12 ஆண்டுகளுக்குள் 2 முறை மத்திய ஐரோப்பிய மக்கள் சோவியத் ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். வானொலிகளில் விடுதலையைப் பற்றி அழகாகப் பேசும் மேற்கத்திய ஜனநாயக நாடுகள், நாம் போராடத் துணிந்தால் நமக்கு நிச்சயம் உதவுவார்கள் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால் 2 முறையும் அவர்கள் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டார்கள். 1956இல் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டிலும், 1968இல் செக்கோஸ்லோவாக்கியாவின் தலைநகரம் பிராக் நகரத்திலும் அவர்கள் சுதந்திரத்தை நோக்கி எடுத்த சிறு முயற்சிகள் கொடூரமாக முடித்து வைக்கப்பட்டன. மாஸ்கோவின் நோக்கம் என்ன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லாமல் இந்தத் தாக்குதல்கள் அமைந்தன. கிழக்கு ஐரோப்பாவின் அடிமைத்தனம் என்பது, ஜனநாயக நாடுகள் மேடைகளில் கண்ணீர்விட மட்டுமே பயன்படும் ஒரு விஷயம். அதை அவர்கள் ராணுவ பலம் கொண்டு ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள் என்ற கசப்பான உண்மையை இந்த இரட்டைத் துயரங்கள் உணர்த்தின. அந்த மக்களின் நம்பிக்கைகள் எந்த அளவுக்கு அழிக்கப்பட்டனவோ, அதே அளவுக்கு அந்த உணர்தலின் கசப்பும் அதிகமாக இருந்தது.
உண்மையான சீர்திருத்தத்திற்கான ஒரு சிறிய நம்பிக்கை, 1953 மார்ச் 5ஆம் தேதி ஸ்டாலின் இறந்தபோது முளைத்தது. அதன்பிறகு நடந்த வாரிசுச் சண்டைகளில் சில தாராளமயமாக்கல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சோவியத் ரகசிய போலீசின் தலைவர் லாவ்ரென்டி பெரியா, அரசியல் கைதிகளை விடுதலை செய்தார். ஜெர்மனியை ஒன்றிணைப்பது குறித்தும் மெதுவாகப் பேசிப்பார்த்தார். ஆனால் ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு டிசம்பரில் தூக்கிலிடப்பட்டார். மக்களைப் பயமுறுத்தி வந்த ஒரு கருவியை, அவ்வளவு எளிதாகச் சீர்திருத்தக் கருவியாக மாற்றிவிட முடியாது என்பதை இது நிரூபித்தது. இதற்கான பாடம் 1953 ஜூன் 17 அன்று மிகக் கடுமையாகக் கற்பிக்கப்பட்டது. ஜெர்மன் ஜனநாயகக் குடியரசான கிழக்கு ஜெர்மனி முழுவதும் சுமார் 370 நகரங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். சோவியத் பீரங்கிகள் உள்ளே புகுந்து அமைதியை நிலைநாட்டின. மேற்கத்திய நாடுகள், ஜூன் 17ஐ ஜெர்மானிய ஒற்றுமைத் தினமாக அறிவித்துவிட்டு, வெறும் அனுதாபத்தோடு அமைதியாகிவிட்டன.
1956ஆம் ஆண்டின் நெருக்கடிகளைத் தொடங்கி வைத்த அந்த அடியை, சற்றும் எதிர்பாராத விபரீத விளைவுகளோடு நிகழ்த்தும் பொறுப்பு ஸ்டாலினுக்குப் பின் வந்த சோவியத் தலைவரான நிகிதா குருசேவிடம் வந்து சேர்ந்தது. பிப்ரவரி 25 அன்று நடந்த கட்சியின் 20வது மாநாட்டில், நான்கு மணி நேரம் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில் அவர் ஸ்டாலினின் குற்றங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்தார். மாபெரும் சுத்திகரிப்புகள், போலி விசாரணைகள், தனிமனித ஆராதனை என அனைத்தையும் அவர் தோலுரித்தார். இஸ்ரேலிய உளவுத்துறை மூலம் அந்த உரையின் நகலைப் பெற்ற சிஐஏ, அதை ஜூன் மாதம் ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா வழியாகக் கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஒலிபரப்பியது. சோவியத் முகாம் முழுவதும் இருந்த சீர்திருத்த கம்யூனிஸ்டுகள் மத்தியில் இது மின்சாரம் பாய்ந்தது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்டாலின் செய்த குற்றங்களை குருசேவே வெளிப்படையாகக் கண்டிக்கிறார் என்றால், இந்த அமைப்பைத் திருத்திவிட முடியுமா என்ற வினா அவர்களுக்குள் துளிர்விட்டது.
போலந்து நாடு இதற்கு முதல் எச்சரிக்கையான பதிலை அளித்தது. 1956 ஜூன் மாதம் போஸ்னான் நகரில் நடந்த தொழிலாளர் கலவரங்களில் 57 பேர் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வந்த போலிஷ் அக்டோபர் புரட்சியில், போலந்தின் தலைநகரம் வார்சாவை நோக்கிச் செஞ்சேனை முன்னேறி வந்தபோதிலும், சீர்திருத்தங்களை முன்னெடுத்த போலந்தின் கம்யூனிஸ்ட் தலைவர் கோமுல்கா மீண்டும் கட்சித் தலைவராகக் கொண்டுவரப்பட்டார். வார்சா ஒப்பந்தத்திற்கு எந்த பாதிப்பும் வராதவரை, தேசிய அளவில் கம்யூனிஸ்ட் சுதந்திரம் சாத்தியமே என்பதை இது நிரூபித்தது. வார்சாவிற்குப் பறந்து சென்ற குருசேவ், போலந்து தலைவர்களை வெளிப்படையாகவே மிரட்டினார். இறுதியில் ஒரு சமரசத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் இந்தச் சமரசம், ஹங்கேரிய சீர்திருத்தவாதிகளுக்கு முற்றிலும் தவறான ஒரு வழிகாட்டுதலாகப் போய்முடிந்தது.
ஹங்கேரியில், போலந்தின் இந்த உதாரணம், கொஞ்சமும் பொறுமையில்லாத ஒரு மாபெரும் இயக்கத்திற்கு தைரியத்தைக் கொடுத்தது. 1956 அக்டோபர் 23 அன்று, 20,000 மாணவர்கள் தொடங்கிய ஒரு போராட்டம், புடாபெஸ்ட் நகரம் முழுவதும் பரவி 2 லட்சமாகப் பெருகியது. தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், மற்றும் அவர்களை அடக்க வந்த ராணுவத்தினர்கூட எந்த விரோதமும் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள். அன்று மாலை, அந்த மாபெரும் மக்கள் திரள் நகரின் பூங்காவில் கம்பீரமாக நின்றிருந்த ஸ்டாலினின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலையை நோக்கிப் பாய்ந்தது. தொழிலாளர்கள் வெல்டிங் இயந்திரங்களோடும் இரும்புக் கயிறுகளோடும் அங்கே வந்தார்கள்; ஸ்டாலினின் கழுத்தில் கயிறுகள் கட்டப்பட்டன; சிலை சரிந்து விழுந்ததும் கூட்டத்தினர் பேரிரைச்சலிட்டு ஆர்ப்பரித்தார்கள். ஒரு தசாப்த கால அடிமைத்தனத்தின் மொத்த கோபமும் சேர்ந்து, அந்தச் சிலையின் தலையை முண்டத்திலிருந்து பிரித்துத் தரையில் மோதிச் சிதறடித்தது. வெற்றுக்கழுத்தில் காலணிகள் மிதித்தன. அன்று இரவு, வானொலி நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது ஹங்கேரியின் ரகசிய போலீஸ் ஏவிஎச் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அந்தச் சிறு தீப்பொறி ஒரு மாபெரும் காட்டுத்தீயாக வெடித்தது.
அடுத்த 13 நாட்கள் பனிப்போரின் மிக எழுச்சிகரமான அதேசமயம் நெஞ்சைப் பிளக்கும் ஒரு காலகட்டம். பிரதமராக மீண்டும் பதவியேற்ற இம்ரே நாகி, அந்தப் புரட்சியின் வேகத்தில் தன்னையும் அறியாமல் அடித்துச் செல்லப்பட்டார். இம்ரே நாகி – ஹங்கேரியின் மிதவாத கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர். அடிப்படையில் ஒரு தீவிர கம்யூனிஸ்டாக இருந்தாலும், காலப்போக்கில் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுக்கும் சீர்திருத்தவாதியாக மாறினார். அக்டோபர் 28 அன்று அவர் போர்நிறுத்தத்தையும், புடாபெஸ்டிலிருந்து சோவியத் படைகள் விலக்கிக்கொள்ளப்படுவதையும் அறிவித்தார். அக்டோபர் 30 அன்று ஹங்கேரியின் மிக உயர்ந்த கத்தோலிக்க மதகுருவான கார்டினல் மைண்ட்சென்டியை 8 வருடச் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்தார். நவம்பர் 1 அன்று, மிகுந்த தைரியத்தோடு வானொலியில் தோன்றி, ஹங்கேரியின் நடுநிலையையும் வார்சா ஒப்பந்தத்திலிருந்து அது வெளியேறுவதையும் அறிவித்தார். அவர் எவ்வளவு பெரிய ஆபத்தை விலைக்கு வாங்குகிறார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும் என்றாலும், இந்த அறிவிப்பு அவரது மரண சாசனமாகவே மாறியது.
1989க்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டக் குறிப்புகளின்படி, குருசேவ் ஆரம்பத்தில் போலந்து பாணியிலான ஒரு சீர்திருத்தக் கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் சூயஸ் நெருக்கடி (எகிப்து தொடர்பான ஒரு சர்வதேசப் பிரச்சினை) வெடித்து, மேற்கத்திய நாடுகளின் ஒட்டுமொத்தக் கவனமும் அத்திசை நோக்கித் திரும்பியது. இது சோவியத் திட்டமிடுபவர்களுக்குத் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளத் தேவையான திசைதிருப்பலையும், புவிசார் அரசியல் காரணத்தையும் கொடுத்தது. புதிய சோவியத் பீரங்கிப் படைகள் எல்லையைத் தாண்டி உள்ளே நுழைகின்றன என்ற உளவுத் தகவல் கிடைத்த பிறகுதான், நாகி சர்வதேசப் பாதுகாப்பை வேண்டி, ஹங்கேரியின் நடுநிலையையும் வார்சா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதையும் ஓர் அவநம்பிக்கையான முயற்சியாக அறிவித்தார். அதாவது, அவரது இந்த அறிவிப்பு சோவியத் ஆக்கிரமிப்பைத் தூண்டவில்லை. மாறாக, ஏற்கனவே தொடங்கிவிட்ட ஆக்கிரமிப்பிற்கு அது ஒரு சோகமான பதிலடியாகவே இருந்தது. நவம்பர் 4 அதிகாலை ஆப்பரேஷன் வெர்ல்விண்ட் என்ற பெயரில், 17 சோவியத் பிரிவுகளும், 2 லட்சம் வீரர்களும் ஹங்கேரியின் எல்லைகளைக் கடந்தார்கள். நாகி வானொலியில் பேசினார்: ‘சட்டபூர்வமான ஹங்கேரிய ஜனநாயக அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தோடு இன்று அதிகாலை சோவியத் படைகள் நமது தலைநகரத்தின் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.’
மேற்கத்திய நாடுகளிடமிருந்து எந்தவொரு உருப்படியான உதவியும் வரவில்லை. 6 நாட்கள் நடந்த போரில் சுமார் 3000 ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டார்கள். 2 லட்சம் பேர் ஆஸ்திரிய எல்லையைக் கடந்து அகதிகளாக ஓடினார்கள். பனிப்போரில் நடந்த மிகப்பெரிய ஒற்றை அகதிகள் இடப்பெயர்வு இதுதான்.
இம்ரே நாகியின் விதியை ஒரு தெளிவான எச்சரிக்கையாகக் காட்டும் வகையில், விசாரணை காய்கள் மிகத் திட்டமிட்டு நகர்த்தப்பட்டன. நவம்பர் 22 அன்று அவருக்கு எழுத்துப்பூர்வமான பாதுகாப்பு உறுதிமொழி அளிக்கப்படும் வரை அவர் யூகோஸ்லாவியத் தூதரகத்திலேயே தங்கியிருந்தார். அதை நம்பி வெளியே வந்த அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, ருமேனியாவிற்கு நாடுகடத்தப்பட்டு 19 மாதங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தார். 1958 ஜூன் மாதம் முற்றிலும் ரகசியமான முறையில் விசாரிக்கப்பட்டு, ஜூன் 16 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒரு அநாமதேயக் கல்லறையில் புதைக்கப்பட்டார். அவரைப் படுகொலை செய்த அதே அமைப்பு தனது இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த 1989ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று, 2 லட்சம் ஹங்கேரியர்கள் முன்னிலையில் அவரை முழு மரியாதையுடன் மீண்டுமொருமுறை அடக்கம் செய்தது.
விடுதலைக் கூக்குரலுக்கும், ராணுவ யதார்த்தத்திற்கும் இடையிலான மாபெரும் இடைவெளியை மேற்கத்திய நாடுகளின் இந்த மௌனம் வெளிச்சம் போட்டுக்காட்டியது. சிஐஏ நிதியுதவியுடன் ஜெர்மனியின் நகரம் மியூனிக்கிலிருந்து செயல்பட்டு வந்த ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா, பல ஆண்டுகளாக மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டி வந்தது. புரட்சி உச்சத்தில் இருந்தபோது, ராணுவ உதவி வரப்போகிறது என்பதுபோலச் சில செய்திகளை ஒலிபரப்பியது. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆயுதங்கள் கேட்டு மன்றாடியபோது, ஒரு குண்டூசிகூட வரவில்லை. அணு ஆயுதப் போரின் விபரீதங்களை முழுமையாக உணர்ந்திருந்த அமெரிக்க அதிபர் ஐசனோவர், வெறும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவிப்பதோடும், சில மனிதாபிமான உதவிகளோடும் அமெரிக்காவின் பங்களிப்பைச் சுருக்கிக்கொண்டார். இந்த கசப்பான பாடத்தைக் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் ஆழமாகக் கற்றுக்கொண்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, பிராக் நகரம் ஒரு வித்தியாசமான பரிசோதனையை முன்னெடுத்தது. அது மிகவும் பொறுமையானது, அறிவார்ந்த முதிர்ச்சி கொண்டது, ஆனால் அதுவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அதே வீழ்ச்சியை நோக்கித்தான் பயணித்தது. 1968 ஜனவரி 5 அன்று முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்சாண்டர் டுப்செக், கம்யூனிச ஆட்சியை முற்றிலுமாகத் தூக்கி எறிய நினைக்கவில்லை. மாறாக அதை மனிதநேயமிக்கதாக மாற்ற நினைத்தார். அதைத்தான் மனித முகத்துடன் கூடிய சோசலிசம் என்றார். இது மாசாக் காலத்துக் குடியரசை நினைவூட்டும் வகையில், கலாச்சார மற்றும் அறிவுசார் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மலர்ச்சியை உருவாக்கியது. மாசாக் குடியரசு என்பது பொதுவாக செக்கோஸ்லோவாக்கியாவின் முதல் குடியரசை (1918-1938) குறிக்கிறது, இது அதன் நிறுவனர் தாமஸ் கேரிக் மாசாக்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் கையெழுத்திட்ட 2000 வார்த்தைகள் என்ற அறிக்கை, இந்தச் சீர்திருத்தங்கள் இன்னும் வேகமெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஹங்கேரியை நாம் நசுக்காமல் விட்டிருந்தால் அது இப்படித்தான் மாறியிருக்கும் என்பதை சோவியத் உயர்மட்டக் குழு இதைப் பார்த்துப் புரிந்துகொண்டது.
ஜூலை 1968 மாத இறுதியில் செர்னா நாட் திசோவ் டவுனில் செக்கோஸ்லோவாக்கியத் தலைவர்களுடன் அன்றைய சோவியத் தலைவர் லியோனீது பிரஸ்னேவ் நடத்திய கூட்டங்கள் ஒரு வேடிக்கையான முடிவைத் தந்தன. இரு தரப்பினரும் தங்களுக்குச் சாதகமாக புரிந்துகொள்ளும் வகையிலான ஒரு குழப்பமான ஒப்பந்தம் அங்கே போடப்பட்டது. ஆனால் அதேசமயம் ராணுவத் தயாரிப்புகளும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. ஆகஸ்ட் 20 அதிகாலைப் பொழுதில், வார்சா ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் 5 நாடுகளைச் சேர்ந்த (ருமேனியா மட்டும் இதில் பங்கேற்க மறுத்துவிட்டது) 5 லட்சம் வீரர்களும், 2000 டாங்கிகளும் செக்கோஸ்லோவாக்கிய எல்லையைக் கடந்தன. சோவியத் தளபதிகளைக் குழப்புவதற்காகச் செக் மற்றும் ஸ்லோவாக் மக்கள் தெருப் பெயர்ப்பலகைகளைப் பிடுங்கி வீசினார்கள்; வென்செஸ்லாஸ் சதுக்கத்தில் டாங்கிகள் உறுமிக்கொண்டு நின்றபோது, மக்கள் பெருங்கூட்டமாகக் கூடித் தங்கள் தேசிய கீதத்தைப் பாடினார்கள். ஒரு மாபெரும் படுகொலையின் மூலமாக மட்டுமே இந்த எழுச்சியை அடக்க முடியும் என்ற நிலை உருவானது. ஆனால் உலக அரங்கில் இது மிகப்பெரிய எதிர்ப்பைக் கிளப்பும் என்று சோவியத் தலைவர்கள் கணக்கிட்டார்கள். அங்கே 137 பேர் கொல்லப்பட்டார்கள். மாஸ்கோவிற்குக் கடத்தப்பட்ட டுப்செக், தனது அரசியல் மரண சாசனத்தில் கையெழுத்திட்ட பிறகே திருப்பி அனுப்பப்பட்டார். செக்கோஸ்லோவாக்கியாவின் கம்யூனிச அரசியல்வாதி குஸ்டாவ் ஹுசாக் கொண்டுவந்த புதிய இயல்பு நிலை, கட்சியில் இருந்த 5 லட்சம் பேரைத் தூக்கியெறிந்தது. தணிக்கை இல்லாத ஒரு சமூகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அந்தச் சில மாத அனுபவத்தில் அவர்கள் கற்றுக்கொண்டிருந்ததால், முன்னைவிடக் கொடூரமான தணிக்கை முறையைக் கொண்டுவந்தார்கள்.
1969 ஜனவரி 16 அன்று, 20 வயதான யான் பாலாச் என்ற மாணவன் வென்செஸ்லாஸ் சதுக்கத்திற்கு நடந்துசென்றான். தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டான். தான் ஏன் இதைச் செய்தேன் என்பதைக் கூறுவதற்கான சுயநினைவு போய்விடும் என்பதற்காக வலி நிவாரணிகளை ஏற்க மறுத்து, 3 நாட்கள் போராடி உயிர்நீத்தான். தான் விட்டுச் சென்ற கடிதத்தில் தன்னை தீப்பந்தம் எண் 1 என்று அவன் குறிப்பிட்டிருந்தான். அவனது அந்தப் போராட்டம் தணிக்கை முறையை மீண்டும் கொண்டுவந்ததற்கும், செக்கோஸ்லோவாக்கிய சமூகத்தை மனதளவில் வீழ்த்தியதற்கும் எதிரான ஒரு மாபெரும் வெளிப்பாடு. ஜனவரி 25 அன்று நடந்த அவனது இறுதி ஊர்வலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டார்கள். உணர்வுகளை வெளிப்படுத்த வேறு எந்த வழியும் இல்லாமல் நின்ற அந்த மக்களுக்கு, அமைதியும் பெருஞ்சோகமும் கப்பிய அந்தப் பிரம்மாண்டமான ஊர்வலம்தான், கைவசம் இருந்த ஒரே வலிமையான அரசியல் ஆயுதமாக அமைந்தது.
1968 செப்டம்பரில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ப்ராவ்டாவில் எழுதிய செர்ஜி கோவலேவ் என்ற சோவியத் சித்தாந்தி, ஒரு புதிய கொள்கையை உலகுக்கு அறிவித்தார். இதைத்தான் மேற்கத்திய நிபுணர்கள் பிரஸ்னேவ் கொள்கை என்று அழைத்தார்கள். எந்தவொரு சோசலிச நாட்டிலும் சோசலிசத்திற்கு ஆபத்து வந்தால், அது ஒட்டுமொத்த சோசலிச நாடுகளின் பொதுவான பிரச்னையாகக் கருதப்படும். மாஸ்கோ விதிக்கும் கொள்கைகளுக்குக் கட்டுப்படுவதைப் பொறுத்தே அந்த நாடுகளின் இறையாண்மை மதிக்கப்படும் என்பதை இது வெளிப்படையாகச் சொன்னது. 1945லிருந்து சோவியத் யூனியன் நடைமுறையில் செய்து வந்ததை, இது ஒரு சட்டப்பூர்வமான விதியாக அறிவித்தது.
இந்த இரட்டைத் துயரங்கள் பனிப்போர் வரலாற்றில் 3 மாபெரும் உண்மைகளை அழுத்தமாகப் பதிவு செய்தன. ஒன்று, கிழக்கு ஐரோப்பாவின் மீதான சோவியத் ஆதிக்கம் என்பது எந்தத் தார்மீக விலையைக் கொடுத்தேனும் ராணுவ பலத்தால் பாதுகாக்கப்படும் ஒரு வியூக இலக்கு. இரண்டு, மேற்கத்திய ஜனநாயக நாடுகள் வெளியில் என்னதான் நீட்டி முழக்கினாலும், நடைமுறையில் இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டன. மூன்று, கிழக்கு ஐரோப்பிய மக்கள் தங்களின் இந்த அடிமைத்தனத்தை ஒருபோதும் நிரந்தரமானதாக ஏற்றுக்கொள்ளவில்லை. புடாபெஸ்ட் மற்றும் பிராக் நகரங்களின் நினைவுகள், சமிஸ்தாத் இலக்கியங்களாகவும் (அரசால் தடைசெய்யப்பட்ட ரகசிய இலக்கியங்கள்), ரகசியமான தனிப்பட்ட உரையாடல்களாகவும் பாதுகாக்கப்பட்டு வந்தன. அடுத்த தலைமுறைப் போராளிகளுக்கு இதுவே தார்மீகச் சொத்தாகவும், தைரியமாகவும் மாறியது. பிரஸ்னேவ் கொள்கை அவர்களின் அடிமைத்தனத்தைச் சட்டப்பூர்வமாக்கியிருக்கலாம். ஆனால் அந்த அடிமைத்தனம் எந்த நேரத்திலும் வெடிக்கக் காத்திருக்கும் ஓர் எரிமலையாகவே இருந்தது. ஏனென்றால், மனிதர்களுக்கு இருக்கும் அந்தச் சுதந்திர தாகத்தை அவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.
(தொடரும்)

