.

பொருளாதாரமும் வணிகமும்

பொருளாதாரத்தைப் பொருத்தவரை, விவசாயமே பேரரசின் பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்தது. கங்கை சமவெளியின் வளமான நிலங்கள் பொருளாதாரத்திற்கும், படைச் செலவுகளுக்கும் உறுதுணையாக இருந்தன.

மேற்கிலுள்ள துறைமுகங்கள் உள்நாட்டு வணிகப் பாதைகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. துணிகள், குதிரைகள், மசாலாப் பொருட்கள், உலோகங்கள் ஆகியவையும் பல்வேறு ஆடம்பரப் பொருட்களும் இந்த வழிகளின் மூலம் வணிகம் செய்யப்பட்டன.

சமயம்

மிஹிர போஜர் வைணவ சமயத்தைப் பின்பற்றியவர். அவர் தன்னை “ஶ்ரீமத் ஆதிவராஹர்” என்ற சிறப்புப் பெயரோடு இணைத்துக்கொண்டார். அதாவது, வராக அவதாரத்தில் திருமால் பூமியை அசுரனிடமிருந்து மீட்டு நிலைநிறுத்துவது போல, அரசியல் குழப்பத்தின் மத்தியில் நாட்டை மீட்டெடுக்கும் அரசராகத் தன்னை அவர் சித்தரித்தார்.

ஆதிவராகர் நாணயம்
ஆதிவராகர் நாணயம்

அவரது வெள்ளி நாணயங்களிலும் செம்பு நாணயங்களிலும் ஆதி வராக உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு, சூரியச் சக்கரமும் கதை, தாமரை, சங்கு ஆகிய மங்கலச் சின்னங்களும் வராகருக்கு அருகே காணப்படுகின்றன. அவர் வைணவராக இருந்தாலும், மற்ற மரபுகளுக்கும் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்தார்.

பிரதிஹாரர்கள் பெரும்பாலும் அவர்களது வெற்றிகளுக்காக நினைவுகூரப்பட்டாலும், அவர்களது ஆட்சியில் கலையும் இலக்கியமும் கல்வியும் சிறப்பாக வளர்ச்சி பெற்றன. மிஹிர போஜரின் ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் நிலைத்தன்மை, கோவில் கட்டிடக்கலை, சமஸ்கிருத இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பேருதவி செய்தது.

அவரது மகனும் வாரிசுமான மகேந்திரபாலர் , பின்னர் புகழ்பெற்ற சமஸ்கிருதக் கவிஞரான ராஜசேகரருக்கு ஆதரவு வழங்கினார். இதன் மூலம் மிஹிர போஜரின் காலத்தில் உருவான அறிவுசார் மரபு தொடர்ந்து வளர்ந்தது.

மிஹிர போஜரால் கட்டப்பட்ட தெலி-கா-மந்திர் (குவாலியர்)
மிஹிர போஜரால் கட்டப்பட்ட தெலி-கா-மந்திர் (குவாலியர்)

அவரது தாக்கம்

இந்திய வரலாற்றின் தலைசிறந்த பேரரசர்களில் மிஹிர போஜருக்கு தனித்துவமான இடம் உண்டு. அவரது ஆட்சி கூர்ஜர பிரதிஹாரர்களின் பேரரசை குழப்பங்களிலிருந்து மீட்டு நிலை நிறுத்தியது. வெற்றிகரமான படையெடுப்புகள், திறமையான நிர்வாகம், எல்லைப் பாதுகாப்பு, நிலையான அரசியல் அமைப்பு ஆகியவற்றின் மூலம் அவர் வட இந்தியாவில் பிரதிஹாரர்களின் ஆதிக்கத்தை அவர் உறுதிப்படுத்தினார். மிஹிர போஜர் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மறைவின்போது, கூர்ஜர பிரதிஹார பேரரசு தனது மிகப்பெரிய பரப்பையும், மிக உயர்ந்த அரசியல் செல்வாக்கையும் பெற்றிருந்தது.

இன்று மிஹிர போஜர் பொதுமக்களிடையே பிற இந்தியப் பேரரசர்களைப்போல பரவலாக அறியப்படாவிட்டாலும், அவரது சாதனைகள் இந்திய வரலாற்றின் மிகச் சிறந்த பேரரசர்களுக்கு இணையாக நிற்கின்றன. பரந்த நிலப்பரப்பை ஒருங்கிணைத்தல், வலிமையான நிர்வாகத்தை உருவாக்குதல், வட இந்தியாவின் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் மூலம் அவர் இந்திய வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தார். கல்வெட்டுகள், நாணயங்கள் மற்றும் அவர் உருவாக்கிய அரசியல் மரபு ஆகிய அனைத்தும், மிஹிர போஜர் இந்தியாவின் மிக முக்கியமான பேரரசர்களில் ஒருவராக இருந்ததை இன்று வரை சாட்சியமாகக் கூறுகின்றன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *