Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

பன்னீர்ப்பூக்கள் #20 – தப்புக்கொட்டை

பன்னீர்ப்பூக்கள்

தயிர் விற்பனையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் மதிய வேளையில் ஓட்டேரிப்பாளையத்து சின்னம்மா தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்வது வழக்கம். மதியச் சாப்பாட்டுக்காக பள்ளிக்கூடத்திலிருந்து அதே சமயத்தில்தான் நானும் வீட்டுக்கு வருவேன்.

என்னைப் பார்த்ததுமே அந்தச் சின்னம்மா ‘தம்பி, ஒன் கையால ஒரு செம்பு தண்ணி எடுத்தா ராஜா’ என்று சொல்வார். நான் ஒரே ஓட்டமாக தோட்டத்துக்கு ஓடி கைகால்களைக் கழுவிக்கொண்டு, அவருக்கு ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பேன். அவர் ஒரே மூச்சில் அந்தத் தண்ணீரைப் பருகி முடிப்பார். பிறகு, ‘காப்பாத்துடி ஆத்தா’ என்றபடி முகத்தில் படிந்திருக்கும் வேர்வையை முந்தானையால் துடைத்துக்கொள்வார். அப்புறம், சுருக்குப்பையைப் பிரித்து வெற்றிலைபாக்கு எடுத்து மடித்து வாய்க்குள் வைத்து மெல்லத் தொடங்குவார். அதன் சாறு இறங்க இறங்க வெயிலில் நடந்துவந்த களைப்பு நீங்கும். அப்போது அவர் முகத்தில் சற்றே மலர்ச்சி படரும்.

அதற்குப் பிறகுதான் அவருடைய புலன்கள் வேலை செய்யத் தொடங்கும். அடுப்பங்கரையில் இருந்து வரும் மணத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். மணத்தை நுகர்ந்த மறுகணமே கேள்விகள் தொடங்கிவிடும்.

‘என்னக்கா, கருவாட்டுக்குழம்பா?’

‘இன்னைக்கு என்ன புளிக்குழம்பா?’

‘மாங்கா போட்ட சாம்பாரா?’

எதையும் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார் அந்தச் சின்னம்மா. பலவிதமான குழம்புகளை வைப்பதில் அம்மாவுக்குத் திறமை இருப்பதுபோல, அந்தக் குழம்புகளை வாசனையைக் கொண்டு கண்டுபிடிப்பதில் சின்னம்மாவுக்குத் திறமை இருந்தது.

எனக்கு அந்தத் திறமையெல்லாம் இல்லை. தட்டில் அம்மா என்ன வைக்கிறாரோ, அதைச் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டுவிடுவேன். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். இரண்டு மணிக்கு சரியாக வகுப்பு தொடங்கிவிடும். பத்து நிமிடங்கள் முன்பாகவே பள்ளிக்குத் திரும்பவேண்டும். அந்தப் பதற்றமே நெஞ்சில் நிறைந்திருக்கும்.

ஒருநாள் மதியம் சாப்பிட உட்கார்ந்ததும் அம்மா சற்றே சலிப்பான சிரிப்போடு ‘காய் ஒன்னுமில்லைடா இன்னைக்கு. கடைக்குப் போகும்போதுதான் வாங்கிவரணும். வீட்டுல நாலு பூண்டு பல்லு கெடந்தது. கொஞ்சம் புளிய கரைச்சி அதுல நசுக்கிப் போட்டு ஒரு ரசம் மட்டும்தான் வச்சேன்’ என்றார். என்னிடம் ஏன் அதைச் சொன்னார் என்று எனக்குப் புரியவில்லை. ‘சரி சரி’ என்றபடி தட்டில் இருந்த சோற்றில் சூடான ரசத்தை ஊற்றிச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டேன்.

அடுத்தநாள் மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தபோதும் குழம்பு பற்றிய பேச்சுதான் நடந்துகொண்டிருந்தது. ‘வேப்பம்பூவுல கூடவா ரசம் வைப்பாங்க? அதிசயமா இருக்குதுக்கா. எங்க ஊருப்பக்கத்துல நான் கேள்விப்பட்டதே இல்லைக்கா. இந்த ரசத்தை எப்படிக்கா வைக்கறது?’ என்று தயிர்க்கார சின்னம்மா ஆச்சரியத்தோடு அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அம்மா அவருக்கு ஆர அமர வேப்பம்பூ ரசம் வைக்கும் முறையைப்பற்றி எங்கள் அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துவதுபோன்ற முனைப்போடு சொல்லத் தொடங்கிவிட்டார். உலரவைத்த வேப்பம்பூக்களை ஒரு கை அள்ளி வாணலில் போட்டு வறுப்பதில் தொடங்கி, குமிழியிட்டுக் கொப்பளிக்கும் சமயத்தில் தீயை அணைத்து ரசத்தை இறக்குவதுவரை அவர் ஒவ்வொன்றாகச் சொல்லி முடிப்பதற்குள் நான் சாப்பிட்டு முடித்துவிட்டேன்.

‘என்ன தம்பி இது? உக்காந்ததும் தெரியலை. சாப்ட்டு முடிச்சதும் தெரியலை. அதுக்குள்ள எழுந்திட்ட?’ என்று என்னிடம் கேட்டார் சின்னம்மா.

‘பள்ளிக்கூடம் போவணும் சின்னம்மா. நேரமாயிடுச்சி. அதான்.’

பதில் சொல்லிக்கொண்டே பையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.

ஒவ்வொரு நாளும் மதியவேளையில் அம்மா புதிது புதிதாக ரசம் வைக்கத் தொடங்கினார். ஒருநாள் வைத்தது போன்ற ரசத்தை இன்னொரு நாள் வைப்பதில்லை. இஞ்சி ரசம், கொத்துமல்லி ரசம், கருவேப்பிலை ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், மாங்காய் ரசம், ஓமவள்ளி ரசம் என் விதவிதமான ரசங்களை வைத்துக் கொடுப்பார்.

ரசங்களில் அத்தனை வகைகள் உண்டு என்பதை அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். எல்லாமே எங்கள் அம்மாவின் கைவண்ணம். ஒவ்வொரு ரசத்திலும் சின்னச்சின்ன வித்தியாசங்கள் இருக்கும். சூடான சோற்றோடு எந்த ரசத்தை ஊற்றிக்கொண்டு சாப்பிட்டாலும் ருசியாகவே இருக்கும்.

ரசங்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்த அம்மா ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்காக வீட்டுக்குச் சென்ற சமயத்தில், ‘இன்னைக்கு ரசம் எதுவும் வைக்கலைடா’ என்றார்.

நான் திகைப்புடன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன்.

‘அரிசி தீர்ந்துபோச்சி. ரெண்டு தரம் அரிசிக்காரம்மா வீடு வரைக்கும் போயிட்டு வந்தேன். வீடு பூட்டிக் கெடக்குது. எங்கியோ போயிட்டாங்க போல.’

‘அப்ப?’

‘பானைக்குள்ள எப்பவோ கொழிச்சி வச்சிருந்த பழைய நொய் இருந்திச்சி. அத எடுத்துத்தான் கஞ்சி வைச்சேன். பொட்டுக்கடலைத் துவையல் அரைச்சி வச்சிருக்கேன். சுடுகஞ்சிக்கு நல்லா இருக்கும்.’

அப்போதுதான் குழம்பு தொடர்பாக படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்களைத் தொகுத்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன். அப்பா பலமாத மருத்துவத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பிவிட்டார் என்றபோதும் முன்புபோல அவரால் ஆற்றலோடு வேலை செய்யமுடியவில்லை. தீராத களைப்புக்கு அவர் இரையாகிவிட்டார். பல வாடிக்கையாளர்கள் இடம் மாறிச் சென்றுவிட்டனர். வருமானம் குறைந்துவிட்டது. அது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதை என்னால் உணரமுடிந்தது.

நான் மெளனமாக அம்மாவைப் பார்த்தேன். ‘சரிம்மா. குடு’ என்றேன், கஞ்சி ஊற்றிய தட்டை எடுத்துவந்து அம்மா வைத்தார். பிசைவதற்காக கையை வைத்தேன். சூடாக இருந்தது.

நொய்க்கஞ்சி என்றபோதும் அதில் இரண்டு மூன்று கையளவுதன் பருக்கைகள் இருந்தன. மற்றபடி தட்டில் வழிய வழிய தண்ணீர்தான் நிறைந்திருந்தது. உப்பு கரைந்த அந்தக் கஞ்சித்தண்ணீர் குடிப்பதற்கு அமுதமாக இருந்தது. தண்ணீரிலேயே வயிறு நிறைந்துவிட்டது. அதற்குப் பிறகு அடியில் எஞ்சியிருந்த பருக்கைகளை அள்ளி வாய்க்குள் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடிவிட்டேன்.

சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கஞ்சிக்குப் பதிலாக, கேழ்வரகு மாவில் புட்டு செய்துவைத்திருந்தார். ஒரு மாறுதலுக்காக ஒருசில நாட்களில் அத்துடன் முருங்கைக்கீரையை வதக்கிச் சேர்த்து கதம்பமாக வைத்திருந்தார். மற்றும் சில நாட்களில் அதே மாவு கூழாக வடிவமெடுத்து வந்தது.

ஒருநாள் அந்த மாவுக்கும் தட்டுப்பாடு வந்துவிட்டது. தோலையும் விதைகளையும் நீக்கி துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பப்பாளிப்பழத்தை ஒரு தட்டில் வைத்து அம்மா கொடுத்தார்.

‘என்ன பார்க்கிற? நம்ம தோட்டத்துப் பழம்தான். முருங்கைக்கீரை பறிக்கலாம்னுதான் சொரட்டுக்கோலோடு மரத்துங்கிட்ட போனேன். தெனமும் அதையே செய்யறமேன்னு எனக்கே ஒரு மாதிரி இருந்திச்சி. பக்கத்துல பப்பாளி மரத்துல இந்தப் பழங்கள பார்த்ததும் மனசு மாறிடுச்சி. நாலு பழம் பறிச்சி எடுத்தாந்தேன். நல்லா ருசியாதான் இருக்குது. சாப்புடு.’

நான் மெளனமாக ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டேன். சுவையாக இருந்தது. வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு ஓடிவிட்டேன்.

அடுத்து வந்த வாரத்தில் மாதாந்திரத் தேர்வுக்குரிய அட்டவணையை எங்கள் வகுப்பாசிரியர் கரும்பலகையில் எழுதிப் போட்டார். எல்லாத் தேர்வுகளும் உணவு இடைவேளைக்குப் பிறகு தொடங்கும் முதல் பிரிவுக்குரிய பாடவேளையில் நடக்கவிருப்பதாகக் குறிக்கப்பட்டிருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் முதன்முதலாக குழப்பம் ஏற்பட்டது. வீட்டுக்குச் சென்றால் சாப்பிட ஏதாவது கிடைக்கும். ஆனால் வீட்டிலிருந்து திரும்பி வந்ததுமே தேர்வுகளை எழுதுவது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்திவிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே, தேர்வுகள் முடியும் வரைக்கும் வீட்டுக்குச் செல்லவேண்டாம் என்று நானாகவே முடிவெடுத்தேன்.

வினாத்தாளைக் கையில் வாங்கும் வரைக்கும் பாடங்களைப் படிப்பது என்பது ஏதோ ஒரு விதத்தில் எனக்கு மானசீகமாக ஒரு நம்பிக்கையை வழங்கக்கூடும் என்பது என் எண்ணமாக இருந்தது. தேர்வில் பெறும் வெற்றி முக்கியமென்பதால், மதிய உணவைத் தவிர்ப்பதைப்பற்றி பெரிதாக கவலை ஏற்படவில்லை. என் எண்ணத்தை அம்மாவிடம் சொன்னேன். சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவரும் பெருமூச்சோடு ‘வந்து ஏமாந்துட்டு போறதுக்குப் பதிலா, வராமயே இருக்கறது நல்லதுதான்’ என்று சொன்னபடி ஏற்றுக்கொண்டார்.

முதல் தேர்வு நடக்கவிருந்த அன்று, மதிய உணவுக்கான மணி அடித்ததுமே வழக்கம்போல புத்தகப்பையை எடுத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக வகுப்பைவிட்டு வெளியேறினேன். ஆனால் முன்வாசல் பக்கமாகச் செல்லாமல் பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் விளையாட்டு மைதானத்தின் பக்கமாகச் சென்றேன்.

மைதானத்தை ஒட்டிய மடத்தார் தோப்புக்குள் ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து படிக்கவேண்டும் என்பதுதான் என் திட்டம். ஆனால் தோப்பை நெருங்கியபோதுதான், ஒவ்வொரு மரத்தடியிலும் நான்கைந்து பேர் சாப்பிடுவதற்காக வட்டம் போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். ஒருவர் பார்வையிலும் படாமல் அங்கே எந்த மரத்தடியிலும் உட்கார்வது சாத்தியமே இல்லை என்பது புரிந்தது.

தோப்பை ஒட்டியிருந்த வேலியிலிருந்து விலகி குடுமியாங்குப்பம் செல்லும் பாதையில் இறங்கி நடந்தேன். ஒரு திருப்பத்தில் மழமழவென்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு வெட்டவெளி தெரிந்தது. அருகிலிருந்த வயலிலிருந்து பிடுங்கி வரப்பட்ட வேர்க்கடலைச் செடிகள் குவியல்குவியலாக அங்கே குவிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குவியலுக்குப் பக்கத்திலும் யாரோ ஒரு பெரியம்மாவோ, அக்காவோ, பாட்டியோ உட்கார்ந்து செடியிலிருந்து கடலைகளைத் தனியாக உருவியெடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தனர்.

பக்கத்தில் வேறொரு வயலில் ஒரு பம்ப் செட் ஓடும் சத்தமும் குழாய்வழியாக உயரத்திலிருந்து தொட்டிக்குள் தண்ணீர் விழும் சத்தமும் கேட்டது. புத்தகப்பையை ஓரமாக வைத்துவிட்டு தொட்டிக்கு அருகில் சென்றேன். தொட்டியிலிருந்து தெறிக்கும் நீர்த்துளிகள் மேலே பட்டு ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கியது. நான் தொட்டிக்கு அருகிலிருந்த வாய்க்காலில் இறங்கி கைகால்முகம் கழுவிக்கொண்டு இரு கைகளாலும் தண்ணீரை ஏந்தி மெதுவாகப் பருகினேன். சில்லென்ற தண்ணீரைப் பருகியதும் வயிறு குளிர்ந்தது. பசி விலகி களைப்பெல்லாம் கரைந்ததுபோல இருந்தது.

வெளியே வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து புத்தகத்தை எடுத்து கேள்வி பதில்களையும் மனப்பாடச் செய்யுள்களையும் படிக்கத் தொடங்கினேன். ஒருமுறை முழுமையாக பார்த்து வாய்விட்டுப் படித்தேன். பிறகு கண்களை மூடிக்கொண்டு பார்க்காமல் சொல்லிப் பார்த்தேன். இப்படியே இரண்டு மூன்று முறை சொல்லிச்சொல்லிப் பார்த்த பிறகுதான் மனசுக்குத் தெம்பாக இருந்தது.

‘என்னடா க்ளாஸ் டெஸ்ட்டா?’ என்றொரு குரல் கேட்டு பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். சிறிது தொலைவில் கடலைச்செடி ஆய்ந்துகொண்டிருந்த ஓர் அக்கா என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். மெலிந்த தோற்றம். வட்டமான முகம். அடர்த்தியான தலைமுடி. என்னைக் கேள்வி கேட்டது அவர்தானா என்பது உறுதியாகத் தெரியாத குழப்பத்தில் ஒருமுறை அவரைப் பார்ப்பதும் அடுத்தமுறை பிறரைப் பார்ப்பதுமாக இருந்தேன்.

‘என்னடா, கேள்விக்குப் பதில் சொல்லாம எங்க எங்கயோ பார்த்துட்டிருக்க?’

என்னிடம் கேட்டவர் அவர்தான் என்பது உறுதியாகத் தெரிந்த பிறகு நான் மெதுவாக அவரைப் பார்த்து புன்னகைத்தேன். ‘ஆமாங்க்கா’ என்று தலையாட்டினேன்.

‘தமிழ் டெஸ்ட்டா?’

‘ம்.’

‘தமிழ்ல வழக்கமா எத்தன மார்க் வாங்குவ?’

‘ஏன்க்கா? இருபதுக்கு பதினெட்டு பத்தொன்பது வாங்குவேன்க்கா.’

‘இப்ப நீ படிச்சியே திருக்குறள, அத நீ படிச்ச விதத்துலயே எழுதினா, நிச்சயமா ரெண்டு மார்க் போயிடும்.’

ஒருகணம் எனக்குப் பேச்சே வரவில்லை. திகைப்பில் நிலைகுலைந்து அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

‘ஆமாம். ஒரு தப்புக்கு ஒரு மார்க்னா ரெண்டு தப்புக்கு ரெண்டு மார்க்.’

