ஒரே தலைமுறை இடைவெளியில் உலக அரங்கில் ஒரு மாபெரும் அதிசயம் நடந்தது. 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, 1960இல் ஆப்பிரிக்க ஆண்டு கொண்டாடப்படும் வரையிலான காலகட்டத்தில், மூன்று நூற்றாண்டுகளாக உலக அரசியலை இரும்புப் பிடியில் வைத்திருந்த காலனியாதிக்கம் கற்பனைக்கெட்டா வேகத்தில் உடைந்து சிதறியது.
1960இல் மட்டும் ஐரோப்பாவுக்குத் தெற்கே விரிந்திருந்த ஆப்பிரிக்கக் கண்டத்தில் 12 மாதங்களுக்குள் 17 நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தன. வெறும் இரு தசாப்தங்களில் மனிதகுலத்தின் பாதிக்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்கிய சுமார் 40 நாடுகள் அடிமை நுகத்தடியை எறிந்து எழுந்தன. சுயராஜ்ஜியம் செய்யத் தகுதியற்றவர்கள் என்று ஏளனம் செய்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கு, வரலாறே தீர்ப்பு வழங்கியது. இது வெறும் கொடிகளும் தேசிய கீதங்களும் மாறிய சம்பவமல்ல; உலக அதிகாரத்தின் மொழியும், நிறமும், முகவரியும் மாறத் தொடங்கிய தருணம். முந்தைய நாள் வரை வரைபடங்களில் பிறர் நிறம் பூசியிருந்த நிலங்கள், தங்களது சொந்தக் கையொப்பத்துடன் உலக மேடையில் பேசத் தொடங்கின. நவீன உலகம் இதற்கு முன் கண்டிராத புவிசார் மாற்றம் அது.
ஆனால் அந்தச் சுதந்திரம் உடனே ஒரு புதிய தர்மசங்கடத்தை உருவாக்கியது. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் என இரு துருவங்களாக உலகம் பிளந்திருந்தது. புதிதாகப் பிறந்த நாடுகளை நோக்கி, ‘எங்கள் முகாமா, எதிர் முகாமா?’ என்கிற மிரட்டல் வினா எழுப்பப்பட்டது. 1953 முதல் 1959 வரை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜான் ஃபாஸ்டர் டல்லஸ், நடுநிலைமை என்பது நெறிமுறையற்ற குற்றம் என்று அறிவித்தார்.
சோவியத் யூனியனோ, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு நாங்கள் தரும் ஆதரவுக்குப் பதிலாக, ராஜதந்திர விசுவாசம் வேண்டும் என்று எதிர்பார்த்தது. கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்த வாஷிங்டன் சீட்டோ (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு), சென்டோ (மேற்கு ஆசிய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு) மற்றும் இருதரப்பு ராணுவ ஒப்பந்தங்களை விரித்தபோது, அவற்றில் சேராத நாடுகளுக்குக்கூட அந்த ஒப்பந்தங்கள் அழைக்கப்படாத நெருக்கடிகளாக மாறின. சுதந்திரம் பெற்ற உடனேயே, தங்கள் நிலம் மீண்டும் பிறரின் சதுரங்கப் பலகையாக மாறிவிடுமோ என்ற அச்சத்துடன் பல நாடுகள் உலகை நோக்கின.
இதற்கான மாபெரும் பதிலாக ஜவாஹர்லால் நேரு அணிசேரா கொள்கையை முன்வைத்தார். அது அறியாமை நிறைந்த கற்பனைவாதம் அல்ல. கேம்பிரிட்ஜில் சட்டம் பயின்றவரும், பிரிட்டிஷாரால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவருமான நேரு, காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அனுபவத்தில் செதுக்கியெடுத்த நுட்பமான ராஜதந்திரக் கணக்கீடு அது. எந்த முகாமிலும் இணைவதால் வரும் ராணுவக் கடமைகளையும் சித்தாந்தக் கட்டுப்பாடுகளையும் தாங்கும் அளவுக்கு இந்தியாவிற்கு அப்போது பலம் இல்லை. ஆனால் எந்த முகாமிலும் சேராததன் மூலம், அமெரிக்காவின் உணவு உதவியையும் பெறலாம், சோவியத் தொழிற்சாலை இயந்திரங்களையும் வாங்கலாம், பிரிட்டிஷ் முதலீடுகளையும் வரவேற்கலாம். அதே சமயம், சர்வதேசப் பிரச்னைகளில் எவருக்கும் தலையாட்டாமல், தனக்கான தீர்ப்பைத் தானே வழங்கும் தன்மானத்தையும் தன்னாட்சியையும் காக்கலாம்.
நடுநிலைமை என்பது இங்கு மௌனம் அல்ல; பலவீனமான அரசுகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட செயற்பாட்டுச் சுதந்திரத்தின் ஆயுதம். அதன் அழகு அதில் இருந்த ஆபத்தில்தான் இருந்தது; அது சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் தேடியது. முகாம்களில் சேராதிருப்பது உலகத்திலிருந்து விலகுவது அல்ல; ஒவ்வொரு பிரச்னையையும் அதன் நியாயத்தின் தராசில் தனித்தனியாக எடுப்பதாக நேரு அதை விளக்கினார்.
1946 உரைகளிலேயே, ‘சுதந்திர இந்தியா அனைத்து நாடுகளுடனும் நட்பு கொண்டிருக்கும்; ஆனால் எந்த அதிகார முகாமோடும் சேராது’ என்று நேரு உறுதியளித்திருந்தார். 24 ஏப்ரல் 1954 அன்று திபெத் தொடர்பாக அப்போதைய சீன வெளிவிவகார அமைச்சர் சோ என்லாயுடன் கையெழுத்தான இந்திய-சீன ஒப்பந்தத்தில் இது, ‘இறையாண்மைக்குப் பரஸ்பர மரியாதை, ஆக்கிரமிப்பு செய்யாமை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, சமத்துவம், அமைதியான சகவாழ்வு’ எனப் பஞ்சசீலக் கொள்கையாக வடிவெடுத்தது. ஆனால் ஒரு வரலாற்று முரண்பாடாக, 1962 அக்டோபர் மாதம் இமயமலை எல்லையைக் கடந்து இந்தியாமீது சீனா தாக்குதல் நடத்தியபோது, இந்த 5 கொள்கைகளையும் அது அப்பட்டமாக மீறியது. 1954ஆம் ஆண்டில், அந்த மாபெரும் துயரம் 8 ஆண்டுகள் தள்ளியிருந்தது யாருக்கும் அப்போது தெரியவில்லை.
18 ஏப்ரல் 1955 வரை, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 29 நாடுகள் இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் கூடின. அது வெறும் மாநாடு அல்ல; பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்கள், இனிமேல் தங்கள் நலன்களைத் தாமே வரையறுப்போம் என்று உலகிற்கு அறிவித்த தருணம். இந்தோனேசியாவின் சுகர்னோ, ‘மனிதகுல வரலாற்றில் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட ஆசிய–ஆப்பிரிக்க மக்களின் கண்டங்களுக்கிடையேயான முதல் மாநாடு’ என்று முழங்கியபோது, அந்தக் கூட்டத்தின் ஆழமான அர்த்தம் வெளிப்பட்டது. கம்யூனிச சீனாவும் கம்யூனிசத்தை எதிர்த்த தாய்லாந்தும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே மண்டபத்தில் அமர்ந்தன. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா விலக்கப்பட்டன; வாஷிங்டனின் எதிர்ப்பை மீறி சீனா அழைக்கப்பட்டது. சோ என்லாய், மக்கள் சீனக் குடியரசை சோவியத் பினாமியாக அல்ல, ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திர வல்லரசாக முன்வைத்தார். இதனால் இந்தக் கூட்டத்தை கம்யூனிஸ்ட் சதி என்று குறிக்க முயன்ற மேற்கத்திய முயற்சி பலவீனமடைந்தது. இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட 10 கொள்கைகள்தான் பின்னர் அணிசேரா இயக்கத்தின் தத்துவ அடித்தளமாக அமைந்தன.
இந்த இயக்கத்தின் தலைவர்கள், தார்மிக மொழியையும் நடைமுறை சமரசத்தையும் ஒன்றாகக் கையாள வேண்டியிருந்தது. 1956 ஜூலையில் எகிப்து நாட்டின் தேசியவாதத் தலைவர் நாசர், சூயஸ் கால்வாயைத் தேசியமயமாக்கினார். அதற்கு எதிராக பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் தாக்கினாலும், அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கண்டித்ததால் அவை பின்வாங்கின. நாசர் ஏகாதிபத்திய எதிர்ப்பின் நாயகனாக உயர்ந்தார். ஆனால் நடைமுறையில் அவர் 1955 செக் நாட்டு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து தொடங்கி, சோவியத் போர் விமானங்கள், டாங்கிகள், எகிப்தின் நைல் நதியின் மாபெரும் அணையான, அஸ்வான் அணைக்கான நிதி ஆகியவற்றைச் சார்ந்திருந்தார். யூகோஸ்லாவியாவை ஆண்ட புகழ்பெற்ற சோசலிசத் தலைவர் டிட்டோ இன்னொரு முரண்பாடு.
தீவிர சோசலிஸ்டாக இருந்த அவர் 1948இல் ஸ்டாலினுடன் முழுமையாக உறவைத் துண்டித்துக்கொண்டார். பின், அமெரிக்காவிடமிருந்து இன்றைய மதிப்பில் சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் உதவி பெற்றார். அவருக்கு அணிசேராமை என்பது இரு வல்லரசுகளிடமிருந்து சம தூரத்தில் நிற்பது அல்ல; சோவியத் கட்டுப்பாட்டிலிருந்து தன் தேசத்தைப் பாதுகாப்பதே. 1957இல் கானாவை விடுவித்த நிக்ரூமா, வியட்நாம் போரை நிறுத்துவதற்காகத் தன்னைத் தானே அமைதித் தூதராக நியமித்துக்கொண்டு வியட்நாம் நாட்டின் முக்கியத் தலைநகரமான ஹனோய் செல்வதற்காக பெய்ஜிங்கில் தங்கியிருந்தபோது, 1966இல் தனது நாட்டிலேயே ராணுவப் புரட்சியால் அகற்றப்பட்டார். அணிசேரா ஒற்றுமை, உள்நாட்டு நிர்வாகத்திற்கோ ஆட்சிப் பாதுகாப்பிற்கோ உத்தரவாதம் தராது என்பதற்கு இது கடுமையான சாட்சி.
1961 செப்டெம்பரில் யூகோஸ்லாவியா நாட்டின் அப்போதைய தலைநகரமான பெல்கிரேட் மாநாட்டில் அணிசேரா இயக்கம் அதிகாரப்பூர்வ அமைப்பானது. பெர்லின் சுவர் எழுந்துகொண்டிருந்த அந்தப் பதற்ற காலத்தில் டிட்டோ, நாசர், நேரு இணைந்து கூடிய இந்த மாநாட்டில் 25 நாடுகள் பங்கேற்றன. 1960களின் மத்தியில், உலக மக்கள் தொகையின் பாதிக்கும் மேற்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியாக அது வளர்ந்தது. ஐநா பொதுச்சபையில் அதன் எண்ணிக்கை பெரும்பான்மையாக மாறியது. குரூப் ஆஃப் 77 மற்றும் 1964இல் உருவான UNCTAD மூலம், கச்சா பொருட்களின் விலை நிலைநிறுத்தம், தொழில்நுட்பப் பரிமாற்றம், கடன் தள்ளுபடி, சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய சர்வதேசப் பொருளாதாரக் கட்டமைப்பை அது கோரியது.
இந்தக் கோரிக்கை வெறும் வர்த்தகப் புகார் அல்ல; காலனி காலத்தில் உருவாக்கப்பட்ட உலகச் செல்வப் பங்கீட்டையே மறுபரிசீலனை செய்யும் அரசியல் வாதம். அணிசேரா நாடுகளின் ஆதரவுக்காக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஆயுதங்களையும் மேம்பாட்டு நிதியையும் வழங்கப் போட்டியிட்டன; புத்திசாலித்தனமான தலைவர்கள் இந்தப் போட்டியைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்தினர். இவ்வாறு, பலவீனமாகத் தோன்றிய நடுநிலைமை, சில தருணங்களில் வல்லரசுகளையே பேரம் பேச வைக்கும் மேடையாக மாறியது.
இந்தியாவின் நிலை இதன் மைய முரண்பாட்டை வெளிப்படுத்தியது. 1960களின் தொடக்கத்தில் இந்திய ராணுவ ஆயுதங்களில் 70%க்கும் மேல் சோவியத் தளவாடங்களாக இருந்தன. இருந்தாலும், ஆயுதங்களை எங்கிருந்து வாங்குகிறோம் என்பதே வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்காது; முடிவுகளை நாமே எடுப்பதால் அணிசேராமை சமரசமடையாது என்று நேரு வாதிட்டார். ஆனால் 1962 இந்திய-சீனப் போர் இந்தத் தார்மிகப் போர்வையைக் கிழித்தெறிந்தது.
அக்டோபர் 20ஆம் தேதி சீனப் படைகள் சர்ச்சைக்குரிய எல்லைக்கோடான மக்மோகன் கோட்டுப் பகுதியில் உள்ள வடகிழக்கு எல்லைப்புற முகமையிலும் (தற்போதைய அருணாச்சலப் பிரதேசம்), அக்சாய் சின்னிலும் (தற்போதைய லடாக்கின் கிழக்கே உள்ள உயர்ந்த பனிப்பாலைவனப் பகுதி) தாக்கின. தயாரிப்பின்றி நின்ற இந்திய ராணுவம் தோல்விகளைச் சந்தித்தது. பஞ்சசீலம் போரைத் தடுக்கவில்லை; சோவியத் யூனியன் நடுநிலை வகித்தது; அணிசேரா நாடுகள் அனுதாபம் மட்டுமே தெரிவித்தன. இறுதியில், இந்தியா விமர்சித்து வந்த அதே பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிடம் அவசர ராணுவ உதவிக்காகக் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தார்மிக உயரம், எல்லைப் பனியில் நின்ற சிப்பாய்க்கு உடனடி ஆயுதமாக மாறாது என்பதைக் கடுமையாக உணர்த்திய நிகழ்வு அது.
புதிய சர்வதேசப் பொருளாதாரக் கட்டமைப்பாகிய என்ஐஇஓ (NIEO), அணிசேரா இயக்கத்தின் அரசியல் கனவாக இருந்தது. ஆனால் அது மாற்ற நினைத்த பொருளாதார அமைப்பிலேயே லாபம் கண்ட வல்லரசுகள் அடிப்படை மாற்றத்தைக் கட்டுப்படுத்தின. சில சலுகைகள் கிடைத்தன; உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் நீடித்தன. 1960 காங்கோ நெருக்கடி, 1975 அங்கோலா உள்நாட்டுப் போர், 1979 சோவியத் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு ஆகியவை, பலவீனமான நாடுகளை வல்லரசு தலையீட்டிலிருந்து அணிசேராமை காக்க முடியாது என்பதைக் காட்டின.
சோவியத் யூனியனின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கொள்கையான, பிரஷ்னேவ் சித்தாந்தம், அணிசேரா நாடுகளுக்கு எந்தவொரு விதிவிலக்கையும் அளிக்கத் தயாராக இல்லை. கியூபா இந்த முரண்பாட்டின் மிகத் தெளிவான உருவமாக இருந்தது. ஆண்டுதோறும் இன்றைய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி முதல் 1.6 லட்சம் கோடி ரூபாய் சோவியத் உதவியில் வாழ்ந்த கியூபா, மாஸ்கோவின் தூண்டுதலில் அங்கோலா, எத்தியோப்பியாவில் ராணுவ தலையீடுகள் செய்தது. அதே கியூபா 1979 ஹவானா அணிசேரா மாநாட்டை நடத்தியபோது ஃபிடல் காஸ்ட்ரோ, ‘சோவியத் யூனியன் விலகி நிற்க வேண்டிய வல்லரசு அல்ல, அது அணிசேரா நாடுகளின் இயற்கை கூட்டாளி’ என அறிவித்தார். அந்த வாதம் இயக்கத்துக்குள் ஆழமான பிளவை உருவாக்கியது. அணிசேராமை எங்கு முடிந்து, மறைமுக அணிசேர்தல் எங்கு தொடங்குகிறது என்ற கேள்வி அங்கே வெளிப்படையாக எழுந்தது.
இருப்பினும் அணிசேரா இயக்கத்தின் வரலாற்றுச் சாதனையைப் புறந்தள்ள முடியாது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்கள் கூட்டு நலன்களை வலியுறுத்தவும், வல்லரசு முகாம்களில் இணையும் மிரட்டலை எதிர்க்கவும், காலனியாதிக்க ஒழிப்பைச் சர்வதேச நிறுவனங்களில் முன்னெடுக்கவும் அது ஒரு ராஜதந்திர மேடையைக் கொடுத்தது. அதனால்தான் இந்தக் கொள்கை, வெறும் வெளிநாட்டு அலுவலகப் பதாகையாக இல்லாமல், புதிய நாடுகளின் மனநிலையை வரையறுத்த அரசியல் மொழியாக மாறியது. இந்த அரசியல் கணக்கின் உள்ளே அதிகாரப்பசி, வளங்களுக்கான தேவை, பாதுகாப்புக்கான அச்சம் ஆகியவை ஒன்றாகக் கலந்திருந்தன. அதன் பல உறுப்பு நாடுகளில் பனிப்போர் வன்முறையை அது தடுக்கவில்லை; உலக பொருளாதார அமைப்பை முழுமையாக மாற்றவில்லை; சில அரசுகளின் உள்நாட்டு ஒடுக்குமுறைகள் அதன் தார்மீக அதிகாரத்தைக் களங்கப்படுத்தின.
ஆனால் குறைகள் அதன் பங்களிப்பைப் பொய்யாக்கவில்லை. எனவே அதன் வெற்றி முழுமையானது அல்ல; ஆனால் அதன் தோல்வியும் முழுமையானது அல்ல. பனிப்போர் முடிந்த பிறகும் அது உயிர் வாழ்ந்தது; 21ஆம் நூற்றாண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் குளோபல் சௌத் (வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் நலன்களை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதை உருவாக்கிய இருதுருவ உலகம் மறைந்தபோதும், அதன் அடிப்படைத் துடிப்பு உயிரோடு இருக்கிறது. ஆனால் பல துருவங்களைக்கொண்ட இன்றைய உலகில் அது எவ்வளவு பொருத்தமுடையது என்பதற்கு அடுத்த தசாப்தங்களே தீர்ப்பு வழங்க வேண்டும். ஒரு காலத்திற்காகப் பிறந்து, வேறு காலத்தில் வாழ வேண்டிய எல்லா நிறுவனங்களுக்கும் ஏற்படும் அதே வரலாற்றுக் குழப்பத்துடன்தான் அணிசேரா இயக்கமும் இன்னும் பயணிக்கிறது.
(தொடரும்)

