1949 ஏப்ரல் 4ஆம் தேதி, வாஷிங்டன் துறைசார் அரங்கத்தில், 12 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டார்கள். பார்ப்பதற்கு மிகச் சிறிய ஆவணம் அது. ஆனால் அதன் வீச்சு ஒரு மாபெரும் புரட்சி. அதுதான் வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை. வெறும் 14 விதிகளைக் கொண்ட இந்த ஒப்பந்தம், மேற்கு ஐரோப்பாவை நிரந்தரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்காவின் தலையில்கட்டியது. இதன் மூலம், அமெரிக்கா உருவான காலத்திலிருந்து பின்பற்றி வந்த தனித்திருக்கும் கொள்கையை ஒரேயடியாகத் தூக்கி எறிந்தது. அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் தனது பிரியாவிடை உரையில், வெளிநாடுகளுடன் நிரந்தர கூட்டணிகளை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். அந்த அறிவுரையை ஏற்று 150 ஆண்டுகளாக அமெரிக்கா அமைதிக்காலத்தில் எந்த வெளிநாட்டு ராணுவ விவகாரங்களிலும் தலையிட்டதில்லை. அமெரிக்காவின் இந்த அடிப்படை ராஜதந்திரத் தத்துவம், இரு கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் தூக்கி எறியப்பட்டது என்றால், போட்ஸ்டாம் மாநாட்டிற்குப் பிறகான 4 ஆண்டுகளில் சோவியத் யூனியனின் செயல்பாடுகள் அமெரிக்காவை எந்த அளவுக்குப் பயமுறுத்தியிருந்தன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான விதி 5வது பிரிவில்தான் இருந்தது. இதை எழுதுவதற்குச் சட்ட நிபுணர்களின் அதீத சொல் ஜாலம் தேவைப்பட்டது. ஏனென்றால் இதில் இரண்டு முரண்பாடுகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எங்களைக் காப்பாற்றத் தானாகவே முன்வரும் என்ற இரும்புப் பிடியான உத்தரவாதம் தேவைப்பட்டது. ஆனால் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி, போர் தொடுக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கே இருந்தது. இதற்கு ஒரு நடுத்தரமான தீர்வாகத் திட்டமிட்ட ஒரு மழுப்பல் வார்த்தை விளையாட்டைப் பயன்படுத்தினார்கள். ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். அதன்பின், ஒவ்வொரு நாடும் ஆயுதப் பயன்பாடு உட்படத் தங்களுக்குத் தேவையான நடவடிக்கையை எடுக்கலாம் என்று எழுதினார்கள் (an attack upon one signatory ‘shall be considered an attack against them all,’ whereupon each would assist by taking ‘such action as it deems necessary, including the use of armed force.’). அதாவது, போர் தொடுப்பது தானாகவே நடக்கும் சட்டப்பூர்வமான கடமை அல்ல. அது ஒரு தார்மீக மற்றும் அரசியல் கடமை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டீன் அச்சேசன் செனட் குழுவின் முன் இதை விளக்கினார். சட்டப்படி நாமே போரில் இறங்க வேண்டியதில்லை என்றாலும், அந்தச் சூழலில் போரைத் தவிர வேறு எந்த முடிவையும் நாம் எடுக்க முடியாது என்று அவர் உறுதியளித்தார். இதைக் கேட்ட அமெரிக்க செனட் உறுப்பினர் ஆர்தர் வான்டன்பெர்க் நிம்மதியடைந்தார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் பறிபோகவில்லை என்று அமெரிக்காவும் நம்பியது; அதேசமயம் எதிரிகளைப் பயமுறுத்த இந்த ஒப்பந்தம் போதும் என்று ஐரோப்பாவும் நம்பியது.
இந்த ஒப்பந்தம் எந்தெந்தப் பகுதிகளுக்குப் பொருந்தும் என்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 6வது விதி, அட்லாண்டிக் பகுதிகள் மற்றும் தீவுகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று சுருக்கியது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள காலனி ஆதிக்க நாடுகளை இது திட்டமிட்டே தவிர்த்தது. பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாடுகள் சுதந்திரம் பெறும்போது இந்தத் தவிர்ப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 10வது விதி, அனைத்து நாடுகளின் ஒப்புதலோடு புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ள வழிவகுத்தது. இதன்படி 1952இல் கிரீஸ் மற்றும் துருக்கியும், 1955இல் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. ஆரம்பத்தில் இணைந்த 12 நாடுகளுமே மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஸ்பெயின் நாட்டின் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ ஒரு பாசிசவாதி என்பதால் அந்த நாடு ஓரங்கட்டப்பட்டது. ஸ்வீடன், பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தாங்கள் நடுநிலையாக இருக்க விரும்புவதாகக் கூறிவிட்டன. ஆரம்பத்தில் கிரீஸும் துருக்கியும் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம் அவர்களின் ஜனநாயகத் தகுதி அல்ல. மாறாக, அட்லாண்டிக் கூட்டமைப்பைக் கிழக்கு மத்திய தரைக்கடல் வரை நீட்டிக்க வட ஐரோப்பிய நாடுகள் தயங்கியதே.
ஜூலை 21 அன்று அமெரிக்க செனட் சபை 82க்கு 13 என்ற கணக்கில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது மிகப்பெரிய வெற்றி என்றாலும், இதற்குப் பின்னால் ஒரு நீண்ட அரசியல் போராட்டம் இருந்தது. அமெரிக்க செனட் உறுப்பினர் ராபர்ட் டாஃப்ட் இதை மிகக் கடுமையாக எதிர்த்தார். நிரந்தர ராணுவக் கூட்டணிகள் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்டமைப்பை ராணுவமயமாக மாற்றிவிடும் என்ற தேசத்தந்தையர்களின் அச்சத்தையே அவர் பிரதிபலித்தார். இவ்வளவு பெரிய எதிர்ப்பை முறியடிக்க, செனட்டர் ஆர்தர் வான்டன்பெர்க் செய்த அரசியல் உழைப்பு மிக முக்கியமானது. தனித்திருக்கும் கொள்கையிலிருந்து விலகி சர்வதேச அரசியலில் அவர் அடியெடுத்து வைத்தது பனிப்போரின் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். 1948 ஜூன் மாதம் 64க்கு 4 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்ட வான்டன்பெர்க் தீர்மானம் (Vandenberg Resolution), இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்கூட்டியே செனட் சபையின் பச்சைக் கொடியைக் காட்டியது. அரசு இயந்திரமும் நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்ட இந்தச் சுமுகமான உறவுதான் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியது.
வெறும் ஒரு ஒப்பந்தமாகவும் ஒரு சிறிய அலுவலகமாகவும் இருந்த நேட்டோ அமைப்பு, ஒரு முழுமையான ராணுவக் கூட்டமைப்பாக மாறியதற்குக் காரணம் கொரியப் போர். 1950 ஜூன் மாதம் கொரியாவில் போர் வெடித்ததும், கம்யூனிஸ்ட் ஆக்கிரமிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல; அது ஆசியாவிலும் நிஜமாகவே நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள். 6 மாதங்களுக்குள் ஐரோப்பாவுக்கான உச்சக்கட்ட நேச நாட்டுத் தளபதியை நியமிக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. டிசம்பர் 19 அன்று 2ஆம் உலகப்போர் மாவீரர் ஜெனரல் ஐசனோவர் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். மேற்கு ஐரோப்பாவை மீட்டெடுத்த அவர் அந்தப் பதவியில் அமர்ந்தது நேட்டோவுக்கு மாபெரும் கௌரவத்தைக் கொடுத்தது. 1951ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ‘ஷேப்’ (Supreme Headquarters Allied Powers Europe – SHAPE) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, கூட்டமைப்புக்கு நிஜமான ராணுவ வடிவம் கொடுக்கப்பட்டது. பிரிட்டனின் மூத்த ராணுவ அதிகாரி கர்னல் இஸ்மே நேட்டோவின் முதல் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். இந்த அமைப்பின் உண்மையான நோக்கத்தை அவர் மிக அழகாக ஒற்றை வரியில் சுருக்கினார். ‘ரஷ்யர்களை வெளியே வைத்திருக்க, அமெரிக்கர்களை உள்ளே வைத்திருக்க, ஜெர்மானியர்களைக் கீழே வைத்திருக்க’ என்பதே அந்தக் கூற்று. அதுவே நேட்டோவின் அதிகாரப்பூர்வமற்ற முழக்கமாக மாறியது.
நேட்டோவின் தொடக்கக் காலத்தில் மிகச் சிக்கலான விஷயம் மேற்கு ஜெர்மனியின் ராணுவத்தை மீண்டும் உருவாக்குவதுதான். கடந்த 70 ஆண்டுகளில் ஜெர்மனியால் மூன்று முறை ஆக்கிரமிக்கப்பட்டுப் படாதபாடுபட்ட பிரான்ஸ் நாட்டால் இதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐரோப்பியப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்படி ஜெர்மன் படைகளைப் பன்னாட்டுப் படைகளோடு கலந்துவிட வேண்டும், அவர்களுக்கு என்று தனி அதிகாரம் இருக்கக் கூடாது என்று முடிவானது. ஆனால் 1954 ஆகஸ்ட் 30 அன்று பிரெஞ்சு நாடாளுமன்றம் இந்தத் திட்டத்தைத் தூக்கி எறிந்தது. ஜெர்மனி மீண்டும் பழையபடி அடாவடி செய்யும் என்ற பயமும், பன்னாட்டு அமைப்புகளின் மீதான வெறுப்புமே இதற்குக் காரணம். அதன் பிறகு வந்த சுலபமான தீர்வு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1955 மே 9 அன்று மேற்கு ஜெர்மனி நேரடியாகவே நேட்டோவில் இணைக்கப்பட்டது. அவர்களின் படைகள் 12 பிரிவுகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அணு ஆயுதங்கள் மற்றும் ரசாயன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு ஒட்டுமொத்தப் படை அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டார்கள். மேற்கு ஜெர்மனியின் முதல் அதிபர் கான்ராட் அடினாவர் இந்த நிபந்தனைகளை மிகத் தெளிவாக ஏற்றுக்கொண்டார். எந்தப் பயனுமில்லாத நடுநிலை நாடாக இருப்பதைவிட மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துப் பெறும் சுதந்திரமே சிறந்தது என்பதை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார்.
மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்த ஐந்தாவது நாள், அதாவது 1955 மே 14 அன்று வார்சா ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பார்ப்பதற்கு நேட்டோவுக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு அமைப்புபோலத் தெரிந்தது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள சோசலிச நாடுகள் இணைந்த கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு மாயை. இதில் இணைந்த 8 நாடுகளும் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அல்ல. சோவியத் ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட அரசுகள். மாஸ்கோவில் எடுக்கப்படும் முடிவுகளுக்குத் தலையாட்டுவது மட்டுமே அரசியல் ஆலோசனைக் குழுவின் வேலையாக இருந்தது. சோவியத் தளபதிகளிடமே முழு அதிகாரமும் இருந்தது. பெர்லினை வென்ற சோவியத் தளபதி இவான் கோனேவ் இந்த அமைப்பின் முதல் தலைமைத் தளபதியானார். இது சமமான நாடுகளின் கூட்டமைப்பு அல்ல. மாறாகச் சோவியத் யூனியனின் ஆதிக்கத்தைச் சட்டப்பூர்வமாக்கும் ஒரு வேலை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. 1956இல் ஹங்கேரியிலும், 1968இல் செக்கோஸ்லோவாக்கியாவிலும் சோவியத் படைகள் புகுந்து நசுக்கியபோது, வார்சா ஒப்பந்தத்தில் இருப்பது எந்த வகையிலும் தங்களைக் காப்பாற்றாது என்பதை அந்த நாடுகள் உணர்ந்துகொண்டன. ஸ்டாலின் நீக்க நடவடிக்கையால் அதிருப்தியடைந்து சீனாவோடு கைகோர்த்த அல்பேனியா 1961 வாக்கில் மெல்ல விலகி 1968இல் அதிகாரப்பூர்வமாகவே வெளியேறியது.
ஐரோப்பாவைத் தாண்டி ஆசியாவிலும் கம்யூனிசத்தைத் தடுக்கும் வேலையில் இறங்கினார்கள் மேற்கத்தியர்கள். 1954 செப்டம்பரில் மணிலா ஒப்பந்தத்தின் மூலம் தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் எட்டு நாடுகள் இருந்தன. ஆனால் நேட்டோவைப்போல நிரந்தரப் படையோ, ஒருங்கிணைந்த கட்டளையோ அல்லது 5வது விதி போன்ற கட்டாயப் பாதுகாப்போ இதில் இல்லை. இந்தியா, இந்தோனேசியா, பர்மா போன்ற முக்கிய நாடுகள் இதில் சேரவில்லை. அதேசமயம் தெற்கு வியட்நாம், லாவோஸ், கம்போடியா போன்ற உறுப்பினர்களாக இல்லாத நாடுகளுக்கும் பாதுகாப்பளிப்பதாக இந்த ஒப்பந்தம் கூறியது. எந்தவித உபயோகமும் இல்லாமல் பெயரளவுக்கு இயங்கிய இந்த அமைப்பு 1977இல் கலைக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் கொண்டுவந்த 1955ஆம் ஆண்டின் பாக்தாத் ஒப்பந்தத்தின் கதியும் இதுதான். 1958 ஜூலையில் ஈராக்கில் மன்னராட்சி கவிழ்ந்ததும் புதிய அரசு அமைப்பிலிருந்து வெளியேறியது. அதன் பிறகு சென்டோ எனப் பெயர் மாற்றப்பட்டுத் துருக்கியின் அங்காராவுக்கு மாற்றப்பட்டது. 1979இல் ஈரானில் புரட்சி வெடிக்கும் வரை சென்டோ ஒரு பெயர்ப்பலகையாக மட்டுமே தொங்கிக்கொண்டிருந்தது. ஆசிய பசிபிக் பகுதிகளில் நேட்டோ போன்ற கூட்டு ஒப்பந்தங்களைவிட, மையமும் ஆரங்களும் என்ற பாணியிலான இருதரப்பு ஒப்பந்தங்களையே அமெரிக்கா விரும்பியது. 1951 செப்டம்பரில் அமெரிக்க ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம், 1953 அக்டோபரில் அமெரிக்கத் தென்கொரிய ஒப்பந்தம், 1954 டிசம்பரில் தைவானைப் பாதுகாக்கும் சீன அமெரிக்க ஒப்பந்தம் ஆகியவை இதற்கு உதாரணங்கள். வாஷிங்டனை மையமாக வைத்து இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், இந்த நாடுகளுக்கு இடையே எந்தப் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தமும் இல்லை.
சோவியத் யூனியனும் தன்பக்க நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கச் சில அமைப்புகளை உருவாக்கியது. இரண்டு முரண்பாடான முகாம்கள் என்ற சித்தாந்தத்தை வலியுறுத்த 1947 செப்டம்பரில் கோமின்ஃபார்ம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தி ஆண்ட்ரே ஜ்டானோவ் இதன் மூளையாகச் செயல்பட்டார். இது நாடுகளை ஒருங்கிணைக்கவும், மீறுபவர்களைத் தண்டிக்கவும் பயன்பட்டது. 1948இல் யூகோஸ்லாவியா வெளியேற்றப்பட்டது இதற்குச் சிறந்த உதாரணம். ஸ்டாலின் நீக்க நடவடிக்கை மற்றும் பிடிவாதமான கொள்கைகள் சரிப்பட்டு வராது என்ற எண்ணம் பரவியதால் 1956இல் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது. மார்ஷல் திட்டத்திற்குப் போட்டியாக 1949 ஜனவரியில் கோமெகான் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வியாபாரத்தை மாஸ்கோவை நோக்கித் திருப்புவதும், மாஸ்கோவுக்குச் சாதகமான விலைகளை நிர்ணயிப்பதுமே இதன் முக்கிய வேலையாக இருந்தது. மார்ஷல் திட்டம் அமெரிக்கப் பணத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது என்றால், கோமெகான் அமைப்பு சோசலிச ஒருங்கிணைப்பு என்ற பெயரில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வளங்களைச் சோவியத் யூனியனுக்காக உறிஞ்சியது. சித்தாந்த ரீதியாக நாடுகள் ஒற்றுமையாக இருப்பதைவிடப் பொருளாதார ரீதியாக அவர்களை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம் என்பது அப்போது புரிந்தது.
1955ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், பனிப்போரின் பிளவு நிரந்தரமான நிறுவன வடிவத்தை அடைந்துவிட்டது. வெறும் அச்சுறுத்தல்களால் மட்டும் இதைச் சாதித்திருக்க முடியாது. மேற்கு ஐரோப்பாவில் நேட்டோ மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஒப்பந்தம், கிழக்கு ஐரோப்பாவில் வார்சா ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு நட்பு ஒப்பந்தங்கள், ஆசியா மற்றும் மத்தியக் கிழக்கில் சீட்டோ, சென்டோ மற்றும் பசிபிக் இருதரப்பு ஒப்பந்தங்கள் என உலகமே வலைப்பின்னல்போலக் கட்டப்பட்டது. இது ஒரு சித்தாந்தப் போரை மாபெரும் ஆயுதமேந்திய பிரிவினையாக மாற்றியது. 1945இல் தலைவர்கள் எந்தப் பிரச்னையையும் சர்வதேச அமைப்புகள் மூலம் பேசித் தீர்த்துவிடலாம் என்று நம்பினார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் பேராசையும், பதிலடியும் சேர்ந்து உலகை இரண்டு பெரிய ராணுவ முகாம்களாகப் பிரித்துவிட்டன. இந்தப் பதற்றமான சூழ்நிலையைச் சமாளிக்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு உலக நாடுகள் தங்கள் செல்வத்தையும் நிம்மதியையும் இழந்து, போருக்கும் அமைதிக்கும் இடையிலான நூலாம்படையில் கவனமாக நடக்கவேண்டியிருந்தது.
(தொடரும்)