ஓர் ஆசிரியரைப்போல கறாராகவும் மிடுக்காகவும் அவர் சொன்னது அதிர்ச்சியாகவும் விசித்திரமாகவும் இருந்தது. குழப்பத்தோடு ‘எத தப்புன்னு சொல்றீங்கக்கா?’ என்று அவரிடம் கேட்டேன்.

காலுக்கடியில் குவிந்திருந்த செடிகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து வேறொரு மூலையில் தள்ளிவிட்டு, எழுந்து சென்று புதிய செடிகளை இரு கைகளாலும் மார்போடு சேர்த்துப் பிடித்து அள்ளி வந்து தனக்கு அருகில் போட்டுக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தார் அந்த அக்கா. பிறகு என்னைப் பார்த்து ‘பீலிபெய் சாகாடும்னு ஒரு குறள் சொன்னியே, அதை மறுபடியும் பார்க்காம சொல்றியா?’ என்று பொறுமையாகக் கேட்டார்.

அவ்வளவு நேரம் கடலைச்செடி ஆய்வதுபோல அங்கே உட்கார்ந்திருந்தவர் என் வாசிப்பைக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் குறளை நான் ஒரு நூறு முறையாவது மனப்பாடமாக சொல்லிப் பார்த்திருப்பேன். அதனால் தப்பு நேர வாய்ப்பே இல்லை என்கிற தன்னம்பிக்கை எனக்குள் நிறைந்திருந்தது. அதனால் வேகம் கொண்டு ‘பீலிபெய் சாகாடும் அச்சீறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’ என்று சொன்னேன்.

அதைக் கேட்டு அந்த அக்காவின் முகத்தில் புன்சிரிப்பு படர்ந்தது. ‘எதுக்கு இவ்வளவு அவசரம்? இப்பவும் தப்பாதான்டா சொல்ற. நிதானமா யோசிச்சி இன்னொரு தரம் சொல்லு, பார்ப்போம்’ என்றார்.

எனக்குள் அடக்கமுடியாத சீற்றம் பொங்கியது. ஆயினும் பல்லைக் கடித்துக்கொண்டு அந்தக் குறளை ஒவ்வொரு சொல்லாக நிறுத்திச் சொல்லிவிட்டு அவரை முறைத்தேன்.

‘தப்புடா தம்பி. தப்பு. நீ சரியா மனப்பாடம் பண்ணலை. அச்சீறும்னு சொல்றியே. அது அச்சீறும் இல்லை. அச்சிறும்’ என்று திருத்தினார் அக்கா. பிறகு ஓர் ஆசிரியருக்கே உரிய வாத்சல்யத்தோடு ஒரு கணம் என்னைப் பார்த்தார்.

‘இல்லக்கா. அச்சீறும்தான். எனக்கு நல்லா தெரியும்’ என்று அடித்துச் சொன்னேன்.

‘அப்படியா, சரி, புத்தகம் இருக்குதில்லையா? எடுத்து பிரிச்சி பாரு.’

நான் வேகமாக புத்தகத்தை எடுத்து திருக்குறள் பகுதி இருக்கும் பக்கத்தைப் பிரித்து அந்தக் குறளை ஒவ்வொரு சொல்லாகப் படித்தேன். பிறகு அக்காவின் பக்கம் விறைப்புடன் ஏறிட்டுப் பார்த்தேன்.

அக்காவின் முகத்தில் மீண்டும் புன்னகை படர்ந்தது. ‘பார்த்துதான படிக்கிற? அப்பவும் ஏன் உனக்கு தப்பு வருது?’ என்று கேட்டார். அவர் வேண்டுமென்றே என்னைச் சீண்டுகிறாரோ என்று சந்தேகமாக இருந்தது. ‘நான் சரியாத்தான் படிக்கிறேன். வேணும்ன்னா நீங்களே புஸ்தகத்தைப் பாருங்க்கா’ என்று அவரை நோக்கி புத்தகத்தை எடுத்துச் சென்று அவர் முன்னால் நீட்டினேன்.

கையிலிருந்த கடலைச்செடியை கீழே வைத்துவிட்டு அந்தப் புத்தகத்தை தன் கையில் வாங்கினார் அக்கா. பிறகு என் பக்கமாக திருக்குறள் பக்கத்தைத் திருப்பி, ‘இந்தக் குறள்தான? ஒவ்வொரு வார்த்தையா நீயே படி’ என்றார்.

அவர் விரல் ஒவ்வொரு சொல்லாகக் காட்டியபடி நகர நகர, நான் அந்தச் சொல்லை மட்டும் படித்தேன். இரண்டு சொற்கள் முடிந்தன. மூன்றாவது சொல்லில் அவர் விரல் இருந்தபோது நான் வேகமாக அச்சீறும் என்று படித்தேன். அப்படி சொன்ன கணத்திலேயே என் பிழை எனக்குப் புரிந்துவிட்டது. அது அச்சீறும் அல்ல, அச்சிறும்தான். சீ அல்ல. சி. அப்படித்தான் அச்சிடப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் இத்தனை நாட்களாக நான் அதைக் கவனிக்காமலேயே பிழையாகவே படித்து வந்ததை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருந்தது. ‘அக்கா, அது… அது…. எப்படியோ…. சீயா இருக்கும்னு…… நானா நெனச்சிகிட்டேன்’ என்று பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினேன்.

‘சில சமயங்கள்ல நாம ஒரு வார்த்தையை காதுல கேட்போம். ஆனா அது வேற ஒரு வார்த்தையா மனசுல பதிஞ்சிடும். உனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் நடக்கக்கூடியதுதான். இனிமேல அச்சிறும்னு படி. புரியுதா? அச்சுன்னு சொன்னா வண்டிச் சக்கரத்துக்கு இருக்கக்கூடிய அச்சு. அச்சீறும்னு சொன்னா, அதுக்கு அர்த்தமே இல்லை. அச்சிறும்னு சொன்னா, சக்கரத்துடைய அச்சு முரிஞ்சி விழுந்துடும்னு அர்த்தம். புரியுதா?’

கடலைச்செடி ஆயக்கூடிய அக்கா, ஓர் ஆசிரியரைப்போல திருக்குறளுக்கு விளக்கம் சொல்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் ராதாகிருஷ்ணன் ஐயாவே மாறுவேடத்தில் பெண்ணாக வந்து அங்கே உட்கார்ந்திருக்கிறாரோ என நினைத்துவிட்டேன்.

‘உங்களால இன்னைக்கு ஒரு மார்க் பொழைச்சது. ரொம்ப தேங்க்ஸ்க்கா’ என்றேன். அக்கணமே இரண்டு பிழைகள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியது நினைவுக்கு வந்தது. ‘அக்கா, ரெண்டு தப்புன்னு சொன்னீங்களே, இன்னொரு தப்பு எதுக்கா?’ என்று வெட்கத்துடன் கேட்டேன்.

‘சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டுன்னு ஒரு குறள் சொன்னியே, அந்தக் குறளை எடுத்து படிச்சிப் பாரு’ என்று புன்னகையுடன் சொன்னார் அக்கா.

நான் புத்தகத்தில் திருக்குறள் பக்கத்தைப் பிரித்து அந்தக் குறளை ஒருமுறை மனசுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக்கொண்டேன். போன முறை மாதிரி பிழை வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு எழுத்தாக நிறுத்திப் பார்த்துப் படித்தேன். முதல் சொல்லையே நான் பிழையாகச் சொன்னேன் என்பது அப்போதுதான் புரிந்தது. யாகாவராயினும் அல்ல. அந்தச் சொல் யாகாவாராயினும் என்பதுதான். நான் அதை யாகாவராயினும் என்று படித்துவிட்டேன். பிழையைக் களைந்து சீராக நிறுத்தி முழுக்குறளையும் சொன்னேன்.

‘இப்ப சரி’ என்றார் அக்கா. நான் மறுபடியும் ‘தேங்க்ஸ்க்கா’ என்று புன்னகையுடன் சொன்னேன்.

‘தேங்க்ஸ்லாம் இருக்கட்டும். மொதல்ல கெளம்பு நீ. இங்கேர்ந்து ஸ்கூலுக்கு நடந்து போகறதுக்கும் பெல் அடிக்கறதுக்கும் சரியா இருக்கும். கெளம்பு.’

