1950களின் தொடக்கத்தில், மேற்கத்திய ராஜதந்திரிகள் கம்யூனிஸ்ட் உலகைப் பார்த்து பயத்திலும் விரக்தியிலும் உறைந்தார்கள். பெர்லினின் பிராண்டன்பர்க் கேட் முதல் சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையிலான மஞ்சள் கடல் வரை நீண்டிருந்த அந்தச் சாம்ராஜ்யம், வெளியில் பிளக்க முடியாத ஒரு மாபெரும் கற்பாறைபோலத் தோன்றியது. மனிதக்குலத்தின் மூன்றில் ஒரு பங்கைத் தன்னகத்தே கொண்டு, மார்க்ஸ்-லெனின் சித்தாந்தத்தாலும் சோவியத் தலைமையாலும் அது ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொழிலாளர் வர்க்க ஒற்றுமை என்ற வெளிப்பூச்சுக்கு அடியில் தீராத கோபங்களும் சித்தாந்தப் பிளவுகளும் காயமடைந்த தேசியக் கௌரவங்களும் சீழ்பிடித்துக் கிடந்தன. எந்த மேற்கத்திய உத்தியாலும் இவ்வளவு ஆழமான பிளவை வெளியிலிருந்து உருவாக்க முடியாது; ஆனால் கம்யூனிச உலகத்தின் உள்ளே இருந்த அவநம்பிக்கை அதை அடுத்த 10 ஆண்டுகளில் சுக்குநூறாக்கியது. சித்தாந்தத்தைவிட தேசிய நலனும் தத்துவ ஒற்றுமையைவிட தனிப்பட்ட விரோதங்களும் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை இந்தப் பிளவு உலகிற்கு நிரூபித்தது.
1950 பிப்ரவரியில் மாஸ்கோவில் கையெழுத்தான சீன-சோவியத் ஒப்பந்தம் வெளியில் காட்டப்பட்ட அளவுக்கு வலுவானதல்ல. முக்கியப் பேச்சுவார்த்தைக்கு முன் ஜோசப் ஸ்டாலின், சீனப் புரட்சியின் வெற்றியாளரான மா சேதுங்கைப் பல வாரங்கள் காக்கவைத்து அவமானப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டை வென்ற மனிதன், அந்தக் காத்திருப்பு அறை அவமானத்தை விழுங்க வேண்டியிருந்தது. தற்போதைய மதிப்பில் சீனாவிற்குச் சுமார் ₹ 31,500 கோடி உதவி வழங்கப்பட்டாலும், அது கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்ற தேசியவாதிகளுக்குச் சென்ற உதவியில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவு.
ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், சகோதர சோசலிச ஒத்துழைப்பைவிட சோவியத்தின் கஞ்சத்தனத்தையும் இளக்கார அணுகுமுறையையும் வெளிப்படுத்தின. புரட்சிக் களத்தில் வெற்றிபெற்று புதிதாக வந்த மாணவனிடம் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த கூட்டாளி தன்னையறியாமல் ஒருவித இளக்காரத்தோடு பேசுவதுபோலவே மாஸ்கோ பெய்ஜிங்கை அணுகியது. சமத்துவமான கூட்டணியின் மொழி பேசப்பட்டாலும், அதன் உள்ளே பேரரசு மரபின் மேல்-கீழ் பார்வை உயிரோடு இருந்தது.
