Skip to content
Home » பனிப்போர் #9 – சீனாவில் நிகழ்ந்த திருப்பம்

பனிப்போர் #9 – சீனாவில் நிகழ்ந்த திருப்பம்

1949 அக்டோபர் 1ஆம் தேதி. சீனக் கம்யூனிசப் புரட்சியின் மாபெரும் தலைவர் மா சேதுங், டியானன்மென் சதுக்கத்தின் மேடையில் ஏறினார். கீழே கூடியிருந்த பெருந்திரளான மக்களிடமும், சீனாவின் தற்போதைய தலைநகரம் பெய்ஜிங் நகரத்திற்கு வெளியே வானொலி மூலம் கேட்டுக்கொண்டிருந்த பல கோடி மக்களுக்கும் சீன மக்கள் குடியரசு உதயமாகிவிட்டது என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டார். சில நாட்களுக்கு முன்பு ஓர் அரசியல் மாநாட்டில், சீன மக்கள் எழுந்து நின்றுவிட்டார்கள் என்றும் அவர் பிரகடனப்படுத்தியிருந்தார். அதன் அதிகாரப்பூர்வமான தொடக்கமே இந்த நாள். இந்த அறிவிப்பு பல லட்சம் உயிர்களைப் பலிவாங்கிய ஓர் உள்நாட்டுப் போரின் முடிவு மட்டுமல்ல; சீனக் கம்யூனிஸ்டுகள் அவமானங்களின் நூற்றாண்டு என்று அழைத்த ஒரு மாபெரும் இருண்ட காலத்தின் முடிவும்கூட. 1840களில் நடந்த ஓபியம் போர்களிலிருந்து தொடங்கி, வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பு, மன்னராட்சியின் வீழ்ச்சி மற்றும் பிராந்தியத் தளபதிகளின் கொடுங்கோன்மை என அனைத்திற்கும் இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மிகத் தெளிவாக ஓர் உண்மையை உலகிற்குச் சொன்னது; மனித குலத்தின் கால்வாசி மக்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக சோவியத் முகாமோடு இணைந்துவிட்டார்கள். பனிப்போரின் புவிசார் அரசியல் வரைபடம் இனி எப்போதும் பழையபடி திரும்ப முடியாத அளவுக்கு மாறிவிட்டது என்று.

தேசியவாதிகளின் வீழ்ச்சி எவ்வளவு வேகமாக, எவ்வளவு முழுமையாக நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள, சீனாவில் அதற்கு முன் நடந்த தொடர் வீழ்ச்சிகளின் பின்னணியைப் பார்க்க வேண்டும். 1911இல் சிங் (Qing) எனப்படும் சீனாவின் கடைசி மன்னராட்சி வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, அங்கே ஒரு முறையான குடியரசு உருவாகவில்லை; மாறாக ஆளுக்கொரு திசையாகப் பிராந்திய ராணுவத் தளபதிகள் நாட்டைத் துண்டுபோட்ட ஒரு இருண்ட காலமே உருவானது. 1919 மே 4 இயக்கம்தான் புதிய சீனாவுக்கான புரட்சிகரத் தலைமுறையை உருவாக்கியது. முதல் உலகப்போரின் முடிவில், ஜெர்மனியின் வசமிருந்த சீனப் பகுதிகளை வெர்சாய் ஒப்பந்தம் ஜப்பானுக்குத் தாரை வார்த்ததால் கொதித்தெழுந்த இளைஞர்களின் போராட்டமே இது. இரண்டு அமைப்புகள் சீனாவின் எதிர்காலத்திற்கு உரிமை கொண்டாடின. ஒன்று சியாங் கே ஷேக் என்பவரின் தேசியவாதக் கட்சி குவோமின்டாங். ராணுவ அதிகாரிகள், ஷாங்காய் நகரத்து வியாபாரிகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் ஆதரவு இவர்களுக்கு இருந்தது. மற்றொன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. 1921 ஜூலையில் வெறும் 53 உறுப்பினர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 1927 ஏப்ரலில் சியாங் கே ஷேக் நடத்திய ரத்தக்களரியான வேட்டையிலிருந்து தப்பிப் பிழைக்கக் கிராமப்புறங்களை நோக்கி ஓடியது. 1934 முதல் 1935 வரை அவர்கள் நடந்த அந்த மாபெரும் நீண்ட பயணம் வரலாற்றில் ஓர் அற்புதம். சுமார் 9,600 கிலோமீட்டர் பயணத்தில் வெறும் 10% பேர் மட்டுமே பிழைத்து சீனாவின் வடமேற்கு மலைப்பகுதி ஏனானைச் சென்றடைந்தார்கள். அதிலிருந்துதான் மா சேதுங் ஒட்டுமொத்த இயக்கத்தின் ஒற்றைத் தலைவராக விஸ்வரூபம் எடுத்தார். அவரது அரசியல் வியூகங்கள் சரி என்று நிரூபிக்கப்பட்டன. அவரது தனிப்பெரும் ஆளுமையும் நிலைநிறுத்தப்பட்டது.

1936 டிசம்பரில் நடந்த சியான் சம்பவத்தில் (Xi’an Incident – சியான் என்பது சீனாவின் வடமேற்குப் பகுதி நகரம்), சியாங் கே ஷேக் அவரது சொந்தத் தளபதிகளாலேயே கடத்தப்பட்டார். ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்க்கக் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து 2வது ஐக்கிய முன்னணி அமைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். இதனால் உள்நாட்டுப் போர் 8 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போனது. ஆனால் அந்த 8 ஆண்டுகளில் 1.4 கோடி முதல் 2 கோடி வரையிலான சீனர்கள் பலியானார்கள். 1941 ஜனவரியில் நடந்த புதிய 4ஆம் ராணுவச் சம்பவத்தில், கூட்டணி விதிகளை அப்பட்டமாக மீறி தேசியப் படைகள் கம்யூனிஸ்ட் தலைமையகத்தைத் தாக்கின. மேடைகளில் தேசிய ஒற்றுமை என்று முழங்கினாலும், போர் முடிந்த பிறகு நடக்கப்போகும் இறுதி யுத்தத்திற்கு இரண்டு தரப்பும் ஏற்கெனவே காய் நகர்த்தத் தொடங்கிவிட்டன என்பதை இது வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அமெரிக்கா இன்றைய மதிப்பில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை அன்றைக்குத் தேசியப் படைகளுக்காக வாரி இறைத்தது. ஆனால் அந்தப் பணம் எந்த வகையிலும் பயன்படவில்லை. அமெரிக்க ராணுவத்தின் நேர்மையான மூத்த தளபதி ஜெனரல் ஸ்டில்வெல் தனது வழக்கமான கசப்பான தொனியில் வெளிப்படையாகவே ஓர் உண்மையைப் பதிவு செய்தார். அமெரிக்க ஆயுதங்கள் இல்லாததால் தேசியப் படைகள் தோற்கவில்லை; சரியான தலைமையும், போரிடும் மனவுறுதியும் இல்லாததால்தான் தோற்கின்றன என்று அவர் கூறினார். அமைதியைக் கொண்டுவர வந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மார்ஷல் 14 மாதங்கள் கடுமையாகப் போராடிப் போர்நிறுத்தங்களைக் கொண்டுவந்தார். ஆனால் எந்தத் தரப்பும் அதை மதிக்கவில்லை. இறுதியில் அவரும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சோவியத் ஆதரவு இருந்தது, ஆனால் அது மிக எச்சரிக்கையானது. சீனாவின் வடகிழக்கில் உள்ள மஞ்சூரியாவிலிருந்து சோவியத் படைகள் பின்வாங்கும்போது, சரணடைந்த ஜப்பானியர்களிடமிருந்து 7 லட்சம் துப்பாக்கிகள், 14,000 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 600 டாங்கிகளை அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் படையான மக்கள் விடுதலைப் படையிடம் கொடுத்தார்கள். ஆனாலும் ஸ்டாலின், தேசியவாத அரசு கவிழும் கடைசி நிமிடம் வரை தனது தூதரைத் தேசியவாதிகளின் தலைநகரத்திலேயே வைத்திருந்தார். மா சேதுங்கின் வெற்றியின் மீதான ஸ்டாலினின் ஈடுபாடு முழுமையானதாக இல்லாமல் முற்றிலும் சந்தர்ப்பவாதமாகவே இருந்தது. மா சேதுங்குக்கும் ஸ்டாலின் மீது பெரிய நம்பிக்கை இல்லை; அதே சந்தேகத்தை அவரும் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுத்தார்.

இந்த உள்நாட்டுப் போரின் தொடக்கம் ஒரு பெரிய முரண்பாடாக இருந்தது. பலமான ஒரு படை பலவீனமான படையிடம் தோற்றுக்கொண்டிருந்தது. அமெரிக்க ஆயுதங்களைக் கொண்ட 30 லட்சம் தேசியப் படைகளை, எந்த விமானப் படையுமில்லாத வெறும் 10 லட்சம் கம்யூனிஸ்ட் வீரர்கள் நேருக்கு நேர் சந்தித்தார்கள். ஆனால் வழக்கமான ராணுவக் கணக்கீடுகள் இங்கு தவிடுபொடியாகின. தேசியவாத அரசின் ஊழல் அந்த அமைப்பின் ஆணிவேர் வரை பரவியிருந்தது. 1948இல் ஏற்பட்ட உச்சக்கட்ட பணவீக்கத்தால் அரிசியின் விலை ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்தது. தெருவில் போவோரை எல்லாம் பலவந்தமாகப் பிடித்து ராணுவத்தில் சேர்த்திருந்தார்கள். அந்த வீரர்கள் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே தப்பியோடினார்கள். சீனாவின் 90% மக்கள் வாழ்ந்த கிராமப்புறங்கள் கம்யூனிஸ்டுகளின் வசமிருந்தன. அங்கே நிலங்கள் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டதால், ஒவ்வொரு கிராமத்திலும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிக்கு உயிரைக் கொடுக்க ஒரு மாபெரும் கூட்டம் தயாராக நின்றது. விவசாயிகளே அவர்களுக்குச் சிறந்த ஒற்றர்களாகவும், உணவு கொண்டு வருபவர்களாகவும் மாறினார்கள். அவர்கள் இல்லாமல் மக்கள் விடுதலைப் படையால் ஒருபோதும் இந்த யுத்தத்தைத் தொடர்ந்திருக்கவே முடியாது.

1948 நவம்பர் முதல் 1949 ஜனவரி வரை சீனாவின் மையப்பகுதியில் உள்ள பரந்த நிலப்பரப்பில் நடந்த ஹுவாய் ஹாய் போர்தான் இந்த உள்நாட்டு யுத்தத்தின் தலையெழுத்தைத் தீர்மானித்தது. இந்தப் போரின் விளைவுகள் நெப்போலியன் வீழ்ந்த வரலாற்றுப் போரான வாட்டர்லூ அல்லது அமெரிக்க உள்நாட்டுப் போரின் திருப்புமுனையான கெட்டிஸ்பர்க் ஆகியவற்றுக்கு இணையானவை. அப்போதைய தேசியவாத அரசின் தலைநகரமான நான்கிங் நகரை நெருங்கும் பாதைகளைப் பாதுகாக்கச் சியாங் கே ஷேக் 6 லட்சம் வீரர்களைக் களமிறக்கினார். இதற்குப் பதிலடியாக கம்யூனிஸ்ட் தளபதிகளான லியு போசெங், கம்யூனிஸ்ட் ராணுவ வியூக நிபுணர் சென் யி மற்றும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவை ஆளப்போகும் இளம் தலைவர் டெங் சியாவோபிங் ஆகியோர் 5 லட்சம் ராணுவ வீரர்களோடு, 20 லட்சம் விவசாயப் போராளிகளையும் களத்தில் இறக்கினார்கள்.

இந்தப் போர் தொடர்ச்சியான பல சுற்றி வளைக்கும் உத்திகள் மூலமாகவே நகர்ந்தது. முதலில், சீனாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள முக்கிய நகரமான சுஸௌவுக்கு கிழக்கே தேசியவாத ராணுவத் தளபதி ஹுவாங் பைடாவோ தலைமையிலான படை தனிமைப்படுத்தப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அடுத்து, தெற்கே முன்னேறிய தேசியவாதப் படையின் இன்னொரு தளபதி ஹுவாங் வெய் படைகளும் சுற்றிவளைக்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்டன. கடைசியாக எஞ்சியிருந்த தேசியவாதப் படைகளின் முதன்மைத் தளபதி டு யூமிங் படைகளுக்கான உதவிப் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. உணவும் ஆயுதங்களும் தீர்ந்துபோன நிலையில், அவரது படைகள் ஒரு சிறிய வட்டத்திற்குள் சுருங்கிச் சரணடைந்தன. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களைத் தேசியவாதப் படைகள் இழந்தன. எஞ்சிய முழு ராணுவப் பிரிவுகளும் எந்த எதிர்ப்புமின்றி அப்படியே சரணடைந்தன.

அதே காலகட்டத்தில் நடந்த மற்ற 2 போர்கள் தேசியவாதிகளின் வீழ்ச்சியை முழுமையாக்கின. லியாவோஷென் போரில் சுமார் 4.70 லட்சம் தேசியவாத வீரர்கள் அழிக்கப்பட்டு மஞ்சூரியா பகுதி கம்யூனிஸ்டுகளின் வசமானது. 1949 ஜனவரியில் நடந்த பிங்ஜின் போரில் பெய்ஜிங் நகரம் வீழ்ந்தது. பெய்ஜிங்கைப் பாதுகாத்த தேசியவாதத் தளபதி ஃபூ சுவோயி, மக்கள் விடுதலைப் படை வழங்கிய மரியாதைக்குரிய சரணடைதல் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் பழமையான அந்தத் தலைநகரம் குண்டுவீச்சுகளிலிருந்து தப்பியது. ஏப்ரல் 23 அன்று தலைநகர் நான்கிங் வீழ்ந்தது. டிசம்பர் மாதம் சியாங் கே ஷேக் 20 லட்சம் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு தைவானுக்குத் தப்பியோடினார். கூடவே குடியரசின் அரசாங்கக் கட்டமைப்பையும், 30 கோடி டாலர் தங்கக் கையிருப்பையும் (தற்போதைய மதிப்பில் சுமார் 33,000 கோடி ரூபாய்) எடுத்துச் சென்றார். ஒருநாள் மெயின்லேண்ட் சீனாவை நிச்சயம் மீட்போம் என்ற அவரது நம்பிக்கை மட்டும் கொஞ்சமும் குறையவில்லை.

புதிய சீன அரசுக்கு அக்டோபர் 2 அன்று சோவியத் யூனியனும், 1950 ஜனவரி 6 அன்று பிரிட்டனும் அங்கீகாரம் அளித்தன. ஆனால் அமெரிக்கா அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த வீம்பு எவ்வித ராஜதந்திர தர்க்கமுமின்றி நீண்ட காலம் தொடர்ந்தது. 1972இல் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ரிச்சர்ட் நிக்சன் பெய்ஜிங்கிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மேற்கொண்டார். அதன் பிறகும் பிடிவாதம் தொடர்ந்தது. இறுதியாக 1979இல்தான் முறையான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டன. அதுவரை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவுக்கான நிரந்தர இடத்தைத் தைவான்தான் வைத்திருந்தது. ஒரு மாபெரும் ராஜதந்திர நாடகம் மூலமாக 1971 வரை இந்த விசித்திரம் நீடித்தது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றி அமெரிக்க அரசியலில் ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியது. சீனா கைநழுவிப் போனதை ஒரு தேசியப் பேரிழப்பாகக் கருதிய அமெரிக்கர்கள், ஒருவரையொருவர் கடுமையாகக் குற்றம் சாட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் டீன் அச்சேசன் வெளியிட்ட ‘சீனா வெள்ளை அறிக்கை’ ஓர் உண்மையை மிகத் துல்லியமாகப் பதிவு செய்தது. தேசியவாதிகளின் தோல்விக்குக் காரணம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறிய பல விஷயங்கள்தான் என்று அது வாதிட்டது. ஆனால் அந்த உண்மையைக் கூறியது அவருக்கு அரசியல் ரீதியாக ஒரு தற்கொலையாக முடிந்தது. கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதியான அமெரிக்க செனட்டர் ஜோசப் மெக்கார்த்தி, ஆசிய விவகாரங்களில் நிபுணரான அமெரிக்கக் கல்வியாளர் ஓவன் லாட்டிமோரை சோவியத் யூனியனின் தலைசிறந்த உளவாளி என்று குற்றம்சாட்டினார். முறையான விசாரணை நடந்தால் சுக்குநூறாக உடைந்துபோகக் கூடிய ஒரு பொய்க் குற்றச்சாட்டுதான் அது. ஆனால் ஒரு தலைசிறந்த அறிஞரின் வாழ்க்கையை அழிக்கவும், அடுத்த ஒரு தலைமுறைக்குச் சீன விவகாரங்கள் குறித்த எந்தவொரு நேர்மையான ஆய்வும் நடக்காமல் முடக்கவும் அந்த ஒற்றைப் பொய் போதுமானதாக இருந்தது.

சீன விவகாரங்களில் கைதேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் சீனா ஹேண்ட்ஸ் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஜான் சர்வீஸ், சீனாவிலிருந்த அமெரிக்க ராஜதந்திரி ஜான் டேவிஸ் மற்றும் அவர்களது சக அதிகாரிகள், தேசியவாத அரசின் ஊழலையும் கம்யூனிஸ்டுகளின் உண்மையான பலத்தையும் மிகத் துல்லியமாக மேலிடத்திற்குத் தெரிவித்திருந்தார்கள். அப்படி உண்மையைச் சொன்னதற்காக அவர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? அவர்களின் பாதுகாப்பு அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. வேலைகள் பறிக்கப்பட்டன. தேசத்துரோகிகள்போல வேட்டையாடப்பட்டார்கள். தேசியவாதிகளுக்கு ஆதரவான அமெரிக்க அரசியல் குழுவான சீனா லாபி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. அமெரிக்காவின் பிரபலப் பத்திரிகை அதிபர் ஹென்றி லூஸின் பத்திரிகைகள், கம்யூனிச சீனாவை எதிர்த்த அமைப்பான கமிட்டி ஆஃப் ஒன் மில்லியன் மற்றும் தேசியவாதத் தலைவர் சியாங்கின் மனைவியான மேடம் சியாங் கே ஷேக் அமெரிக்கா முழுவதும் நடத்திய பிரம்மாண்டமான பிரச்சாரப் பயணங்கள் ஆகியவை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்தன. ராஜதந்திர தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் மட்டுமே அனைத்தையும் முடிவு செய்தது. இதன் விளைவாக, உலக மக்கள் தொகையில் கால்வாசி பேரைக் கொண்ட ஓர் அரசாங்கத்தோடு எந்தவிதமான ராஜதந்திர உறவும் வைத்துக்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா பிடிவாதம் பிடித்தது ஒரு விசித்திரமான முரண்பாடாகும்.

மா சேதுங் மாஸ்கோவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து 1950 பிப்ரவரியில் சீன சோவியத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஜெர்மனியில் பாயும் ஒரு முக்கிய நதியான எல்பே நதியிலிருந்து, சீனாவுக்குத் தெற்கே உள்ள தென் சீனக் கடல் வரை நீளும் ஒரு மாபெரும், உடைக்க முடியாத கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யம் உருவாகிவிட்டது என்று மேற்கத்திய நாடுகள் இதைப் புரிந்துகொண்டன. இந்தப் புரிதல் ஒருபக்கம் உண்மையாக இருந்தாலும், அடிப்படையில் இது முற்றிலும் தவறான ஒரு கணிப்பாகும். எந்தவொரு முக்கியமான பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்பாக, ஸ்டாலின் மா சேதுங்கை பல வாரங்கள் காக்கவைத்து வேண்டுமென்றே அவமானப்படுத்தினார். தன் வழியில் வந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடிய ஒரு மனிதன், தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டார்; ஆனால் ஒருபோதும் அதை மறக்கவில்லை.

ஐந்து வருடங்களுக்கு வெறும் 30 கோடி டாலர் (தற்போதைய மதிப்பில் சுமார் 31,500 கோடி ரூபாய்) கடனை சோவியத் கொடுத்தது. சீனாவின் இமாலயத் தேவைகளுக்கு முன்னால் இது ஒரு கேலிக்குரிய தொகை. அதிலும் குறிப்பாக சோசலிச நாடுகளின் ஒற்றுமை என்ற அவர்களின் முழக்கத்திற்கு இது மாபெரும் அவமானம். பனிப்போர் வரலாற்றை ஆராய்ந்த புகழ்பெற்ற அறிஞர் ஆட் ஆர்னே வெஸ்டாட், பல நாட்டு ஆவணங்களை ஆராய்ந்து ஓர் உண்மையைப் பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு நாடுகளின் உறவு தொடங்கிய நாளிலிருந்தே பரஸ்பர சந்தேகத்தில்தான் இயங்கியது. தங்கள் நாட்டின் புரட்சிதான் வரலாற்று ரீதியாக முதன்மையானது என்று இரு தரப்புமே ஆழமாக நம்பியதால், அந்த இரண்டு புரட்சிகரத் தேசியவாதங்களுக்கும் இடையே இயல்பாகவே ஓர் அடிப்படை முரண்பாடு இருந்தது. ஒப்பந்தத்தில் போடப்பட்ட கையெழுத்துகளின் மை காய்வதற்கு முன்பாகவே, 1960களில் வெடிக்கப்போகும் சீன சோவியத் பிளவுக்கான விதைகள் அந்தப் பேச்சுவார்த்தை மேஜையிலேயே முளைக்கத் தொடங்கிவிட்டன.

இந்தக் கம்யூனிச வெற்றியின் மூலோபாய விளைவுகள், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் கொள்கை அறிக்கை என்றழைக்கப்படும் ‘என்எஸ்சி 68’இல் மிகத் தெளிவாகப் பிரதிபலித்தன. பனிப்போர் கால அமெரிக்க மூத்த அதிகாரி பால் நிட்ஸ் என்பவரின் மேற்பார்வையில் 1950 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய சிற்பி ஜார்ஜ் கெனன் வகுத்திருந்த கம்யூனிசக் கட்டுப்பாட்டுக் கொள்கை என்பது, மிக முக்கியமான குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இருந்தது. ஆனால் பால் நிட்ஸ் இதை முற்றிலும் வேறு கோணத்தில் பார்த்தார். சீனாவின் மாபெரும் மக்கள் தொகையும் நிலப்பரப்பும் கம்யூனிஸ்ட் முகாமோடு இணைந்துவிட்டதால், உலக அளவிலான ஒரு மாபெரும் மோதலுக்கு அமெரிக்கா தயாராக வேண்டும் என்று அவர் எச்சரித்தார். இதற்காக அமெரிக்காவின் வருடாந்திரப் பாதுகாப்பு பட்ஜெட்டை 1,300 கோடி டாலரிலிருந்து 5,000 கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார் (தற்போதைய மதிப்பில் சுமார் 13 லட்சம் கோடியிலிருந்து 50 லட்சம் கோடி ரூபாய் வரை). ஜூன் மாதம் கொரியப் போர் வெடித்தவுடன், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கா இந்தப் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்டது.

1950 அக்டோபரில் சீனப் படைகள் போரில் குதித்தன. சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் எல்லையாக ஓடும் நதியான யாலு நதியைக் கடந்து 3 லட்சம் சீன வீரர்கள் முன்னேறி வந்தார்கள். புதிய சீன அரசாங்கத்தின் ராணுவ பலத்தையும், பின்வாங்காத அதன் இரும்பு உறுதியையும் இது உலகிற்கு உணர்த்தியது. இதன் விளைவாக, வியட்நாம், லாவோஸ், கம்போடியா அடங்கிய பிராந்தியமான இந்தோசீனாவில் பிரான்ஸ் நடத்திய காலனி ஆதிக்கப் போருக்கு அமெரிக்கா தனது ஆதரவை வேகப்படுத்தியது. அதேபோல, சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலுள்ள கடல் பகுதியான தைவான் ஜலசந்தியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பல நெருக்கடிகளிலும் தைவானைக் கைவிட மாட்டோம் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா உறுதியாக எடுத்தது.

பனிப்போரின் மூலோபாய வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் சீனாவைக் கைப்பற்றியது என்பது, சோவியத் யூனியன் அணு ஆயுதங்களைக் கண்டறிந்ததற்கு இணையான ஒரு மாபெரும் பூகம்பம். இது பனிப்போரின் அடிப்படை இலக்கணத்தையே தலைகீழாக மாற்றிப்போட்டது. சமாளிக்கக்கூடிய நிலப்பரப்பைக் கொண்ட ஐரோப்பாவோடு முடிந்துவிடும் என்று நினைத்த கம்யூனிசத் தடுப்பு யுத்தம், இப்போது யாருக்கும் சரியாகப் புரியாத மாபெரும் நிலப்பரப்பைக் கொண்ட ஆசியா முழுவதும் விரிவடைந்தது. இந்த விரிவாக்கத்தால்தான் சீனாவுக்குக் கிழக்கே அமைந்த கொரியாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமிலும் அமெரிக்கா பல லட்சம் உயிர்களையும், பல கோடிச் செல்வத்தையும் இழக்க வேண்டியிருந்தது. சீனாவின் கம்யூனிச வெற்றி ஏற்படுத்திய மாபெரும் பயமே அமெரிக்காவை இப்படித் தன் எல்லைகளைத் தாண்டிப் பல திசைகளிலும் கால்களை விரிக்கச் செய்தது. இது தவிர்க்க முடியாதது என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்த நேரத்துப் பதற்றத்திற்கு இது ஓர் இயல்பான எதிர்வினை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சீன மக்கள் எழுந்து நின்றுவிட்டார்கள் என்று மா சேதுங் முழங்கியிருந்தார்; அந்தப் பிரம்மாண்டமான தேசத்தின் அந்த எழுச்சியும், அதன் பார்வையும் மீதமிருந்த 20ஆம் நூற்றாண்டு முழுவதற்கும் பனிப்போரின் ஆசிய வரலாற்றை அடியோடு மாற்றி அமைத்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *