Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ

பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ

பன்னீர்ப்பூக்கள்

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் திடல் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் ஒலிம்பிக் மைதானம். பேஸ் பால், கிரிக்கெட், கபடி, கோகோ, ரிங்பால் என நாங்கள் விளையாடும் எல்லா ஆட்டங்களுக்கும் அதுதான் ஆடுகளம். ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த இடத்துக்கு ஆடுவதற்கு வந்துவிடுவோம். விடுமுறை நாட்களில் காலை நேரத்திலும் ஆடுவோம். மாலை நேரத்திலும் ஆடுவோம்.

ஆடி முடித்ததும் அங்கிருந்தே கூட்டமாக ஏரிக்கரைக்குச் செல்வோம். எங்களைத் தூக்கிக்கொண்டு பறப்பதுபோல காற்று வீசும். அங்கே நின்று அமைதியின் உறைவிடமாகத் தோற்றமளிக்கும் தண்ணீர்ப்பரப்பின்மீது உரசிக்கொண்டு பறப்பதுபோல ஓட்டாஞ்சில்லை வீசுவது எங்கள் வீர விளையாட்டுகளில் ஒன்று. மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் தண்ணீரைத் தொட்டு பறப்பதுபோல சில்லு வீசத் தெரிந்தவனே மிகப்பெரிய கலைஞன்.

எங்கள் குழுவில் அன்பழகனே பெருங்கலைஞன். அவன் சாதாரணமாக வீசும் சில்லு கூட கிளைகளைத் தொட்டுத்தொட்டு தாவிச் செல்லும் சிட்டுக்குருவியைப்போல ஐந்தாறுமுறை உரசிவிட்டுப் பறக்கும். நான் வீசும் சில்லு ஒருமுறை கூட இரண்டாவது உரசலைக்கூட முழுமையாக முடிக்காது. அப்படியே மூழ்கிவிடும்.

ரயில் தண்டவாளப்பாதைக்கும் ஏரிக்கும் இடைப்பட்ட அந்தத் திடல் அருமையான ஒரு தோப்புபோல இருக்கும். ஒரு பெரிய குட்ஸ் ஷெட். அதற்கு எதிரில் ஒரு பெரிய ஆலமரமும், அதைச் சுற்றி காட்டுவா மரங்களும் இலுப்பை மரங்களும் நாவல் மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து நிற்கும்.

அந்த வரிசையில் சற்றே விலகி தனியாக ஒரு புங்கமரமும் உண்டு. பூ பூக்கும் காலத்தில் புங்கம்பூவுக்கு மல்லிகைப்பூவின் மணத்தைவிட கூடுதல் மணமுண்டு. மரத்தின் கீழே கொட்டிக் கிடக்கும் கருமை படிந்த பழைய பூக்களும் வெள்ளைவெளேரென்ற புதிய பூக்களும் சேர்ந்து எழுப்பும் மணத்தை நுகரும்போது மயக்கம் வருவதுபோல இருக்கும். தண்டவாளத்தைத் தாண்டும்போதே அந்தப் பூவின் மணம் வந்துவிடும். அது எங்கள் ஆடுகளத்தின் நிரந்தர அடையாளம். அந்த மணத்துடன் சங்கமித்தபடி மாட்டுச் சாணத்தின் வாடையும் குப்பென்று எழுந்து வரும். அதற்குக் காரணம் புங்கமரத்துக்கு அருகில் இருந்த குடிசை.

அது வெள்ளைக்காரன் என்பவரின் குடிசை. அவருடைய சொந்தப் பெயர் என்ன என்பது யாருக்குமே தெரியாது. ஆள் வெள்ளைவெளேரென்று இருப்பார். போலீஸ்காரர் மாதிரி அரைக்கால் சட்டையும் அழுக்கேறிய ஒரு பனியனும்தான் அவருடைய ஆடைகள். நல்ல உயரம். மெலிந்த உடல். ஏடு படிந்த பாலின் நிறத்தில் மெலிந்த தோற்றம். நீளமான கைவிரல்கள். தலைமுடி, புருவம் எல்லாமே வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். பூனைக்கண்கள்.

பெரியவர்கள் எல்லோருமே அவரை ‘வெள்ளைக்காரா வெள்ளைக்காரா’ என்றுதான் அழைப்பார்கள். ஒருநாளும் யாரிடமும் அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்லை. என்னைப்போன்ற சின்னப் பிள்ளைகள் மாமா என்றோ அண்ணே என்றோ அழைப்பார்கள். சில துடுக்குப்பிள்ளைகள் பேச்சுவாக்கில் வெள்ளைக்காரா என்றும் அழைத்துவிடுவார்கள். அவர் எதையும் பெரிசாக எடுத்துக்கொள்ளமாட்டார். எல்லோருடனும் சிரிப்பு வழிந்த முகத்துடன்தான் பேசுவார். அவர் மட்டுமே அந்தக் குடிசையில் தனிமையில் வசித்து வந்தார். மனைவி, குழந்தை என அவருக்கு ஒருவரும் இல்லை.

குடிசையைச் சுற்றி முள்வேலி எழுப்பியிருந்தார் வெள்ளைக்காரன். வேலியைக் கடந்து உள்ளே செல்வதற்கு உதவும் கதவுப்படலைக்கூட முட்களையும் கட்டைகளையும் அடுக்கி கயிறு கட்டி நிறுத்தியிருந்தார். உள்ளே குடிசைக்குக் கதவாக இன்னொரு படல் உண்டு. அது பனைமட்டைகளை இணைத்து உருவாக்கப்பட்டது.

குடிசைக்கு வெளியே எல்லா இடங்களிலும் குவியல் குவியலாக மாட்டுச்சாணம் மட்டுமே குவிந்திருக்கும். அந்த இடத்தில் சாணவாடை வீசுவதற்கு அதுதான் காரணம். ஒரு மூலையில் மட்டும் மண்ணாலான அடுப்பு இருக்கும். அதன் அருகில் சின்னச்சின்ன சட்டிகள். பானைகள். அலுமினியத் தட்டுகள். எல்லாமே அவருடைய சமையலுக்கும் சாப்பாட்டுக்கும் உதவக்கூடியவை.

பல நேரங்களில் எங்களுடைய பந்து பறந்து சென்று குடிசைக்கு அருகில் சென்றுவிடும். அப்போது வெள்ளைக்காரன் இருந்தால், அவரே அந்தப் பத்தை எடுத்து எங்களை நோக்கி வீசிவிடுவார். இல்லையென்றால் நாங்களே அந்த வேலியைக் கடந்து சென்று பந்தை எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவோம்.

ஒருமுறை பந்தை எடுத்துக்கொண்டு வருவதற்காக பரசுராமன் குடிசையை நோக்கி ஓடினான். அதுவரை குடிசைக்கு வெளியே நின்றிருந்த வெள்ளைக்காரன் குடிசைக்குள் செல்வதற்காகத் திரும்புவதைப் பார்த்தான். அவர் கவனத்தைத் திசைதிருப்பி, அவரையே பந்தை எடுத்து வீசச் சொல்லலாம் என்கிற எண்ணத்தில் வேலிக்கு வெளியே நின்றுகொண்டு ‘ஏ வெள்ளைக்காரா வெள்ளைக்காரா’ என்று வேகமாக அழைத்தான். அவர் எந்தச் சிந்தனையில் மூழ்கியிருந்தாரோ என்னமோ, திரும்பிப் பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார். உடனே அவன் இன்னும் கூடுதலான சத்தத்துடன் ‘வெள்ளைக்காரா வெள்ளைக்காரா’ என்று கைத்தட்டி அழைத்தான். அவர் வெளியே வராததால், பரசுராமன் இன்னும் வேகமாக அழுத்தம் கொடுத்து பலமுறை அழைத்துவிட்டான். அவன் குரல் சாதாரணமாகவே சங்கு ஊதுவதுபோல சத்தமாக இருக்கும். வெள்ளைக்காரனை அழைத்த நேரத்தில் அது இன்னும் பல மடங்காக உயர்ந்து கேட்டது.

நெம்புகோல் மேடைக்கு அருகில் ஏதோ வேலையாக இருந்த காசி மாமா அவனுடைய சத்தத்தைக் கேட்டுவிட்டு கோபத்தோடு புங்கமரத்துக்கு அருகில் வந்துவிட்டார்.

‘எதுக்குடா இங்க நின்னுகினு சத்தம் போடற?’

‘பந்து உள்ள போய் விழுந்துடுச்சி…..’

அவன் கையை நீட்டி பந்து விழுந்திருப்பதைச் சுட்டிக் காட்டினான்.

‘அது சரி, அத நீயே போய் எடுத்துக்க வேண்டிதுதான? உள்ள போவாதன்னு உங்கிட்ட யாராவது ஏதாவது சொன்னாங்களா?’

பரசுராமன் பதிலெதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தபடி நின்றான்.

‘அம்மாம் பெரிய ஆள பேர் சொல்லி கூப்புடறியே, உனக்கே அது நியாயமா தோணுதா? அவர் என்ன, உங்க வீட்டு வேலைக்காரனா? உன் வயசென்ன? அந்த ஆள் வயசென்ன? மாமா, அண்ணா, சித்தப்பா, பெரியப்பான்னு ஏதாவது சொல்லி கூப்புடத் தெரியாதா? படிக்கிற புள்ளதான நீ? உனக்கு அது கூட தெரியலைன்னா, என்ன அர்த்தம்?’

கோபத்தில் காசி மாமா அடுக்கிக்கொண்டே சென்றார்.

‘நான் வேணும்ன்னு கூப்புடலை. சும்மா விளையாட்டுக்குத்தான் கூப்ட்டேன்.’

‘எப்படி இருந்தாலும் வயசுல பெரியவர பேர் சொல்லி கூப்பிடக் கூடாது, புரியுதா?’

‘புரியுது’ என்பதற்கு அடையாளமாக தலையசைத்தபடி பரசுராமன் அவரையே பார்த்தான். ‘போ, போய் நீயே பந்த எடுத்துக்கோ’ என்று அவனை அனுப்பினார் காசி மாமா. பரசுராமன் ஒரே நொடியில் ஓட்டமாக ஓடிச் சென்று உள்ளே விழுந்திருந்த பந்தை எடுத்துக்கொண்டு திரும்பினான்.

அவனை ‘ஒரு நிமிஷம். இங்க வா’ என்று நிறுத்தினார் காசி மாமா. பரசுராமன் அவருக்குப் பக்கத்தில் சென்று நின்றான். காசி மாமா அவன் தோளைத் தட்டி, அவன் தலைமீது விழுந்து முடியில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு புங்கம்பூவை எடுத்து கீழே வீசிவிட்டு ‘நம்மைவிட வயசில பெரியவங்கள எந்த சமயத்துலயும் பேரு சொல்லி கூப்பிடக் கூடாது. புரியுதா? எல்லாம் ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன்’ என்று பொறுமையாகச் சொன்னார். அவனும் அதை ஏற்றுக்கொள்வதுபோல தலையசைத்தான். ‘சரி போ’ என்று அவனை தோளில் தட்டி காசி மாமா அனுப்பிவைத்தார்.

அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் குடிசையிலிருந்து வெளியே வந்தார். காசி மாமா குடிசைக்கு அருகில் நின்றிருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு எதுவும் புரியவில்லை. ‘என்ன, இவ்வளவு தூரத்துக்கு வந்துட்ட?’ என்று கேட்டார். நடந்தது எதையும் மாமா அவரிடம் சொல்லவில்லை. ‘ஏரியை பார்த்துட்டு எறங்கனேன். அப்படியே உன்ன பார்த்து பேசலாம்னு வந்தேன்’ என்றார். ‘அப்படியா?’ என்பதுபோல வெள்ளைக்காரன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.

‘எந்த ஊருக்கு போயிட்ட? ரெண்டு மூனு வாரமா ஆள பார்க்கவே முடியலை’

‘மடுகரையில ஒரு சூளைக்காரர்கிட்ட போயிருந்தேன். ரெண்டுமூணு பங்காளிங்க ஒன்னா சேர்ந்து அந்த ஊருல சூளை வைக்கிறாங்க. பத்து வண்டி எருமுட்டை வேணும்ன்னு சொன்னாங்க. சூளைகிட்டயே ஒரு கொட்டா போட்டு கொடுத்தாங்க. வேளாவேளைக்கு கூழு. சோறு. மீன்குழம்பு. அங்கயே தங்கி எருமுட்டைய தட்டி நல்லா சுக்கு மாதிரி காயவச்சி அடுக்கி குடுத்துட்டு வந்தேன்.’

‘சரி சரி, சோறு கூழு மட்டும் குடுத்து கதைய முடிச்சிட்டாங்களா? பணம் ஏதாவது குடுத்தாங்களா?’

‘குடுத்தாங்க. குடுத்தாங்க. கைநிறைய குடுத்தாங்க.’

காசி மாமா வெள்ளைக்காரனை நம்பாதவர்போல அவர் முகத்தையே ஒருகணம் உற்றுப் பார்த்தார். ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ‘குடுத்தா சரி. பத்திரமா வச்சிக்கோ’ என்றார். தொடர்ந்து ‘முதல்ல உன் கோலத்த மாத்து. இதே அழுக்கு சட்டைங்கள எத்தனை நாளைக்கு தொவைச்சி தொவைச்சி போடுவ? நாயுடு கடைக்கு போய் நல்லதா ஒரு சட்டை துணி எடுத்து தச்சி .போடக்கூடாதா?’ என்று கேட்டார்.

‘நான் புது சட்டை போட்டுகினு எந்த கல்யாணத்துக்கு போவ போறேன், விடுப்பா. இருக்கறதே போதும்.’

வெள்ளைக்காரன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.

‘சொல்றத கேளு. கிட்டயே வரமுடியலை. அந்த அளவுக்கு வாடை அடிக்குது. ஒனக்காக இல்லைன்னாலும் எனக்காக மாத்து’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் காசி மாமா. ‘சரி சரி’ என்றபடி குடிசைக்குத் திரும்பிய வெள்ளைக்காரன் தரையில் ஒருபக்கம் உலர்ந்த எருமுட்டைகளை மறுபக்கத்துக்குத் திருப்பிப் போடத் தொடங்கினார்.

எருமுட்டை தட்டி விற்பனை செய்வதுதான் வெள்ளைக்காரனுக்குத் தெரிந்த ஒரே தொழில். ஒவ்வொரு நாளும் காலையில் ஏரிக்குள் மாட்டுக்காரர்கள் மாடு மேய்க்கும் இடங்களுக்கெல்லாம் கூடையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிடுவார். மாடுகள் பின்னால் அலைந்து சாணத்தைச் சேகரித்துக்கொண்டு திரும்புவார். நாலைந்து நாட்களுக்கு ஒருமுறை எல்லாக் குவியலையும் ஒன்றாக்கி சேறு மிதிப்பதுபோல சாணத்தை நன்றாக மிதித்துக் கூழாக்குவார்.

