இடைக்காலத்தில் பாரதத்தை ஆட்சி செய்த மிகச்சிறந்த அரசர்களில் ஒருவர் போஜராஜன். போஜன் என்ற பெயரை உடைய அரசர்களில் மிகிரபோஜருக்கு அடுத்தபடியாக மிகப்பிரசித்தமானவர் பரமார வம்சத்தைச் சேர்ந்த போஜன். போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைக் குவித்ததோடு, சீரான நிர்வாகத்தை வழங்கியவர், பல புலவர்களை ஆதரித்தவர், தாமும் சிறந்த புலவராகத் திகழ்ந்தவர், பல கோவில்களைக் கட்டியவர் எனப் பன்முகத்தன்மை கொண்ட அரசர் போஜன். ஹிந்தியில் “கஹான் ராஜா போஜ், கஹான் கங்கு தெலி” என்று சொல்வதுண்டு. அதற்கு, போஜராஜன் எங்கே, செக்கு வைத்து எண்ணெய் எடுப்பவர் எங்கே என்று பொருள். போஜராஜனுக்கும் மற்றவர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையே இந்தப் பழமொழி உணர்த்துகிறது. சாளுக்கிய அரசனான தைலபனுக்கும் போஜனுக்கும் நடந்த போர்களில் போஜன் பெருவெற்றி பெற்றதையே இது குறிக்கிறது என்றும் சொல்வதுண்டு.
சரித்திரச் சான்றுகளைத் தவிர போஜராஜனைப் பற்றிப் பல சுவாரஸ்யமான கதைகளும் தொன்மங்களும் உலவுகின்றன. இவை பெரும்பாலும் பிற்காலத்தில் உருவானவை. இவற்றிலிருந்து எது வரலாறு, எது புனைவு என்று பிரித்தறிவது வரலாற்று ஆய்வாளர்களுக்கு முன் உள்ள சவாலான விஷயமாகும்.
பரமாரர்கள்
‘பரமரா’ என்று தமிழில் பெரும்பாலும் தவறாக எழுதப்படும் ‘பரமாரர்கள்’ மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தில் ஆட்சி செய்த அரச வம்சத்தவர்கள் ஆவர். அவர்களுடைய தலைநகராக தாரா நகரம் (தற்போதைய தார்) இருந்தது. பத்தாம் நூற்றாண்டில் வலிமை படைத்த அரசாக பரமாரர்கள் உருவானார்கள். போஜனுக்கு முன்பு இருந்த அரசர்களில் முக்கியமானவர் போஜனுடைய சிற்றப்பாவான வாக்பதி முஞ்சர். முஞ்சரும் பெருவீரர்; இலக்கிய கர்த்தாக்களையும் ஆதரித்தவர். ஆனால் அவரது சாளுக்கியர்களுக்கு எதிரான போர் தோல்வியில் முடிந்தது. இரண்டாம் தைலபனால் முஞ்சர் தோற்கடிக்கப்பட்டு போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அதனால், அவரது சகோதரரான சிந்துராஜர் அரசராகப் பொறுப்பேற்றார். பரமாரர்களின் அரசை ஓரளவு சீர்திருத்திய பெருமை சிந்துராஜரைச் சேரும். பத்மகுப்தர் எழுதிய “நவசாகசங்கசரிதம்” சிந்துராஜரின் தீரச்செயல்களை விவரிக்கிறது.
போஜராஜனின் ஆட்சி
சிந்துராஜருக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் ஏறியவர்தான் போஜன். பொயு 1010ம் ஆண்டு வாக்கில் அவர் அரசுப்பொறுப்பேற்றதாகத் தெரிகிறது. அவருடைய முதல் பணி, மாளவத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதாக இருந்தது. நிலையான அஸ்திவாரமே ஒரு பேரரசை உருவாக்குவதற்கு முக்கியமான காரணியாகும் என்பதை உணர்ந்திருந்தவர் போஜன். அவருடைய வெற்றிகளைப் பற்றி பல செப்பேடுகள் தெரிவிக்கின்றன. சமஸ்கிருத மொழியில் நகரி எழுத்துருவில் அமைந்துள்ள அந்தச் சாசனங்கள் அவரை ‘பரம பட்டாரகர்’, ‘மகாராஜாதிராஜர்’, ‘பரமேஸ்வரர்’ என்றெல்லாம் புகழ்கின்றன.
தொடர்ந்த போர்கள்
ஒரு கேந்திரமான பகுதியில் அமைந்திருந்த அரசு என்பதால் அதைச் சுற்றியுள்ள அரசுகளுடன் மோதவேண்டிய அவசியம் பரமாரர்களுக்கு அடிக்கடி ஏற்பட்டது. தெற்கில் மேலைச்சாளுக்கியர்கள், வடக்கில் காலச்சூரிகள், சந்தேல அரசர்கள், கிழக்கில் ஒட்டார நாட்டின் அரசு என்று பல அரசுகளோடு தொடர்ந்து பரமாரர்கள் போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்தப் போர்களில் வெற்றியடைந்ததாக இரு தரப்பும் தங்களது சாசனங்களில் குறிப்பிட்டுக்கொள்வதால் உண்மையில் வெற்றி யாருக்கு என்பதில் குழப்பமே நிலவுகிறது.
போஜனுடைய முதல் வெற்றி தற்போதைய குஜராத் பகுதியில் இருந்த லாடதேசத்தின் மீதான வெற்றியாகும். அங்கே ஆட்சி செய்துகொண்டிருந்த அரசரை அவர் வென்ற பிறகு கொங்கணத்தின் மீது படையெடுத்தார். அவரது ஆட்சியின் தொடக்கத்தில் கிடைக்கும் ஒரு செப்பேடு, அவரது கொங்கணத்தின் மீதான அவரது வெற்றியைப் பற்றிக் கூறுகிறது. பெட்மா என்ற இடத்தில் கிடைத்த அந்தச் செப்பேடு, அந்தணர் ஒருவருக்கு போஜன் தந்த நிலக்கொடையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அந்தக் கொடை அளிக்கப்பட்ட தருணத்தைப் பற்றிக் குறிப்பிடும் சாசனம் “கொங்கண கிரஹண விஜய பர்வ” அதாவது கொங்கணத்தை வென்ற தருணத்தைக் கொண்டாடும் விழாவைப் பற்றிக் குறிக்கிறது.
முஞ்சர் காலத்திலிருந்தே பரமாரர்களுடன் தொடர்ந்து போர்களில் ஈடுபட்ட வந்த மேலைச்சாளுக்கியர்களுக்கு, தங்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் பரமாரர்கள் அடைந்த இந்த வெற்றி எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் போஜனுடன் மோதினர். ஜெயசிம்ம சாளுக்கியனுக்கும் போஜனுக்கும் நடந்த போர்களில் போஜராஜனுக்கே வெற்றி கிடைத்தது. இதற்கிடையில் ராஜேந்திர சோழரின் படைகளும் ஜெயசிம்மனுடன் மோதி முசங்கியில் அவனைத் தோற்கடித்தன. அதை அடுத்து மேலைச்சாளுக்கியர்களுக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணியை போஜனும், ராஜேந்திர சோழரும் காலச்சூரிகளின் அரசனான காங்கேயதேவனும் ஏற்படுத்திக்கொண்டனர். ராஜேந்திர சோழரின் வடதிசைப் படையெடுப்பின் போது ஒட்டார நாட்டு அரசன் இந்திரரதனை வென்றது பற்றி அவரது மெய்க்கீர்த்தி குறிப்பிடுகிறது. இந்த அரசனை வென்றதாக போஜனின் உதய்பூர் சாசனமும் குறிப்பிடுகிறது. ஆகவே இந்திரரதனுக்கு எதிராக சோழ-பரமார கூட்டணிப் படைகள் போரில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்றும் அதில் கிடைத்த வெற்றியைப் பற்றி இருவரும் குறிப்பிட்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் கிழக்குப் பகுதியில் தனது அரசை விரிவாக்க முயன்ற போஜனுக்கு சந்தேலர்கள் பலத்த எதிர்ப்பைக் காட்டி அதைத் தடுத்து நிறுத்தி விட்டனர். சந்தேல அரசர் வித்யாதரரை போஜனால் வெற்றி கொள்ள இயலவில்லை. குவாலியரை ஆண்ட கச்சபகாதர்களுடனும் போஜன் மோதினார். அங்கும் அவரது முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதை அடுத்து ராஜஸ்தான் பகுதியில் சாஹமானர்களுடன் போஜன் போரிட்டு வெற்றியடைந்தார். இவ்வாறு சில திசைகளில் பரமாரர்களின் செல்வாக்கு விரிவடைந்த அதே வேளையில், வேறு சில பகுதிகளில் அது பின்னடைவைச் சந்தித்தது. எனவே, போஜராஜனை ஒருபோதும் தோல்வியே காணாத வெற்றிவீரராக மட்டும் சித்தரிப்பது சரியல்ல. வலிமையும் போர்த்திறனும் கொண்ட பல அரச வம்சங்களால் சூழப்பட்டிருந்த நிலையிலும், பல பத்தாண்டுகளாக மாளவத்தை இந்தியாவின் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒன்றாக நிலைநிறுத்தியதில்தான் போஜனின் பெருமையின் ஒரு முக்கிய அம்சம் அடங்கியுள்ளது.
கஜினி முகமதுவுடன் மோதல்
போஜனின் முக்கியமான வெற்றிகளில் ஒன்றாக அவர் கஜினி முகமதுவின் படைகளுக்கு எதிராக அடைந்த வெற்றியைக் குறிப்பிடலாம். அவருடைய உதய்பூர் சாசனம் போஜனின் படைகள் துருஷ்கர்களைத் தோற்கடித்ததாகக் கூறுகிறது. இதற்கு ஆதரவாக, கஜினி முகமதுவின் வரலாற்று ஆசிரியர்கள், சோமநாதபுரத்தை அழித்தபிறகு கஜினி முகமது வலிமை வாய்ந்த இந்திய அரசரான பரம் தேவை சந்திக்கப் பயந்து திரும்பிவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பரம் தேவ் என்பது பராமரர்களின் அரசனான போஜனைக் குறிப்பதாகவே பல வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்து பல பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்ட கஜினி முகமதுவின் சில ஆளுநர்களை இங்கிருந்து விரட்டி அடித்ததிலும் போஜனின் பங்கு உண்டு என்பது பலரின் கருத்தாகும்.
கல்வியும் இலக்கியமும்
இப்படி அடிக்கடி போர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், கல்வி, இலக்கியத் துறைகளில் போஜராஜன் செய்த சாதனைகள் அவரது புகழை அசாதாரணமானதாக மாற்றியது. வியக்கத்தக்க அளவில், பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்கள் போஜராஜனால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் அவரே தனிப்பட்ட முறையில் இயற்றினார் என்று உறுதியாகக் கூற இயலாது. சிறந்த அறிஞர்கள் நிறைந்த ஒரு அரசவையில், அரசரின் ஆதரவிலோ அல்லது அவரது பெயரிலோ நூல்கள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், போஜராஜனுடன் தொடர்புபடுத்தப்படும் நூல்களின் பரந்துபட்ட தன்மையும், அவற்றின் அறிவார்ந்த ஆழமும் அவரது அரசவை எத்தகைய உயர்ந்த அறிவுசார் மையமாக விளங்கியது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இலக்கணம், கவிதையியல், அழகியல், கட்டடக்கலை, தத்துவம், சமயம், மருத்துவம், வானியல், யோகம் எனப் பல்வேறு துறைகளில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருடன் தொடர்புபடுத்தப்படும் புகழ்பெற்ற நூல்களில் மிக முக்கியமான ஒன்று சமராங்கண சூத்ரதாரா (Samarāṅgaṇa Sūtradhāra) ஆகும்.
சமராங்கண சூத்ரதாரா
இந்தியக் கோயில் கட்டடக்கலையைப் பயிலும் மாணவர்களைப் பொறுத்தவரை, ‘சமராங்கண சூத்ரதாரா’ என்ற ஒரு நூல் மட்டுமே போஜராஜனை மிக முக்கியமான வரலாற்று ஆளுமையாகக் கருதுவதற்குப் போதுமானது.
இது ‘வாஸ்து’ குறித்து விரிவாக எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நூலாகும். நகர அமைப்பு, கட்டடங்கள், கோயில்கள், கட்டடக்கலையின் அடிப்படைக் கோட்பாடுகள், சிற்பம், படிமக்கலை, அவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்ப விஷயங்கள் என இதன் உள்ளடக்கம் மிகவும் விரிவானது. இன்று கிடைக்கும் இந்நூலில் ஏறத்தாழ 7,500 செய்யுள்கள் உள்ளன. இது பொதுவாக வட இந்திய வாஸ்து மரபைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நூல் தனது கட்டடக்கலை அறிவின் மூலத்தை விஸ்வகர்மாவுடன் தொடர்புபடுத்துகிறது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம், நூலில் விவரிக்கப்படும் கட்டடக்கலைக் கோட்பாடுகளுக்கும் போஜனுடன் தொடர்புடைய பிரம்மாண்டமான கட்டுமானங்களுக்கும் இடையே காணப்படும் தொடர்பாகும்.
அதனை போஜ்பூரில் மிகத் தெளிவாகக் காணலாம்.
போஜ்பூரும் பிரம்மாண்டமான போஜேஸ்வரர் கோயிலும்
இன்றைய போபாலுக்கு அருகில் அமைந்துள்ள போஜ்பூர், போஜராஜனுடன் நெருங்கிய தொடர்புடைய இடமாகக் கருதப்படுகிறது. இங்கு மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் ஒன்றின் கட்டுமானம் உள்ளது. இன்று ‘போஜேஸ்வரர் கோயில்’ என்று அழைக்கப்படும் அந்த ஆலயம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை.


இக்கோயிலில் மிகப் பெரிய சிவலிங்கம் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான அளவில் திட்டமிடப்பட்ட கட்டடக்கலைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலை யார் கட்டுவித்தார் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தக்கூடிய கல்வெட்டு கோயிலில் இல்லை. இருப்பினும், தொல்லியல் சான்றுகள் இக்கோயிலை போஜராஜனின் காலத்துடன் வலுவாகத் தொடர்புபடுத்துகின்றன. இதைவிடச் சுவாரசியமான விஷயம், கோயிலைச் சுற்றியுள்ள பாறைகளின் மேற்பரப்பில் செதுக்கப்பட்டுள்ள கட்டடக்கலை வரைபடங்களும் திட்டங்களுமாகும். இடைக்கால இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான கட்டடத்தை உருவாக்குவதற்கு முன்னர் கட்டடக்கலைஞர்கள் எவ்வாறு திட்டமிட்டனர் என்பதற்கான அரிய சான்றுகளாக இவை திகழ்கின்றன.
இந்தப் பாறை வரைபடங்களுக்கும், ‘சமராங்கண சூத்ரதாரா’ நூலில் விவரிக்கப்படும் கட்டடக்கலை அறிவுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் போஜ்பூருக்கு ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தை அளிக்கிறது.
இப்பகுதியில் மிகப்பெரிய நீர் மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. போஜ்பூருடன் தொடர்புடைய அணைகளும் ஒரு பெரிய நீர்த்தேக்கமும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொறியியல் பணிகளின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துகின்றன. தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், போஜேஸ்வரர் கோயில் போஜராஜனின் காலத்தைச் சேர்ந்ததாகவும், குறிப்பாக அவரது ஆட்சியின் பிற்பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சமயம்
போஜராஜனின் சமயச் சார்பு அவரது ஆளுமையின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். அவரது சாசனங்கள் பலவும் சிவனைத் துதிக்கும் மங்கலச் செய்யுள்களுடன் தொடங்குகின்றன. உதய்பூர் சாசனம், சிவனின் பல்வேறு வடிவங்களுக்காக ஏராளமான கோயில்களை அவர் கட்டியதாகக் குறிப்பிடுகிறது.