எனக்கு அந்த அக்காவிடம் நிறைய பேசவேண்டும் போல இருந்தது. அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு புத்தகத்தை பையில் வைத்தபடி கிளம்பினேன். அக்கணத்தில் அக்கா ‘ஒரு நிமிஷம் நில்லு’ என்று என்னை நிறுத்தி ‘மதியானம் சாப்ட்டியா நீ?’ என்று கேட்டார். அப்படி ஒரு கேள்வியை அவர் கேட்கக்கூடும் என நான் எதிர்பார்க்கவில்லை. சட்டென என் முகம் இருண்டுவிட்டது. ஆனாலும் மறுகணமே சமாளித்து புன்னகையோடு ‘ம்க்கா’ என்று சொன்னேன்.

அக்கா ஒருகணம் எதுவும் பேசாமல் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு வேறெந்தக் கேள்வியும் கேட்காமல் என் பக்கத்தில் வந்து என் புத்தகப்பையைத் திறந்து ஒரு கைநிறைய வேர்க்கடலையை அள்ளிப் போட்டார். ‘போவும்போது உரிச்சி சாப்டுகினே போ’ என்றார். எனக்கு சட்டென கண்கள் தளும்பிவிட்டன. அவர் பார்த்துவிடக்கூடாது என நினைத்து திரும்பி வேகமாக பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தேன்.

அடுத்த நாள் ஆங்கிலத்தேர்வு.. அன்றைக்கும் பகலில் உணவு இடைவேளை சமயத்தில் குடுமியாங்குப்பத்துக்குச் சென்றேன். அந்த அக்காவும் பிற பெண்களும் அன்றும் வட்டமாக உட்கார்ந்து கடலை ஆய்ந்துகொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததுமே அந்த அக்கா ‘என்னடா, நேத்து பரீட்சை எப்படி எழுதினே?’ என்று கேட்டார். நான் உற்சாகத்துடன் ‘நல்லா எழுதினேன்க்கா. நீங்க கேட்ட அதே ரெண்டு குறள்களும் பரீட்சையில கேட்டிருந்தாங்க. நல்ல வேளை, உங்களால எனக்கு ரெண்டு மார்க் கெடைச்சிது’ என்று பதில் சொன்னேன்.

‘சரி சரி. இன்னைக்கு என்ன பரீட்சை?’

‘இங்க்லீஷ்க்கா.’

‘சரி, பேசிட்டே இருக்காத. படி.’

நான் பையைத் திறந்து ஆங்கிலப் புத்தகத்தை எடுத்தேன். ஒருகணம் நினைவு வந்தவனாக அக்காவின் பக்கம் திரும்பி ‘ஏதாவது தப்பு இருந்தா, திருத்துங்கக்கா’ என்று சொல்லிவிட்டுப் படிக்கத் தொடங்கினேன்.

இரண்டு பாடங்கள். ஒரு மனப்பாடப் பாடல். சீக்கிரமாகவே படித்துமுடித்துவிட்டேன். அக்காவிடம் அந்தப் பாட்டை ஒருமுறை மனப்பாடமாகவே சொல்லி சரிபார்த்துக்கொண்டேன். சில சொற்களைச் சொல்லி அக்கா ஸ்பெல்லிங் கேட்டார். எல்லாப் பாடங்களும் முடிந்த நேரத்தில் மெதுவாக ‘அக்கா, நீங்க எந்த ஸ்கூல்லியாவது டீச்சரா இருந்தீங்களாக்கா?’ என்று கேட்டேன்.

அதைக் கேட்டதும் அக்கா வாய்விட்டு கடகடவென சிரித்துவிட்டார். ‘ஏன்டா அப்படி கேக்கிற?’ என்று கேட்டார்.

‘நீங்க பேசற விதம் டீச்சர் பேசறமாதிரியே இருக்குது.’

அக்கா அதைத் தொடர்ந்து எதுவும் பேசாமலேயே ஒரு கணம் கடலை உருவுவதிலேயே கவனத்தைப் பதித்திருந்தார். பிறகு உதடுகள் மீது ஒரு கசப்பான புன்னகை படர ‘த்ச்’ என்று நாக்கு சப்புக்கொட்டிக் கொண்டார். அதற்குள் அவர் விழியோரத்தில் நீர் திரண்டு கட்டிக்கொண்டது. அக்கா அதை விரலால் தொட்டெடுத்துச் சுண்டியெரிந்தார்.

‘ஒரு காலத்துல டீச்சராகணும்னு ஆசை இருந்தது. எங்க சரோஜினி டீச்சர பார்த்து பார்த்து எனக்கு வந்த ஆசை அது’ என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார். தொடர்ந்து ‘ஒனக்கு சரோஜினி டீச்சர தெரியுமா? பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல ஆறு, ஏழு, எட்டு கிளாஸ்ங்களுக்கு தமிழ்ப்பாடம் நடத்துவாங்க’ என்று விவரித்தார்.

‘தெரியாதுக்கா’ என்று தலையசைத்தபடி உதட்டைப் பிதுக்கினேன். ‘நான் கோவிந்தையர் ஸ்கூல்ல படிச்சவன்க்கா. அதுவும் அஞ்சாங்கிளாஸ் வரைக்கும்தான். அதுக்கப்புறம் ஹைஸ்கூலுக்கு வந்துட்டேன்’ என்றேன்.

‘அவுங்ககிட்ட படிக்கிறது ஒரு பெரிய பாக்கியம். அவுங்கள பார்த்துப் பார்த்து அவுங்க மாதிரியே ஒரு டீச்சராகணும்னு அந்தக் காலத்துல நான் ஆசைப்பட்டேன். அதை சரோஜினி டீச்சர்கிட்டயே நான் பல தரம் சொல்லியிருக்கேன். அப்படி நான் சொன்னா போதும், டீச்சருக்கு உடனே சந்தோஷம் பொங்கிட்டு வந்துடும். ஸ்கூல் முழுக்க இன்னைக்கு சரோஜினி டீச்சர்னு சொல்ற மாதிரி, எதிர்காலத்துல கஸ்தூரி டீச்சர்னு பேரு வாங்கி காட்டுடி. அதுதான் நீ படிச்ச படிப்புக்கு ஒரு மரியாதைன்னு அடிக்கடி சொல்வாங்க.’

‘அப்புறம் ஏன் ஆகலை?’

‘எல்லாம் என் தலையெழுத்து.’

‘என்னக்கா சொல்ற?’

‘எங்க அப்பா என்னை படிக்க வச்சாதான? எட்டாங்கிளாஸ்க்கு மேல படிப்பே வேணாம்னு நிறுத்திட்டாரு.’

‘ஏன்?’

‘அதிகமா படிச்சிட்டா, அதைவிட அதிகமா படிச்ச மாப்பிள்ளைங்கள தேடி ஓடணுமாம். அதிகமா செலவு செய்யணுமாம். அதெல்லாம் தனக்குக் கட்டுப்படியாகாதுன்னு சொல்லி நிறுத்திட்டாரு.’

‘ஐயோ, அது ஒரு காரணமா?’

‘நான் ஒரு பொண்ணா இருந்தா பரவாயில்லை. எனக்கு கீழ நாலு பேரு தங்கச்சிங்க. எல்லாரையும் கரையேத்தணுமே. அந்தக் கவலை அவருக்கு.’

‘அவுங்கள்லாம் என்ன செய்யறாங்க?’

‘எல்லாருமே எட்டாங்கிளாஸ் பாஸ். அதோட படிப்ப ஏறக்கட்டி வச்சாச்சி. இப்படித்தான் சின்னச்சின்ன வேலைகளை அங்கங்க செஞ்சிட்டிருக்கோம். வர மாப்பிள்ளைங்க எல்லாரும் நாலு பவுனு குடு, அஞ்சி பவுனு குடுன்னு கேக்கறானுங்க. இவரு ரெண்டு பவுனுக்கு மேல முடியவே முடியாதுன்னு நிக்கறாரு. அந்தப் பக்கம் படிப்பும் இல்லை, இந்தப் பக்கம் கல்யாணமும் இல்லைன்னு ஆயிடுச்சி என் கதை.’

அக்காவின் கதையைக் கேட்க வருத்தமாக இருந்தது. அவர் நினைத்தது எதுவும் அவர் வாழ்வில் நிகழவில்லை என்பதைக் கேட்க வருத்தமாக இருந்தது. அடுத்து அக்காவிடம் என்ன கேட்பது என்று புரியவில்லை. நான் அமைதியாக அவர் முகத்தையே பார்த்தபடி நின்றேன்.