சாணத்தின் மீது ஏறி நின்று தை தை என்று மிதிக்கும்போது உற்சாகத்தில் அவருக்கு பாட்டு பிறந்துவிடும். ‘கன்னுக்குட்டி கன்னுக்குட்டி என்னருமைக் கன்னுகுட்டி’ என்னும் ஒரே வரியை மனம்போன போக்கில் பல்வேறு ராகங்களில் பாடுவார். அது ஒரு வகையான சத்தம் என்றுதான் எங்களுக்குத் தோன்றும். அவர் எழுப்பும் சத்தம் எங்களுக்குப் பிரச்சினையாகவே இருந்ததில்லை. அதேபோல, நாங்கள் போடும் சத்தமும் அவரைக் கொஞ்சம்கூட அசைத்ததில்லை. சாணம் மிதிக்கும்போது அவர் வேறொரு உலகத்தில் இருப்பதைப்போலத் தோன்றும்.

புங்கமரத்திலிருந்து சிறிது தூரத்தில் அந்தக் காலத்தில் பர்மா ஷெல் எண்ணெய்க்கம்பெனி கட்டிய ஒரு குடோன் இடிந்து பாழாகிவிட்டாலும், அதன் சுவர்கள் அரைகுறையாக நின்றிருந்தன. அந்தச் சுவருக்கு அருகில் மிதிபட்டுக் குழைந்த சாணத்தை ஒரு கூடையில் நிரப்பி எடுத்துவந்து வைப்பார். பிறகு வேறொரு கூடையில் கூளத்தைக் கொண்டுவருவார். சாணத்தை ஒரு கை நிறைய அள்ளி பந்துபோல உருட்டி, கூளத்தில் படியவைத்து உருட்டியெடுப்பார். பிறகு அதைச் சுவர்மீது தட்டி அழுத்தி அழுத்தி வட்டமாக்கிவிடுவார். அவருடைய ஐந்து விரல்களும் அச்சடித்ததுபோல அந்த எருமுட்டையில் பதிந்துவிடும். அடிக்கிற வெயிலுக்கு எல்லா எருமுட்டைகளும் ஒரே வாரத்தில் சுக்குத்துண்டு மாதிரி உலர்ந்துவிடும். பிறகு அவை அனைத்தும் குவியல் குவியலாக குடிசைக்கு வந்துவிடும்.

மரத்தடியில் ஆடிக்கொண்டிருக்கும்போது தண்ணீர் தாகமெடுத்தால், நாங்கள் முள்படலைத் தள்ளிக்கொண்டு வெள்ளைக்காரனின் குடிசைக்குள்தான் ஓடுவோம். சாண வீச்சத்தை நாங்கள் ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை. சுவரோரமாக பானையில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு போன வேகத்தில் திரும்பிவந்து ஆட்டத்தில் மூழ்கிவிடுவோம். பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, அதைப் பற்றியெல்லாம் வெள்ளைக்காரன் ஒன்றும் சொல்லமாட்டார்.

வெள்ளைக்காரன் காலைப்பொழுதில் சாணத்துக்காக ஏரிக்கரையில் அலைந்து திரிந்து திரும்புவார். அதற்குப் பிறகு அவர் ரங்கநாதன் மேஸ்திரி வீட்டுக்குச் சென்றுவிடுவார். ‘நியாயமா பார்த்தா நீ இருக்கிற குடிசைக்கு பஞ்சாயத்து போர்டுக்கு வருஷாவருஷம் வரி கட்டணும் தெரியுதா?. நமக்காக வேலை செய்யற ஆளுன்னு உன்ன விட்டு வச்சிருக்கேன். உன்ன வெளியே போடான்னு சொல்லிட்டு குடிசையை பிரிச்சி போட்டா, உன்னால என்ன செய்யமுடியும்’ என்று கர்ஜித்த மேஸ்திரியின் மிரட்டலுக்கு வெள்ளைக்காரன் கட்டுப்பட வேண்டியதாகிவிட்டது.

பஞ்சாயத்து போர்டு அலுவலகத்தில் ரங்கநாதன் மேஸ்திரியாக வேலை பார்த்துவந்தார். தெருக்கூட்டும் துப்புரவுப்பணியாளர்கள் அனைவரும் அவருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். அவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களையெல்லாம் வெவ்வேறு காரணம் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து சொந்த வேலைகளைச் செய்யவைப்பதில் பெரிய கில்லாடி என்று பேசிக்கொள்வார்கள். அவரைவிட அவருடைய மனைவி பெரிய கில்லாடி. அவர் வாயைத் திறந்து பேசத் தொடங்கினால் அந்தத் தெருவுக்கே கேட்கும். எல்லாமே கெட்ட வார்த்தைகள் கலந்த வசை. ஒருவேளை சாப்பாடு, ஒரு செம்பு கூழ், கொஞ்சம் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை மட்டும்தான் அவர் கூலியாகக் கொடுப்பார். எப்போதாவது அவருக்கு நியாயமாகத் தோன்றினால், கொஞ்சம் சில்லறைகளை எடுத்துக்கொடுப்பார்.

அவருடைய வீட்டுக்குப் பின்னால், வீடு அளவுக்கே ஒரு பெரிய மாட்டுக்கொட்டகை இருந்தது. பத்து எருமைகள், பத்து பசுக்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அந்த மாடுகளை ஏரிக்கு அழைத்துச் சென்று மேய்ப்பதற்கென்றே ஒருவன் அவருடைய வீட்டில் வேலை பார்த்துவந்தான். ஒவ்வொரு நாளும் அங்கே விழும் சாணமே ஒரு வண்டியளவுக்கு இருக்கும். வெள்ளைக்காரன் ஒவ்வொரு நாளும் குவிந்த சாணத்தை அள்ளிச் சென்று குழியில் போட்டுவிட்டு வருவார். சில சமயங்களில் அவர்கள் வீட்டு மதிலிலேயே எருமுட்டைகளைத் தட்டிவிட்டுத் திரும்புவார்.

ஆறாம் வகுப்பு படிக்கிற சமயத்திலேயே வீட்டு வேலைகளில் என் அம்மா என்னைப் பழக்கிவிட்டார். வீட்டில் தம்பியும் தங்கையும் பிறந்து சின்னஞ்சிறியவர்களாக இருந்தனர். குழாயடியிலிருந்து தண்ணீர்க்குடம் சுமந்து வருவது, கடைத்தெருவுக்குச் செல்வது, விறகும் மிளாரும் சுமந்து வருவது, கல் இயந்திரத்தில் மாவு அரைப்பது, துணி துவைப்பது, எருமுட்டை வாங்கி வருவது எல்லாமே என் கடமைகளாகிவிட்டன.

‘இந்தா, கூடை எடுத்தும் போயி எருமுட்டை வாங்கி வா’ என்று ஒருநாள் அம்மா ஐம்பது பைசா கொடுத்தார்.

எங்கள் வீட்டில் இரண்டு கூடைகள் இருந்தன. ஒன்று, தாளைக் கூழாக அரைத்துப் பூசியதால் இடைவெளியே இல்லாமல் மழமழப்பாக இருக்கும் வெள்ளைக்கூடை. நெல், கம்பு, கேழ்வரகு என ஏதேனும் தானியத்தை நிரப்பி வைக்க அது உதவியாக இருந்தது. இன்னொன்று, பூச்சு எதுவும் இல்லாத சாதாரணமான மூங்கில் கூடை. குப்பையை நிரப்பி எடுத்துச் சென்று கொட்டுவதற்கும் இரவு நேரத்தில் கோழிகளை மூடிவைப்பதற்கும் எருமுட்டை வாங்கி வருவதற்கும் அது உதவியாக இருந்தது.

நான் அந்த இரண்டாவது கூடையை எடுத்துக்கொண்டு வெள்ளைக்காரன் குடிசைக்குப் புறப்பட்டேன். எனக்குப் பின்னால் ‘காசு பத்திரம் காசு பத்திரம்’ என்று அம்மா சொல்வது காது கேட்கிற எல்லை வரைக்கும் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் கூடையை தொப்பி மாதிரி தலைமீது சாய்வாக வைத்துக்கொண்டு ’புதிய வானம் புதிய பூமி’ என்று மனசுக்குள் பாடியபடி வெள்ளைக்காரன் குடிசையை நோக்கிச் சென்றேன்.

நல்ல வேளையாக நான் சென்ற நேரத்தில் வெள்ளைக்காரன் குடிசையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘என்ன தம்பி? எருமுட்டையா?’ என்று கேட்டார். நான் ‘ஆமாம். அம்பது பைசாவுக்கு’ என்றபடி என் பையிலிருந்த நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன். அவர் அதை வாங்கி இரண்டு பக்கமும் திருப்பித்திருப்பிப் பார்த்துவிட்டு பையில் வைத்துக்கொண்டார்.

‘கூடையில உன்னால தூக்கிட்டு போவ முடியுமா?’

‘ம். தூக்குவேன்.’

‘உடையாம எடுத்தும் போ. புரியுதா? இல்லைன்னா, உங்க அம்மா என்னைப் பார்க்கும்போது என்னப்பா, சின்ன புள்ளைய ஏமாத்திட்டியான்னு கேப்பாங்க.’

‘சரி. உடையாம எடுத்தும் போவேன். கவலைப்படாதீங்க.’

‘அஞ்சி பைசாவுக்கு ரெண்டுன்னா, அம்பது பைசாவுக்கு எத்தனை வரும்னு உனக்குத் தெரியுமா?’

‘இருவது’

‘நான் ஒவ்வொன்னா குடுக்கறேன். நீ எண்ணி எண்ணி வச்சிக்கோ, சரியா?’

‘சரி’

எருமுட்டைக் குவியலுக்கு அருகில் என்னை அழைத்துச் சென்று தட்டு மாதிரி அகலமாக இருக்கும் எருமுட்டையை எடுத்துக் கொடுத்தார். நான் அதை ‘ஒன்னு’ என்று சொன்னபடி வாங்கி கூடையின் அடியில் படுக்கைவாக்கில் வைத்தேன். பிறகு அவர் ஒவ்வொன்றாக கொடுக்கக்கொடுக்க ‘ரெண்டு’ ‘மூணு’ என்று எண்ணியபடியே சுற்றி அடுக்கினேன். நான் ‘இருபது’ என்று எண்ணி முடித்த பிறகு கூட அவர் எடுத்துக் கொடுப்பதை நிறுத்தவில்லை. நான் அதை வாங்கவில்லை. ‘இருபது முடிஞ்சி போச்சி மாமா’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே ‘அப்படியா, சரியாயிடுச்சா? ஒழுங்கா எண்ணியா? அப்புறம் அம்மா குறையுதுன்னு சொல்லப் போறாங்க’ என்றார். ‘இல்லை இல்லை மாமா. சரியா இருக்குது’ என்று நான் மறுபடியும் சொன்னேன். ‘பரவாயில்லை, இருக்கட்டும். உனக்காக ஒரு கொசுறு. வச்சிக்கோ’ என்றபடி அவரே கூடைக்குள் குனிந்து வைத்தார்.

‘எத்தனாவது படிக்கிற நீ?’

‘ஏழாவது.’

‘இங்க்லீஷ்லாம் படிப்பியா?’

‘ம். நல்லா படிப்பேன். க்ளாஸ்ல நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’

‘படிச்சி படிச்சி மேல போ. லண்டனுக்கு போய் படி. தெரியுதா? அங்க போய் அதிகாரமா வேலை செய். தெரியுதா?’

நான் ‘சரி’ என்று தலையசைத்தபடி கூடையைத் தூக்குவதற்குக் குனிந்தேன். ‘நீ குனிய வேணாம். இரு. இரு. நான் தூக்கி வைக்கறேன்’ என்று சொன்னபடி என்னை நெருங்கி வந்து கூடையைத் தூக்கி என் தலைமீது வைத்தார். பிறகு ‘புடிச்சிகிட்டியா, கெட்டியா புடிச்சிகிட்டியா?’ என்று நாலைந்து முறை கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே கூடையைப் பிடித்துக்கொண்டிருந்த தன் கையை விலக்கினார். நான் வேலியைக் கடந்து வெளியே நடக்கத் தொடங்கியபோது ‘பாத்து பத்தரமா போ தம்பி’ என்றார்.

இன்னொரு முறை நான் எருமுட்டை வாங்குவதற்குச் சென்ற சமயத்தில் வெள்ளைக்காரன் குடிசையில் இல்லை. ‘மாமா மாமா’ என்று பல முறை கூப்பிட்டுப் பார்த்தேன். குடிசையிலிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. கூடையை வாசலிலேயே வைத்துவிட்டு குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன். ஒரே இருட்டு. ஒன்றும் தெரியவில்லை. பார்வைக்கு வெளிச்சம் தெளிந்து வந்தபோது எல்லா இடங்களிலும் எருமுட்டை அடுக்குகளே நிறைந்திருப்பதைப் பார்த்தேன். வெளியே வந்துவிட்டேன். சாணக்குவியலின் வாடையில் மூச்சு விட முடியவில்லை.

வேலிப்படலைத் திறந்துகொண்டு வெளியே வந்து எங்காவது வெள்ளைக்காரன் முகம் தெரிகிறதா என வெகுநேரம் பார்த்தேன். ஒருவரும் தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று ‘எருமுட்டை கிடைக்கலை. அவர் வீட்டுலயே இல்லை’ என்று அம்மாவிடம் சொல்லிவிடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன். ‘அங்க இங்க எங்கனா கடைப்பக்கம் போயிருப்பாரு. சித்த நேரம் நின்னு வாங்கிவரக் கூடாதா? இங்க என்ன குடிமுழுகிப் போவுதுன்னு வெறுங்கூடைய தூக்கினு வந்துட்ட?’ என்று அம்மா கேட்பதற்குச் சாத்தியமான கேள்விகள் எல்லாம் ஒவ்வொன்றாக எழுந்தது. பிறகு இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்ப்போம் என்று முடிவு செய்துகொண்டேன்.

குடிசையை ஒட்டியிருந்த மேட்டில் ஏறி நின்று ஏரியில் கண்ணுக்கு எட்டிய வரை நிறைந்து தளும்பிக்கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தேன். தொலைவில் நாலைந்து நீர்க்காகங்கள் புழுவைக் கொத்தியெடுத்துக்கொண்டு பறந்துபோவதைப் பார்த்தேன். ஏதோ ஒரு கணத்தில் வழக்கமாக நாங்கள் விளையாடும் வீர விளையாட்டு நினைவுக்கு வந்துவிட்டது. கரை மீது ஆங்காங்கே கிடந்த ஓட்டாஞ்சில்லுகளை எடுத்து வைத்துக்கொண்டு தண்ணீரைச் சீவிக்கொண்டு பறப்பதுபோல வேகமாக வீசினேன். சொல்லிவைத்ததுபோல எல்லாமே ஒரு சீவலோடு தண்ணீரில் மூழ்கிவிட்டன. வீசும் கோணம், சில்லுவின் அளவு என எல்லாவற்றையும் மாற்றிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை.