இதைவிட முக்கியமானது, மரபுவழியாக போஜன் இயற்றியதாகக் கருதப்படும் ‘தத்துவப்பிரகாசம்’ என்னும் நூலாகும். இது சைவத் தத்துவ மரபைச் சேர்ந்த நூல். எனவே, போஜனின் சைவ ஈடுபாடு என்பது கோயில்களைக் கட்டுவதிலோ, சடங்குகளுக்கு ஆதரவளிப்பதிலோ மட்டும் நின்றுவிடவில்லை; சைவத் தத்துவத்திலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்ததை இது எடுத்துக்காட்டுகிறது.
போஜனின் தலைநகரான தாரா, அக்காலத்தைய அறிவுத்துறையின் மையமாகப் பெரும் புகழைப் பெற்றது. போஜசாலை என்ற மாபெரும் கோவில் சரஸ்வதி தேவிக்காக போஜராஜன் கட்டியதாகும். அங்கே ஆகம மரபுகளின் படி ஒரு பெரும் நூலகத்தை அமைத்து அங்கே வாக்தேவியான சரஸ்வதி தேவியைப் பிரதிஷ்டை செய்தார் போஜராஜன். பின்னாளில் அந்தக் கோவில் இடிக்கப்பட்டு வேறொரு வழிபாட்டுத்தலமாக அமைக்கப்பட்ட போதிலும் தற்போது தொல்லியல் துறையின் ஆய்வுகள் அங்கே இருந்த கோவிலின் கட்டுமானத்தை உறுதி செய்துள்ளன.

பரமாரர்களின் காலத்தில் தாரா, சமஸ்கிருத இலக்கியத்திற்கு மையமாகத் திகழ்ந்தது என்பதற்குப் பரந்த அளவிலான சான்றுகள் உள்ளன. அறிஞர்களை ஆதரித்த புரவலராக போஜன் பெற்ற புகழ் காலப்போக்கில் மிகப் பெரியதாக வளர்ந்தது. அதன் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த காளிதாசன் போன்ற புகழ்பெற்ற அறிஞர்களைக்கூட பிற்கால ஆசிரியர்கள் போஜராஜனின் அரசவையில் இடம்பெற்றவர்களாகச் சித்தரிக்கத் தொடங்கினர்.
இந்தியப் பண்பாட்டு மரபில் போஜராஜனுக்கு இன்றளவும் தனித்துவமான ஓர் இடம் இருப்பதற்கான காரணத்தை இது ஓரளவு விளக்குகிறது. பண்டைய இந்திய அரசியல் சிந்தனையில், புலமையும் அரசாட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி துறைகளாகக் கருதப்படவில்லை. ஒரு சிறந்த அரசன் தர்மம், அரசியல், நிர்வாகம், தத்துவம், போர் முறைகள், கலைகள் ஆகிய அனைத்தையும் அறிந்தவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. போஜராஜன் இந்த இலட்சியத்தை வழக்கத்திற்கு மாறாக மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றவராகத் தோன்றுகிறார்.
சாளுக்கியர்கள், காலச்சூரிகள், சந்தேலர்கள் ஆகியோருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்த ஓர் அரசர், அதே நேரத்தில் கட்டடக்கலை, கவிதையியல், இலக்கணம், யோகம், சைவத் தத்துவம் போன்ற அறிவுத்துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார் என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயமாகும். இந்த அரிய கலவையே போஜனை மற்ற அரசர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது.
அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஆட்சி செய்த ராஜேந்திர சோழருடன் போஜராஜனை ஒப்பிட்டுப் பார்த்தால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் புலப்படுகின்றன. இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் ஆட்சி செய்தவர்கள். ராஜேந்திர சோழர், சோழப் பேரரசை அதுவரை காணாத அளவிற்குப் புவியியல் ரீதியாக விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். தக்காணம் முழுவதும் படையெடுத்து, கங்கை வரை சென்று, வங்கக் கடலைக் கடந்து தனது படைகளைத் தென்கிழக்கு ஆசியா வரை அனுப்பினார். அதே காலத்தில், மத்திய இந்தியாவில் பரமாரர்களின் அரசியல் வலிமையை போஜன் வளர்த்துக் கொண்டிருந்ததுடன், தனது தலைநகரான தாராவை ஒரு முக்கியமான கல்வி மையமாகவும் உருவாக்கினார்.
இப்படி பொயு 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி இந்திய வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றாக விளங்கியது. சோழர்கள், பரமாரர்கள், சாளுக்கியர்கள், காலச்சூரிகள், சந்தேலர்கள் உள்ளிட்ட பல வலிமைமிக்க அரச வம்சங்கள் ஒரே காலத்தில் போர்த்திறனிலும் அரசியல் ஆதிக்கத்திலும் மட்டுமல்லாமல், கட்டடக்கலை, சமயம், கல்வி, புலமை ஆகிய துறைகளிலும் ஒன்றோடொன்று போட்டியிட்டு வளர்ந்த காலம் அது.
போஜராஜனின் மறைவு
பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் போஜராஜன் மறைந்தது பரமாரர்களுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவரது எதிரிகள் மாளவத்தின் மீது படையெடுத்தனர். போஜனின் ஆட்சிக்காலத்தில் பரமாரர்கள் பெற்றிருந்த வலிமையான அரசியல் நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள அந்த வம்சம் போராட வேண்டியிருந்தது. ஆனால் போஜனின் அரசியல் பேரரசு பலவீனமடைந்த பிறகு ஒரு வியப்பான நிகழ்வு நடந்தது. அவரது அறிவுப் பேரரசு விரிவடைந்தது.
அடுத்தடுத்த தலைமுறைகளைச் சேர்ந்த புலவர்களும் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து போஜராஜனின் பெயரைப் போற்றிக் குறிப்பிட்டனர். அவரைப் பற்றிய கதைகள் பெருகின. கோயில்கள், குளங்கள், நகரங்கள், அறிவு சார்ந்த நூல்கள் எனப் பலவும் அவருடன் தொடர்புபடுத்தப்பட்டன. இவற்றில் சில வரலாற்று ஆதாரங்களைக் கொண்டவை; மற்றவை காலப்போக்கில் வந்த புனைவுக்கதைகள்.
இதுவே போஜராஜனைப் பற்றி ஆராயும் வரலாற்றாசிரியரின் பணியைச் சவாலானதாக மாற்றுகிறது. கதைகளிலும் மரபுகளிலும் காணப்படும் போஜனை கல்வெட்டுகள் காட்டும் வரலாற்று போஜனுடன் ஒப்பிட்டுப் பார்த்தே உண்மையை அறிய வேண்டியுள்ளது. நல்லவேளையாக, போஜராஜனின் ஆட்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள் பன்ஸ்வாரா, பேட்மா, போஜ்பூர், தேபால்பூர், தாரா, கல்வான், கோகாபூர், பிப்லோடா, திலக்வாடா, உஜ்ஜயினி உள்ளிட்ட பல இடங்களில் அவரது ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
போஜராஜனின் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அவரது ஆட்சியாண்டுகள், பரமாரர்களின் வம்சாவளி, அவரது பட்டங்கள், நிலக்கொடைகள் போன்ற பல தகவல்களை வழங்குகின்றன. கொங்கணப் பகுதியை அவர் வென்றது போன்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்கும் அவை நேரடியான சான்றுகளைத் தருகின்றன. இத்தகைய கல்வெட்டுச் சான்றுகள்தான், நாட்டுப்புறக் கதைகளில் வாழும் போஜராஜனைக் கடந்து, உண்மையான வரலாற்று போஜனை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.
சொல்லப்போனால், கதைகளில் வரும் போஜராஜனைவிட, கல்வெட்டுகளும் சமகாலச் சான்றுகளும் நமக்குக் காட்டும் வரலாற்று போஜராஜன் இன்னும் சுவாரசியமானவர்.
(தொடரும்)

