ஏப்ரல் 12, 1945. மாலை சரியாக 5.25. அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்த ஹாரி எஸ். ட்ரூமனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அங்கு வந்த ட்ரூமனின் தோள் மீது கை வைத்த எலினார் ரூஸ்வெல்ட், மென்மையாக அந்த வார்த்தைகளைச் சொன்னார். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலக வரலாற்றின் திசையையே மாற்றப்போகும் வார்த்தைகள் அவை: ‘ஹாரி, அதிபர் இறந்துவிட்டார்.’
அதிர்ச்சியிலிருந்து மீண்ட ட்ரூமன், ‘நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு எலினார் மிகக் கண்ணியமாக, ‘இல்லை ஹாரி, நாங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று சொல்லுங்கள். இப்போது உண்மையான சிக்கலில் மாட்டியிருப்பது நீங்கள்தான்’ என்றார். ஜனநாயக வரலாற்றில், சற்றும் முன்தயாரிப்பு இல்லாத ஒருவரின் தோள்களில் இவ்வளவு பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டது அதுவே முதல்முறை. ஆனால் வரலாறு பல நேரங்களில் நமது கணிப்புகளைப் பொய்யாக்கிவிடும் அல்லவா? பனிப்போரின் ஆரம்பக் கட்டத்தில் உலக அரங்கில் நின்ற தலைவர்கள், வெளியில் தெரிந்த பிம்பங்களைவிட உள்ளுக்குள் பல மடங்கு சிக்கலானவர்களாகவும் ஆழமானவர்களாகவும் இருந்தார்கள்.
ட்ரூமனைப் பார்த்தால் ஓர் உலகத் தலைவர்போல் தெரியமாட்டார். தடிமனான கண்ணாடியோடு, ஏதோ ஒரு சின்ன ஊர் வங்கியில் வேலை பார்க்கும் கிளார்க்போலத்தான் இருப்பார். ஆனால், அந்த எளிமையான தோற்றத்துக்குப் பின்னால், பல தோல்விகளைத் தாண்டி வந்த ஓர் இரும்பு மனம் இருந்தது. 1922இல் அவர் தொடங்கிய துணிக்கடை வியாபாரம் பெரும் நஷ்டமாகி, அந்தக் கடனை அடைக்கவே பத்தாண்டுகள் போராடியவர் அவர். வறுமையும் கஷ்டமும் மட்டும்தான் ஒரு மனிதனுக்கு இவ்வளவு பெரிய தாங்கும் சக்தியைக் கொடுக்க முடியும். அவர் துணை அதிபராக இருந்தது வெறும் 82 நாட்கள்தான். உலக அரசியல் குறித்து ரூஸ்வெல்ட் அவருக்கு எந்த ஆலோசனையும் வழங்கியதில்லை. யால்டா ஒப்பந்தங்கள், அணுகுண்டுக்கான மன்ஹாட்டன் திட்டம், சோவியத் யூனியனின் அத்துமீறல்கள் என எதுவுமே அவருக்குத் தெரியாது. முன் அனுபவம் இல்லை என்ற குறையை, தனது அதிரடியான முடிவெடுக்கும் திறனால் ஈடு செய்தார் ட்ரூமன். ஒரு போக்கர் விளையாட்டு வீரனைப்போல, எதிரியின் பலத்தை எடைபோட்டுவிட்டுத் தயங்காமல் களத்தில் இறங்குவதுதான் அவர் பாணி. சோவியத் வெளியுறவுத்துறை அமைச்சர் மொலடோவை முதல்முறை சந்தித்தபோதே ட்ரூமனின் இந்த ‘ஸ்டைல்’ தெரிந்துவிட்டது. ட்ரூமனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மொலடோவ், ‘என் வாழ்நாளில் யாருமே என்னிடம் இப்படிப் பேசியதில்லை’ என்றார். அதற்கு ட்ரூமன் சாதாரணமாக, ‘உங்கள் ஒப்பந்தங்களை ஒழுங்காக மதித்து நடங்கள். யாரும் உங்களிடம் இப்படிப் பேச மாட்டார்கள்’ என்று பதிலடி கொடுத்தார்.
மறுபக்கம், சோவியத் யூனியனின் அதிபரான ஸ்டாலின், டிஃப்லிஸ் இறையியல் கல்லூரியில் படித்தவர். ஆனால் அவர் கிறிஸ்தவ அன்பைக் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, சூழ்ச்சியையும் தந்திரத்தையும் கற்றுக்கொண்டார். அதுதான் அடுத்த ஐம்பது வருடங்களுக்கு அவரது அரசியலுக்கும் ஆட்சிக்கும் உதவியது. அவரது ஆரம்பகால வாழ்க்கையே வங்கிக் கொள்ளைகள், கைதுகள், சைபீரிய நாடுகடத்தல்கள் என்றுதான் கழிந்தன. மற்ற போல்ஷிவிக் தலைவர்களைப்போல அவர் பெரிய சிந்தனையாளர் அல்ல. ஆனால், அவருக்கு ஓர் அசுரத்தனமான பொறுமை இருந்தது. நண்பர்கள், எதிரிகள் என அனைவரைப் பற்றியும் ரகசியக் கோப்புகளைத் தயாரிப்பதில் கில்லாடி. ட்ராட்ஸ்கி ஒருமுறை ஸ்டாலினைப் பார்த்து, ‘கட்சியிலேயே மிகச் சாதாரணமான ஒரு சுமாரான ஆள் இவன்தான்’ என்று ஏளனம் செய்தார். அந்த ‘சுமாரான ஆள்’ எவ்வளவு ஆபத்தானவன் என்பதைக் குறைத்து மதிப்பிட்டதே ட்ரொட்ஸ்கியின் உயிருக்கு உலை வைத்தது. 1945 வாக்கில், ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டாலே பயம் என்ற நிலையை அவர் உருவாக்கிவிட்டார். அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள்கூட, கிரெம்ளின் மாளிகையிலிருந்து அழைப்பு வந்தால், ‘நாம் திரும்ப வீட்டுக்குப் போவோமா அல்லது லுபியான்கா சிறைக்குப் போவோமா?’ என்று அஞ்சும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
போட்ஸ்டாம் மாநாட்டுக்கு (Potsdam Conference) வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டன் பிரதமராக வந்தார். ஆனால் மாநாடு பாதியில் நடக்கும்போதே, எதிர்க்கட்சித் தலைவராகத் திரும்பினார். பிரிட்டன் மக்கள் எந்த ஒரு நன்றியுணர்வும் இல்லாமல் தேர்தலில் அவரைத் தோற்கடித்திருந்தார்கள். பதவியை இழந்தாலும், ஓர் உலகத் தலைவருக்கான தார்மீக அதிகாரம் அவரிடம் அப்படியே இருந்தது. 1946 மார்ச் 5ஆம் தேதி, மிசௌரியின் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியில் அவர் ஓர் உரை நிகழ்த்தினார். பல மாதங்களாக ராஜதந்திரிகள் தயங்கிய ஓர் உண்மையை அவர் போட்டு உடைத்தார்: ‘பால்டிக் கடலின் ஸ்டெட்டினில் இருந்து அட்ரியாட்டிக் கடலின் ட்ரைஸ்டே வரை, ஐரோப்பாவின் குறுக்கே ஓர் இரும்புத்திரை இறங்கியிருக்கிறது.’
ஐரோப்பாவின் வரைபடத்தை மனக்கண்ணில் கொஞ்சம் விரித்துப்பாருங்கள். வடக்கே உறையும் குளிர்கொண்ட பால்டிக் கடல். அங்கே இருக்கும் துறைமுக நகரமான ஸ்டெட்டின் (இன்றைய போலந்தில் உள்ளது). அங்கிருந்து அப்படியே ஐரோப்பாவின் மையவாட்டில் தெற்கு நோக்கி ஒரு நெடிய கோடு கிழித்தால், கீழே வெதுவெதுப்பான அட்ரியாட்டிக் கடல் கரையில் உள்ள இத்தாலிய நகரமான ட்ரைஸ்டே வந்து சேரும். இந்த இரண்டு புள்ளிகளையும் இணைத்து, ஒட்டுமொத்த ஐரோப்பாக் கண்டத்தையும் செங்குத்தாக இரண்டு துண்டுகளாக வெட்டிக்காட்டினார் சர்ச்சில். அந்தப் பிளவுக்குக் கிழக்கே இருப்பது சோவியத் யூனியனின் இரும்புப்பிடியில் சிக்கிய சர்வாதிகார உலகம்; மேற்கே இருப்பது அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனநாயக உலகம் என்பது அவர் கூற்று.
‘இரும்புத்திரை’ என்பது ஏதோ இலக்கிய நயத்திற்காகச் சொல்லப்பட்ட வெற்றுவார்த்தை அல்ல. அந்தத் திரைக்குப் பின்னால் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள், போலந்து, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா என அனைத்தும் வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. சுதந்திரப் பத்திரிகைகள் முடக்கப்பட்டன. எல்லைகளில் முள்வேலிகள் முளைத்தன. மக்கள் சுதந்திரமாக வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. ஒரு பிரம்மாண்டமான சிறைச்சாலைக்குள் பாதி ஐரோப்பா பூட்டப்பட்ட படுபயங்கரமான நிஜத்தைத்தான் சர்ச்சில் அந்த ஒற்றை வரியில் உலகத்தின் முகத்தில் அறைந்து சொன்னார்.
முதலில் இது அநாவசியமான ஒரு சீண்டல் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், கள நிலவரத்தை அதைவிடத் துல்லியமாக எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது என்பதை பின்பு உலகத்துக்குப் புரிந்தது. பனிப்போர் வரலாற்றில் அந்த வார்த்தை ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டது.
சர்ச்சிலுக்குப் பின் வந்த கிளமென்ட் அட்லி, அவருக்கு நேர் எதிரானவர். குள்ளமான உருவம், மென்மையான பேச்சு. ஆனால், சோவியத் ஆதிக்கத்தைத் தடுப்பதில் சர்ச்சிலைவிட அட்லி உறுதியாக நின்றார். நேட்டோ அமைப்பிலும், பெர்லின் ஏர்லிஃப்ட்டிலும் பிரிட்டனை இணைத்ததில் இவருடைய அமைதியான, ஆனால் ஆழமான முடிவெடுக்கும் திறன் வெளிப்பட்டது. ஒருபக்கம் பிரிட்டனில் தேசிய சுகாதார சேவையை உருவாக்கிக்கொண்டே, மறுபக்கம் ஆரம்பகால பனிப்போரின் ஆபத்தான அலைகளை வெற்றிகரமாகக் கையாண்டார் அட்லி.
ஆரம்பக்காலப் பனிப்போரின் மிக முக்கியமான அறிவார்ந்த சிந்தனையாளர், ஜார்ஜ் கென்னன். அவர் மிகத் துயரமான ஒரு பாத்திரமும்கூட. பிப்ரவரி 22, 1946. கடுமையான காய்ச்சலிலும், பல நாள் விரக்தியிலும் படுத்த படுக்கையாக இருந்த கென்னன், 8000 வார்த்தைகள் கொண்ட அந்தப் புகழ்பெற்ற நீண்ட தந்தியை எழுதினார். அதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது. ‘ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு எண்ணங்களைப் பொறுமையாகவும், அதேசமயம் உறுதியாகவும் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று எழுதினார் அவர். ஓர் அரசியல் ரீதியான கட்டுப்பாட்டை அவர் வலியுறுத்தினார். ஆனால், அமெரிக்க அரசோ அதை NSC-68 என்ற திட்டத்தின் மூலம் ஒரு முரட்டுத்தனமான ராணுவ மோதலாக மாற்றியது. தனது சிந்தனையை உலகமே தவறாகப் புரிந்துகொண்டு ஒரு பெரும் போருக்குத் தயாராவதைப் பார்த்து கென்னன் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இவர்களுக்குச் சவாலாக நின்ற சோவியத் தலைவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. 1939-1949 மற்றும் 1953-1956 வரை சோவியத் வெளியுறவு அமைச்சராக இருந்த வியாசெஸ்லாவ் மொலடோவ் – மேற்கத்திய நாடுகளால் ‘மிஸ்டர் நோ’ என்று அழைக்கப்பட்டவர். ஸ்டாலினுக்கு எந்த அளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். ஒருமுறை இவருடைய மனைவியின் மீதே பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அப்போதும் மொலடோவ் அதை எதிர்க்காமல் அமைதியாக நின்றார். சோவியத் அரசியலின் மூர்க்கத்தனமான உளவியலுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. 1947இல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வதேச அமைப்பான ‘கோமின்ஃபார்ம்’ அமைப்பை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய ஆண்ட்ரே ஜ்டானோவ், உலகத்தை இரு துருவங்களாகப் பிரித்த ‘இரண்டு முகாம்கள்’ கோட்பாட்டை உருவாக்கியவர். 1948இல் இவர் மர்மமான முறையில் இறந்தார்.