சலிப்போடு இறங்கி வந்த சமயத்தில் வெள்ளைக்காரன் தண்டவாளப்பாதையைக் கடந்து நடந்து வருவது தெரிந்தது. அவரைப் பார்த்த பிறகுதான் என்னால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. குடிசைக்கு அருகில் என்னைப் பார்த்ததுமே ‘என்னப்பா தம்பி? ரொம்ப நேரமா காத்திட்டிருக்கியா?’ என்று கேட்டார்.

‘ஆமாம் மாமா. அம்பது பைசாவுக்கு எருமுட்டை வேணும். அம்மா வாங்கிட்டு வரச் சொன்னாங்க.’

‘நான் இல்லைங்கறதுக்காக இங்கயே நின்னுட்டிருக்கியா? நீ பாட்டுக்கு எண்ணி எடுத்துகினு போகவேண்டிதுதான?’

‘காசு?’

‘அது எங்க ஓடிடப் போவுது? தெனம் இந்தப் பக்கமா ஆட வர்ற ஆள்தான நீ? அந்தச் சமயத்துல குடுத்தா வாங்கிக்கப் போறேன்.’

வழக்கம்போல ஒவ்வொன்றாக அவர் எருமுட்டையை எடுத்துக் கொடுக்கக்கொடுக்க நான் ’ஒன்னு ரெண்டு’ எண்ணியபடி வாங்கி கூடைக்குள் அடுக்கிவைத்தேன். வழக்கம்போல அவராகவே நாலைந்து எருமுட்டைகளைக் கூடுதலாக எடுத்து கூடைக்குள் வைத்துவிட்டார். நான் என் பையிலிருந்த ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் சிரித்துக்கொண்டே அதை வாங்கிக்கொண்டார்.

‘ஒரு நிமிஷம் நில்லு. இதோ வரேன்’ என்றபடி வெள்ளைக்காரன் குடிசைக்குள் சென்றார். சில நொடிகளுக்குப் பிறகு அவர் வெளியே வந்தபோது அவருடைய கையில் ஒரு கொட்டாங்கச்சி இருந்தது. அதைக் கொண்டுவந்து ‘இந்தா, எடுத்தும் போய் சாப்புடு’ என்று கொடுத்தார். எல்லாம் நாவல்பழங்கள். ‘உங்களுக்கு?’ என்று கேட்டேன். அவர் உடனே ‘நான்தான் தெனமும் தின்னறனே, நீ எடுத்தும் போய் சாப்புடு’ என்று கையில் திணித்தார். பிறகு கூடையைத் தூக்கி தலையில் வைத்து அனுப்பிவைத்தார். ‘இனிமேல நான் இல்லைன்னு எனக்காக காத்திருக்காத. எத்தனை வேணும்னாலும் எடுத்துட்டு போவலாம். ஞாபகம் இருக்கட்டும்’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் முதுகுக்குப் பின்னால் ஒலித்தன.

தீபாவளி சமயத்தில் நாலைந்து நாட்களுக்கு முன்பேயே வீட்டில் அம்மா முறுக்கும் அதிரசமும் சுட்டுவிட்டாள். அப்போது நான் அவருக்கு உதவியாக அடுப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நெருப்பின் வேகம் பெருகியும் விடாமல் குறைந்தும் போகாமலும் பார்த்துக்கொண்டேன். எல்லாவற்றையும் ஒரு பானைக்குள் எண்ணி வைத்து அடுக்கிவிட்டு துணியால் அதன் வாயை மூடி பழங்கலத்தின் பக்கத்தில் வைத்துவிட்டாள் அம்மா. அதற்குப் பிறகு நொறுங்கிய முறுக்குத்துண்டுகளோடு நாலைந்து முழு முறுக்குகளையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுத்தாள். ‘பசங்களோடு சேர்ந்து சாப்புடப் போறேன்’ என்று சொல்லிவிட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஓடிவிட்டேன். அன்பழகனும் ராஜசேகரும் மட்டும்தான் அங்கே இருந்தார்கள். அப்புறம் காசி மாமா இருந்தார். எருமுட்டைகளைத் தட்டியபடி வெள்ளைக்காரனும் இருந்தார்.

எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தேன். முறுக்கைப் பார்த்ததும் வெள்ளைக்காரனின் முகத்தில் சிரிப்பு தாண்டவமாடியது. ‘முறுக்கப் பார்த்தாதான் தீவாளி ஞாபகம் வருது. போன வருஷமும் நீதான் கொண்டாந்து குடுத்த, இல்ல?’ என்று சொன்னார். பிறகு சாணக்கறை படிந்த இரு கைகளையும் உயர்த்திக் காட்டியபடி ‘இந்தக் கையோடு எப்படி வாங்கமுடியும்? சித்த இரு. இதோ கைய கழுவிட்டு வரேன்’ என்று சொன்னபடி குடிசைக்குச் சென்றார்.

அவர் பார்வையிலிருந்து மறைந்ததும் காசி மாமாவிடம் ‘பாவம் அவரு. சாணிகிட்ட சித்த நேரம் நின்னாகூட நம்மால அந்த வாடையை தாங்கமுடியலை. நாள் முழுக்க அத தாங்கிகிட்டு நிக்க அவரால மட்டும் எப்படி முடியுது?’ என்று கேட்டேன்.

‘கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அதுக்கு நடுவுலதான் வாழ்ந்தாவணும்ங்கற சூழல் இருந்தா, எல்லாமே தானா பழகிடும்’ என்று நாக்கு சப்புக்கொட்டியபடியே சொன்னார் காசி மாமா. அவர் பார்வை அந்தக் குடிசையின் மீது நிலைகுத்தியிருந்தது.

‘அவருக்கு எது சொந்த ஊரு?’

‘இது என்னடா கேள்வி? அவரும் வளவனூருதான்டா.’

‘அந்த காலத்துலேர்ந்து இந்த ஊருலதான் இருக்காரா?’

‘ஆமாமாம்டா. இதே ஊருதான். அவரு, அவருக்கு அம்மா, அந்த அம்மாவுக்கு அம்மா எல்லாருமே பரம்பரையா இந்த ஊருக்காராங்கதான்.’

‘அப்புறம் ஏன் எல்லாரும் அவரை வெள்ளைக்காரன்னு சொல்றாங்க?’

காசி மாமா ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டார். ‘எல்லாமே காலத்தின் கோலம். வேற என்ன சொல்ல?’ என்றார். பிறகு ஒரு பெருமூச்சுடன் ‘நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கெடைக்கறதுக்கு முன்னால இங்க வெள்ளைக்காரங்கதான ஆட்சி செஞ்சாங்க. அப்ப இந்த ஊருக்கு அதிகாரியா ஒரு வெள்ளைக்கார தொர இருந்தாரு. ஏரிக்கரையோரமாவே நடந்துபோனா, கொஞ்ச தூரத்துல ஒரு பங்களா இருக்குதே. பார்த்திருக்கியா? அந்த பங்களாவுலதான் அவரு இருந்தாரு. இவருடைய அம்மா அந்த தொர ஊட்டுல வேலை செஞ்சாங்க. அப்ப எப்படியோ ரெண்டு பேரும் நெருக்கமாயிட்டாங்க. அந்த தொரைக்கு பொறந்த பையன்தான் இவரு. சுதந்திரம் கெடைச்சதும் தொர நாட்ட விட்டு போயிட்டாரு. இந்த அம்மா புள்ளையோடு இங்கயே நின்னுடுச்சி. அவரு கொடுத்துட்டு போன பணத்தை வச்சி ஏரிக்கரை ஓரமாவே ஒரு குடிசை போட்டுகிச்சி. அங்க இங்க சாணி பொறுக்கி எருமுட்டை தட்டி எப்படியோ வாழ்ந்து முடிச்சிட்டு போய் சேர்ந்துட்டா அந்த மகராசி. அம்மா தொழிலே போதும்னு இவரும் வாழ்க்கைய ஓட்டறாரு. என்ன செய்யமுடியும்?’

மாமா சொல்லி முடிப்பதற்குள் வெள்ளைக்காரன் வந்துவிட்டார். கைகளை சுத்தமாக கழுவியிருந்தார். முறுக்கை வாங்கி கடித்து ருசித்தார். என்னைப் பார்த்து ‘வீட்டுல அம்மா சுட்டாங்களா?’ என்று கேட்டார். நாம் ‘ஆமாம்’ என்பதுபோலத் தலையசைத்தேன். ‘நல்லா இருக்குது. நல்லா இருக்குது’ என்றபடி அவர் மீண்டும் ஒரு முறுக்குத்துண்டை எடுத்து வாய்க்குள் போட்டுக் கடித்தார்.

ஒருநாள் எங்கள் தெருவில் ஒரு தாத்தா இறந்துவிட்டார். ஏதோ ஒரு வகையில் அவர் எங்களுக்கு தூரத்துச் சொந்தம். நான் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவில்லை. சாவு வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தேன். வாசலில் ஒரு நீளமான பெஞ்ச்சில் தாத்தாவைக் கிடத்தியிருந்தனர். தெருவில் இருப்பவர்கள் எல்லாரும் குடும்பமாக வந்து அவர் மீது மாலை போட்டு வணங்கியபடி ஒரு கணம் நின்றிருந்துவிட்டுச் சென்றார்கள். வாசலில் இடைவிடாத மேளச்சத்தம். வீட்டுக்குள் அழுகைச்சத்தம்.

வாசலில் நின்றிருந்த ஒரு தாத்தா பக்கத்தில் நின்றிருந்த சித்தப்பாவிடம் ‘ஏம்பா. சாயந்தரம் எடுக்கணும்னு நாம பாட்டுக்கு பேசிகிட்டிருக்கமே, வெள்ளைக்காரன்கிட்ட எருமுட்டைக்கு சொல்லிட்டீங்களா?’ என்று கேட்டார். ‘இன்னும் இல்ல. இனிமேலதான் சொல்லணும்’ என்றார் சித்தப்பா.

‘அவனைத்தான்டா நீ மொதல்ல புடிக்கணும். அவன் பாட்டுக்கு அந்த சூளைக்காரன் கூப்பிட்டான் இந்த சூளைக்காரன் கூப்பிட்டான்னு ஊரை விட்டு கெளம்பியிருந்தான்னா எருமுட்டைக்கு என்ன செய்யறது?’ என்று பதற்றமுடன் கேட்டார் தாத்தா.

அப்போது நான் முந்திக்கொண்டு அந்தத் தாத்தாவிடம் ‘அவரு குடிசை எனக்குத் தெரியும். நான் போய் அவரு இருக்கறாரா இல்லையான்னு பார்த்துட்டு வரட்டுமா?’ என்று கேட்டேன். அவர் என்னை உற்சாகப்படுத்தும் வகையில் ‘நல்ல புள்ளைடா நீ. ஒரு ஓட்டம் ஓடிப் போய் பார்த்துட்டு வா’ என்று முதுகில் தட்டி அனுப்பிவைத்தார்.

நான் உடனே ஒரு காரை ஓட்டிச் செல்லும் பாவனையில் உடலையும் தலையையும் வளைத்து வளைத்து ஸ்டேஷனை நோக்கி ஓடினேன். அந்தக் குடிசை வாசலுக்குச் சென்ற பிறகுதான் என் ஓட்டம் நின்றது. குடிசையில் அவர் இல்லை. ‘மாமா மாமா’ என்று அழைத்தபடி சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தேன். எந்த இடத்திலும் அவர் தென்படவில்லை. எருமுட்டை தட்டும் இடம், உலரவைக்கிற இடம் எல்லா இடங்களிலும் பார்த்தேன். எங்கும் இல்லை. அவரைக் கண்டுபிடிக்க முடியாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து தாத்தாவுக்கு அருகில் வந்து நின்றேன். ‘அவரு குடிசையிலயே இல்லை தாத்தா. அக்கம்பக்கத்துலயும் தேடி பார்த்துட்டேன். எங்கயும் இல்ல’ என்று சொன்னேன்.

அதற்குப் பிறகுதான் வெள்ளைக்காரனைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் தோன்ற ஆரம்பித்தது. ‘இங்கதான சுத்திகிட்டு இருக்கிற ஆளுன்னு நெனச்சது தப்பா போயிடுச்சி’ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டார் தாத்தா.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு ‘டேய் தம்பி இங்க வா’ என்று பக்கத்தில் நின்றிருந்த ஒருவரை அழைத்தார். அவர் வந்து நின்றதும் ‘நீ ஒரு நடை நம்ம மேஸ்திரி வீட்டுப் பக்கம் போய் பார்த்துட்டு வரியா? அப்பப்ப சாணி அள்றதுக்கு அங்கதான் அவன் போவான்’ என்றார். ‘சரி மாமா’ என்றபடி அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

அந்தக் கூட்டத்தில் சுற்றிப் பார்த்து மேலும் இருவரை அருகில் அழைத்து ‘நீங்க ரெண்டு பேரும் ஏரிப் பக்கம் போய் பாருங்கப்பா. ஆளுக்கு ஒரு கரைப்பக்கமா போங்க. எங்கனா மாட்டுக்குப் பின்னால போயிட்டிருப்பான். எங்க கெடைச்சாலும் கையோட கூப்ட்டுகினு வாங்க’ என்று சொல்லி அனுப்பினார்.

‘அண்ணே’ என்றபடி ஒருவர் தானாகவே முன்வந்தார். ‘சில சமயத்துல கடைத்தெரு பக்கம் ஏதாவது ஓட்டலுக்கு எருமுட்ட குடுக்கறதுக்காக போயிருந்தாலும் போயிருக்கலாம். ஒரு நடை போய் பார்த்துட்டு வரட்டுமா?’ என்று கேட்டார். ‘ஓடு. ஓடு. எந்த திசையில பார்த்தாலும் எருமுட்டை வேணும்னு சொல்லி இட்டுகினு வா’ என்று அனுப்பினார் தாத்தா.

ஒரு மணி நேரம் ஊர் முழுக்க அலைந்து திரிந்துவிட்டு ஆளுக்கொரு திசையிலிருந்து ‘எங்கயும் ஆள் தென்படலை’ என்ற பதிலோடு அனைவரும் திரும்பி வந்தார்கள்.

‘மசமசன்னு இங்கயே சுத்தி சுத்தி வர்றதுல எந்த அர்த்தமும் இல்லை. யாராவது ஒருத்தவங்க சீக்கிரமா ஒரு சின்ன வண்டி எடுத்துகினு போங்கப்பா. பேட்டையிலாவது கோலியனூர்லயாவது எருமுட்டை கிடைக்குதான்னு பார்த்து வாங்கினு வாங்கப்பா. நேரம் ஓடிகினே இருக்குது பாரு.’

‘அதுதான் சரி’ என்ற முடிவோடு இரண்டு பேர் எங்கள் தெருவிலேயே இருந்த வண்டிக்காரர் வீட்டுக்குச் சென்றார்கள். கொட்டகையிலிருந்து மாடுகளை அழைத்துவந்து வண்டியில் பூட்டினார்கள். வாசலில் வந்து நின்ற வேறொரு வண்டியிலிருந்து உறவினர் கூட்டமொன்று இறங்கி ஓங்கிய ஒப்பாரிக்குரலோடு வீட்டுக்குள் சென்றது.

தற்செயலாக தெருப்பக்கம் திரும்பியபோது, வெள்ளைக்காரன் நடந்து வருவதைப் பார்த்துவிட்டேன். ‘அதோ வராரு, அதோ வராரு’ என்று கூவினேன். அதற்குள் மற்றவர்களும் அவரைப் பார்த்துவிட்டு நிம்மதியாக மூச்சு வாங்கினார்கள்.

கும்பல் நிற்பதைப் பார்த்துவிட்டு வெள்ளைக்காரனே நெருங்கி வந்து ‘என்னாச்சி?’ என்று கேட்டார். அவருக்கு விஷயத்தை சுருக்கமாகச் சொன்ன தாத்தா , கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த உடல் பக்கமாக கையைக் காட்டினார். பிறகு ‘இன்னைக்கே எடுத்துடலாம்னு தீர்மானம் பண்ணிட்டாங்க. எருமுட்டைக்காக எல்லாரும் உன்னத்தான் தேடிட்டிருக்கோம். நீ என்ன, திடீர்னு ஆளே காணாம போயிட்ட?’ என்று கேட்டார்.

‘இங்கதான் நரையூரு வரைக்கும் போயிருந்தேன்.’

‘அந்த ஊருல என்னடா வேலை?’

‘அங்க ஒருத்தரு புதுசா சூளை போடறாரு. நாலு நாளைக்கு மின்னாலயே வந்து எருமுட்ட அடுக்கிக் குடுத்துட்டு போப்பான்னு சொல்லிட்டு போனாரு. அதுக்காக போயிருந்தேன்.’

‘சரி சரி, நீ எங்கயோ ஊர விட்டு போயிட்டியோன்னு நெனச்சி என்ன பண்றதுன்னு தெரியாம தவியா தவிச்சிட்டம்.’

‘இப்ப என்ன எருமுட்டைதான வேணும்? வாங்க எடுத்துக் குடுக்கறேன்.’

வெள்ளைக்காரன் முன்னால் நடக்க மாட்டுவண்டி அவருக்குப் பின்னால் சென்றது. நானும் அந்த வண்டியின் பின்னால் ஓடினேன்.

தண்டவாளத்துக்கு முன்பே வண்டி நின்றுவிட்டது. நானும் வெள்ளைக்காரனும் மட்டும் குடிசைக்குச் சென்றோம். வெள்ளைக்காரன் குடிசையிலிருந்து ஒரு கூடையை எடுத்து வந்தார். கூடையில் உள்ளும் புறமும் உலர்ந்த சாணத்தின் தடங்கள். வெள்ளைக்காரன் தன் எருமுட்டைக் குவியலிலிருந்து எருமுட்டையை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் அதை வழக்கபோல ‘ஒன்னு’ என்றும் சொல்லிக்கொண்டே வாங்கினேன். ‘வேணாம், வேணாம். எண்ணாத’ என்று வெள்ளைக்காரன் தலையசைத்தார். நான் அவரை விசித்திரமாகப் பார்த்தேன். ‘இருக்கட்டும் விடு’ என்று சொல்வதுபோல இருந்தது அவர் என்னைப் பார்த்த பார்வை.

கூடை நிறைந்ததும் நான் தலையில் சுமந்துகொண்டு வண்டிக்கருகில் சென்றேன். வண்டிக்கார அண்ணன் அதை வாங்கி வண்டிக்குள் அடுக்கிக்கொண்டு கூடையைத் திருப்பிக் கொடுத்தார். நான் உடனே ஓட்டமாக ஓடிவந்து வெள்ளைக்காரன் முன்னால் வைத்தேன். அதை நிரப்பியதும் மீண்டும் சுமந்துகொண்டு வண்டிக்கு ஓடினேன். எத்தனை கூடைகள் என்று நானும் எண்ணவில்லை. அவரும் எண்ணவில்லை. ‘போதும் போதும். வாங்க’ என்று வண்டிக்காரர் சொன்ன பிறகுதான் நாங்கள் நிறுத்திவிட்டுத் திரும்பினோம்.

வண்டிக்காரர் அங்கிருந்தே வண்டியை சுடுகாட்டுக்கு ஓட்டினார். நானும் வெள்ளைக்காரனும் வண்டியின் பின்னால் நடந்தோம். சுடுகாட்டில் தகன மேடையை நெருங்கும் சமயத்தில் அங்கிருந்த பணியாளர் ‘இங்க இங்க’ என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவர் சுட்டிக் காட்டிய இடத்திலேயே எல்லா எருமுட்டைகளையும் இறக்கி வைத்தோம்.

வீட்டுக்குத் திரும்பி வந்தபோது சாவு வீட்டின் சத்தம் இன்னும் உச்சத்தில் இருந்தது. நான் உள்ளே சென்று சுடுகாட்டில் எருமுட்டைகளை ஒப்படைத்த செய்தியை துண்டுபோட்ட தாத்தாவிடம் சொன்னேன். ‘சரி சரி’ என்றபடி என்னோடு வெளியே வந்த அவர் வெள்ளைக்காரனிடம் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார். வெள்ளைக்காரன் அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டார்.

இரண்டு மாதம் கழித்து மேஸ்திரி வீட்டில் ஒரு சாவு விழுந்துவிட்டது. அவருடைய அம்மா இறந்துவிட்டார். வியாதியெல்லாம் எதுவும் இல்லை. மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பதற்காகப் படுத்தவர் எழுந்திருக்கவே இல்லை. விளக்கு வைக்கிற நேரமான பிறகும் எழுந்திருக்காமலேயே இருக்கிறாரே என்ற சந்தேகத்தில் எழுப்பச் சென்றபோதுதான், அவர் இறந்துவிட்டது தெரிந்தது. பெரிய சாவு. அவர்கள் உறவினர்கள் பலர் வெளியூர்களிலிருந்து வரவேண்டியிருந்தது. பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் வரைக்கும் பரவியிருந்தனர். இரவு முழுக்க ஆட்கள் வந்துகொண்டே இருந்தனர். இரவெல்லாம் மேளச்சத்தம் காதைத் துளைத்தது.

அடுத்த நாள் காலையில் எருமுட்டை வாங்க வெள்ளைக்காரனைத் தேடிச் சென்றார்கள். அவர் அங்கே இல்லை. போன சாவின்போது ஏற்பட்ட அதே அனுபவம் அப்போதும் நிகழ்வதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். கடைத்தெரு, ஏரிக்கரை எல்லா இடங்களுக்கும் தேடுவதற்காகச் சென்ற ஆட்கள் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டனர்.

‘அவன் இல்லைன்னா என்ன? குடிசையில எருமுட்டை இருக்குதா இல்லையா? வண்டி எடுத்துகினு போய் வேணும்ங்கற அளவுக்கு எடுத்துட்டு வா’ என்று அதிகாரத்துடன் சொன்னார் மேஸ்திரி.

‘பணம் கொடுக்காம எப்படிங்க மேஸ்திரி….?’ என்று திடுக்கிட்டார் வண்டிக்காரர்.

‘அதுக்காக? அவன் இருக்கிற இடம் தெரியாம, அவன எங்கேன்னு போய் தேடறது? அவன என்ன, நாம ஏமாத்தவா போறோம்? எவ்ளோ பணம் கேக்கறோனோ, அவ்ளோ பணத்தை விட்டுக் கிடாசினா போச்சி’ என்றார். வேறு வழியில்லாமல் வண்டிக்காரரும் ‘சரி சரி’ என்றபடி அங்கிருந்து நக்ர்ந்தார். அவருக்குத் துணையாக இரண்டு ஆட்கள் சென்றார்கள். வெள்ளைக்காரன் குடிசையில் இருந்த எருமுட்டைகள் சுடுகாட்டுக்குச் சென்று சேர்ந்தன.

எங்கோ போயிருக்கும் வெள்ளைக்காரன் திரும்பியதும் ஊருக்குள் ஒரு பிரச்சினை வெடிக்கப் போகிறது என்று நினைத்து நினைத்து நான் உள்ளூர அஞ்சிக்கொண்டிருந்தேன். புங்கமரத்தடியில் விளையாடும் போதெல்லாம் அவ்வப்போது குடிசைக்குள் ஏதேனும் ஆள்நடமாட்டம் தெரிகிறதா என பார்த்துவிட்டுத் திரும்பினேன். நான் நினைத்த எதுவும் நிகழவில்லை.

ஒருநாள் காசி மாமா ‘எங்கடா போனான் இந்த வெள்ளைக்காரன்? ஆள் அட்ரஸே இல்லை’ என்று எங்களிடம் கேட்டார். அப்போதுதான் வெள்ளைக்காரனைப்பற்றிய விவரம் அவருக்கும் தெரியாது என்று புரிந்தது. ‘தெரியலையே, நாங்களும் அவரைத்தான் எதிர்பார்த்திட்டிருக்கோம்’ என்றோம்.

ஒரு வாரம். பத்து நாள். ஒரு மாதம். வெள்ளைக்காரன் திரும்பி வரவே இல்லை. என்ன காரணம் என்பது புரியவே இல்லை. இரண்டு மூன்று மாதங்கள் வரைக்கும் கூட அவர் என்றாவது ஒருநாள் திடீரென வந்து நிற்கக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குப் பிறகு என் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தேயத் தொடங்கியது.

புங்கமரத்தடியில்தான் அப்போதும் விளையாடிக்கொண்டிருந்தோம். நாங்கள் உதைக்கும் பந்து அவருடைய குடிசைப்பக்கமாக சென்று விழும் போதெல்லாம் ஒருமுறை அதன் வாசல் பக்கம் என் பார்வை சென்று வரும். யாருமில்லாத வெறுமை ஏமாற்றத்தையே கொடுக்கும். குடிசையில் நிறைந்திருக்கும் சாணத்தின் வாடை அவர் அந்த இடத்தில்தான் இருக்கிறார் என்ற எண்ணத்தையே கொடுக்கும். என்றாவது ஒருநாள் படலைத் திறந்துகொண்டு வெளியே வந்து நிற்பார் என்று கற்பனை செய்தபடி திரும்பிவிடுவேன்.

அந்த ஆண்டு தீபாவளி தொடங்கும் முன்பேயே மழை தொடங்கிவிட்டது. இரவும் பகலும் ஓய்வில்லாமல் பொழிந்தபடியே இருந்தது. மழைக்கு நடுவில் தீபாவளி ஒரு கொண்டாட்டமாகவே இல்லை. அதற்குப் பிறகும் இரண்டு வார காலம் மழை நீடித்தது. தெருவெல்லாம் சேறும் சகதியும் நிறைந்துவிட்டது. அங்கங்கே தண்ணீர் குளம்போல நின்றது. ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தோம். பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அறிவித்துவிட்டனர். பள்ளிக்கும் செல்லாமல் விளையாடுவதற்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பது பெரிய தண்டனையாக இருந்தது.

ஒருநாள் காலை மழை நின்று வானத்தில் வெளிச்சம் படர்ந்தது. இனி மழை பொழியாது என்று ஒவ்வொருவருமே நம்பினார்கள். இரண்டு மூன்று நாட்களில் ஊர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. பள்ளிக்கூடத்துக்குச் சென்று நண்பர்களையும் ஆசிரியர்களையும் பார்த்த பிறகுதான் சற்றே உற்சாகம் பிறந்தது.

அடுத்து வந்த விடுமுறை நாளில் நானும் நண்பர்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பந்து விளையாடுவதற்காக மட்டை எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் திடலுக்குச் சென்றோம். மழை அந்த இடத்தின் கோலத்தையே மாற்றியிருந்தது. முன்பு இருந்ததைவிட அழகு கூடியிருந்தது. எங்கெங்கும் புல் உயரமாக வளர்ந்து அடர்ந்திருந்தது. மரங்களில் புதிய இலைகள் துளிர்த்திருந்தன. பறவைகளின் கூச்சல் ஒலித்தது. புங்கமரம் பூத்துச் செழித்திருந்தது.

வழக்கம்போல கீழே விழுந்து மக்கியிருக்கும் பூக்களிலிருந்து எழுந்த மணம் நெஞ்சை நிரப்பியது. ஆகா என்ன மணம் என்று ஆனந்தமாக அதில் திளைத்தேன். ஒன்றிரண்டு கணங்களுக்குப் பிறகே, அந்த மணத்துடன் இணைந்து வழக்கமாக எழும் சாணத்தின் மணமே வரவில்லை என்பதை திகைப்புடன் உணர்ந்தேன். துணுக்குற்று அருகிலிருந்த குடிசையின் பக்கம் திரும்பினேன். கழுவி கவிழ்த்துவைத்த பாத்திரம்போல அந்தக் குடிசையின் புறத்தோற்றம் தெரிந்தது. அந்த இடமா சாணம் கொட்டிவைக்கும் இடமாக இருந்தது என்று நினைக்கும் அளவுக்கு மழை அந்த இடத்தை கரைத்து அழித்திருந்தது. வேலியிலும் முள்ளே தெரியாதபடி ஓணான் கொடி படர்ந்து பச்சைப்பசேலென அதன் முகமே மாறியிருந்தது.

கடைசிவரை வெள்ளைக்காரன் ஊருக்குத் திரும்பிவரவே இல்லை. அந்தக் குடிசை அவருக்காகவே காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவை இழந்து இடிந்து உதிர்ந்தது.

வெள்ளைக்காரன் இல்லாவிட்டாலும் புங்கமரத்தடிக்கு வரும்போதெல்லாம் அவரை நினைக்காமல் இருந்ததில்லை. ஒரு காலத்தில் புங்கம்பூ மணத்துடன் கலந்த சாணத்தின் மணத்துக்கு அவரை நினைவுபடுத்தும் ஆற்றல் இருந்தது. காலம் செல்லச்செல்ல, புங்கம்பூ மணமே போதுமானதாக மாறிவிட்டது. பிறகு, எந்த இடத்தில் புங்கம்பூவைப் பார்த்தாலும் அவருடைய முகம் நினைவில் மிதந்து வரத் தொடங்கியது.

0

பகிர:
nv-author-image

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *