சென்ற பகுதியில், பிருதிவிராஜ் சௌகானுக்குப் பிறகும் பாரதத்தில் அரசர்களின் வீர வரலாறு தொடர்ந்தது என்று பார்த்தோம். அப்படிப்பட்ட ஒரு பேரரசர்தான், இரண்டாம் பாண்டியப் பேரரசை உச்சத்திற்குக் கொண்டுசென்ற ஜடாவர்மன் சுந்தரபாண்டியர்.
சோழர்களிடம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் அடங்கிக் கிடந்த பாண்டியர்கள், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்தில் எழுச்சி அடைந்தனர். இரண்டு முறை சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற மாறவர்மன் சுந்தரபாண்டியன், சோழ அரசர் மூன்றாம் ராஜராஜனை வீழ்த்தி, சோழர்களின் தலைநகரில் விஜயாபிஷேகமும் வீராபிஷேகமும் செய்துகொண்டார். அதன்பின், மூன்றாம் ராஜராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சோழ நாட்டை ஆளும் உரிமையைத் திரும்ப அளித்தார். அதனால், ‘சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர்’ என்று அழைக்கப்பட்டார்.
இருந்தாலும், சோழ நாடு விரைவிலேயே பாண்டிய நாட்டின் பிடியிலிருந்து விடுபட்டது. அதற்குக் காரணம் ஹொய்சாளர்களின் தலையீடுதான். ஹொய்சாள அரசனான வீரநரசிம்மன், சோழர்களுக்குத் துணையாக வந்து பாண்டியர்களுடன் மோதினார். இதனால் பின்னடைவைச் சந்தித்த பாண்டியர்கள், ஹொய்சாளர்களுடன் மண உறவு கொண்டனர்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்தில், சோழ அரசனான மூன்றாம் ராஜேந்திரன் சோழர்களின் பகுதிகள் அனைத்தையும் மீட்டுக்கொண்டதோடு, மீண்டும் சோழப் பேரரசை உருவாக்குவதற்கும் முனைந்தான். ஆனால், மீண்டும் தமிழக அரசியலில் தலையிட்ட ஹொய்சாளர்களினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஆட்சிக்காலம்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரியணை ஏறியவர்தான் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். பொயு 1251ம் ஆண்டு பாண்டியர்களின் அரசராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சுந்தரபாண்டியர், சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.
பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப
நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறைய
என்று தொடங்கும் இவரது மெய்க்கீர்த்தி சுந்தரபாண்டியரது வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. ஒரு மன்னனின் வெற்றிகளை வெறும் புகழுரையாக மட்டும் கூறாமல், அவனது படையெடுப்புகளின் பரப்பையும் அரசியல் மேலாதிக்கத்தையும் பதிவு செய்யும் முக்கியமான வரலாற்று ஆவணமாக இந்த மெய்க்கீர்த்தி விளங்குகிறது.
போர் வெற்றிகள்
சேர நாட்டின் வேணாடு பகுதியை அப்போது ஆண்டுகொண்டிருந்த வீரரவி உதயமார்த்தாண்ட வர்மன் மீதுதான் சுந்தரபாண்டியனின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது. இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும், சேரர் படைகளை வீழ்த்தி, பாண்டியப் படைகள் பெருவெற்றி பெற்றன.
அதன் பின்னர், சுந்தரபாண்டியர் தனது கவனத்தைச் சோழ நாட்டின் மீது திருப்பினார். மீண்டும் தனி ஆட்சியை நிறுவ முயன்றுகொண்டிருந்த சோழர்களை முறியடிக்கவில்லை என்றால், பாண்டியர்களின் ஆதிக்கம் நிலைக்காது என்பதை உணர்ந்த சுந்தரபாண்டியர், அவர்களை அடியோடு அகற்றும் முயற்சியில் இறங்கினார். மூன்றாம் ராஜேந்திரனுடன் நடந்த போரில் வெற்றிபெற்று, சோழர்களின் ஆட்சிப்பகுதியை முற்றிலுமாகப் பாண்டிய நாட்டுடன் இணைத்துக்கொண்டார் சுந்தரபாண்டியர்.
அத்தோடு நிற்காமல், தனது படையை வடக்கு நோக்கி நடத்திய சுந்தரபாண்டியர், தொண்டை மண்டலத்தில் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த காடவர் தலைவன் கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்தார். பாண்டியப் படை சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டு, கோப்பெருஞ்சிங்கனின் யானைகள், குதிரைகள், செல்வங்களைக் கைப்பற்றியதாகப் பாண்டியர் ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், கோப்பெருஞ்சிங்கனை முற்றாக அழிக்காமல், மீண்டும் அவருக்கே நாட்டை வழங்கி, தமக்குத் திறை செலுத்தும் சிற்றரசராக ஆட்சி செய்ய அனுமதித்தார் சுந்தரபாண்டியர்.
சுந்தரபாண்டியரின் படையெடுப்புகள் தமிழக எல்லையில் நின்றுவிடவில்லை. வடக்கே அவரது படைகள் காஞ்சிபுரத்தைத் தாண்டி நெல்லூரை நோக்கிச் சென்றன. தெலுங்குச் சோழ அரசனான விஜயகண்ட கோபாலனை எதிர்த்துப் போரிட்டு அவனை வீழ்த்திய பின்னர், வட தமிழகத்திலும் தெற்கு ஆந்திரப் பகுதியிலும் பாண்டியர்களின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் நெல்லூரை நோக்கி நகர்ந்த பாண்டியப் படைகள், அங்கு காகதீயர் ஆதரவு பெற்ற கூட்டணியையும் எதிர்கொண்டன. முடுகூர் அல்லது முத்துக்கூர் பகுதியில் நடந்த போரில் பாண்டியப் படைகள் பெரும் வெற்றி பெற்றன. காகதீய அரசன் கணபதிதேவனின் செல்வாக்குக்கு இது ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது.
நெல்லூரில் தனது வடதிசைப் படையெடுப்பின் வெற்றியை அறிவிக்கும் வகையில் சுந்தரபாண்டியர் வீராபிஷேகம் செய்துகொண்டார். ‘மகாராஜாதிராஜ ஸ்ரீ பரமேஸ்வரன்’ போன்ற பேரரசுப் பட்டங்கள் அவரது கல்வெட்டுகளில் இடம்பெறுகின்றன. காஞ்சி அவரது முக்கியமான அதிகார மையங்களில் ஒன்றாக மாறியதால், ‘கச்சி வழங்கும் பெருமாள்’ போன்ற பட்டங்களும் பாண்டியர் நாணயங்களில் காணப்படுகின்றன.
இப்படி, வடதிசைப் படையெடுப்பில் பெருவெற்றி பெற்று மதுரை நோக்கித் திரும்பும் வழியில், ஹொய்சாளர்களை பாண்டியர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. திருச்சிராப்பள்ளி அருகே இருந்த கண்ணனூர் (சமயபுரம்), அக்காலத்தில் தமிழகத்தில் ஹொய்சாளர்களின் முக்கியமான தளமாக இருந்தது. அங்கு இருந்த போசளப் படைகளுடன் நடந்த கடுமையான போரில், சிங்கணன் உள்ளிட்ட தண்டநாயகர்கள் கொல்லப்பட்டனர்; கண்ணனூர் கோட்டையைப் பாண்டியர்கள் கைப்பற்றினர்.
பின்னர், போசள மன்னன் வீரசோமேசுவரனுடன் மோதிய பாண்டியர்கள், அவனையும் தோற்கடித்து, தமிழகத்திலிருந்து போசள ஆதிக்கத்தை அகற்றினர். இதன் தொடர்ச்சியாக, கொங்கு நாடும் பாண்டிய மேலாதிக்கத்துக்கு வந்தது. ஸ்ரீரங்கம் கல்வெட்டில் சுந்தரபாண்டியர் ‘கர்நாடக சோமனை விண்ணுலகிற்கு அனுப்பியவர்’ எனப் புகழப்படுவது, சோமேசுவரனின் மரணத்தைக் குறிப்பதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
இன்றைய சேலம், திருவண்ணாமலைப் பகுதிகளை ஒட்டியிருந்த பகுதி மகதை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த மகதை மண்டலத்தை வாணகோவரையர்கள் ஆண்டு வந்தனர். இந்த மகதை நாட்டின் மீது படையெடுத்த சுந்தரபாண்டியர், வாணகோவரையர்களை வென்று, அவர்களைத் தனது சிற்றரசர்களாக ஆக்கிக்கொண்டார். சுந்தரபாண்டியரின் அரசியல் செல்வாக்கு இலங்கையையும் சென்றடைந்தது.
பொயு 1258இல் இலங்கையின் வடபகுதியில் ஆட்சி புரிந்த சந்திரபானுவை எதிர்த்து பாண்டியர்கள் போரிட நேர்ந்தது. சந்திரபானு பாண்டிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு யானைகள், ரத்தினங்கள் உள்ளிட்டவற்றைத் திறையாக வழங்க வேண்டிய நிலைக்கு வந்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மீண்டும் அதிகாரத்தை விரிவுபடுத்த முயன்றபோது, சுந்தரபாண்டியரின் சார்பில் செயல்பட்ட சடையவர்மன் வீரபாண்டியன் இலங்கைக்குச் சென்று அவனைப் போரில் கொன்றான். இதன் மூலம் வட இலங்கையிலும் பாண்டிய மேலாதிக்கம் வலுவடைந்தது. இலங்கையில் பெற்ற இந்த வெற்றி காரணமாக ‘த்விதீய ராமன்’ அதாவது இரண்டாவது ராமன் என்ற பெயரிட்ட நாணயங்களை சுந்தரபாண்டியர் வெளியிட்டார்.
சுந்தரபாண்டியரின் பெருமை
ஜடாவர்மன் சுந்தரபாண்டியரின் ஆட்சியைப் புரிந்துகொள்ள, அவர் வென்ற நாடுகளின் பட்டியல் மட்டும் போதாது. பொயு 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியாவின் அரசியல் சமநிலையை முற்றிலுமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. சோழர்களின் பல நூற்றாண்டுகால மேலாதிக்கம் முடிவுக்கு வந்துகொண்டிருந்த வேளையில், போசளர்களின் தமிழகச் செல்வாக்கையும் கட்டுப்படுத்தி, காடவர்களையும் தெலுங்குச் சோழர்களையும் அடக்கி, நெல்லூர் வரை தனது படைகளை நகர்த்தி, இலங்கையிலும் தனது அதிகாரத்தை உணர்த்தியவர் அவர்.
கன்னியாகுமரியிலிருந்து நெல்லூர் வரை பரந்த ஒரு தென்னிந்தியப் பேரரசின் மையமாக மதுரையை மீண்டும் உயர்த்திய பெருமை ஜடாவர்மன் சுந்தரபாண்டியருக்குரியது. இப்படிச் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றதன் காரணமாக, ‘சமஸ்த ஜகத் ஆதார சோம குல திலக’ என்று சமஸ்கிருதத்திலும், ‘எம்மண்டலமும் கொண்ட பெருமாள்’ என்று தமிழிலும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியர் புகழப்படுகிறார்.

தனது புகழைப் போற்றும் வகையிலும், இது போன்ற விருதுப் பெயர்களைக் கொண்டும் நாணயங்களை வெளியிட்டார் சுந்தரபாண்டியர். ‘எல்லாந்தலையான’, ‘கச்சி வழங்கும் பெருமாள்’, ‘கோதண்டராமன்’ போன்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், இன்றும் அவருடைய பெருமைகளுக்குச் சான்றாக உள்ளன. ‘எல்லாந்தலையான பெருமாள்’ என்பது, மற்ற அரசர்களுக்கெல்லாம் தலைவனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பேரரசுத் தன்மையை வெளிப்படுத்தும் பட்டமாகக் கருதலாம்.
சமயப் பணிகள்
இப்படித் தனது வெற்றிகளால் பெரும் புகழை அடைந்தாலும், சுந்தரபாண்டியரின் பெருமை போர் வெற்றிகளால் மட்டும் நிலைத்திருக்கவில்லை. தமிழகத்தின் பல கோவில்களைத் திருப்பணி செய்து, அவற்றிற்குப் பெரும் கொடைகளை அளித்த பெருமையும் சுந்தரபாண்டியரைச் சாரும். அம்மன் கோவில்கள் இல்லாத சோழர் காலக் கோவில்களில் அம்மனுக்கான சன்னதிகளைப் பாண்டியர்கள், குறிப்பாகச் சுந்தரபாண்டியர், கட்டினர். தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னதியைக் கட்டியவரும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியரே ஆவார். அவரது சிலை அந்தக் கோவிலின் சுற்றுச்சுவரில் காணப்படுகிறது.

அதேபோல, திருமலையில் உள்ள திருவேங்கடமுடையானின் ஆலயத்தில் பல திருப்பணிகளைச் செய்து, அதைச் செம்மையாக எழுப்பியவரும் சுந்தரபாண்டியர்தான். இன்று நாம் காணும் ஆலயத்தின் பெரும்பகுதி பாண்டியர் கட்டடக் கலையின் தாக்கத்தைக் கொண்டதாகும். தமிழகத்தின் முக்கியமான கோவில்களான காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகியவற்றின் விமானங்களுக்குப் பொன் வேய்ந்த பெருமையும் சுந்தரபாண்டியருக்கே உரியது.
சிதம்பரம் கோவிலில் உள்ள அருமையான கல்வெட்டுப் பாடல் ஒன்று இதைப் பற்றிச் சொல்லும்போது,
பிறையும் அரவம் யிறங்கு சடைமுக்கண்
இறைவனின் றாட விருந்தான் – நிறைகடற்பார்
சேலிட்ட தென்னவன் செம்பொன் திருமன்றில்
மேலிட்ட பொற்றுலையின் மேல்
பிறையையும் நாகத்தையும் அணிந்துகொண்ட முக்கண் இறைவன், மீனைச் சின்னமாகக் கொண்ட பாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பொன் வேய்ந்த அம்பலத்தின் மேல் ஆடுகிறான் என்கிறது இந்தப் பாடல்.
ஶ்ரீரங்கம் துலாபார தானம்
அதேபோல, ஶ்ரீரங்கத்தில் அவர் செய்த துலாபார தானமும் சாதாரணமானது அல்ல. பொதுவாக, துலாபாரத்தில் ஒருவர் தராசின் ஒரு தட்டில் அமர்ந்து, அவரது உடல் எடைக்கு நிகரான தங்கம், தானியம் அல்லது பிற பொருட்களை மற்றொரு தட்டில் வைத்து, அவற்றைத் தானமாக வழங்குவார்கள்.
ஆனால், ஜடாவர்மன் சுந்தரபாண்டியர் செய்த துலாபார தானம் அதைவிட மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. ஒரு யானையின் மீது இருந்த அம்பாரியில் அவர் தனது அரசியுடன் அமர்ந்துகொண்டார். அந்த யானை ஒரு பெரிய மிதவையின் மீது ஏற்றப்பட்டது. மன்னன், அரசி, யானை ஆகியவற்றின் மொத்த எடையால் அந்த மிதவை நீரில் எந்த அளவுக்கு மூழ்கியதோ, அதே அளவுக்கு மூழ்கும் வகையில் மற்றொரு மிதவையில் தங்கமும் நகைகளும் ஏற்றப்பட்டன. இவ்வாறு கணக்கிடப்பட்ட பெரும் அளவிலான தங்கம், காசுகள், ஆபரணங்கள் ஆகியவை கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்டன.
கோயிலின் முக்கியப் பகுதிகளுக்குப் பொன் வேய்தல், நரசிம்மர் உள்ளிட்ட சன்னதிகளை அமைத்தல், பொற்கலன்கள் வழங்குதல் என்று ஶ்ரீரங்கத்தில் அவர் செய்த கொடைகள் நீண்ட பட்டியலைக் கொண்டவை.

அங்கேயுள்ள ஒரு கல்வெட்டு இந்த விவரங்களைத் தெளிவாகப் பொறித்துள்ளது. சைவ சமயத்தைப் பின்பற்றிய சுந்தரபாண்டியர், அதே அளவிலான பக்தியுடன் ஶ்ரீரங்கத்துக்கும் கொடை வழங்கியிருப்பது, பாண்டிய அரசர்களின் சமயப் பார்வையை நமக்குக் காட்டுகிறது.
சுந்தரபாண்டியர் தனது பட்டப்பெயர்களின் பெயரில் கோயில்களில் சந்திகள், திருவிழாக்கள், நிவந்தங்கள் ஆகியவற்றை நிறுவினார். அவரது பிறந்த நாளான சித்திரை மாத மூல நட்சத்திர நாளில் விழாக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. ‘சுந்தரபாண்டியன் சந்தி’, ‘கோதண்டராமன் சந்தி’ போன்ற பெயர்களில் வழிபாடுகள் நடந்துள்ளன என்பதை அவை குறிக்கின்றன.
பாண்டியப் பேரரசு ஜடாவர்மன் சுந்தரபாண்டியரின் ஆட்சியில் தனது உச்சத்தை எட்டியது. போர் வெற்றிகளால் குவித்த செல்வத்தைச் சிதம்பரம், ஶ்ரீரங்கம் போன்ற பெருங்கோயில்களின் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தியதால், அவர் வெறும் வெற்றியாளராக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் கலை மரபில் அழியாத தடம் பதித்த மன்னராகவும் திகழ்கிறார்.
சுந்தரபாண்டியரைப் பற்றிய மிக அழகான நினைவுச் சின்னங்களில் ஒன்று, காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழி பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுப் பாடல். சில வரிகளிலேயே அவரது ஆட்சியின் முழுச் சிறப்பையும் அது சுருக்கிக் கூறுகிறது:
வாழ்க கோயில் பொன் வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே.
கோயில்களைப் பொன்னால் அலங்கரித்த மன்னர், செந்தமிழை அறிந்தவர், மண்டலங்கள் அனைத்தையும் தனது அதிகாரத்திற்குள் கொண்டவர், தென்னாட்டின் பெருமைமிக்க சுந்தரபாண்டியர் என்று அவரை வாழ்த்துகிறது அந்தக் கல்வெட்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியரின் வரலாற்றை நான்கு வரிகளில் இவ்வளவு பொருத்தமாகச் சுருக்கிக் கூற இயலாது என்பதே உண்மை.
(தொடரும்)