லாவ்ரென்டி பெரியா, சோவியத் ரகசியப் போலீஸ் அமைப்பான NKVDயின் தலைவர். கிளாஸ் ஃபூக்ஸ் மற்றும் ஜூலியஸ் ரோசன்பெர்க் மூலம் அமெரிக்காவின் அணுக்கரு ரகசியங்களைத் திருடியவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மாஸ்கோ வீதிகளில் காரில் சுற்றி வந்து தனக்கான பாலியல் இரை தேடும் ஒரு வக்கிர புத்தி கொண்டவர். எந்த அமைப்பில் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறதோ, அங்குதான் மனிதனின் உச்சக்கட்ட வக்கிரம் வெளிப்படும் என்பதற்குப் பெரியா ஒரு வாழும் சாட்சி.
மேற்கத்தியத் தலைவர்களுக்குத் துணையாக மேலும் மூன்று முக்கிய நபர்கள் இருந்தார்கள். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத் தலைமைப் பணியாளராகப் பணியாற்றி பின், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பதவிகளை வகித்த ஜார்ஜ் மார்ஷல் ,1947 ஜூனில் தனது ‘ஐரோப்பிய மீட்புத் திட்டத்தை’ (மார்ஷல் திட்டம்) அறிவித்தார். ஏழ்மையும் வறுமையும்தான் கம்யூனிசப் பரவலுக்குத் தீனி போடுகின்றன என்பதை உணர்ந்து, ராணுவ பலத்தைவிடப் பொருளாதார முன்னேற்றமே மிகப்பெரிய ஆயுதம் என்று அவர் நினைத்தார். கிளமென்ட் அட்லியின் தலைமையிலான தொழிலாளர் கட்சி அரசாங்கத்தில் வெளியுறவுச் செயலாளராக இருந்த எர்னஸ்ட் பெவின், கடுமையான இதய நோயோடும் போராடி, ஐரோப்பியப் பாதுகாப்பிற்கான ஒப்பந்தங்களைச் சாத்தியமாக்கினார். மார்ஷலுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராகப் பொறுப்பேற்ற டீன் அச்சேசன், ஒரு சாதாரணப் பின்னணியிலிருந்து வந்த ட்ரூமனுக்குத் தேவையான அரசியல் அறிவை ஊட்டியவர். ஆனால் அவரது அதீத கர்வம், அவரை அமெரிக்க நாடாளுமன்றவாதிகளுக்குப் பிடிக்காத ஒரு நபராகவே வைத்திருந்தது.
இந்த முதன்மைத் தலைவர்களைத் தாண்டி வேறு சிலரும் வரலாற்றை வடிவமைத்தார்கள். ஜோசப் ப்ரோஸ் டிட்டோ, யூகோஸ்லாவியாவின் தலைவர். 1948இல் வேறு எந்த கம்யூனிஸ்ட் தலைவரும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்தார். ஸ்டாலினின் உத்தரவை மதிக்காமல் திருப்பி அனுப்பியதோடு, ‘இனிமேல் என்னைச் சுட்டுத் தள்ள ஆட்களை அனுப்பினால், நான் மாஸ்கோவுக்கு ஓர் ஆளை அனுப்புவேன். அந்த வேலையை முடிக்க வேறொருவனை அனுப்பிடத் தேவை எழும்பாது’ என்று வெளிப்படையாகவே மிரட்டினார். அமெரிக்காவின் உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐயின் முதல் இயக்குநரான ஜே. எட்கர் ஹூவர், அரசியல் தலைவர்களைப் பற்றிய ரகசியக் கோப்புகளை வைத்துக்கொண்டு, பல அமெரிக்க அதிபர்களையே ஆட்டிப்படைத்தார். 1949 முதல் 1963 வரை மேற்கு ஜெர்மனியின் முதல் அதிபராகப் பணியாற்றிய கான்ராட் அடினாவர் தனது 73வது வயதில் மேற்கு ஜெர்மனியை மேற்கத்தியக் கூட்டணியில் இணைக்கப் போராடினார். கொரியாவில் கிம் இல்-சுங் மற்றும் சிங்மேன் ரீ இருவரும், 1950இல் கொரியப் போருக்கு வித்திட்டார்கள்.
முதன்மைத் தலைவர்களுக்குப் பின்னால் நின்ற சில 2ஆம் கட்டத் தலைவர்களின் செல்வாக்கு, அவர்களின் பதவிகளைவிட மிகப்பெரியதாக இருந்தது. டெஹ்ரான் முதல் போட்ஸ்டாம் வரை நடந்த அனைத்து நேச நாட்டு மாநாடுகளிலும் பங்கேற்று, அமெரிக்க ராஜதந்திரத்திற்கு ஒரு நிறுவனத் தொடர்ச்சியை வழங்கிய சார்லஸ் போஹ்லன் வெறும் அமெரிக்க அதிகாரி அல்ல. ஒரு மிகச்சிறந்த ரஷ்ய மொழி நிபுணர். இரண்டாம் உலகப்போர் மாநாடுகளில் அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக அமர்ந்திருந்தவர் இவர்தான். வார்த்தைகளை மட்டும் இவர் மொழிபெயர்க்கவில்லை. ஸ்டாலினின் உடல்மொழியையும், அவருடைய மன ஓட்டத்தையும் நுட்பமாகப் படித்து அமெரிக்காவிற்குச் சொன்னவர்.
ஜார்ஜ் கென்னனின் ‘கட்டுப்படுத்துதல்’ கொள்கையை NSC-68 என்ற திட்டத்தின் மூலம் ராணுவமயமாக்கிய பால் நிட்சே, போருக்குப் பிந்தைய சோவியத் யூனியனின் நோக்கங்கள் குறித்து மாஸ்கோவிலிருந்து மிக முன்கூட்டியே அதிகாரபூர்வமான எச்சரிக்கைகளை அனுப்பிய மாஸ்கோவுக்கான அமெரிக்கத் தூதர் அவெரெல் ஹாரிமன் ஆகியோர் அமெரிக்கத் தரப்பில் குறிப்பிடத்தக்கவர்கள். மறுபக்கம் சோவியத் தரப்பில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘சித்தாந்தக் காவலர்’ மிகைல் சுஸ்லோவின் சித்தாந்தக் கண்காணிப்பும், ஸ்டாலினின் வலதுகரமாக இருந்து மாபெரும் சுத்திகரிப்புகளில் (பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றதில்) அவருக்கு நேரடியாக உதவிய ஜார்ஜி மாலென்கோவின் அதிகார ஆசையும்தான், ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு வரப்போகும் வாரிசுப் போராட்டத்தை முன்கூட்டியே தீர்மானித்தன.
இந்த விசித்திரமான மனிதர்களைக் கொஞ்சம் வரிசையாகப் பாருங்கள். துணிக்கடை நடத்தி நஷ்டமடைந்தவர் (ட்ரூமன்), இறையியல் கல்லூரியில் உருவான கிளர்ச்சியாளர் (ஸ்டாலின்), எதிர்க்கட்சி வரிசையிலிருந்து ஆபத்தை எச்சரித்த தீர்க்கதரிசி (சர்ச்சில்), அமைதியான அட்லி, அதிபுத்திசாலியான கென்னன், அதீத கர்வம் கொண்ட அச்சேசன், யூகோஸ்லாவியாவின் கலகக்காரர் (டிட்டோ), மற்றும் கொரியாவின் பகடைக்காய்கள். இவர்களைப் பார்க்கும்போது ஓர் உண்மை நம் முகத்தில் அறைகிறது: வரலாறு என்பது ஏதோ இயந்திரகதியில் தானாகவே அரங்கேறும் ஒன்றல்ல. அது நிச்சயமற்ற சூழல்களில், பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்கள் எடுக்கும் முடிவுகளால்தான் எழுதப்படுகிறது.
ரூஸ்வெல்ட் மட்டும் போட்ஸ்டாம் மாநாடு வரை உயிரோடு இருந்திருந்தால்? ஸ்டாலினுக்கு அந்த அளவுக்குச் சந்தேகப் புத்தி இல்லாமல் இருந்திருந்தால்? கென்னன் சொன்ன ஆலோசனையை அமெரிக்கா சரியானபடி புரிந்துகொண்டிருந்தால்? வரலாறு வேறு திசையில் பயணித்திருக்கலாம். ஆனால், 1945இல் உலக அரங்கில் நின்ற அந்த மனிதர்கள்தான் தங்களுக்குப் பின்னால் வரப்போகும் பல தலைமுறைகளுக்கான அரசியல் சூதாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
(தொடரும்)