1953 மார்ச்சில் ஸ்டாலின் இறந்ததும், இரு நாடுகளையும் கட்டுப்படுத்தியிருந்த அந்த ஒற்றைப் பிடி விலகியது. உலகக் கம்யூனிசத்தை வழிநடத்தும் உரிமை தமக்கே உண்டு என்று எண்ணிய சோவியத் கூட்டுத் தலைமையை மா சேதுங் நாளுக்கு நாள் பெருகிய அதிருப்தியுடன் பார்த்தார். 12 பிப்ரவரி 1956 அன்று 20வது கட்சி மாநாட்டில் நிகிதா குருசேவ் ஸ்டாலினின் குற்றங்களை 4 மணி நேரம் கடுமையாக விமர்சித்த ரகசிய உரை, அந்த மனக்கசப்பை வெளிப்படையான பகையாக மாற்றியது. இந்த உரை பற்றி மா சேதுங்குடன் முன்கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை; அவரது பிரதிநிதிகளுக்குக்கூடப் பின்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் பாதிக்கும் விஷயத்தில் சீனாவை மாஸ்கோ ஒரு கிளை அலுவலகம் போலவே நடத்துகிறது என்ற உணர்வு ஆழமான காயமாகப் பதிந்தது. ஸ்டாலினை விமர்சிப்பது, சீனாவில் மா சேதுங் கட்டியெழுப்பிய தனிமனித ஆராதனையையும் மறைமுகமாகச் சாடியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யாருடைய உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி முடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மார்க்ஸ் லெனின் ஆகியோரின் சித்தாந்தங்களுக்குத் தனது சொந்த தத்துவார்த்தப் புதுமைகளின் மூலம் மிக உண்மையான பங்களிப்பையும் வழங்கியிருந்தது. கட்சியின் தலைமையகத்திலிருந்து ஒரு சாதாரணக் கிளை அலுவலகத்திற்கு வரும் வெறும் உத்தரவுபோல இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சோவியத் தலைமை எதிர்பார்த்ததால்தான் அப்படிப்பட்ட ஒரு மாபெரும் கட்சிக்கு அந்த ஆழமான காயம் ஏற்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தக் காயம் மாபெரும் சித்தாந்த மோதலாக மாறியது. வல்லரசுகளின் அணுஆயுத அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ளுவது எனும் கேள்வி விவாதங்களை ஏற்படுத்தியது. குருசேவ் ‘அமைதியான சகவாழ்வு’ வாதத்தை முன்வைத்தார். அணுஆயுதத்தை எதிர்கொள்ள அவர் தயாராக இல்லை. மாவோ ஏகாதிபத்தியங்களுக்கு அடிபணியத் தேவையில்லை. அவர்களுடைய அணுஆயுதத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று கருதினார். அணு ஆயுத யதார்த்தம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியத்திடம் மண்டியிடுவது கோழைத்தனம் என்று அவர் கருதினார். ஏகாதிபத்தியம் என்பது வரலாற்று ரீதியாக அழிந்துபோக வேண்டிய ஒன்று. அந்த இயக்கவியல் விதிகளை இந்த அணு ஆயுதங்களால் ஒருபோதும் மாற்றிவிட முடியாது என்று மா சேதுங்கின் காகிதப் புலி சித்தாந்தம் மிக உறுதியாக வாதிட்டது.
இந்த விவாதத்தின் அடியில் ஒரு கொடிய கேள்வி இருந்தது; சீனாவுக்காக அமெரிக்காவுடன் அணுப்போரைச் சந்திக்கச் சோவியத் யூனியன் தயாரா? குருசேவின் வார்த்தைகளும் செயல்களும் கொடுத்த பதில் தெளிவானது, இல்லை. அதுவே கருத்து வேறுபாட்டைச் சமரசமற்ற மூலோபாயப் பிளவாக மாற்றியது. மாஸ்கோவிற்கு அணுப்போர் என்பது தவிர்க்க வேண்டிய உலகப் பேரழிவு. பெய்ஜிங்கிற்கு அது ஏகாதிபத்தியத்தை அஞ்சாமல் எதிர்கொள்ள வேண்டிய புரட்சித் துணிச்சலின் சோதனை. இந்த மனப்பான்மை வேறுபாடு, இரு தலைநகரங்களையும் ஒரே மொழியில் பேசினாலும் வேறு உலகங்களில் வாழச் செய்தது.