சில கணங்களுக்குப் பிறகு அக்கா முகத்தை நிமிர்த்தி, ‘என்னைக்காவது ஒரு நாள் நான் நிச்சயம் டீச்சராகிக் காட்டுவேன். அது மட்டும் நிச்சயம். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவரு யாரா இருந்தாலும் சரி, அவரு கையில கால்ல விழுந்தாவது மேல்படிப்ப முடிச்சி டீச்சரா வந்து காட்டுவேன். இந்த கஸ்தூரி யாருனு இந்த உலகத்துக்கு அன்னைக்குத் தெரியும்.’

உணவு இடைவேளை முடிவடையும் நேரம் நெருங்கிவிட்டதை நான் உணர்ந்தேன். புத்தகத்தை பைக்குள் திருப்பி வைத்தபடி எழுந்து நின்று ‘சரிக்கா, வரேன். நாளைக்கு பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். முதலில் அக்கா ‘சரி’ என்பதுபோல தலையசைத்துவிட்டார். பிறகு எதையோ நினைத்துக்கொண்டதுபோல ‘ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் இரு’ என்றபடி எழுந்து வந்து ஒரு கைநிறைய கடலையை அள்ளி புத்தகப்பைக்குள் போட்டு அனுப்பினார்.

தேர்வுக்காலம் முடிவடைந்தது. எல்லாத் தேர்வுகளையும் நன்றாக எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாளும் கஸ்தூரி அக்கா கொடுத்த வேர்க்கடலை மதிய நேரப் பசிக்கு உணவாக இருந்தது.

அடுத்தநாள் மதியம் உணவு இடைவேளைக்கான மணியடித்தபோது வீட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று ஒரு கணம் குழப்பமாக இருந்தது. பிறகு வழியை மாற்றி கஸ்தூரி அக்காவின் இடத்தை நோக்கி நடந்தேன்.

மரத்தடியில் அக்கா இல்லை. அக்காவோடு வேலை செய்த பெண்மணிகளும் இல்லை. கடலை நீக்கப்பட்ட செடிகள் மட்டுமே பரப்பிவிடப்பட்டு வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. அங்கங்கே சில காக்கைகள் காணப்பட்டன. எந்தச் செடியிலாவது ஒட்டிக்கொண்டிருக்கும் கடலையைத் தேடி அவை அலைந்தன. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நான் அந்தக் காக்கைகளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

அப்போது பக்கத்திலிருக்கும் வயலிலிருந்து அக்கா என்னை அழைக்கும் குரல் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். கடலை பிடுங்கப்பட்ட வயலில் அக்கா நின்றிருப்பது தெரிந்தது. அவர் கையில் சின்னஞ்சிறு கூடையொன்று இருந்தது. அக்காவைப்போலவே நாலைந்து அக்காக்களும் அங்கே நின்றிருந்தார்கள். அக்கா என்னைப் பார்த்து ‘இங்க வா’ என்று சைகையால் அழைத்தார். உடனே நான் புத்தகப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அக்காவை நோக்கிச் சென்றேன்.

ஏரோட்டிய தடத்தில் இருபுறமும் ஈரமண் புரண்டிருந்தது. அந்த மணல்வெளிக்கு நடுவில்தான் எல்லோரும் நின்றிருந்தனர். எதையோ தொலைத்ததைத் தேடுவதுபோல காலால் மண்ணைச் சீய்த்தபடி நடந்தனர்.

என்னைப் பார்த்ததும் ‘இன்னைக்கும் பரீட்சை இருக்குதா?’ என்று கேட்டார் அக்கா. ‘இல்லைக்கா. நேத்தோடு எல்லாப் பரீட்சையும் முடிஞ்சிட்டுது’ என்றேன். பிறகு நானாகவே ‘என்னக்கா தேடறீங்க?’ என்று கேட்டேன்.

‘தப்புக்கொட்டை.’

நான் புரியாமல் அக்காவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘கடலைச்செடியை புடுங்கற சமயத்துல சில கொட்டைங்க மண்ணுலயே தங்கிடும். செடியோடு வராது. ஒரு தரம் ஏரோட்டி மண்ண பொரட்டி போட்டா, அந்தக் கொட்டைங்க எல்லாம் வெளியே வந்துடும். நாமதான் மண்ண சீய்ச்சி சீய்ச்சி தேடி எடுக்கணும். அதான் தப்புக்கொட்டை.’

ஒரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுக்கும் நுட்பத்துடன் அக்கா எனக்கு விளக்கம் கொடுத்தார். நான் அக்கா வைத்திருந்த கூடையைப் பார்த்தேன். ஏறத்தாழ முக்கால் பங்கு நிறைந்திருந்தது.

‘வா. வந்து நீயும் தேடு.’

‘பயிர் வச்சவங்க ஒன்னும் சொல்லமாட்டாங்களா?’

‘யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. தப்புக்கொட்டையை யார் வேணும்னாலும் எடுத்துக்கலாம். எடுக்கறது எல்லாமே நமக்குத்தான்.’

அக்காவுக்குப் பக்கத்தில் நின்று அவரைப்போலவே குதிகாலை ஊன்றி மண்ணைச் சீய்த்தேன். சிதறியோடும் கரிய மண்ணுக்கு நடுவில் வெள்ளைவெளேரென ஒரு முத்தைப் போல ஒரு கொட்டை தெரிந்தது. அதைப் பார்த்ததுமே எனக்கு உற்சாகம் வந்துவிட்டது. சட்டென குனிந்து அதை கையில் எடுத்தேன்.

‘ஆகா. முத எத்துலயே தப்புக்கொட்டையை கண்டுபுடிச்சிட்டியே. அதிர்ஷ்டக்காரன்டா நீ.’

புன்னகையோடு அந்தக் கொட்டையை அக்காவின் கூடைக்குள் போடுவதற்காக அவருக்குப் பக்கத்தில் சென்றேன்.

‘வேணாம். வேணாம். நீயே உன் பைக்குள்ள போட்டுக்கோ. அப்புறமா போவும்போது உடைச்சித் தின்னு.’

‘சரி’ என்றபடி தலையசைத்தபடி மண்ணைச் சீய்க்கத் தொடங்கினேன். அக்கா தன் சரோஜினி டீச்சரைப்பற்றியும் பள்ளி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு பழைய அனுபவத்தைப்பற்றியும் சுவாரசியமாகச் சொல்லத் தொடங்கினார். காது ஒருபக்கம் அவர் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருக்க, கண்கள் இன்னொரு பக்கம் மண்ணில் தென்படும் தப்புக்கொட்டைகளைப் பார்த்துக்கொண்டிருந்தன.

‘நான் ஸ்கூல்ல படிக்கிற காலத்துல ஸ்கூல்ல இன்ஸ்பெக்‌ஷன் நடக்கும்போது, எதையாவது படிக்கணும்ன்னா சரோஜினி டீச்சர் என்னைத்தான் கூப்ட்டு படிக்க வைப்பாங்க. டாண் டாண்னு மணியடிக்கிற மாதிரி தெளிவா படிக்கிறடீ நீன்னு சொல்வாங்க. எந்தப் பாட்டையாவது மனப்பாடமா சொல்லணும்ன்னா கூட அவுங்களுக்கு நான்தான் வேணும். கஸ்தூரி நல்வழி பாட்டை சொல்லு, கஸ்தூரி கொன்றைவேந்தன் சொல்லுன்னு எல்லாத்துக்கும் என்னைக் கூப்புடுவாங்க.’

அக்கா விவரித்த கதையின் சுவாரசியத்தில் தப்புக்கொட்டையைப் பார்ப்பதே எனக்கு மறந்துவிட்டது. நான் அவருடைய முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.

‘ஒரு தரம் ஒரு மினிஸ்டர் எங்க ஸ்கூல்லுக்கு வந்தாரு. ஸ்கூல்ல பெரிசா ஒரு மீட்டிங் நடந்தது. அவரு தமிழ்ல ஆர்வம் உள்ளவரு. அவருகிட்ட பேச்சுவாக்குல ரொம்ப பெருமையா எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு ஒளவையார் பாட்டுலாம் மனப்பாடமா சொல்வா ஐயான்னு சரோஜினி டீச்சர் சொல்லிட்டாங்க. உடனே அவரு யாரு அந்தப் பொண்ணு, கூப்புடுங்கன்னு சொல்லிட்டாரு. டீச்சரும் என் பக்கம் திரும்பி கஸ்தூரி இங்க வான்னு கூப்ட்டாங்க. நான் போய் நின்னதும் அந்த மினிஸ்டர் என்கிட்ட உனக்கு ஒளவையார் பாட்டு பாடமா இருக்குதான்னு கேட்டாரு. நான் ஆமாம்னு சொன்னதும் எந்தப் பாட்டுன்னு கேட்டாரு. நான் உலகநீதி ஐயான்னு சொன்னேன். உலகநிதில எத்தனை பாட்டு இருக்குது தெரியுமான்னு கேட்டாரு. பதிமூனு பாட்டு இருக்குதுங்க ஐயான்னு சொன்னேன். அவரு கேக்கிற ஒவ்வொரு கேள்விக்கும் டக்குடக்குனு பதில் சொன்னத பார்த்து ரொம்ப சந்தோஷத்தோடு சிரிச்சாரு. சிரிச்சிகிட்டே சொல்லு பார்ப்போம்னு சொன்னாரு.’

