பாரத நாட்டின் வரலாற்றில் சில மன்னர்கள் ஒரு பேரரசை நிறுவியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் அதன் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காகப் புகழப்படுகிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு முன்னோர் உருவாக்கித் தந்த ஆட்சியைப் பாதுகாப்பதோடு நிற்காமல், அதை வலிமை, செல்வாக்கு, புகழ் ஆகியவற்றை உச்சிக்குக் கொண்டு செல்கிறார்கள். பால வம்சத்தின் தேவபாலர் அத்தகைய மன்னர்களில் ஒருவர்.
பால வம்சம்
தமிழ்க் கல்வெட்டுகளில் கௌட தேசம் என்று குறிப்பிடப்படும் தற்போதைய மேற்கு வங்கம், பீகார் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் பால வம்சத்தினர். சசாங்கனின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பகுதி முழுவதும் பெரும் குழப்பம் நிலவியது. வலிமை உடையவன் பலவீனனை விழுங்கும் நிலையை அக்காலச் சாசனங்கள் ‘மத்ஸ்ய நியாயம்’ என்று குறிப்பிடுகின்றன. பெரிய மீன் சிறிய மீனை விழுங்குவதுபோல, அதிகாரம் உள்ளவர்கள் பொதுமக்களையும் சிறிய தலைவர்களையும் ஒடுக்கிய காலம் அது.
அப்போது தோன்றி அங்கே ஒரு நிலைத்தன்மையை அளித்ததுதான் பால வம்சம். இந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் பெயர் கோபாலர். கௌட தேசத்தில் நிலவிய குழப்பத்திற்கு முடிவு காண கோபாலர் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கலிம்பூர் செப்பேடு கூறுகிறது. வழக்கமாக வம்ச மூத்தவர்களைப் பற்றிச் சொல்லப்படும் தொன்மங்கள் கோபாலரைப் பற்றிய கதையிலும் உண்டு. அதைத்தவிர, கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் குறுநில மன்னர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் பல்வேறு கதைகள் உலவுகின்றன. பொயு 750ல் அரியணை ஏறிய கோபாலர், அக்கம்பக்கத்திலுள்ள சிற்றரசுகளை வென்று பாலர்களை பேரரசாக உயர்த்த ஆரம்பித்தார்.
அவரது மகனான தர்மபாலர் காலத்தில்தான் கூர்ஜர பிரதிஹார அரசர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பாலர்களுக்கும் இடையே வட இந்தியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது பற்றிய மும்முனைப் போட்டி ஏற்பட்டது. பீகார் மற்றும் கங்கைச் சமவெளிகளில் பாலர் செல்வாக்கை விரிவுபடுத்திய தர்மபாலர், வட இந்தியாவின் புகழ்பெற்ற நகரமான கன்னோசியின் அரசியலிலும் தலையிட்டார். அக்காலத்தில் கன்னோசியை கைப்பற்றுவது என்பது சாதாரணமான வெற்றி அல்ல. வட இந்தியாவின் தலைமை தமக்கே உரியது என்று கூறுவதற்கான அடையாளமாக அது கருதப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியில் தர்மபாலருக்குப் பின்னடைவு ஏற்பட்டது.
பிரதிஹார அரசர் வத்ஸராஜரால் தர்மபாலர் தோற்கடிக்கப்பட்டார். போதாக்குறைக்கு ராஷ்டிரகூட அரசர் துருவனும் தர்மபாலரைத் தோற்கடித்தார். இப்படித் தொடர் தோல்விகளால் தவித்த தர்மபாலர், ராஷ்டிரகூட அரசர்களுடன் சமாதானம் செய்துகொண்டு, இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.
தேவபாலர்
அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்தான் தேவபாலர். தேவபாலரின் ஆட்சிக் காலம் பொதுவாக பொயு 821 முதல் 861 வரை எனக் கருதப்படுகிறது. ஆட்சிக்காலத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் நீண்டகாலம் ஆட்சி செய்ததும், பாலப் பேரரசின் பொற்காலத்தை உருவாக்கியதும் சந்தேகமற்ற உண்மை.
போர்வெற்றிகள்
தேவபாலரின் படையெடுப்புகளைப் பற்றி முங்கர் செப்பேடும் பாதல் தூண் கல்வெட்டும் பெருமையாகக் கூறுகின்றன. அவரது யானைப் படைகள் விந்திய மலைக்காடுகள் வரை சென்றதாகவும், குதிரைப் படைகள் காம்போஜ நாட்டை எட்டியதாகவும் அவை குறிப்பிடுகின்றன. கிழக்குக் கடலிலிருந்து மேற்குக் கடல் வரை, வடக்கிலிருந்து தெற்கே இராமர் சேது வரை அவரது புகழும் அதிகாரமும் பரவியதாக அவை புகழ்கின்றன. இவை சற்றே அதீதமானவை என்ற போதிலும், தேவபாலர் தமது ஆட்சிப்பரப்பை பெருமளவு விரிவடையச் செய்தார் என்பதிலும் சந்தேகமில்லை.
பிரக்ஜோதிஷத்தின் மீதான வெற்றி
தேவபாலரின் முக்கியமான சாதனைகளில் ஒன்று பிரக்ஜோதிஷம் எனப்பட்ட அசாம் பகுதியைத் தனது செல்வாக்குக்குள் கொண்டுவந்தது. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள இந்தப் பகுதி இயற்கை வளம் மிகுந்தது. வணிகப் பாதைகளைக் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கேந்திரமாகக் கருதப்பட்ட பகுதியாக அன்றிலிருந்து இன்று வரை இது இருந்துவருகிறது. வங்காளத்திலிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் வழிகளைப் பாதுகாக்க, அசாமைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது பாலர்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது.
இந்தப் படையெடுப்பில் தேவபாலரின் உறவினரும் படைத்தளபதியுமான ஜெயபாலர் முக்கிய பங்கு வகித்தார். அவர் தர்மபாலரின் தம்பி வாக்பாலரின் மகன். பாலர்களின படைகள் முன்னேறியபோது பிரக்ஜோதிஷத்தின் மன்னன் பெரிய போரை நடத்தாமல் தேவபாலரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டதாகச் சாசனங்கள் கூறுகின்றன.
இதனால் அசாம் முழுவதும் பேரரசின் நேரடி மாகாணமாக மாறிவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது. ஆனால் அங்குள்ள மன்னன் பாலர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டது மிகப் பெரிய அரசியல் வெற்றி. கடினமான மலைகள், அடர்ந்த காடுகள், பெரும் ஆறுகள் நிறைந்த அப்பகுதியில் படையை நடத்திச் செல்வதே சிரமமானது. அத்தகைய இடத்தில் எதிரியைப் போரின்றி பணிய வைத்தது, தேவபாலரின் படை வலிமையையும் பெயர் பெற்ற செல்வாக்கையும் காட்டுகிறது
உத்கல வெற்றி
அசாமைத் தொடர்ந்து தேவபாலரின் கவனம் தென்மேற்கில் இருந்த உத்கலத்தின் மீது திரும்பியது. இன்றைய ஒடிசாவின் பெரும் பகுதியே அக்கால உத்கலம். வங்காளத்தை கிழக்குக் கடற்கரை வணிகப் பாதைகளுடன் இணைக்கும் இடமாகவும், தெற்கிலிருந்து வரும் படையெடுப்புகளைத் தடுக்க வேண்டிய எல்லைப் பகுதியாகவும் அது இருந்தது.
பாதல் தூண் கல்வெட்டு, உத்கல மன்னன் தனது தலைநகரை விட்டு ஓடும் அளவுக்கு பாலர்களின் படைகள் வெற்றி பெற்றதாகக் கூறுகிறது. கல்வெட்டுகளில் வெற்றிகள் அழகுபடுத்திக் கூறப்படுவது இயல்பானதாக இருந்தாலும் தேவபாலர் உத்கலத்தின் மீது பெருவெற்றி கொண்டார் என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கு சந்தேகம் ஏதும் இல்லை.
இந்த வெற்றி பாலர் படைகளின் திறனை வெளிப்படுத்தியது. ஆறுகள் நிறைந்த வங்காளத்தில் போரிடப் பழகிய படைகள், காடுகளும் கடற்கரைப் பகுதிகளும் கொண்ட ஒடிசாவிலும் வெற்றி பெற்றன. கலிங்கத்தின் மீது பாலர்கள் செல்வாக்கு அதிகரிப்பதற்கு இந்தப் படையெடுப்பு வழிவகுத்தது.
கூர்ஜர-பிரதிஹாரர்களுடனான மோதல்
இந்த இரு வெற்றிகளையும் அடுத்து, தேவபாலர் பரம்பரை எதிரிகளான கூர்ஜரப் பிரதிஹாரர்களுடன் மோத வேண்டி வந்தது. மத்திய கங்கைச் சமவெளியும் கன்னோசியும் இரு வம்சங்களுக்கும் முக்கிய இலக்குகளாக இருந்தன. இந்த மோதல் வெறும் எல்லைப் பிரச்சினையாக மட்டும் அல்லாமல் ‘வட இந்தியாவின் தலைமை யாருக்கு?’ என்ற கேள்விக்கான போராட்டமாக இருந்தது.
தேவபாலர் கூர்ஜர மன்னனின் பெருமையைத் தாழ்த்தியதாக பாதல் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் நாகபட்டருக்குப் பின் பிரதிஹார ஆட்சியில் ஏற்பட்ட பலவீனத்தை தேவபாலர் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். கங்கைச் சமவெளியில் பாலர்களின் செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்தினார். பின்னர் மிக வலிமையான மன்னனாக உயர்ந்த மிஹிர போஜர் காலத்தில் பிரதிஹாரர்கள் மீண்டும் முன்னேறினாலும், தேவபாலரின் வாழ்நாளில் பாலர்களைத் தாழ்த்த அவர்களால் முடியவில்லை.
ஒரு பேரரசை உருவாக்கிய வலிமையான மன்னன் இறந்ததும் அது சிதைவதும் வரலாற்றில் அடிக்கடி நிகழும். ஆனால் தர்மபாலருக்குப் பின் பாலப் பேரரசு சிதையாமல் காத்ததோடு, அதன் முதன்மை எதிரியையும் தேவபாலர் கட்டுப்படுத்தினார். பல ஆண்டுகளுக்கு, கிழக்கு இந்தியாவின் மிக வலிமையான பேரரசாக பால அரசை நிலைநிறுத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.
ஹூணர்கள், காம்போஜர்கள், வடதிசைப் படையெடுப்புகள்
தேவபாலரின் கல்வெட்டுகள், அவர் ஹூணர்களையும் காம்போஜர்களையும் வென்றதாகக் கூறுகின்றன. இங்கு குறிப்பிடப்படும் ஹூணர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன் வட இந்தியாவைத் தாக்கிய ஹூணப் பேரரசைச் சேர்ந்தவர்கள் என்று கருதவேண்டியதில்லை. இமயமலைப் பகுதிகளிலோ வடமேற்கு எல்லைகளிலோ வாழ்ந்த சிறிய அரசியல் குழுக்கள் அல்லது போர்க்குடிகள் இந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
காம்போஜ நாடு எந்தப் பகுதியில் இருந்தது என்பது பற்றியும் கருத்து வேறுபாடு உள்ளது. இருந்தாலும் தேவபாலரின் குதிரைப் படை அந்தப் பகுதி வரை சென்றதாக முங்கர் செப்பேடு கூறுவது முக்கியமான செய்தி. பாலர் பேரரசின் மையத்திலிருந்து வெகுதொலைவு வரை படைகள் சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது என்பதற்கு இது சான்றாகும்.
இத்தகைய படையெடுப்புகளின் நோக்கம் எப்போதும் அடுத்தவர் ஆட்சி செய்த பகுதிகளை இணைத்துக்கொள்வதற்காக மட்டும் இல்லை. எல்லைப் பகுதி மன்னர்களை அடக்குதல், கப்பம் பெறுதல், வணிகப் பாதைகளைப் பாதுகாத்தல், சிறந்த குதிரைகளைப் பெறுதல், பேரரசின் வலிமையை வெளிப்படுத்துதல் போன்ற பல நோக்கங்கள் அக்காலப் படையெடுப்புகளுக்கு இருந்தது.
முங்கர் சாசனத்தில் கௌடம், மாளவம், கசம், ஹூணம், கர்நாடகம், லாடம் போன்ற பல பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், படகுகள், கோட்டைகள், எல்லைகள் ஆகியவற்றுக்கென தனித்தனி அதிகாரிகள் இருந்தனர். இதனால் தேவபாலரின் படை ஒரே பகுதியைச் சேர்ந்த வீரர்களால் உருவானதாக இல்லாமல் பேரரசின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மனிதவளத்தையும் போர் நுணுக்கத்தையும் திரட்டிய பெரிய அமைப்பாக இருந்தது என்பதை அறியலாம்.
தேவபாலர் ‘திராவிட மன்னனை’ வென்றார் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்த மன்னன் யார் என்பது வரலாற்றாசிரியர்களிடையே விவாதமாகவே உள்ளது. சிலர் தக்காணத்தின் ராஷ்டிரகூட மன்னரை இந்தச் சொல் குறிக்கலாம் என்று கருதுகின்றனர். வேறு சிலர் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனைச் சுட்டியிருக்கலாம் என்கிறார்கள். பாண்டியர் செப்பேடுகளும் ஶ்ரீமாற ஶ்ரீவல்லபன் வட இந்திய அரசர்களை வென்றதாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் தேவபாலர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை நேரடியாகக் கைப்பற்றி ஆட்சி செய்தார் என்று சொல்வதற்குப் போதுமான ஆதாரம் இல்லை
இதில் கவனிக்க வேண்டியது, தேவபாலரின் சாசனங்கள் அவரை வங்காளத்தின் மன்னராக மட்டும் காட்டவில்லை என்பதே. வட இந்தியா முதல் தெற்கத்திய அரசுகள் வரை அஞ்சக்கூடிய பேரரசராக அவரது உருவம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
நிர்வாகம்
ஒரு மன்னன் எத்தனை போர்களில் வென்றாலும், வலுவான நிர்வாகம் இல்லையெனில் பேரரசை நீண்டகாலம் காப்பாற்ற முடியாது. தேவபாலரின் வெற்றிகளுக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பெரிய அரச இயந்திரம் இருந்தது. பாலர் சாசனங்கள் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளை விரிவாகப் பட்டியலிடுகின்றன.
பேரரசு, ‘புக்தி’ எனப்பட்ட பெரிய மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றின் கீழ் ‘விஷயம்’, ‘மண்டலம்’ போன்ற சிறிய பிரிவுகள் இருந்தன. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், படைத்தளபதிகள், வரி வசூல் அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்கள், எல்லைக் காவலர்கள், கோட்டைத் தலைவர்கள், சுங்க அதிகாரிகள், குற்றங்களை அடக்கும் அதிகாரிகள் எனப் பல அடுக்குகளைக் கொண்ட நிர்வாகம் செயல்பட்டது.
யானைப்படை, குதிரைப்படை, ஒட்டகப்படை, காலாட்படை, படகுப்படை ஆகியவற்றுக்கென தனித்தனி துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளம் போன்ற ஆறுகள் நிறைந்த நாட்டில் படகுப் படையும் ஆற்றுப் போக்குவரத்தும் பேரரசின் உயிர்நாடியாக இருந்தன. முங்கர் செப்பேடு, பாகீரதி ஆற்றருகே படகுகள், யானைகள், குதிரைகள், காலாட்படைகள் சூழ்ந்த தேவபாலரின் முகாமைச் சித்தரிக்கிறது. நிலப் படையையும் நீர்வழிப் போக்குவரத்தையும் ஒருங்கிணைக்கத் தெரிந்த பேரரசே இத்தகைய நீண்ட படையெடுப்புகளை நடத்த முடியும் என்பது தெளிவு.
தேவபாலரின் அமைச்சர் தர்பபாணி மிகவும் செல்வாக்கு மிக்கவர். அவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக பால மன்னர்களுக்கு அமைச்சர்களாகச் சேவை செய்ததாகத் தெரிகிறது. ஒரே குடும்பத்தில் அனுபவம் தொடர்ந்ததால், ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் நிர்வாகம் தடுமாறாமல் இருந்தது. தேவபாலரின் தனிப்பட்ட வீரத்திற்கு இணையாக, திறமையான அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் விசுவாசத்தைப் பேணியதும் பேரரசின் வெற்றிக்குக் காரணமாகும்.
கங்கைச் சமவெளியைச் சேர்ந்த வளமான நிலங்கள் அரசுக்குப் பெரும் வருவாயை அளித்தன. கங்கையும் அதன் கிளை ஆறுகளும் பொருட்கள், படைகள், செய்திகள் ஆகியவற்றை வேகமாக எடுத்துச் செல்ல உதவின. விவசாய வளம், வணிகப் பாதைகள், நதிப் போக்குவரத்து, ஒழுங்கான வரி நிர்வாகம் ஆகியவை தேவபாலரின் பேரரசுக்கு பொருளாதார வலிமையை வழங்கின.
சமயம்
தேவபாலர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார். அவர் ‘பரமசௌகதர்’ என்ற பட்டத்தை ஏற்றிருந்தார். அதற்குப் புத்தரின் சிறந்த பக்தர் என்று பொருள். ஆனால் அவருடைய ஆட்சி ஒரு மதத்தவருக்கான ஆட்சி அல்ல. பாலர்களின் நிர்வாகத்தில் பிராமண அமைச்சர்களும் அதிகாரிகளும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தனர். பிராமணர்களுக்கும் நிலக்கொடைகள் வழங்கப்பட்டன.
தேவபாலரின் புகழை இந்திய எல்லைகளுக்கு அப்பால் எடுத்துச் செல்லும் மிகச் சிறந்த சான்று நாளந்தா செப்பேடு ஆகும். ஸ்வர்ணத்வீபத்தை ஆண்ட சைலேந்திர வம்ச மன்னன் பாலபுத்திரதேவர் நாளந்தாவில் ஒரு பௌத்த மடத்தை அமைத்தார். (ஸ்வர்ணத்வீபம் என்பது சுமத்ரா, ஜாவா பகுதிகளுடன் தொடர்புடைய இன்றைய இந்தோனேசியாவைக் குறிக்கும்.)
தாம் நிறுவிய மடம் தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான வருவாயை வழங்குமாறு பாலபுத்திரதேவர், தூதர்கள் மூலம் தேவபாலரிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்ற தேவபாலர், ஐந்து கிராமங்களின் வருவாயை மடத்துக்கு வழங்கினார். அந்த வருவாய் துறவிகளின் அன்றாடத் தேவைகளான உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் ஆகியவற்றுக்கும், மடக் கட்டிடங்களின் பராமரிப்புக்கும், பௌத்த நூல்களை நகலெடுத்து பாதுகாப்பதற்கும் ஒதுக்கப்பட்டது.
இந்தச் செய்தி பல முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. நாளந்தா அக்காலத்தில் இந்தியாவின் கல்வி நிலையமாக மட்டுமல்ல, ஆசியா முழுவதும் மதிக்கப்பட்ட சர்வதேசப் பல்கலைக்கழகமாகவும் விளங்கியது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தொலைதூரத் தீவுகளை ஆண்ட வலிமைமிக்க மன்னன்கூட நாளந்தாவில் ஒரு மடத்தை நிறுவுவதைப் பெருமையாகக் கருதியுள்ளார். மேலும், அந்த மடத்துக்கு நில வருவாயை வழங்கும் அதிகாரமும், அதன் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிசெய்யும் பொறுப்பும் தேவபாலரிடம் இருந்தன. திபெத், நேபாளம், தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து துறவிகளும் அறிஞர்களும் பாலர்களின் தேசத்திற்கு வந்து கல்வி கற்றும் கருத்துகளைப் பரிமாறியும் சென்றனர். அதன் விளைவாக நூல்கள், சிந்தனைகள், சிற்ப பாணிகள், தத்துவ மரபுகள் ஆகியவை எல்லைகளைக் கடந்து பரவின. இத்தகைய சர்வதேச அறிவுப் பரிமாற்றம் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் நடைபெற தேவபாலரின் ஆட்சி உறுதியான அடித்தளத்தை அமைத்தது.
தர்மபாலரால் நிறுவப்பட்ட சோமபுர மகாவிகாரம் தேவபாலர் காலத்திலும் அரச ஆதரவைத் தொடர்ந்து பெற்றது. நாளந்தா, விக்ரமசீலம் போன்ற கல்வி மையங்களும் மேலும் செழித்தன. இவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; தத்துவம், தர்க்கம், இலக்கணம், மருத்துவம், சமயச் சடங்குகள், கலை, நூல் உருவாக்கம் ஆகியவை கற்பிக்கப்பட்ட பல்துறை அறிவு மையங்களாகவும் விளங்கின.
இத்தகைய நிறுவனங்களைப் பேணி வளர்த்ததன் மூலம் தேவபாலர் பௌத்த சமயத்தை மட்டும் வலுப்படுத்தவில்லை; தனது பேரரசையே ஆசியாவின் முக்கியமான அறிவு மற்றும் கல்வி மையங்களில் ஒன்றாக உயர்த்தினார்.
கலை
தேவபாலரின் ஆட்சிக்காலம் பாலர் கலையின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. கருங்கல் சிற்பங்கள், வெண்கலத் திருமேனிகள், ஓவியங்கள், பிரம்மாண்டமான மடாலயக் கட்டிடங்கள் ஆகியவை இக்காலத்தில் வங்காளத்தில் உச்சத்தை எட்டின. பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து கொண்டு வந்த பல சிற்பங்கள் இன்றும் தமிழகக் கோவில்களில் காணப்படுகின்றன.


திபெத்திய நூல்கள், பாலர்களின் நாட்டைச் சேர்ந்த தீமான் மற்றும் அவரது மகன் விதபாலர் ஆகிய இரு சிற்பக் கலைஞர்களைப் புகழ்ந்து குறிப்பிடுகின்றன. ஓவியம், கற்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய துறைகளில் அவர்கள் சிறந்து விளங்கியதாக அவை கூறுகின்றன. பாலர் காலக் கலையின் நுட்பமும் அழகியல் மரபும் பின்னர் நேபாளம், திபெத், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளின் பௌத்தக் கலையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
ஆட்சியின் தாக்கம்
தேவபாலரின் ஆட்சித்திறன் இடைக்கால வட இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மிகையல்ல. கோபாலர் பால வம்சத்தை நிறுவினார். தர்மபாலர் அதற்கு பேரரசுக் கனவை அளித்தார். தேவபாலர் அந்தக் கனவை முழுமையான வலிமை கொண்ட பேரரசாக மாற்றினார். அவரது ஆட்சிக்காலத்தில் பாலர்கள் கிழக்கு இந்தியாவின் தலைமைச் சக்தியாகவும், இந்தியத் துணைக்கண்டத்தின் மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகவும் விளங்கினர்.
ஒரு பேரரசின் உச்சநிலையை அதன் எல்லைகள் எவ்வளவு பரந்திருந்தன என்பதைக் கொண்டு மட்டுமே மதிப்பிட முடியாது. அதன் ஆற்றலைப் பிற அரசுகள் எவ்வளவு மதித்தன, அதன் கல்வி நிலையங்களை வெளிநாட்டு அறிஞர்கள் எவ்வளவு தூரத்திலிருந்து நாடி வந்தனர், அதன் கலை மற்றும் பண்பாட்டு மரபு எத்தனை தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்தது என்பனவும் அதற்கான முக்கியமான அளவுகோல்கள். இவை அனைத்திலும் தேவபாலரின் ஆட்சி பாலப் பேரரசின் பொற்காலமாகத் திகழ்கிறது.
(தொடரும்)