1958 ஆகஸ்டில் தைவான் ஜலசந்தி நெருக்கடி வெடித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ராணுவப் படையான மக்கள் விடுதலைப் படை, சீனக் கடற்கரையிலுள்ள தைவான் கட்டுப்பாட்டிலிருந்த குமோய் மற்றும் மட்சு தீவுகள் மீது குண்டுகளை வீசின. குருசேவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டாலும், மிகக் குறைவாகவே சொல்லப்பட்டது. அவர் சீனாவுக்கான அணு பாதுகாப்பை வழங்கத் தயங்கினார். சீன-சோவியத் கூட்டு நீர்மூழ்கிக் கப்பல் படை என்கிற சோவியத் ஆலோசனையை மா சேதுங், சீன இறையாண்மையைப் பறிக்கும் சமமற்ற ஒப்பந்தம் என்று நிராகரித்தார். கடந்த நூற்றாண்டில் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சீனாவிற்கு, சோவியத் உதவிகூட கட்டுப்பாட்டின் விலையோடு வருகிறது என்ற உணர்வு இதனால் உறுதியானது. 1959 ஜூனில் அணு தொழில்நுட்பத்தைச் சீனாவுக்கு வழங்க முடியாது என்று சோவியத் அதிகாரப்பூர்வமாக மறுத்தது.
இதற்கிடையில் பொருளாதாரப் பாய்ச்சலுக்கான மா சேதுங்கின் ‘மாபெரும் பாய்ச்சல்’ என்கிற திட்டம் ஒரு மிகப்பெரிய பேரழிவாகச் சீனாவிற்கு முடிந்தது. அந்தத் திட்டத்தின்படி வீட்டுக்கு வீடு இருக்கும் சமையல் பாத்திரங்களை உருக்கி, எந்தப் பயனுமில்லாத எஃகு இரும்பை உருவாக்கினார்கள். அதைவிடக் கொடுமையாக, மாபெரும் பாய்ச்சல் திட்டத்தின் முறையற்ற அணுகுமுறையால், வெளியில் சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் பஞ்சமே மிஞ்சியது. அந்தப் பஞ்சத்தால் 2 கோடி முதல் 4.5 கோடி வரையிலான சீனர்கள் செத்து மடிந்தார்கள். இதையெல்லாம் பார்த்த சோவியத் பார்வையாளர்கள், சீனாவின் இந்தக் கம்யூனிசம் ஒட்டுமொத்த சோசலிச முகாமின் கௌரவத்திற்கே மாபெரும் ஆபத்து என்ற முடிவுக்கு வந்தார்கள்.
1 அக்டோபர் 1959 அன்று அமெரிக்க அதிபரின் மலைப்பகுதி ஓய்வு விடுதியான கேம்ப் டேவிடில் ஐசனோவரைச் சந்தித்த உற்சாகத்துடன் குருசேவ் பெய்ஜிங் வந்தார். ஆனால் அவருக்கு அவமதிப்பே கிடைத்தது. அணுப்போரின் பயங்கரங்கள் குறித்து அவர் மா சேதுங்குக்கு பாடம் எடுத்தார்; பதிலுக்கு மா சேதுங், இயக்கவியல் பொருள்முதல்வாதம் குறித்து அவருக்கே வகுப்பு எடுத்தார். இதற்கான உளவியல் முன்னோட்டம் 1958இல் நடந்த நீச்சல் குளச் சம்பவத்தில் இருந்தது. நீச்சல் தெரியாத குருசேவை ஆழமில்லாத பகுதியில் தடுமாறவைத்து, மா சேதுங் நீந்திக்கொண்டே புரட்சி வியூகம் பேசினார். அது ஒரு தனிப்பட்ட அவமானம் மட்டுமல்ல; சமத்துவம் கோரிய பெய்ஜிங், மாஸ்கோவின் மூத்த சகோதரத் தொனியை ஏற்காது என்பதற்கான மேடை நாடகமுமாக இருந்தது. 1959 உச்சி மாநாட்டுக்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் நிராகரித்துவிட்டனர். குருசேவுக்கு மா சேதுங் ஆபத்தான கற்பனாவாதி; மா சேதுங்குக்கு குருசேவ் லெனினியத்தின் துரோகி.
16 ஜூலை 1960 அன்று நடைமுறை ஒத்துழைப்பு அதிகாரப்பூர்வமாக உடைந்தது. சோவியத் யூனியன் 1,390 தொழில்நுட்ப ஆலோசகர்களைத் திரும்ப அழைத்தது. அவர்கள் பாதி முடிந்த திட்டங்களின் வரைபடங்களையும் இயந்திர ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள். 343 ஒப்பந்தங்களும், 257 அறிவியல் திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. சில திட்டங்கள் அங்கேயே இறந்தன. சிலவற்றைச் சீனப் பொறியாளர்கள் நினைவில் மீதமிருந்த அறிவின் துணையால் தொடர்ந்தனர். மாபெரும் பஞ்சத்தின் உச்சத்தில் நடந்த இந்த நடவடிக்கை, சீனாவைச் சிதைக்கத் திட்டமிட்ட துல்லியத் தாக்குதலாக பெய்ஜிங்கில் புரிந்துகொள்ளப்பட்டது. பொதுவெளி தாக்குதல்கள் முதலில் மறைமுகமாக இருந்தன. சோவியத்தின் ‘வரட்டுவாதம்’ சீனாவை நோக்கியது; சீனாவின் ‘திருத்தல்வாதம்’ சோவியத்தைக் குறித்தது. சீக்கிரமே அந்த மறைமுகமும் மறைந்தது. சகோதரக் கடிதங்கள் அரசியல் குற்றப்பத்திரிகைகளாக மாறின.
1962 அக்டோபர்-நவம்பர் இந்திய-சீனப் போரில் சோவியத் யூனியன் நடுநிலை பேசிக்கொண்டே இந்தியாவிற்கு மிக்-21 போர் விமானங்களை விற்றது. பெய்ஜிங்கிற்கு, சோசலிச உறவைவிட மாஸ்கோ முதலாளித்துவ நாடுகளுடனான உறவை மதிக்கிறது என்ற உணர்வு உறுதியானது. அதே ஆண்டின் கியூபா ஏவுகணை நெருக்கடி, குருசேவின் சாகசத்தையும் பின்னர் பணிவையும் சீனாவிற்கு வெளிப்படுத்தியது.
1963 ஆகஸ்டில் வரையறுக்கப்பட்ட அணு சோதனைத் தடை ஒப்பந்தம், ஜூலை 14ஆம் தேதியிட்ட சோவியத்தின் திறந்த மடலுக்கும் சீனாவின் 9 விமர்சனங்களுக்கும் வழிவகுத்தன. இனி மறைமுக வார்த்தைகள் இல்லை. 1964 அக்டோபரில் சீனா தனது முதல் அணு ஆயுதத்தை வெடித்தது. அது ஓர் ஆயுதச் சோதனை மட்டுமல்ல; சோவியத் ஆதரவில்லாமலேயே பாதுகாப்பையும் புரட்சித் தலைமைக்கான உரிமையையும் தானே கட்டியெழுப்பும் என்கிற சீனாவின் அறிவிப்பாக இருந்தது. இனிமேல் மாஸ்கோவின் அனுமதி இல்லாமல் பெய்ஜிங் உலக அரசியலில் தனிப் பாதை அமைக்கும் என்பதை அது வெளிப்படையாகச் சொன்னது.
சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக உடைந்தன. அல்பேனியா, சீனாவின் ஐரோப்பியக் கூட்டாளியாக மாறியது; பல பழைய கட்சிகள் உள்ளே பிளவடைந்தன. விசுவாசங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இந்தியா, பெரு, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகள் எழுந்தன. 1969 மார்ச் 2 அன்று உசுரி நதியின் சென்பாவோ தீவில் சீனப் படைகள் சோவியத் எல்லைப் படையினரைத் தாக்கின. தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிந்தது. மார்ச் 15 அன்று சோவியத் டாங்கிகளும் கனரக ஆயுதங்களும் பதிலடி கொடுத்தன. வசந்தம் மற்றும் கோடை முழுவதும் 7,200 கிலோமீட்டர் எல்லை முழுவதும் படைகள் குவிக்கப்பட்டன.