அக்கா ஒருகணம் சீய்ப்பதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். ‘உனக்கு ஒளவையார் தெரியுமில்ல?’ என்று கேட்டார். நான் ‘ம்’ என்று தலையாட்டிக்கொண்டே சொன்னேன்.

‘உலகநீதி?’

நான் வெட்கத்துடன் ‘தெரியாதுக்கா’ என்றேன்.

‘ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் பாட்டுடா’ என்று எடுத்துக்கொடுத்தார் அக்கா. அந்த வரியைக் கேட்டதுமே அந்தப் பாட்டு அரைகுறையாக நினைவுக்கு வந்தது. ‘படிச்சிருக்கேன்க்கா. ஆனா நாலு வரிதான் தெரியும்’ என்றேன்.

‘எனக்கு முழுப்பாட்டும் தெரியும். அந்தக் காலத்துல மட்டுமில்லை, இப்பவும் என்னால சொல்லமுடியும். பதிமூணு பாட்டையும் பார்க்காம சொல்வேன். இப்ப சொல்லட்டுமா, கேக்கறியா நீ?’

அக்காவின் முகத்தில் உற்சாகம் படர்வதைப் பார்த்தேன். அவர் கண்களில் ஒரு சிறுமிக்குரிய பரபரப்பு தெரிந்தது.

‘ம். சொல்லுக்கா’ என்றபடி ஆர்வத்துடன் நான் அவர் முகத்தைப் பார்த்தேன்.

அக்கா அக்கணமே தொண்டையைச் செருமி சரிப்படுத்தியபடி சொல்லத் தொடங்கினார். ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம் என்று அடுக்கிக்கொண்டே போனார். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த பாடலின் வரிகளை ஒரு பிழைகூட இல்லாமல் ஓடத்தில்கூடத் தடுமாறாமல் சொல்வதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அந்த வேகத்தைப் பார்த்து ஒருகணம் நான் வியப்பில் உறைந்துவிட்டேன்.

அக்கம்பக்கத்தில் தப்புக்கொட்டை எடுத்துக்கொண்டிருந்த பெண்களும் சிறுமிகளும் கூட அக்காவின் பாட்டைக் கேட்டு நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அக்கா ஒவ்வொரு பாட்டாக சொல்லிக்கொண்டே சென்றார். ’போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடி பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே’ என்ற கடைசி வரியைச் சொல்லிவிட்டுத்தான் நிறுத்தினார்.

‘எப்படி?’ என்று புருவத்தை உயர்த்தியபடி கேட்டபோதுதான் உலகநீதிப்பாடல்கள் முடிந்துவிட்டதை நான் உணர்ந்தேன். ஆச்சரியம் தாங்காமல் நான் கைதட்டியபடி குதித்தேன். ‘உங்க மூளைக்குள்ள ஏதாவது மிஷின் இருக்குதாக்கா? எப்படிக்கா இதயெல்லாம் இன்னும் நீங்க ஞாபகத்துலய் வச்சிருக்கீங்க?’ என்று கேட்டபோது அக்காவின் முகத்தில் ஒருவித நாணமும் மகிழ்ச்சியும் கலந்து பரவியிருந்தது.

மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் அக்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அக்கா ஏற்கனவே சொல்லி நிறுத்திய பழைய கதையைத் தொடர்ந்தார்.

‘பதிமூணு பாட்டையும் நான் பாக்காம சொன்னதைக் கேட்டு மினிஸ்டர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அந்த சந்தோஷத்துல அவருக்கு போட்ட பொன்னாடையை எடுத்து எனக்குப் போட்டாரு. பையிலேர்ந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து வச்சிக்கம்மான்னு எனக்கு அன்பளிப்பா கொடுத்தாரு. மேடையில என்னைப் பாராட்டிப் பேசினாரு. எங்க டீச்சரையும் பாராட்டினாரு. படிச்சி பெரிய ஆளாகி என்னம்மா செய்யப் போற நீன்னு என்னப் பார்த்து கேட்டாரு. எங்க சரோஜினி டீச்சர்மாதிரி நானும் டீச்சர் வேலைக்குப் போவேன்ங்க ஐயான்னு சொன்னேன். எல்லாரும் கை தட்டினாங்க.’

அக்கா ஒரு பெருமூச்சுடன் சட்டென பேச்சை நிறுத்திவிட்டார். அவருடைய கால் தானாகவே மண்ணைச் சீய்க்கத் தொடங்கியது. அக்காவை மறுபடியும் எப்படிப் பேச வைப்பது என்பது எனக்குப் புரியவில்லை. அமைதியாக அவருக்குப் பக்கத்தில் மண்ணைச் சீய்த்தபடி நடந்தேன். என் பை நிறையும் அளவுக்கு தப்புக்கொட்டை சேர்ந்துவிட்டது.

‘இந்தத் தப்புக்கொட்டை மாதிரி காலாகாலத்துல யார் கண்ணிலாவது பட்டு தப்பிச்சாதான் நம்மைமாதிரி ஆளுங்க பொழைக்கமுடியும். இல்லைன்னா மண்ணோடு மண்ணாதான் ஆவணும்.’

யாரிடமோ சொல்வதுபோல மண்ணைப் பார்த்தபடியே சொன்னார் அக்கா. அப்போது அவர் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. சற்றுமுன் சிரிப்பில் மூழ்கிய முகமா இது என்று தோன்றியது.

‘சரிக்கா. நான் கெளம்பறேன். நேரமாயிடுச்சி’ என்று அக்காவிடம் விடைபெற்றேன். அக்கா உடனே தன் கூடையிலிருந்து ஒரு கை வேர்க்கடலையை அள்ளி என்னிடம் நீட்டினார்.
நான் ‘வேணாம்க்கா. இதோ இருக்குதே. இதுவே போதும்’ என்று கால்சட்டைப் பையைக் காட்டினேன். ‘இருக்கட்டும்டா. வச்சிக்கோ. பசிக்கும்போது சாப்புடு’ என்று சொன்னார் அக்கா. நான் அதை வாங்கி கால்சட்டையின் இடதுபுற பையில் வைத்துக்கொண்டு புத்தகப்பையை எடுப்பதற்குச் சென்றேன்.

அடுத்தநாள் மதியம் அக்காவைப் பார்த்தபோது அவர் முகத்தில் பழைய உற்சாகம் வந்துவிட்டதைக் கண்டேன். அவருடைய புன்னகையைக் கண்ட பிறகுதான் என் மனம் அமைதியடைந்தது. அன்றும் தப்புக்கொட்டை எடுக்கும் வேலைதான் நடந்தது. அக்காவுக்குப் பக்கத்திலேயே நடந்து நானும் தப்புக்கொட்டை எடுத்தேன்.

அக்காவுக்கு எல்லா வேலைகளும் தெரிந்திருந்தன. அவரைப்போலவே பல பெண்கள் அந்த மரத்தடியில் உட்கார்ந்து பல வேலைகள் செய்தனர். முறத்தில் புளி எடுத்துவந்து ஆய்ந்து கொட்டைகளை நீக்கினர். உரலில் நெல் குத்தி வெயிலில் உலரவைத்தனர். வைக்கோல்களை கட்டுகட்டாகக் கட்டி எடுத்துச் சென்று வேறொரு இடத்தில் அடுக்கினார்கள்.

ஒருநாள் நான் சென்றபோது அக்கா மரத்தடியில் உலர்ந்துகொண்டிருந்த நெற்பரப்புக்குக் காவலாக உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ‘நூறு வயசுடா உனக்கு. இப்பதான்டா உன்னைப் பத்தி நெனச்சிகிட்டே இருந்தேன்’ என்றார். ‘நான் நூறு வயசுவரைக்கும் இருக்கணும்ன்னா நீங்க எரநூறு வயசுவரைக்கும் இருக்கணும்க்கா’ என்று வெட்கத்துடன் சொல்லிக்கொண்டே உட்கார்ந்தேன்.