சோவியத் தளபதிகள் சீன அணு மையங்கள் மீது முன்கூட்டிய தாக்குதல் திட்டங்களையும் ஆராய்ந்தனர். செப்டம்பர் 11 அன்று பெய்ஜிங் விமான நிலையத்தில் அலெக்ஸி கோசிகின் மற்றும் சோ என்லாய் சந்தித்ததால் நெருக்கடி தாற்காலிகமாகக் கட்டுக்குள் வந்தது. விமான நிலையமே சந்திப்பு இடமாக இருந்தது. முழுமையான அரசு மரியாதையுடன் சமாதானம் செய்ய இரு தரப்பும் தயங்கின. ஆனால் முழுப் போர் அமெரிக்காவுக்கே லாபம் தரும் என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர். வெளியில் புரட்சிகர கோஷங்கள் ஒலித்தாலும், உள்ளே கணக்கிட்ட வல்லரசு பயமே முடிவை நிர்ணயித்தது. நடக்காமல் தடுக்கப்பட்ட அந்தப் போர், நடந்த பல போர்களைவிட வரலாற்றில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.
இந்த முக்கோண வாய்ப்பை அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சரியாகப் புரிந்துகொண்டார். எந்தக் கம்யூனிச வல்லரசுடனும் நிரந்தர நிபந்தனையற்ற கூட்டணி வேண்டாம்; ஆனால் இருவருக்கும் வாஷிங்டனே விருப்பமான இணை என்று தோன்ற வேண்டும் என்பதே அவரது கணக்கு. 1971 ஜூலையில் கிஸ்ஸிஞ்சரின் ரகசிய பெய்ஜிங் பயணமும், 1972 பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வரலாற்றுப் பயணமும் பனிப்போரின் திசையையே மாற்றின. கம்யூனிச எதிர்ப்பின் மேல் அரசியல் வாழ்வைக் கட்டிய அமெரிக்க அதிபர், சீன மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்ட அதே அரசியல் மையத்தின் அருகே மா சேதுங்கை நேரில் சந்தித்தார்.
இந்தப் பிளவை அமெரிக்கா உருவாக்கவில்லை; ஆனால் அதை அறுவடை செய்வதில் தயக்கம் காட்டவில்லை. இதன்பின் வாஷிங்டன் மாஸ்கோவுடனும் பெய்ஜிங்குடனும் தனித்தனியாகப் பேசும் இடத்தைப் பெற்றது. கம்யூனிஸ்ட் உலகின் உட்பகை, அமெரிக்க மூலோபாயத்தின் மிகப் பெரிய ஆதாயமாக மாறியது.
எல்லைப் பகுதி தொடர்ந்து கொதிநிலையில் இருந்தது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சோவியத் படைகளை எதிர்கொள்ளச் சீனா சுரங்கக் கட்டமைப்புகளையும், சோவியத் குண்டுவீச்சிலிருந்து தப்பும் ‘தேர்ட் பிரண்ட்’ உள்நாட்டுத் தொழிற்துறை மாற்றத்தையும் மேற்கொண்டது. சீன-சோவியத் பிளவு ஒரு பேருண்மையை வெளிப்படுத்தியது. புரட்சிகர ஒற்றுமை என முழங்கினாலும், நாடுகள் இறுதியில் தங்கள் தேசிய நலன்களுக்கே கட்டுப்படும். ஒரே அமைப்புக்குள் நடக்கும் மோதல்கள், வேறு அமைப்புகளுக்கிடையிலான பகையைவிட அதிக ஆபத்தானவை.
கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யம் மேற்கத்திய அழுத்தத்தால் அல்ல, தன் சொந்த உள்முரண்பாடுகளால்தான் உடைந்தது. கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்திற்குச் சுட்டிய ‘வரலாற்று இயக்கவியல்’, இங்கே கம்யூனிசத்தின் உட்பிளவிலேயே வேலை செய்தது. இருதுருவ உலகம் முக்கோணப் போட்டியாக மாறியது. தேசிய நலன் என்ற வளைந்துகொடுக்கும் யதார்த்தத்திற்கு முன் சித்தாந்தப் பிடிவாதம் பலவீனமடைந்தது. தொழிலாளர் வர்க்கச் சர்வதேசம் என்று கனவு கண்டவர்கள், எல்லை, இறையாண்மை, பாதுகாப்பு, கௌரவம் என்ற பழைய அரசியல் சொற்களிலேயே மீண்டும் சிக்கிக்கொண்டார்கள்.
(தொடரும்)