‘இருநூறு வயசு ஆவும்போது அக்கா அக்காவா இருக்கமாட்டேன். பெரிய ஆயாவா இருப்பேன்’ என்றபடி அக்கா தனக்கருகில் ஒரு தட்டு போட்டு மூடியிருந்த இரண்டு செம்புகளை எடுத்தார். ஒரு செம்பை தன்னிடம் வைத்துக்கொண்டு மற்றொரு செம்பை என்னிடம் கொடுத்து ‘இந்தா, குடி’ என்று கொடுத்தார்.

‘எனக்கு எதுக்குக்கா? நீங்க குடியுங்க்கா’ என்று நான் தயங்கினேன். ‘எல்லாம் எனக்குத் தெரியும்டா தம்பி. குறுக்குல எதுவும் பேசாம குடுக்கறத வாங்கிக் குடி’ என்று அதட்டினார் அக்கா.

நான் அந்தச் செம்பை வாங்கிக்கொண்டேன். செம்பு நிறைய கூழ் இருந்தது. அதன் மீது உரித்த வேர்க்கடலை வெள்ளைமுத்துகள் போல மிதந்தன. கடலையை மென்று தின்றபடி கூழைக் குடிப்பதற்கு சுவையாக இருந்தது. அக்கா எனக்கு ஒரு கதையைச் சொன்னார். அதைக் கேட்டபடி குடித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ஒருநாள் கூழ் குடித்து முடித்த பிறகு இரண்டு செம்புகளையும் எடுத்துச் சென்று பம்ப் செட் தொட்டியில் தண்ணீர் எடுத்து கழுவி சுத்தம் செய்துவிட்டு எடுத்துவந்து வைத்தேன்.

அக்கா ‘இது என்ன கண்டுபிடிச்சி சொல்லு?’ என்று ஒரு கொட்டாங்கச்சியை நீட்டினார். ‘பார்த்தாவே தெரியுதே, நாவல்பழம்தான?’ என்றபடி நான் அந்தக் கொட்டாங்கச்சியை வாங்கினேன்.

‘ஏமாந்தியா? அது நாவல் பழம் கிடையாது’ என்று அக்கா சிரித்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. அவசரமாக நான் கொட்டாங்கச்சியிலிருந்து ஒரு பழத்தை எடுத்து உருட்டிப் பார்த்தேன். உருண்டையான வடிவம். பழுத்துக் கனிந்து கருநீல நிறத்தில் இருந்தது. என் குழப்பத்தை சில கணங்கள் மெளனமாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அக்கா ‘அதுக்குப் பேரு கறிவேப்பிலைப்பழம்’ என்றார்.

கறிவேப்பிலைச்செடியில் பழம் இருக்கும் என்னும் விஷயத்தையே அப்போதுதான் நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன். ஒரு பழத்தை எடுத்து இரு விரல்களுக்கிடையில் வைத்து மெல்ல உருட்டிஉருட்டிப் பார்த்தேன். பிறகு ‘இது சாப்பிடக்கூடிய பழம்தான?’ என்று அக்காவிடம் கேட்டேன். ‘சாப்பிடற பழம்தான்டா. தைரியமா சாப்புடு’ என்று சொல்லிக்கொண்டே அக்கா ஒரு பழத்தை எடுத்து தன் வாய்க்குள் போட்டுக்கொண்டார். அதைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தைரியம் வந்தது.

பழத்தை மெதுவாகக் கடித்தேன். நாவல்பழத்தைப்போலவே சுவையாக இருந்தது. அக்காவைப் பார்த்து புன்னகையோடு ‘நல்லா இருக்குதுக்கா’ என்றேன். ‘சாப்புடு சாப்புடு’ என்று என்னை உற்சாகப்படுத்தினார் அக்கா.

ஒவ்வொரு நாளும் எனக்கு வகைவகையான பழங்களை எடுத்துவந்து கொடுத்தார் அக்கா. அத்திப்பழம், சீத்தாப்பழம், மூக்குச்சளிப்பழம், விளாம்பழம், கொடுக்காப்புளி, இலந்தம்பழம், வெள்ளரிபழம், கொய்யாப்பழம் என ஒவ்வொரு நாளும் எனக்காக ஒரு பழத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்.

‘இவ்வளவு பழங்கள் உங்களுக்கு எங்கேக்கா கெடைக்குது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘அது அக்காவுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அக்கா. பிறகு ‘இந்த குடுமியாங்குப்பத்துல எத்தனை வீடு, எத்தனை கிணறு, எத்தனை மரங்கள், எந்தெந்த மரங்கள் எங்கெங்க இருக்குது எல்லா விவரமும் எனக்குத் தெரியும்டா. கண்ண கட்டிவிட்டா கூட, என் கால் தானா அந்த மரத்து முன்னால போய் நிக்கும்’ என்று பெருமையோடு சிரித்தார்.

‘அக்காவுக்கு எல்லாம் தெரியுது. ஆனா எனக்குள்ள இருக்கிற ஆசை ஏன் நடக்கமாட்டுதுங்கறது மட்டும் தெரியலை’ என்று ஒரு கசப்பான புன்னகையோடு சொன்னார் அக்கா. அப்போது அக்காவின் முகத்தில் படிந்திருந்த வேதனையைப் பார்த்தபோது எனக்கும் வேதனையாக இருந்தது. அக்காவின் முகம் ஒரு கோணத்தில் என் அம்மாவின் முகத்தைப் பார்ப்பதுபோல இருந்தது.

நாட்கள் சக்கரத்தைப்போல உருண்டோடிவிட்டன. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் முழு ஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையை அறிவித்துவிட்டனர்.

அக்காவிடம் அந்த விஷயத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும் ‘அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிடுச்சா?’ என்றபடி புருவத்தை உயர்த்தினார். பிறகு ‘முதல் பரீட்சை என்ன?’ என்று கேட்டார். நான் ‘தமிழ்’ என்றேன்.

‘நமக்குப் புடிச்ச பாடம். நல்லது. நல்லது’ என்று அக்கா சிரித்தார். தொடர்ந்து ‘பிழை இல்லாம எழுது. கையெழுத்தும் அழகா இருக்கணும். அப்பதான் திருத்தற வாத்தியாருங்களுக்கு மார்க் போடலாம்ன்னு ஒரு ஆர்வம் வரும். கிறுக்கலா இருந்தா பாதி பேருக்கு படிக்கறதுக்கு சோம்பல்படுவாங்க. பாதிப் பேரு படிச்சி பார்க்காமயே ஏதாவது ஒப்புக்கு ரெண்டு மூணு மார்க் போட்டுட்டு போயிடுவாங்க. புரியுதா’ என்றார்.

‘சரிக்கா’ என்று தலையசைத்தேன்.

தமிழ்த்தேர்வு முடிந்ததும் நேராக அக்காவைத்தான் பார்ப்பதற்குச் சென்றேன். அக்கா என் கேள்வித்தாளை வாங்கிப் படித்தார். பிறகு இடையிடையே சில கேள்விகளுக்குப் பதில் கேட்டார். இலக்கணக்குறிப்புகளை எப்படி எழுதினேன் என்று கேட்டார். நான் சொன்ன பதில்கள் அவருக்குத் திருப்தியாகவே இருந்தன. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ‘என் கணக்குக்கு தொண்ணத்தஞ்சி மார்க் கெடைக்கும் உனக்கு’ என்றார். ‘எப்படிக்கா அவ்வளவு துல்லியமா சொல்றீங்க?’ என்று கேட்டேன். ‘த்ச்’ என்று நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே ‘எல்லாமே ஒரு மனக்கணக்குதான்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

‘இந்தா, இத குடிச்சிட்டு போ’ என்று ஒரு செம்பில் கூழூற்றிக் கொடுத்தார். நான் அதை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டே குடித்து முடித்தேன்.

‘சரி போ. நாளைக்கு இங்க்லீஷா? நல்லா படி. சம்மரிங்களை எழுதிப் பாரு’ என்று விடைகொடுத்தார் அக்கா.

தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் என தேர்வு நாட்கள் வேகவேகமாகக் கடந்துவிட்டன. கடைசித்தேர்வு வரலாறு புவியியல். கேள்வித்தாள் எளிதாகவே இருந்தது. அதை எழுதிமுடித்ததும் அக்காவைப் பார்ப்பதற்குச் சென்றேன்.

அக்கா ஒரு கிழிந்த பாயின்மீது பரப்பிய வேப்பங்கொட்டைகளுக்கு காவலாக உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்திலேயே ஒரு கூடை நிறைய வேப்பம்பழங்கள் இருந்தன. அதிலிருந்துதான் ஒவ்வொரு பழமாக எடுத்து எடுத்துப் பிதுக்கி கொட்டைப்பரப்புக்கு நடுவில் வீசிக்கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்திலேயே ஆவாரம்பூவை கிள்ளிப் போட்டதுபோல அதன் தோல் குவியல் கிடந்தது.

என்னைப் பார்த்ததுமே ‘பரீட்சையெல்லாம் வெற்றிகரமா முடிஞ்சதா? நல்லா எழுதினியா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் அக்கா. நான் ‘ம்க்கா. நல்லா எழுதியிருக்கேன்க்கா’ என்று பதில் சொன்னேன்.

‘அடுத்த வருஷம் பத்தாவது, இல்லையா?’

‘ம்க்கா.’

அக்கா புருவத்தை உயர்த்தி புன்னகைத்தார். அப்போதுதான் துளையிட்ட அவர் காதுகளில் ஒரு துண்டு குச்சி மட்டும் இருப்பதைப் பார்த்தேன்.

‘பத்து. அப்புறம் பதினொன்னு. அதுக்கப்புறம் காலேஜ். அப்படியே மேல போயிட்டே இரு. புரியுதா? என்ன மாதிரி பாதியில நின்னுடாத’ என்று சொல்லிக்கொண்டே கூழ்செம்பை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

‘சரிக்கா’ என்றபடி நான் அதை வாங்கிக்கொண்டேன். வேப்பம்பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஊசிநூலால் கோர்த்து ஒரு மணிமாலை போலச் செய்து கழுத்தில் அணிந்துகொண்டு அட்டிகை விளையாட்டு விளையாடிய சிறுவயது அனுபவத்தையும் அப்போது தன்னோடு விளையாடிய பிற சிறுமிகளைப்பற்றியும் ஒரு கதையைச் சொல்வதுபோல சுவாரசியமாகச் சொன்னார் அக்கா.

‘அந்தக் காலத்துல நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, தோடு, அட்டிகை, ஒட்டியாணம் எல்லாமே எங்களுக்கு வேப்பம்பழம்தான். எல்லாத்தயும் நூல்லயே கோர்த்து செஞ்சி போட்டுக்குவம். பார்க்கறதுக்கு அது தங்கம் மாதிரியே தகதகன்னு ஜொலிக்கும்.’

‘அவுங்கள்லாம் இப்ப எங்க இருக்காங்கக்கா?’

அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகக்குறிப்பிலிருந்து என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கணம் யோசனையில் மூழ்கியிருந்தார். பிறகு என்னைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்.

‘யாருமே இப்ப இங்க இல்ல. எல்லாரும் கல்யாணம் பண்ணிகிட்டு பாண்டிச்சேரி திண்டிவனம், விழுப்புரம்னு போயிட்டாங்க. நான்தான் இங்க இன்னும் திண்ணையை தேச்சிகிட்டு உக்காந்திருக்கேன்’

அக்கா அதைச் சொல்லும்போது சிரித்துக்கொண்டுதான் சொன்னார். ஆனால் கேட்பதற்கு எனக்குத்தான் கஷ்டமாக இருந்தது.

‘சரிக்கா, நான் வரேன்.’

‘அப்பப்ப வந்து போ. நான் இங்கயேதான் இருப்பேன்.’

தலையசைத்துக்கொண்டே நான் அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன்.

அடுத்து இரண்டு மாதங்கள் வேகவேகமாக ஓடிவிட்டன. ஏதேதோ வேலைகள். நெருக்கடிகள். அலைச்சல்கள். ஒரு நாளாவது ஏதேனும் ஒரு பகல்வேளையில் புறப்பட்டுச் சென்று அக்காவைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்காக நான் வகுத்த எந்தத் திட்டமும் நிறைவேறவில்லை. ஒரு பொழுதுகூட என் வசமில்லை. எல்லாமே வேகவேகமாகக் கரைந்துகொண்டே இருந்தது.

விடுமுறைக்காலம் முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. காலையில் பள்ளிக்கூடத்துக்குச் சென்றதுமே, அறிவிப்புப்பலகையில் ஒட்டப்பட்டி்ருந்த தேர்வுமுடிவுப் பட்டியலைப் பார்த்தேன். தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் என் பெயர் இருந்ததைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. என்னைப்போலவே என் நண்பர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஒருவர்கூட பின்தங்கவில்லை என்பது ஆறுதலாக இருந்தது.

பிரார்த்தனையின் போது தலைமையாசிரியர் புதிய வகுப்புகளுக்குச் செல்லும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்தார். தமிழைத் தவிர, மற்ற எல்லாப் பாடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் வந்தனர். தமிழுக்கு மட்டும் அதே ராதாகிருஷ்ணன் ஐயா.

உணவு இடைவேளைக்கான மணியடித்ததும் வழக்கம்போல குடுமியாங்குப்பத்துக்குச் சென்றேன். அக்கா வழக்கமாக அமர்ந்திருக்கும் மரத்தடியில் ஒரு கட்டில் மட்டும் இருந்தது. அருகில் யாரோ நெல் பரப்பி உலரவைத்திருந்தனர். ஆள் நடமாட்டம் இல்லை. எங்காவது சென்றிருக்கக்கூடுமோ என நினைத்து நாலாபக்கமும் திரும்பித் தேடிப் பார்த்தேன். எங்கும் தென்படவில்லை. பம்ப்செட் வரைக்கும் ஒரு நடை சென்று பார்த்துவிட்டுத் திரும்பினேன். அங்கும் இல்லை. வேறு ஏதேனும் ஒரு வயலுக்கு அருகில் இருக்கக்கூடும் என நினைத்து, சிறிது தூரம் வரைக்கும் நடந்து சென்றேன். ஒருவரும் தென்படவில்லை.

திரும்பி வந்து பழைய இடத்திலேயே நின்றபோது ‘யார தேடற தம்பி?’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கட்டில் பக்கமாக ஓர் ஆயா கோலூன்றி வந்துகொண்டிருந்தார்.

‘ஒரு அக்கா. இங்கதான் எப்பவும் உக்காந்திருப்பாங்க. அவுங்க இல்லையா?’

‘நீ யாரைக் கேக்கற? புரியலையே.’

எனக்குச் சட்டென அக்காவின் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது.

‘கஸ்தூரி அக்கா. வெடவெடன்னு நல்லா உயரமா இருப்பாங்க.’

அந்த ஆயா ஒரு கணம் யோசனையில் மூழ்கினார். பிறகு தலையசைத்தபடி ‘அந்தப் பொண்ணா? போன மாசம் அதுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சிப்பா. புருஷன்காரன் ஊட்டுக்கு போயிடுச்சி’ என்றார்.

கஸ்தூரி அக்காவின் கல்யாணச்செய்தி மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த நேரத்தில் அவரைப் பார்க்கமுடியவில்லையே என்னும் எண்ணம் துயரளிப்பதாக இருந்தது. ‘சரி ஆயா’ என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன். இனி அக்காவைப் பார்க்கும் வாய்ப்பு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாக தோன்ற ஆரம்பித்துவிட்டது. அந்த எண்ணம் ஒரு பெரிய பாரமாக மனசை அழுத்தியது.

அதையே நினைத்தபடி வேலியோரமாக வெகுதொலைவு நடந்துவிட்டேன். பசித்தது. எந்தப் பக்கம் மனசைத் திருப்பினாலும், அது பசியிலேயே முடிந்தது.

ஒரு திருப்பத்தில் நாலைந்து வேப்பமரங்களுக்கு நடுவில் கறிவேப்பிலை மரம் தெரிந்தது. எட்டும் உயரத்தில் கறிவேப்பிலைப்பழங்கள் தொங்குவதைப் பார்த்தேன். உடனே அதை நெருங்கி, எட்டிப் பறித்தேன். அக்கணமே அக்காவை நினைத்துக்கொண்டேன். அந்தப் பழங்கள் உண்ணத்தக்கவை என்பதை எனக்கு உணர்த்தியவரே அந்த அக்காதான் என்ற எண்ணமெழுந்தது. அவரை நினைத்துக்கொண்டெ அந்தப் பழத்தைச் சாப்பிட்டேன். அதற்குப் பிறகு கொய்யாப்பழம், அத்திப்பழம், சீத்தாப்பழம், மூக்குச்சளிப்பழம் என எந்தப் பழத்தைச் சாப்பிட எடுத்தாலும் கஸ்தூரி அக்காவை நினைத்துக்கொள்ளாமல் சாப்பிட முடிந்ததில்லை.

0

பகிர:
nv-author-image

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *